ma ka i ka

மூடு டாஸ்மாக்கை மூடு பாடலும், அதற்காக ம.க.இ.க (மக்கள் கலை இலக்கிய கழகம்) பாடகர் தோழர் கோவன் கைதும், தற்போது அவர் பிணையில் விடப்பட்டிருப்பதும் தெரிந்ததுதான். தோழர் கோவன் கைதை தி.மு.க, காங்கிரசு உட்பட ஆளும்வர்க்க கட்சிகளில் பெரும்பாலானவை கண்டித்தன. அது உண்மையிலேயே ஆட்சியிலிருக்கும் அ.இ.அ.தி.மு.க-வுக்கு ஒரு நெருக்கடிதான். இந்த நெருக்கடிகள் இல்லாதிருந்தால் பிணை இப்போது கிடைத்திருக்காது.

இந்த நிலையில், ம.க.இ.க ஆதரவு இதழான புதிய ஜனநாயகம் மின்னிதழில் "2G வழக்கில் பார்ப்பன நரித்தனங்கள் - 2G மற்றும் மாறன் சகோதரர்கள் மீதான வழக்குகளைக் கிளறி ஊதி வருவதன் மூலம், தி.மு.க-வைத் தனிமைப்படுத்த முயற்சிக்கிறது தமிழகப் பார்ப்பனக் கும்பல்" என்றொரு கட்டுரை நவம்பர் 3-இல் வெளியிடப்பட்டுள்ளது. (இது தோழர் கோவனின் பிணை கிடைக்கும் முன்பாகும்)

இதை ம.ஜ.இ.க (மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) வன்மையாக கண்டித்து சுவரொட்டி வெளியிட்டுள்ளது. ம.ஜ.இ.க ஆதரவு மின்னிதழான samaran1917.blogspot.in -இல் "ஜெயா அரசே! ம.க.இ.க பாடகர் கோவன் மீதான தேசத்துரோக வழக்கைத் திரும்பப் பெறு! உடனே விடுதலை செய்!" என்று வெளியிட்ட சுவரொட்டியில் "ம.க.இ.க-வே பார்ப்பன எதிர்ப்பு பேரால் '2G புகழ்' இராசா, கனிமொழி, மாறன் கும்பலுக்குப் பரிந்து பேசாதே!" என்று முழக்கம் வைத்திருக்கிறது. (இதுவும் தோழர் கோவனின் பிணை கிடைப்பதற்கு முன்பாகும்)

ம.க.இ.க-வின் கட்டுரையும், ம.ஜ.இ.க-வின் கண்டனமும் அரசியல் பார்வையாளர்களின் மத்தியில் விவாதப் பொருளாகி இருக்கிறது. ம.க.இ.க தனது நெருக்கடியின் பொருட்டு அ.தி.மு.க அரசை எதிர்கொள்ள தி.மு.க-வோடு சமரசம் செய்கிறதா? என்பது விவாதம்.

நாம் அதை சமரசம் என்றபோதும் ஆதரிக்கிறோம். இந்த சமரசம் தேர்தல் கட்சியாக சீரழிவதற்கோ அல்லது அரசு ஆதரவு ஒட்டுக்குழுவாகப் போவதற்கோ இல்லை என்று நம்புகிறோம். ம.க.இ.க-வின் அண்மைக்கால நடவடிக்கைகள் நமக்கு இந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான புரட்சிகர இயக்கங்கள் செயல்பட முடியாமல் முடங்கியுள்ள நிலையில் ம.க.இ.க மக்கள் பிரச்சினைகளில் தலையிட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருவது வரவேற்கத்தக்கது. டாஸ்மாக்கை மூடக் கோரும் போராட்டம், அதற்கு முன்பே கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்களிப்பு, தற்போது நடந்த வழக்குரைஞர்கள் போராட்டத்திலும் இவர்களது ஆதரவு சக்திகளின் பங்கேற்பு என தொடர்ச்சியாக மக்கள் பிரச்சினையில் முன்நிற்கும் மார்க்சிய-லெனினிய ஆதரவு அமைப்புகளில் ம.க.இ.க முன்னணிப் பாத்திரம் வகிப்பது மகிழ்ச்சிக்குரியதாக உள்ளது.

இவையெல்லாம் சேர்ந்துதான் அரசின் நெருக்கடியையும் கொண்டு வந்திருக்கிறது. இந்த நெருக்கடிகள் ம.க.இ.க-வின் சக்திக்கு அதிகப்படியானதே. இப்போது இதை அவர்கள் முறையாக கையாண்டு வெளிவரவில்லை என்றால் முடங்கிப்போக வேண்டியதுதான். அரசு கொடுக்கும் நெருக்கடிகளும் அதற்குத்தான். நாம் அது முடங்கிப் போவதை விரும்பவில்லை.

எந்த ஒரு அமைப்பும் தனது சொந்த பலத்தால் மட்டுமே அரசை எதிர்கொண்டு நெருக்கடியைத் தீர்க்க முடியாத நிலையில், அதற்கான ஆதரவை உருவாக்கிக் கொள்வதுதான் அரசியல் அறிவு. ஆதரவைப் பெருக்கிக் கொள்வது என்பது எதிரிகளுக்கிடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொள்வதும்தான். ஏற்கனவே அப்படி பயன்படுத்திக் கொண்டதால்தான் இன்றைக்கு சில இயக்கங்களும், முக்கியமான தோழர்களும் உயிரோடு இருக்கிறார்கள்.

சில ஆதாரங்கள்:

புரட்சிகர இயக்கங்களின் நடவடிக்கைகளுக்காக தோழர்கள் கலியபெருமாள், தியாகு, கிருஷ்ணசாமி, பஞ்சலிங்கம், கந்தசாமி ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது தெரியும். அவர்கள் தூக்குத் தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஆளும் வர்க்கத்திலிருந்து கிடைத்த உதவிகள் தெரியுமா? அன்றைக்கு தமிழ்நாடு மக்கள் குடியுரிமை சங்கம் என்ற அமைப்பு இருந்தது. இதுதான் பின்னாளில் மக்கள் உரிமைக் கழகம் என்றானது என சொல்லப்படுகிறது. அவ்வமைப்பின் பொறுப்பாளராக தி.மு.க-விலிருந்த முக்கியமானவரான க.சுப்பு இருந்துள்ளார். அதேபோல் தி.மு.க ஆதரவோடு சென்னை மேயராக இருந்துள்ள எஸ்.கிருஷ்ணசாமியும் பொறுப்பு வகித்துள்ளார். இவர் ஏ.ஐ.டி.யு.சி தொழிசங்கத்தில் பொறுப்பு வகித்தபோதும் கட்சிக்குள் வராதவரென சொல்லப்படுகிறது. இவர்களோடு காங்கிரசிலிருந்த டாக்டர் விஜயலட்சுமி, வலம்புரி ஜான் (அப்போது இவர் அ.இ.அ.தி.மு.க-வா என தெரியவில்லை) ஆகியோரெல்லாம் குரல் கொடுத்துள்ளனர். ஆளும்வர்க்கத்திற்குள்ளிருந்து கொடுக்கப்பட்ட இந்நெருக்கடிகள் தோழர்கள் 5 பேரின் தூக்குத் தண்டனையை இல்லாமல் செய்ததில் முக்கியப் பங்காற்றியது.

இராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் ஒருத்தரைக்கூட தூக்கு கயிற்றுக்கு இரையாக்காமல் காப்பாற்றியதிலும் ஆளும்வர்க்க இயக்கங்கள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்பு உள்ளதுதானே!

அவ்வளவு ஏன், நம் மதிப்பிற்குரிய தோழர் ஏ.எம்.கே (1972-இல் எனதான் கேள்விப்பட்டுள்ளோம்) ஸ்ரீவில்லிப்புதூரில் கைது செய்யப்பட்டார். மிக முக்கியமானவராக இருந்த அவரை 'என்கவுண்டரில்' கொல்ல நினைத்ததாம் அரசு. அப்போதும் தோழர்கள் சாமர்த்தியமாக வேலை செய்திருக்கிறார்கள். க.சுப்புவையும், அட்வகேட் இராமசாமியையும் குரல் கொடுக்க வைத்திருக்கிறார்கள். சென்னை மேயராக இருந்த D.நாராயணா ரெட்டி தனது அலையோசை பத்திரிகையில் செய்தி வெளியிட்டு பெரும் பங்களிப்பு ஆற்றியுள்ளார். இதுபோன்ற பல்வேறு நிர்பந்தங்களாலேயே தோழர் ஏ.எம்.கே அன்று காப்பாற்றப்பட்டார்.

மேற்கூறிய நடவடிக்கைகளை நாம் தவறென்று சொல்ல முடியுமா? இதுதான் சரி. புரட்சியாளர்களும், புரட்சிகர இயக்கங்களும் காப்பாற்றப்படுவதற்கு எல்லா இடத்திலும் லாபி செய்கிற திறமை இருக்க வேண்டும். எல்லோரையும் சரிசமமாக எதிர்ப்பதென்பது அரசியல் சாதுர்யமல்ல. பிரித்து கையாள்வதுதான் சாமர்த்தியம். ஆகவே ம.க.இ.க ஆளும்வர்க்க கட்சிகளை பிரித்து கையாண்டால் அதை ஆதரிக்கலாம் தோழர்களே!

- திருப்பூர் குணா

Pin It