nokia chennai

அன்னிய நேரடி முதலீட்டு அனுமதியால் நாடு வளர்ச்சியடையும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்று பன்னாட்டு நிறுவனங்களை வரவேற்று நாட்டின் வளங்களை, மக்களின் உழைப்பை சூறையாட அனுமதித்து வரும் இந்திய, தமிழக அரசுகளின்‘வளர்ச்சி‘ என்கிற பிரம்மாண்டம் சமீப காலமாக தவிடுபொடியாகி வருகிறது. அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் யார் லாபம் அடைகிறார்கள்? எவரது வாழ்க்கை நாசமாக்கப்படுகிறது? என்பதை வேலையின்றி வீதிக்குத் துரத்தப்பட்டு வாழ்க்கையே கேள்விக்குறியாகியிருக்கும் நோக்கியா தொழிலாளர்களின் நிலை அம்பலமாக்கியிருக்கிறது. இன்று 8000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டம் (VRS) என்கிற அதிரடி அறிவிப்பில் தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். அந்நிறுவனம் தொழிலாளர்களுக்கான உணவக வசதியையும் ரத்து செய்துவிட்டது. மூன்று ஷிப்டுகளாக இருந்து வந்த வேலைநேரமுறையை உடனடியாக இரண்டு ஷிப்டுகளாக குறைத்திருக்கிறது. தற்போது 900 தொழிலாளர்கள் மட்டும் பணியில் இருந்துவருகிறார்கள். மீதமிருந்த தொழிலாளர்களின் கதி என்ன? அவர்களுக்கான எதிர்காலம் என்ன? என்பது கேட்பாரற்ற நிலையை எட்டியுள்ளது. நோக்கியா முதலாளியத்தின் செயலும் அதற்குப் பின்புலமாக இருந்த தமிழக அரசின் மோசடியும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

தமிழக அரசு

2005 ஜெயலலிதா தலைமையில் நோக்கியாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்

நோக்கியா நிறுவன உற்பத்தி தொடக்கம்

2006

நோக்கியாவின் தொடக்க முதலீடு

650 கோடி

சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான நிலம்

210 ஏக்கர்

கைபேசி உற்பத்தி

ஒருமாதத்திற்கு1.3 கோடி கைபேசிகள், 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

மொத்த வருமானம் (2006 - 2013)

1.5 லட்சம் கோடி

வருமான வரி மோசடி

24,000 கோடி

நோக்கியாவின் மொத்த லாபம்

ராயல்டி என்கிற பெயரில் 21,000 கோடி ரூபாய் பின்லாந்திற்கு அனுப்பியது.

நோக்கியாவில் மொத்த தொழிலாளர்கள்

நிரந்தரம் - 8000

ஒப்பந்தம் – 2500

பயிற்சி - 1500

தொழிலாளர்கள் விவரம்

60சதவீதம் பெண்கள்,

மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள்.

தமிழக அரசின் சலுகைகள்

210 ஏக்கர் நிலத்தை வெறும் 9.5 கோடி ரூபாய்க்கு, 99 வருடத்திற்கு குத்தகைக்கு விட்டது.

உள்நாட்டு விற்பனைக்கு அனுமதி, விற்பனை வரிச்சலுகை, முதல் 10 ஆண்டிற்கு வருமான வரி நீக்கம்,

24 மணிநேரம் மின்சாரம், நீர், சாலை அமைத்தல் அனைத்தும் இலவசம்.

பொது பயன்பாட்டு சேவையின் கீழ் நோக்கியா நிறுவனத்தை கொண்டுவந்துள்ளது.

 

கடந்த 2005ல் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா நிறுவனத்திற்கும் ஜெயலலிதா அரசிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. ஏற்றுமதிக்கான சிறப்புப் பொருளாதார மண்டலமாக இயங்க அனுமதி வழங்கப்பட்டது. 2006லிருந்து இயங்கிவந்த நோக்கியா தனது நிறுவனத்தை 2013ல் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்கப் போவதாக ஒப்பந்தம் போட்டது. 2014, ஏப்-26-லிருந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கைக்கு நோக்கியா அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது. இந்நிலையில்தான் வரிஏய்ப்பு விவகாரத்தில் நோக்கியா சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் தொழிற்சாலையை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்றம் வரிப்பணத்தை கட்டியபின்தான் மைக்ரோசாப்ட்டுக்கு நிறுவனத்தை விற்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. நிறுவனத்தை நடத்த விரும்பாத பின்லாந்து முதலாளி மற்றும் சட்ட சிக்கல் உள்ள நிறுவனத்தை வாங்க விரும்பாத மைக்ரோசாப்ட் நிறுவனம் என இரண்டு முதலாளிகளுக்கு இடையில் தங்கள் வாழ்வாதாரத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர். இந்நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை உற்பத்தி செய்து கொடுத்த பாக்ஸ்கான், சால்காம், லயர்டு போன்ற பல துணை நிறுவனங்களில் வேலை பார்க்கும் 10,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலையும் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. சமீப காலத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் ஆலையிலிருந்து வெளியேற்றப்பட்டது தமிழகத்தில் இதுவே முதன்முறை. இது ஆட்சியாளர்களின் கொள்கைகளை, முதலாளித்துவத்தின் வளர்ச்சியை அம்பலப்படுத்தியிருக்கிறது. நோக்கியா, மைக்ரோசாப்ட்டிற்கு இடையிலான தற்போதைய ஒப்பந்தப்படி இன்னும் ஒருவருடத்திற்கு நோக்கியா ஒப்பந்த உற்பத்தியாளர் (contract manufacturer) என்ற தகுதியில் இயங்கப்போகிறது. தற்போது பணிபுரியும் 900 தொழிலாளர்களும் தொடர்ந்து பணியில் நீடிப்பார்களா? என்ற வினா எழுகிறது.

தமிழக அரசின் தொழிலாளர் விரோதம்

இந்திய அரசு நோக்கியா நிறுவனத்தை வரிப்பணம் கட்டச் சொல்வது ஒருபுறம் இருக்க, தனக்கான 2,400கோடி ரூபாய் வரிப்பணத்தை கட்டவேண்டும் என்று தமிழக அரசும் உத்தரவிட்டிருக்கிறது. நோக்கியாவுடனான ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமாக பல குளறுபடிகளை தமிழக அரசு செய்திருக்கிறது என்பது வெளிவந்திருக்கிறது. நோக்கியாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள 210 ஏக்கர்நிலம்அரசின் சிப்காட்டிற்குச் சொந்தமானது. இதனால் சிப்காட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு என்பது ஏறத்தாழ 7.4 கோடி ரூபாய் இந்தக் குத்தகையைப் பதிவு செய்வதற்கான 4% முத்திரைத்தாள் கட்டணத்தையும் தமிழக அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. தனது தேவைக்குப் போக மீதமுள்ள நிலத்தைப் பிற நிறுவனங்களுக்கு அதிக விலைக்குக் குத்தகைக்கு விடுவதற்கான உரிமையையும் தமிழக அரசு நோக்கியாவிற்கு வழங்கியுள்ளது.

நோக்கியா தனது கைபேசியை உள்நாட்டில் வியாபாரம்செய்வதன் மூலம் செலுத்தும் “VAT” வரியையும் மத்திய விற்பனை வரியையும் (CST) தமிழக அரசு திருப்பிச் செலுத்தும் என்பது ஒப்பந்தத்திலுள்ள முக்கியமான சலுகையாகும். இதன்கீழ் 2006-ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசு நோக்கியாவுக்குத் தூக்கிக் கொடுத்துள்ள தொகை ஏறத்தாழ 650 கோடி ரூபாய் மட்டுமல்ல மற்ற சலுகைகளையும் சேர்த்து 1,020 கோடி ரூபாய் வருமானத்தை எனக் கூறப்படுகிறது. மேலும் நோக்கியாவிற்கு தண்ணீர், மின்சாரம், 10 ஆண்டிற்கு வருமான வரி ரத்து போன்ற சலுகைகளை அள்ளி வழங்கி கொள்ளை லாபத்திற்கு அரசு துணை போயிருக்கிறது. பாதிக்கப்பட்ட அத்தொழிலாளர்கள் போராடாதவாறு புரிந்துணர்வில் சட்ட ஒப்பந்தமும் போட்டிருக்கிறது. தமிழக அரசு நோக்கியா நிறுவனத்தை பொது பயன்பாட்டுச் சேவை (Public Utility Service) என்கிற வரையறைக்குள் கொண்டுவந்து தொழில் தகராறு சட்டம் 1947, பிரிவு 22ன் கீழ் யாரும் அறிவிப்பு இன்றி போராட்டம் நடத்திடக்கூடாது என்கிற விதிமுறைக்கு அனுமதியளித்திருப்பதன் மூலம் முதலாளி வர்க்கத்தை வாழவைத்து தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளைக் குழிதோண்டி புதைத்திருக்கிறது.

பன்னாட்டு முதலாளியத்தின் உண்மை முகம்

ஏகாதிபத்திய நாடுகளின், பெரும் முதலாளிய நிறுவனங்கள் போட்டியின் மூலம் சந்தையில் முன்னுக்கு வருவதும், பின்னோக்கி செல்வதுமான வியாபாரத்தின் சுழற்சிதான் இன்று முன்னுக்கு வந்துள்ள மைக்ரோசாப்ட், சேம்சங், கூகுள் போன்ற முதலாளிய நிறுவனங்கள். 2008ல் அட்ச் நிறுவனத்தை வோடபோன் கையகப்படுத்தி இன்று சந்தையில் தக்கவைக்கப்பட்டிருப்பதும், இன்று நோக்கியா நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்கி சந்தையில் நிற்பதற்கான உத்தியாக கையாண்டிருப்பதும் ஆகும். மைக்ரோசாப்ட்டின் மென்பொருளுக்கு பொருந்திடும் வன்பொருளை புதிய வடிவில் தயாரித்திட நோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்கியிருக்கிறது. இது நோக்கியா நிறுவன பிரச்சனை மட்டுமல்ல. இதன் பின் இயங்கும் முதலாளியத்தின் வியாபார சந்தைக்கான போட்டியாகவும் உள்ளது. கார்ல்மார்க்ஸ் குறிப்பிடுவது போல உழைப்பு-உற்பத்தி-உபரி-லாபம்-பணம்-சந்தை-சரக்கு என்கிற முதலாளியத்தின் உற்பத்தி முறையானது நோக்கியா போன்ற நிலைக்கே இட்டுச் செல்லும் என்பதை நிரூபித்திருக்கிறது.

பன்னாட்டு முதலாளியம் உலக சந்தையின் விநியோக தட்டுப்பாட்டிற்கு ஏற்றவாறு மூன்றாம் உலக நாடுகளில் மூலதனத்தை குவித்துவருகிறது. மலிவான உழைப்பில் மனித வளத்தை பயன்படுத்தி ஏகபோக லாபத்தை சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், தனது லாபத்தை மீண்டும் ஐரோப்பிய, அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ஏகாதிபத்திய சுரண்டலை நடத்தி வருகின்றன. உலக சந்தையின் தேவைக்கு ஏற்றாற்போல் தொழிற்சாலைகள் தொடங்குவதும், லாபம் ஈட்டிய பிறகு அவற்றை மூடுவதும் முதலாளியத்தின் வாடிக்கை. உலக வர்த்தக அமைப்பின் (WTO) வாயிலாக இந்தியா போன்ற நாடுகளில் தொழிலாளர்கள் சட்டத்தை நீர்த்துப் போக செய்து திறந்த சந்தைக் கொள்கையை பன்னாட்டு முதலாளியம் நடைமுறைப்படுத்தி வருகிறது. 60 ஆண்டுகளாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளைக் கூட இன்று இழந்துவரும் சூழல் இருக்கிறது. நோக்கியா போன்ற அன்னிய நேரடி முதலீடுகள் மூலம் தொடங்கப்படும் தொழிற்சாலைகள் உள்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பயன்படுவது இல்லை. மாறாக உற்பத்திச் சாதனமான தொழில்நுட்பம் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகவே இருந்து வருகின்றது. உள்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி முடக்கப்பட்டு நவீன தொழில்துறை வளர்வதற்கும் தடைகளாக ஆளும் வர்க்கங்களின் அன்னிய நேரடி முதலீடு அமைகிறது. அத்தோடு இன்று லட்சம் கோடிகளை சொத்துக்களாக வைத்திருக்கும் டாடா, அம்பானி, லட்சுமி மிட்டல், பிர்லா போன்ற முதலாளிகள் உலக சந்தைகளில் பெரும் பணக்காரர்களாக, பன்னாட்டு முதலாளிகளாக வளர்ந்து வருகிறார்கள். இத்தகைய முதலாளிகளின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சியாக காட்டப்படுகிறது. மாறாக வறுமையிலும், ஊட்டச்சத்து குறைபாடுகளாலும், வேலையின்றி வாடும் எண்ணற்ற ஏழைகள் ஒரு புறம் அதிகரித்து வருகிறார்கள்.

இந்தியப் பெரும் முதலாளிய வர்க்கம் கடந்த 20 ஆண்டுகளில் பன்னாட்டு முதலாளிகளாக உருப்பெற்று வரும் நிலையில், ஏகாதிபத்தியத்தோடு இணைந்து மக்களையும், இயற்கை வளத்தையும் சூறையாடி வருகிறது. இந்திய ஆளும் வர்க்கம் தனது புதிய தாராளமய கொள்கைகளின் பெயரில் ‘அன்னிய நேரடி முதலீடே வளர்ச்சிக்கான பாதை’ என்று பறைசாற்றுகிறது. இந்த கொள்கை அதிவேகமாக கொண்டுசெல்லவே பாசிஸ்ட் மோடியை பிரதமராக முன்னிறுத்தி உள்ளது. அன்னிய நேரடி முதலீட்டில் முதல் 5 இடங்களில் இடம் பெறும் தமிழகம், பிற மாநிலங்களோடு போட்டி போட்டுகொண்டு தனது அமைச்சர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பி சிவப்பு சம்பளம் விரித்து வரவேற்கிறது. இந்நிலையில் சென்னையில் ஜப்பான், கொரியா, யுஎஸ், யூரோப் என்று பல ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் மற்றும் சேவைத் துறைகளில் அன்னிய நேரடி முதலீடு செய்திருக்கின்றன. இந்நிலை வருங்காலத்தில் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகும் என்ற சிந்தனையையே நோக்கியா அனுபவம் நமக்கு விட்டுச் செல்கிறது.

1930 மற்றும் 1970-80களில் முதலாளியத்திற்கு பாடம் கற்பித்த போராட்ட வரலாற்றைத் தமிழகத் தொழிலாளி வர்க்கம் கொண்டிருக்கிறது. சென்னையின் சிம்சன், விம்கோ, பின்னி, டன்லப், அசோக்லேலண்ட் போன்ற ஆலைத் தொழிலாளர் போராட்டங்களே இதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது. இதுபோன்ற போராட்டங்களில் வென்றெடுக்கப்பட்ட தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் இன்று வளர்ந்துவரும் பன்னாட்டு முதலாளியத்தால், இந்திய தமிழக அரசின் தாராளமயக் கொள்கைகளால் கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இத்தகைய உரிமைகளை மீட்கவேண்டிய தொழிலாளர்கள் தங்கள் நலன் சார்ந்த போராட்டத்தை ஏகாதிபத்தியத்திற்கும், பன்னாட்டு முதலாளிய சந்தைக்கு வழிவிடும் இந்திய தமிழக அரசுகளுக்கும் எதிரான போராட்டமாக முன்னெடுக்க வேண்டும். இதை உணர்வதும், நோக்கியா தொழிலாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக தமிழகத் தொழிலாளி வர்க்கம் அணிதிரள்வதுமே இன்றைய உடனடித் தேவையாகும்.

தமிழக அரசே

  • நோக்கியா நிறுவனத்தின் சொத்துக்களை கையகப்படுத்து.
  • வேலை இழந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் வேலையை உத்தரவாதமாக்கு. மோசடி செய்த நோக்கியா நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடு.
  • நடைமுறைப்படுத்தியிருக்கும் சிறப்பு பொருளாதார மண்டல திட்டங்களைத் திரும்பப் பெறு.
  • அன்னிய நேரடி முதலீட்டு (FDI) ஒப்பந்தங்களை ரத்துசெய்!

 - ரமணி,  ஜனநாயகத் தொழிற்சங்க மையம் (DTUC) இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It