இடிந்தகரை ஊருக்குள் காவல்துறையினர் சில நாட்களாய் தினசரி விஜயம் செய்து வருகின்றனர் இடிந்தகரையில் சீருடை அணியாமல் சட்டத்திற்கு புறம்பாக சிவில் உடைகளில் வந்து, கூடங்குளம் காவல்துறையினர் இடிந்தகரையில் ஊருக்குள் சுற்றி வந்து கொண்டு உள்ளனர்.

koodankulam people 615அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு பொறுப்பாளர்களான எங்களை நேரில் காவல்துறையினர் பார்க்காமல், எங்களுக்கு சம்மன் எதுவும் கொடுக்காமல்....

இடிந்தகரை ஊர் கமிட்டியினரை நேரில் காவல்துறையினர் பார்த்து எதுவும் சொல்லாமல்...

இடிந்தகரை ஊரில் உள்ள மக்களில் சிலரை மட்டும் தனியாக சந்தித்து, ஏற்கனவே உங்கள் மீது போடப்பட்ட வழக்கில் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராகுங்கள். இதோ உங்களுக்கு சம்மன், இதை நீங்கள் வாங்கா விட்டால் நாங்கள் தாசில்தார் உடன் வருவோம், உங்களுக்கு பிடிவாரண்ட் தருவோம். என மக்களை மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் செய்துள்ளனர்.

உங்கள் வக்கீல் வள்ளியூர் செம்மணி அவர்களே, உங்களை சம்மன் வாங்க சொல்லி விட்டார் என ஊர்மக்கள் சிலரிடம் பொய்யாக கூடங்குளம் காவல்துறையினர் வாய்சவடால் அடித்துள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இடிந்தகரைக்கு காவல்துறையினர் சம்மன் கொண்டு வந்த போதே ஊர்கமிட்டியினர், நாங்கள் முடிவு எதுவும் கூடி எடுக்கும் வரை சம்மன் வாங்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

போராட்டக் குழுவும் 132 வழக்கில் எது ஒன்றுக்கும் வள்ளியூர் நீதிமன்றத்தில் ஆஜராக காவல்துறை சம்மன் கொண்டு வந்தால் வாங்காதீர்கள் எனவும், இந்த சம்மன் பிரச்சினையை சட்டரீதியாக மட்டும் அல்ல அரசியல்ரீதியாகவும் சந்திப்போம் என மக்களிடமும் ஊர்காமிட்டியினரிடமும், வழக்கறிஞரிடமும் தெரிவித்திருந்தோம்....

ஜூன் -13 கேரளாவில் நடைபெற்ற அணு உலை எதிர்ப்பு கருத்தரங்கிலும் கலந்து கொள்ள வந்த இடிந்தகரை மக்கள்,வழக்கறிஞர்.செம்மணி ஆகியோரிடமும், அங்கிருந்து இடிந்தகரை கமிட்டி உறுப்பினர்களிடமும் அலைபேசி வழியாக காவல்துறை சம்மன் கொண்டு வந்தால் எக்காரணம் கொண்டும் வாங்காதீர்கள் என செய்தி தெரிவித்திருந்தோம்.........

காவல்துறை சம்மனை இப்போது அவசரமாக கொடுக்க துடிப்பது ஏன்?

இடிந்தகரையில் 1500 நாட்களை நெருங்கி, உலகத்திற்கே முன்மாதிரியாக தொடர்ந்து மக்கள் போராட்டம் நடந்து வருகிறது.

என்னதான் தமிழக அரசு, அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை தாங்கள் ஒடுக்கி விட்டோம் எனச் வெளியே சொன்னாலும்கூட, இங்கு "அக்கினிகுஞ்சு" போல போராட்ட நெருப்பை அணைய விடாமல் இடிந்தகரை மக்கள் பாதுகாத்து வருகிறார்கள்.

இடிந்தகரை ஊரில் உள்ள மக்களை அடக்குமுறை - சிறை - காவல்துறையின் பாதுகாப்போடு ஊள்ளூரில் மக்களிடையே சண்டையை தூண்டி விடுதல் - சித்திரவதை - குண்டர் சட்டம் - சலுகை கொடுத்தல் -விலை பேசுதல் -சதி -சீர்குலைவு - அவதூறு - நேரடியாக தாக்குதல் - போராட்டக்குழுவினரின் சொத்துகளை சூறையாடுதல் - போராட்ட முன்னணியினரை குடும்ப உறுப்பினர்களை வைத்து பிளவுபடுத்த முயற்சி - காவல்துறை அதிகாரிகளே இடிந்தகரை ஊரில் உள்ள சிலருடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு மக்களை பலவகையில் சீர்குலைத்தல் - என எண்ணற்ற முயற்சிகளை காவல்துறையை வைத்தும், அணு உலை நிர்வாகத்தை வைத்தும், தாதுமணல் கொள்ளையர்களை வைத்தும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால் விழிப்புணர்வுடன் இருக்கும் இடிந்தகரை மக்கள் அரசின் அனைத்து திட்டங்களையும், நோக்கங்களையும் புரிந்து கொண்டு அரசின் சதி -சீர்குலைவுக்கு பலியாகாமல் இருந்து போராட்டதை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலைமையை முறியடிப்பதற்க்காகவே ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, தற்போது இடிந்தகரை போராட்டத்தில் தீவிரமாக இருக்கும் சிலருக்கு மட்டும் சம்மன் கொடுப்பது, போராட்டக்களத்தில் ஈடுபடாமல் உள்ளவர்கள் பலருக்கும் காவல்துறை மூலம் சம்மன் கொடுக்க வைப்பது, “ நீங்கள் தொடர்ந்து அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் இருப்பதால்தான், தினமும் போராட்டம் நடத்துவதால்தான் எங்களுக்கு சம்மன் வந்துள்ளது, எனவே எங்களது வேலையும் -பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கிறது. ஆனால் போராட்டத்தில் உள்ள உனக்கு சம்மன் வரவில்லை என்றும், சம்மன் வராதவர்களுக்கு காவல்துறையோடு ரகசிய உறவு உள்ளது எனவும் பொய்யாக கருதும் மன நிலையை ஏற்படுத்தி, மக்களிடையே பிளவு ஏற்படுத்தவும், அவர்களுக்கு உள்ளேயே பிரச்சினை ஏற்படுத்தி “போராட்ட பந்தலைப் பிரியுங்கள், போராட்ட பந்தல் இருப்பதால்தான் இது போன்று அரசு நெருக்கடி தருகிறது" என மக்களிடையே காவல்துறையை வைத்து உள்ளூரில் சண்டை உருவாக்கவும் முயற்சி செய்கிறது...

இப்படி செய்வதன் மூலம்,

1). கூடங்குளம அணு உலையில் வைக்கப்பட்ட யுரோனியம் எரிகோல்கள் மூன்றில் ஒரு பங்கு இப்போது வெளியே எடுக்கப்பட்டு உள்ளது. இது கடுமையான கதிர்வீச்சுள்ள அணுக் கழிவாக்கும். இதை 48,000 ஆண்டுகள் வைத்து அரசு மிக கவனமாக பாதுகாக்க வேண்டும். இதன் பாதிப்புக்கு அஞ்சியே கர்நாடகம் கோலார் தங்கவயல் உட்பட எங்கேயும் வைக்க விட மாட்டோம் என போராடி விரட்டி அடித்தனர்..இப்போது வரை அணுக் கழிவு இருப்பதை அரசு வெளியே சொல்லாமல் ரகசியமாக பாதுகாத்து வருகிறது. இந்தக் அணுக்கழிவு இங்கு கூடங்குளம் அணுஉலை வளாகத்திலேயே வைக்கப்பட்டு உள்ளது.

இந்த அணுஉலை கழிவு ஏற்படுத்தும் கதிரியக்கம் மூலம் தற்போது கூடங்குளம் உட்பட.அருகாமையில் உள்ள அனைத்து ஊர்களிலும் புற்றுநோய் உட்பட எண்ணற்ற நோய்கள் மக்களுக்கு தீவிரமாக ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மிகவும் பதட்டத்துடனும், அச்சத்துடனும் தற்போது கொந்தளிப்பான மனநிலையில் இருந்து வருகின்றனர். எனவே மக்களுக்கு அணுஉலைக் கழிவு பற்றிய இந்த உண்மையை பற்றி உணராமல் மறைக்கவும், அணுஉலை கழிவு வைத்துள்ளதை பற்றி மக்கள் எதிர்ப்பு வராமல் முறியடிக்கவும், அரசு காவல்துறை மூலம் சம்மன் என்ற அஸ்திரத்தை எடுத்து ஏவியுள்ளது.

2).கூடங்குளம அணு உலை எதிர்ப்பு போராட்டம் மூலம் அணுஉலை பாதிப்புகளை பற்றி விழிப்புணர்வு உருவாகி, இந்தியாவெங்கும் அணு உலை வைப்பதற்க்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக ஆளும் மராட்டிய மாநிலம் ஜெய்தாபூரில் அணு உலை அமைக்க மக்கள் மட்டுமன்றி பாஜக-சிவசேனா கூட்டணி அரசுமே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இடிந்தகரையில் மையம் கொண்டு வரும் போராட்டம் முடிவுக்கு கொண்டு வர வேண்டிய நிர்பந்தம் இந்திய அரசுக்கு உள்ளது.

ஏற்கனவே செத்து பிறந்த குழந்தை போல் ஓடாமல் உள்ளது தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட ஒன்றாவது அணு உலை, கடந்த ஓராண்டாக இதோ ரெடி, ரெடி எனச் சொல்லிக் கொண்டே சோதனை ஓட்டம் முடிந்தது எனக் கூறியும் இயக்க முடியாமல் உள்ளது தரமற்ற பொருட்களால் கட்டப்பட்ட இரண்டாவது அணு உலை. இந்நிலையில் மேலும் கூடங்குளத்தில் 3, 4 அணு உலைகள் அமைக்க இங்கு ஒரு அமைதியான சூழல் இருப்பது போன்ற நிலையை எல்லோர் முன் காட்ட வேண்டிய தேவை ஆளும்அரசுகளுக்கு உள்ளது. எனவே மக்களை அச்சுறுத்தி, அடக்கி வைக்க தமிழக அரசு மூலம் சம்மன் என்ற ஆயுதத்தை இந்திய அரசு எடுத்துள்ளது.

3). ஜெயலலிதாவின் “ஜெயாடிவி”, “மிடாஸ் சாராய ஆலை”, நீதிபதி குன்கா அவர்கள் குறிப்பிட்ட ஜெயலலிதா முறைகேடாக சொத்து சேர்த்திய வழக்கில் காட்டிய “திருவைகுண்டத்தில் 1500 ஏக்கர் நிலம்” ஆகியவற்றில் ஜெயலலிதாவுடன் பங்குதாரராக உள்ள, கடந்த 25 ஆண்டுகளாக தாதுமணலை பல்வேறு வகையில் முறைகேடாக கொள்ளை அடிப்பவராக வைகுண்டராசன் அவர்கள் இருந்து வருகிறார். இந்த நிலையில், இன்று தமிழகமெங்கும் பூதாகரமாக எழுந்துள்ள “டாஸ்மாக்கை மூடு” என்ற முழக்கமும் அதன் மூலம் வருவாய் இழப்பாக ஏற்படும் தொகைக்கு மாற்றாக பல லட்சம் கோடி வருவாய் வரும் தாதுமணலை தனியாருக்கு கொடுக்காமல் அரசே எடுத்து நடத்துக என்ற கோரிக்கை பலராலும், பரவலாக நாடு முழுக்க சொல்லப்பட்டு வருகிறது. வெளியே யார் சொன்னாலும் பரவாயில்லை, கடற்கரை கிராம மக்களும்- கடற்கரைக்கு அருகே ஒட்டியுள்ள கிராம மக்களும் இந்த முழக்கத்தை கையில் எடுத்து போராட்டக் களத்திற்க்கு வந்து விட்டால் வேறு வழியின்றி இதை நடைமுறைப்படுத்த வேண்டிய நெருக்கடி வந்து, வைகுண்டராசனுக்கு மிகவும் சிக்கலாகி விடும் எனக் கருதுகிறது ஜெயலலிதா அரசு. தமிழகத்தின் 70 % தாதுமணல்குவாரிகள் ( 78 க்கு 54 குவாரிகள் இங்கு உள்ளது) அமைந்துள்ள நெல்லை கடற்கரை கிராம மக்களை, வைகுண்டராசனுக்கு எதிராக போராட வரும் சிந்தனையே வராமல் தடுக்க, மிரட்டவே, திசை திருப்பவே காவல்துறை மூலம் மக்களுக்கு சம்மன் கொடுப்பது என்ற முடிவை ஜெயலலிதாஅரசு எடுத்துள்ளது.

4). கடந்த காலங்களில் முறைகேடாக தாதுமணலை அள்ளும் வைகுண்டராசனைப் பற்றி யாருமே வாய் திறந்து பேச, எழுதத் தயங்குவார்கள். நானே இது போல் பலரை நேரில் சந்தித்தும், பார்த்தும் வருகிறேன். ஆனால் இப்போது தாதுமணல் கொள்ளை பற்றியும், வைகுண்டராசனைப் பற்றியும் பலரும் பல விஷயங்களை தமிழகம், இந்தியா முழுக்கவும் பேசவும், எழுதவும் செய்கின்றனர்.

ஊடகங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும், செயல்பாட்டாளர்களுக்கும் மறைமுகமாகவும், நேரடியாகவும் பல அச்சுறுத்தல், மிரட்டல், சலுகை என கொடுத்தாலும் கூட பல செய்திகள் வெளியே வந்து விடுகிறது. ஃபிரண்ட் லைன் போன்ற ஆங்கிலப் பத்திரிக்கைகள் நாடு முழுக்க இந்த செய்தியை தற்போது கொண்டு சென்று உள்ளன.

தமிழகத்தில் ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகள் தாதுமணல் கொள்ளை பற்றியும், கனிமக்கொள்ளை பற்றியும் பல்வேறு செய்திகளை வெளியிட்டு மக்களை விழிப்புணர்வு அடையச் செய்து வருகின்றது.

கடற்கரை கிராமங்களில், கடற்கரையை ஒட்டியுள்ள கிராமங்களில் மட்டும்தான் இப்போதும் வைகுண்டராசன் அட்டூழியம் கொடி கட்டி பறக்கிறது. தாதுமணல் கொள்ளையால் ஏற்பட்டு வரும் பாதிப்புக்களை மக்கள் மனம் திறந்து பேசப் பயப்படுகின்றனர். வைகுண்டராசனாலோ, அவரது ஆட்களாலோ தங்களுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டி படைக்கிறது.

தாதுமணல் முறைகேடாக அள்ளப்பட்டதால், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட அனைத்து கடலோர கிராமங்களிலும் மக்கள் புற்றுநோய், தைராய்டு, சிறுநீரக பாதிப்பு, மலட்டுதன்மை, தோல் நோய் என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்பட்டு பெருவாரியான மக்கள்(இறப்பவர்களில் 70%-80%) இப்படித்தான் இறந்து வருகின்றனர் என்பதற்கு எங்களிடம் ஆதாரம் பலவும் உண்டு.

தாதுமணல் முறைகேடாக அள்ளப்பட்டதால், அனைத்து கடற்கரை ஊரிலும் குடிநீர் கடந்த 20 ஆண்டுகளாக உப்பாக மாறியுள்ளது. இதனால் மக்கள் தண்ணீரை காசு போட்டு வாங்கியே அனைவரும் குடிநீரைப் பயன்படுத்துகின்றனர்.

தாதுமணல் முறைகேடாக அள்ளப்பட்டதால் மட்டும் கடலில் 100க்கும் மேலான வகை மீன்கள் அடியோடு இல்லாமலேயே போய் விட்டது. இடிந்தகரையில் மட்டும் நாங்கள் எடுத்த கணக்குப்படி 42 வகை மீன்கள் கடந்த 15 ஆண்டுக்குள் இல்லாமலேயே போய் விட்டது.இதனால் மக்கள் போதிய வருவாய் கிடைக்காமல், பிழைப்பு தேடி, மனஉளைச்சலோடு வெளியூர், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு குடும்பங்களை விட்டுவிட்டு பணம் சம்பாரிக்க செல்கின்றனர்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் கடந்த செப்டெம்பர் -11, 2014 இல் உத்தரவிட்டும், டெல்லி உச்சநீதிமன்றம் செப்டெம்பர் -11, 2014 இல் உறுதிபடுத்திய அடிப்படையில் திரு.சகாயம் இ.ஆ.ப. அவர்கள் மதுரை கிரானைட் முறைகேடு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்த பின், உடனடியாக தமிழகம் முழுக்க அனைத்து கனிம முறைகேடுகளையும் ஆய்வு செய்ய, குறிப்பாக தாதுமணல் கொள்ளை பற்றி ஆய்வு செய்ய பல ஏற்பாடுகளை பலரும் செய்து வருகிறோம்.

சகாயம் ஆய்வுக் குழு கடலோர மாவட்டத்தில் ஆய்வுப் பணிக்காக வரும் போது, இடிந்தகரையில் போராட்டம் நடந்து வந்தால், இடிந்தகரை மக்கள் தலைமை தாங்கி, அனைத்து கடலோர கிராம மக்களையும் அச்சமின்றி அவரிடம் பேச வைப்பார்கள். கடந்த 2013 ஆண்டில் தாதுமணல் முறைகேடு பற்றி ஆய்வு செய்ய ககன்தீப்பேடி குழு வந்த போது அப்படித்தான் நடந்தது. எனவே இப்படி ஒரு நிலை வராமல் இருக்கவே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவே, ஜெயலலிதாஅரசு மக்களுக்கு சம்மன் கொடுத்து மிரட்டுவது என முடிவு செய்து தற்போது அதை நடைமுறைப்படுத்துகிறது.

5). போராட்டக் குழு, மக்கள் மீது போடப்பட்ட அணுஉலை போராட்ட 380 வழக்கில் 248 வழக்கை மட்டும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு திரும்ப பெற்று உள்ளது. மற்ற அனைத்து வழக்குகளையும் போராடும் மக்கள் மீது தலை மேல் தொங்கும் கத்தியாகவே அரசு இன்று வரை வைத்துக் கொண்டு மிரட்டி வருகிறது. போராட்டம் தொடங்கி 4 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் கூட ஒரு வழக்கிற்க்கும் கூட இதுவரை குற்றப்பத்திரிக்கை கொடுத்து வழக்கை அரசு நடத்தவில்லை. அனைத்து வழக்கும் பொய்வழக்கு என்பதால்தான் டெல்லி உச்சநீதிமன்றம் அனைத்து வழக்கையும் திரும்ப பெற உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை வழக்கம் போல் நடைமுறைபடுத்தாமல் இப்போது வரை தமிழக அரசு பல்வேறு நாடகமாடி இழுத்தடித்தது. நாம் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உச்சநீதிமன்றம் என்று அலைந்தோம்.

இறுதியில் டெல்லி உச்சநீதிமன்றம் 248 வழக்கு தவிர மீதம் உள்ள 132 வழக்கையும் திரும்ப பெறும் முடிவை உள்ளூர் நீதிமன்றமே தீர்மானித்துக் கொள்ளட்டும் எனக் கூறியது. இந்த தீர்ப்பு வந்த நாள் 08-05-2014. கிட்டத்தட்ட இப்போது வரை 400 நாட்கள் கழிந்த நிலையில்தான், ஜெயலலிதா அரசு மக்களுக்கு சம்மன் கொடுப்பது என முடிவு செய்து தற்போது அதை நடைமுறைப்படுத்துகிறது.

6). 1500 நாட்களை நோக்கி நெருங்கும் இந்த மக்கள் போராட்டத்தை இறுதி முடிவுக்கு கொண்டு வர, உள்ளூரில் மக்களின் ஒற்றுமையை சிதைத்து மக்களிடையே பிளவு ஏற்படுத்துவதற்க்குமான, ஒரு சதி -சீர்குலைவு ஆயுதமாக காவல்துறை சம்மன் என்பதை அரசின் வழிகாட்டலில் எடுத்துள்ளது

7). வாய்தா, வாய்தா என தொடர்ந்து நீதிமன்றத்திற்க்கு மக்களை அலைய வைத்து நெருக்கடியை உருவாக்கியும், அச்சுறுத்தியும், சோர்வடைய வைத்தும் போராட்ட களத்திற்க்கு மக்களை வர விடாமல் தடுக்கவும் காவல்துறை சம்மன் என்ற வழிமுறையை எடுத்துள்ளது. (தாதுமணல் கொள்ளையை எதிர்த்த பெரியதாழை மீனவ மக்கள் 2000 ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக மாதம் ஒருமுறை வாய்தா என அழைக்கழிப்பது போல)

8). ஊழல் -சிறை -டாஸ்மாக் என மக்கள் மத்தியில் சரிந்துள்ள தங்களது செல்வாக்கை “ வீரப்பனை சதித்தனமாக கொன்று விட்டு மோதலில் (என்கவுண்டர்) படுகொலை செய்யப்பட்டார் என்பதை போல் பூதாகரமாக காட்டி “அமைதியை நிலை நாட்டிய தாய்” என ஜெயலலிதாவை படம் காட்டப்பட்டது போல, தற்போது நான்கு ஆண்டுகளை கடந்து ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் “கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை முறியடித்து அமைதியை நிலைநாட்டிய மக்கள்தாய்” என தனது அடிமைகளாக உள்ள சில மீனவ மக்களையும், அமைப்புகளையும் வைத்தும், தனது கட்சிக்காரர்களை வைத்தும் தன்னை மிகப் பிரம்மாண்டமாக காட்டவும், தான் ஆட்சியில் இருந்தால் மட்டுமே தமிழக மக்களுக்கு அமைதி கிடைக்கும் என பொதுசமூகத்தில் பொதுபுத்தி உருவாக்கவும், காவல்துறை மூலம் சம்மன் என்ற வழிமுறையை ஜெயலலிதா அரசு எடுத்துள்ளது.

ஜெயலலிதா அரசு, மக்களை நீதிமன்றம்-சம்மன்-வாய்தா என இழுத்தடித்து அவர்களை சோர்வடைய செய்து, நெருக்கடிக்கு உள்ளாக்கவே முயற்சிக்கும். இதன் மூலம் போராட்டத்தில் பின்னடைவை உருவாக்கவே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவே இடையறாது முயற்சிக்கும்.

இப்போது நாம் என்ன செய்வது?

இடிந்தகரை போராட்டத்தில் தீவிரமாக இருக்கும் சிலருக்கும், அரசின் ஆதரவாளர்களாக போராட்டக்களத்தில் ஈடுபடாமல் உள்ளவர்கள் பலருக்கும்கூட காவல்துறை மூலம் இப்போது சம்மன் கொடுக்க வைத்துள்ளது அரசு. இதன் மூலம் அனைவரையும் சம்மன் வாங்கி நீதிமன்றத்திற்கு அலைய வைப்பது, பின்பு சில வாய்தாக்கள் கழிந்த பின் குற்றப்பத்திரிக்கை (CHARAGE SHEET) கொடுக்கும் போது, அரசின் ஆதரவாளர்களாக உள்ளவர்கள், அரசின் ஆதரவாளர்களாக மாறிவிடுகிறோம் என சமிக்கை காட்டுபவர்களாக மாற்றப்பட்டவர்களை, போதிய ஆதாரமில்லை எனக் கூறி வழக்கில் இருந்து விடுவித்து விடுவது என்பதுதான் அரசின் மாபெரும் சதிதிட்டமாக உள்ளது.

இப்போது சிலருக்கு 1 வழக்கு, 2 வழக்கு, அதிகபட்சம் 4 வழக்கு வரை சம்மன் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான நீதிமன்ற வாய்தாக்கள் மாதம்இருமுறை என போடப்பட்டால் ஒருவர் மாதம் அதிகபட்சம் 8 நாட்களும், மாதம் ஒருமுறை என வாய்தா போட்டால் அதிகபட்சம் 4 நாட்களும் நீதிமன்றம் செல்ல வேண்டியது இருக்கும். சிலர் அனைத்து வழக்கையும் ஒரே நாளில் வாய்தா போடுங்கள் எனக் நீதிபதியைக் கேட்கலாம் எனக் கூட நினைக்கலாம். அரசோ, மக்கள் மீது அடக்குமுறைக்காக செய்யும் நடவடிக்கை இது. இதில் ஒரே நாளில் வாய்தா போடுங்கள் என்பதெல்லாம் நடக்க வாய்ப்பு என்பது கானல்நீர் போல அறவேஇல்லை என்றே சொல்லலாம்.

போராடிய மக்கள், போராட்டக் குழுவினர் மீது மீது 132 வழக்குகள் சுமார் 1 லட்சத்திற்க்கு மேற்பட்டவர்கள் மேல் தற்போது வழக்கு உள்ளது. தேச துரோகம்-அரசுக்கு எதிரான யுத்தம்- கொலை முயற்சி- வெடிகுண்டு வீசுதல்- பொதுசொத்துக்கு சேதாரம் விளைவித்தல்- தனி நபர் கொடுத்த வழக்குகள் என பல்வேறு பிரிவுகளில் வழக்கு உள்ளது. தற்போது இடிந்தகரை-கூடங்குளம் -கூத்தங்குழி-கூட்டப்புளி என பல கிராம மக்கள் மீது சுமார் 2000 (இரண்டாயிரம்) பேருக்கு காவல்துறை சம்மன் தயார் செய்து கொடுக்க வைத்துள்ளனர், பலருக்கு கொடுத்துள்ளனர் என சொல்லப்படுகிறது.

இந்த நிலைமையில் நாம் முன் இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது.

1). காவல்துறையின் சம்மன் வாங்கி நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கை எதிர்கொள்வது.

2). போராட்டக் குழு பொறுப்பாளர்கள் சிலர், சம்மன் வாங்காமல் அனைத்து வழக்கிற்கும் நீதிமன்றத்தில் நேரில் சரண்டர் ஆகி சிறைக்கு செல்வது

இதன் சாதக, பாதகம் பற்றி ஆராயலாம்.

1). காவல்துறையின் சம்மன் வாங்கி நீதிமன்றத்தில்ஆஜராகி வழக்கை எதிர்கொள்வது

இப்படி செய்வதன் மூலம் பிரச்சினை இதோடு தீர்ந்து போய் விடும், வழக்கை நடத்தி முறியடித்துக் கொள்ளலாம் என்றால், இதை நாம் தாராளமாக செய்து கொள்ளலாம். ஆனால் இதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஏனெனில் இருக்கும் 132 வழக்கில் ஒவ்வொருவருக்கும் சுமார் 10,15 வழக்கு என சம்மன் என வந்து விட்டாலே அவர்கள் மாதம் முழுக்க நீதிமன்றமே கதி என மட்டுமே கிடக்க வேண்டி நிலைமை வரும். இந்த வழிமுறை மூலம்தான், அரசு மக்களை பணிய வைக்க கையாளும் எளிய முறையாக இருக்கும்.

கொள்கையில் தெளிவும், தத்துவார்த்த புரிதலும் கொண்ட பல முற்போக்கு அமைப்புக்களில் உறுதியுடன் செயல்பட்ட பலருமே, தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கையினால், பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டு நொறுங்கி போகும் நிகழ்வுகளை பல ஆண்டுகளாக நேரில் பார்த்தவன் நான். சமூக அக்கறையுள்ளவர்களை தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு சிதையச் செய்வது என்பதுதான் நமது நீதித்துறையின், அரசின் செயல்பாட்டு லட்சணம்.

இப்படிப்பட்ட செயல்தன்மை கொண்ட நீதிமன்றத்தில் மக்கள் சம்மன் பெற்று ஆஜராவது என்பது அவர்கள் விரித்த வலைக்குள் நாமே மக்களை கொண்டு சென்று தள்ளுவது போலாகும்.

2). போராட்டக் குழு பொறுப்பாளர்கள் சிலர், சம்மன் வாங்காமல் அனைத்து வழக்கிற்கும் நீதிமன்றத்தில் நேரில் சரண்டர் ஆகி சிறைக்கு செல்வது என்பது

ஜெயலலிதா அரசின் இந்த பாசிச செயல்பாட்டை முறியடிக்க போராட்டக் குழுவை சேர்ந்த என்னைப் போன்ற பொறுப்பாளர்கள் சிலர் அனைத்து வழக்கிலும் (132 வழக்குகள்) நீதிமன்றத்தில் நேரில் சரண்டர் ஆகி சிறைக்கு சென்று அரசின் அடக்குமுறையை எதிர்கொள்ளலாம், என்பது இன்னொரு கருத்து.

போராட்டக் குழுவை சேர்ந்த சிலர் அனைத்து வழக்கிலும் (132 வழக்குகள்) நீதிமன்றத்தில் நேரில் சரண்டர் ஆகி சிறைக்கு சென்று விட்டால் அரசு மக்களுக்கு சம்மன் அனுப்பாமல் விட்டு விடுவார்களா, சிறைக்கு சிலர் செல்வது என்பதெல்லாம் தேவை இல்லாத செயல் என்பது சிலரின் கருத்தாக இருக்கலாம்..மேலும் சிறைக்கு நீங்கள் செல்வதால் வெளியே எவ்வித நிலைமைகளும் மாறப் போவதில்லை, யாரும் உங்களுக்கு ஆதரவாக செயல்படப் போவதும் இல்லை, எதற்கு தேவை இல்லாத ரிஸ்க் எடுக்குறீர்கள் என சிலர் கருதலாம்.

நாம் வரலாற்றின் பக்கங்கள் சிலதை திரும்பி பார்க்க வேண்டும் எனக் கருதுகிறேன். 1991-1996 காலம் என்பது ஜெயலலிதா ஆண்ட தமிழகத்தின் இருண்டகாலம் என்றே கூறலாம். இக்காலத்தில்தான் ஈழப் பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர்கள்-சமூகப் பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர்கள் என அனைவரின் குரல்வளையைப் பிடித்து தடா - என்எஸ்ஏ - தேசதுரோக வழக்கு என்பது எல்லாம் மிக அதிக அளவில் போடப்பட்ட காலம் அது. இந்த காலத்திலும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்றோர் கொடிய தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தினால் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். 1996-இல் ஆட்சிக்கு வந்த அரசு, ஜெயலலிதா காலத்தில் போடப்பட்ட பல்லாயிரம் அரசியல் சார்ந்த பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டிய நிர்பந்தம் சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

அதே போல் 2002 காலத்தில் ஜெயா அரசால் ஏவி விடப்பட்ட “பொடா” வழக்கின் மூலமும்-பல்வேறு பிரச்சினை மூலம் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு 2004 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதி கூட அக்கட்சி வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டது.

போராட்டக் குழுவை சேர்ந்த சிலர் சிறைக்கு செல்வதன் மூலம் அரசியல் அரங்கில் பெரிய மாற்றத்தை எல்லாம் ஏற்படுத்தி விட முடியாவிட்டாலும், ஒரு சின்ன சலசலப்பை அரசியல் அரங்கில் ஏற்படுத்த முடியும். கூடங்குளம் அணு உலையை பற்றி கண்டும் காணாதது போல் இருக்கும் கட்சிகள் மத்தியில் இதை பற்றி பேசியே தீர வேண்டிய நிலைமை கட்டாயமாக ஏற்படுத்தப்படும்.

கடலோர கிராமங்களில், உட்பகுதி கிராமங்களில் இதை ஒரு பேசு பொருளாக மாறும் சூழல் ஏற்படும். கூடன்குளம் போராட்டத்தின் மீது அரசால் தீவிர அடக்குமுறை எப்போது எல்லாம் மக்கள் மீது நிகழ்தப்பட்டதோ, அப்போது எல்லாம் கடலோர மக்களிடம் ஒரு பேரெழுச்சி ஏற்பட்டது. இந்த கைது நிகழ்வு அவர்களிடம் பேரெழுச்சி ஏற்படுத்தாவிட்டாலும் ஒரு விழிப்புணர்வயாவது கட்டாயம் ஏற்படுத்தும். கூடன்குளம் போராட்டம் தமிழகம் முழுக்க மக்கள் கவனம் பெற்ற போராட்டம், இந்த போராட்டக்கார்கள் மீது ஏவப்படும் ஒவ்வொரு அரசின் அடக்குமுறைக்கும் சமூக அக்கறை உள்ள மக்களிடையே கட்டாயம் எதிர்வினை ஏதாவது ஒரு வகையில் ஏற்படும் வாய்ப்பு கட்டாயம் உண்டு. ‌

இன்னும் சில மாதத்தில், தமிழக சட்டசபை தேர்தலை அனைத்து தேர்தல் கட்சிகளும் எதிர்கொள்ள வேண்டிய காலம் இது. போராட்டக் குழுவை சேர்ந்த சிலர் சிறைக்கு செல்வதன் மூலம், அனைத்து தேர்தல் கட்சிகளும் கூடங்குளம் பற்றி தனது நிலைபாடுகளை திட்டவட்டமாக எடுக்கிறார்களோ, இல்லையோ; கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைப் பற்றி அனைத்து கட்சிகளும் ஒரு தீர்மானகரமான முடிவெடுக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும் வாய்ப்பு இந்த முடிவுக்கு உண்டு.

சிலருக்கு, போராட்டக் குழுவை சேர்ந்த சிலர் சிறைக்கு செல்வதன் மூலம் அவர்கள் ஹீரோ ஆகப் பார்க்கிறார்களா என்ற கேள்வி ஏற்பட்டு உள்ளது. சிறைக்கு செல்வதன் மூலம் மட்டும்தான், அணு உலையைப் பற்றிய சில விசயங்களாவது இப்போது பொதுவெளியில் பேசவும், விவாதிக்கவுமான நிலைமை ஏற்படும், சூழல் ஏற்படும் என்பதுதான் எனது திடமான நம்பிக்கையாகும். இதைத் தவிர மக்கள் இந்த நெருக்கடியை எதிர் கொள்ள வேறு வழி, மாற்று வழி இப்பிரச்சினையை கையாள இருந்தால் தாராளமாக எனது முடிவை மாற்றிக் கொள்ளலாம்.

மக்களுக்கு, அணு உலைப் போராட்டத்திற்க்கு காவல்துறை சம்மன் என்ற வடிவில் வந்துள்ள நெருக்கடியை தீர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கமோ ஒழிய, யாரும் சிறைக்கு செல்ல வைப்பது அல்ல எமது நோக்கம்.

போராட்டக் குழுவை சேர்ந்த சிலர் சிறைக்கு செல்வதன் மூலம் மட்டுமே மக்களுக்கு வரும் நெருக்கடியை ஓரளவாவது மடைமாற்றி விடலாம். தமிழக அரசின் பொய்வழக்கு பற்றி நாடெங்கும் விவாதப் பொருளாக்கலாம், அரசியல் ரீதியாக இதை அணுகுவது மட்டுமே சரியானதாக இருக்க முடியும் என்பதுதான் எனது தீர்மானகரமான கருத்து ஆகும்.

அரசின் இந்த பாசிச அடக்குமுறை நிலையை எவ்வாறு எதிர்க்கொண்டு முறியடிப்பது என போராட்டக்குழுவும், இடிந்தகரை ஊர்கமிட்டியும், ஊர்மக்களும் கூடி விரைவில் முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கின்றனர்.

- முகிலன்

Pin It