முதலாளித்துவ சமுதாயத்தில் முதலாளிகளின் / முதலாளித்துவ அறிஞர்களின் பொருளற்ற திடீர் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக மனித வளத்தின் செழுமையான பகுதி வீணாவதைச் சுட்டிக் காட்டி ஃபிரெடெரிக் எங்கெல்ஸ் முதலாளித்துவச் சமூக அமைப்பின் அவலத்தை விளக்கி இருக்கிறார். அப்படிப்பட்ட பொருளற்ற திடீர் ஆசை ஒன்று இந்தியாவில் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. அது தான் மும்பைக்கும் அகமதாபாத்துக்கும் இடையே அமைக்கப்படவிருக்கும் மிகு வேகத் தொட வண்டித் திட்டம். இத்திட்டத்திற்கு ரூ.98,000 கோடி செலவாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அது முடியும் போது இலட்சம் கோடியைத் தாண்டினால் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை.

bullet train

     அவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? இந்திய நாட்டில் உள்ள 1,15,000 கி.மீ. நீள இருப்புப் பாதையில் (Railway line) வெறும் 500 கி.மீ. நீளம் மட்டுமே கொண்ட மும்பை - அகமதாபாத் தடத்தில் மிகு வேகத் தொடர் வண்டியை அறிமுகப் படுத்தப் போகிறார்கள். இத்திட்டத்தினால் இந்திய நாட்டுத் தொடர் வண்டிப் பயணிகளில் இலட்சத்தில் ஒருவரை விடக் குறைவான எண்ணிக்கையிலான மக்களே பயனடையப் போகிறார்கள். இச்சிறு எண்ணிக்கையிலான பயணிகளுக்காக ரூ.98,000 கோடியைச் செலவழிப்பது சரியா?

     இவ்வினாவை எழுப்பி லாலு பிரசாத் யாதவ் 22.12.2015 அன்று பிரதம அமைச்சர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார். அக்கடிதத்தில், தான் தொடர் வண்டித் துறை அமைச்சராகப் பணியாற்றிய காரணத்தால், அத்துறையின் நிதி நிலைமை ஊக்கம் அளிப்பதாக இல்லை என்பதை மிகவும் ஆழமாகப் புரிந்து கொண்டு இருப்பதாகவும், இந்நிலையில் வெகு மக்களுக்கு எந்த வகையிலும் உதவாத மிகு வேகத் தொடர் வண்டித் திட்டத்திற்காக ரூ.98,000கோடி செலவழிக்க இருப்பதை அறியத் தனக்கு மிகவும் கவலை அளிப்பதாகவும், தார்மீகக் கோபம் பொங்கி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

     இக்கருத்தைக் கூறியது யார் என்பதை விட, சொல்லப்பட்டு உள்ள கருத்து முக்கியமானது என்பதில் எள் முனை அளவும் ஐயம் இல்லை. மிகு வேகத் தொடர் வண்டிக்காகச் செலவழிக்க முனைந்து இருக்கும் ரூ.98,000 கோடியில், நாட்டின் அனைத்து  இருப்புப் பாதைத் தடங்களையும் நான்கு வழிப் பாதையாக மாற்றி விட முடியும். அப்படிச் செய்து விட்டு, வேண்டிய அளவில் தொடர் வண்டிகளையும் ஓட விட்டால், தொடர் வண்டியில் பயணம் செய்ய முனையும் அனைவருக்கும் இடம் அளிக்க முடியும். இப்பொழுது தேவைப்படுவது போல், யாரும் முன் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது; முன் பதிவு செய்யாத வண்டிகளில் ஜடப் பொருள்களை அடுக்கி வைக்கப்பட்டுப் பயணம் செய்வது போன்ற கொடுமைகளும் இராது. இவ்வாறு செய்தால் கிடைக்கும் வருவாயானது, மிகு வேகத் தொடர் வண்டித் திட்டத்தினால் கிடைக்கும் வருவாயை விட மிக மிக அதிகமானதாகவே இருக்கும். மக்களும் தங்கள் பயணங்களை முன் கூட்டியே திட்டமிட்டாக வேண்டும் என்ற மன அழுத்தம் இன்றி அமைதியுடன் இருக்க முடியும். அந்நிலையில் பிற வேலைகளில் அவர்களுடைய திறன் உயரும். இது நாட்டு முன்னேற்றத்திற்கான சிறப்பான உந்து விசையாகவும் இருக்கும்.

     மக்களுக்கு இவ்வளவு நன்மைகளைப் பயக்கும் வழிமுறைகளை விட்டு விட்டு, மிகு வேகத் தொடர் வண்டித் திட்டத்தைச் செயல்படுத்த இந்திய அரசு முனைவது ஏன்? மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டத்தினால் மக்களும் சிறு முதலாளிகளும் பயன் அடைவார்கள். மிகு வேகத் தொடர் வண்டித் திட்டத்தினால் பெரு முதலாளிகள் இலாபம் அடைவார்கள். ஒரு முதலாளித்துவ அரசு மக்களின் நன்மைகளை விட முதலாளிகளின் இலாபத்திற்குத் தான் முன்னுரிமை அளிக்கும். முதலாளிகளிலும் சிறு முதலாளிகளை விடப் பெரு முதலாளிகளுக்குத் தான் முன்னுரிமை அளிக்கும். அந்த விதத்தில் தான் பா.ஜ.க. அரசு மிகு வேகத் தொடர் வண்டித் திட்டத்தைச் செயல்படுத்த முனைந்து இருக்கிறது. இன்று பா.ஜ.க. ஆட்சியில் இல்லாமல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தாலும் இதே முடிவைத் தான் எடுத்து இருக்கும். அது மட்டும் அல்ல. இன்று இத்திட்டத்தை விமர்சித்து இருக்கும் லாலு பிரசாத் யாதவ் ஆட்சியில் இருந்திருந்தாலும் இதே முடிவைத் தான் எடுத்து இருப்பார். ஏனெனில் இந்த அரசியல்வாதிகள் அனைவரும் பெரு முதலாளிகளின் வேலைக்காரர்களே.

     நாட்டு மக்களில் இலட்சத்தில் ஒருவரை விடக் குறைவான எண்ணிக்கையிலான முதலாளிகளின் / முதலாளித்துவ அறிஞர்களின் பொருளற்ற திடீர் ஆசைகளை நிறைவேற்றும் மிகு வேகத் தெடர் வண்டித் திட்டம் போன்ற வெள்ளை யானைத் திட்டத்தை விட்டு விட்டு, வெகு மக்கள் மன அழுத்தம் இல்லாமல் நாட்டு முன்னேற்றப் பணிகளில் மனதைச் செலுத்தி வேலை செய்யும் படியான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால், அதை முதலீட்டுக்கு இலாபம் என்ற அடிப்படையில் இயங்கும் ஒரு முதலாளித்துவ அரசில் எதிர்பார்க்க முடியாது; இலாபத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், மக்களின் நலன்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் சோஷலிச அரசில் மட்டுமே அது முடியும்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.12.2015 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It