BRICS leaders

ஏகாதிபத்திய போர்கள் : ஐரோப்பாவில் தோன்றி வளர்ச்சியடைந்த முதலாளித்துவமானது தனது சந்தையை விரிவுபடுத்த வேண்டிய தேவையின் அடிப்படையிலும் கச்சாப் பொருள்களை மலிவாகப் பெறுவதன் பொருட்டும் பிற நாடுகளைப் படையெடுத்து தங்களின் காலனிகள் ஆக்கிக் கொண்டன. இதனால் முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக ஆற்றிய முற்போக்கான பாத்திரம் முடிவுக்கு வந்து, ஏகாதிபத்தியம் என்ற ஒட்டுமொத்த உலக சமுதாய வளர்ச்சிக்கு எதிரான, பிற்போக்கான, தனது நாட்டு முதலாளித்துவத்துக்கு மட்டும் சாதகமான பாத்திரத்தை ஏற்றுக் கொண்டது. இந்த ஏகாதிபத்திய முதலாளித்துவமானது தனது நலனிற்காக, ஈவு இரக்கமற்ற, இரண்டு உலகப் போர்கள் மட்டுமன்றி பல்வேறு போர்களையும் நடத்தி கோடிக்கணக்கான மக்கள் உயிர்களை பலிவாங்கிக் கொண்டது. ஆனால் இது பரந்துபட்ட மக்களுக்கு வெளிப்படையாகத் தெரியாதவாறு, ஊடக சாதனங்களை ஏகபோக உடைமையாக்கிக் கொண்டு சனநாயகம், தனிமனித உரிமை, சுதந்திரம் என்ற வார்த்தை வித்தைகளால் ஏமாற்றி வருகிறது.

பல்வேறு ஏகாதிபத்தியங்களின் வளர்ச்சியில் நிகழ்ந்த மாற்றங்களின் விளைவாக அவை புதிய ஒழுங்கமைவைக் கோரின. அதாவது புதிதாக வளர்ச்சியடைந்த ஏகாதிபத்தியங்கள் தங்களுக்கு காலனி நாடுகளின் அதிக பங்கைக் கோரின. ஆனால் ஏற்கனவே அதிக நாடுகளை ஆக்கிரமித்திருந்த ஏகாதிபத்தியங்கள் இதை மறுத்தன. இதனால் காலனி நாடுகளைப் பலவந்தமாக மறு பங்கீடு செய்து கொள்வதற்காக உலகம் தழுவிய அளவில் போர் மூண்டது. இது முதல் உலகப்போர் என்று அழைக்கப்பட்டது (1914-1918) இப்போரில் வெற்றி பெற்ற பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான உள்ளிட்ட கூட்டணி நாடுகள், தோல்வியுற்ற ஜெர்மனியின் காலனிகளையும், ஒட்டாமான் பேரரசையும் தங்களுக்குமுன் பங்கிட்டுக் கொண்டன.

ரஷ்யா : முதல் உலகப்போரின் இறுதியில் ஏகாதிபத்தியப் போரை அம்பலப்படுத்தி, புரட்சியின் மூலம் பாட்டாளிவர்க்க கட்சியாகிய கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இது உலகின் ஒரு புதிய சகாப்தத்தை தோற்றுவித்தது. தன்முதலான பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் அதிகாரமான பாரிஸ் கம்யூன் மிகக்குறுகிய காலத்திலேயே தோல்வியடைந்தது. இதற்கான காரணம் முதலாளித்துவத்தின் சர்வாதிகார அமைப்பாகிய அரசு எந்திரத்தை ஒழித்துவிட்டு நேரடியாக கம்யூன் அமைப்பை ஏற்படுத்த முயன்றது. பலவந்தத்திற்கான அரசமைப்பு எதையும் கொண்டிருக்கவில்லை. இதனால் முதலாளித்துவம் இரகசியமாக மறுஅணி சேர்ந்து பலவந்தமாக பாரிஸ் கம்யூனை வீழ்த்தியது. இதிலிருந்து பாடம் கற்ற கம்யூனிச அமைப்பு முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு மாற்றாக பெரும்பான்மையான உழைப்பாளர்களின் சர்வாதிகாரத்தை முன்வைத்தது. இதனடிப்படையில் இரசியாவில் அமைந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசு பல்வேறு ஏகாதிபத்தியங்களின் நேரடி, மறைமுக தலையீடுகளை முறியடித்து, கடுமையான போராட்டத்திற்கிடையில் ஒரு சோசலிச பொருளாதாரத்தைக் கட்டியமைத்தது. இது பல்வேறு காலனிய நாடுகளுக்கு ஒரு உத்வேகமாக இருந்ததுடன் அவற்றின் விடுதலை மறைமுகமாகவும் நேரடியாகவும் உதவியது.

முதல் உலகப்போரில் தோல்வியுற்ற ஜெர்மனி இராணுவ ரீதியில் வளர்ந்திருந்ததாலும், தன்னுடைய பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கவும் போரில் குதித்து போலந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. மறுபுறம் ஜப்பான், சீனாவை ஆக்கிரமித்து போரிட்டுக் கொண்டிருந்தது. இதற்கிடையில் ஜெர்மனி சோவியத் ரசியா மீதும் போர் தொடுத்து ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இம்முறை ஜெர்மனி ஜப்பான், இத்தாலி தலைமையில் ஓரணியாகவும், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நேசநாடுகள் ஓரணியாகவும், ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான அணிச் சேர்க்கை நிகழ்ந்தது.

ஜெர்மனியானது சோவித் இரசியாவைப் பலமாகத் தாக்கி பேரழிவை ஏற்படுத்தியிருந்தது. அதே நேரத்தில் பிரான்சும், பிரிட்டனும் கூட ஜெர்மனியை வெல்ல வேண்டுமானால் இரசியாவுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் கம்யூனிசத்தின் மீது வெறுப்பு கொண்டிருந்தபோதும் ஒரு ஐக்கிய முன்னணிக்கு ஒப்புக் கொண்டனர். இந்த இரண்டாம் உலகப்போர் (1939-1945) முடிவில் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலியை உள்ளடக்கிய முகாம் தோல்வியுற்றது. இரசியா, அமெரிக்க தலைமையிலான முகாம் வெற்றி பெற்றது. ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்டது. அதில் மறுப்பு அதிகாரம் கொண்ட பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர்களாக வெற்றி பெற்ற முகாமைச் சேர்ந்த, அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடம் பெற்றன. தோல்வியுற்ற ஜெர்மனி, ஜப்பானுக்கு பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இன்றளவும் இவ்விடு நாடுகளிலும் தலா 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்கப் படைகள் முகாமிட்டுள்ளன. அமெரிக்கா, இரசியா என்னும் இரு பெரும் வல்லரசுகள் உருவாயின. இவற்றுக்கு இடையிலான பனிப்போர் காலக்கட்டம் தொடங்கியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தய உலக அரசியல் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியலானது அமெரிக்கா, இரசியா என்ற இரு துருவங்களை மையமாகக் கொண்டே நகர்ந்து வந்தது. 1990களில் சோவியத் யூனியனின் சிதைவுக்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான அனைத்து ஏகாதிபத்திய நாடுகளின் ஒரே துருவ ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இன்றுவரை உலக அரசியல் மற்றும் பொருளாதாரம் ஒரு திசைவழியில் நகர்ந்து வருகிறது. இக்காலகட்டமானது பனிப்போர் காலத்தில் இருந்த தடைகள் விலகியதால், அமெரிக்க அணி தன்னிச்சையாக பல போர்களை நடத்தி பல லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்பிற்கும், பல நாடுகளில் பேரழிவுக்கும் வழிவகுத்தது. இதற்கு எதிராக தற்பொழுது சீனா, இரசியா, வளரும் நாடுகள் சிலவற்றை உள்ளடக்கிய மற்றொரு துருவம் வளர்ந்து வருகிறது.

ஏகாதிபத்திய தலையீடுகளுக்கு இடையிலும்கூட பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய பல்வேறு தேசிய இனங்களின் ஒன்றியமாக சோவியத் ஒன்றியம் அமைந்திருந்தது. பல்வேறு தவிர்க்க இயலாத குறைபாடுகளைக் கொண்டிருந்தபோதும் ஒரு சோசலிசப் பொருளாதாரத்தை கட்டியமைத்து உலகமே வியக்கும் வண்ணம் பொருளாதார, ராணுவ, அறிவியல் துறைகளில் மாபெரும் வளர்ச்சி பெற்று ஒரு பெரும் வல்லரசாக உருவெடுத்தது. தொடர்ந்து ஏகாதிபத்தியங்களின் நெருக்கடிகள் மற்றும் போர் சூழல் போன்ற புறக்காரணிகளாலும், உற்பத்திச் சக்திகள் போதிய வளர்ச்சியடையாத, பின்தங்கிய கலாச்சார சமூக அமைப்பு (முதலாளித்துவ சனநாயகம் நன்கு வேறூன்றி வளர்ந்திராத சமூக அமைப்பு), சனநாயக மத்தியத்துவத்தில் மத்தியத்துவம் சற்று மேலோங்கக் காரணமாக அமைந்தது. இது தனிநபர் அதிகாரத்துவப் போக்குக்கு இட்டுச் சென்றது.

இப்படிப்பட்ட அதிகாரமிக்க தனிநபர் பரந்துபட்ட மக்கள் நலனைப் பிரதிநிதித்துவப் படுத்துபவராக இருந்தவரை சமூக வளர்ச்சியில் பெரிய பிரச்சனை ஏதும் எழவில்லை. இந்த அதிகாரத்துவப் போக்கு கட்சியில் உறுதிப்பட்டிருந்த நிலையில் மாற்றுவர்க்க சிந்தனையைக் கொண்டவர்கள் தலைமைக்கு வந்தபோது கட்சியானது அதை முறியடிக்க இயலாததாகி விட்டிருந்தது. இதன் விளைவாக மாற்றுவர்க்க சித்தாந்தத் தலைமை உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இந்த நிலைமை அரசு எந்திரம் முழுவதும், பொதுத்துறை நிறுவனங்களும் அதிகாரத்துவ அமைப்புகளாக மாறிப் போவதற்கு இட்டுச் சென்றது. இது ஒரு சலுகை பெற்ற ஆளும் வர்க்கமாக மாறி மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டது.

திட்டமிட்ட சோசலிசப் பொருளுற்பத்தி முறையும் ஒருகட்டத்திற்குமேல் வளர்ச்சியடைய முடியாத ஒரு நெருக்கடியைச் சந்தித்தது. வளங்களை ஒதுக்கி நெறிப்படுத்துவதற்கான ஒரு பொருளியல் முறை ஏதும் வளர்ச்சியுற்றிருக்கவில்லை. உதாரணமாக முதலாளித்துவத்திற்கு சந்தையானது, தேவை மற்றும் அளிப்பை ஒழுங்குபடுத்துவதுபோல் சோசலிசத்தில் ஒரு தெளிவான அமைப்பு உருவாகி இருக்கவில்லை.

உற்பத்தி சாதனங்கள் பொதுவுடைமையாக இருந்தபோதிலும் உற்பத்தி உறவுகள் சோசலிச உறவுகளாக இருந்த போதிலும், அரசு மற்றும் உற்பத்தி அமைப்புகளில் அதிகாரத்துவம் மேலோங்கி இருந்ததால், மேல் கட்டுமானத்திற்கும் அடித்தளத்துக்குமான முரண்பாடு விரிவடைந்து சென்றது. இதனால் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தடைப்பட்டது. இது ஒரு சமுதாய நெருக்கடிக்கு இட்டுச் சென்றது. இவை யாவும் திரிபுவாத தலைமையின் கீழ் கம்யூனிசத்தின் பெயரால் நடைபெற்றதால் பரந்துபட்ட மக்களுக்கு கம்யூனிசத்தின் மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டது.

இதைப் பயன்படுத்தி அரசிலிருந்த முதலாளித்துவ சக்திகள் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் ஆதரவுடன் பெயரளவிலான கம்யூனிச ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது. சோவியத் யூனியனைச் சிதைத்து முழுமையான முதலாளித்துவ அரசமைப்பைத் தோற்றுவித்தனர். பெருவாரியான உற்பத்தி சாதனங்கள் ஒலிகார்க்கி என்றழைக்கப்படும் முறையில் முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு தாரை வார்க்கப்பட்டன. கம்யூனிசத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு சிறு குழுவின் முயற்சி முறியடிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான அமெரிக்க உதவி பெற்ற தன்னார்வக் குழுக்களைக் கொண்டு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தான் விரும்பிய நபரை ஆட்சிக்கு கொண்டு வந்தன.

இதைப் பயன்படுத்தி 1990களில் ரசியாவை பொருளாதார, ராணுவ ரீதியில் கடுமையாக பலவீனப்படுத்தி பனிப்போரை ஒரு தற்காலிக முடிவுக்கு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் கொண்டுவந்தன. முன்னாள் சோவியத் நாடுகள் ஒவ்வொன்றாக நேட்டோவில் இணைக்கப்பட்டன.

இந்நிலையில் 2000த்தில் ரசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட புடின் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான ஒரு திட்டத்துடன் இழந்த இரசியாவின் செல்வாக்கை நிலைநாட்ட முயன்று வருகிறார். முதலில் பொருளாதாரததை படு பாதாளத்திலிருந்து மீட்டெடுத்து ஒரு ஆரோக்கியமான நிலைமைக்கு கொண்டு வந்தார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க ஏகபோக அதிகாரத்துக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.

இப்போது அமெரிக்காவின் தலைமையிலான உலக மேலாதிக்கத்திற்கு முற்றிலும் எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். உக்ரைனில் அமெரிக்க செயல் தந்திரம் தோல்வியைத் தழுவியது. லிபியாவைப் போல் சிரியாவை சிதைப்பதற்கான திட்டத்தை சீனாவுடன் இணைந்து தடுத்து நிறுத்தினார். உக்ரைனில் அமெரிக்க திட்டத்தை முறியடித்ததும், சிரியாவைத் தாக்க இயலாதவாறு தடுத்ததும் உலக நாடுகளிடையே ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளன.

இரசியாவானது 25 ஆண்டுகள் திரிபுவாத தலைமையிலும் அதன்பிறகு முதலாளித்துவத் தலைமையிலும் இருந்து வந்தபோதும் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது, மற்றும் புரட்சியை ஏற்றுமதி செய்ய முயன்றது ஆகிய சில தவறுகளைத் தவிர, ஏகாதிபத்திய நாடுகளைப் போல அது பிற நாடுகளைச் சுரண்டி முன்னேறியது இல்லை. மாறாக பல்வேறு வளரும் நாடுகளுக்கு பொருளாதார, தொழில்நுட்ப உதவிகளையே செய்து வந்தது. இரசியாவால் உலகநாடுகளுக்கு தீமையன்றி நன்மையே பெரிதும் கிடைத்தது. எண்பது, தொன்னூறுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்த சுரண்டாமையும் ஒரு முக்கிய காரணமாகும்.

இப்போது உக்ரைன் பிரச்சனைக்குப் பிறகு அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இரசியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதற்கு எதிராக அமெரிக்க, மற்றும் மேற்கத்திய‌ ஏகாதிபத்தியங்களை சார்ந்த பொருளாதாரத்தைக் குறைத்து, சீனா சார்பை அதிகப்படுத்தி வருகிறது இரசியா. இது சீனாவுடன் மேலும் நெருங்கி வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இரகசியப் பொருளாதாரம் அமெரிக்காவோடு ஒப்பிடும்போது சிறிய அளவிலானதே என்றாலும் அமெரிக்காவை எதிர்த்து நிற்கும் இராணுவ தொழில்நுட்ப வலிமை பெற்றுள்ளது. சுய சார்பின் அவசியத்தை இப்போது மேலும் உணர்ந்து அதை நோக்கிய பொருளாதாரத்தைக் கட்ட முயன்று வருகிறது.

அமெரிக்கா: இரண்டு உலகப்போர்களிலும் அதிகம் பாதிக்கப்படாத அமெரிக்கா ஏற்கனவே இயற்கை செல்வ வளங்களைப் பெற்றிருந்தது. கருப்பின அடிமைகளை கொடுமைப்படுத்தி மேலும் பன்மடங்கு செல்வாதாரங்களைப் பெருக்கிக் கொண்டது. இப்பொருளாதார வளங்களைக் கொண்டு இராணுவ‌, அறிவியல், தொழில்நுட்பத்திலும் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. இரண்டு உலகப் போர்களின் வெற்றியின் மூலம் இந்த வலிமையைக்கொண்டு தனது பொருளாதார, அரசியல், தொழில்நுட்ப ஆதிக்கத்தை உலக அளவில் உறுதிப்படுத்திக் கொண்டது. இதனால் ஒட்டுமொத்த ஏகாதிபத்திய அணியும் (மேற்கத்திய, ஜப்பானிய, ஆஸ்திரேலிய உள்ளிட்ட) அதன் தலைமையை ஏற்றுக்கொண்டு அதன் இளைய பங்காளியாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அமெரிக்காவானது தனது பணமான டாலரை உலக செலாவணியாக உருவாக்கியதன் மூலம் ஒட்டுமொத்த உலக நாடுகளையும் எந்தவித இழப்பீடும் இன்றி சுரண்டி வருகிறது. முதலில் தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பணமாக வெளியிட்டு, இதன் காரணமாக அதன் மதிப்புக்கு ஈடாக ஒரு குறிப்பிட்ட அளவு தங்கத்தை அமெரிக்க அரசு அளிப்பதற்கு அதை வைத்திருப்போருக்கு உறுதியளிக்கப்பட்டது. இதனால் விரைவாக உலக நாடுகளின் முதலீட்டுக்கான பணமாக அது மாறியது. டாலரின் உலகப் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க மேலதிக டாலரை வெளியிட்டு தனது வர்த்தக மற்றும் பட்ஜெட் பற்றாக்குறையை இலவசமாக பூர்த்தி செய்து கொண்டது. ஆனால் 1933-ல் பகுதியளவிலும் (அதாவது பிறநாட்டு அரசுகள் மட்டுமே தங்கத்தை ஈடாக பெறமுடியும்) 1968 முழுமையாகவும் தங்கத்தை ஈடாகத் தருவது, விலக்கிக் கொள்ளப்பட்டது. முழுமையான காகிதப் பணமாக மாற்றப்பட்டு விட்டது. அதாவது அதன் தேவை குறைந்து, சந்தை மதிப்பு எத்தனை மடங்கு குறைந்து போனாலும் அந்த நட்டம் முழுவதும் அதை வைத்திருப்போரையே சாரும். அமெரிக்க அரசு அதை வெளியிட்டு பலனடையும் ஆனால் விளைவுகளுக்கு எந்தப் பொருப்பையும் ஏற்காது.

அமெரிக்க டாலர் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்காக அரபு நாடுகளைத் தனது இராணுவ வலிமையால் நிர்ப்பந்தப்படுத்தி பெட்ரோலிய வியாபாரம் முழுவதையும் டாலரிலேயே செய்ய வைத்ததோடு மட்டுமின்றி அந்த லாபத்தையும் அமெரிக்க டாலரிலேயே முதலீடு செய்யுமாறு வலியுறுத்தியது. இன்று சுமார் 60% என்ற அளவில் மட்டுமே உலகில் அமெரிக்க டாலர் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் 70% வீதத்தை தாண்டிய அளவில் பயன்பட்டு வந்தது. பொருளாதார வலிமையில் மட்டுமன்றி இராணுவ வலிமையினாலும் கூடத்தான் அமெரிக்க டாலர் உலக செலாவணியாக மாறியது.

அமெரிக்க டாலரின் மதிப்பு அதன் பொருளாதாரத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. மாறாக விமானந்தாங்கி, மற்றும் நீர்மூழ்கி கப்பல்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. இப்படி அமெரிக்கா டாலர் மதிப்பை செயற்கையாக நிலைநிறுத்துவதோடு மட்டுமின்றி பெடரல் வங்கி என்ற அதை வெளியிடும் வங்கி மூலமும் அதன் மதிப்பை கட்டுப்படுத்தி வருகிறது. அமெரிக்க பணவீக்கத்தை பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்று சிலநாடுகள் குற்றம் சாட்டியபோது “இது எங்கள் பணம் உங்கள் பிரச்சனை” என்று திமிராகப் பதிலளித்தது. இவ்வாறு உலகமக்கள் அமெரிக்க டாலரைப் பயன்படுத்துவதன் மூலமாக அமெரிக்க மக்கள் தங்கள் உருவாக்கிய செல்வங்களுக்கு மேலதிகமாக பலமடங்கு அனுபவித்து வருகின்றனர். இந்த டாலர் ஆதிக்கத்திற்கு எதிராக சீனா மற்றும் இரசியா மெதுவாக ஆனால் உறுதியாக காய் நகர்த்தி வருகின்றனர். இரு நாடுகளும் பல்வேறு நாடுகளுடன் இரு நாட்டு நாணயங்களில் வர்த்தகத்துக்கான உட்பாடுகளில் கையெழுத்து இட்டு வருகின்றனர். இது ஒரு கட்டத்தில் டாலர் ஆதிக்கம் முடிவுரும் நிலைக்கு இட்டுச் செல்லலாம்.

இதுமட்டுமன்றி அமெரிக்க ஆதிக்கம் பல்வேறு நுணுக்கமான வடிவங்களை எடுத்து வருகின்றது. வேலை அதிகம் தேவைப்படுகின்ற சாதாரணப் பொருள்களை மலிவான விலையில் ஆசிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து கொள்ளும் அதே நேரம் உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட பல்வேறு பொருள்களை ஏகபோகமாக்கிக் கொண்டு மிக அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கிறது. உதாரணமாக கம்ப்யூட்டர், மொபைல் சிப்புகள், தொலை தொடர்பு சாதனங்கள், பொதுவான மென்பொருள்கள் முதலான அனைத்து உயர் தொழில்நுட்ப சாதனங்களும் சேவைகளும் அமெரிக்க ஏகபோகமாகவே உள்ளது. இந்த ஏகபோக சேவை நிறுவனங்கள் ஆசிய உழைப்பாளர்களின் மலிவான உழைப்பை பயன்படுத்திக் கொண்டு, அந்த மக்களிடமே அதன் விளைபொருட்களை பன்மடங்கு ஏகபோக விலைக்கு விற்கின்றன. இன்டர்நெட் முழுவதும் அமெரிக்க கட்டுப்பாட்டிலேயே உள்ளன. பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் அமெரிக்க நிறுவனங்களே இவற்றையும் அமெரிக்க ஏகபோக ஊடகங்களையும் கொண்டு, தன்னார்வ நிறுவனங்களைப் பயன்படுத்தி வேண்டாத நாடுகளில் வண்ணப் புரட்சிகளை ஏற்படுத்துவது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி போராட்டத்திற்கு ஆதரவு பெருகுவதுபோல் செயற்கையாக காட்டுவது, தேவைப்பட்டால் ஆயுதக்குழுக்களை ஏற்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்பை ஏற்படுத்துவது இப்படி ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களை ஏகபோகமாக கட்டுப்படுத்தி விரும்பிய மாற்றங்களை அமெரிக்கா செய்து வருகிறது.

எல்லா நாடுகளையும் தங்குதடையின்றி உளவறிவதற்கு இந்த கணினித் தொழில் நுட்பங்களை வரைமுறையின்றிப் பயன்படுத்தியதை ஸ்னோடன் அம்பலப்படுத்தினர். விக்கி லீக்ஸ் என்ற அமைப்பு பல்வேறு அமெரிக்க இரகசிய ஆவணங்களை வெளிக்கொண்டு வந்தபோது எந்த நாட்டையும் அமெரிக்கா தனது நலனுக்கே பயன்படுத்திக் கொள்ளும், மாறாக எந்த நாட்டுக்கும் உண்மையாக இருக்காது என்ற உண்மை உலகுக்கு அம்பலமானது. உலகநாடுகளின் மீதான அமெரிக்கா உளவின் ஆழத்தை எட்வர்டு ஸ்னோடன் உலகுக்கு அம்பலப்படுத்தினார். இதனால் பொதுவாக இப்போது அமெரிக்காவை நம்ப எந்த நாடும் தயாராக இல்லை.

அமெரிக்கா தலைமையில் நியூயார்க் மற்றும் லண்டன் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் நிதியாதிக்கக் கும்பல் உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பெருவாரியாகக் கட்டுப்படுத்தி வருகிறது. பெரும் வங்கிகள் இந்தச் செயல்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் அமைப்புகளாக செயல்படுகின்றன. பங்குகள், டெரைவேட்டிவ்கள், ப்யூச்சர்ஸ் போன்ற அரூவமான சொத்துக்களை இவர்கள் பரிவர்த்தனை செய்கின்றனர். ஏகாதிபத்திய நாடுகளில் செயற்கையாக உருவாக்கப்படும் இந்த காகித சொத்துகளை இவர்கள் வளரும் நாடுகளில் கொண்டுவந்து முதலீடு செய்கின்றனர். பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட்களில் அபரிமிதமாக முதலீடு செய்து அவற்றின் விலைகளை பலமடங்கு உயரச் செய்கின்றனர். பின்னர் சிறிது சிறிதாக விற்பதன் மூலம் குறுகிய காலத்தில் பெரும் தொகையை இந்த நாடுகளின் முதலீட்டாளர்களிடமிருந்து பறித்துக் கொள்கின்றனர். இதை மிக சாதுர்யமாக ஊடக சாதனங்களைக் கொண்டு ஊகங்களைப் பரப்பி பின் பலனடைகிறார்கள். இதை ஊக வாணிபம் என்கிறார்கள். இதனால் ஏகாதிபத்திய பெரும் முதலீட்டாளர்கள் மட்டுமே பலனடையும் வண்ணம் அவர்கள் சந்தையின் தேவை, அளிப்பை செயற்கையாக கட்டுப்படுத்துகிறார்கள். இந்த ஊக வாணிபம் உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியைப் போல் நூற்றுக்கணக்கான மடங்கு அதிகமாக நடைபெறுகிறது. இதன் பொருள் ஒரே பொருளை பலவிதமான ஆவணங்களைக் கொண்டு பல இடத்தில் விற்கவோ வாங்கவோ செய்கின்றனர். ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் அந்த ஒரே பொருள் சிலருக்கு லாபத்தையும், சிலருக்கு நட்டத்தையும் ஏற்படுத்துகிறது.

இந்த மாதிரியான சமுதாயத்திற்கு அடிப்படையில் தேவையே இல்லாத ஒரு சேவைத்துறையில் பலரும் இந்த நாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊக வணிகத்துறை இன்று உண்மையான பொருள் சந்தையை தீர்மானிக்கும் நிலையில் வளர்ந்து நிற்கிறது. ஆன்லைன் வர்த்தகத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் தீர்மானிக்கும் விலையே உண்மையான பொருள் சந்தையிலும் உடனடியாக பிரதிபலிக்கிறது.

உதாரண‌மாக ஒன்றைப் பார்க்கலாம். 2008 அமெரிக்க வீட்டுக்கடன் நெருக்கடியைப் பார்ப்போம். ஊக வணிக மூலதனமானது ரியல் எஸ்டேட் துறையில் மேலும் மேலும் கொட்டப்பட்டது. இதனால் கட்டுமானத்துறை பெரிய அளவில் வளர்ந்தது. வீட்டின் விலை உயர்ந்து கொண்டே வந்தது. பல்வேறு ஊக வணிக நடைமுறை மூலம் இவை தொழிலாளர்களிடம் விற்கப்பட்டன. மேலும் மேலும் விலை உயரும் என்ற நம்பிக்கையில் பலரும் வீடுகளை வாங்க ஆரம்பித்தனர். வீடுவாங்க நூற்றுக்கணக்கான‌ வங்கிகள் கடனைக் கொடுத்தன. கடன் வசூல் ஆகாவிட்டால் நட்ட ஈடு பெற இக்கடன்கள் இன்சூரன்ஸ் செய்யப்பட்டன‌. இவ்வளவு கடனுக்கு இவ்வளவு லாபம் வரும் என்று நம்பவைத்து இந்த வங்கிகள் தங்கள் கடன் பத்திரங்களை வெளிநாடுகளில் வெளியிட்டு நிதி திரட்டிக் கொண்டன. ஒரு கட்டம் வரை இதில் ஈடுபட்ட அனைவரும் லாபம் அடைந்து வந்தனர். இந்த ஊக வணிபம் ஒரு பெரிய நீர்க்குமிழி போன்று ஊதிக்கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் நீர்க்குமிழி உடைந்தது. பல்லாயிரம் கோடி மாயமான சொத்து காணாமல் போனது.

அதாவது ஒருகட்டத்தில் தொழிலாளர் வாங்கிய கடனுக்கு தவணை செலுத்த முடியாத அளவுக்கு வீட்டு விலை உயர்ந்தது. இதனால் தொழிலாளர்கள் சொந்த வீடு தேவையில்லை, வாடகை வீடு போதும் என்ற நிலைக்குச் சென்றனர். இதனால் பலரும் கடனைக் கட்டாமல் வீடு ஏலத்திற்கு வந்தது. வீட்டு விலை சரசரவென சரிந்தது. இதனால் மேலும் பலரும் வீட்டை விற்க முற்பட்டனர். விலை மேலும் சரிந்தது. கடன் கொடுத்த வங்கிகள் ஏலம்விட்ட வீட்டை வாங்க ஆளில்லை. எனவே நூற்றுக்கணக்கான வங்கிகள் திவாலாகி மூடப்பட்டன. இன்சூரன்ஸ் கம்பெனிகள் திவாலாகின. இவ்வாறு இந்தத் தொழில்துறையில் இருந்த பல லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். இந்த வங்கிகளின் கடன் பத்திரங்களை வாங்கிய உலகநாடுகளின் இதர முதலீட்டாளர்கள் நட்டமடைந்தனர். வளரும் நாடுகளில் மூலதனம் வெளியேறத் தொடங்கியது. உலகமே பாதிக்கப்பட்டது. இதுதான் ஊக வாணிபத்தின் இறுதி விளைவு.

இவ்வாறு அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் பொருற்பத்தி, நிதிமூலதனத்தை கொண்டு மட்டுமல்ல இன்னும் பல்வேறு வழிகளிலும் அவை உலக நாடுகளைச் சுரண்டி வருகின்றனர். இதில் அடுத்து வருவது பேடன்ட் ராயல்ட்டி, வெறும் பெயரை பயன்படுத்துவதற்கான கட்டணம் என்று பல்வேறு வடிவங்களில் வளரும் நாடுகளின் உழைப்பின் பலனை தட்டிப் பறிக்கின்றனர். ஊடகங்களின் மூலம் பெயரை மட்டும் உலக அளவில் விளம்பரபடுத்தி வைத்திருப்பார்கள். எல்லா வேலைகளையும் நாமே செய்ய வேண்டும், பொருளையும் நாமே உற்பத்தி செய்யவேண்டும். ஆனால் அவர்கள் பெயரில் விற்றால் பலமடங்கு அதிகவிலைக்கு விற்பதுபோல் அவர்கள் இமேஜை உருவாக்கித் தருவார்கள். லாபத்தின் பெரும் பகுதியை அவர்களுக்கு கொடுத்துவிடவேண்டும்.

மருந்து பொருள்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிப்பதாக சொல்வார்கள். இதற்கு இப்போது இலவசமாக இருக்கும் எல்லா கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்திக் கொண்டு ஒரு சிறிதளவு அவர்கள் ஆராய்ச்சியை செலுத்துவார்கள். பல நூறு மடங்கு லாபம் கிடைக்கின்ற வகையில் ஏகபோகத்தை உருவாக்கி அதிக விலைக்கு விற்பார்கள். சர்வதேச விதி 10 ஆண்டுகளுக்கு பேடன்ட் என்று இருக்கும் ஆனால் பதினோராவது ஆண்டில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தி மீண்டும் பத்தாண்டுகளுக்கு பேடன்ட்டு உரிமை பெற்று கொள்ளை லாபம் அடைவார்கள்.

இவ்வாறு அனைத்துத் துறைகளிலுமான தனது ஆதிக்கத்தை பலவந்தமாக தனது இராணுவ வலிமையைக் கொண்டே அமெரிக்கா நிலைநாட்டி வருகிறது. இந்த ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஓரளவு பெரிய நாடுகளை பொருளாதார நடவடிக்கைகள் மூலமாக மறைமுகமாக மிரட்டுவதும் இவர்களின் வாடிக்கை. மற்ற‌ நாடுகளை இராணுவ ரீதியாக மிரட்டுவர். இதற்காக அமெரிக்க உலகின் வேறு எந்த நாட்டையும் விட மிகப் பெரிய, வலிமையான இராணுவத்தை நிர்வகித்து வருகிறது.

அமெரிக்க உலகெங்கிலும் பரவலாக தனது இராணுவ தளங்களைக் கொண்டுள்ளது. இலட்சக்கணக்கான வீரர்களையும் ஆயிரக்கணக்கான கப்பல்கள், விமானங்களையும் இந்தத் தளங்களில் அது நிர்வகித்து வருகிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளின் இராணுவ பட்ஜெட்டை விட அமெரிக்க ராணுவ பட்ஜெட் அதிகமாகும். இன்று உலகில் அமெரிக்க ராணுவத்தை எதிர்கொள்ளும் வலிமை இரண்டு நாடுகளில் மட்டுமே உள்ளது. அவை இரசியா, சீனா ஆகிய நாடுகளாகும். எனவே இரசியாவிற்கு அருகிலுள்ள நாடுகளிலும் சீனாவுக்கு அருகிலுள்ள நாடுகளிலும் அமெரிக்கா ஏவுகணைத் தடுப்பு அரண்களை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் சீனா, ரஷ்யா அணு ஆயுதங்களை தங்களுக்கு எதிராக ஏவ முடியாதவாறு அமெரிக்கா தடுக்க முயல்வதன் மூலம் உலகின் ஒற்றை ஏகபோக வல்லரசாக மாற முயற்சிக்கிறது. இதற்காக அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி வருகிறது. லேசர், எலக்ட்ரோ மேக்னடிக் ஆயுதங்களை உருவாக்கி வருவதோடு உலகின் எந்த இடத்தையும் இரண்டு மணி நேரத்தில் தாக்கும் வகையில் அதிவிரைவு ஏவுகணைகளையும் உருவாக்கி வருகிறது. நூற்றுக்கணக்கான நீர்மூழ்கிக் கப்பல்களையும், ஒன்பது விமானந்தாங்கி கப்பல்களையும் வைத்துள்ளது. ஆனாலும் இவற்றை முறியடிக்கும் வகையில், பாதுகாப்பு அரண்களையும் விமானந்தாங்கி கப்பல்களையும் தகர்க்கும் விதமான நவீன ஆயுதங்களையும் சீனா மற்றும் இரசிய இராணுவங்கள் தயாரித்து வருகின்றன.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது அமெரிக்க மேலாதிக்கம் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து சரிவடைந்தே வருகிறது. டாலரின் ஏகபோகமும் படிப்படியாக சரிவடைந்து வருகிறது. பிரிக்ஸ், சாங்காய் கோஆபரேசன் ஆர்கனைசன், கரீபியன் மற்றும் தென்அமெரிக்க நாடுகளின் கட்டமைப்பு, தெற்காசிய கூட்டமைப்பு, அசபக் நாடுகள் கூட்டமைப்பு போன்ற வளரும் நாடுகளின் அமைப்புகள் அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக சில முயற்சிகளை எடுத்து வருகின்றன. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்பிரிக்கா இணைந்த அமைப்பாகிய பிரிக்ஸ் சற்று வலிமையான அமைப்பாக விளங்குகிறது. சிறு உலக உற்பத்தியில் 20% வீதத்தையும், உலக மக்கள் தொகையில் 40 சதவீதத்தையும் கொண்ட நாடுகளின் அமைப்பு. இவை தங்களின் நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. குறிப்பாக உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனத்தில் அமெரிக்க ஆதிக்கம் நிலவுவதால் அதேபோன்று ஒரு வங்கியையும், நிதி நிறுவனத்தையும் உருவாக்கி இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு உதவுவது என்று ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தி உள்ளனர். இது ஓரளவுக்கு நிதி ரீதியாக அமெரிக்க ஆதிக்கத்தைக் குறைக்க இந்நாடுகளுக்கு உதவும். தென்னமெரிக்க நாடுகள் தங்களுக்குள் அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு, அமெரிக்காவுக்கு எதிரான ஓரளவு சுயசார்பு பொருளாதாரத்தை கட்டி வருகின்றனர்.

ஒருபுறம் சுரண்டல் குறைந்து வருகிற‌து, மறுபுறம் அமெரிக்க கடன் 17 ட்ரில்லியன் டாலர் என்ற அளவுக்கு (அதாவது சுமார் ஆயிரம் லட்சம் கோடி ரூபாய்) உயர்ந்து விட்டது. இந்தக் கடனை அடைக்க வேண்டுமென்றால் அமெரிக்க மக்கள் 15 மாதங்கள் எந்தவித நுகர்வும் இல்லாமல் செலவு செய்யாமல் சாப்பிடாமல் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். மறுபுறம் சீனா அதிவிரைவாக வளர்ந்து வருகிறது. உலக வர்த்தகத்தில் அமெரிக்காவை விஞ்சிவிட்டது. அது நாடுகளுடனான வர்த்தகத்தில் எந்தவிதமான அரசியல் நிபந்தனைகளையும் விதிப்பதில்லை. மேலும் அதிக நாடுகள் சீனாவுடன் வர்த்தகத்தை விரும்புகின்றன. மேலும் சீனாவானது அமெரிக்க கடன்பத்திரங்களில் கிட்டதட்ட 80 லட்சம் கோடி ரூபாய்க்குமேல் முதலீடு செய்துள்ளது. இதை அமெரிக்காவுக்கு எதிரான ஒரு துருப்புச் சீட்டாக சீனா தொடர்ந்து வைத்துள்ளது. சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு சரிவை ஏற்படுத்தி வருவதால் அது சீன வளர்ச்சியை முடக்குவதற்கு தன்னாலான முயற்சியைச் செய்து வருகிறது. ஒரு புதிய பனிப்போர் என்ற அளவுக்கு இரு நாடுகளுக்கிடையே பல்வேறு அரங்கில் போட்டி நடைபெற்று வருகிறது. தனது பொருளாதார சரிவை ஓரளவுக்கு சரிக்கட்ட தனது நட்பு நாடுகளுடன் புதிய பொருளாதார அமைப்புகளை அமெரிக்கா ஏற்படுத்தி வருகிறது.

சீனா : ஜப்பானிய ஏகாதிபத்தியத்தையும் உள்நாட்டு முதலாளித்துவ அரசையும் தோற்கடித்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1949-ல் மக்கள் சீனக் குடியரசைத் தோற்றவித்த‌து. இதன்மூலம் விவசாயிகளுக்கு நிலங்களை பகிர்ந்தளிப்பது, சிறுவீத உற்பத்தியை வளர்த்தெடுப்பது அதன் தொடர்ச்சியாக பெருவீத கனரக தொழிற்துறையையும் வளர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் ஒரு புதிய சனநாயகப் பொருளுற்பத்தி முறையைக் கட்டியமைத்தது. பெருந்தொழில் துறை நாட்டுடைமையாக்கப்பட்டன. விவசாய நிலங்கள் பின்னர் சமூக உடைமையாக்கப்பட்டு விவசாயிகளுக்கு பயன்பாட்டு உரிமை மட்டும் வழங்கப்பட்டது. ஒரு புதிய வகையிலான ஆரம்பக்கட்ட சோசலிசப் பொருள் உற்பத்தி முறை கட்டியமைக்கப்பட்டது.

1949-1976 மாவோவின் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இருந்த காலக்கட்டத்தில் அடிப்படையான பொருளாதாரக் கட்டமைப்புகள் சிறப்பாக செய்யப்பட்ட போதிலும் இரண்டு பெரும் தவறுகள் நடைபெற்றதாக அக்கட்சி தனது மறுபரிசீலனையில் ஒப்புக்கொள்கிறது. மாபெரும் பாய்ச்சல் என்ற கொள்கையின்மூலம் பொருளாதாரத்தை ஒரு பாய்ச்சலில் அதிவிரைவாக வளர்த்தெடுக்க முயற்சி செய்யப்பட்டது. இது பொருளாதார வளர்ச்சிக்குப் பதிலாக ஒருவித தேக்கநிலைக்கு இட்டுச் சென்றது. விவ‌சாய உற்பத்தியும் பாதிக்கப்பட்டு பெரும்பஞ்சம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இரண்டாவதாக 1966-76 வரையிலான கலாச்சாரப் புரட்சியை கடுமையான தவறாக அக்கட்சி உணருகிறது. இரசியாவில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாகவும், டெங்கியோபிங் போன்றவர்களின் பொருளாதாரக் கொள்கைகள் முதலாளித்துவ மீட்சிக்கு இட்டுச் செல்லும் என்று மாவோ நம்பியதாலும் இதற்குத் தீர்வாக கலாச்சாரப் புரட்சியை முன்வைத்தார். கட்சித் தலைமையைத் தகர்தெறியுமாறு நேரடியாக மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். ஆனால் இதன்மூலம் அராஜகவாதம் மேலோங்கியதே தவிர‌ இது எந்தவிதத்திலும், அவர் முதலாளித்துவ பாதையாளர்கள் என்று நம்பியவர்கள் தலைமைக்கு வருவதைத் தடுக்கவில்லை. இரு 10 ஆண்டுகள் முழுவதுமாக உற்பத்தி தேங்கியது, எல்லாவிதமான அமைப்புகளும் சிதைக்கப்பட்டு, அராஜகம் தலைவிரித்து ஆடியது என்று கூறுகிறார்கள்.

முதலாளித்துவ மீட்சியைத் தடுக்க அமைப்பு ரீதியான, முறைப்படியான தீர்வுகளை காண வேண்டுமேயன்றி தனிநபர் விருப்பு வெறுப்புக்கேற்ப தீர்வுகளை முன்வைக்க முடியாது. மற்றொரு சமயம் ஒரு முதலாளித்துவ பாதையாளர் செல்வாக்கு பெற்ற நபராக இருக்கும்போது கட்சியானது சோசலிசப் பாதையில் செல்லும்போது கூட இவ்வாறு செயல்பட்டு கட்சித் தலைமையைத் தகர்த்து முதலாளித்துவத்தை மீட்டெடுக்க முடியும். எனவே முதலாளித்துவ மீட்சியை குறுக்கு வழியில் தடுத்து நிறுத்த முடியாது. அமைப்பு ரீதியான முயற்சிகள் தோல்வியைத் தழுவினாலும் மீண்டும் சில காலங்களுக்குப் பிறகு மக்கள் தங்களுக்கு சரியான பாதையைத் தேர்வு செய்வார்கள். ஆனால் மனித வரலாற்றில் இது நாம் எதிர்பார்க்கும் குறுகிய காலத்திலேயே நடைபெற்று விடாது.

மாவோவிற்கு பிறகு டெங்சியோபிங் தலைமையில் சீனப் பொதுவுடைமைக் கட்சியானது பல புதிய பொருளாதாரக் கொள்கைகளை வகுத்தது. இது முதலாளித்துவத்திலிருந்து சோசலிசத்திற்கு மாறிச் செல்லும் காலக்கட்டம். ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக நீண்டதாக இருக்கும் என்று கணித்தது. இக்காலக் கட்டத்தில் உற்த்தி சக்திகளாகக் கட்டவிழ்ந்து விடுவது, உற்பத்தியை பெருக்குவது, நிலையான அரசியல் சமூக அமைப்பை உருவாக்கி பாதுகாப்பது ஆகியனவே முக்கிய நோக்கங்களாக கருதப்பட்டது. உற்பத்தி சக்திகள் பின்தங்கி இருப்பதால் தனியார் மூலதனத்தை ஊக்குவிப்பது, அதே நேரத்தில் பொதுத்துறை ஒரு மேலாதிக்க நிலையிலேயே நீடிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. உலகப் பொருளாதாரத்தோடு முழுவதுமாக சீனப் பொருளாதாரத்தை இணைப்பது, எல்லாத் துறைகளையும் நவீனமயமாக்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு கடந்த 38 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இக்கொள்கைகள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்த பலன்களை நிச்சயமாக கொடுத்துள்ளது. ஆனால் முதலாளித்துவ முறையிலான வளர்ச்சியுனுடனே முதலாளித்துவத்தின் லஞ்சம் உள்ளிட்ட பல சீர்கேடுகளும் வளர்ச்சியடைந்தே வந்துள்ளன‌.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக 10 சதவிகித சராசரி வளர்ச்சியை சீன பொருளாதாரம் கண்டுள்ளது. இது உலகில் முன்உதாரணமற்ற ஒரு சிறப்பான அம்சமாகும். இதன்மூலம் 60 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமை நிலையிலிருந்து மீண்டுள்ளன. சீனா உலகின் ஒரு தொழிற்சாலையாகவே மாறிவிட்டிருக்கிறது. ஆனால் இதன் விளைவாக மிக அதிக சுற்றுச்சூழல் பிரச்சனைகளும் உருவெடுத்துள்ளன‌. எனவே சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உற்பத்தியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல சமீபகாலமாகத் திட்டமிட்டு வருகிறது. குறைந்த விலையிலான பொருளுற்பத்தி என்பதிலிருந்து, மதிப்புக் கூட்டப்பட்டு புதிய கண்டுபிடிப்புடன் கூடிய பொருள்களின் உற்பத்திக்கு மாறுதல், முதலீட்டு அடிப்படையிலான வளர்ச்சி என்பதிலிருந்து, மக்களின் நுகர்வை அடிப்படையாகக் கொண்ட பொருளுற்பத்தி வளர்ச்சிக்கு மாறுதல் உள்ளிட்ட மாற்றங்களை நோக்கிச் செல்லத் தொடங்கியுள்ளது. இதனோடு கூடவே கட்சியின் தலைமையை மக்கள் தொடர்ந்து ஏற்றுக்கொள்ளும் விதமாக பல சீர்திருத்த நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. லஞ்சத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உலக அளவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டமானது ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான தற்காப்பு நிலையிலிருந்தே வகுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக நீண்டகால அடிப்படையிலான, உறுதியான ஆனால் மெதுவான அடிகளை எடுத்து வைத்து வருகிறது. இன்று சீனா உலக அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகவும் வாங்கும் சக்தி அடிப்படையில் முதலாவது பெரிய பொருளாதாரமாகவும் விளங்குகிறது. வர்த்தகத்தில் அமெரிக்காவை மிஞ்சி முதலாவதாக வந்துவிட்டது. மற்ற நாடுகளின் அரசியல் பிரச்சனைகளில் தலையிடாததால் சீனாவின் வர்த்தகம் மேன்மேலும் பல்வேறு நாடுகளுக்கு விரும்பத்தக்கதாக இருக்கிறது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிராக பொதுவாக வளரும் நாடுகளுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டு வருகிறது.

உலக ஒழுங்கமைவு: இவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையிலான உலக ஒழுங்கமைவுக்கு எதிராக, சீனா, ரஷ்யா, வளரும் நாடுகள், தென்அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நடவடிக்கைகளின் மூலம் ஒரு பல்துருவ உலக ஒருங்கமைவை நோக்கி உலகம் நகர்ந்து வருகிறது. அமெரிக்காவும் இதை உணர்ந்து (TTIP - Transatlantic Trade investment partnership) (TPP - Trans Pacific Partnership) போன்ற புதிய பொருளாதார அமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் வளரும் நாடுகளிடமிருந்து குறைந்து வரும் வருமானத்தை ஈடுகட்ட தனது ஆதரவு ஏகாதிபத்திய நாடுகளை நிர்பந்தப்படுத்துகிறது. மேலும் மேலும் தனது இராணுவத் தொழில் நுட்பத்தின் மூலம் உலக மேலாதிக்கத்தை தொடர முயற்சிக்கிறது. ஆனால் தொடர்ந்து அமெரிக்காவானது தன் மேலாதிக்கத்தை உலகில் தக்கவைப்பது நாளுக்கு நாள் இயலாததாகவே மாறி வருகிறது.

Pin It