தமிழகத்தில் மே 16ம் நாள் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. தமிழக சிறைகளில் இருக்கும் சிறைவாசிகளும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
100 விழுக்காடு வாக்குப்பதிவு எனும் நோக்கத்தை இலக்காகக் கொண்டு, அதனை அடைய வேண்டி, பல்வேறு வகையான செயல்பாடுகள், விளம்பரங்கள் மூலம் இந்திய/மாநில தேர்தல் ஆணையங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால், எண்ணற்ற காரணங்களால் நாட்டில், இதுவரையில் நடைபெற்ற எந்த பொதுத் தேர்தலிலும் 100 விழுக்காடு வாக்குப்பதிவு எட்டப்படவே இல்லை.
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவரும் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்று "வாக்களிக்கும் உரிமை" தொடர்பான, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்,1951 ன் பிரிவு 62 கூறுகிறது. அதன் உட்பிரிவு (5), "தண்டனைக்காக சிறையில் அடைக்கபட்டிருக்கும், அல்லது அதற்காகக் கொண்டு செல்லப்படும், அல்லது முன்னெச்சரிக்கை கைது தவிர்த்த சட்டப்படியான காவல்துறையின் காவலில் உள்ள எவர் ஒருவரும் எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியாது" என்று கூறுகிறது. மேலும், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 326ல் தேர்தலில் பங்கெடுக்க தகுதி இழந்தவர்கள் பட்டியலில், குற்றம் புரிந்தவர்களும் இணைக்கப் பட்டுள்ளார்கள்.
இந்நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 62 (5)ன் செல்லுதன்மை குறித்து தாக்கல் செய்யப்பட்ட, அனுகுல் சந்திரா பிரதான் எதிர் இந்திய அரசு எனும் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய ஆயம், கடந்த 1997 ஜூலை மாதத்தில், குற்ற பின்னணியைக் கொண்ட நபர்கள் தேர்தலில் பங்கெடுப்பது, ஜனநாயகம் சிதைக்கப்படுவதற்கு காரணமாவதுடன் சமூகத்திற்கான சாபக்கேடுமாக அமையும்; மேலும், சிறைக் கைதிகளை வாக்களிக்க வெளியே அழைத்து வருவதற்கு அதிகப்படியான காவல் பாதுகாப்பு வழங்க வேண்டியது வரும் என்றும், தேர்தலில் வாக்களிப்பதோ, வேட்பாளராக போட்டியிடுவதோ குடிமையியல் உரிமை அல்ல, அது ஒரு சிறப்பு சட்டத்தின் அடிப்படையில் அந்த சட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட ஒரு உரிமை என்று கூறி, அந்த பிரிவானது அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படையிலான அடிப்படை உரிமை அல்ல என்று கூறி அந்த வழக்கினைத் தள்ளுபடி செய்தது.
இதன் காரணமாக, தண்டனை பெற்ற கைதிகள் மட்டுமின்றி, வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பவர்களும், குற்ற அறிக்கை தாக்கல் செய்யாமல் விசாரணை நிலையில் சிறையில் இருப்பவர்களும், பிணையில் வெளியே வர நீதிமன்றத்தை அணுக முடியாத அளவிற்கு பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நபர்களுக்கும், சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்திற்காக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. அதேவேளையில் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் பிணையில் சிறைக்கு வெளியே வந்த நபருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படுகிறது. இதனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் மனித மாண்பு போன்ற இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் மூலமான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது.
இந்தியா முழுவதிலுமுள்ள 1,400 சிறைகளில், சுமார் 4 இலட்சம் கைதிகள் உள்ளனர். தமிழகத்தில் 9 மத்திய சிறைச்சாலைகள் மற்றும் 100க்கும் அதிகமான கிளை சிறைச்சாலைகளில் சுமார் 15,000 கைதிகள் உள்ளனர். அவர்களில் தண்டனைக் கைதிகள் சுமார் 34 விழுக்காடும், விசாரணைக் கைதிகள் உள்ளிட்ட இதர பிரிவினர் சுமார் 64 விழுக்காடும் உள்ளனர். இப்படியாக, இந்திய சிறைகளில் தண்டனைக் கைதிகளை விடவும், விசாரணைக் கைதிகளே அதிக அளவில் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
"ஒருவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படும் வரையிலும் அவர் நிரபராதியே" என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இயங்கும் நமது குற்றவியல் விசாரணை முறையானது, சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவதன் காரணமாக கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான சிறைதண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் தவிர்த்த இதர அனைவரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவது அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், அதற்கு முரணாக மூன்று ஆண்டிற்குக் குறைவாக சிறைதண்டனை பெற்று பிணையில் வெளியில் வர வழியில்லாது சிறையில் இருக்கும் கைதிகளுக்கும், தண்டனை எதுவும் வழங்கப்படாத விசாரணைக் கைதி ஒருவருக்கும், அவர் தேர்தல் காலத்தில் சிறையில் உள்ளார் என்ற காரணத்தின் அடிப்படையில், அவரது வாக்களிக்கும் உரிமை மறுக்கப்படுவது எவ்விதத்தில் ஏற்புடையது என்று தெரியவில்லை.
குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள், குற்றம் புறிந்தவர்கள் ஆகியோர் தேர்தலில் பங்கேற்ப்பு செய்யக் கூடாது என்பதுதான் வாக்களிக்க மறுப்பதற்கான நோக்கமாக இருக்குமானால் அது அடிப்படை அர்த்தமற்றதுடன், கண்டிப்பாக மாற்றப்பட வேண்டியதுமாகும். தண்டனை அறிவிக்கப்பட்டு நீதிமன்ற பிணையில் சிறைக்கு வெளியே இருப்பவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை அனுமதிக்கப்படுகிறது. அதேவேளை, பொருளாதார காரணமாக நீதிமன்றத்தை அணுகி பிணை பெற்று வெளியே வர வழியில்லாமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எண்ணற்ற விசாரணைக் கைதிகளுக்கு, அவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக வாக்களிக்க அனுமதி மறுக்கப்படுவது சமமான அணுகுமுறையாகத் தோன்றவில்லை.
வாக்களிப்பது அடிப்படை உரிமையாக இல்லாத போதிலும், அந்த உரிமை ஒரு சட்டத்தின் அடிப்படையில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட ஒரு உரிமை. அந்த நிபந்தனையானது, இயற்கை நீதிக்குப் புறம்பானதாகவும், அடிப்படையற்றதாகவும் இருக்கும் போது, அதனை நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும். ஒரு சிறப்பு சட்டத்தின்படி வழங்கப்பட்ட ஒரு உரிமையை ஒருவரிடமிருந்து பறிக்க அனைவருக்கும் ஒரே அளவுகோலையே அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.
வாக்களிக்கும் உரிமை சட்டப்படியான ஒன்று. அந்த உரிமையை ஒருவர் பயன்படுத்த வேண்டுமா இல்லையா என்பதனை அந்த தனிமனிதர் தான் தீர்மானிக்க வேண்டுமே அல்லாமல் அடிப்படையற்ற, ஏற்றத்தாழ்வு கொண்ட ஒரு நிபந்தனையின் காரணமாக அல்ல.
தற்போதும், விசாரணைக் கைதியாக உள்ள முகமறியாத கைதிகள் பலர், தமிழகத்தில் சிறைக்குள் இருக்கும் காரணத்தால் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதேவேளையில், மாவட்ட நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு, உயர்நீதிமன்றத்தால் அந்த உத்தரவிற்குத் தடை வழங்கப்பட்ட காரணத்தால் ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியில் அமர்ந்தார் என்பது நிச்சயமாக முரணானதே.
இப்படியாக, ஒருவர் தேர்தல் காலத்தில் சிறையில் இருக்கிறார் என்ற ஒரேயொரு காரணத்தின் அடிப்படையில் ஒருவருக்கு வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படுவது எந்த நோக்கில் பார்த்தாலும் அது அரசியல் சாசனத்திற்குப் புறம்பானதாகும்.
ஆகவே, மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமான தண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகள் தவிர்த்த இதர சிறைவாசிகள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படும் வகையில், அதற்குத் தடையாக உள்ள மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்,1951ன் பிரிவு 62 (5) ல் உரிய திருத்தம் கொண்டுவர தனித்தும், சுயமாகவும் இயங்க அதிகாரம் கொண்ட தேர்தல் ஆணையமும், நடுவணரசும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- இராபர்ட் சந்திரகுமார், வழக்குரைஞர், மதுரை