உயர்நீதி மன்ற நீதிபதி ஒருவரும், இரு மூத்த வழக்கறிஞர்களும் 11.7.2014 அன்று தமிழ் நாடு கிரிக்கெட் சங்க விழா ஒன்றிற்கு வேட்டி கட்டிச் சென்றதால், அது சங்கத்தின் விதி முறைகளுக்கு ஒவ்வவில்லை என்று அனுமதி மறுக்கப்பட்டனர். இதைப் பற்றி நீதிபதி கருத்து கூறும் போது அழைப்புப் பத்திரிக்கையில் உடை அணி நெறி (dress code) பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றும், ஆகவே இந்த அனுமதி மறுப்பில் நியாயம் எதுவும் இல்லை என்றும் கூறினார். இதே போன்று 1980ஆம் ஆண்டில் உச்ச நீதி மன்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் சிறுமைப் படுத்தப்பட்டதையும் நினைவு கூர்ந்தார். மேலும் வேட்டி அணிந்தவர்களுக்கு அனுமதி மறுக்கும் விதிமுறை ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டதாகவும், ஆங்கிலேயர்கள் அகன்று அறுபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆன பிறகும் அதே விதியை இயந்திரத்தனமாகப் பின்பற்றுவது துரதிருஷ்ட வசமானது என்றும் அவர் கூறினார்.

Booleஇந்நிகழ்வு நடந்த மறு நாளே (12.7.2014) வேட்டி தமிழ்ப் பண்பாட்டின் ஒரு அங்கம் என்றும், வேட்டி கட்டிய காரணத்திற்காக விழாவில் அனுமதி மறுத்தது கண்டனத்திற்கு உரியது என்றும், இது போன்று விதி முறைகள் இருந்தால், மாநில அரசாங்கம் தலையிட்டு அதை மாற்ற வேண்டும் என்றும் தி.மு.க. தலைவர் திரு.மு.கருணாநிதி அறிக்கை வெளியிட்டார். பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசும் இந்நிகழ்வு துரதிருஷ்ட வசமானது என்றும், மாநில அரசாங்கம் இது போன்ற விதிமுறைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறினார்.

தமிழ் நாடு சட்ட மன்றத்திலும் 14.7.12014 அன்று இந்நிகழ்வு பற்றிக் கட்சி வேறுபாடு இன்றி அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்தார்கள்.

மனமகிழ் மன்றங்கள் வேட்டி உடுத்தியவர்களை அனுமதிக்கும்படி சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.ஜி.இராமகிருஷ்ணன் 15.7.2014 அன்று தமிழக முதல்வரைக் கேட்டுக் கொண்டார். அன்று சேலத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தின் முன் இந்நிகழ்விற்கு எதிராகக் கண்டன முழக்கப் போராட்டத்தை நடத்தினர்.

இப்பிரச்சினையை 16.7.2014 அன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்காக ஒரு வழக்கறிஞர் தொடுத்த போது 'இதைச் சட்ட மன்றம் அல்லவா கவனிக்க வேண்டும்?' என்று தலைமை நீதிபதி கேட்டு இருக்கிறார். அன்றே முதலமைச்சரும், ‘வேட்டி கட்டி வந்ததால் அனுமதி மறுத்த செயல்’ அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி இருக்கிறார். உடனே தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத் தலைவரும், அரசாங்கம் மற்றும் முதல் அமைச்சரின் கருத்தை மதிப்பதாகக் கூறினார்.

ஆக, மலையைக் கெல்லி எலியைப் பிடித்தாகி விட்டது. இனி வேட்டி அணிந்து கொண்டு மனமகிழ் மன்றங்களுக்குச் செல்லலாம். தமிழ்ப் பண்பாடு வென்று விட்டது. (எல்லாரும் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்கோ)

ஆனால் தமிழர்களின் / ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் என்ன மேம்பாடு ஏற்பட்டு விடப் போகிறது?

அறிவும் திறமையும் அனைவருக்கும் பொது என்பதும், திறமைசாலிகள் அனைத்து வகுப்பு மக்களிலும் உண்டு என்பதும் மாற்ற முடியாத இயற்கை நியதி. இந்நியதிப்படி அனைத்து வகுப்பு மக்களும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும், அனைத்து நிலைகளிலும், அவரவர் மக்கள் தொகை விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்ட் வேண்டும். ஆனால் இந்நியதிக்கு முற்றிலும் எதிராகப் பொதுப் போட்டி முறையில் உயர் சாதிக் கும்பலினரே மிக மிகப் பெரும்பான்மையாகத் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். அதாவது திறமைசாலிகள் தேர்ந்து எடுக்கப்படாமல் திறமை குறைந்து இருந்தாலும் உயர்சாதிக் கும்பலினரே தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இது போன்று திறமைக் குறைவானவர்கள், திறமை தேவைப்படும் மேல் நிலை வேலைகளில் அமரும் போது நிர்வாகம் சீரழிகிறது. பொதுப் போட்டி என்ற பெயரில் நாட்டு நிர்வாகம் சீரழிக்கப்படும் இத்தேசத் துரோகச் செயல் இடைவெளி இன்றித் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதைப்பற்றி இம்மி அளவும் அக்கறை கொள்ளாமல் உடை அணி நெறி பற்றி ஏன் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்துகிறார்கள். ஆங்கிலேய மரபு என்று இவர்கள் சாடும் இவ்வுடை அணி நெறியை ஆங்கிலேயர்களே இவ்வளவு முக்கியமாகக் கருதவில்லையே?

இதே போன்ற நிகழ்வு ஒன்று புனேயில் 2.3.1888 அன்று நடந்தது. புனே நகரில் கனாட் கோமகன் (Duke of Cannaught) இளவரசர் ஆர்த்தூரையும், (Prince Arthur) கனாட் கோமகள் (Duchess of Cannaught) இளவரசி லூயி மார்க்ரெட்டையும் (Pincess Louise Margret) கவுரவிக்கும் விழாவிற்கு, விவசாயியான மகாத்மா சோதிராவ் ஃபுலே (மகாத்மாவாக அறியப்படுவதற்கு முன்) அழைக்கப்பட்டு இருந்தார். அவர் ஒரு மராட்டிய விவசாயி உடை அணிவது போல வேட்டி அணிந்து சென்றார். இன்று நடந்தது போலவே அன்றும் அவருக்கு விழாவில் அனுமதி மறுக்கப்பட்டது; அரச குடும்பத்தினரைக் காண வருபவர்கள் மேலங்கியும் கால்சட்டையும் (coat and suit) அணிந்து வர வேண்டும் என்றும் அவரிடம் கூறப்பட்டது. ஆனால் சோதிராவ் ஃபுலேயோ, தான் ஒரு விவசாயி என்றும், ஒரு இந்திய விவசாயி இப்படித்தான் உடை அணிகிறார் என்றும், ஒரு விசாயிக்கு விடுத்த அழைப்பை கோமகன் மதிப்பதாய் இருந்தால் விவசாயியின் உடையிலேயே அனுமதிக்க வேண்டும் என்றும், அவ்வாறு அனுமதிக்கவில்லை என்றால் தான் திரும்பிச் சென்று விடுவதாகவும் கூறினார். இதைச் செவியுற்ற கோமகன் உடனே, அவரை அனுமதிக்கும்படியும், அரச குடும்பத்தினரைக் காண வருபவர்கள் மேலங்கியும் கால்சட்டையும் அல்லது தேசிய உடை (suit or national dress) அணிந்து வர வேண்டும் என்று விதியைத் திருத்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.*

இந்த உடை அணி நெறியை ஆங்கிலேயர்களால் ஒரு நொடியில் மாற்றிக் கொள்ள முடிந்த போது நம்மால் ஏன் முடியவில்லை? கண்டனங்கள், போராட்டங்கள், கோரிக்கைகள் ஏன் தேவைப் படுகின்றன? ஏற்கனவே இது போன்ற நிகழ்வு 1980ல் நடந்து, அதன் பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன்?

ஆங்கிலேயர்களால் ஒரு நொடியில் அனாயாசமாகத் தீர்த்து வைக்கப்பட்ட ஒரு பிரச்சினையைத் தீர்க்க, ஒடுக்கபட்ட மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பிற கட்சிகள் ஏன் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்துகின்றன?

ஒன்றுக்கும் உதவாத பிரச்சினைகளில் இவ்வளவு ஆர்வம் காட்டும் இக்கட்சிகள், பொதுப் போட்டி என்ற பெயரில் காலம் காலமாக நடந்து கொண்டு இருக்கும் தேசத் துரோகச் செயலுக்கு எதிராக ஏன் போராடவில்லை. போராடுவது கிடக்கட்டும். குறைந்த பட்சம் பொதுப் போட்டி முறை ஒரு தேசத் துரோகச் செயல் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே? அதற்கு எதிரான பொதுக் கருத்தை உருவாக்கலாமே?

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் பொதுப் போட்டி முறை என்ற பெயரில் நடந்து கொண்டு இருக்கும் தேசத் துரோகச் செயலுக்கு எதிராக அணி திரளப் போகிறார்களா? அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்தில் சேலை கட்டிய பெண்களை அனுமதிக்க மறுக்கும் வரை பொறுத்து, அதற்கு எதிராகப் போராட ஆயத்தம் செய்து கொண்டே இருக்கப் போகிறார்களா?

- இராமியா

*இப்பொழுதும் பிரிட்டிஷ் அரசாங்கத்தினர், அரச குடும்பத்தினர் பங்கேற்கும் விழாக்களில் கலந்து கொள்ளப் பிற நாட்டினருக்கு அனுப்பும் அழைப்புப் பத்திரிக்கைகளில், உடை அணி நெறி பற்றிக் குறிப்பிடும் பொழுது 'suit or national dress' என்று குறிப்பிடுகின்றனர்.

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.7.2014 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It