தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கியிருக்கிறது.  ஒவ்வொரு கட்சியும் கூட்டணியை, வேட்பாளர்களை, தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறார்கள்.  முறையாக வாக்களித்து நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்னும் துடிப்பும் வேகமும் இளைஞர்களிடம் வேகமாகப் பரவத் தொடங்கியிருக்கிறது.  உலகத்திலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு என அறியப்படும் இந்தியாவில் முதல் முறை வாக்காளர்களாகிய இளைஞர்களே தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.  இப்படித் தவிர்க்க முடியாத வாக்காளர் சக்தியாக உருவாகியிருக்கும் இளைஞர் பட்டாளம் என்ன செய்யலாம் தேர்தல் நேரத்தில்?

 • நண்பர்களை ஒருங்கிணையுங்கள்

election symbolsவாக்களிக்கும் வயதில் உள்ள உங்கள் பக்கத்து வீட்டு, எதிர் வீட்டு நண்பர்களை ஒருங்கிணைக்கத் தொடங்குங்கள்.  உங்களுடன் பள்ளியில் கல்லூரியில் படித்த நண்பர்கள் ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.  ஒருங்கிணைப்பது என்றால் எப்படி?  பெரிய விசயம் இல்லை.  ‘தேர்தல் வருகிறது; நாம் இணைந்து நாட்டுக்கு ஏதாவது செய்வோமோ?’ என்று கேட்டுப் பாருங்கள்.  விருப்பப்பட்டு வரும் நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் எல்லோருமே ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் என்றால் சேர்த்து வாட்சப் / டெலிகிராம் குழு ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்.  ஸ்மார்ட்போன் இல்லை என்றால், மின்னஞ்சல் குழுவையோ, சாதாரண குறுஞ்சேதிக் குழுவையோ உருவாக்கிக் கொள்ளலாம்.  குழு என்றவுடன் நிறைய பேர் வேண்டுமே என்று யோசிக்க வேண்டும்.  உங்களுடன் சேர்ந்து கொள்ள ஒரேயொருவர் வந்தால் கூடப் போதும்.  இருவராக இயங்கலாம்.  பொதுவாக, நான்குப் பேர், ஐந்துப் பேர் இருந்தால் வேலையைப் பிரித்துச் செய்ய வசதியாக இருக்கும்.  இந்தக் குழுவின் அடிப்படை விதியாகத் ‘தேர்தல் பற்றிய செய்திகளை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  தேவையற்ற ஃபார்வர்டு செய்திகளை அனுப்பக் கூடாது’ என்பதை வைத்துக் கொள்ளுங்கள்.   இந்த விதியை அனைவரும் பின்பற்றச் செய்யுங்கள்.  யாராவது ஒருவர் மீறினாலும் அவரைத் தனியே கூப்பிட்டு விதியை நினைவூட்டுங்கள். 

 • வேட்பாளர்களை அடையாளம் காட்டுங்கள்

பொதுவாகவே, எல்லாப் பெரிய வேட்பாளர்களுடைய தன்விவரக் குறிப்பும் முன்னணிச் செய்தித்தாள்களில் வந்திருக்கும்.  வேட்பாளர் எவ்வளவு காலமாக அரசியலில் இருக்கிறார், அவருடைய படிப்பு, குடும்பம், சாதனைகள், சொத்து விவரம் போன்ற விவரங்கள் பெரும்பாலும் செய்திகளில் வந்திருக்கும்.  அப்படிப்பட்ட செய்திகளைக் கட்சி, சாதி, மதம் ஆகிய விருப்பு வெறுப்பின்றிக் குழுவிற்குத் தெரியப்படுத்துங்கள்.  களத்தில் நிற்கும் இந்த வேட்பாளர்களில் ஒருவர் தான் இன்னும் சில நாட்களில் சட்டசபையில் நமக்காகப் பேசப் போகும் பிரதிநிதி என்பதை மறந்து விடாதீர்கள்.  எனவே, ஒவ்வொரு வேட்பாளரைப் பற்றிய அடிப்படை விவரங்களைத் தெரிந்து வைத்திருப்பது நம்முடைய அடிப்படைக் கடமையாகும்.  அவ்வப்போது தேர்தல் ஆணையம் வெளியிடும் அறிக்கைகளையும் குழுவின் பார்வைக்குக் கொண்டு வாருங்கள். 

 • கலந்து பேசுங்கள்

நம்முடைய பகுதிக்கு என்னென்ன வேண்டும் என்னும் முழுப்பட்டியலைத் தனியொருவராக இருந்து உருவாக்குவது கடினம்.  பலரிடம் போய் எதிர்பார்ப்புகள் என்னென்ன என்று கேட்டால் நிறைய தேவைகள் தெரிய வரும்.   ஒருவர் நூலகம் வேண்டும் என்பார்; ஒருவர் மருத்துவமனை வேண்டும் என்பார்; ஒருவர் பள்ளிக்கூடத்திற்குக் கூடுதல் வகுப்பறை வேண்டும் என்பார்; ஒருவர் மதுக்கடையை மூட வேண்டும் என்பார்; சிலர் விளையாட்டுத் திடல் கேட்பார்கள். 

உங்கள் குழுவில் ஒருங்கிணைந்த நண்பர்களிடம் – அவர்கள் தங்கள் தொகுதிச் சட்டமன்ற உறுப்பினரிடம் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் அவர்கள் பெற்றோர், உறவினர்கள் என்னென்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் கேட்டு அவ்வப்போது உங்கள் குழுவிற்குத் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். 

 • கடிதம் எழுதுங்கள்

உங்கள் அணியில் நன்றாகக் கட்டுரை, கடிதம் ஆகியன எழுதத் தெரிந்த நண்பரைத் தேர்ந்தெடுங்கள்.  அவரிடம் குழுவிற்கு வந்துள்ள எதிர்பார்ப்புகளை எல்லாம் தொகுத்து  ஒரு வெள்ளைத் தாளில் எழுதச் சொல்லுங்கள்.  இப்படித் தொகுத்தவற்றை ஒவ்வொரு வேட்பாளருக்கும் கொடுக்கும் கடிதம் போல எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.  அக்கடிதத்தில் முதலில் குழு உறுப்பினர்கள் கையொப்பங்களை வாங்கிக் கொள்ளுங்கள்.  பிறகு குழு உறுப்பினர்களின் பெற்றோர்,அப்பகுதியில் உள்ள உறவினர்கள் ஆகியோரின் கையொப்பங்களை வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் குழுவிற்கு, ஏதாவது ஒரு நல்ல பெயர், ‘காந்தியடிகள் மக்கள் நல மன்றம்’ என்பது போல ஒரு பெயர் சூட்டிக்கொள்ளுங்கள்.  முடிந்தால், ஆளுக்குக் கொஞ்சம் காசு போட்டு, மன்றத்தின் பெயரில் ‘லெட்டர் பேடு’ ஒன்றை அச்சிட்டுக் கொள்ளலாம்.

அந்த லெட்டர் பேடில், இந்தக் கடிதத்தை எத்தனை வேட்பாளர்கள் இருக்கிறார்களோ, அந்த எண்ணிக்கையை எத்தனை குழு உறுப்பினர்கள் அந்த எண்ணிக்கையால் பெருக்கி நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  அதாவது, உங்கள் தொகுதியில் 6 வேட்பாளர்கள் இருக்கிறார்கள்; உங்கள் குழுவில் 4 உறுப்பினர்கள் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.  இப்போது நீங்கள் 6 * 4 = 24 நகல்கள் எடுக்க வேண்டும்.  ஒவ்வொருவரும் ஆறு நகல்களை வீட்டில் வைத்திருக்க வேண்டும்.  கடிதத்தின் மூல நகலை குழு ஒருங்கிணைப்பாளர் வைத்திருக்கட்டும். 

 • வேட்பாளர் வீடு தேடி வரும் போது..

ஒவ்வொரு கட்சியில் இருந்தும் வேட்பாளர்களோ அவர்களுடைய பிரதிநிதிகளோ கட்டாயம் ஒவ்வொரு வீட்டையும் தேடி வருவார்கள்.  தேடி வந்து அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிப் பட்டியலைக் கொடுப்பார்கள்.  ஒவ்வொரு வேட்பாளருடைய வாக்குறுதிப் பட்டியலையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.  எடுத்து வைத்துக் கொண்டு, நீங்கள் ஏற்கெனவே எழுதிக் கையொப்பங்கள் வாங்கி வைத்துள்ள கடிதத்தின் நகலை வந்து வாக்கு கேட்கும் பிரதிநிதியிடம் கொடுங்கள். இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றித் தருபவருக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளோம் என்று சொல்லுங்கள்.  நீங்கள் வாங்கியிருக்கும் கையொப்பங்களைப் பார்க்கும் ஒவ்வொரு பிரதிநிதியும் ஏதாவது வாக்குறுதி கொடுத்து உங்களை மடக்கி விடப் பார்ப்பார்கள்.  அந்த வாக்குறுதிகள் உங்கள் கடிதத்தில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் உள்ளதா எனப் பாருங்கள். 

 • சாதி, மதம், பணம் விளையாடினால்…

வாக்குக் கேட்டு வரும் வேட்பாளரோ அவரின் பிரதிநிதியோ சாதியைச் சொல்லியோ மதத்தைச் சொல்லியோ பணம் கொடுப்பதாகச் சொல்லியோ வாக்குக் கேட்டால், பணிவாக மறுத்து விடுங்கள்; விளக்கங்கள் கொடுக்க வேண்டாம்;  சண்டை போட வேண்டாம். தெரியாமல் தவறு செய்பவர்களைத் தான் விளக்கிச் சொல்லிப் புரிய வைக்க முடியும்.   தேர்தலில் சாதி, மதம், பணம் ஆகிய கருவிகளை விவரம் தெரியாமல் யாரும் பயன்படுத்துவதில்லை.  எனவே, தெரிந்தே தவறு செய்யும் அவர்களுடன் மோதுவதில் பலன் ஏதும் இருக்கப் போவதில்லை. ‘சாதி, மதம், பணம் வேண்டாமே!’ என்று உறுதியுடன் மறுத்து விடுவது தான் நலம்! 

 • வாக்குறுதிகளைப் பதிந்து பரப்புங்கள்

உங்கள் அலைபேசியில் பதிந்து கொள்ள அனுமதி கேட்டு வேட்பாளரிடமோ அவரது பிரதிநிதியிடமோ அவருடைய வாக்குறுதிகளை வாசிக்கச் சொல்லிப் பதிந்து கொள்ளுங்கள்.  இப்படிப் பதியப்படும் செய்தியை நிறைய நண்பர்களுக்கு அலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுப்புவேன் என்று சொல்லிப் பாருங்கள்.  ஒவ்வொரு கட்சிப் பிரதிநிதியும் போட்டிப் போட்டுக் கொண்டு வாக்குறுதிகளைப் பதிந்து கொடுப்பார்கள்.  அப்படிக் கிடைக்கும் பதிவுகளை உங்கள் குழுவிற்கு அனுப்புங்கள்.  இப்படிப் பதிவதில் கிடைக்கும் இன்னொரு நன்மை – சாதி, மதம், பணம் ஆகியவற்றைச் சொல்லி வாக்குக் கேட்பதில் சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன.  எனவே, அரசியல் பிரதிநிதிகள் அவற்றைப் பற்றிய பேச்சைத் தவிர்ப்பார்கள்.  நமக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!  ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையும் செய்தித்தாள்களில் வந்திருக்கும்.  அவற்றையும் குழுவிற்கு அனுப்பி உதவுங்கள். 

 • மறக்காமல் கேளுங்கள்

வெயில், மழை, பனி பார்க்காமல் பரபரப்பாக இயங்கும் வேட்பாளர்கள் ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி இதே வேகத்துடன் ஐந்தாண்டுகளும் இயங்க மாட்டார்கள்.  எனவே, ஒவ்வொரு வேட்பாளருடைய முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல் இருந்தால் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை மறக்காமல் கேட்டு வாங்குங்கள்.  அந்தத் தகவலையும் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.  முடிந்தால், ஒவ்வொரு வேட்பாளர் முகவரிக்கும் உங்கள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தைப் பதிவஞ்சலில் அனுப்பி வையுங்கள்.  தேர்தல் முடிந்த பின்னர், நம்முடைய கோரிக்கைகளை நினைவூட்ட இந்த முகவரிகளும் நீங்கள் அனுப்பும் கடிதமும் பயன்படும். 

 • வெளியூர் நண்பர்களுக்கு நினைவூட்டுங்கள்

படிப்பு, வேலை போன்ற காரணமாகச் சில நண்பர்கள் வெளியூர்களில் இருப்பார்கள். அவர்களைத் தொலைபேசியில் கூப்பிட்டோ குறுஞ்சேதி அனுப்பியோ தேர்தலுக்கு வாக்களிக்க வரச் சொல்லி இப்போதே பயணச்சீட்டு எடுத்து வைக்க நினைவூட்டுங்கள். 

 • தேர்தல் நெருங்க நெருங்க

தேர்தலுக்கு முன்னர் நம் தெரு, பகுதி வாக்காளர்கள் அனைவர் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்கலாம்.  வாக்குச்சாவடிகள் எங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன என்பன போன்ற விவரங்களைச் சேகரிக்கலாம்.  தேர்தல் நாளன்று நம் பகுதியில் உள்ள வயதானவர்கள் வாக்களிக்க வசதியாக வண்டியில் வாக்குச் சாவடிக்குக் கூட்டிச் செல்லலாம்.  மொத்தத்தில் நூறு சதவீதம் நம் தெருவாசிகள் வாக்களிக்க வேண்டும் என்பதற்கு நாம் பொறுப்பு என்னும் உறுதியுடன் இருக்க வேண்டும். 

 •  செய்யக் கூடாதவை என்னென்ன

செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விடுவதால் மட்டுமில்லை – செய்யக்கூடாததைச் செய்தாலும் கேடு வரும் என்று 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.  அவருடைய வார்த்தையை மறக்கலாமா?  கோடிக் கணக்கில் பணம் புரளும் தேர்தல் களத்தில் வெல்லும் நோக்கத்தில் ஒவ்வொரு கட்சியும் வெறித் தனமாக இருப்பார்கள்.  நாம் யாருக்காவது சாதகமாகவோ பாதகமாகவோ கொஞ்சமும் பிசகி நடந்து கொள்ளக் கூடாது.  அப்படி நடந்து கொண்டால் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வரும் பகைகளை நாம் தான் எதிர் கொள்ள வேண்டி வரும்.  நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் – நமக்குத் தேவை – நம்முடைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும் நல்ல பிரதிநிதி – யார் வென்றாலும் சரி, அவர் எந்தக் கட்சியாக இருந்தாலும் நமக்கான பிரதிநிதியாக, மக்களுக்கு உழைப்பவராக அவர் இருக்க வேண்டும்!  அவ்வளவு தான்! 

எனவே,

தன்னுடைய சாதிக்காரர்களை முன்னிறுத்துதல்

தான் விரும்பும் கட்சியையோ கூட்டணியையோ முன்னிறுத்துதல்

பணம் வாங்கிக் கொண்டு ஒரு வேட்பாளருக்குச் சாதகமாக நடந்து கொள்ளுதல்

வாக்குக் கேட்டு வரும் பிரதிநிதிகளிடம் வீண் வாதங்களில் ஈடுபடுதல்      

ஏதாவது ஒரு கட்சியையோ கூட்டணியையோ ஆதரித்தோ எதிர்த்தோ  பொதுவிடங்களில் பேசுதல்

பெருமை விரும்பிக் குழுவுடன் சேராமல் தனித்து இயங்குதல்

ஆகியன நம்முடைய மொத்த நோக்கத்தையும் சிதைத்து விடும்.  அத்துடன் நிற்காமல், தேர்தல் முடிந்த பின்னர், பல்வேறு சிக்கல்களையும் ஏற்படுத்தி விடும்.  எனவே, மேல் உள்ள எந்த வேலையிலும் நம்மை ஈடுபடுத்திவிடக் கூடாது.  நாம் செய்வது நம்முடைய நாட்டு வளர்ச்சிக்குச் செய்யும் தேர்தல் விழிப்புணர்வுப் பிரச்சாரமே தவிர, ஒரு குறிப்பிட்ட கட்சியையோ வேட்பாளரையோ ஆதரிக்கும் தேர்தல் பிரச்சாரம் அல்ல. 

வாக்களிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை இருக்கும்.  ஒருவர் மாநிலக் கட்சிக்கு வாக்களிப்பார்; ஒருவர் தேசியக் கட்சிக்கு வாக்களிப்பார்; சிலர் வேட்பாளர் பார்த்து வாக்களிப்பார்கள்; சிலர் ஆட்சி மாற்றம் விரும்பி வாக்களிப்பார்கள்; சிலர் இருக்கும் ஆட்சி தொடர வேண்டும் என்று நினைப்பார்கள்.  இப்படியாக, அவர்கள் ஒவ்வொருவருடைய கருத்துக்கும் ஒவ்வொரு நியாயம் இருக்கும்.  அதில் தேவையில்லாமல் தலையிட்டுச் சிக்கல்களை உருவாக்கி விடக் கூடாது.  குழு உறுப்பினர்கள் இவருக்குத் தான் வாக்களிக்க வேண்டும், இவருக்கு வாக்களிக்கக் கூடாது என்னும் அறிவுரைகளை யாரும் யாருக்கும் சொல்லக் கூடாது.  எல்லா வேட்பாளர்களைப் பற்றிய குறிப்புகளையும் கொடுத்து விட வேண்டும்.  அக்குறிப்புகளை வைத்து இனி உறுப்பினர் தான் சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்.

 • வெளியூரில் இருந்து என்ன செய்யலாம்?

‘தெரு நண்பர்களுடன் இணைந்து செயல்பட எனக்கு விருப்பம் தான்!  ஆனால் வேலை காரணமாக வெளியூரில் மாட்டிக் கொண்டேனே! என்ன செய்வது?’  எனச் சிலர் நினைக்கலாம்.  அப்படி நினைப்பவர்கள் வெளியூரில் இருந்து கொண்டே செய்யக்கூடிய வேலைகளைச் செய்யலாம். 

 • சமூக வலைத்தளங்களில் உங்கள் தொகுதிக்குப் பக்கம் உருவாக்கலாம். அப்பக்கத்தில் தொகுதியின் தலையாய பிரச்சினைகள் என்னென்ன, கோரிக்கைகள் என்னென்ன ஆகியனவற்றைத் தொகுத்து வெளியிடலாம். 
 • தொகுதி வேட்பாளர்கள் பற்றிய தன் விவரக்குறிப்புகளை அப்பக்கத்தில் வெளியிடலாம். 
 • நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரைத் தொலைபேசியில் கூப்பிட்டு மறக்காமல் வாக்களிக்க நினைவூட்டலாம். 
 • தேர்தல் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ‘லெட்டர் பேடு அச்சிடுவது’ போன்ற வேலைகளுக்குப் பண உதவி எதுவும் தேவைப்பட்டால் முடிந்த அளவு உதவலாம்.

ஒன்றே ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்!  தேர்தல் முடிந்த பிறகு சட்டமன்ற உறுப்பினரின் வீடு தேடிப் பார்த்து கோரிக்கைகள் வைப்பதை விட, அவரும் அவருடைய பிரதிநிதிகளும் நம் வீட்டைத் தேடி வரும் போது கோரிக்கைகள் வைத்துச் சாதிப்பது எளிமையானது. பரீட்சை நேரத்தில் படிக்காமல் இருந்து விட்டு, முடிவுகள் வரும் போது அழுவதில் அர்த்தமில்லை என்பது எல்லோரையும் விட இளைஞர்களுக்கு நன்றாகப் புரியும்.  எனவே, எதிலும் சாதிக்கும் இளைஞர்கள் தேர்தல் நேரத்தில் ஒன்றிணைந்து நின்றால், அதை விடப் பெரிய வரப்பிரசாதம் நாட்டுக்கு வேறொன்றுமில்லை. 

(கட்டுரை புதிய வாழ்வியல் மலர் மே 1-15, 2016இல் வெளியானது) 

- முத்துக்குட்டி

Pin It