chennai flood 602

காட்டுக்குள் விழுந்த மழைத் துளி என்ன செய்யும்... ஒன்று காணாமல் போகும்... அல்லது.... கூட்டம் சேர்த்துக் கொண்டு காட்டை பிளக்கும்.... இப்போது இரண்டாவது தான் நடந்து கொண்டிருக்கிறது.... மனதுக்குள், சொல்ல முடியாத துயரங்களின் வடிகாலாகாவே இதை இங்கே எழுதுகிறேன்... யாரையும் குறை சொல்லவோ.. குற்றம் சுமத்தவோ அல்ல.. நம்ம நாமே சுய பரிசோதனை செய்து கொண்டும்.... இந்த இக்கட்டில் இருந்து மீண்டு விடவும்.... இனி இது போன்ற இயற்கை சீற்றங்களைத் தூண்டி விடாமல் இருக்க வேண்டும் என்றும்தான்.. ஆதங்கம்... 

சிறுக சிறுக சேர்த்து வைத்த தவறுகளின் உச்சம் இந்த கோரத் தாண்டவம் என்றால் மறுப்பதற்கில்லை.... மறுத்தாலும் அதுதான் உண்மை... உண்மைகள் எப்போதும் சுடும்.. இம்முறை குளிர்கிறது....தமிழன் அறிவிலும்.. பண்பாட்டிலும் முன்னோடி என்பது உலகறிந்த விஷயம்.. அவன் காரணம் இல்லாமல் எதையும் செய்திருக்க மாட்டான்.. அது ஏரிகளாட்டும்.. குளங்களாகட்டும்... குட்டைகளாகட்டும்.. அணைகளாகட்டும்.....எல்லாவற்றிக்கும் ஒரு தொலைநோக்குத் திட்டம் இருக்கும்... பார்வை இருக்கும்...அந்த பார்வைகளை கவனத்தில் கொள்ளாமல் கடந்தது யார் குற்றம்... ஏரிகளை தூர் வாராமல் விட்டோம்.. கழிவுகளைக் கொட்டினோம்... மரங்களை வெட்டினோம்... கொஞ்சம் இடம் கிடைத்தாலும்.. பெட்டி பெட்டியாக அடுக்கு மாடிகள் கட்டினோம்... அத்துமீறலைக் கூட உரிமை போல செய்தோம்.. லஞ்சம் கொடுத்தோம்.. வாங்கினோம்...தனிமனித ஒழுக்கம் செல்போனின் ஆப் மாதிரி மாற்றி வைத்தோம்...தன்னை மறந்து தலை குனிந்தே நடக்கவும் பழகி விட்ட தமிழனைக் கண்டு மனம் குமுறுகிறது.... 

கட்டடம் கட்டும் போதே.. பாலம் கட்டும் போதே.. வீடுகள் கட்டும் போதே... பேருந்து நிலையம் கட்டும் போதே... வீதிகள் செய்யும் போதே... மழை வந்தால் அதன் போக்கு எப்படி இருக்க வேண்டும் என்று யோசிக்காமல் விடும் அளவுக்கா தமிழனின் அறிவு இருந்திருக்கிறது...!?..இன்று வரை கல்லணை கட்டப் பட்ட சூட்சுமம் புரியாத உலகம் இது.. அத்தனை அறிவு சார்ந்த தொழில் நுட்பத்தில் வல்லவன் தமிழன்.. இன்று என்ன ஆயிற்று.. ஒரு 10 நாள் மழைக்கு தாங்க மாட்டேன் என்கிறதே....ஒரு நகரம்...தண்ணீர்க்குள்ளேயே நகரம் அமைத்த வெனிஸ் நம் கண் முன்னாகவே சான்று செய்கிறது... கடல் மட்டத்திற்கு இணையான நகரம்தான் சென்னை..அதில் மாற்றுக் கருத்தில்லை....ஆனால் புத்திசாலி தமிழனுக்கு இப்படி ஒரு மழை வந்தால் இப்படி ஒரு அழிவு வரும் என்று கணக்கு போட முடியவில்லையா....? போட்டிருந்தாலும்.... அதை திட்டமாக்க தோன்றவில்லையா...?.. தவறு எங்கு நடந்திருக்கிறது..... நமக்கு நம்மாழ்வாரைத் தெரியவில்லை.... அவரைப் போல தாடி வைத்துக் கொண்டு மலை மலையாய் சுற்றித் திரியும் சாமியார்களைத் தெரிகிறது.. மண்ணும் வாழ்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை என்று ஏன் மறந்தோம்..?கண்ட இடங்கலில் குப்பை கொட்டத் தெரிந்த நமக்கு... அது ஒருநாள் நம்மையே மூடும் என்று ஏன் யோசிக்கத் தோன்றவில்லை.... காற்றைக் கெடுத்து... மேகம் கொன்று.. அதன் போக்கை மாற்றி.. அதன் சுழற்சியையே மறக்கடிக்க செய்த நாம்தான் இன்று மழையையும் திட்டுகிறோம்.... அத்தனை மழுங்கிய அறிவுக்குள்ளா நாம் இருக்கிறோம்..... நமக்கான போதனைகள் அத்தனை மலிவனவைகளா......! 

கொட்டிக் கொண்டே இருந்தால் திரும்பும் கோபம் யாருக்கும் வரும். அது இயற்கைக்கும் வந்திருகிறது.. மழைக்கென்று ஒரு காரணம் உண்டு... அதை திசை திருப்பி விட்ட மா தவம் நாம் செய்ததே... வியாபாரத் தந்திரம் என்று நாம் போட்ட திட்டங்கள் எல்லாமே... நாமே நமக்கு வைத்துக் கொண்ட சூனியங்கள் தான்...இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மீண்டும் கூற ஒரு ஏசுவோ புத்தனோ நமக்கு தேவையாய் இருக்கிறதா....?... யோசிக்கும் வலுவில் மனம் இல்லை. இருந்தாலும்... பார்த்து பார்த்து கால் வைத்து தாண்டி விடும் இடத்தில் முட்களையும் கணக்கெடுத்துக் கொண்டே போவதில் தான்... பரிணாமம் இருக்கிறது... எல்லாவற்றிலும் அரசியலை தவறாக சித்தரித்து ஆதாயம் தேடும்... பெரும் புள்ளிகள்...இன்றும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருப்பதுதான் வேதனையின் உச்சம்...

வியாபாரம் வேண்டும்தான்... சந்தைகள் முக்கியம்தான்.. ஆனால் அதற்காகத்தான் இந்த மனித குலமே என்று நினைத்த நேரத்தில்தான்... இயற்கையை மீறத் துவங்கினோம்... பூமியைப் போல ஒரு சொர்க்கம் உண்டோ தோழர்களே......? ஆனால் அதையே நகரமாக்கி பின் நரகமாக்கிய வலிமையை நாமே தான் செய்தோம்.... 

குடைக்குள் அடைத்த மழைதான், விடைக்குள் அடங்கா கேள்வியாய் இன்று......வெறுமையின் புள்ளியில் கொட்டுகிறது....மேகம் பார்க்கும் துணிவும் 

இன்றியே தாகம் தலை கவிழ்க்க...யாவும்...கடத்தல் என்ற பிழைக்குள் இழுத்துக் கொண்டு போகும் பார்வை எங்கும் மனிதத் துளிகள்...பசி கொண்டு பயம் கொண்டு... செருக்கு விடுத்தது.. சுருக்கு பையாய் சுருங்கி மொட்டைமாடிகள் நிரப்புகின்றார்கள்....... பார்க்க பார்க்க கண்கள் நிறையும் குளங்கள் இரண்டை நான்... தொலைக்காட்சியின் சதுரத்துக்குள் நீந்த விடுகிறேன்...வார்த்தை உதறி தவ்விக் குதிக்கும் தவளையோடு போட்டி போடும்..விரல்களில் கூட பசி..... என்பதுதான் மாய தத்துவம்.. வாழ்வின் மகத்துவம் ....பக்கெட்டில்  நிறைய பணம் கொண்ட ஒருவரால் இன்று ஒரு வேளை உண்ண முடியவில்லை.... இது தான் நிதர்சனம்.. பணம் எப்போது வேண்டுமானால் வரும் போகும்.. ஆனால் இயற்கையின் மௌனத்தை தேனிக்  கூட்டை கலைப்பது போல கலைத்தலின் விளைந்த கொடுமைகள்...மழை..வெயில்.. பனி.. குளிர்... என்று எல்லா முகத்தையும் சிதைத்து.. கோரமாக்கி விட்டன.......இனம் புரியாமல் வழி மறந்து நின்று விட்டது இயற்கை.  வெயிலோ....மழையோ.... பனியோ.... குளிரோ...... அது அது, அது நேரத்தில் இருப்பதுதான் மனிதனின் நீட்சிக்கு சான்று.. மாறினால் அது வீழ்ச்சியின் தொடக்கம்.... ஆம் மனிதன் தோற்றுத்தான் போகிறான்........ 

இந்த மாதிரி இடர்களின் போது மன தைரியம் மிக முக்கியம்.. எல்லாரும் காப்பாற்றப் படுவோம் என்று எல்லாரும் நினைக்க வேண்டும்...... நினைப்பது தான் நடக்கும் என்பதை ஆழமாக நம்புகிறேன்.. நம்பிக்கைதான் எப்போதும் போல மிச்ச வாழ்க்கையும்... ஒருவருக்கொருவர்.. அன்பு செய்ய.. ஆறுதல் தர.. உணவு தர.. எல்லா மனங்களும் ஒன்று கூடுகின்றன...மொத்தமாக அமர்ந்து கிரிக்கெட் பார்க்க மட்டுமல்ல.. களத்தில் இறங்கி வேலை செய்யவும் தமிழன் தயங்க மாட்டான் என்பதற்கு நிறைய சான்றுகள்...பார்த்துக் கொண்டிருக்கிறோம்...... களத்தில் நிற்பவர்கள்... ஊடங்கங்கள் மூலமாக உதவுபவர்கள்.... நண்பர்கள்...உறவுகள்... மதம் கடந்து சதிகள் இல்லாமல்...போராடிக் கொண்டிருக்கிறார்கள்...  எப்படியாவது கை கோர்த்து இந்த பேரிடரில் இருந்து வெளியேறி விட வேண்டும்..என்பதே ஆதங்கத்தின் மௌனம்... 

ஏதோ அவர்கள்தான் மழையை திட்டம் போட்டு கொண்டு வந்தது போல் இவர்கள் பேசுகிறார்கள்......அவர்கள், இவர்களை நீங்கள் போடாத திட்டத்தால்தான் இப்படி மழை வந்தது...என்று கூறுகிறார்கள்.... ஒருவர் பல கட்ட யோசனைக்குப்பின்....ஹெலிகாப்டரில்... வருகிறார்.. ஒருவர்....பேச்சு மூச்சே இல்லை...இன்னும் யோசித்துக் கொண்டே இருப்பார் போல... சரி அவர்கள் என்ன கடவுளர்களா.... மனிதர்கள் தானே.... இனியாவது.... நல்ல மனிதர்களை ஆட்சியில் அமர்த்த யோசிக்க வேண்டும்... ஏன் என்றால் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை அதிகம்...... மிச்ச வாழ்க்கையை வாழ்ந்து தான் தீர வேண்டும்.  இனி ஓட்டுக்கு காசு வேண்டாம்..தண்ணீர் தேங்காமல்  இருக்க வழி செய்யுங்கள் என்று சொல்வோம்...இலவசமாக ஏதும் வேண்டாம்...ஏரிகளை தூர் வாருங்கள் என்று சொல்வோம்.....ஆளைப் பிடித்து லஞ்சம் கொடுத்து கவர் மெண்டு வேலை வாங்குவது இருக்கட்டும்...ஆற்றில் மணல் அல்ல கூடாது என்று சொல்லுவோம்...அடுக்குமாடி வீடு கனவாக இருக்கலாம்.. அதற்காக ஏரி இருந்த இடத்திலும்... குளம் இருந்த இடத்திலும்... வாழத் தகுதியற்ற இடத்திலும்...எவனோ ஒரு வியாபாரி டை கட்டிக்கிட்டு கொண்டு சொல்கிறான் என்பதற்காக மிச்சம் இருக்கற 50 வருடத்திற்கு லோன் போட்டு, ஊரெல்லாம் பீத்திக்காமல் இருப்போம்.... 

மேல்தட்டும்.. நடுத்தரமும் செய்கின்ற தவறுகள்..... அடிமட்டத்தில் இருக்கிறவர்களின் வீட்டைத்தான் முதலில் பிடுங்குகிறது... விதி... இங்கே விதி என்பது செய்த பிழையோட எதிர்வினை....மெல்ல மெல்ல நடுத்தரமும் கடைசியில் மேல்தட்டும்... வீதிக்கு வந்தே தீரும்.... மீண்டும் விதி செய்து கிடப்பது நீர்.......விதைத்தது விளையும்.... அது தான் பரிணாமத்தின் சூட்சுமம்....இருந்தும், கனவு நிறைந்து மூச்சும் திணற வைத்து விட்ட மழையை ஒரு கலைதலில் கடந்து விட ஏதாவது செய்...  இயற்கையே...... 

- கவிஜி

Pin It