ஒரு லிட்டர் பாலின் விலையை 6.10.2014 முதல் ரூ.2/- உயர்த்துவதாக ஹெரிடேஜ் பால் நிறுவனமும், திருமலா பால் நிறுவனமும் 4.10.2014 அன்று அறிவித்து உள்ளன. எருமைப் பால் கிடைப்பது அரிதாக உள்ளது என்றும், ஆக்கச் செலவுகள் (input expenditure) அதிகரித்து உள்ளதாகவும், அதனால் விலை உயர்வைத் தவிர்க்க முடியவில்லை என்றும் அவை கூறி உள்ளன. அதே நேரத்தில் ஆரோக்கியா பால் நிறுவனமும், கவின்கரே பால் நிறுவனமும் இப்போதைக்கு விலையை உயர்த்தப் போவது இல்லை என்று கூறி உள்ளன.

aavin milkஅரசுத் தயாரிப்பான ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.24 / ரூ.30க்கு விற்கப்பட்டுக் கொண்டு இருக்கும் பொழுது தனியார் நிறுவனங்களின் பால், லிட்டர் ஒன்றுக்கு ரூ.42 / ரூ.44 என விற்கப்படுகிறது.

முதலாளித்துவ அறிஞர்கள் அரசு நிர்வாகம் திறமைக் குறைவானது என்றும், ஆகவே நிர்வாகச் செலவுகள் அதிகமாக இருக்கும் என்றும், இதன் விளைவாக அதன் உற்பத்திப் பொருள்களின் விலை, திறமை மிக்க நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தனியார் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களின் விலையை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறுவார்கள். ஆனால் திறமையான நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தனியார் நிறுவனங்களின் பாலின் விலை அரசின் பாலின் விலையை விட 75% அதிகமாக இருந்தும், மேலும் உயர்வதைப் பற்றி முதலாளித்துவ அறிஞர்கள் வாயைத் திறக்கவே இல்லை.

இப்படி திடீரென்று பாலின் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது?

அரசு நிறுவனமான ஆவின் பால் நிறுவனம் மிகப் பெரிய நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தையும் தானே செய்யும் வலிமையைப் பெற்று உள்ளது. ஆனால் உலகமயம், தாராளமயம், தனியார்மயம் எனும் கொள்கைகள் கோலோச்சிக் கொண்டு இருக்கும் இக்காலத்தில், அரசின் பொறுப்பை முழுமையாகக் கை கழுவ முடியாத போது, அதன் பணிகளில் சில கை கழுவப்பட்டுத் தனியார்களிடம் ஒப்படைக்கப் படுகின்றன. அவ்விதத்தில் சென்னைப் பெருநகரில், பாலை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்லும் பணி ஒரு தனியாருக்கு ஒப்பந்தம் மூலமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த "அதிகாரத்தைப்" பெற்ற அந்த ஒப்பந்தக்காரர், பெற்றுக் கொண்ட பாலில் கணிசமான பகுதியைத் தனியார் நிறுவனங்களுக்கு விற்று விட்டு, அதற்கு ஈடாகத் தண்ணீரைக் கலந்து, கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்து இருக்கிறார். 'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பது போல, சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட 1600 லிட்டர் பாலைக் கொண்ட ஒரு வண்டி 19.8.2014 அன்று விழுப்புரத்தில் பிடிபட்டு உள்ளது. பின் சென்னையில் தண்ணீர் கலக்கப்பட்ட பாலில் 1600 லிட்டர் தண்ணீர் கலக்கபட்டது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக 19.9.2014 அன்று அந்த ஒப்பந்தக்காரர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பொதுவாக இது போன்ற முறைகேடுகள் நடக்கும் போது அதன் தொடர்பாக இளித்தவாயர்கள் யாரையாவது பலி கடா ஆக்கி விட்டு, முறைகேடுகள் தெடர்வது முதலாளித்துவ அமைப்பில் வழக்கமான நடைமுறையாகும். ஆனால் இவ்வழக்கில் தொடர்பானவர்கள் இளித்தவாயர்களாக இல்லாத காரணமோ என்னவோ, பிடி இறுகிக் கொண்டே போகிறது. இதில் உள்ள சிக்கல்களை எல்லாம் தீர்த்து வைக்க நிறைய காலம் தேவைப்படும் போல் இருக்கிறது. ஆகவே இம்முறைகேடு மூலம் "குறைந்த விலையில்" பாலைக் "கொள்முதல்" செய்ய முடிந்த நிறுவனங்கள், இப்போது அது முடியாமல் போக, அவர்கள் முன் இரண்டு வழிகள் இருந்திருக்கின்றன. ஒன்று கொள்முதல் செலவு அதிகமானதால் மூலதனம் அதிகமாகி இலாப விகிதம் குறையும் நிலையில், இதை விட அதிக இலாபம் தரும் தொழிலில் மூலதனத்தைத் திருப்ப வேண்டும்; அல்லது இலாப விகிதம் குறையாமல் இருப்பதற்காக விற்பனை விலையை உயர்த்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடி மிகுந்து உள்ள இன்றைய காலகட்டத்தில், (மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில்கள் நிறைய உள்ளன. ஆனால்) இலாபகரமாக முதலீடு செய்யும் தொழில்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. ஆகவே இரண்டாவது வழியான விலை உயர்வைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள்.

இரண்டு நிறுவனங்கள் விலையை உயர்த்தும் போது, வேறு இரண்டு நிறுவனங்கள் இப்போதைக்கு விலையை உயர்த்தப் போவது இல்லை என அறிவித்து இருப்பதானது, இந்நிறுவனங்களால் வேறு வழிகளில் "குறைந்த விலையில் கொள்முதல்” செய்ய முடிகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. இந்நிறுவனங்களுக்குள் முரண்பாடு தோன்றினால் மேலும் பல ஊழல்கள் வெளியே வரலாம். ஆனால் முதலாளிகள் ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொண்டு காலப் போக்கில் "குறைந்த விலையில் கொள்முதல்" செய்வதைப் பங்கிட்டுக் கொள்ளவும் கூடும்.

தனியார் நிறுவனங்கள் இருக்கும் வரையிலும் இது போன்ற முறைகேடுகள் நடப்பதற்கான விசை சமூகத்தில் இருக்கவே செய்யும். தனியார் நிறுவனங்களை முற்றிலும் ஒழித்து விட்டால் இம்முறைகேடுகள் நடப்பதற்கான அடிப்படை வலுவிழந்து விடும்.

இது பால் உற்பத்தியில் மட்டும் அல்ல. மக்களுக்குத் தேவைப்படும் அனைத்துப் பொருட்களின் உற்பத்திக்கும் பொருந்தும்.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 14.10.2014 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It