கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த நாட்களிலிருந்தே காவிகளின் அட்டகாசம் தலைத்தோங்கியுள்ளது.

uma sankarஒவ்வொரு நாளும் சிறுபான்மையினருக்கு எதிராக ஒவ்வொரு கருத்து "குண்டுகளை" வீசி பெரும் சர்ச்சையைக் கிளப்பி தங்களின் பெயரைத் தக்க வைக்க நினைக்கின்றனர்.

தமிழகத்திலும் இதுவரை வெளியில் வராத காவி முகங்களெல்லாம் இப்போது பளிச்சென்று தெரிகின்றன.

தற்போது தமிழகத்தில் உமாசங்கர் ஐ.ஏ.எஸ் அவர்கள் மதப்பிரச்சாரம் செய்கின்றார், உடனே அவரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என காவிகள் கூச்சலிட்டு வருகின்றன!

சமூகத்தில் எவ்வித பாகுபாடுமின்றி செயல்படுவேன் என்று உறுதி மொழியெடுத்த அரசு அதிகாரி எப்படி கிறித்தவ மதப்பிரச்சார கூட்டத்தில் பங்கெடுக்கலாம்? உடனே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமகோபலன் அவர்கள் அறிக்கை விட்டுள்ளார்கள்.

மதச் சார்பற்ற நாட்டில் அரசு அலுவலகங்களில் இந்துமத தெய்வங்களின் படமும், அதே அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவதும் முதியவர் இராமகோபலன் அவர்களுக்குத் தெரியாது போல!

இவர்களின் ஒரே நோக்கம் சிறுபான்மையினரான கிறித்தவர்களையும் முசுலீம்களையும் ஒடுக்க வேண்டும் என்பதுதான்! ஆகவே அவர்களின் சதியை முறியடிக்க நாம் உமாசங்கருடன் கைகோர்க்க வேண்டும்.

ஆனால், உமாசங்கரைப் பணிநீக்கம் செய்யக்கோரி, 10/02/2015 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக (http://www.tntj.net/305288.html) அறிவித்துள்ளது. உமாசங்கர் அவர்களுக்கு எதிராக முஸ்லிம்கள் களமிறங்குவது சரியான போக்காக எனக்குத் தெரியவில்லை!

பொதுவாக கிறித்தவர்களைப் பொருத்த வரையில் அவர்களின் மதத்தை மெய்ப்பிக்க வலுவான கருத்துக்கள் அவர்களிடம் இல்லாததால் திருமறை மீதும், நபி அவர்களின் மீதும் அவதூறைப் பரப்பி வருகின்றனர். இதில் உமாசங்கர் அவர்களும் விதிவிலக்கல்ல!

நான் உமாசங்கர் அவர்களுக்கு ஆதரவாக பேசவில்லை. அவர் கூறும் அத்துனை விமர்சனங்களுக்கும் முஸ்லிம்களிடம் அறிவுப்பூர்வமான பதில்கள் உள்ளன.

உமாசங்கர் அவர்களின் இந்த நச்சுத்தன்மை நிறைந்த வார்த்தைகளை நாம் கண்டிக்கத்தான் வேண்டும். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல!

இப்போது நாம் அவருக்கு எதிராக களமிறங்குவது நம்மை அழிக்கவும் ஒடுக்கவும் நினைக்கும் சக்திகளுக்குத்தான் சாதகமாக அமையும்.

காவிகளின் கோபம் அரசு அதிகாரி மதப்பிரச்சாரம் செய்கிறார் என்பதல்ல! அரசு அதிகாரி கிறித்தவ மதப்பிரச்சாரம் செய்கிறார் என்பதுதான் அவர்களின் பிரச்சனை!

இதே உமாசங்கர் இந்துவாக இருந்து வருணாசிரமக் கொள்கைகளை பிரச்சாரம் செய்திருந்தால் இந்த காவிக் கும்பல் அவருக்கு மகுடம் சூட்டியிருக்கும்.

மீண்டும் சொல்கிறேன், அவர்களின் நோக்கம் ஐஏஎஸ் அதிகாரி பிரச்சாரம் செய்கிறார், அதைத் தடுக்க வேண்டும் என்பதல்ல! கிறித்தவ மதப்பிரச்சாரத்தையே தடுக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.

இப்போது ஒரு கிறித்தவருக்கு ஏற்பட்டுள்ள இதே நிலை நாளை ஒரு முசுலீமுக்கும் ஏற்படலாம்.

நடப்பு சூழல் அறியாமல் தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கும் இந்த ஆர்ப்பாட்டம் ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை!

- ஆழ்வை சம்சுதீன்

Pin It