அடிமைத்தொழில் செய்பவர்களாய், நிலமற்றவர்களாய், பிறரை அண்டிப் பிழைக்கும் அற்ப மக்களாய் சாதியின் பெயரால் வாழ கட்டாயப்படுத்தப்பட்ட கோடானகோடி இந்திய மக்களுக்கு வெள்ளைக்காரன் வருகைக்குப் பின்னால் ஏற்பட்ட நவீன கல்வி முறையால் படிப்பதற்கும், சமூக வெளியில் குறைந்தபட்ச அளவிற்காவது எழுந்து நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்று ஒரளவேனும் அரசாங்க வேலைகளில்  இருக்கின்றார்கள் என்றால், அதற்கு முழுக் காரணமும் அம்பேத்காரும், பெரியாருமே ஆவர்கள். அப்படி அவர்கள் போராடி வாங்கித் தந்த இட ஒதுக்கீடு, இன்று ஆதிக்க சாதிகளால் பறிக்கப்படும் சூழ்நிலையில் இருக்கின்றது.

  மத்திய அரசுப் பணிகளில் ஒபிசி பிரிவுக்கென ஒதுக்கப்பட்ட  27 சதவீத இட ஒதுக்கீட்டைக் கூட பூர்த்தி  செய்யாமல் பெரும்பாலான பதவிகளை பொதுப்பிரிவில் வரும் பார்ப்பன, பனியா ஆதிக்க சாதிகளே அபகரித்த கொடுமை தற்போது வெளியாகி இருக்கின்றது. சென்னையைச் சேர்ந்த பொறியியல் பேராசிரியர் இ.முரளிதரன் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் இந்த உண்மையை அம்பலப்படுத்தி உள்ளார். மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் பார்த்தால் மத்திய அரசின் குரூப்-ஏ , குரூப்- பி, குரூப்-சி, குரூப்- டி என அனைத்துப் பணிகளிலும் பொதுப்பிரிவு ஆதிக்க சாதிகளே  ஆக்கிரமித்துக் கொண்டது தெரிய வந்துள்ளது . (நன்றி தமிழ் இந்து நாளிதழ்).

  மத்திய அரசுப் பணிகளில் 1990இல் இருந்து பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகின்றது. முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் கொண்டு வரப்பட்ட இந்த 27 சதவீத இட ஒதுக்கீடு என்பதே மிகக்குறைவானது. ஏனெனில் மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் பார்க்கும் போது இந்தியாவில் பிற்பட்ட வகுப்பு மக்கள் ஏறக்குறைய 52 சதவீத்திற்கும் மேல் இருக்கின்றார்கள். ஆனால் கொடுக்கப்பட்டதோ வெறும் 27 சதவீதம். நிலைமை இவ்வாறு இருந்தும் இந்த 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த 25 ஆண்டுகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் மத்திய அரசுப் பணிகளில் வெறும் 11 சதவீதம் மட்டுமே இருக்கின்றது.

 முக்கியமான பதவிகளான குரூப்-ஏ மற்றும் குரூப்-பி போன்றவற்றில் முறையே 69 சதவீதமும், 71 சதவீதமும் பார்ப்பன- பனியா மேல்சாதி கும்பல்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த லட்சணத்தில் இடஒதுக்கீட்டை நீக்க வேண்டும் என்று வேறு இந்த பார்ப்பன பனியா கும்பல் போராடிக் கொண்டு இருக்கின்றது. இட ஒதுக்கீடு இருக்கும் போதே மற்ற சாதி மக்களின் இட இதுக்கீட்டை திருடி தனதாக்கிக் கொண்ட இந்த திருட்டுக் கூட்டம்  இட ஒதுக்கீடு என்ற ஒன்றே இல்லை என்றால் என்ன என்ன அட்டூழியம் செய்யும்!.

  தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தையும் மீறி எப்படி இவர்களால் மற்ற பிற்பட்ட சாதி மக்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை கபளீகரம் செய்ய முடிந்தது என்பதுவே முக்கியமான கேள்வி.  வெறும் 5 சதவீதம் மட்டுமே உள்ள இந்தக் கூட்டம் 50 சதவீத்திற்கு மேல் இருக்கும் மற்ற பிற்பட்ட சாதி மக்களின் இட ஒதுக்கீட்டை திருடி இருக்கின்றதென்றால் அதிகார வர்க்கத்தின் துணையின்றி நிச்சயம் இது நடந்திருக்காது. அனைத்துப்  பிற்பட்ட சாதி மக்களையும் இந்த அரசு இந்த 25 ஆண்டுகளாக ஏமாற்றி வந்திருக்கின்றது. இவர்களை வெறும் ஓட்டு போடும் இயந்திரங்களாக மட்டுமே இந்திய பார்ப்பன-பனியா ஆட்சியாளர்கள் நினைத்துள்ளார்கள். இப்போது தெரிகின்றதா ஏன் பெரியார் இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆகஸ்டு 15யைக் கருப்பு தினமாக அறிவித்தார் என்று.

 இந்தியாவின் சுதந்திரம் எப்போது வெள்ளைக்காரன் கைகளில் இருந்து பார்ப்பன –பனியாக்களின் கைகளில் மாற்றி கொடுக்கப்பட்டதோ அன்றில் இருந்து இன்றுவரை அவர்களின் ஆதிக்கம் தான் அனைத்து துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கின்றது. குடியியல் பணி, மாநில ஆளுநர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பெரும் தொழில்நிறுவனங்கள் என அனைத்தும் அவர்கள் கையில்தான் உள்ளன. ஊடகத்துறையை எடுத்துக் கொண்டால் இந்தியாவின் முக்கியமான நான்கு தேசிய நாளிதழ்களில் மூன்று பனியா குடும்பத்திற்கும், ஒன்று பார்ப்பன குடும்பத்திற்கு சொந்தமாக உள்ளது. இவர்களை மீறி எந்த ஒரு அணுவும் இங்கே அசையாது என்று சொல்லும் அளவிற்கு அவர்களது ஆதிக்கம் உள்ளது.

  அம்பேத்கார், பெரியார் போன்றவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் எந்த மக்களுக்காகப் போராடினார்களோ,  எந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த தங்களுடைய வாழ்க்கையை அர்பணித்தார்களோ அந்த மக்கள் இன்று பெரும் துரோகத்தைச் சந்தித்து இருக்கின்றார்கள். அரசு அதிகாரத்தை முழுவதும் ஆக்கிரமித்து வைத்துள்ள பார்ப்பன – பனியா மேல்சாதி அயோக்கியர்களால் இந்த மக்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு இருக்கின்றார்கள். இட ஒதுக்கீட்டில் இவ்வளவு பெரிய மோசடி இத்தனை கோடி மக்களின் கண்ணில் மண்ணைத் தூவி நடைபெற்று இருக்கின்றது. இந்த மக்களோ இதை ஏதும் அறியாது, பார்ப்பன- பனியா பி.ஜே.பியை ஆதரித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பல பிற்படுத்தப்பட்ட மக்களே இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்லும் மனநிலையை இந்த பார்ப்பன- பனியா கும்பல் தன்னுடைய  ஊடக பலத்தால் உருவாக்கி வைத்திருக்கின்றது.

    இட ஒதுக்கீடு கொடுப்பதால் தகுதி, திறமை இல்லாதவர்கள் எல்லாம் அரசு பதவிகளில் உட்கார்ந்து கொள்வதாக ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை தனது சித்தாந்தம் போல சொல்லி வேதனைப்பட்ட பல படித்த பிற்பட்ட சாதி மக்கள் இன்று இந்தப் புள்ளிவிவரங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்? தன்னைவிட பார்ப்பன- பனியா கும்பலுக்குத் தகுதியும், திறமையும் இருப்பதால் தான் அவர்களால் அனைத்து துறைகளிலும் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமிக்க முடிந்தது, எனவே அது சரியானது என ஒப்புக்கொள்ள போகின்றார்களா? இல்லை தாங்கள் பார்ப்பன –பனியா மேல்சாதி அயோக்கியர்களால்  திட்டமிட்டு ஏமாற்றப்பட்டிருக்கின்றோம் என்பதை ஒப்புக்கொண்டு தனக்கான ஒதுக்கீட்டை பெற போராடப் போகின்றார்களா என்பதை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

  சமூக நீதிக்கொள்கையில் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் இருந்தே இந்தத் துரோகத்திற்கு எதிரான குரல்கள் வலுவாக எழவேண்டும். அம்பேத்காரும், பெரியாரும் போராடி வாங்கித் தந்த இட ஒதுக்கீட்டை தன்னுடைய வஞ்சகத்தால் நாசம் செய்யப் பார்க்கும் பார்ப்பன –பனியா கும்பலுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டத்தை நாம் நடத்த வேண்டி உள்ளது. இல்லை என்றால் உழைக்காமல்  ஊரை ஏமாற்றியே உடல்வளர்க்கும் இந்த பார்ப்பன- பனியா மேல்சாதிக் கூட்டம் நம்முடைய கோவணத்தையும் திருடிக்கொண்டு விட்டுவிடும்.

  - செ.கார்கி

Pin It