நிதிநிலை அறிக்கை குறித்த மாற்றங்கள்

அரசின் பொருளாதாரக் கொள்கை ஆண்டுதோறும் சமர்ப்பிக்கப்படும் நிதிநிலை அறிக்கையில் வெளிப்படுகிறது. ஓர் அரசு தனது ஆதாரங்களையும், வருவாயையும் எப்படி, எதற்கு பெரிதும் பயன்படுத்தப்போகிறது, எதில் அக்கறை காட்டப்போகிறது என்பதை நிதிநிலை அறிக்கையைக் கொண்டு புரிந்துகொள்ளளாம். 1990களுக்குப் பிறகு அரசுகளால் தயாரிக்கப்படும் நிதிநிலை அறிக்கைகளில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை, உலகஅரங்கில் வேகமாக ஏற்பட்டுவரும் மாற்றங்கள், உலகமயமாதல், தாராளமயமாதல் மற்றும் தனியார்மயமாதல் போன்ற கொள்கைகள் அவற்றிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இதனால் பெரும்பான்மையாக உள்ள அடித்தட்டு மக்களின் நலன்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு “நாட்டு வளர்ச்சி” என்ற மாயை முன்னிறுத்தப்படுகிறது. எது உண்மையான வளர்ச்சி? என்று நிதானமாக சிந்திக்க அரசுகள் தவறி விடுகின்றன. உலகின் மிகச்சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான அமார்த்தியா சென், “ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டில் கடைநிலையிலுள்ள திறனற்ற மக்கள் அனைவரையும் திறன்மிக்கவர்களாக மாற்றுவதில்தான் அடங்கியுள்ளது.” என்று விளக்குகிறார். நாட்டின் எதார்த்தத்தங்களைப் புறந்தள்ளிவிட்டு தயாரிக்கப்படும் நிதிநிலை அறிக்கைகள் நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்கே கேடு விளைவிப்பதாக அமையும். இதைப் புரிந்துகொள்ளாமல் நமது நாட்டுக்குகந்த நேர்மையான நிதிநிலை அறிக்கையை தயாரிக்க முடியாது.

நிதிநிலை அறிக்கைக்கான அளவுகோல்

Arun Jaitleyநிதிநிலை அறிக்கை எவற்றை அடிப்படையாகவும், அளவுகோலாகவும் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பது முக்கியம். நமது நாட்டில் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கென்று ஏதாவது நெறிமுறைகள், ஒழுங்குகள் வகுக்கப்பட்டுள்ளனவா அல்லது ஆட்சியாளர்கள் தங்கள் விருப்பப்படி தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழில்முனைவோர், சந்தைப் பொருளாதாரம், மற்றும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றின் அடிப்படையில் தயாரிக்கிறார்களா என்று கூர்ந்துநோக்க வேண்டியுள்ளது. 1990க்குப் பின் தயாரிக்கப்படும் நிதிநிலை அறிக்கைகள் எல்லாமே பெரும்பாலும் வர்த்தகம், தொழில்முனைவோர் நலன்கள், பெருநிறுவனங்களின் தேவைகள், பன்னாட்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்பு, அந்நிய நேரடி முதலீடு, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி போன்றவற்றையே மையமாகக்கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அடிப்படையில் ‘நிதிநிலை அறிக்கை’ என்பது நாட்டில் வாழும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்தையே மையமாக வைத்து தயாரிக்கப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தின், 'திசைவழிகாட்டும் கோட்பாடுகள்' சுட்டிக்காட்டுகின்றன. நமது நாட்டின் பொருளாதாரம் குறித்த அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்றும் எப்படி இருக்கக்கூடாது என்றும் இந்த நெறிமுறைகள் தெளிவாக எடுத்தியம்புகின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 39 ஆவது பிரிவு, நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும், செல்வமும் உற்பத்தித்திறனும் பொதுநலனுக்கு எதிராக சிலரிடம் மட்டும் குவிந்து தேக்கமடைவதைத் தவிர்க்கும் வகையில் பொருளாதாரத்தை அரசு சீரமைக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகிறது.

மேலும், குடிமக்கள் தங்கள் வயதுக்கும், சக்திக்கும் அப்பாற்பட்ட வேலைகளில் ஈடுபட பொருளாதார நெருக்கடியின் காரணமாகத் தள்ளப்படாமல் தடுக்க வேண்டும். பொருளாதார நெருக்கடியினால் குழந்தைகள், இளையோர் போன்றவர்கள் சுரண்டப்படாமல் பாதுகாப்பது உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

இவை தவிர 48 ஆவது பிரிவு வேளாண்மை, கால்நடை வளர்ச்சி போன்றவற்றிற்கு முக்கியத்துவம் தருவது பற்றியும், பிரிவு 48A காடுகளையும், காட்டுவிலங்குகள், இயற்கை வளங்கள் இவற்றைப் பாதுகாத்து மேம்படுத்த கடும் முயற்சி எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.

இவ்வாறு அரசியலமைப்புச் சட்டம் பிரிவுகள் 36 முதல் 51 வரை சொல்லப்பட்டுள்ள அனைத்தும் இன்றைய இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும், பெரும்பான்மை அடித்தட்டு மக்களின் நல்வாழ்விற்கும் இன்றியமையாதவைகளாகும். ஆகையால், இந்திய அரசு நாட்டின் நிதிநிலை அறிக்கையைத் தயாரிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 4 ஆவது பகுதியில் சொல்லப்பட்டுள்ள இந்தத் திசைவழிகாட்டும் கோட்பாடுகளைத்தான் வழிகாட்டுதலாகக் கொள்ள வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நிதிநிலை அறிக்கையை எளிமையானதாகவும், நமது நாட்டுக்குப் பொருத்தமானதாகவும் தயாரிக்க முடியும்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக ஆட்சி புரிந்துவரும் மத்திய மாநில அரசுகள் அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள இந்த திசைவழிகாட்டும் கோட்பாடுகளை முற்றிலும் புறந்தள்ளிவிட்டு தங்களுக்கென தனிப்பட்ட நெறிமுறைகளை வகுத்துக் கொண்டு “பொருளாதார வளர்ச்சி” என்ற பெயரில் பெருவர்த்தக நிறுவனங்கள், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் ‘கார்ப்பரேட் கம்பெனிகளின்’ கைப்பாவையாகவே செயல்பட்டு வருகின்றன. அவர்களுக்கு ஏற்றவாறே நிதிநிலை அறிக்கைகளை தயார் செய்து பெரும்பான்மை மக்களை வஞ்சிக்கின்றன. ஒன்றுமில்லாததை ஊதிப்பெருக்கி வெறும் சடங்குத்தனமான நிதிநிலை அறிக்கையை ஆண்டுதோறும் தயார் செய்து மக்களை ஏமாற்றுவதற்கான மோசடித் திட்டமாகவே “நிதிநிலைஅறிக்கையை” பயன்படுத்தி வருகின்றன.

ஒவ்வாத வரிவிதிப்பு நடைமுறை

தனிநபர் வருமான வரிவிலக்கு என்பதில் பெரிய மாற்றம் இல்லை. இந்நாட்டில் பொருளாதார சீர்திருத்தம் செய்ய அடிப்படையில் என்ன செய்ய வேண்டும் என்று சாதாரண பாமரருக்கும் தெரிந்திருக்கும் நடைமுறை ஏனோ ஆட்சியாளர்களுக்கு மட்டும் தெரியாமல் போய் விடுகிறது.

தனிநபர் ஆண்டு வருமானம் ரூ. 10 இலட்சத்து ஒன்று முதல் எத்தனை ஆயிரம் கோடிகளை சம்பாதித்தாலும் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வெறும் 30% மட்டுமே வரி என்று மீண்டும் பழைய வருமான வரிவிதிப்பையே நடைமுறையாக்கியுள்ளது புதிய அரசு.

வருமான வரிவிதிப்பில் வருவாய் கூடக்கூட வரியை அதிகரிப்பதுதானே நியாயம்? தனிநபர் வருமானவரி விலக்கு என்பதை ரூ. 5 இலட்சம் வரை உயர்த்தி, ரூ. 25 இலட்சத்துக்கு மேல் ரூ. 50 இலட்சம் வரை 40% வரி என்றும், ரூ. 50 இலட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 50% வருமான வரி என்றும் விதித்திருந்தால் ஏராளமான வருவாயை அரசு கவர்ந்திருக்க முடியும். அப்படி செய்திருந்தால் வருமானவரி பெருகுவதோடு, குறைவான வருவாய் உள்ள பெரும்பான்மை மக்கள் வரிச் சுமையிலிருந்து விடுபட்டு நிம்மதியடைந்திருப்பார்கள். அவர்களின் வாங்கும் சக்தி அதிகரித்து நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். இதைத்தான், இயற்கை நீதியாக அரசுக்கு திசைவழிகாட்டும் கோட்பாடுகளும் உணர்த்துகின்றன. இது போன்றவற்றைத்தான் மக்கள் இந்தப் புதிய அரசிடம் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

2013 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் 259 பில்லியன் டாலர்கள் (இன்றைய மதிப்பீட்டில் சுமார் 15,54,000 கோடி ரூபாய்) எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஓர் ஆண்டின் இந்திய ஒட்டுமொத்த பட்ஜெட் அளவிற்கு சொத்து வைத்துள்ளார்கள். இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வருமான வரிவிதிப்பு அவர்களின் வருமானத்திற்கேற்றவாறு விதிக்கப்படுவதுதான் நீதியான அணுகுமுறையாகும். அதைச் செய்ய அரசு தவறிவிட்டது.

ஏழைகளை வறுத்தும் நிதிநிலை அறிக்கை

நிதி ஆதாரம் முக்கியமாக வருமான வரியிலிருந்து திரட்டப்படுகிறது. இதுதான் அரசுக்கு முக்கியமான வருவாயாக உள்ளது. மொத்த வரி வருவாய் 13 இலட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. இது தவிர பொதுத்துறையில் முதலீட்டினைக் குறைத்து அதன் பங்குகளைத் தனியாருக்கு விற்றுத் திரட்டப்படும் நிதி 60 ஆயிரம் கோடிகளுக்கு மேல். மேலும், ரூ. 2,50,000 வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்குக் கீழ் மிக சொற்பமான வருவாயில் வாழ்பவர்கள்தான் பலகோடி மக்கள். ஏறக்குறைய 40 கோடி மக்கள் மிகக் குறைந்த வருமானத்தைக் கொண்டு மட்டுமே உயிர் வாழ வேண்டியுள்ளது. அப்படி போதிய வருமானமின்றி தவிக்கும் ஏழைகள் மீது கடுமையான மறைமுக வரிகள் சுமத்தப்பட்டுள்ளன. விலைவாசியையும், கள்ளச்சந்தையையும் கட்டுப்படுத்த எந்த அறிவிப்பும் இல்லை. அரசின் சமூக மேம்பாட்டுக்கான செலவினங்கள் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகி அவற்றின் சுமைகளையெல்லாம் வருமானமே இல்லாத மக்கள்தான் சுமக்க வேண்டிவரும். ஏழ்மையும், வறுமையும் தாண்டவமாடும். வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கு எந்த உறுதியான திட்டமும் முன்வைக்கப்படவில்லை. இது நாட்டை அபாயகரமான நிலைக்குத் தள்ளிவிடும்.

நிதிநிலை அறிக்கையில் ரூ. 2,29,000 கோடி ஒட்டுமொத்தமாக இராணுவத்துக்கும், அதற்கு அடுத்தபடியாக உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ரூ. 65,745 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மை மக்களை வறுமையிலிருந்து மீட்பதற்கான போர்க்கால நடவடிக்கைகளில் இறங்குவதை விட்டுவிட்டு இராணுவத்தையும், காவல்துறையையும் வலுவானதாக கட்டியமைத்து யாரைப் பாதுகாக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

அரசியலமைப்புச் சட்டத்தின் திசைவழிகாட்டும் கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிராக இந்நாட்டின் வளங்களைச் சுரண்டி பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்துள்ள தனிநபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது வருமான வரிவிதிப்பை அதிகரிப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு மேலும் வரிவிலக்கு அளித்து ஏராளமான சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகால ஆட்சியின்போது அந்நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் ரூ. 10 இலட்சம் கோடிகளுக்கும் மேற்பட்ட வரிச்சலுகைகளை வழங்கியதுபோலவே, இப்போதும் புதிய அரசு ஏராளமான வரிச்சலுகைகளை வாரிவழங்கி அவர்களை அரவணைத்துக் கொண்டிருக்கிறது. மேலும், பெருவர்த்தக நிறுவனங்களிடமிருந்து வாராக்கடன் பல இலட்சம் கோடிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன‌. வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்ட பணம் இன்னும் பல இலட்சம் கோடிகள். அவற்றையெல்லாம் மீட்பதற்கோ அதன்மூலம் அடித்தட்டு மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை முன்னெடுப்பதற்கோ எந்த அறிவிப்பும் முயற்சியும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

வெறும் வார்த்தை ஜாலங்கள்

2000 ஆம் ஆண்டு பாரதீய சனதா கட்சி ஆட்சியிலிருந்த போது அதன் தலைமை அமைச்சராக இருந்த திரு. வாஜ்பாயி அவர்கள், 2010 ஆம் ஆண்டுக்குள் இந்த நாட்டில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிடும் என்று பகிரங்கமாக அறிவித்தார். அந்த அறிவிப்புக்கு நேர்மாறாக, இன்று 2014ல் என்ன நிலை என்பதை நாம் அறிகிறோம். அதேபோல்தான், புதிய அரசின் இந்த நிதிநிலை அறிவிப்பிலும் வார்த்தைஜாலங்கள்தான் அதிகம் உள்ளன. 2022 க்குள் அனைவருக்கும் வீட்டுவசதி ஏற்படுத்தப்படும் என்பது போன்ற பல வாக்குறுதிகள் வகைதொகையில்லாமல் அள்ளி வீசப்பட்டுள்ளன.

“பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியமைத்திருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டே இந்த நிதிநிலை அறிக்கை மூலம் பெரும்பான்மை மக்களை மிக சாதுர்யமாக வஞ்சித்து மோசடி செய்வதாக அமைந்துள்ளது. இப்போது தயாரித்து வழங்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையைப் பார்க்கும்போது பழைய அரசுக்கும், புதிய அரசுக்கும் பொருளாதார அணுகுமுறையில் துளியும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

புதிய அரசு ஆட்சியமைப்பதற்கு முன்பாக நடைபெற்ற தேர்தலில் பா.ச.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்வைத்தத் திட்டங்களைப் பார்த்து மக்கள் அசந்து போனார்கள். நதிநீர் இணைப்பு, வறுமை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, அனைவருக்கும் தூய்மையான குடிநீர், தரமான கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சை, மீனவர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோரின் வாழ்வில் மலர்ச்சி என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போனார்கள். ஆனால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இல்லை. வெறுமனே போகிறபோக்கில் 27 திட்டங்களுக்கு தலா ரூ. 100 கோடி ஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்தியாவின் அதிமுக்கிய பிரச்சினையாக உலக நாடுகள் பார்ப்பது “இந்திய நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்பது. நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வாழும் பெண்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு வெறும் 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. ஆனால் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் ஒரு சிலை அமைக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு. இந்தப் புதிய அரசின் மனநிலையை புரிந்து கொள்வதற்கு இந்த ஒரு நிகழ்வே போதும். மாயாவதி அரசு உத்தரப்பிரதேசத்தில் லக்னோவில் அம்பேத்கர் பூங்கா அமைக்க நிதி ஒதுக்கியபோது மாநில சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் அதை பாரதீய சனதா கட்சி மிகக் கடுமையாக எதிர்த்தது. அம்பேத்கருக்கு ஒரு நீதி, சர்தாருக்கு ஒரு நீதியா என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அதே குசராத் மாநிலத்திலேயே ஏராளமான குழந்தைகள் சத்துப் பற்றாக்குறையால் அவதியுறுகிறார்கள். அதனால், எண்ணற்ற சாவுகள் நிகழ்கின்றன. இலட்சக்கணக்கான மக்கள் வறுமையில் உழல்கிறார்கள். அவற்றைத் தீர்ப்பதற்கு எந்த வழிமுறையும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.

பாகுபாடுகள் நிறைந்த நிதிநிலை அறிக்கை

நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் சம பங்கீடு என்பது இந்த நிதிநிலை அறிக்கையில் வெளிப்படவில்லை. முக்கியமாக பின்தங்கிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஏற்கனவே வளர்ச்சியடைந்த நகரங்களைச் சுற்றியே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக பல இலட்சம் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்க ரூ. 7,060 கோடி. மக்களை தரம் பிரித்து ஒரு சாராருக்கு மட்டும் சகல வசதிகளையும் செய்துகொடுக்க முனையும் போக்கு சனநாயகத்திற்கும் அரசியல் அமைப்பு சாசனத்திற்கும் எதிரானது. இன்னும் எத்தனையோ இலட்சக்கணக்கான கிராமங்கள் சாலை, மின்சாரம், குடிநீர், கழிப்பறை, கல்விநிலையம் போன்ற எந்த அடிப்படை வசதியும் இல்லாத ஒரு நாட்டில் “ஸ்மார்ட்” நகரங்களுக்கான தேவை என்ன? யாரை மகிழ்விக்க இந்தத் திட்டம்? இதன் பின்னே ஒளிந்திருக்கின்ற அரசியல் என்ன? எத்தனை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதற்கான ஒப்பந்தங்கள் தரப்படப் போகின்றன? போன்றவையெல்லாம் இந்த நிதிநிலை அறிக்கைக்குப் பின்னால் ஒளிந்திருக்கின்ற மர்மங்கள். உயர்கல்விக்கு தரப்பட்டுள்ள முக்கியத்துவம் அடிப்படைக் கல்விக்கு தரப்படவில்லை.

திடமான பொருளாதார வளர்ச்சி காரணமாக இந்தியா உலகின் பொருளாதார சக்திமிக்க நாடுகளின் வரிசையில் 4 ஆம் இடத்திற்கு உயர்ந்துள்ளது. ஆனால், 1999 ல் உருவாக்கப்பட்ட G-20 எனப்படும் 20 நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாதான் மிகவும் ஏழ்மை நிறைந்த நாடாகவும் உள்ளது. என்னவொரு முரண்பாடு?

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரானது

1970 களில் திட்டக்கமிஷன் பரிந்துரைப்படி தாழ்த்தப்பட்டோர் மற்றம் பழங்குடியினருக்கு விகிதாச்சார அடிப்படையில் சிறப்பு உட்கூறு திட்டம் வரையப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தாழ்த்தப்பட்டோர் (16.8%) மற்றும் பழங்குடியினர் (8.7%). ஆக மொத்தம் அத்திட்டப்படி மொத்தம் 25% நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி வெறும் 12.15% மட்டுமே. அதாவது மொத்தமாக ஒதுக்கப்பட வேண்டிய ரூ. 1,53,311.04 கோடிக்கு பதில் வெறும் ரூ. 82,935 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்து ரூ. 70,376.04 கோடி குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒதுக்கப்படுகின்ற நிதி பட்டியலினத்தாருக்கான திட்டங்களுக்கு செலவிடப்படாமல் வேறு திட்டங்களுக்கு செலவிடப்படுவது நடைமுறையாகி வருகிறது. அதில் இருக்கின்ற நிதியையும் எவ்வித விவாதமும் இன்றி பெருமளவில் குறைத்ததன் மூலம் இந்நாட்டின் 25% வாழ்கின்ற பட்டியலினத்தார் கடும் பாதிப்புக்களை சந்திக்க வேண்டிவரும்.

மனித மலத்தை மனிதர்களே கைகளால் அள்ளும் கொடுமை வேறெங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் உள்ளது. ஏறக்குறைய 40 இலட்சம் மக்கள் துப்புரவுப்பணி செய்து வருகின்றனர். அவர்களில் 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் மனிதக் கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதைத் தடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டி 2013 ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் நாடு முழுவதும் அச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதைக் கவனத்தில் கொண்டு தேவையான நிதியை இந்த நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யவில்லை.

நிதிநிலை குறித்த விவாதங்கள் நேர்மையானதாகட்டும்

நடைபெறும் நிதிநிலை அறிக்கை குறித்த விவாதங்களும், அறிக்கைகளும் வறுமை ஒழிப்பு, பசி பட்டினியிலிருந்து மக்களை மீட்பது, வேலைவாய்ப்பைப் பெருக்குவது, அடிப்படைக் கல்வி, குடிநீர், சுகாதாரம் போன்ற அதி முக்கியமான பிரச்சனைகளை மையப்படுத்தாமல் மேலோட்டமாக தனி நபர்களின் வளர்ச்சி, வர்த்தக நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகள், நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள், இராணுவம், உயர்கல்வி நிறுவனங்கள் இவற்றின் வளர்ச்சி/முன்னேற்றம் போன்றவற்றிற்கு இந்த நிதிநிலை அறிக்கை எப்படித் துணைநிற்கின்றது என்பதை மட்டுமே அலசி ஆய்வு செய்பவையாக மாறியுள்ளன.

நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மை அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட மிகச் சொற்ப நிதி மற்றும் திட்டங்கள் உண்மையிலேயே சரியாகப் பயன்படுத்தப்படுகின்றதா என்பது ஆய்வு செய்யப்பட வேண்டும். குழந்தைகள் நலன், பெண்கள் பாதுகாப்பு, சிறுபான்மையினர் மேம்பாடு, தலித் பழங்குடியின மக்களுக்கான திட்டங்கள் போன்றவை எந்த அளவிற்கு செயலாக்கம் அடைகின்றன என்பதுதான் நிதிநிலை அறிக்கை குறித்த விவாதங்களின் மையப்பொருளாக மாற வேண்டும். இல்லையெனில், ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி மோசடி செய்கின்ற நிதிநிலை அறிக்கைக்கு நாமும் துணைநிற்பவர்களாகவே மாறிவிடுவோம்.

- அ.சகாய பிலோமின் ராஜ், வழக்கறிஞர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It