பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலை விரிவாக்கத்திட்டம் பற்றிய கருத்துக் கேட்பு கூட்டம் பள்ளிபாளையம் லட்சுமி திருமண மண்டபத்தில் கடந்த 22-01-2015 வியாழக்கிழமை அன்று நாமக்கல் ஆட்சியர் தட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடத்தியது. ஆலையில் தினமும் காகித உற்பத்தி 1,20,000 டன்னில் இருந்து 1,65,000 டன்னாகவும், காகிதக் கூழ் உற்பத்தி 1,15,000 டன்னில் இருந்து 1,45,000 டன்னாகவும், நிலக்கரியை பயன்படுத்தி செய்யப்படும் 40 மெகாவாட் மின் உற்பத்தியை 55 மெகாவாட் மின் உற்பத்தியாக மாற்றுவது என்பதற்கான மக்களின் கருத்தை கேட்கும் கருத்துக் கேட்பு கூட்டமாகும்.

இந்த சேசசாயி காகித ஆலை விரிவாக்கத்திட்டம் பற்றிய கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி அரசு விதிப்படி ஆலையை சுற்றி 10 கி.மீ தூரத்தில் உள்ள நகரம்/கிராமத்தில் வசிக்கும் 7 லட்சம் மக்களுக்கு எந்த முறையிலும் தெரிவிக்கப்படாததால், யாருக்கும் இந்த கூட்டம் பற்றி தெரியவில்லை. மேலும் ஆலை மேம்பாட்டு திட்டத்திற்க்கான சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஊராட்சி/ பேரூராட்சி/ மாநராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எங்குமே வைக்கப்படவில்லை. அரசு அதிகாரிகளால் பத்திரிக்கையாளர்களுக்கு கூட கூட்டம் நடப்பது பற்றி யாருக்கும் முன்கூட்டியோ, நிகழ்ச்சி நாளன்றோ தகவல் எதுவும் சொல்லப்படவில்லை. மேலும் கூட்டத்திற்க்கு வரும் முன்பே நாங்கள் ஆலைக்கு அருகில் உள்ள புதுப்பாளையம் ஊராட்சி தலைவர்திரு.ரவி அவர்களையும், பாப்பம்பாளையம் ஊராட்சி தலைவர் திரு.நல்லசிவம் அவர்களையும், அலைபேசியில் அழைத்துப் பேசியதில் தங்களுக்கு சேசசாயி காகித ஆலை விரிவாக்கத்திட்டம் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி அரசு விதிப்படி அரசால் தகவலும் -சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையும், திட்ட நிர்வாக சுருக்க அறிக்கையும் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.

இதை நாங்கள் அறிந்து கொண்டவுடன் மாவட்ட தலைநகரான நாமக்கல்லில் உள்ள அனைத்து பத்திரிக்கையாளர்கள்/ காட்சி ஊடகத்தினர், பள்ளிபாளையம் பகுதி அனைத்து பத்திரிக்கையாளர்கள்/ காட்சி ஊடகத்தினர், வார இதழ் அனைவருக்கும் இரண்டு நாட்களாக(20,21-01-2014) தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பியும், அலைபேசியிலும் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைத்தும் பேசினோம். மேலும் நாமக்கல் மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் சமூக நல இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவில் இணைந்து உள்ள அனைத்து அமைப்பினருக்கும் குறுஞ்செய்தி அனுப்பியும், அலைபேசியிலும் கலந்து கொள்ள அழைத்தோம். நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து முற்போக்கு அமைப்புகளுக்கும் குறுஞ்செய்தி அனுப்பியும், அலைபேசியிலும் கலந்து கொள்ள அழைத்தோம். ஈரோட்டில் உள்ள தமிழ்தேச குடியரசு இயக்க பொதுசெயலாளர் தோழர். தமிழழகன், திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர்களில் ஒருவரான தோழர்.ரத்தினசாமி ஆகியோரிடமும் தெரிவித்தோம். வாய்புள்ளவர்களுக்கு தெரியப்படுத்தவும் சொன்னோம்.

mukilan namakkal

ஏற்கனவே நாமக்கல் மாவட்ட்த்தில் நடத்தப்பட்ட பல கருத்துக் கேட்பு கூட்டங்களில் நாங்கள் பங்கு கொண்டு கருத்துக்களைப் பேசி சட்டப்புறம்பான பல்வேறு அபாயகரமான நாசகார திட்டங்களை, சுற்றுசூழலை பாதிக்கும் திட்டங்களை தடுத்து நிறுத்திய வரலாறு உண்டு.

நாமக்கல் மாவட்டதில் மக்களை திரட்டி தொடர்ந்து போராடியும் பல ஆலைகளை மூடியுள்ளோம். தமிழ்நாட்டில் முதல்முறையாக மாசுப் பிரச்சினைக்கு என்றே கோட்டச்சியர், மாசு கட்டுப்பாடு வாரிய மாவட்ட தலைமைபொறியாளர் ஆகியோர் தலைமையில் தனியாக நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு கோட்ட அளவில் (நாமக்கல், திருசெங்கோடு) மாதம் ஒருமுறை மாசு கட்டுப்பாடு குறைதீர் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியரிடம் உத்தரவு பெற்று நடத்த வைத்தோம். (2011- நாமக்கல் மாவட்ட ஆட்சியராக குமரகுருபரன் அவர்கள் இருந்த போது ). மேலும் நாமக்கல் மாவட்டதில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அனுமதி பெறாமல் எந்த ஒரு ஆலைக்கும் ஊராட்சியில் கட்டிட, குடிநீர் உட்பட என எவ்வித அனுமதியும், மின்வாரியம் மின்சார அனுமதியும் தரக் கூடாது என மாவட்ட ஆட்சியரை அறிவிக்க வைத்தோம்.

தமிழகத்தில் முதல் முறையாக 2011 -ஏப்ரல் மாதத்தில் எங்கள் அனைத்து விவசாயிகள் மற்றும் சமூக நல இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் போராட்டம் விளைவாக தமிழகத்தில் முதல் முறையாக 200 க்கும் மேற்பட்ட சட்டவிரோத சாயப்பட்டரைகளை இடிக்க வைத்தோம். மேலும் 2006 ஆம் ஆண்டு முதல் கபிலர்மலை சரசுவதி காகிதஆலையை எதிர்த்து 4 ஆண்டுகளாக தொடர்ந்து ஒவ்வொன்றிலும் ஆயிரத்திற்க்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்ற 31போராட்டம், 12 வழக்குகள், சிறை, ஆலையால் விலை பேசப்படுதல் அதற்கு அடிபணியாததால் போராட்டக்காரர் 9 பேரை ஆலையின் அடியாட்கள் மூலம் கடப்பாரையால் குத்தியும், அரிவாளால் வெட்டப்பட்டனர். இதுபோல் எண்ணற்ற நெருக்கடிகளும்,பிரச்சினைகளும் எதிர்கொண்டு சரசுவதி காகித ஆலையை சில மாதம் மூடவைத்தும், கபிலர்மலை சரசுவதி காகித ஆலையை சுற்றுசூழல் செயல்பாட்டிற்க்கு என 100 கோடிக்கு மேல் செலவு செய்யவும் வைத்தோம்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலை தொகுதிக்கு ஆளும் தி.மு.க. வேட்பாளராக வந்த தி.மு.க. வேட்பாளர் காந்திசெல்வன் அவர்கள் 2009 -ஆம் ஆண்டில் ஓட்டுக் கேட்டு வந்தபோது கபிலர்மலை சரசுவதி காகித ஆலை பிரச்சினையை கண்டு கொள்ளாமல் இருந்ததால் அப்பகுதி மக்களால் விரட்டியடிக்கப்பட்டதும், கபிலர்மலை சரசுவதி காகித ஆலைக்கு துணை நின்று பினாமி போல் செயல்பட்டு போராடும் மக்களுக்கு நெருக்கடி கொடுத்து வந்த பா.ம.க.சட்டமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர்.நெடுஞ்செழியன் நடவடிக்கையால் , 2011 சட்டமன்ற தேர்தலில் பரமத்தி வேலூர் தொகுதிக்குள் ஓட்டுக் கேட்டு வந்த போது பா.ம.க. வேட்பாளர் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட வரலாறு என பலவும் நாமக்கல் மாவட்டத்தில் எங்களது தொடர் செயல்பாட்டால் நடந்தது உண்டு.

நான் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து இடிந்தகரையில் நடந்து வரும் அணுஉலை எதிர்ப்பு போரட்டத்திற்க்கு 2011 -செப்டம்பர் மாதம் வந்து பங்கேற்றது முதல் கடந்த 3 1/2ஆண்டுகளாக இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சிக்கும், போரட்டதிற்க்கும் நாமக்கல் மாவட்டத்திற்கு செல்லவில்லை. இடிந்தகரைக்கு வரும் முன் நாமக்கல் மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் சமூக நல இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவிவின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்து அறுபது அமைப்புகளை ஒருங்கிணைத்து; தோழர்களோடு இணைந்து எண்ணற்ற சுற்றுசூழல் போராட்டங்களும், லஞச- ஊழலை எதிர்த்த போரட்டங்களும், நேர்மையாக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் அவர்களுக்கு நேர்மையற்ற சக அதிகாரிகளாலும், ஊழல் அரசியல்வாதிகளாலும் பல்வேறு நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்ட போது மக்களை திரட்டி நேர்மையான செயல்படுபவர்களுக்கு துணை நிற்பது மக்கள்(நமது) கடமை என பல்வேறு செயல்பாடுகளையும் தொடர்ந்து நடத்தியுள்ளோம். எனவே எனக்கு நாமக்கல் மாவட்டத்தில் நடக்கும் இந்த பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலை விரிவாக்கத்திட்டம் பற்றிய கருத்துக்கேட்பு கூட்டம் பங்கேற்பது என்பது எனக்கு தாய் வீட்டுக்கு செல்லும் உணர்வோடும், பல்வேறு நெருக்கடியிலும், அடக்குமுறைகளிலும் எண்ணோடு துணை நின்ற, துணை நிற்கும் தோழர்களை சந்திக்கும் மகிழ்வோடு அங்கு சென்றேன்.

பள்ளிபாளையம் லட்சுமி திருமண மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட கருத்துக்கேட்பு கூட்ட அரங்கத்திற்கு காலை 9.35 மணிக்கு நுழைந்தேன்.. அதற்குள் அங்கு பள்ளிபாளையம் புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்கள் தோழர். வாசு, தோழர். மாணிக்கம் ஆகியோர் முன்னரே வந்திருந்தனர். சிறிது நேரத்தில் பள்ளிபாளையம் செளதாபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும் - தமிழ்மீட்சி இயக்கத்தின் பொதுசெயலாளருமான தோழர்.நந்தகோபால், சிபிஐ (எம்-எல்) விடுதலை அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர் தோழர். கோவிந்தராஜ் அவர்கள் வந்தார். சிறிது நேரத்தில் நாமக்கல் மாவட்டம் முழுக்க இருந்து அனைத்து விவசாயிகள் மற்றும் சமூக நல இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர்களும் தோழர்களும், மாவட்டம் முழுக்க இருந்து பல்வேறு முற்போக்கு அமைப்பு தோழர்களும் வந்தனர். தகவல் தெரிந்த ஆலையால் பாதிக்கப்பட்ட பல்வேறு விவசாயிகளும், பகுதி மக்களும் என 100க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

SPB ஆலையின் வாகனத்தில் ஆலைப்பணியாளர்களான பெண்கள் மற்றும் SPB ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்கள் வந்தனர். மேலும் SPB ஆலைக் குடும்பத்தில் இருந்து கல்லூரிகளில் பணிபுரியும் பெண் பேராசிரியர்களும், ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள கோயில் குருக்களும், கிறிஸ்த்துவ சர்ச் பங்கு தந்தையும் அவர்களின் கோவில் உடையுடன் வந்தனர். ஆலையில் பணிபுரிவோர் குறிப்பாக ஆலையின் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தோர், ஆலையில் ஒப்பந்த அடிப்படையில் லாரி,மற்றும் பல்வேறு காண்ட்ராக்ட் பெற்றுள்ளோர், ஆலையின் நீரை பயன்படுத்தி ஆலையின் துணை நிறுவனமான பொன்னி சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வளர்த்தி கொடுக்கும் சிலர் என 250 க்கும் மேற்பட்டோர் ஆலையினரால் அவர்களது வாகனத்தில் அழைத்து வரப்பட்டனர்.(இதற்கு பல ஆதாரங்களை நாங்கள்வைத்துள்ளோம்). நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி அவர்கள் கூட்டத்திற்க்கு வரும் முன்பே கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேச விரும்புவர் பெயர் பதிவு செய்ய சொன்னார்கள். சுமார் 40 பேர் வரை பேச பதிவு செய்தனர். நான் 12 வது நபராக பதிவு செய்தேன்.

தொழிற்துறை அமைச்சராக இருக்கும் அமைச்சர். தங்கமணி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி இது. நாமக்கல் மாவட்டத்தின் மிகப் பெரிய தொழிற்சாலை இது, தமிழகத்தில் உள்ள பெரிய தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்று. ஆனால் காகித ஆலை விரிவாக்கத் திட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களோ, ஊராட்சி ஒன்றிய தலைவரோ யாரும் கருத்து சொல்ல வரவில்லை. ஆலைக்கு விலை போய் உள்ள சில ஊராட்சி தலைவர்கள் மட்டும் வந்து இருந்தனர்.

பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலை விரிவாக்கத் திட்டம் பற்றிய கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி யாருக்கும் தெரியாமல் நடத்த விரும்பினார்கள். ஆனால், நம்மால் பலருக்கும் கூட்ட செய்தி தெரிவிக்கப்பட்டு விட்டதால், ஊடகத்தினர், சுற்றுசூழல் & விவசாய செயல்பாட்டாளர்கள், பல்வேறு முற்போக்கு அமைப்பினர் என பலரும் வந்து விட்டதால் அரசுக்கும், ஆலை நிர்வாகத்திற்க்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

கருத்துக்கேட்பு கூட்டம் நடந்த அன்று கூட பத்திரிக்கையாளர்களுக்கு அரசால் PRO மூலம் செய்தி சொல்லப்படவில்லை. (22-1-2015 நடக்கும் நலத்திட்ட உதவி பற்றி மட்டும் PRO மூலம் செய்தி கொடுக்கப்பட்டு உள்ளது) மேலும் கருத்துக்கேட்பு கூட்டத்தில் நாங்கள் பங்கேற்கும் செய்தி அறிந்து கூட்ட அரங்கு முன் நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினரும், உளவுத்துறையினரும் குவித்து வைக்கப்பட்டனர். அவர்கள் நடுவே நீந்தியே ஒவ்வொருவரும் கூட்ட அரங்கிற்கு வர வேண்டியதாகியது. கிராமப் பகுதி மக்கள் இவர்களை மிரட்சியுடன் பார்த்தவாறே கூட்ட அரங்கிற்கு வந்தனர். (நெல்லை அம்பாசமுத்திரம் பகுதியில் இவர்கள் 2011 ஆம் ஆண்டு வாங்கிய சன் பேப்பர் மில்ஸ் தற்போது சேசசாயி காகித ஆலை நெல்லை யூனிட் என இயங்குகிறது. அதன் சேசசாயி காகித ஆலை விரிவாக்கத் திட்டம் கடந்த மாதம் நெல்லை ஆட்சியர் அலுவல்கத்தில் 17-12-2014 அன்று காலை 11.00 மணிக்கு நடந்தது. நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ளே உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு கூட அரசால் செய்தி சொல்லப் படவில்லை. கூட்ட நாளில் சென்னையில் இருந்த எனக்கு காலை 10.00 மணிக்கு தகவல் தெரிந்து அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் எப்படி நடந்தது என்பது பற்றி தனி இணைப்பாக தெரிவிக்கிறேன்.)

பள்ளிபாளையம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் நான் கலந்து கொள்வது என முடிவு எடுத்த பின் இணையத்தில் சேசசாயி காகித ஆலை விரிவாக்கத் திட்டம் பற்றி அதன் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, திட்ட அறிக்கை ஆகியவற்றையும் அச்சு எடுத்து அதில் உள்ள பல்வேறு தவறான விபரங்கள் பற்றி சேகரித்துக் கொண்டேன். சேசசாயி காகித ஆலை 1962 முதல் செயல்பாடு வருவதில் ஏற்பட்டு உள்ள பல்வேறு பாதிப்புகள் பற்றியும் தொகுத்துக் கொண்டு கூட்டத்தில் கலந்து கொண்டேன். ஏற்கனவே வெளிநாட்டு கழிவுகளை கொண்டு நடத்தப்படும் கபிலர்மலை சரசுவதி காகித ஆலையை எதிர்த்து உடன் இருந்து 5 ஆண்டு காலம் நடத்திய நாங்கள் நடத்தியமக்கள் போராட்ட அனுபவங்கள், காகித ஆலையில் நடக்கும் சட்டமீறல் செயல்பாடுகள் குறித்து தொகுத்த விபரங்கள் எங்களிடம் இருந்தது.

காலை 10.00 மணிக்கு அனைவரும் வந்து காத்துக் கொண்டு இருக்க, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணா மூர்த்தி அவர்கள் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளருடன் காலை 11.50 க்கு மேடைக்கு வந்தார். அவர்களுடன்.பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலை உரிமையாளர் வி.கோபால ரத்தினம், ஆலை மேலாளர்.காசி விசுவநாதன் ஆகியோரும் உடன் வந்தனர். அவர்கள் வந்தவுடன் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணா மூர்த்தி,பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலை உரிமையாளர் வி.கோபால ரத்தினம், ஆலை மேலாளர்.காசி விசுவநாதன் என வரிசையாக மேடையில் அமர்ந்தனர்.

முதலில் கூட்டத்திற்கு 2 மணி நேரம் காலத்தாழ்வாக வந்தது பற்றி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி அவர்கள் எதுவும் கூறவில்லை. மக்கள் தங்கள் பணிகளை விட்டு வந்து இரண்டு மணி நேரம் காத்திருந்தாலும், அது பற்றி மாவட்ட ஆட்சியர் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கினாலும், அதிகாரிகளின் அடிமைகள்தான் மக்கள் எனக் கருதும் மனநிலையே நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் மனநிலையாக இருந்தது.

கூட்டத்தில் முதலில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் அனைவரையும் வரவேற்று ஆலை விரிவாக்கம் பற்றி சேசசாயி காகித ஆலை மேலாளர்.காசி விசுவநாதன் பேசுவார் என அறிவித்தார். மேடையில் ஆலை உரிமையாளர் அமர்ந்து இருப்பது சட்ட விரோதமானது எனத் தெரிந்தாலும் உடனே இது பற்றி பேச வேண்டாம், இவர்கள் ஆலையின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பவர் பாயிண்டு முறையில் விளக்கிய பிறகு இது பேசலாம் என இருந்தேன். ஆலையின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை சுமார் 30 நிமிட அளவில் ஆலை மேலாளர்.காசி விசுவநாதன் விளக்கிப் பேசி விட்டு மேடையில் சென்று அமர்ந்தார். உடனே நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி அவர்கள் வரிசையாக மக்கள் தனது கருத்துக்களை பதிவு செய்யக் கூறினார்.

உடனே நான் எழுந்து ” சட்ட விரோதமான முறையில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கிறது. யாரை வைத்து எப்படி கூட்டம் நடத்த வேண்டும் என்று சொல்லியுள்ள விதிமுறைகளுக்கு மாறாக, பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலை விரிவாக்க கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கிறது. கூட்டத்தை வழிநடத்தும் மேடையில் காகித ஆலை அதிபர். வி.கோபால ரத்தினம், மேலாளர்.காசி விசுவநாதன் அவர்கள் அமர வைக்கப்பட்டு உள்ளனர். இது மாசுகட்டுப்பாட்டு விதியை மீறுவது” என பல்வேறு ஆதாரங்களை முன் வைத்தேன். மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி அவர்கள் அதை ஏற்காமல் ”ஆதாரங்களை என்னிடம் காட்டுங்கள்” என்றார். நான் கையில் இருந்த மாசு கட்டுப்பாடு வாரிய விதிகள் அடங்கிய நூல் மற்றும் 04-07-2014 உப்பூர் அனல்மின் நிலைய கருத்துக் கேட்பு கூட்டதில் TANGETGO அதிகாரியை விதிமீறி மேடையில் அமர்த்தப்பட்டு இருந்ததை சுட்டிக் காட்டியவுடன் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவரை மேடையை விட்டு இறக்கிய பத்திரிக்கை செய்தி ஆகியவற்றை மேடையில் சென்று ஆட்சியரிடம் காட்டினேன்.

அதன் பின்பும் யோசித்துக் கொண்டு இருந்தஎதுவும் பேசாமல் இருந்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி அவர்களிடம் ”அரசின் சட்ட விதிகளை மாவட்ட ஆட்சியர் மதித்து நடக்க வேண்டும், காகித ஆலை உரிமையாளர் வி.கோபால ரத்தினம், ஆலை மேலாளர்.காசி விசுவநாதன் ஆகியோர் கூட்டத்தை வழிநடத்தும் மேடையில் அமரும் தகுதியில் இல்லாதவர்கள். அவர்கள் ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கு அதிபதியாக இருப்பதால் மேடையில் அமரும் தகுதி வந்து விடாது.“ எனக் கூறினேன். மேலும் ”வேர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகள்,பொதுமக்கள் கீழே அமர்ந்துள்ளனர். சுற்றுசூழல் அனுமதி கேட்டுள்ள திட்டத்திற்க்கு சொந்தக்காரர் அல்லது திட்டத்தின் மீது கட்டுப்பாடு உரியவர்கள் பொதுமக்கள் போல்தான் அமர்ந்துதான் கருத்துக் கேட்பு கூட்ட்த்தில் பங்கேற்கலாம் என்பது மாசு கட்டுப்பாடு வாரிய விதி” என்று நான் கூறியவுடன்... வேறுவழியின்றி ஆலை அதிபர்.வி.கோபால ரத்தினம், ஆலை மேலாளர். காசி விசுவநாதன் ஆகியோர் மேடையை விட்டு கீழே இறங்கி, பொதுமக்களுடன் வந்து அமர்ந்தனர்.

முதலில் ஆலைக் குடியிருப்பில் இருந்து KSR கல்லூரிக்கு வேலைக்கு செல்லும் ஒரு பெண்மணி ஆலையை ஆதரித்து விரிவாக பேசினார். பின்பு தமிழ்மீட்சி இயக்கத்தின் பொதுசெயலாளரும், செளதாபுரம் ஊராட்சி முன்னாள் தலைவருமான தோழர். நந்தகோபால் அவர்கள் ”காகித ஆலையின் கழிவுநீரை பாப்பம்பாளையம், ஓடப்பள்ளி,கொக்கராயன்பேட்டை ஊராட்சி பகுதிக்கு கொண்டு சென்று விவசாயம் செய்வதாலும், ஆலை அமைந்துள்ள ஓடப்பள்ளி ஊராட்சி பகுதியிலும் நிலத்தடி நீர், கிணறு என அனைத்தும் கெட்டுப்போய் விட்ட்து. இப்பகுதி நீரை தொடர்ந்து அருந்தியதால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மலட்டு தன்மை ஏற்பட்டு விட்டது. கடந்த மாதம் இப்பகுதிக்கு வருகை தந்த சட்டமன்ற ஆய்வுக் குழுவிடம் இப்பகுதி மக்கள் இங்குள்ள நீரை தொடர்ந்து அருந்தியதால் மனிதர்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு உள்ளது என மருத்துவரின் சான்றிதழைப் பெற்று புகார் கொடுத்து உள்ளனர். மேலும் புற்றுநோய், ஆஸ்துமா என பல்வேறு நோய்களில் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியக் கூட்டத்தில் இப்பகுதியில் காகித ஆலையால் பல்வேறு உடல்நலம், சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது என தீர்மானம் போட்டு உள்ளனர். நான் சவால் விட்டு சொல்கிறேன், இங்குள்ள பகுதியில் உள்ள நிலத்தடி நீரை தொடர்ந்து இரண்டு மாதம் எந்த அதிகாரியாவது அருந்தினால் ரூபாய் ஒரு லட்சம் பரிசாக தருகிறேன் என தெரிவித்தார்.

மேலும் காகிதஆலை கழிவு நீரால் பாசனம் செய்யப்படும் இப்பகுதியில் கரும்பு பயிர் மட்டும்தான் பயிர் செய்ய முடியும். மஞ்சள், நெல் என வேறு எவ்வித பயிரும் பயிர் செய்ய முடியாது. மண் இறந்து கொண்டு உள்ளது. மேலும் காவிரி ஆற்றை ஒட்டியுள்ள இப்பகுதியில் குடிநீர் ஆதாரங்கள் அழிந்ததை மாவட்ட நிர்வாகம் கண்டு கொல்லவில்லை. இப்பகுதியில் காகிதஆலை கழிவு நீரைக் கொண்டு விவசாயம் செய்து பலன் பெறும் சிலருக்கு வேண்டுமானால் இது நல்லதாக இருக்கலாம். ஆனால் இப்பகுதியில் குடியிருந்து வரும் விவசாய தொழிலாளர்களான தாழ்த்தப்பட்ட மக்களும், வேறு தொழில் செய்யும் மக்களும், மற்ற விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சேஷசாயி காகித ஆலை கழிவுநீர் ஆற்றில் கலப்பதால், நீர் விசமாக மாறி காவிரி நீரைக் குடிக்கும் சுமார் 15 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமும் விசமாகி கொண்டு உள்ளது என ஆணித்தரமான வாதங்களை முன் வைத்தார்.

உடனே மாவட்ட ஆட்சியர் ஆலை நிர்வாகத்தினரைப் பார்த்து பதில் சொல்லுங்கள் எனக் கூறினார். ஆலை உரிமையாளர் எழுந்து “அனைத்து ஊர்களுக்கும் ஆலை சார்பாக குடிநீர் குழாய் போட்டு வழங்கிக் கொண்டு உள்ளோம்” எனக் கூறினார். உடனே நந்தகோபால் எழுந்து ”நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு உள்ளீர்கள். நான் சொல்ல வந்தது இயல்பாக கிடைத்துக் கொண்டு இருந்த நீர் ஆலையால் கெட்டுப் போய் விட்டது’ என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே மாவட்ட ஆட்சியர் ”உங்களுக்கு மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு இருப்பீர்களா, பேசியது போதும், எதற்காக மற்ற மாவட்டங்களை பற்றி இங்கு பேசுகிறீர்கள் உட்காருங்கள்”என்றார். உடனே ஆலையை சேர்ந்த பணியாளர்கள் என்ற போர்வையில் உள்ள அடியாட்கள் உட்கார், உட்கார், பேசாதே என சப்தம் போட்டும், அவர் அருகில் வந்து நின்று அவரை அடிப்பது போல் அச்சுறுத்தினர். அவர் அதற்கும் மிரண்டு போகாமல் சிறிது நேரம் பேச முயற்சித்தார். ஆலை சேர்ந்த பணியாளர்களின் கடுமையான சத்தத்தால் அவர் பேச முடியாமல் அமர்ந்தார். ஆட்சியர் இதை கட்டுப்படுத்த எந்த ஒரு முயற்சியையும் மேற் கொள்ளவில்லை.

காவிரி ஆற்றங்கரையில் உள்ள சேஷசாயி காகித ஆலை மீது கடந்த பல ஆண்டுகளில் ஏற்கனவே அடுத்தடுத்து எண்ணற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. ஆனால் ஆலை நிர்வாகம் தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் வேலை, பணம், காண்ட்ராக்ட், பற்றும் பல சலுகைகள் கொடுத்து கட்டுக்குள் கொண்டு வருவது மற்றும் வறட்சியான பகுதி விவசாயிகளுக்கு கழிவு தண்ணீரை பைப் லைன் மூலமாக விவசாய நிலங்களுக்கு ஆலை நிர்வாகமே போட்டுக் கொடுத்து தனக்கு வரும் எதிர்ப்பை சமரசம் செய்வது, எதற்க்கும் மயங்காத சிலரை வலிமையான செல்வாக்குள்ளவர்களை வைத்து அச்சுறுத்துவது என சாம, பேத, தான, தண்ட எனும் பல வழிகளில் தனக்கு வரும் எதிர்ப்பு அனைத்தையும் சரிகட்டி வந்தது.

இந்நிலையில் கருத்துக் கேட்புக் கூட்டம் யாருக்கும் தெரியாமல் ஆலைக்கு சாதகமான நபர்களை வைத்து மட்டும் நடத்தி விடலாம் என ஆலை நிர்வாகம் காத்திருக்க, பல்வேறு முற்போக்கு அமைப்புகளும், விவசாய அமைப்புகளும், ஊடக செய்தியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே ஆலை நிர்வாகத்திற்கும், அவர்களுக்கு துணை நிற்கும் அரசு அதிகாரிகளுக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் ஆலையின் விரிவாக்கம் குறித்த கருத்து கேட்பு கூட்டம் அரசால் நடத்தப்பட்டது. இதில் காகித ஆலைக்கு ஆதரவாக பேசியவர்கள் எவ்வளவு நேரம் எடுத்து பேச மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப் பட்டனர். அதே நேரம் காகிதஆலைக்கு எதிராக பேசியவர்கள், காகிதஆலையின் முறைகேடுகளை, பாதிப்புகளை கூட்டத்தில் சுட்டிக் காட்டியவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரால் பேச்சை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், குறுக்கீடு செய்து பேசியும் கட்டாயமாக நிறுத்தப்பட்டனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு ஆலை முதலாளிக்கு ஆதரவான கருத்துரிமையை பறிக்கும் ஒரு மாபெரும் ஜனநாயப் படுகொலையாகவும் அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமையை மறுப்பதாகவும் இருந்தது.

நான் 12 வது நபராக கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டேன். நாம் முதலில் ஆலைக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ள முறையைப் பற்றி பேசினேன். திட்டம் நிறைவேற்றும் பகுதியில், பாதிப்புக்கு உள்ளாகின்ற ஊராட்சி/பேரூராட்சி/மாநராட்சி மன்ற தலைவர்களுக்கும், ஏற்கனவே திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு பாதிப்புக்குள்ளாகி வரும் பகுதியில் உள்ள ஊராட்சி/பேரூராட்சி/மாநராட்சி மன்ற தலைவர்களுக்கும் கருத்துக் கேட்பு கூட்டம் பற்றிய தகவல் அரசால் அனுப்பப்படவில்லை. இதனால் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றி ஆலையை சுற்றி 10 கி.மீ தூரத்தில் உள்ள 7லட்சம் மக்களில் யாருக்கும் தெரியவில்லை. மேலும் ஆலை மேம்பாட்டு திட்டதிற்கான சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஊராட்சி மன்ற அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எங்கும் வைக்கப்படவில்லை. இது மாசுகட்டுப்பாட்டு விதியை மீறுவதாகும். இவ்வாறு செய்யாமல் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துவது என்பது மிகவும் தவறானது ஆகும்

2010 ஆம் ஆண்டில் உ.சகாயம் அவர்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த போது பெருங்குறிச்சி ராசி இரும்பு தொழிற்சாலை, கபிலர்மலை சரசுவதி காகித ஆலையில் 15 MWஅனல்மின் நிலையம் அமைப்பது பற்றிய கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இவை பற்றி நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க, கருத்துக் கேட்பு கூட்டம் நடப்பது பற்றி ஆலையால் பாதிக்கப்படும் பகுதியில் உள்ள மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அனைத்து ஊர்களிலும் பிளக்ஸ் தட்டி, சுவரொட்டி, துண்டறிக்கை ஆகியவை மூலம் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது பற்றி அரசு பரப்புரை செய்வது போல் பரப்புரை செய்யப்பட்டது. கருத்துக்கேட்பு கூட்டமும் பெருவாரியான மக்கள் பங்கேற்கும் வகையில் ஆலையால் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதியிலேயே நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் இப்படி கூட்டங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டு இருக்கிறது. கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவதற்கு ஆலை நிர்வாகம் அரசுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை முன்கூட்டியே கட்டி விடுகிறது. அப்படியிருக்க அதிகாரிகள் ஏன் மக்களுக்கு கூட்டம் பற்றி தெரியப்படுத்த முயற்சி எடுக்கவில்லை.

மேலும் கடந்த 27-06-2014 அன்று திருவாரூர் மாவட்ட்தில் ஆட்சியர் நடத்திய ONGC நிறுவனம் 20 எண்ணைக் கிணறுகள் அமைக்கும் கருத்துக் கேட்பு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது.அதில் நாங்கள் பங்கு கொண்டு திட்டம் நிறைவேற்றும் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், ஏற்கனவே திட்டம் நடைமுறைப்படுத்தும் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் கருத்துக்கேட்பு கூட்டம் பற்றிய தகவல் அனுப்பப்படவில்லை.

ஏற்கனவே திட்டம் நடைமுறைப்படுத்தும் பகுதியான, பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகியுள்ள அடியாதிமங்கலம், கமலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தகவல் அனுப்பப்படவில்லை. இது மாசுகட்டுப்பாட்டு விதிபடி தவறானது. எனவே இந்த கூட்டத்தை ரத்து செய்து விட்டு முறையாக அரசு விதிப்படி மக்களுக்கு அறிவிப்பு செய்தே நடத்த வேண்டும்.

mukilan namakkal

திருவாரூர் ஆட்சியர் நடத்தும் கருத்துக்கேட்பு கூட்டமானது, திட்டம் வரும் பகுதியில் நடத்தாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்துவது கூடாது, இது தவறானது என்றும் ONGC நிறுவனம் எண்ணைக் கிணறுகள் அமைக்கும் பகுதியில் மட்டுமே இதை நடத்த வேண்டும். ஈரோடு -பெருந்துறை சிப்காட் நச்சு கழிவு மேலான்மைத்திட்டம், நாமக்கல் -பெருங்குறிச்சி ராசி இரும்பு தொழிற்சாலை , கபிலர்மலை - சரஸ்வதி காகித ஆலையின் பவர் பிளான்ட் திட்டம் போன்றவை ஆலை அமையும் பகுதியிலேயே எங்களின் போராட்டத்தால், பல்லாயிரம் மக்கள் பங்கேற்புடன் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது என பல்வேறு ஆதாரங்களை முன் வைத்துப் அங்கு பேசினேன்.

மேலும் கருத்துக் கேட்பு கூட்டம் நடக்கும் முன்பே திட்ட அறிக்கைகள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.இங்கு அவ்வாறு வைக்கப்படவில்லை என்றும், இது பொதுமக்களும் , சமூக முன்னணியினரும் ஆலையின் செயல்பாட்டை தெரிந்து அதன் மீது கருத்து தெரிவிக்கும் உரிமையை மக்களிடம் பறிப்பது எனவும் பேசினேன்.எனவே இந்த கருத்து கேட்ப்பு கூட்டத்தை ரத்து செய்து மீண்டும் திட்டம் நிறைவேற்றும் பகுதியில் நடத்த வேண்டும் எனப் பேசினேன்.. இதை கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மக்களும், தலைவர்களும் மிகவும் கடுமையாக வலியுறுத்தினர்.

மேலும் கருத்துக் கேட்பு கூட்டம் பற்றிய செய்தியை செய்திதாளில் விளம்பரம் மட்டும் கொடுப்பதோடு நிறுத்தாமல், , போலியோ சொட்டு மருந்து கொடுப்பது பற்றி வாகனங்களில்ஒலிபெருக்கி வைத்து விளம்பரம் செய்வது போலவும், மேலும் சுவரொட்டிகள் ஒட்டியும், அனைத்து ஊர்களில் பதாகை வைத்தும் விரிவான வகையில் விளம்பரம் செய்ய வேண்டும் எனப் பேசி, இது போல் ஏற்கனவே நாமக்கல் மாவட்டத்தில் திரு.சகாயம் ஆட்சி தலைவராக இருந்த போது இது போல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது எனத் தெரிவித்து பேசினேன்.

மக்களின் கருத்தை ஏற்றுக் கொண்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ONGC நிறுவனம் அமைக்க இருக்கும் 20 எண்ணைக் கிணறுகள் அமைக்கும் கருத்துக் கேட்பு கூட்ட்த்தை ரத்து செய்தார். அது போல் இங்கும் கூட்ட்த்தை ரத்து செய்து விட்டு மீண்டும் நடத்த வேண்டும் எனக் கூறினேன். ஆனால் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி அவர்கள் இது எதற்கும் பதில் சொல்லாமல் சீக்கிரம் பேசி முடியுங்கள் என்றார்.

இரண்டாவதாக, திட்டதிற்கான சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் ஆலை நிர்வாகம் எந்த ஒரு நிலையிலாவது ஒரு பகுதி தகவல்கள் பொய்யானதாகவோ, தவறான புள்ளிவிபரங்களோகொடுத்து இருந்தால் ஆலையின் திட்டம் நிராகரிக்கப்படும் என மாசுகட்டுப்பாடு வாரியம் தனது விதியில் கூறி உள்ளது.

ஆலையின் சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் எண்ணற்ற தவறான தகவல்களும், புள்ளிவிபரங்களும் உள்ளது.

ஆலைவளாகத்தின் சுற்றுசூழல் நிலவரம் என்பதில் காகித ஆலையின் 10 கி.மீ தூர சுற்றளவு பகுதியில், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம்; சமய முக்கியத்துவம் வாய்ந்த இடம்;சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடம்; சரணாலயங்கள்; மலைகள் ஆகிய எதுவும் இல்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஆனால் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த- சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரி கோட்டை, திருச்செங்கோடு மலை, 730 ஆண்டுகள் வரலாறு கொண்ட பவானி காளிங்கராயன் அணைக்கட்டு, பூந்துறை சமணர் கோவில் ஆகியவை உள்ளது.

சமய முக்கியத்துவம் வாய்ந்த- பவானி சங்கமேசுவரர் ஆலயம், திருச்செங்கோடு அர்த்தனாரீசுவரர் ஆலயம், கொடுமுடி மகுடீசுவரர் ஆலயம், ஈரொடு மாரியம்மன் ஆலயம், பல்வேறு குல தெய்வ கோவில்கள் உள்ளது.

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த- பவானி கூடுதுறை, ஜேடர்பாளையம் அணைக்கட்டு, திருச்செங்கோடு அர்த்தனாரீசுவரர் மலை, கொடுமுடி மகுடீசுவரர் கோவில் உள்ளது.

சரணாலயங்களில், அருகாமையில் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. மலைகளில், பவானி பெருமாள் மலை, மற்றும் திருச்செங்கோடு மலை, சங்ககிரி மலை ஆகியவை உள்ளது.

ஆலை நிர்வாகம் இந்த அறிக்கையில் பல்வேறு தவறான தகவல்களை கொடுத்து உள்ளது. எனவே அமைவிடம் பற்றி கொடுத்துள்ள தவறான தகவல்கள் அடிப்படையில் ஆலையின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும். ஆலைக்கு விரிவாக்க திட்டத்திற்க்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்றும் கூறினேன். உடனே நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஏன் இதையெல்லாம் பேசிக் கொண்டு உள்ளீர்கள் ஆலை வேண்டுமா, வேண்டாமா என்பதை மட்டும் கூறுங்கள் என எவ்விதப் பொறுப்பும் இன்றி பேசினார்.

மூன்றாவதாக, சேசசாயி காகித ஆலை தனது நீர் நிர்வாகமாக, பல ஆண்டுகளுக்கு முன்பே காவிரி ஆற்றில் நாளொன்றுக்கு 6, 81,91,000 லிட்டர் (ஆறு கோடியே எண்பத்தி ஒரு லட்சத்தி தொன்னூற்றி ஒரு ஆயிரம் லிட்டர்) நாள் ஒன்றுக்கு எடுத்துப் பயன்படுத்த ஆலை நிர்வாகம் அனுமதி பெற்றுள்ளது. -

சேசசாயி காகித ஆலை தற்போது 3,70,00,000 லிட்டர் நாள் ஒன்றுக்கு எடுத்துப் பயன்படுத்தி வருகிறது. ஆலை விரிவாக்கத்திற்குப் பின் தினமும் 4,45,00,000 லிட்டர் நாள் ஒன்றுக்கு எடுத்துப் பயன்படுத்துவோம் எனக் கூறுகிறது.

காகித ஆலை ஆலைக்கு தேவையின்றி தினமும் பல கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க காவிரி ஆற்றில் பெற கடந்த காலத்தில் கொடுத்துள்ள அனுமதியை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும்.

காகித ஆலை ஆலைகழிவு நீரை சுத்தப்படுத்தி ஜீரோ சதவிகித டிஸ்சார்ஜ் மட்டுமே செய்வதாக சொல்லியிருப்பதால், ஆலை தனது கழிவு நீரை விவசாயிகளின் நிலத்தில் விடாமல் ஆலையின் காகித உற்பத்திக்கே மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கடந்த ஜனவரி’18-ஆம் தேதி தமிழக சுற்றுசூழல் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் அவர்கள் ஈரோட்டில் பேசும் போது காவேரி ஆற்றில் இருந்து இனிமேல் பெருந்துறை சிப்காட்டிற்கு தண்ணீர் எடுக்க மாட்டோம். சிப்காட்டில் ஜீரோ சதவிகித டிஸ்சார்ஜ் அளவிற்கு தண்ணீர் சுத்திகரிப்பு நடப்பதால் இனிமேல் காவேரி ஆற்றில் ஆவியாகும் 10 சதவிகித தண்ணீர் மட்டுமே எடுக்கப்படும்.சிப்காட் ஆலைக்கு தனது கழிவுநீரை மட்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார். எனவே சொந்தமாக சுத்திகரிப்பு ஆலை அமைத்துள்ள காகித ஆலையில், ஆவியாகும் நீரை மட்டும்தான் தினமும் காவேரி ஆற்றில் எடுக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் காவிரியில் சுமார் 400 டிஎம்சி க்கு மேல் தமிழகத்திற்கு கிடைத்து வந்தது. ஆனால் 2007-இல் காவிரி நடுவர் மன்றம் 205 டிஎம்சி என அறிவித்தும் கூட, நமக்கு கர்னாடக அரசு காவிரியில் தனது நாட்டில் தேக்கி வைக்க முடியாத நீரை மட்டும் அளித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஆலைக்கு தேவையின்றி கொடுக்கப்பட்டு வரும் நீரை உடனே ரத்து செய்ய வேண்டும்.

மேலும் காகித ஆலை மானாவாரி பாசனமாக இருந்த விவசாயிகளின் நிலத்தில் கடந்த 1984 முதல் தனது ஆலைக் கழிவு நீரை விட்டு வருவதை உடனே நிறுத்த வேண்டும். பயன்பாட்டு உரிமை என்ற அடிப்படையில் மானாவாரி பாசனமாக இருந்த விவசாயிகளின் நிலத்திற்கு, நீரேற்று பாசன திட்டத்தை நடைமுறைப் படுத்தி நேராக காவிரி ஆற்றுநீரை எடுத்து சுத்தமான நீரைத்விவசாயத்திற்கு தர வேண்டும். அதையும் காகித ஆலை தனது செலவில் உடனே செய்து தர வேண்டும்.

1962- முதல் இப்பகுதி மக்களின் வாழ்க்கையை அழித்து, குடிநீர் ஆதாரங்களை அழித்து,மக்கள், கால்நடைகளின் உடல்நலத்தை அழித்து, விவசாயத்தை அழித்து, மிக மோசமான கெட்ட வாடை(அழுகிய முட்டை நாற்றம்) ஏற்படுத்தி, காற்றை மாசுபடுத்தியும் கரியையும், சாம்பலையும் இப்பகுதி முழுக்க பரவ விட்டு ஆஸ்துமாவையும் உடன் பரப்பியுள்ளது. நிலக்கரியை எரித்து அனல் மின்சாரம் எடுப்பதால் பரவலாக பாதரசத்தை இப்பகுதி முழுக்க பரவ விடப்பட்டு உள்ளது. இதன் மூலம் புற்றுநோய் பாதிப்பு, அனைத்து குடும்பங்களிலும் நிலவி வருகிறது. பாய்லரில் இருந்து திடீர், திடீர், என வெளியேற்றப்படும் சுண்ணாம்பு துகள்களை, கரித்துகளை சுவாசிப்பதால் மூச்சுதிணறல், ஆஸ்துமா, அலர்ஜி, அரிப்பு மலட்டுதன்மையும் ஏற்பட்டு உள்ளது. இன்குள்ள பாய்லரில் இருந்து வெளியாகும் வெள்ளை புகையில் உள்ள கார்பன் மோனாக்சைடு வாய்வால் பல்வேறு நோய் ஏற்பட்டு உள்ளதாக மக்கள் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவிடம் ஏற்கனவே புகார் கொடுத்து உள்ளனர்.

வெப்ப காற்றை வான்வெளியில் உயரமான புகைபோக்கி(சிம்னி) மூலம் ஆலை வெளியிட்டதால் இப்பகுதியில் மேகங்கள் ஒன்றுகூட முடியாமல் போய் மழை பொழிவது என்பது மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மனசாட்சியே இல்லாமல் தொடர்ந்து ஆலைக் கழிவைக் ஆற்றில் திறந்து விட்டதால் 15 மாவட்ட மக்களின் வாழ்வை நாசமாக்கியும் , மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகளையும், மலட்டுத்தன்மையையும் மட்டும் ஏற்படுத்தி விட்டு, ஆலை நிர்வாகம் மட்டும் பல்லாயிரம் கோடி ருபாயை இதுவரை லாபம் ஈட்டியுள்ளது. நான் பொறியியல் படிக்கும் போது இதே ஆலைக்கு கல்லூரியால் அனுப்பப்பட்டு நேரடியாக 2 மாதம் பயிற்சியில் கலந்து கொண்டவன், இப்பகுதியிலேயே சில ஆண்டுகள் குடியிருந்தவன் என்ற முறையிலும், ஆலையின் பாதிப்பை நேரில் உணர்ந்தவன் என்ற முறையிலும், தஞ்சை விவசாயிகளுக்கு சேரவேண்டிய இந்த தண்ணீரை, ஆலை நிர்வாகம் எடுப்பதை தவிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும்.

சேசசாயி காகித ஆலை நிர்வாகம் இதற்கு ஒரு பரிகாரமாக காவிரி ஆற்றுநீரை நீரேற்று பாசன திட்ட அடிப்படையில் எடுத்து சுத்தமான நீரை மட்டுமே விவசாயிகளுக்கு தர வேண்டும். ஆலை இதை உடனே செய்ய வேண்டும். சேசசாயி காகித ஆலை தனது திட்ட அறிக்கையில், திட்டவளாகத்தை சுற்றியுள்ள பகுதியில் சமூக பொருளாதார மேலாண்மை செய்ய(சிஎஸ்ஆர்) திட்ட மதிப்பில் 5 விழுக்காட்டு தொகையை மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்து உள்ளது. எனவே விவசாயிகளுக்கு சுத்தமான காவிரி நீரை வழங்குவது ஒன்றும் ஆலைக்கு ஒரு பெரிய விசயமில்லை. ஆலை இனிமேல் ஆவியாகும் நீர் அளவிற்கு மட்டுமே ஆற்றில் இருந்து நீரை எடுத்துப் பயன்படுத்த வேண்டும். ,இதைக் கண்காணிப்பதற்க்கு அதிகாரிகள் மட்டும் அல்லாமல் சமூக அக்கறை கொண்டவர்களைக் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்றேன். உடனே ஆட்சி தலைவர் உங்கள் படிப்பை பற்றி எல்லாம் யார் கேட்டார்கள், நீங்கள் பேச்சை முடிக்காமல் உள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டு உள்ளீர்கள்.பேச்சை உடனே முடியுங்கள் என்றார். உடனே ஆலையை சேர்ந்த பணியாளர்கள் என்ற போர்வையில் உள்ள அடியாட்கள் உட்கார், உட்கார், பேசாதே, போதும் பேசியது என சப்தம் போட்டனர்.

உடனே நான் நீங்கள் சத்தம் போட்டு சொல்வதால் எனது பேச்சை முடிக்க முடியாது. இங்கே கலந்து உள்ளவர்கள் 400 பேரில் யாருக்கும் ஆலையின் திட்ட அறிக்கை பற்றி எதுவும் தெரியாது. ஏனெனில் எந்த ஊராட்சிக்கும் இந்த அறிக்கை அனுப்பப்பட்டு மக்களின் பார்வைக்கு அது வைக்கப்பட்டதில்லை. கூட்டத்தில் மக்கள் பொதுவாக ஆலை வேண்டும் அல்லது வேண்டாம் என சொல்வார்கள். நான் அறிக்கையை ஒவ்வொரு பக்கமாக படித்து பல்வேறு பிரச்சினைகளை தொகுத்து உள்ளேன். அறிக்கையில் உள்ள ஒவ்வொறு தலைப்பிலும் உள்ள பிரட்சினைகளை, தவறுகளை முன் வைத்து நான்தான் பேச முடியும். மாசு கட்டுப்பாட்டு விதி எதிலும் 10 நிமிடம் மட்டுமே ஒருவர் பேச வேண்டும் என்ற விதி எதுவும் குறிப்பிடவில்லை. நான் 20 க்கும் மேற்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கு கொண்டு உள்ளேன், அதில் எங்கும் இப்படி செய்தியை பேசப் பேச பேசாதே என எந்த அதிகாரியும் சொன்னது இல்லை. நான் இந்த கூட்டத்திற்கு தொடர்பு இல்லாத செய்திகளை பேசி நேரத்தை வீணடித்தால் சுட்டிக் காட்டுங்கள் என்றவுடன் ஆலையின் அடியாட்கள் உட்கார், உட்கார், போதும் பேசியது, நாங்கள் பேச வேண்டும், நாங்கள் பேச வேண்டும் என தொடர்ந்து சப்தம் போட்டுக் கொண்டே இருந்தனர். நான் மாவட்ட ஆட்சிதலைவரைப் பார்த்து ”நீங்கள் 10.00 மணிக்கு தொடங்க வேண்டிய கூட்டத்திற்க்கு 12.00 மணிக்கு என இரண்டு மணி நேரம் காலதாமதமாக வருகிறீர்கள். ஆலையின் பிரட்சினைகளை, ஆரோக்கியமாக கருத்துகளை முன் வைப்பவர்களை பேசக் கூடாது என அடக்குகிறீர்கள். இதற்கு நான் கட்டுப்பட மாட்டேன். சட்டத்தை மீறி நான் நடந்தால் சுட்டிக் காட்டுங்கள். நான் சட்டப்படி நடக்கிறேன். உங்களையும் சட்டப்படி நடங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆலையின் ஆட்கள் போடும் காட்டு சத்தத்திற்கும், மிரட்டலுக்கும் எல்லாம் பயப்படுபவனோ, அடங்கி போகின்றவனோ அல்ல நான். நான் ஆட்சியரிடம் பேசிக் கொண்டு உள்ளேன்” என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே பரமத்தி வேலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருட்டிணன், திருசெங்கோடு ரூரல் காவல்துறை ஆய்வாளர் லட்சுமண குமார், பள்ளிபாளையம் காவல்துறை ஆய்வாளர் ராஜு , காவல்துறை துணை ஆய்வாளர் அன்பழகன் உட்பட 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் என்னை சூழ்ந்து நின்று கொண்டு என் கையில் இருந்த ஒலிபெருக்கி(மைக்)யை பிடுங்க முயற்சித்தனர். நான் மாவட்ட ஆட்சியரைப் பார்த்து ”நீங்கள் செய்வது அப்பட்டமான சட்டவிரோதம், எனது கருத்து உரிமையை பறிப்பது, இதற்கு நான் உடன்பட மாட்டேன். என்னிடம் உள்ள மைக்கை நீங்கள் பிடுங்க நினைத்தால் அது நடக்காது. என்னை கைது செய்தோ, என்னை தாக்கி நினைவிழக்கச் செய்தோ வேண்டுமானால் ஒலிபெருக்கி(மைக்)யை பிடுங்கலாம். என்னிடம் உணர்வு இருக்கும் வரை உங்களின் அடக்குமுறைக்கு நான் அடிபணிய மாட்டேன்” என ஆட்சியரைப் பார்த்து சத்தமிட்டேன். காவல்துறையினரால் என்னிடம் இருந்த ஒலிபெருக்கி(மைக்)யை நான் இறுகப் பற்றிக் கொண்டு போராடியதால் பிடுங்க முடியவில்லை. உடனே காவல்துறையினருக்க உதவ ஆலையின் அடியாட்கள் ஓடி வந்தனர்.

நான் காவல்துறையினரைப் பார்த்து ”அவர்கள் (ஆலையின் அடியாட்கள்) யாரும் என் அருகில் வர நீங்கள் விடக் கூடாது, நான் மாவட்ட ஆட்சியரிடம் பேசிக் கொண்டு உள்ளேன். மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு உள்ளேன்” எனப் பேசியதை எல்லாம் காவல்துறை அதிகாரிகள் காது கொடுத்தே கேட்கவே இல்லை. ஆலையின் அடியாட்கள் காவல்துறையினருடன் சேர்ந்து கொண்டு என்னிடம் இருந்த ஒலிபெருக்கி(மைக்)யை பிடுங்க முயன்றனர். உடனே எனக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பு தோழர்களும் என்னை பாதுகாக்க ஓடோடி வந்தனர். நான் அவர்களிடம் யாரும் என் அருகில் வராதீர்கள். அவர்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளட்டும், நான் பார்த்துக் கொள்கிறேன். உங்களை ஏதாவது கூறி அரங்கத்தில் இருந்து வெளியேற்றி விட்டால், ஆலையை எதிர்த்து கருத்துக்கள் எதுவும் பதிவாகாது, கருத்துக் கேட்புக் கூட்டம் காகித ஆலைக்கு சாதகமாக எளிமையாக முடிந்து விடும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே காவல்துறையினரும், ஆலையின் அடியாட்களும் என்னிடம் இருந்த ஒலிபெருக்கி(மைக்)யை பிடுங்க என்னை இழுத்துக் கொண்டே அரங்கத்தின் வெளிப்புற கதவு வரை சென்றனர். அரங்கம் முழுவதும் ஒரே கூச்சலும், குழப்புமாக இருந்தது.

mukilan namakkal

நான் என்ன ஆனாலும் சரி எதிர்கொள்வோம் என்ற மன உறுதியோடு இருந்தேன். இப்படி ஏதாவது செய்வார்கள் என எதிர்பார்த்து இருந்ததால் எந்த பதட்டமும் என்னிடம் இல்லை. காவல்துறையினரும், ஆலையின் அடியாட்களும் சேர்ந்து என்னை இறுக்க கட்டிப் பிடித்து என்னிடம் கையில் இருந்த மைக்கை உடைத்தனர். ஒலிபெருக்கி(மைக்)யின் ஒரு பாகம் அவர்களிடமும், மற்றொரு பாகம் என்னிடமும் இருந்தது. எனது சட்டை சட்டபூர்வமாக செயல்படும் காவல்துறை ரவுடிகளாலும், ஆலையின் ரவுடிகளாலும் என்னைப் பிடித்து இழுத்தால் சட்டை கிழிந்தது. காவல்துறையினரும், ஆலையின் ரெளடிகளாலும் அரங்கின் வாசல்வரை என்னை இழுத்து செல்லப்பட்ட நிலையில், அவர்களிடம் நான் திமிரிக் கொண்டு இருந்த நிலையில் அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த மாவட்ட ஆட்சியர் திடீர் என ஞானம் பெற்று அவரை(முகிலனை) மேடைக்கு அருகே வந்து மீண்டும் பேச சொல்லுங்கள் என ’திடீர் என கருணை மழை’ பொழிந்து அழைத்தார்.

நான் மேடைக்கு அருகே சென்று பேசுவதற்க்காக புதியதாக ஒரு ஒலிபெருக்கியை கையில் வாங்கியவுடன், மாவட்ட நீதிபதி தகுதியில் உள்ள நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தட்சிணாமூர்த்தி அவர்கள் என்னைப் பார்த்து உங்களால் ஒரு மைக்கே உடைக்கப் பட்டு விட்டது என்றார். மேலும் 2 நிமிடத்தில் நீங்கள் சுருக்கமாக உடனே பேசி முடிக்க வேண்டும் என்றார். கடந்த 15 நிமிடங்களுக்கு மேலாக சட்டபூர்வ காவல்துறை ரவுடிகளாலும், ஆலையின் ரவுடிகளாலும் என்னை கடுமையாக தாக்க முயற்சித்தும், என்னை கையைப் பிடுத்தி முறுக்கியும், கையைப் பிடித்து இழுத்தும், அரங்கத்தை விட்டு வெளியேற்ற முயற்சித்தும் அதை எதிர் கொண்டு நான் நின்றதால், கடுமையான உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் அச்சுறுத்தி, சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு இருந்தேன். இந்நிலையில் என்னை பார்த்து மாவட்ட ஆட்சியர் நடந்த நிகழ்வுகள் எதை பற்றியும் கவலைப்படாமல் அவருக்கு இருந்த பொறுப்புகள் இன்றி பேசியது அவருக்கு காகித ஆலையின் உரிமையாளரிடம் எவ்வளவு விசுவாசம் இருந்தது என்பதை பறை சாற்றியது.

நான் மாவட்ட ஆட்சித்தலைவரை பார்த்து நீங்கள் சொல்லும் நேரத்தில் நான் பேசி முடிக்க முடியாது.ஆனால் விரைவில் பேசி முடிக்க முயற்சிக்கிறேன் என்றேன். உடனே மாவட்ட மாசுகட்டுப்பாடு பொறியாளர் நீங்கள் உங்கள் கருத்தை எழுதிக் கொடுங்கள் என்றார். நான் விதிப்படி எழுதியோ அல்லது வாய்வழியாகவோ கருத்தை சொல்லலாம் என்று உள்ளது. மேலும் எழுதுவது அறிவிப்பு செய்திதாளில் வெளி வந்த 30 நாட்களுக்களுக்குள் (18-12-2014)அனுப்ப வேண்டும்.அதற்கான காலம் முடிந்து விட்டது. எனவே நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று கூறி பேசத் தொடங்கினேன்.

நான்காவதாக, காகித ஆலை தனது 40 மெகாவட் அனல் மின் நிலையத்தை 55 மெகாவட் அனல் மின் நிலையமாக திறன் உயர்த்தி, அதிகபடியான மின்சாரத்தை அதை தனது நெல்லை யூனிடுக்கு தர உள்ளதாக அறிக்கையில் கூறி உள்ளது.

இதற்காக வெளிநாடான இந்தோனேசியாவில் இருந்து 1,88,000 டன் அளவில் இருந்து, 2,69,000 டன் அளவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும் என தெரிவித்து உள்ளது.

40 டன் அனல் மின் நிலையத்தில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு சுமார் நான்கரை கிலோ கிராம் பாதரசம்(மெர்குரி) வெளியாகும். பாதரசம் அடர்த்தி அதிகம் உள்ள தனிமம். இது உயரமான புகைபோக்கியில் இருந்து வெளியாகும் போது அதன் எடையின் காரணமாக நிலத்தில் அப்படியே படியும். 1கிராம் பாதரசம் சுமார் 25 ஏக்கர் நிலத்தை பாதிக்கும்.

1 டன் நிலக்கரி எரிக்கும் போது 0.10 மில்லிகிராம் முதல்1 மில்லிகிராம் வரை பாதரசம்(மெர்குரி) வெளியாகும். அதனால் அது காற்றில் பரவி அப்படியே நிலத்தில் படியும்.இதனால் நுண்ணுயிர்கள் முதல் மனிதன், விலங்கு, பறவை, நீர் அனைத்தும் கடும் பாதிக்கப்படும். குறிப்பாக புற்றுநோயை உருவாக்க கூடியது.

எனவே ஆலையானது தனது மின் உற்பத்தியை சூரிய மின்சாரம் மூலமும், காற்றாலை மூலமும் மட்டுமே தனது மின் தேவையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். தமிழக அரசு 3000 மெகாவாட் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய தீவிரமாக பல்வேறு முயற்சி செய்வதாக சொல்லி வருகிறது. மேலும் குஜராத்தை சேர்ந்த் அதானி அவர்கள் குழுமம் சூரிய மின்சாரம் உற்பத்தி செய்ய என தமிழகத்தின் சங்கரன்கோவில் பகுதியில் சுமார் 2000 ஏக்கர் நிலத்தை அரசு விவசாயிகளிடம் பிடுங்கி கொடுக்க முயற்சித்து வருகிறது. அதனால் ஆண்டு முழுக்க நன்கு வெயில் கொளுத்தும் சேசசாயி காகித ஆலையின் நெல்லை யூனிட்டில் சுமார் 300 ஏக்கர் நிலம் சும்மா இருப்பதாக ஆலை நிர்வாகம் கூறியுள்ளது. காகித ஆலையின் நெல்லை யூனிட் பகுதியில் ஆண்டு முழுக்க நன்கு காற்று அடிக்கும், ஏற்கனவே அங்கு எண்ணற்ற காற்றாலைகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே ஆலை தனது மின் தேவையை சூரிய மின்சாரம் மூலமும், காற்றாலை மூலமும் மட்டுமே செய்து கொள்ள வேண்டும்.

எந்த காரணம் கொண்டும் இந்த பகுதி மக்களின் வாழ்க்கையை அழித்து இங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதை நெல்லை யூனிடுக்கு தரும் முயற்சியை செய்ய அனுமதிக்க கூடாது என்றேன். உடனே மாவட்ட ஆட்சியர் நெல்லை ஆலையை பற்றி இங்கே பேசக் கூடாது என்றார். நான் அவர்களின் திட்ட அறிக்கையில் நெல்லை யூனிட்டுக்கு இங்கிருந்து அனல்மின்சாரம் உற்பத்தி செய்து கொண்டு செல்லப்படும் எனக் தெரிவித்து உள்ளனர். அதற்கான மாற்று வழி பற்றி பேசித்தான் ஆக வேண்டும் என்றேன்.

அய்ந்தாவதாக ஆலையின் அமைவிடம் என்பதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது.

காகித ஆலை காவிரி ஆற்றின் கரையிலேயே அமைந்து உள்ளது. ஆனால் அவர்கள் தனது அறிக்கையில் ஆற்றில் இருந்து 0.5 கி.மீ தூரத்தில் உள்ளது எனக் தவறாக குறிப்பிட்டு உள்ளது.

1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதியிட்ட 223 ஆம் எண்ணிட்ட சுற்றுசூழல் வனத்துறையின் அரசாணை அடிப்படியில் காவிரி அதன் கிளை ஆற்றின் கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் எவ்வித அபாயகரமான சிகப்பு வகை ஆலை அமைக்க கூடாது எனக் கூறி தடை விதித்து உள்ளது.

ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு பள்ளிபாளையம் சேசசாயி காகித ஆலையின் துணை நிறுவனமான பொன்னி சர்க்கரை ஆலை சார்பாக திருசெங்கோடு குன்னமலையில் பொன்னி எரிசாரய(மதுபான) ஆலைக்கான கருத்துக் கேட்புக் கூட்டம் மக்களுக்கு தெரியப்படுத்தாமல், ரகசியமாக நடத்தி அனுமதி பெற்று இருந்தது. இதை எதிர்த்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். அவர்கள் சட்டப்படி எதுவும் எங்களால் செய்ய முடியாது என்றனர். முதலில் ஆலையின் பணிகளை மக்களை திரட்டி போராடி நிறுத்தினோம். பின்பு பொன்னி எரிசாரய(மதுபான) ஆலை நிறுவனம் ஆலையை அமைக்க அனுமதி கேட்டு சென்னையில் உள்ள சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு குழுவிற்கு சென்ற போது எங்களுடைய முயற்சியால் காவிரி துணை ஆறான திருமணிமுத்தாறு ஆற்றில் இருந்து மதுபான தொழிற்சாலை அமையும் இடம் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது என்பதை முன்வைத்து சுற்றுசூழல் ஆணையத்தில் அனுமதியை ரத்து செய்ய வைத்தோம்.

எனவே சேசசாயி காகித ஆலை 1962-இல் அமைக்கும் போது சுற்றுசூழல் வனத்துறை, மாசு கட்டுப்பாடுதுறை என்பது போன்ற துறைகளும், பல்வேறு விதிகளும் சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வுகள் இல்லாத நிலை இருந்தது. அதனால் எதை வேண்டுமானாலும் செய்து வந்தார்கள். எனவே அரசின் விதிப்படி இல்லாத காகித ஆலையின் விரிவாக்க திட்ட்த்திற்கு எக்காரணம் கொண்டும் அரசு அனுமதி கொடுக்கக் கூடாது.

மேலும், ஆலையை வைத்து பல்லாயிரம் கோடி ருபாயை லாபம் ஈட்டியுள்ள இந்த நிறுவனம், ஏற்கனவே 54 ஆண்டுகளாக காகித ஆலை இயங்கி இப்பகுதியில் ஏற்படுத்தி உள்ள கடுமையான மாசுபடுத்தலை ஒழுங்குபடுத்த மாவட்ட நிர்வாகம் மிகுந்த கவனம் எடுத்து நடவடிக்கை செய்ய வேண்டும்.

300 கோடி ருபாயை விரிவாக்கத் திட்டத்தில் செலவு செய்யப் போவதாக சொல்லும் இந்த நிறுவனம் மூலம் சுமார் 40 பேருக்கு மட்டுமேதான் வேலைவாய்ப்பு கொடுக்கப்படும் என சொல்லியுள்ளது.

மேலும் ஆலை தனது விரிவாக்கத் திட்டத்திற்க்கு ஆண்டிற்க்கு 2,27,000 டன் என்பதிலிருந்து3,17,000 டன்னாக சுமார் 90,000 டன் மரம் மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் எனக் கூறியுள்ளனர். அதற்கான மரமாக யூக்கலிப்பிடஸ், சவுக்கு ஆகியவை பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே மழை வளம் குறைந்து வரும் நாடாக தமிழகம் இருக்கும் நிலையில் மேகத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சியும், நிலத்தின் அடியாளதில் நீர் இருக்கும் இடம் வரை வேர்கள் சென்று தண்ணீரை உரிஞ்சும் யூக்கலிப்பிடஸ் மரத்தை ஆலையின் தேவைக்காக தமிழகம் முழுக்க நடுவது விவசாயத்தையும், மக்களின் குடிநீர் ஆதாரத்தையும் சுரண்டும் செயலாகும். எனவே எக்காரணம் கொண்டும் ஆலையின் விரிவாகத்திற்க்கு அனுமதிக்க கூடாது.

மேலும் ஆலையின் கழிவு நீர் சுத்திகரிப்பில், உலர் சாம்பல் கையாள்வதில், திடக்கழிவுகளை கையாள்வதில் என காற்று, நீர், மண், வேளாண்மை செயல்பாடு தாவரவளம், விலங்குவளம் உட்பட பல்வேறு கண்காணித்தல் முறைகளில் சமூக –பொருளாதார சுற்றுசூழல்களில் ஆலையின் செயல்பாட்டில் அறிக்கையில் உள்ளது போல் இல்லாமல் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. மேலும் ஆலையின் அருகாமையில் உள்ள மக்களுக்கு இதுவரை எவ்விதமான பேரிடர் மேலாண்மை பயிற்சியும் ஆலையால் கொடுக்கப்படவில்லை.

இன்னும் அறிக்கையில் உள்ள பல்வேறு விபரங்களில் ஆலையின் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டியது இருந்தாலும், மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து எனது பேச்சில் குறிக்கிட்டு பேச்சை முடித்துக் கொள்ளுங்கள் என்கின்ற கட்டாயப்படுத்தியதால் எனது கருத்தை முழுவதும் தெரிவிக்காமலேயே முடித்துக் கொள்கிறேன். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எக்காரணம் கொண்டும் ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதி அளிக்க கூடாது, காவிரியை பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இன்று இங்கு நடந்த கருத்துக் கேட்பு கூட்டம் என்பது முழுக்க, முழுக்க சட்டவிரோதமானதும், ஜனநாயக விரோதமானது ஆகும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் காகித ஆலையின் குறைகளை, காகித ஆலைக்கு மாறுபட்டு பேசுபவர்களின் கருத்தை முழுமையாக பேச விடாமல் பலரையும் அடக்கி நிறுத்தி விட்டார். ஆலைக்கு ஒரு பக்க சார்பாக இக்கூட்டத்தில் செயல்பட்டுள்ளார். இதற்காக சட்ட ரீதியான நடவடிக்கையை அவர் எங்கள் மூலம் எதிர்கொள்ள வேண்டியது இருக்கும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாமக்கல் மாவட்ட அதிகாரிகள் என்றாலே கருத்துரிமையை பறிக்கும், ஜனநாயத்தை மறுக்கும் தன்மையுள்ளவர்கள் என்ற நிலை உள்ளது. ஏற்கனவே எழுத்தாளர். பெருமாள்முருகன் அவர்களின் கருத்துரிமையை பறித்து, அவரை பல்வேறு நெருக்கடிக்கு உள்ளாக்கி அவர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட காரணமாக இருந்தது நாமக்கல் மாவட்ட நிர்வாகம்தான். நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்பாட்டால்தான் எழுத்தாளர். பெருமாள்முருகன் பிரச்சினை இவ்வளவு பெரியதாக மாறியது.

இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சிதலைவர் தட்சிணாமூர்த்தி அவர்கள் தலைமை தாங்கி நடத்திய கருத்துக் கேட்பு கூட்டத்தில், எவ்வித ஜனநாயகப் பண்பும் இல்லாமல் அறிக்கையின் அடிப்படையில் பேசிக் கொண்டு இருந்த என்னை காவல்துறையினரை வைத்து மாவட்ட ஆட்சிதலைவரே ஒலிபெருக்கியை பிடுங்க முயற்சித்ததும், ஆலையின் அடியாட்கள் என்னை ஆட்சிதலைவர் கண்முன்பே தாக்க முயற்சித்ததும், ஆலையின் ரவுடிகள் என்னை அரங்கத்தை விட்டு வெளியேற்ற தூக்கி செல்ல முயற்சித்து முடியாமல் போகவே, இழுத்து சென்றதை ஆட்சிதலைவர் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்ததுக் கொண்டு அமர்ந்து இருந்த்து என்பதும் மிகவும் கண்டிக்கதக்க விசயமாகும். உங்களின் அழைப்பின் பேரில் இங்கு பேச வந்த என்னையும், மற்றவர்களையும் நீங்கள் நடத்திய முறை என்பது

கருத்துரிமையை மறுக்கும் ஒரு ஜனநாய படுகொலையாகும். கடந்த காலத்தில் ஆலைகளின் அடியாட்கள் மூலமும், அரசியல்வாதிகள் மூலமும் எங்களை கொலைசெய்யும் முயற்சி நடந்தபோது கூட அதற்கு சிறிதும் அஞ்சாமல் எதிர்கொண்டு நின்று பிரச்சினையை சந்தித்தவர்கள் நாங்கள். மாவட்ட ஆட்சியர் சேசசாயி காகித ஆலை உரிமையாளர்களுக்கும், ஆலையின் ரவுடிகளுக்கும் துணை நின்று செயல்பட்டதற்க்கு தக்க பதில் சொல்ல வேண்டிய காலம் விரைவில் வரும் என சொல்லி அமர்கிறேன்” என்று பேசி முடித்தேன். அதன் பின்பு பலரும் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசினார்கள்.11,50 மணிக்கு தொடங்கியது சுமார் 03.15 மணியளவில் முடிந்தது.

கருத்துக் கேட்பு கூட்டத்தில், ஆலைக்கு மாறுபட்டு பேசுபவர்களை ஆலையின் ரவுடிகளே சத்தம் போட்டு அடக்குவது, மாவட்ட ஆட்சியரே ஆலைக்கு மாறுபட்டதை பேசாதே என தடுப்பது, ஆலையின் ரவுடிகளின் சத்தத்தை சட்டை செய்யாமல் பேசிக் கொண்டு இருந்தால் தாக்குவது போல் வந்து அச்சுறுத்துவது, ஆலையின் ரவுடிகள் ஆலைக்கு மாறுபட்டு பேசுபவர்களை தாக்க முயற்சிப்பது, காவல்துறையை மாவட்ட ஆட்சியாளரே ஆலையின் அடியாளாக நடத்துவது, காவல்துறையினர் தனது மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டது என சட்டவிரோதமான முறையில் கருத்து கேட்புக் கூட்டம் ஒன்று நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் நடந்த முறைகேடுகளை எதிர்த்தும், காகித ஆலை பாதிப்புகளை விளக்கி மக்கள் மத்தியில் பரப்புரை செய்யவும், சட்டரீதியாக ஆலைக்கு ஆதரவாக செயல்பட்ட நாமக்கல் மாவட்ட ஆட்சிதலைவர் தட்சிணாமூர்த்தி அவர்கள் மீதும், ஆலைக்கு மாறுபட்டு பேசிய பலரையும் தாக்க முயற்சித்த ஆலையின் ரவுடிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவும், ஆலையின் விரிவாக்கப் பணியை தடுத்து நிறுத்துவதற்கான சட்டரீதியான வேலைகளும் நடைபெற்று வருகிறது.

*ஒன்றுபட்டு நீதிக்கான போராட்டத்தை தொடருவோம்!

*சேசசாயி காகித ஆலையின் விரிவாக்கப் பணியை தடுத்து நிறுத்துவோம்!!

*காவிரி ஆற்றை மாசுபடுத்துவதில் இருந்து பாதுகாப்போம்!!!

*அதிகாரவர்க்க அடக்குமுறையை முறியடிப்போம்!!!!

*தாய்மண்ணை பாதுகாப்போம்!!!!!

Pin It