மனைவிகளின்
காதுகளில் மட்டுமே மிச்சமிருந்த
தங்கத் தோட்டை விற்ற பணமாக
இருக்கலாம்...

தாங்க முடியாத உடல் வேதனையால்,
அறுவை சிகிச்சை செய்வதற்காக
பல நாட்களாய்
அம்மாக்கள் சேர்த்து வைத்திருந்த
பணமாக இருக்கலாம்...

சைக்கிள் வாங்குவதற்காக
பிடித்த சாக்லேட்டைக் கூட
வாங்கி உண்ணாமல்
சில குழந்தைகள் சேர்த்து வைத்த
உண்டியல் காசாகக் கூட இருக்கலாம்...

மகன்களுக்கு
உடல் நலம் சரியில்லை என
பக்கத்து வீட்டுக்காரரிடம்
பொய் சொல்லி
வாங்கிய பணமாகவும் இருக்கலாம்...

பல வருடங்களாக
இறந்த அப்பாக்களை நினைவுபடுத்திய
பொருட்களை விற்ற பணமாகக்
கூட இருக்கலாம்...

வறுமையால்
முதிர்கன்னியாக இருக்கும்
தன் மகளுக்கு இந்த வருடமாவது
திருமணம் செய்து வைப்பதற்காக
வீட்டில் யாருக்கும் தெரியாமல்
அப்பாக்கள் விற்ற
சிறுநீரகங்களுக்குக் கிடைத்த
பணமாகக் கூட இருக்கலாம்...

இப்போதெல்லாம் மதுக்கடைகளில்
குவிந்து கிடக்கும் பணம்
உழைப்பால் கிடைத்த பணம் அல்ல...
கனவுகளையும் நினைவுகளையும் சுமந்த
மக்களின் சாபங்கள்...!

- மு.முபாரக்

Pin It