தேவராஜன் என்கிற நான், அகில இந்திய நுகர்வோர் - மனித உரிமைக்கு எதிரான லஞ்சம் ஊழல் மற்றும் குற்றத்திற்கு எதிரான இயக்கத்தின் தலைவர் பதவியில் இருந்து கொண்டு, பல ஆண்டுகளாக வெகு ஜன மக்களுக்காக பல விழிப்புணர்வு பணிக‌ளை செய்து வருகின்றேன்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த கட்டணப்படி, தமிழ் வழிக்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை எந்த விதமான கட்டணம் வசூலிக்கக்கூடாது மற்றும் ஆங்கில வழிக்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூபாய் 200/- , 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூபாய் 300/-, 11 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூபாய் 500/- மட்டுமே அரசு கல்வி நிறுவனம் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் பெற வேண்டும். மேற்கொண்டு ஒரு ரூபாய் கூட வசூல் செய்யக்கூடாது என்று அரசு ஆணை உள்ளது.

govt aided school fee

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களது கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம் உள்பட அனைத்து கட்டணங்களையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது. மேலும், பள்ளி பராமரிப்பு, ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட பல தலைப்புகளில் நிதி ஒதுக்கீடும் செய்யப்படுவதால், மாணவர்களிடம் பணம் வசூலிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொன் போஸ்கோ மேல் நிலைப்பள்ளி ஓர் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆகும். இப்பள்ளிக்கு 1 ஏக்கர் நிலத்தை குறைந்த தொகைக்கு அரசு குத்தகைக்கு வழங்கியுள்ளது. இப்பள்ளியில் எனது மகன்கள் மூவரில் ஒருவர் தனது 6 முதல் 12 வரை பள்ளிப் படிப்பை கடந்த ஆண்டு முடித்தார். தற்போது இருவர் மட்டும் இப்பள்ளியில் படித்து வருகின்றார்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக என்னையும், என்னைப் போல் உள்ள மற்ற பெற்றோர்களையும் மேற்கண்ட பள்ளி தாளாளர், பள்ளி தலைமை நிர்வாகி, தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் அரசு ஆசிரியர்கள் அனைவரும் அதிக கட்டணம் வசூலித்து கொள்ளையடித்து வருகிறார்கள்.

don bosco school fee

அரசு நிர்ணயம் செய்த கல்விக்கட்டணம் மேற்கண்ட அனைவருக்கும் நன்கு தெரிந்த நிலையில் அரசு கல்விக்கட்டணத்தை மறைத்து பெற்றோர்களிடம் இருந்து கோடி கோடியாக பணத்தை கொள்ளை அடித்துள்ளார்கள் / வசூல் செய்துள்ளார்கள். அதவாது 3000 % சதவீதம் கூடுதலாக வசூல் செய்துள்ளார்கள். இது சட்டப்படி குற்றம் மட்டுமல்ல தண்டனைக்குரிய குற்றமும் ஆகும்.

தற்போது, 2014-2015 கல்வியாண்டு வகுப்புகள் துவங்கியுள்ள நிலையில், ஒவ்வொரு மாணவரிடமும் ரூபாய். 15,500/- வரை கட்டாயமாக கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டில் 10 முதல் 20 சதவீதம் கூடுதல். இப்பள்ளியின் அடாவடியால் என்னைப் போன்ற மற்ற பெற்றோர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆங்கில வழிக் கல்வியில் ஒரு மாணவனின் அரசு நிர்ணயம் செய்த கட்டணம் ரூபாய் 500/- ஆகும். ஆனால் பள்ளி நிர்வாகமோ தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்விக்கும் ரூபாய் 15,500/- வீதம் வசூல் செய்துள்ளது. (அதாவ‌து 3000% சதவீதம் கூடுதலாக வசூல் செய்துள்ளார்கள்). இப்பள்ளியில் சுமார் 2500 மாணவர்கள் படிக்கின்றார்கள். ஆண்டிற்கு கல்விக் கட்டணமாக சேரும் தொகை 3 கோடியே 25 லட்சம் ஆகும். மேலும் 6ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை புதிய மாணவர் சேர்க்கையில் சில லட்சம் ரூபாய்கள், மேலும் அரசு ஆசிரியர் ஊதியம் என்ற முறையில் தமிழக அரசிடம் இருந்து சுமார் ஆண்டு 2.5 கோடி ரூபாய்.

கூடுதல் கட்டணத்தைப் பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டால், ‘பணம் கட்ட முடியவில்லை என்றால், ‘டிசி’ வாங்கிச் செல்லுங்கள்’ என மிரட்டல் விடுக்கின்றனர். புகார் செய்வதாகக் கூறினாலும், 'எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள், கவலை இல்லை’ என விரட்டுகின்றனர். அதற்கேற்ப, கல்வித்துறை அலுவலர்களும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் நடக்கும் வசூல் வேட்டையை கண்டுகொள்வதில்லை. ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு நிதியை அரசு வழங்குகின்றது. ஆனால் பல வழிகளில் பெற்றோர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றார்கள். இது யாராலும் மறுக்க முடியாது.

don bosco school fee

சென்னை பள்ளிக்கல்வி துறைக்கும் மற்றும் கல்விக்கட்டணக்குழு தலைவர் நீதிபதி சிங்காரவேலு அவர்களிடமும் (27.05.2014) இப்பள்ளி குறித்து புகார் மனு செய்துள்ளேன். மேலும் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மற்றும் இப்பகுதியில் உள்ள கே.9 காவல் நிலையத்திலும் பள்ளி நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளேன்.

ஆனால், சென்னை மாநகார காவல் துறை ஆணையர் மற்றும் கே 9 காவல் நிலையத்தின் ஆய்வாளரும் வழக்கு பதிவு செய்ய சுண‌க்கம் காட்டுகின்றார்கள். மேலும், இந்த புகார் மனுவை வாங்க மறுத்ததுடன், இது குற்றவியல் மற்றும் தண்டனைக்குரிய செயல் இல்லை என்று என்னிடம் வாதிட்டார்கள். மேலும் என்னிடம், சி.எஸ்.ஆர் வேண்டும் என்றால் எங்களுக்கு நீங்கள் ஒரு கடிதம் கொடுத்தால் தான் நாங்கள் சி.எஸ்.ஆர் கொடுப்போம் என்று கூறினார்கள். இந்த செயல் ஒரு மோசமான முன் உதாரணம் ஆகும்.

சென்னையில் மட்டும் 150 அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஒரு பள்ளியில் 1 கோடி என்றால் 150 கோடி ரூபாயும் மேலும் தமிழகம் முழுவதும் சுமார் 1000 அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் குறைந்த கூடுதல் கட்டணம் 1 கோடி என்று கணக்கிட்டாலும் 1000 கோடிக்கு மேல் கூடுதல் கட்டணமும் வசூல் செய்யப்படுகின்றது.

இந்த ஒரு பள்ளியில் மட்டும் வருடத்திற்கு குறைந்த அளவில் கணக்கிட்டலும் 3 கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த பெரம்பூர் தொன் போஸ்கோ பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமை நிர்வாகி, தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்கள் அனைவர் மீதும் உரிய விசாரணை செய்து வரிசைப்படி இவர்களுக்கு குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி வாசுகி அவர்கள், இது தொடர்பாக நீதிபதி சிங்காரவேலு அவர்கள் விசாரணை செய்து அவரின் அறிக்கைக்குப் பிறகு தான் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்து இந்த வழக்கை 18.07.2014 அன்று தள்ளுபடி செய்தார். நீதிபதி சிங்காரவேலு அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக இது குறித்து விசாரணை செய்து, இன்று (22.07.2014) தீர்ப்பு வழங்குகிறார்.

Pin It