தமிழக வரலாற்றில் ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் வென்றான்’ என புகழப்படுகிற முதலாம் ராஜேந்திர சோழன் (ஆட்சிக் காலம் கி.பி.1014-1044), சோழ சாம்ராஜ்யத்தின் மன்னராக அரியணை ஏறிய 1000மாவது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளதாக ராஷ்ட்ரிய சுயம் சேவக்கானது அறிவித்துள்ளது. "இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புறம் கஜினி முகமதுவின் தாக்குதலுக்கு உட்பட்ட போது, அமைதியையும், வளத்தையும் ஒட்டுமொத்த தெற்காசிய பிராந்தியத்திலும் தடையற்ற வணிகம் செய்திடுவதையும் இந்தியர்களுக்கு (குறிப்பாக தமிழ் வணிகர்களுக்கு) உறுதிப்படுத்திட வலுவான ஆட்சியை ராஜேந்திர சோழன் தந்தார் என்றும், எண்ணாயிரம் என்ற இடத்தில் வேதங்களை கற்பிக்கும் பல்கலைகழகம் ஒன்றை உருவாக்கினார் என்றும், இத்தகைய பெருமைக்குரிய ஆட்சியாளரை, அவரது ஆயிரமாவது ஆண்டு விழாவில் நினைவு கூர்வது என்பது மக்களுக்கு உணர்வூட்டும் என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவரான (சரக்காரியாவா) சுரேஷ் பையாஜி ஜோஷி, லக்னோவில் தெரிவித்துள்ளார்.

Shiva-and-King-Rajendra-Cholaகூடுதலாக ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது என்னவெனில், முதலாம் ராஜேந்திர சோழன் கங்கை கரையைக் கடந்து ஒட்டுமொத்த தெற்கு பாரதத்திலும் தனது ஆட்சியை விரிவுபடுத்தியதோடு, இலங்கை, லட்சத்தீவுகள், மாலத் தீவுகள், மியான்மர், இந்தோனேஷியா, மலேசியா, லாவோஸ், கம்போடியா,வியட்னாம் வரையிலும் ஆட்சியை விரிவுபடுத்தினார்; சிறந்த நிர்வாகத் திறமை மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட இராணுவத்தால், அவரது ஆட்சியில் ஏற்றுமதி, வர்த்தகம், கலை இலக்கியம், கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை இப்பிராந்தியம் முழுவதும்செழித்தோங்கியது என்றும் கூறியது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும் "தமிழ் பண்பாட்டையும், வணிகத்தையும் விரிவாகப் பரப்புவதற்கு பணியாற்றிய முதலாம் ராஜேந்திர சோழன் அனைவராலும் அங்கீகரிக்கப்படுவது பெருமைக்குரிய விசயமாகும்.” என கருத்து தெரிவித்துள்ளார்.

திராவிடக் கட்சிகள் சோழர்களின் ஆட்சியை, வடவரை வென்ற, கடல் கடந்து தமிழர் ஆட்சிக் கொடியேற்றிய, தமிழர் பெருமிதமாகத்தான் சித்தரித்து வந்துள்ளன; ராஜராஜசோழனுக்கு பிரம்மாண்டமான அரசு விழாக்கள் எடுத்தன. திராவிடக் கட்சித் தலைவர்கள் தங்களை சோழனாகக் கூட பீற்றிக்கொண்டனர். ஆனால், திராவிட, தமிழ்த்தேசியக் கட்சிகள், பரப்புரையாளர்கள் அதிர்ந்து போகும் வண்ணம், முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சியை இந்துப் பெருமிதத்தின் அடையாளமாக கொண்டாடப் போவதாக ஆர்எஸ்எஸ் அறிவித்துள்ளது, தமிழக அரசியல் வரலாற்றின் நகை முரண் தான்!

இனத் தூய்மை, ஆரியப் பெருமிதம், பார்ப்பனியம், இந்துத்துவா ஆகிவற்றை கொள்கை-கோட்பாடுகளாக கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ், முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சிப் பெருமையை தற்போது உயர்த்திப் பிடிப்பது திட்டவட்டமான அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலானதாகும். தமிழக அரசியலில் தேசியக் கட்சியான காங்கிரஸ் கிட்டத்தட்ட அகற்றப்பட்டு விட்டது; பாரதிய ஜனதா அந்த இடத்தை பெற விரும்புகிறது; எனவே, தத்துவம்-சித்தாந்தம், வரலாறு, பண்பாடு அனைத்து தளங்களையும் கைப்பற்ற ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. தமிழக வரலாற்றை ஆர்எஸ்எஸ் விரும்பும் பாரத வரலாற்றுடன் இணைக்கவும் எத்தனிக்கிறது.

முதலாம் ராஜேந்திர சோழன் படையெடுப்புகளும், கஜினி முகமதுவும்

‘ஏகாதிபத்தியமாக எழுந்த சோழப் பேரரசு’ என்பதுதான் மாமன்னன் ராஜராஜன் மற்றும் முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சிகளாகும். கிபி 985 முதல் 1014 வரை ஆண்ட முதலாம் ராஜராஜன் சோழ சாம்ராஜ்ஜியத்தை கட்டமைத்தான். அதிலும் பங்கேற்று, அதன் தொடர்ச்சியாகவும் ஆட்சி செய்தவன் முதலாம் ராஜேந்திரன். கிபி 1012ல் இளவரசனாக பட்டம் ஏற்று, கிபி 1014ல் மன்னராக அரியணை ஏறினான். ராஜராஜன் காலத்திலேயே பல போர்களுக்கும் ராஜேந்திரன்தான் தலைமையேற்றான். தனது ஆட்சிக் காலத்தில், சோழப் பேரரசின் எல்லைகளை விரிவுபடுத்த ராஜராஜன், பாண்டியர், சேரர் ஆட்சிகளை எதிர்த்துப் போர் புரிந்தான் எனில், முதலாம் ராஜேந்திரன் கடல் கடந்து சென்று, எல்லைகளை விரிவாக கட்டமைத்தான். சேர நாட்டுடன் கேரளாவில் நடைபெற்ற குடநாட்டுப் போர்களுக்குத் தலைமை தாங்கினான்; சோழப் பேரரசுக்கு வடமேற்கில் இருந்த துளு, கொங்கணம், இராட்டிரகூடம் மற்றும் தெலுங்குப் பிரதேசங்களையும் கூட ராஜேந்திரன் வெற்றி கொண்டான்; மேலை சாளுக்கிய மன்னன் சத்தியாகிரயன் மீது மாமன்னன் ராஜராஜன் நடத்திய தாக்குதலுக்கும் தலைமை தாங்கினான். அப்போது கைப்பற்றிய இரட்டப்பாடி ஏழரை இலக்கம் என்ற நாட்டை முதலாம் ராஜேந்திரன் எரியூட்டினான்; பார்ப்பனரையும், குழந்தைகளையும் கொன்று குவித்தான்; பெண்களை பாலியல் ரீதியாக சூறையாடினான் என்று சத்தியாகிரயனின் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. பல்லாயிரக்கணக்கான போர்வீரர்களுடன் ராஜேந்திரன் நடத்திய பெரும் போரால் மேலை சாளுக்கியர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. அவனது படைகள் சூறையாடிய செல்வங்களில் ஒரு பகுதி தஞ்சைப் பிரகதீஸ்வர் பெரிய கோவிலுக்கு வழங்கப்பட்டது.

முதலாம் ராஜேந்திர சோழன் நடத்திய போர்களைப் பற்றி பல கல்வெட்டுகளும், திருவேலாங்காட்டுச் செப்பேடுகளும் (கிபி 1017) விரிவான செய்திகளை தெரிவிக்கின்றன. தன் வாழ்நாளின் பெரும் பகுதியை போரிடுவதிலேயே அவன் செலவழித்தான். கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா, உத்திரப்பிரதேசம், வங்காள தேசம் வரையிலும்(ரெய்ச்சூர், குல்பர்கா, பஸ்தார், மிதுனபுரி....) கடல் கடந்து ஈழம், மாலத்தீவுகள், மலேசியாவின் கடாரம், சுமத்திரா தீவின் ஸ்ரீவிஜயம் என பல்வேறு ஊர்களின் பெயர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. கிழக்கு கடற்கரையை கட்டுப்படுத்தினான்; கடல் வணிகத்தை பலப்படுத்தினான். ராஜேந்திர சோழன் வட படையெடுப்பு பயணத்தில் பல மன்னர்களையும் வென்றான். கங்கை வெளியைக் கடந்தான், வங்காளம் வரை சென்றான். இக்காலகட்டத்தில்தான், (உத்திரப்பிரதேசத்தின் அயோத்தி உள்ளிட்ட ஒரு பகுதியான) கன்னோஜ் என்ற நாட்டை கஜினி முகமது (கிபி 1018, 1019, 1021-22) மூன்று முறை தாக்கினான்; கன்னோஜ் நாட்டைப் பாதுகாக்க, தனக்கு எதிராக கூட்டணி அமைத்த சாந்தேலா மன்னன் வித்யாதரனை கஜினி ஒழிக்க முயற்சித்தான். அண்டை நாட்டு மன்னர்களான போஜராஜன், காங்கேய விக்ரமாதித்தியன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து ராஜேந்திரனும் வித்யாதரனுக்கு உதவி செய்ததாக குறிப்புகள் உள்ளன.

அக்காலத்தில் மதுரா மிகப் பெரிய செல்வக் களஞ்சியமாக திகழ்ந்தது. அதனை கொள்ளையடிக்க கஜினி முகமது பலமுறை படையெடுத்தான்; கொள்ளையடித்தான். அதே மதுராவை ராஜேந்திர சோழனும் வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையில் ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை என்கிறார், வரலாற்றாய்வாளர் கே.கே.பிள்ளை (பக்கம் 278, 279 தமிழக வரலாறு-மக்களும் பண்பாடும்).

கன்னோஜ் மற்றும் மதுராவில் முதலாம் ராஜேந்திரனுடைய பிரதிநிதிகள் ஆட்சியும் செய்தனர். முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் வட இந்தியாவில் எந்தவொரு பெரிய சாம்ராஜ்ஜியமும் நிலவவில்லை. சிறிய நாடுகளின் அரசாட்சிகளே இருந்தன. எனவே தான் ராஜராஜனும், ராஜேந்திரனும் விரிவானதொரு சோழ சாம்ராஜ்யத்தைக் கட்டமைத்தனர். சிறிய நாடுகளின் மன்னர்கள் தங்களுக்குள் நடத்திய ஓயாத போர்கள்தான் வெளி நாட்டு மன்னர்களையும் வரவழைத்தது. பலவீனமடைந்திருந்த வட இந்தியாவின் செல்வ செழிப்பான பகுதிகளை கஜினி முகமது, ராஜேந்திர சோழன் போன்றவர்களும் தாக்கி சூறையாடினர். இசுலாமியர் என்பதால், கஜினி முகமதுவின் படையெடுப்பு வன்மமாக இந்துத்துவா சக்திகளால் சித்தரிக்கப்படுகிறது; ராஜேந்திர சோழனின் படையெடுப்பு தேசப் பாதுகாப்பு போல சித்தரிக்கப்படுகிறது. ஆர்எஸ்எஸ் இந்து-முசுலிம் துருப்புச் சீட்டை விளையாட வசதியாக முதலாம் ராஜேந்திர சோழனை மகிமைப்படுத்துகிறது. உலக வரலாற்றில் எல்லாவிதமான பேரரசுகளின், ஏகாதிபத்தியங்களின் நோக்கம் பிற நாடுகளிலிருந்த செல்வங்களை கொள்ளையடிப்பதும், வணிக எல்லைகளை விரிவுபடுத்துவதும், பெயரும் புகழும் பெறுவதாகவும்தான் இருந்துள்ளது. அதற்காக போர்களையும் நடத்தின; சமயங்களையும் வளர்த்தன.

முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சியில் மன்னனின் பேராதரவோடு சைவம் மற்றும் வைணவம் என இரு மதங்களும் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருந்தன. சரிவிலிருந்தாலும், பவுத்தமும், சமணமும் கூட மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்தன; அரசனால் பராமரிக்கவும்பட்டன. ஸ்ரீவிஜய நாட்டின் (சுமத்திரா) மன்னன் சைலேந்திரன் வேண்டுகோளுக்கு இணங்க நாகப்பட்டின சூடாமணி விகாரை பௌத்த மடத்துக்கு ராஜராஜன் ஆனை மங்கலம் என்ற கிராமத்தை தானமாக வழங்கியிருந்தான். ராஜேந்திர சோழன் பட்டத்திற்கு வந்தபிறகு அக்கிராமத்தை அம்மடமே தொடர்ந்து சூரிய சந்திரர் உள்ளவரை அனுபவித்து வர ஆணை பிறப்பித்தான். எந்தவொரு குறிப்பிட்ட மதத்திற்கும் எதிராக ராஜேந்திர சோழன் செயல்படவில்லை.

சுரண்டல், அதிகார மையங்களாக கோவில்கள், மடங்கள், பார்ப்பனியம்

காவிரி டெல்டாவை அடிப்படையாகக் கொண்டு உருவாகி, விரிந்து பரந்த சோழப் பேரரசிற்கு, விரிந்த ஆட்சியதிகாரத்தை கட்டிக் காக்க, புதியதொரு நிலமானிய பொருளாதாரத்தை உருவாக்கிடுவதும், கோவில்கள், மடங்களை உருவாக்கி வலுப்படுத்துவதும், சமயமும் அவசியமாக இருந்தது. பார்ப்பனர் முதல் படைத் தளபதிகள் வரை பெற்ற நில மானியங்கள், கோவில்கள் மடங்களுக்கு வழங்கப்பட்ட ஏராளமான நிலங்கள், அதைக் கட்டுப்படுத்திய பார்ப்பனர்கள், வேளாளர்கள், மற்றும் பார்ப்பனர்களின் தலைமையிலான ஆட்சி நிர்வாக முறை என சோழர் காலப் பொருளாதாரம், ஆட்சி நிர்வாகம் செயல்பட்டது. பார்ப்பனர்கள் பெற்ற பிரமதேய கிராமங்கள், சதுர்வேதி மங்கலங்கள், பிரபுக்களும் நிலவுடமையாளர்களும் (தனக்கு சீவிதமான நிலங்களை) சந்ததியினரும் அனுபவிக்கத்தக்க வகையில் பெற்ற இறையிலிகள், கோவில்கள் பெற்ற தேவதானங்கள் (சிவன் கோவில்), திருவிடையாட்டம் (விஷ்ணு கோவில்கள்), மடப்புரம் (மடங்கள்) எனக் கல்வெட்டுகள் நில மானிய முறையை விளக்குகின்றன. ஆர்எஸ்எஸ் பாராட்டும் முதலாம் ராஜேந்திரனுடைய சிறந்த நிர்வாகத் திறமையின் (!) கீழ், நேரடியாக உற்பத்தியில் ஈடுபடாத ஒட்டுண்ணி (மறைமுக) நிலப்பிரபுக்களாக இருந்த பார்ப்பனர்களும் வேளாளர்களும் குத்தகை விவசாயிகளை ஒட்டச் சுரண்டினர். வெள்ளான் வகை நிலங்கள் எனச் சொல்லப்படுகிற சிறிய விவசாயிகளிடமிருந்த (உழுவித்துண்பார்) நிலவுடமைகளும் கூட பறிக்கப்பட்டு பிரமதேயங்களாக, இறையிலியாக, தேவதானங்களாக மாற்றப்பட்டன.

GangaiKonda Cholapuram

சோழப் பேரரசிற்கு தன்னை நிலை நிறுத்திக் கொள்ள சைவ சித்தாந்தம் போன்றதொரு பெருந்தத்துவத்தின் தேவையும், கோவில்கள், மடங்கள், ஆட்சியதிகாரத்தை கட்டிக் காப்பாற்றிட பெருமளவு பார்ப்பனர்களின் தேவையும் உருவானது. கி.பி 8 ஆம் நூற்றாண்டில் காவிரி டெல்டாவிற்கு (குறிப்பாக உறையூரைத் தலைநகராகக் கொண்டு தாங்கள் ஆட்சி செய்த பிரதேசத்திற்கு) தெலுங்கு சோழர்கள் திரும்பிவருவது நிகழ்ந்தது. தெலுங்கு பார்ப்பனர்கள் உள்ளிட்ட பல்வேறு தெலுங்கு சாதியினரின் வருகையும் அக்காலகட்டத்தில் துவங்கிவிட்டது. எனினும், முதலாம் ராஜராஜன், ராஜேந்திரன் ஆட்சிகளில், ஆந்திரம், கர்நாடகம் போன்ற பகுதிகளிலிருந்து ஆயிரக் கணக்கான பார்ப்பனர்கள் வரவழைக்கப்பட்டனர்; அர்ச்சகர்களாக, புரோகிதர்களாக, வேத பாராயணம் செய்பவர்களாக அமர்த்தப்பட்டனர்; பொன், பொருள், குடியுரிமைகள் வழங்கப்பட்டன. அக்கிரகாரம், அகரம், பிரமதேயம், சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் கிராமங்களே தானங்களாக அவர்களுக்கு வழங்கப்பட்டன. அக்கிராமங்களுக்கு வரிகள், ஆயங்கள், கடமைகளிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டது. சாத்திரங்களும், புராணங்களும் எழுந்தன. அவற்றை பார்ப்பனர்கள் பயில்வதற்கென்று பல வேத சாலைகள் அமைக்கப்பட்டன. அங்கு வடமொழி (சமஸ்கிருத) இலக்கிய, இலக்கணங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இராசராச சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் (விழுப்புரம் மாவட்டம்-எண்ணாயிரம் கிராமம்) முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் நடைபெற்று வந்த வேதபாடசாலையில் 340 பார்ப்பன மாணவர்கள் பயின்றனர். 14 ஆசிரியர்கள் வேதாந்தம் கற்றுத் தந்தனர். நெல்லையும், தங்கத்தையும் ஊதியமாகப் பெற்றனர். ஆர்எஸ்எஸ் இதைப் போற்றி புகழ்கிறது.

சோழர் காலத்திற்கு முன்பு கோவில்கள் மிகச் சிறியவையாக இருந்தன. பல்லவர் காலத்து கோவில்களும் மிகச் சிறிய குடைக் கோவில்களே! (மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் போன்றவை.) ஆனால் சோழர் காலத்தில்தான் பிரம்மாண்டமான கற்கோவில்கள் கட்டப்பட்டன. கி.பி 1012ல் தஞ்சையில் ராஜராஜன் பிரகதீஸ்வர் (பெரிய) கோவிலை கட்டினான். பல ஊர்களிலும் பல கோவில்கள் கட்டப்பட்டன. தஞ்சைப் பிரகதீஸ்வர் கோவில் 500 அடி நீளம், 200 அடி அகலப் பரப்பில் உள்ளது. கோயில் கருவறையின் மேல் 190 அடி உயரத்தில் விமானம் உயர்ந்து நிற்கின்றது. இதே போன்றதொரு அமைப்பில் தான் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் கோவிலைக் கட்டினான். அதன் விமானத்தின் உயரம் 160 அடி மட்டும் தான். இக் கோவில்களை கட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும், போரில் சிறைப்பட்ட கைதிகளையும், போரில்லாத காலத்தில் உள்நாட்டுப் படைகளையும் ஈடுபடுத்தினார்கள். இக்கோவில்களின் கோபுரங்கள், கட்டிடங்கள் மீது பெரும் பாறைகளைக் கொண்டு செல்லவும், கோவில்களைக் கட்டவும் ஏராளமான ரத்தம் சிந்தப்பட்டுள்ளது. கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலைக்காக ஆர்எஸ்எஸ் பெருமைகொள்ளும் இக்கோவில்களின் கீழே புதையுண்ட ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் மரண ஓலங்கள், ஓராயிரம் ஆண்டு கழித்தும் இன்னமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

கொடுஞ்சுரண்டலும், பெண்களின் இழி நிலையும்

“கலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்
பிரகதீஸ்வரர் ஆலயத்துக்காக
குடும்பவிளக்கின் கொழுந்துகளை எல்லாம்
மண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்
தஞ்சை நகரில் தேவடியார் தெருக்களுக்குக்
கால்கோள் விழாச்செய்த காமுகன்
இம் மன்னன்.- “

என ஸ்ரீராஜராஜேச்சுவரியம் என்ற கவிதையில் மாமன்னன் ராஜேந்திரன் பற்றி மக்கள் கவிஞர் இன்குலாப் கூறுகிறார்.

சக்கரவர்த்திகள் என்று பெருமைப்படுத்திக் கொண்ட, சோழ மன்னர்கள் கேளிக்கை, களியாட்டங்களுடன் இன்பகரமான வாழ்க்கையை துய்த்து வந்தனர். ராஜராஜனுக்கு பதினைந்து மனைவியர், ராஜேந்திர சோழனின் மனைவியரில் கல்வெட்டு மூலம் அறியப்பட்டவர் நால்வர். பெரிய அரண்மனைகள், அந்தப்புரங்கள். மன்னருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பணி செய்வதற்கென்று ஏராளமான பணிப் பெண்கள் என பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்பட்டனர்.

சோழர் கால கல்வெட்டுகள் தேவரடியார்கள் என்கிற கோவில் பணிப்பெண்களைப் பற்றி ஏராளமாக சொல்கிறது. தேவாரம், திருவாசகம் ஓதுவதும், நடனங்கள் ஆடுவதும் அவர்களது பணிகளாக சொல்லப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலுக்காக ராஜராஜன் நானூறு தேவரடியார்களை அமர்த்தினான்; தனித்தனி இல்லங்களும் இரண்டு வீதிகளும் அமைத்துக் கொடுத்திருந்தான்; அவர்களது பெயர்களும், வீடுகளின் கதவு எண்களும் ஒன்றுவிடாமல் ராஜராஜன் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. பல கோவில்களுக்கும் பெண்கள் விற்கப்பட்டுள்ளனர். தேவரடியார்கள் பாதங்களில் சூலக்குறியிடுவது வழக்கமாக இருந்தது. தேவரடியார்கள் என்ற பெயரில் மன்னர்களும், உயர்குடியினரும் விபச்சாரத்திற்குள் ஏராளமான பெண்களைத் தள்ளினார்கள் என்பதுதான் சோழர்கள் வரலாறு சொல்லும் அவமானகரமான செய்திகளாகும். தேவதாசி முறையை அரங்கேற்றிய இந்த ஆட்சியாளர்களைத்தான் பெருமையுடன் ஆர்எஸ்எஸ் நினைவு கூற விரும்புகிறது. கங்கைகொண்ட சோழபுரம் கோவில் பற்றிய ஸ்ரீராஜேந்திரச்சுவரியம் கவிதையில் பொதிகைச்சித்தர் பின்வருமாறு கூறுகிறார்:

“பிற மன்னர் மலை குவட்டில் கொடி பதித்தது
சோழ சாம்ராஜ்ய விரிவாக்கம்
சிவன் கோவில் தாசியர் முலை குவட்டில் சூலக்குறி பதித்தது
மதன காமராஜ்ய அமலாக்கம்”

சோழ சாம்ராஜ்யத்தை கட்டியமைப்பதற்காக நடைபெற்ற போர்களுக்காக இலட்சக் கணக்கான படைவீரர்கள், ஆயிரக் கணக்கான குதிரை, யானைப் படைகள் போன்றவற்றிற்காக பெரும் செலவு ஆனது. கடல் வாணிகத்தில் ஈடுபட்ட வர்த்தகர்கள் அளித்த வரிகளோ, ஆங்காங்கு கொள்ளையடிக்கப்பட்டதன் மூலம் திரட்டப்பட்ட செல்வமோ, குறுநில மன்னர்களின் திறைகளோ, கப்பங்களோ போதுமானதாக இருக்கவில்லை. இலட்சக் கணக்கான போர் வீரர்களின் ஊதியத்தை கோவில்கள் ஏற்றுக் கொண்டன என பல கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. தஞ்சை பெரிய கோவில் பணிகள் நடைபெற 35 கிராமங்களை சர்வமானியமாக விட்டதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

தொடர்ச்சியான போர்களுக்கும், கோவில்களுக்கும், அரண்மனை ஆடம்பர செலவுகளுக்கும் தேவையான நிதிக்கு சாதாரண மக்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டன. வரி வசூலிக்கும் உரிமை ஊர்ச்சபையிடம் விடப்பட்டிருந்தது. உயர்குடியினர் ஆதிக்கத்திலிருந்து அச்சபையானது உழைக்கும் மக்களை, விவசாயிகளை கசக்கிப் பிழிந்தது. நானூறுக்கும் மேற்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன. கல்யாண வரி, தண்ணீர் வரி, ஊடு பயிருக்கு வரி, முருக கோவிலுக்கு வரி, நாடு காவலுக்கு வரி என அவை பலவகைப்பட்டவை- நிலத்தின் தரம் (பயிர்களுக்கு ஏற்ப) வரிகள் விதிக்கப்பட்டன. தந்திரிமார் செட்டி, கைக்கோள நெசவாளர், குயவர், நாவிதர், வண்ணார், வாணியர், பறையர் என பலர் மீதும் தொழில் வரி விதிக்கப்பட்டன. அரசாங்க நிர்வாகிகளும், பார்ப்பனரும், நிலவுடமையாளரும், அரசாங்கத்தின் சார்பாக வசூலித்த வரியையும் கையாடினர். வரிகளுக்கு எதிரான கலகங்கள், வரிச் சுமைத் தாங்காமல் ஊரை விட்டு ஓடியது பற்றிய கல்வெட்டு செய்திகளும் உள்ளன. சோழர் கால ஏழ்மை நிலை பற்றி பெரிய புராணம் பல செய்திகளை சொல்கிறது. ராஜேந்திர சோழன் உறுதிப்படுத்தியதாக ஆர்எஸ்எஸ் கூறும் ‘அமைதி, வளம்’ இப்படியாகத்தான் இருந்தது.

கங்கை கொண்ட, கடாரம் வென்ற சோழப் பேரரசு, முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சி உருவாக்கிய சொந்த சுமைகளால் படிப்படியாக கலகலத்துப் போய், மூன்றாம் ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில், இருநூறு ஆண்டுகளில் முற்றிலும் சரிந்து போனது. சமூகத்தின் உபரி உற்பத்தியை உற்பத்தியல்லாத நடவடிக்கைகளில் (போர்கள் முதல் கோவில்கள் வரை) சீரழித்தது, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின்மை, பார்ப்பன வேளாள ஒட்டுண்ணி நிலப்பிரபுத்துவ, உயர்குடி பிரிவினரின் சுரண்டல்கள், எதிரான கலகங்கள், வலங்கை-இடங்கை பிரிவுகளின் மோதல்கள், மன்னர் குடும்பத்திற்கு இடையிலான போர்கள்- போன்றவை சோழப் பேரரசை சரிவுக்கு இட்டுச் சென்றன. ஆர்எஸ்எஸ் கோரியது போல ராஜேந்திர சோழனிடம் பெருமை கொள்வதற்கோ, உற்சாகம் பெறுவதற்கோ எதுவுமில்லை.

கல்வெட்டுகள், இலக்கியங்கள், அகழ்வாய்வு பொருட்கள், வெளிநாட்டினர் குறிப்புகள் மற்றும் ஆவணங்கள் எனப் பலவகையான தரவுகளை ஆய்வு செய்ததன் மூலமாக தமிழக வரலாற்றை எழுதியுள்ள வரலாற்றாசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரிகள், கே.கே.பிள்ளை, தமிழறிஞர்கள் கா.சிவத்தம்பி, நா.வானமாமலை, கோ.கேசவன் மற்றும் வெளி நாட்டு அறிஞர்களான பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கொரசிமா, கத்லீன் கௌ.... போன்ற பலரும் சோழர் பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளனர். இவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு புதிதாக வரலாற்றை எழுத ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது. வரலாறு திரிக்கப்படுகிறது. தமிழக வரலாற்றை இந்துத்துவா மயமாக்கும் சதியை இடது-சனநாயக சக்திகள் முறியடிக்க வேண்டும்.

- சந்திரமோகன்

Pin It