தமிழ்நாட்டிலே முருக வழிபாடு என்பது பன்னெடுங்காலமாக இருந்துதான் வருகின்றது என்பது சங்க இலக்கியங்கள் மூலமாக அறிந்துகொள்ள முடிகின்றது. ஆனால் அந்த வழிபாடு இப்போது உள்ள ஆகம வழிபட்ட வழிபாடாக இல்லாமல் நாட்டார் தெய்வ வழிபாடாகவே இருந்துள்ளது.. சங்க இலக்கியத்திலே முற்பட்ட இலக்கியங்களில் அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை போன்றவற்றில் இதை நம்மால் பார்க்க முடிகின்றது. சங்க இலக்கியங்களில் பிற்பட்ட பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களில் முருக வழிபாடு என்பது ஆகம வழிபட்ட ஒன்றாக மாற்றப்படுவதையும் பார்க்க முடிகின்றது. எனவே முருக வழிபாடு என்பது நாட்டார் தெய்வ வழிபாடாக இருந்து எவ்வாறு பின்நாளில் பார்ப்பன மயமாக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்வோம். அதன் வழி முருகனை வைத்து அரசியல் நடத்தும் பிற்போக்குவாதிகளையும் அம்பலப்படுத்துவோம்.

seeman vel சங்க இலக்கியங்களின்படி முருகன் குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவான். அவனது பூசாரியின் பெயர் வேலன் ஆகும். இந்த வேலனுக்கு என்ன வேலை என்றால் வெறியாடி குறிசொல்வது. தலைவியின் காதல் நோயால் மெய்ப்பாடு தோன்றும் பொழுது தாயும் செவிலியும் அந்நோய் இன்னது என்று அறிய வேலனை அழைத்து வெறியாட்டம் நிகழ்த்தி வினவுவர். இச்சமயங்களில் ஆடறுத்து, ஆடுகளத்தை மெழுகி, வேலனைத் தருவித்து வெறியாட வைப்பார்கள். வேலன் வருங்காலம் பற்றி குறி சொல்வதோடு மந்திர மருத்துவனாகவும் இருப்பான். இந்த வேலன் மீது ஏறி இவனை குறிசொல்ல வைக்கும் தெய்வத்தின் பெயரே முருகு ஆகும்.

 முருகு அயர்ந்து வந்த முதுவாய் வேல! சினவேல் ஓம்புமதி: வினவுவது உடையேன்; பல்வேறு உருவின் சில்அவிழ் மடையொடு, சிறுமறி கொன்று, இவள் நறுநுதல் நீவி வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய விண்தோய் மாமலைச் சிலம்பன் ஒண்தார் அகலமும் உண்ணுமோ, பலியே?

 இந்தக் குறுந்தொகை பாடலில் வேலன் வெறியாடுவதைப்பற்றி கூறப்படுகின்றது. முருகனை வழிபட்டு , இங்கு வெறியாடுவதற்கு வந்தவனாகிய அறிவு முதிர்ச்சியுடைய வேலனே! கோபித்துக் கொள்ளலைப் பாதுகாப்பாயாக. நின்னிடத்தே கேட்பது ஒன்று உடையேன். பலவாக வேறுபட்ட உருவினைக் கொண்டதும், சில சோற்றையுடையதுமான படையலோடு, சிறிய ஆட்டுக்குட்டியையும் கொன்று , இவளது நாறிய நெற்றியைத் தடவி, முருகனை வணங்கிப் பலியாகக் கொடுத்தனை. ஆனால் இவளை வருத்திய வானளாவிய பெரிய மலைப்பக்கத்தைக் கொண்ட தலைவனது ஒள்ளிய மாலையணிந்த மார்பும், நீ கொடுக்கும் பலியை ஏற்று உண்பதாகுமோ என்று தலைவி கூறுவதாக பாடல் உள்ளது.

 இந்தப் பாடலில் நாம் கவனிக்க வேண்டியது முருகனுக்கு பலி கொடுக்கப்படுவதைப் பற்றி குறிப்பிடப்படுகின்றது. மேலும் இங்கே எந்த மந்திர வழிபாடும் இல்லை. மிகச் சாதாரணமாகவே தங்களுடைய வழிபாட்டை சங்ககால மக்கள் செய்துள்ளார்கள். கூழைக்கும்பிடு போடும் வழிபாட்டுமுறை அப்போது இல்லை.என்பதும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். முருகனது வேலை என்பது தலைவியின் நோய்க்கான காரணத்தைக் கூறுவது மட்டுமே. மேலும் ஒரு அகநானூற்றுப் பாடல் முருகனை கேவலப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

 வெறிபுரி ஏதில் வேலன் கோடை துயில் வரத்தூங்கும் ஆயின், மாரிக்குரல் அறுத்து, தினைப்பிறப்பு இரீஇ, சொல்லாற்றுக் கவலை பயம் கறங்கு தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா! வேற்றுப் பெருந்தெய்வம் போருடன் வாழ்த்தி

 வேலன் வெறியாடல் தலைவி நோய்க்கு மருந்தாகாது. இச்சிறு தெய்வத்தின் சக்தி தனக்குக் காதல்நோய் தந்த பெருந்தெய்வமான மலைநாட்டுத் தலைவனின் சக்திமுன் வெல்லாது. இங்கு வேலனையும் அவன் வணங்கும் முருகனையும் அற்பச் சக்தியுடைய சிறு தெய்வமெனத் தலைவி இகழ்ந்து பேசுகிறாள்.

 மேலும் “மடையம் மன்ற வேலன்” போன்ற சொற்கள் வேலனையும் அவனது தெய்வமான முருகனையும் மடையர்கள் என்றே கூறிப்பிடுகின்றன.

 அப்போது இருந்த முருக வணக்கத்தின் நிலை இதுதான். தங்களுக்கு எதாவது பிரச்சினை என்றால் வேலனை வரவழைத்து ஆடுபலி கொடுத்து அவனிடம் குறிகேட்பார்கள். இதுதான் நிலை. முருகனுக்கு என்று கோவில் தனித்து இருந்ததாக பெரிய அளவில் சான்றுகள் இல்லை. ‘அணங்கு உடை முருகன் கோட்டத்து’ என்ற புறநானூற்று வரியால் சில இடங்களில் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க முடிகின்றது. பரிபாடல் காலத்திலும் திருமுருகாற்றுப்படை காலத்திலும் முருகனுக்கு என்று ஆறுபடை கோவில்கள் உருவாகிவிட்ட நிலையை காணமுடிகின்றது. மேலும் பரிபாடலிலும், திருமுருகாற்றுப்படையிலும் குறிப்பிடப்படும் முருகன் தமிழக மக்கள் வணங்கிய முருகன் அல்ல; அது வட நாட்டு மக்கள் வணங்கிய ஸ்காந்தன் என்பது இந்த நூல்கள் வழி அறிய முடிகின்றது.

 தமிழ்நாட்டு மக்கள் வணங்கிய முருகனுக்கு அப்பன் பெயர் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. பழையோள் சிறுவன், கொற்றவை செல்வன் என்றே முற்பட்ட சங்க இலக்கியங்களில் அழைக்கப்படுகின்றான். பின்நாளில் வந்த பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களிலேயே முருகனின் அப்பன் சிவன் என்று குறிப்பிடப்படுகின்றது. மேலும் அவனது பிறப்பைப் பற்றிய புராணமயமாக்கப்பட்ட கேவலமான கதைகளும் வருகின்றது.

 வட மொழி நூல்களில் ஸ்காந்தனுக்கு அப்பன் அக்கினிதான். பின்நாளில் அக்கினி செல்வாக்கு இழந்த போது அவன் ருத்திரனின் மகனாக்கப்பட்டான். இப்போதோ அவன் சிவனின் மகன் ஆவான். ஸ்காந்தனின் அப்பன் யாரென்று ஸ்காந்தனுகே தெரியாத நிலையே நீடிக்கின்றது. அப்படிப்பட்ட ஸ்காந்தனை தமிழ் முருகனுடன் இணைத்ததுதான் பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படையின் வேலை.

 தமிழ்நாட்டில் உள்ள முருகனுக்கு வள்ளி என்ற ஒரு மனைவி மட்டுமே முற்பட்ட சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றது. ‘முருகு புணர்ந்தியன்ற வள்ளி போல’ என்று நற்றிணை வரி மூலம் இதை அறியலாம். ஆனால் பரிபடால், திருமுகாற்றுப்படை போன்றவை முருகனுக்குத் தெய்வானை என்ற மனைவியும் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இந்தத் தெய்வானை ஒரு பாப்பாத்தி ஆவாள். அசுரர்களை(தமிழர்களை) அழித்து தேவலோகத்தை மீட்டதற்காக இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணமுடித்து வைக்கின்றான். இதில் வள்ளி களவு மணத்தின் பிரதிநிதி ஆவாள். தெய்வானை கற்புமணத்தின் பிரதிநிதி ஆவாள். தமிழ்ச்சமூகம் கொண்டாடிய களவு மணம் தெய்வானையின் கற்பு மணத்தால் கேவலப்படுத்தப் படுகின்றது.

 பார்ப்பன அடிமைகளாக இருந்த தமிழ்ப் புலவர்கள் முருகனை பார்ப்பன மயமாக்கி, பைங்கட் பார்ப்பனன் சிவனை அவனுக்கு அப்பனாக மாற்றினர். சிவன் வழிபாடு தமிழ்நாட்டில் முற்பட்ட சங்க இலக்கியக் காலத்தில் அவ்வளவு பிரபலமாகவில்லை. சேயோன் ஒரு நிலத்தின் கடவுளாக மட்டுமே குறிப்பிடப்பட்டான். வடநாட்டு இலக்கிய படைப்பில் தான் ஸ்காந்தன் மயில், சேவல், பாம்பு போன்ற விலங்குகளோடு தொடர்புபடுத்தப் படுகின்றான். தமிழ்நாட்டு வழிபாட்டு மரபில் அவனுக்கு மயில் மண்ணாங்கட்டி எல்லாம் கிடையாது. திருப்பரங்குன்றத்தில் இருந்த முருக வழிபாட்டை குறிப்பிடும் பரிபாடல், திருப்பரங்குன்ற மக்கள் முருகனை இரு வழியாக வழிபட்டதைக் குறிப்பிடுகின்றது. கோயிலில் சிலை உருவில் செவ்வேலையும் கோயிலுக்கு வெளியே கடம்ப மரத்தடியில் வேலன் வெறியாட, பொதுமக்கள் வேலையும் கடம்ப மரத்தையும் வழிபட்டது கூறப்படுகின்றது.

 இலக்கியங்களின் துணைகொண்டு பார்க்கும் போது முருகனுக்கான வழிபாடு என்பது நாட்டார் வழிபாட்டு மரபை முழுவதுமாகப் பின்பற்றியதாகவே இருந்திருக்கின்றது. ஆட்டு ரத்தத்தில் தினை வகைகளை பிசைந்து முருகனுக்குப் படைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இப்போது முருகன் சுத்த சைவமாகிவிட்டான். முற்பட்ட சங்க இலக்கியங்களில் முருகனுக்கு இரண்டு கைகள் மட்டுமே இருக்கின்றது. ஆனால் பிற்பட இலக்கியங்களான பரிபாடல், திருமுருகாற்றுப்படை போன்றவை முருகனுக்கு ஆறுதலைகளும், பன்னிரெண்டு கைகளும் உள்ளது போல குறிப்பிடுகின்றன. மேலும் முருகனின் அண்ணன் கணேசன் என்பதும் அவர்களின் அப்பன், அம்மா சிவன், பார்வதி தம்பதிகள் என்பதும் உலகை சுற்றி வந்து ஞானப்பழத்தை வாங்கும் கதையும் இந்துமதத்தின் புனித சொல்லான ‘ஓம்’ என்பதும் எந்த முற்பட்ட சங்க இலக்கியத்திலும் சீமான் மீது சத்தியமாக கிடையாது என்பதையும் உறுதியாக நாம் சொல்கின்றோம். இருந்தால் அவரது அடிப்பொடிகள் நமக்குச் சொல்லலாம். மேலே நாம் செய்த ஆய்வுகளை வைத்துக்கொண்டு நாம் சீமானின் வீரத்தமிழர் முன்னணி மீதான விமர்சனத்துக்குப் போகலாம்.

 சீமான் நாம் தமிழர் கட்சியின் பண்பாட்டுப் பிரிவாக வீரத்தமிழர் முன்னணி செயல்படும் என்று அறிவித்தார். பிப்ரவரி 6 ஆம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு கூறுகின்றது.

seeman palani

 பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகாட்டி வள்ளுவப் பெருந்தகை தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஒளவையார், நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மீகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச்சித்தர். இன்னும் அய்யா வைகுந்தர், கிருபானந்த வாரியர், குன்றக்குடி அடிகளார், கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகு முத்துக்கோன், பெரும்பிடுகு சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் என்ற அனைவரையும் நெஞ்சில் நிறுத்தி தைப்பூச நாளில் அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி பழனியில் தமிழ்ப்பண்பாட்டை மீட்கவும் காக்கவும் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்க இருப்பதாக கூறினார்.

 சீமானின் வழிகாட்டிகள் பட்டியலில் உள்ள அகத்தியர், திருமூலர் போன்றவர்கள் பார்ப்பனர்கள் என்பதும் தமிழ்ச் சமூகத்தை சீரழித்தவர்கள் என்பதும் வரலாற்று உண்மையாகும். தமிழில் ஆகமங்களைப் பற்றி முதன்முதலில் திருமூலரின் திருமந்திரமே பேசுகின்றது. அவர் இதனை ஒரு பிராமணனாக இருந்து எழுதாமல் மூலன் என்ற சூத்திரனின் உடலில் புகுந்து எழுதியதாக புனைவுகள் உள்ளன. இந்த திருமூலர் என்ற பார்ப்பனனின் இயற்பெயர் சுந்திரநாதன் என்பதாகும். இந்தத் திருமூலர் தான் கயிலை மலையில் நந்தியெம்பெருமானிடம் உபதேசம் பெற்றதாக கூறுகின்றார். திருமந்திரத்தில் உள்ள ஆகமச்சிறப்பு, அந்தணர் ஒழுக்கம், வேதச்சிறப்பு போன்றவை திருமூலர் ஒரு பார்ப்பனன் என்பதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் ஆகும். திருமந்திரத்தின் பாடல் 85,92,369 போன்றவை இதை தெளிவாக புலப்படுத்தும். இந்த பார்ப்பன திருமூலர் தான் முதன்முதலில் அகத்தியர் என்ற பார்ப்பனன் மூலம் சூத்திர மொழியான தமிழை படைத்தான் என்று முதன்முதலில் தன்னுடைய திருமந்திரத்தில் சொன்னவன். இந்த பார்ப்பன அகத்தியன் சங்ககாலத்திற்கு முந்தியவர் என்பதெல்லாம் பிற்கால உரையாசிரியர்கள் கட்டிவிட்ட கட்டுக்கதையாகும். அகத்தியம் என்பது பார்ப்பனர்களின் கோத்திரப்பெயரான பாரத்வாஜ போன்ற ஒன்றாகும்.

 எவ்வளவு பெரிய முரண்பாடு! தொல்காப்பியரும் சீமானின் வழிகாட்டி; தொல்காப்பியரை அகத்தியனின் மாணவன் என்று சொல்லி, ஒரு தமிழனுக்கு இலக்கணத்தை படைக்கும் திறன் இல்லை என்று கேவலப்படுத்திய அகத்தியனும் வழிகாட்டி. சீமானின் பதவி ஆசை அவரை எப்படி எல்லாம் யோசிக்க வைக்கின்றது என்று பாருங்கள். மேலும் கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் பார்ப்பனமயமாக்கப்பட்ட முருகனை தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டவர்கள். அதே வழியில் சீமானும் பார்ப்பனமயமாக்கப்பட்ட முருகனையே தன்னுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டுள்ளார். இல்லை என்றால் சீமான் கையில் பிடித்திருக்கும் வேலில் இந்து மதத்தின் புனித சொல்லாக கருதப்படும் ‘ஓம்’ என்ற சொல் இடம் பிடித்திருக்காது. இந்த லட்சணத்தில் இந்துமத எதிர்ப்பை வேறு பேசுகின்றார்.

 மார்ச் மாதம் விகடனுக்கு சீமான் அளித்த பேட்டியில் முருகன் குறிஞ்சி நிலத்தின் கடவுள் அவரை எப்படி மொத்தத் தமிழர்களுக்கும் கடவுளாக முடியும்? என்ற கேள்விக்கு “தமிழனின் ஐந்து திணைக் கடவுள்களையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் 50 ஆயிரம் மாவீரர்களின் படங்களுக்குப் பதிலாக நடுகல் வழிபாட்டை ஒரு குறியீடாக தலைவர் கொண்டுவந்தது போல நாங்கள் தலை நிலமான குறிஞ்சி நிலத்தின் கடவுள் முருகனை முதன்மைப்படுத்துகிறோம். ஒரு ஞானப்பழத்தைக் கொடுத்து ஏமாற்ற நினைத்த சூழ்ச்சியில் இருந்து வெளியேறி வந்தவன் என் முப்பட்டான். எனக்கென ஓர் உலகம், என் நாடு, என் மக்கள்’னு அவன் தனியா வந்ததைப் பார்க்கணும்!”. என்று கூறியிருக்கின்றார்.

 இதைவிட சீமான் பார்ப்பன அடிமை என்பதற்கு என்ன ஆதாரம் வேண்டும். இந்த ஞானப்பழக் கதையை ஏற்றுக்கொண்டால் முருகனுக்கு அப்பன் சிவன் என்பதையும் அம்மா பார்வதி என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது முற்பட்ட சங்க இலக்கியங்கள் காட்டும் முருகனின் பிம்பத்திற்கு நேர் எதிரானது ஆகும். ஆட்டு ரத்தத்தை தினைமாவில் கலந்து தின்ற முருகன் எங்கே, ஒரு கேவலமான ஞானப்பழத்திற்குச் சண்டைபோட்ட முருகன் எங்கே. சீமான் தானொரு பார்ப்பன அடிமை என்பதை அவரே பேட்டியில் இன்னொரு இடத்தில் ஒத்துக் கொள்கின்றார். “என்ன ..சீமான் திடீர்னு ஆன்மிகவாதி மாதிரி கிளம்பிட்டான்னு சிலர் கேட்கிறார்கள். இதை இன்னைக்கு நேத்தா செய்றேன். பெரியாரிய, மார்க்சிய மேடைகள்ல பேசும்போது கூட ‘முப்பாட்டன் முருகன்… எம்பாட்டன் சிவன்னுதான் பேசியிருக்கேன்” என்று சீமான் ஒப்புக்கொள்கின்றார். சிவன் என்ற பைங்கட்பார்ப்பனனை ஏற்றுக்கொண்டதன் மூலம் தன்னைத்தானே அம்பலப்படுத்திக் கொள்கின்றார் சீமான்.

 வீரத்தமிழர் முன்னணி ஆகஸ்ட் 30 ஆம் தேதி திருப்பூரில் நடத்திய கிராமப் பூசாரிகள் மாநாட்டில் பேசிய சீமான் இந்துமதம் என்பது கிருஸ்துவ, இஸ்லாமிய மதங்களைப் போலவே இறக்குமதியான ஒன்று; அது தமிழர்களின் மதம் இல்லை என்று சொல்கின்றார். அப்படி என்றால் ‘ஓம்’ எங்கிருந்து தமிழுக்கு வந்தது? இந்த ஓம் பற்றி உபநிடதங்கள் , பகவத்கீதை போன்றவை விரிவாக பேசுகின்றன. தமிழில் பார்ப்பன திருமூலர் தன்னுடைய திருமந்திரத்தில் பேசுகின்றார். தன்னுடைய கையில் சீமான் பிடிக்கும் வேலில் உள்ள ‘ஓம்’ எங்கிருந்து வந்தது என்பதை வரலாற்று அறிஞரான அவர்தான் சொல்ல வேண்டும். பார்பனியத்தின் அத்தனைக் கூறுகளையும் உள்ளடக்கி ஒரு கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்குப் பெயர் வீரத்தமிழர் முன்னணியாம். சீமான் தமிழ்நாட்டை காப்பாற்றும் முன் அவரிடம் இருந்து தமிழ்நாட்டை நாம் காப்பாற்ற வேண்டி உள்ளது.

 சீமான் இன்னும் எவ்வளவு மட்டமான பேர்வழி என்பதற்கு இன்னொரு ஆதாரம் சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது ஏப்ரல் 17 , 2014 அன்று தஞ்சை திலகர் திடலில் அ.தி.மு.க வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து அவர் பேசும்போது “ போதையில் தள்ளாடித் தள்ளாடி போனாலும் அங்கே போய் சரியாக இரட்டை இலைக்கே ஓட்டு போடனும். ஓட்டு போட்டுவிட்டு வந்து குடித்தாலும் தப்பில்லை” என்று பேசினார். இப்படி ஒரு கேவலமான அற்ப அரசியல்வாதியைத் தமிழகம் இதுவரை பார்த்ததில்லை. இவர்தான் இன்று மது ஒழிப்பு பற்றி பேசுகின்றார்.

 மேலே நாம் குறிப்பிட்ட சங்க இலக்கியங்கள் காட்டும் முருகன் பற்றிய சித்திரத்தையும் சீமான் காவடி தூக்கி ஆடிய முருகன்(ஸ்காந்தன்) பற்றிய சித்திரத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். தமிழரின் மெய்யியல் மரபை மீட்கப் போவதாக கூறும் சீமானின் தகிடுதத்தங்களைப் புரிந்து கொள்ளலாம்.

 கடைசியாக சில கேள்விகள், சாதியை ஒழிக்க புறமணமுறை ஒன்றே வழியென்று அம்பேத்கார், பெரியார் போன்றவர்கள் கூறுகின்றார்கள். இன்றும் திராவிடர் கழகம், பெரியார் தி.க, ம.க.இ.க போன்றவை தங்களுடைய மேடைகளில் சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி வைக்கின்றன. கட்சி ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளில் தமிழ்த் தேசியம் பேசும் சீமான் வகையாறாக்கள் எத்தனை சாதிமறுப்பு திருமணங்களைத் தங்களுடைய கட்சி மேடைகளில் நடத்தி வைத்திருக்கின்றார்கள். சீமான் உண்மையிலேயே சாதிபற்று அற்றவர் என்றால் தன்னுடைய கட்சி மேடையில் சாதி மறுப்பு திருமணங்களைத் நடத்திவைக்கத் தயாரா?

 தமிழக முருகன் கோவில்களில் தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்று கோரும் சீமான் அவர்கள் அனைத்துக் கோவில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று போராட்டம் நடத்தத் தயரா?

சினிமா துறையில் தோல்வியடைந்தவனுக்கெல்லாம் அரசியல் தான் எப்போதுமே புகலிடமாக இருந்து வருகின்றது. ராமராஜன் தொடங்கி சீமான் வரை இதற்கு விதிவிலக்கில்லை. முதலமைச்சர் கனவில் கோடம்பாக்கத்தில் சுத்தியவனை எல்லாம் ஐநூறுக்கும், ஆயிரத்துக்கும் பிச்சை எடுக்கும் பேச்சாளர்களாக மாற்றி தி.மு.கவும், அ.தி.மு.கவும் உள்வாங்கிக் கொண்டது. அதைப் போலவே நீங்களும் ஏற்கெனவே உங்களின் கொள்கை கோவணத்தை அ.தி.மு.கவில் நல்ல விலைக்கு விற்றுவிட்டீர்கள் என்பதையும், அது இல்லாததால் தான் முருகன், சிவன், திருமூலன், அகத்தியன் என்று பார்ப்பன பிரதிநிதிகளை முன்வைத்து வீரத்தமிழர் முன்னணியை (தமிழ் ஆர்.எஸ்.எஸ்) உருவாக்கியுள்ளீர்கள். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதுபோல பொய்யும், புரட்டும், பிழைப்புவாதமும், அற்பவாதமும், மொழிவெறியும், இனவெறியும் இருக்கும் இடத்தில் எல்லாம் சீமான் இருப்பார்.

- செ.கார்கி

Pin It