daily mirror

(அமெரிக்காவில் 13 ஆண்டுகள் நடைமுறையில் இருந்த மதுவிலக்கு, 1933ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டதைக் குறிப்பிடும் டெய்லி  மிரர் செய்தி)

2016 தேர்தலை முன் வைத்து மது விலக்கு அரசியல் அனைத்து கட்சியினராலும் தீவிரமாக முன் வைக்கப்படுகிறது. அரசு மதுக்கடைகளை மூடி விட்டால் மதுவிற்கும் தமிழகத்திற்கும் தொடர்பே இல்லாத சூழல் ஏற்பட்டு விடுமா? 71 ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியில் மது விலக்கை ரத்து செய்வதற்கு முன்னா் தமிழக மக்களுக்கு மது என்றால் என்னவென்றே தெரியாதா?. 37ல் ராஜாஜி மது விலக்கை ரத்து செய்த போது தமிழகத்தில் மதுவின் வாடையே இல்லையா? பிரிட்டிஸார் காலத்தில் மக்கள் மதுவை நுகரவில்லையா? முகாலாயர் காலத்தில், சங்க காலத்தில் என எப்போதும் போதையை நுகராத காலம் என்று ஒன்று இல்லை.

திருவள்ளுவர் காலத்தில் போதையின் பாதிப்பு இருந்திருப்பதால்தானே, கள்ளுண்ணாமை என்கிற அதிகாரத்தை எழுத வேண்டியிருந்தது. தமிழ் மூதாட்டி அவ்வையும், அதியமானும் கள்ளுண்டு மகிழ்ந்த வரலாறு தமிழ் கூறும் நல்லுலகம் அறிந்ததே.

ஆரியர்களின் விருப்ப உணவாக, சோம, சுரா பானங்கள் இருந்ததை வேதங்கள் கூறுகிறது. ராமயாணத்தில், சுக்ரீவன் குடிகாரன் என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது. சுராபானம் அருந்தும் ஆரியர்களுக்கு எதிரானவர்கள் அசுரர்கள் ஆனார்கள் என்பது வரலாறு. தமிழ் மன்னன் ராவணன் உட்பட பலரும் அசுரர்கள் என அழைக்கப்படுவதற்கு மது அரசியலும் காரணம் என்பதை இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.

ஆக மது, இந்த உலகத்திற்கும் புதிதல்ல; தமிழகத்திற்கும் புதிததல்ல. கருணாநிதியால்தான், மது தமிழகத்தில் பரவியது என்று கூறி மதுவின் தொன்மையைக் குறைத்து மதிப்பிடமுடியாது. அப்படிக் கூறினால், கள்ளுண்டு ஆட்டம் போட்ட குரங்குகளைக் கொண்ட சித்திர சோலைகளை வர்ணித்த சங்க இலக்கியப் புலவர்கள் வருத்தப்படுவார்கள்.

மது விலக்கு சுமையா? சுகமா?

ஒரு வேளை மது விலக்கிற்காக குரல் கொடுக்கும் கட்சிகள் ஆட்சிக்கு வந்து மதுவை ரத்து செய்தால், மக்கள் வாழ்வு சீராக இருக்குமா? தற்போதைய நிலவரப்படி மதுவின் மூலம் தமிழகத்திற்கு வருகிற வருமானம் 27000 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 30000 ஆயிரம் கோடி ரூபாய். மது விலக்கை கொண்டு வருவதற்காக, வரிகளை விதித்தார் ராசாசி. அது போன்ற வரிச்சுமை நடுத்தரவர்க்க, ஏழைப் பாட்டாளிகளின் தலையில்தான் விழும். ஏற்கனவே அதிமுக அரசின் நான்காண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு நபரின் தலையிலும் 2 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறது. அரசுப் பள்ளிகளை மூடப்போவதாகவும் அரசு அறிவித்து கடும் எதிர்ப்புகளை சந்தித்தது அனைவரும் அறிந்ததே. முதலீட்டாளர்கள் மாநாடுகள் தமிழகத்தில் நடைபெறாத சூழலில், முதலீடுகளே தமிழகத்தில் இல்லை. இதுதான் தற்போது நமது மாநிலத்தின் பொருளாதார நிலை.

இப்போது மது வருமானத்தை அரசு இழக்குமானால், கூடுதலாக 30000 கோடி ரூபாய் நிதிச் சுமையை யார் தலையில் கட்டும்? மது விலக்கிற்காக போராடும் கட்சிகள் இந்த வருமான இழப்பை ஈடுகட்டும் அளவிற்கு மாற்று பொருளாதாரத்தை முன் வைக்கிறார்களா? அப்படி ஒரு மாற்றுத் திட்டத்தை எந்தக் கட்சியாவது வெளியிட்டிருக்கிறதா? மாற்று இல்லை எனில், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை இழுத்து மூடி விடு்ம் ராசாசியின் திட்டத்தை தான் தமிழக அரசு மேற்கொள்ளும். ராசாசியை பொருத்தவரை கொள்கை அடிப்படையிலும் அது சரியான முடிவாகப் பட்டது. ஏனென்றால் ராசாசியின் நோக்கம் சாமான்யர்கள் குடிக்காமல் மட்டுமல்ல, படிக்காமலும் இருக்க வேண்டும் என்பதே.

அப்படி ஒரு நிலை தமிழகத்திற்கு மீண்டும் வரக்கூடாது என்பதில் நாம் அனைவரும் குறியாக இருக்க வேண்டும். மதுக்கடைகளைத் திறந்து விட்ட கருணாநிதி அரசே, 73ல் மது விலக்கு அமல்படுத்தியது. மீண்டும் நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி ஆரம்பித்தது.

தாயின் மீது ஆணை, மதுக்கடைகளை திறக்க மாட்டேன் என்று சொன்ன எம்.ஜி.ஆரும் 81ல் கள்ளுக் கடைகளையும், சாராயக் கடைகளையும் திறந்து வைத்தார். அப்போது கருணாநிதி, அப்பனுக்கு சாராயம், பிள்ளைக்கு சத்துணவா? என்று கேலி பேசினார்.

91ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கருணாநிதி துவங்கிய மலிவு விலை மதுக்கடைகளை மூடுவோம் என்று சொல்லித்தான் ஆட்சியைப் பிடித்தார். ஆட்சிக்கு வந்து ஓர் ஆண்டு கூட நிறைவடையாத சூழலில் மீண்டும் மதுக்கடைகளை திறந்து வைத்தார் என்பதுதான் வரலாறு. ஆக, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற மூன்று முதலமைச்சர்களும் மது விலக்கை அமல்படுத்தியிருக்கிறார்கள், அவர்களே மீண்டும் மதுக்கடைகளை திறந்தும் விட்டிருக்கிறார்கள். அதற்கான காரணங்கள் என்ன என்பதை வரலாற்றிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

டாஸ்மாக் இல்லாத தமிழகமா? சாராயம் இல்லாத தமிழகமா?

1970ல் மதுக்கடைகளை திறந்து விடுவதற்கு முன் கள்ளச்சாராயம் உட்கொண்டவர்களின் எண்ணிக்கை 3,72,472 பேர். இந்த கணக்கை வெளியிட்டவர் திமுகவிலிருந்த எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் மது ஒழிப்பு பிரச்சாரம் தவறாமால் இடம்பெறும். “தைரியமாக சொல் நீ மனிதன்தானா?” என்கிற பாடல் இடம் பெறும் படம் ஒளிவிளக்கு. இத்திரைப்படம் வந்தபோது மதுக்கடைகளை அரசு நடத்தவில்லை. அப்போது ஏன் இது போன்ற பாடல்கள் வந்தது?

சாராய சாம்ராஜ்யத்தை கதாநாயகன் அழிப்பது போன்ற திரைப்படங்கள் 80 களில் அதிகம் வந்திருக்கும். மூன்றுமுகம் திரைப்படத்தில் அலெக்ஸ் பாண்டியனை யாரும் எளிதில் யாரும் மறந்து விட முடியாது. சமீபத்தில் கள்ளச்சாராய சாம்ராஜ்யத்தை மய்யமாக கொண்ட திரைப்படங்கள் அதிகம் வருவதில்லை. கள்ளச்சாராயத்தின் இடத்தைதான் டாஸ்மாக் பிடித்து விட்டது. டாஸ்மாக்கை மூடிவிட்டால் மதுவின் மயக்கத்திலிருந்து தமிழகத்தை விடுவித்து விடலாம் என்பது சிறுபிள்ளைத்தனமான கற்பனை.

சாராய அரசியலில் பலியாகப் போகும் விளிம்பு நிலை மக்கள்

மது கிடைக்காத சூழலில், கள்ளச் சாராயத்தி்ற்கு சந்தை இயல்பாக திறந்து விடப்படும். மதுரையில், பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கூட குறிப்பிட்ட சில இடங்களில் கள்ளச்சாராயம் கிடைத்து வந்தது. ரிக்ஸா தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் என விளிம்பு நிலை மக்கள்தான் கள்ளச்சாராயத்தின் நுகர்வோர்கள். அரசுக் கடைகளை விட மலிவான விலையில் கள்ளச்சாராயம் கிடைக்கும். காவல்துறைக்குத் தெரிந்தாலும் பெரிய அளவில் கெடுபிடி காட்டியதில்லை. இந்தத் தொழிலை செய்பவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலும் அவர்களே தென்தமிழகத்தில், குறிப்பாக மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இதனைச் செய்து வந்தார்கள். மது விலக்கு முழுமையாக அமலுக்கு வரும் பட்சத்தில், இந்த சமூக மக்களி்ன் வாழ்நிலையும் பெரிய அளவில் பாதிக்கும். நவீன உலகின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்வது தடைபட்டு, அந்த மக்கள் மீண்டும் கள்ளச்சாராய சந்தைக்குள் தள்ளப்படும் வாய்ப்பு ஏற்படும்.

கள்ளச்சாராயத்தை நுகர்வோர்களில் பெரும்பாலும் விளிம்பு நிலை உழைக்கும் சமூக மக்களாகத்தான் இருப்பர். காவல் துறை கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துமா அல்லது கள்ளச்சாராய வியாபரிகளுக்கு துணைபோகுமா என்கிற கேள்விக்கான பதிலை நமது திரைப்படங்களே சொல்லியிருக்கின்றன. ஒரு கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் கள்ளச்சாராயம் காய்ச்ச சொல்லி நிர்பந்திக்கும் காவல்துறையின் கொடுமைகளை விரிவாக சொன்ன திரைப்படம்தான் கோவில்பட்டி வீரலட்சுமி. சிம்ரன் நடிப்பில் வெளிவந்த இந்தத் திரைப்படம் உண்மை சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டது.

வடதமிழகத்திலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் கள்ளச்சாராயத்தை காய்ச்சுகிறார்கள். டாஸ்மாக் கடைகளால் நடுத்தர வர்க்க இளைஞர்கள் அதிக அளவில் மதுவை நுகர்கிறார்கள் என்பது உண்மை. அரசே நடத்தும் மதுக்கடைகளால் நடுத்தர வர்க்கத்தில் புதிய மது நுகர்வோர்கள் உருவாகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால், கள்ளச்சாராயத்தால் விளிம்புநிலை சமூகங்கள் முற்றிலும் அழிந்து போவார்கள். கள்ளச்சாராயத்தால் கண் பார்வையிழப்பு, உயிரிழப்பு போன்ற கொடிதிலும் கொடிதான சம்பவங்கள் நடைபெறும்.

கல்லூரிப் பெண்கள் மது அருந்துகிறார்கள் என்பதை கலாச்சார சீரழிவாக பேசுகிறவர்களுக்கு ஒரு செய்தி. கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். கணவன் கைதாகி சிறையில் இருக்கும்பொழுது, பெண்களே அந்தத் தொழிலை முன்நின்று நடத்துகிறார்கள்; நடத்தியிருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு. பெண்களுக்கும் மதுவிற்கும் தொடர்பே இல்லை என்கிற கருத்து நடுத்தர வர்க்கப் பார்வை. மது பரவலாக இருக்கும் சமூகத்தில் ஆண், பெண் இருவருமே உற்பத்தியாளர்களாகவும், நுகர்வோர்களாகவும் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரும்பாலும் இதில் பாதிக்கப்படுபவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களாகத்தான் இருப்பர். பரிபூரண மது விலக்கு குறித்துப் பேசும் கட்சிகள் கள்ளச்சாராய சாவுகளுக்கு என்ன மாற்றை முன் வைக்கிறார்கள்? மது கிடைக்காத சூழலில் போதை மாத்திரை, கஞ்சா போன்ற மாற்று போதைப் பொருட்களை மது அடிமைகள் தேடிப்போககூடிய சூழல் ஏற்படும். அவர்களுக்கு மருத்துவம் பார்க்க எத்தனை மது அடிமைகள் மறு வாழ்வு மய்யத்தை அரசு திறந்திருக்கிறது? மது மறுவாழ்வு மய்யத்தை திறந்ததற்குப் பிறகு மது ஒழிப்பை சாத்தியப்படுத்துங்கள் என்று எந்த கட்சியும் கோரிக்கை வைக்கவில்லையே ஏன்? துப்பரவு தொழிலாளர்கள், மலக்குழியில் இறங்கும் தொழிலாளிகள், பிணத்தை அறுக்கும் மருத்துவத் தொழிலாளர்கள், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் அன்றாடம் மது நுகரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற தொழிலாளர்களின் மதுப்பழக்கத்திற்கும், அவர்களின் கண்ணியமான வாழ்விற்கும் என்ன மாற்று ஏற்பாடுகளை இந்த அரசு செய்திருக்கிறது? இவர்களின் இந்த இழி நிலைக்கான மாற்று குறித்து மது ஒழிப்புப் போராளிகள் சிந்திக்கிறார்களா? இவர்களின் நோக்கம் மது ஒழிப்பா? மதுகுடிப்போர் ஒழிப்பா?

உலகமயமாக்கலும் மது ஒழிப்பும்

இன்றைய உலகமயம் தனிமனிதனின் மது நுகர்வை அரசு கட்டுபடுத்த முடியாத சூழலைத்தான் உருவாக்கி வருகிறது. சந்தைக்கு நாம் செல்வதை விட சந்தை நம் வீ்ட்டு முன்னால் வந்து நிற்கும் அதிசயத்தை இணையதளங்கள் ஏற்படுத்தி விட்டன. பணக்கார இளைஞர்கள் இணையத்தின் மூலமே மது நுகரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். ஆக, பூரண மது ஒழிப்பு என்பது அரசியலுக்குத்தான் உதவுமேயொழிய, மது நோய்க்கு முழுமையான தீர்வாக அமையாது. மதுஒழிப்புக் கொள்கையை தேசிய அளவில் கொண்டு வந்தால், மதுவின் கொடுமைகளுக்கு தீர்வு ஏற்பட சாத்தியம் இருக்கிறது.

தேசிய கட்சிகளின் மது அரசியல்

இன்று தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்ற தேசியக் கட்சிகள் தேசிய அளவில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைக்கத் தயாரா? இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு மது விலக்கை அமல்படுத்தினால், கொடுப்போம் என்று சொன்ன நிதியை தர மறுத்த காரணத்தினால்தான், மது விலக்கை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டது. தமிழகத்தில் காங்கிரஸின் சாம்ராஜ்யத்தை வீழ்த்திவிட்டு, திராவிட இயக்க அரசியல் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விட்டதால் ஏற்பட்ட கோபம் அன்றைய காங்கிரஸிடம் இருந்தது. மது விலக்கு ரத்தானதற்கு, காங்கிரஸின் பழி வாங்கும் அரசியலும் ஒரு காரணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று தமிழக பாஜக மது விலக்கை அமல்படுத்தாவிட்டால், பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறது. தமிழக அரசியல் கட்சிகளை சுட்டிக்காட்டும் பாஜக அரசு, இந்தியா முழுவதும் மது விலக்கை அமல்படுத்தப்படும் என்று அறிக்கை வெளியிடத் தயாரா? இந்தியா முழுவதும் தனது புத்திரர்கள் என்று நினைப்பதே நல்ல நடுவண் அரசு. அந்த வகையில், தமிழ்நாட்டுப் பிள்ளைகளைக் காப்பாற்ற நடுவண் அரசு நல்ல முடிவை அறிவிக்கலாமே! கங்கை என்கிற ஒரு நதியை சுத்தப்படுவதற்காக கோடிக்கணக்கில் பணம் செலவிடத் தயாராக இருக்கும் நடுவண் அரசு 7 கோடி தமிழக மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கலாமே. மாநில உரிமைகளில் தலையிடும் விதமாக, பல்வேறு துறைகளை பொதுப்பட்டியலிலும், நடுவண் அரசு பட்டியலிலும் கொண்டு வந்த தேசியக் கட்சிகள் மது விலக்குப் பிரச்சனையை தன்னுடைய அதிகாரத்தின் கீழ் கொண்டு வரலாமே! மதுவின் வருமானத்திலிருந்து மாநில அரசு திட்டங்களைத் தீட்டும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே.

மது விலக்கு அரசியலில் கரைந்து போன சமூகப் பிரச்சனைகள்

இந்த தேர்தலை முன் வைத்து செய்ய வேண்டிய பிரச்சாரங்கள் ஏராளமாக இருக்கிறது. கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தின் நிர்வாகம் முழுமையாக செயலிழந்து விட்டது. அடிப்படை பொருட்களின் விலைவாசி இருமடங்கு உயர்ந்திருக்கிறது. திருப்பதியில் 20 தமிழர்களின் உயிர் பலியானதற்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. முல்லைப் பெரியாறு அணை மற்றும் மேகதாது பிரச்சனையில் நடுவண் அரசின் தமிழர்களுக்கு எதிரான போக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான வன்கொடுமைகள் வட இந்தியாவைப் போல தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. கவரவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என்கிற கோரிக்கை என்னவாயிற்று? தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்கை, கல்விக் கொள்கையில் தாய்மொழி புறக்கணிப்பு என மாநில, மத்திய அரசை நோக்கி கேள்விகளை எழுப்ப வேண்டிய கட்சிகள் மது விலக்கு என்கிற ஒற்றை கோரிக்கையை முன் வைத்து களம் காண்கின்றன. ஒரு வகையில் ஆளும் அரசிற்கு சாதகமான விசயம்தான். ஏனென்றால் மது விலக்கு என்கிற கோரிக்கையின்போது, திமுக, அதிமுக இருகட்சிகளும் இணைத்தே விமர்சிக்கப்படும்.

2016 தேர்தலுக்கான கூட்டணி இன்னும் முடிவாகாத நிலையில் அனைத்துக் கட்சிகளும் மது விலக்கு என்கிற பொதுவான கோரிக்கையை முன்னெடுப்பதன் மூலம், திமுக, அதிமுக என்கிற இரு கட்சிகளுடனும் கூட்டணி சேருவதற்கான வாய்ப்புகளை சமஅளவில் ஏற்படுத்திக் கொள்கின்றன. திமுக, அதிமுக கட்சிகளின் ஊழல் குறித்தோ, திட்டங்கள் குறித்தோ பேசாமல் பொதுவாக மது விலக்கு என்கிற கோரிக்கையை முன் வைப்பது சாதுர்யமான தேர்தல் வியூகம். கோகுல்ராஜ் படுகொலை, கவுரவக் கொலைகள் குறித்த பேச்சுகளே தற்போது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அது பெரும்பான்மை வாக்கு வங்கி அரசியலுக்கு உதவாது. திமுக அரசு மது விலக்கு குறித்து வாக்குறுதி அளித்திருக்கும் நிலையில், அதிமுக அரசும் அதே வாக்குறுதியை அளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அரசு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் என மக்கள் கூடும் இடங்களில் இருக்கக்கூடிய மதுபானக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் அகற்றப்படாத கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். இதை அரசு உடனடியாக செய்தாலே, மதுவினால் ஏற்படக்கூடிய சீரழிவினை 70 விழுக்காடு தவிர்த்து விட முடியும். மது விலக்கு கொண்டு வருவதற்கு முன் மது மறுவாழ்வு மய்யங்களை அதிக அளவில் தொடங்க வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்கள், பாலியல் தொழிலாளர்கள் போன்ற விளிம்பு நிலைத் தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களை கொண்டு வரவேண்டும். தங்கள் கட்சிகளைச் சேர்ந்த மதுபான ஆலை உரிமையாளர்களின் சந்தையை கட்டுப்படுத்த வேண்டும். கார்ப்பரேட் கூட்டிணைவுக் குழுமங்களில் அனுமதிக்கப்படும் மது கலாச்சாரத்தை தடை செய்யவேண்டும். இது போன்ற செயல்திட்டங்களை முழுமையாக செயல்படுத்தி விட்டு, படிப்படியாக முழுமையான மது விலக்கை அரசு முன்னெடுக்க வேண்டும். இது போன்ற தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமில்லாமல், பரிபூரண மது விலக்கு என்கிற கோரிக்கை வாக்கு வங்கி கட்சிகளுக்கு தங்கள் குறைகளை மறைத்துக் கொள்ள உதவும் மிகப்பெரிய கேடயமாகும்.

-    ஜீவசகாப்தன்

Pin It