இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிணத்தில் சையத் முகமது என்ற இளைஞர் 14.10.2014 அன்று மதியம் சுமார் 1.30 மணியளவில் காவல் நிலையம் அருகில் உள்ள மெக்கானிக் கடையில் ஏற்பட்ட தகராறு காரண‌மாக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். அந்த காவல்நிலையத்திலிருந்த இளம் ஆய்வாளர் காளிதாஸ் என்பவரால் தாக்கப்பட்டு, பின் அவரின் துப்பாக்கியால் வெகு அருகில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அந்த நிகழ்வுக்குப் பின் சுமார் ஒரு மணி நேரம் கழித்து காளிதாஸ் தாக்கியதாக ஒரு பொய்யான ஜோடனையினை ஏற்படுத்தி, போலிஸ் தற்பாதுகாப்புக்காக மேற்கொண்ட மோதல் சாவு என பொய்யாக காவல்துறை சித்தரிக்கின்றது.

இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். தொடர்ந்து காவல்துறையின் அத்துமீறல்கள் தமிழகத்தில் அதிகரித்து வருவதன் வெளிப்பாடாகவும் இது உள்ளது. இந்த மனித உரிமை மீறலை மக்கள் சிவில் உரிமைக்கழகம் (Pஊச்ள்) வன்மையாக கண்டிக்கின்றது. உடனடியாக சம்மந்தப்பட்ட எஸ்.ஐ. காளிதாஸ் கொலைவழக்கில் கைது செய்யப்பட வேண்டும்.

காவல்துறையின் இத்தகைய அத்துமீறல் போக்கு சனநாயக சமூகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது; நீதிமன்றங்களின் நீதி செயல்பாடுகளின் மீது நிகழ்த்தப்படும் தாக்குதலாகவும் உள்ளது. இந்தப் படுகொலையானது சிறுபான்மை இஸ்லாமிய சமூகத்தினரிடையே பாதுகாப்பின்மை உணர்வினை அதிகப்படுத்தியும் உள்ளது.

மோதல் சாவுகள் குறித்து கடந்த 26.9.2014 தேதி PUCL தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, உடனடியாக மோதல் சாவுகள் குறித்து பாதிக்கப்பட்டோர் தரும் புகாரினை முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்து, அந்த வழக்கினை விசாரிக்க உயர் போலிஸ் அதிகாரி தலைமையில் வேறு காவல்நிலையத்தைச் சார்ந்த சி.பி.சி.ஐ.டி விசாரணை மேற்கொள்ள உத்திரவிடவேண்டும். மேலும் சம்மந்தப்பட்ட எஸ்.ஐ. காளிதாஸ் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்யப்ப்பட வேண்டும். விசாரணை முடிவடைந்து அவர் மீது குற்றமில்லை என நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை அவருக்குப் பணியோ அல்லது வேறு சலுகைகளோ தரப்படக்கூடாது. மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக சட்ட உதவி, இழப்பீட்டு உதவியினை தமிழக அரசு வழங்க வேண்டும்.

காவல்துறையில் உள்ள மோதல் குற்றவாளிகள் மற்றும் அந்த குற்றச்செயலில் ஈடுபட்டோரின் குற்றத்தை மறைக்க உதவிய அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் சனநாயக உரிமைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கையினை எடுக்க வேண்டும்.

- ச.பாலமுருகன், மாநிலச் செயலர், மக்கள் சிவில் சிவில் உரிமைக் கழகம் (PUCL)

Pin It