‘நாடு 2 ஆவது எமர்ஜென்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது’ என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், முன்னாள் பத்திரிக்கை கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜீ அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதை உறுதிசெய்யும் வகையில் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ச.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான எல்.கே. அத்வானி “நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது” என்றார். மராட்டிய மாநிலத்தைச் சார்ந்த பா.ச.க. எம்.எல்.ஏ. ராஜ் புரோகித் என்பவர், “நாட்டின் அதிகாரம் இருவர் கைகளில் குவிந்து வருகிறது. இது நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்” என்று தனது சகாக்களுடன் பகிர்ந்து கொண்டது சமூக வளைதளத்தில் வலம் வரவே, அவருக்கு உடனே தன்னிலை விளக்கம் கேட்டு ‘நோட்டீசு’ அனுப்பப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.ன் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கோவிந்தாச்சார்யா, “இந்த அரசு மக்கள் மைய அரசாக இல்லை.. மாறாக, இந்த அரசு அதிகாரத்தையெல்லாம் தன்னகத்தே குவித்துக் கொள்வதிலேயே கவனமாக இருக்கிறது” என்று வெளிப்படையாக அறிவித்தார். மேற்சொன்ன கூற்றுகளில் கட்ஜீவைத் தவிர மற்றவரெல்லாம் சங் பரிவார ஆட்களே. எனவே விளக்கம் தேவையில்லை.

Modi 330நாட்டில் தற்போதைய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் அவர்களது கூற்றுகளை மெய்யென புலப்படுத்துகின்றன. நாட்டில் கருத்துச் சுதந்திரம் எப்போதுமில்லாத அளவிற்கு பறி போகிறது.

“மக்களின் சனநாயக உரிமைகளை, அவர்கள் உணராத அளவிற்கு மெல்ல மெல்ல கொஞ்சம் கொஞ்சமாக பறித்துக் கொண்டேயிருங்கள். அப்போதுதான் தங்கள் உரிமைகள் பறிபோவது பற்றி மக்கள் விழித்துக் கொள்ளமாட்டார்கள். அப்படி செய்வதன் மூலம்தான் ஒட்டுமொத்த மக்களையும் எளிதில் அடிமைப்படுத்தி அதிகாரத்தை முழுவதுமாகக் கைப்பற்றிவிட முடியும்.”–சர்வாதிகாரி ஹிட்லர்.

ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பா.ச.க. ஹிட்லரின் கொள்கையை அச்சுப்பிசகாமல் பின்பற்றுவதோடு, அதற்கும் மேலே சென்று, ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் படிப்படியாக மக்களின் சனநாயக உரிமைகளைப் பறித்து, பாராளுமன்ற சனநாயக நெறிமுறைகளையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்டிவிட்டு, சர்வாதிகார ஆட்சியை நிறுவி வருகிறது.

நாட்டின் திட்டக் கமிஷனை சத்தமில்லாமல் ஒட்டுமொத்தமாக காலி செய்துவிட்டு, அதன் அனைத்து அதிகாரத்தையும் ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பின் மூலம் மோடி தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் சட்டங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, தன் விருப்பப்படி இயற்கை வளங்களை கொள்ளையடிக்க பெரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குகிறார். தொழிலாளர்களைப் பாதுகாக்கும் சட்டங்களையெல்லாம் முதலாளிகளுக்காக, தானே முன்வந்து ஒழித்துக் கட்டுகிறார். ஐ.ஐ.டி. மாணவர்களின் ‘அம்பேத்கர் – பெரியார்’ வாசகர் வட்டத்திற்குத் தடை, சமூக வலைத்தளங்களில் கருத்துத் தெரிவிக்கத் தடை, அடித்தட்டு மக்களின் அன்றாட உணவான மாட்டுக்கறி உண்ணத் தடை, மனித உரிமைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதார உரிமைகள் பற்றிப் பேசவும் எழுதவும் விவாதிக்கவும் தடை, சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு தடை, நீதிமன்றங்களையும் அவற்றின் தீர்ப்புக்களையும் பற்றி விவாதிக்கத் தடை, குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்ய தடை, ஆளும் கட்சியினரின் ஊழல்களைப் பற்றியும், அரசின் சட்டப்புறம்பான நடவடிக்கைகள் பற்றியும் பேசவும், கருத்துச் சொல்லவும் தடை, பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை எழுப்பத் தடை, டில்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடாமல் தடைக்கு மேல் தடை என்று சட்டப்புறம்பான தடைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

நீதித்துறையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நீதிபதிகள் அரசியல் அமைப்புச்சட்டத்தின் அடிப்படையில் இன்றி, எந்த வழக்கில் என்ன தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் அளவிற்கு அரசின் தலையீடு. இப்படி எல்லாத் துறைகளின் அதிகாரமும் ஒரு தனி மனிதரில் குவிக்கப்படுகிறது. இது சனநாயகத்தை குழிதோண்டி புதைத்து நாட்டு மக்களுக்கு அரசு இழைக்கும் துரோகம்.

மகாத்மா காந்தியைக் கொன்றதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு நேரடி தொடர்பும், பொறுப்பும் உள்ளது என்ற உண்மையை சொன்னதற்காக ராகுல் காந்தி மீது அவமதிப்பு வழக்கு. கேரளாவில் ஒரு கல்லூரி பேராசிரியரும், சில மாணவர்களும் தங்களது கல்லூரி இதழில் மோடியை ஹிட்லருக்கு இணையாக சித்தரித்ததற்காக, அவர்கள் சிறையிலடைப்பு. சுதந்திரமாக கருத்துத் தெரிவிப்பவர்களை குற்றவாளிகளாக்கி சிறையில் தள்ளும் சர்வாதிகாரம் மிக வேகமாக நிறுவப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு குசராத்தில் மோடி தலைமையிலான அரசு நிகழ்த்திய இசுலாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலைகளைக் கண்டித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி டீஸ்டா செடால்வட் மற்றும் அவரது கணவர் ஜாவேத் ஆனந்த் ஆகியோர் கடந்த 13 ஆண்டுகளாக தளராது சட்டப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்கள் மீது சி.பி.ஐ. யை ஏவிவிட்டு, அடுத்தடுத்து ஏராளமான கிரிமினல் வழக்குகள் புனைந்து, கைது செய்ய கடும் முயற்சி எடுக்கப்படுகிறது, அவர்களும் சளைக்காமல் நீதிமன்றங்களை நாடி ஒவ்வொரு வழக்கிலிருந்தும் தங்களை சட்டப்படி காத்து வருகின்றனர். தற்போது கடைசியாக சி.பி.ஐ. யால் புனையப்பட்ட ஒரு வழக்கில்,“அவர்கள் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்” என்று சி.பி.ஐ. தரப்பில் நீதிமன்றத்தில் அபாண்டமாக பழி சுமத்தி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதைக் கண்ணுற்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி மிருதுளா பட்கர் சி.பி.ஐ. யையும், மத்திய அரசையும் கடுமையாக கண்டித்து நீதியை நிலைநாட்டியுள்ளார்.

அவரது தீர்ப்பில், “அரசின் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்துக்களையும், கொள்கைகளையும் கொண்டிருப்பது தேச துரோகம் அல்ல – அது சனநாயகம். தனக்கு எதிரான கொள்கையுடையோரையும், கருத்துத் தெரிவிப்போரையும் பொய் வழக்குகள் போட்டு சித்ரவதை செய்வதை அரசு நிறுத்திக்கொண்டு அவர்களின் கருத்துரிமையை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும். ஏனெனில் இது சனநாயக நாடு. இங்கு அரசுக்கு எதிராக கருத்துச் சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த அடிப்படை உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை” என்று கருத்துச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.

இப்படிப்பட்ட ஒரு சில நீதிபதிகள் இருப்பதன் காரணமாகத்தான் சனநாயகமும், அரசியல் அமைப்புச் சட்டமும் ஓரளவிற்கு பாதுகாக்கப்படுகிறது என்று சொல்லலாம்.

1993 ஆம் ஆண்டைய மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்ட யாகூப் மேமன் தொடர்பான விவாதங்களை முன்வைத்த 3 தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விளக்கம் கேட்டு ‘நோட்டீசு’ அனுப்பியது. குறிப்பிட்ட நாட்களுக்குள் சரியான விளக்கம் தரவில்லையென்றால், அந்த 3 அலைவரிசைகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இப்படி ‘நோட்டீசு’ அனுப்பி விளக்கம் கேட்கும் செயல் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் எதிரானது. பிரிவு 19(1)(a) குடிமக்களுக்கு வழங்கும் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை அப்பட்டமாக பறிக்கும் செயலாகும். இந்தப் பிரிவு குடிமக்கள் தங்களது சிந்தனை, எண்ணங்கள், கருத்துக்களை எவ்வித தடையுமின்றி வாய்வழியாகவோ, எழுத்து மூலமோ, அச்சுவழியாகவோ, சித்திரம் வரைவதன் மூலமோ அல்லது வேறு ஏதாவது வடிவத்திலோ வெளிப்படுத்துவதற்கான உரிமையை மிக உயரிய அடிப்படை உரிமையாகவே ஒவ்வொருவருக்கும் வழங்குகிறது. இந்த உரிமையை பறிப்பது என்பது சனநாயகத்தையே படுகொலை செய்கின்ற செயலாகும். ஏனெனில்,சனநாயகம் மற்றும் மக்களாட்சியின் உயிர்மூச்சே கருத்து சுதந்திரம்தான் என்று பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெளிவாக விளக்கியிருக்கிறது.

ஒருபக்கம் அடிப்படை மனித உரிமையாகிய கருத்துச் சுதந்திரத்தை பறித்துவிட்டு, மறுபக்கம் அரசியல் சாசனப் பதவிகளை வகிக்கும் எம்.பி.க்களும், அமைச்சர்களும் வாய்க்கு வந்தவாறு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்துக்களைக் கூறி நாட்டில் கலவரச் சூழலை உருவாக்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. அவற்றைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபடாமல், சட்டத்திற்கெதிராகப் பேசி கலவரச் சூழலை உருவாக்குவோரை பாதுகாப்பதாகவே அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எனவே இந்த அரசு பதவியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டதாகவே சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். என்று ஒரு அரசு தனது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தையே புறந்தள்ளிவிட்டு சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்ள ஆரம்பிக்கின்றதோ அன்றே அது சட்டப்படி ஆள்வதற்கான தகுதியை இழந்துவிடுகிறது.

இச்சூழலில், தில்லியில் இயங்கிவரும், சமூகங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வு மையம் (Centre for the Study of Developing Societies), 2013 ல் தான் நடத்திய “இந்தியாவில் சனநாயகம்: குடிமக்களின் கண்ணோட்டம்” என்ற ஆய்வின் முடிவுகளை அண்மையில் வெளியிட்டுள்ளது. 22 மாநிலங்களில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கி 6000 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டிலும் இதே போன்றதொரு ஆய்வினை இந்த மையம் நடத்தியுள்ளது.

இந்த 2 ஆய்வுகளிலும் சனநாயக ஆட்சிமுறையை விரும்புவோர் ஒட்டுமொத்த மக்களில் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். 43 சதவீதம்; பேருக்கு சனநாயகம் பற்றிய புரிதலே இல்லாதால், அவர்களால் சரியாக பதிலளிக்க முடியவில்லை. 2005 ல் 6 சதவீதம் பேரும், 2013 ல் 11 சதவீதம் பேரும் சில சூழ்நிலைகளில் சனநாயக ஆட்சியைவிட ஒரு சர்வாதிகார ஆட்சியே மேலானது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ‘சனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் வாழும் நாடு’ என்பதில் இலங்கை மற்றும் பங்களாதேஷை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.

இந்த ஆய்வுப்படி, சனநாயக அமைப்புக்குப் பதில் சர்வாதிகார அமைப்பை விரும்புவோர் பெரும் பணக்காரர்களும், மெத்தப்படித்தவர்களும், ஊடகத்தின் தாக்கம் உள்ளவர்களுமே அதிகம். 40 சதவீதம் பேர் இந்திய தேர்தல் முறையும், பாராளுமன்ற சனநாயக முறையும் ஒழிக்கப்பட்டு ஒரு திறன்மிக்க தலைவரின் கீழ் இந்தியா வர வேண்டுமென்றும், 35 சதவீதத்தினர் அதை ஏற்கவில்லையென்றும் தெரிகிறது. 40 சதவீதம் பேர் நாட்டின் முக்கிய முடிவுகள் ஒரு வல்லுநர் குழுவால் எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் இராணுவ ஆட்சியை விரும்புவதாகவும், 46 சதவீதத்தினர் அதற்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்துள்ளனர். 23 சதவீதத்தினர் சனநாயக முறையை அன்றி வேறு வகை ஆட்சியமைப்பை விரும்பவில்லை. தற்போதிருக்கும் அரசு அமைப்பு மீது பெரும் பணக்காரர்களும், உயர்சாதியினருமே அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், ஏழைகளும், இசுலாமியர்களும் முற்றிலும் நம்பிக்கை இழந்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதே சமயம் ஏழைகளும், இசுலாமியர்களும் நீதிமன்றங்கள் மீது ஏராளமான நம்பிக்கை வைத்திருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

ஒருவேளை இந்த ஆய்வு பா.ச.க. ஆட்சி ஒரு ஆண்டு காலம் முடிவடைந்த நிலையில் இந்த ஆண்டு நடத்தப்படுமானால், அந்த நம்பிக்கையும் ஏழைகளிடமும், சிறுபான்மையினரிடமும் தகர்ந்து போயிருப்பது தெரிய வந்திருக்கும். ஓராண்டு அனுபவத்திற்குப் பிறகு சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடித்து இத்தனை பேர் கருத்துச் சொல்லியிருக்கமாட்டார்கள்.

என்றாலும், இந்த ஆய்வு முடிவுகள் மேற்சொல்லப்பட்டுள்ள ஹிட்லரின் கூற்று இங்கே அரங்கேற்றப்படுவதை தெளிவாகக் காட்டுகிறது. மெல்ல மெல்ல பறிபோகும் உரிமைகளை மக்கள் உணராமல் இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இத்தருணத்தில் ஆபிரகாம் லிங்கனின் சனநாயகம், மக்களாட்சி பற்றிய கீழ்காணும் கருத்துக்கு செயல் வடிவம் கொடுப்பது அவசியமாகிறது.

“மக்களாகிய நாம் தான் பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றங்களின் உண்மையான எசமானர்கள். அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிவதற்காக அல்ல – மாறாக, யாரெல்லாம் மக்களை ஏமாற்றிப் பாராளுமன்றத்திற்குள் புகுந்துகொண்டு, அரசியலமைப்புச் சட்டத்தைத் துவம்சம் செய்கிறார்களோ அவர்களைத் தூக்கி எறிவதற்காக.”– ஆபிரகாம் லிங்கன்.

- அ.சகாய பிலோமின் ராஜ், வழக்கறிஞர்

Pin It