தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் விரைவாக நெருங்கிக் கொண்டுள்ளது. வேட்பு மனுத் தாக்கலும் நிறைவு பெற்று விட்டது. வேட்பு மனு விலக்கிக் கொள்ளலும் இறுதியாகக் களத்திலுள்ள வேட்பாளர்கள் அறிவிப்பும் அடுத்தடுத்து விரைந்து முடிந்து விடும். தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் சுரம் கட்சிகளை வாட்டி வதைக்கிறது. தேர்தல் சுரத்தில் அவற்றின் பிதற்றல்களும் தாங்கிக் கொள்ள முடியாதவையாக மக்களையும் துன்புறுத்துகின்றன. உலகின் ஆகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கான அடையாளம் இதுதான் என்கின்றீர்களா?

பல்வேறு பேரங்களுக்குப் பிறகு ஒருவழியாகக் கட்சிக் கூட்டணிகளும் நிலைபெற்று விட்டன. இனிப் பெரும்பாலும் தாவல்கள் இருக்காது என உறுதியாக நம்பலாம். ஆனால் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின் தாவல்களும் கூட்டணி மறு சேர்க்கைகளும் மின்னல் வேகத்தில் நடைபெறும் என்பதில் அய்யமில்லை. இடதுசாரிகள் உட்பட எல்லாக் கட்சிகளும் தேர்தலுக்குப் பின்னரான மறுசேர்க்கைகளை இப்பொழுதே உறுதிப்படுத்துகின்றன. ஆகப்பெரிய ஜனநாயக நாட்டின் கட்சிகளின் வெளிப்படைத் தன்மையும் ஜனநாயகவெளியும் இவ்வாறாகத்தானே காக்கப்பட வேண்டும்?

தமிழ்நாட்டைப் பொருத்தவரை இரு கூட்டணிகள் மட்டும் அமைய மற்ற கட்சிகள் தனித்துக் களம் காண்கின்றன. ஒன்று திமுக தலைமையிலான கூட்டணி; மற்றொன்று பாசக தலைமையிலான கூட்டணி. இடதுசாரிகள் என அறியப்படுகின்ற இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிசுட்டும்) ஒன்றாகப் போட்டியிடுகின்றன. இச்சேர்க்கையைக் கூட்டணி என அழைக்கத் தேவையில்லை. அவர்களும் அப்படி ஒரு கூட்டணியாகத் தங்களை முத்திரை குத்திக் கொள்ளவில்லை.

இதில் பாசக தலைமையிலான கூட்டணியே பெரிய கூட்டணி. இக்கூட்டணியில் தேமுதிகவிற்கே அதிகமாக 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதைத் தேமுதிக தலைமையிலான கூட்டணி என்றுதான் அறிவித்திருக்க வேண்டும். விசயகாந்த் வற்புறுத்தி அடம் பிடிக்காமல் விட்டு விட்டார் போலும். அப்படிச் செய்திருந்தால் அதிலும் அவர் வெற்றி பெற்றிருக்கலாம். யாரும் அவருக்கு இதை எடுத்துக் கூறவில்லையோ? ஒருவேளை தலைவிக்கும் மச்சானுக்கும் தெரியாமல் போய்விட்டதோ? அப்படியெல்லாம் இல்லை, இது தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேசிய அளவில் பாசகதான் அதற்குத் தலைமை, அந்த அரசியல் தெளிவெல்லாம் ‘கேப்டனுக்கு’ உண்டு என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

பாசக கூட்டணிக்கு அவர்கள் சூட்டியுள்ள பெயர் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்பதாகும். ஆனால் மக்கள் யாவரும் அதைப் பாசக கூட்டணி என்றே அழைக்கின்றனர். குக்கிராமங்கள் வரை பாசகவும் மோடியும் அறிமுகமாகி உள்ளனர். தேர்தலில் வெற்றி பெறுகிறார்களோ இல்லையோ தமிழ்நாட்டில் அவர்களே எதிர்பார்த்திருக்காத பெரும் அரசியல் வெற்றி அவர்களுக்குக் கிட்டியிருக்கிறது. இங்கே அமைப்பு வலுவே இல்லாத ஒரு கட்சிக்கு இதைவிட வேறென்ன வேண்டும்?

vaiko vijaykanth anbumani 630

மெய்நடப்பில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலால் ஏற்படவுள்ள விளைவுகள் யாவை? மாற்றங்கள் யாவை? தமிழர்க்கும் தமிழ்நாட்டிற்கும் நன்மைகள் உண்டா? ஆற்றுநீர்ச் சிக்கல் தொடங்கி அணுஉலை அச்சம் வரை அனைத்தும் தீர்ந்து விடுமா? இதுவரை கொண்டு வராத அரசியல் பொருளியல் மாற்றங்களை இத்தேர்தல் கொண்டு வந்து விடுமா? நாட்டில் பாலும் தேனும் ஓடாவிட்டாலும் பசிக்கும் வயிற்றுக்கு ஒருவேளை உணவாவது நிம்மதியாய்க் கிடைக்குமா? தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் கூட்டணிகளின் கொள்கை, கோட்பாடுகள்தாம் என்ன? நாட்டையும் மக்களையும் காக்கவா இக்கூட்டணிகள்? இத்தேர்தலின் மூலம் உண்மையாய் மக்களை நேசிக்கும், மாற்றத்தை விழையும் ஆற்றல்களால் எதையாவது சிறு துரும்பளவாவது சாதிக்க முடியுமா?

தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியலை மட்டும் கணக்கில் கொண்டு பேசுவோம். முதலில் அளவில் பெரிய கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எடுத்துக் கொள்வோம். இதை, தேஜகூ என அவர்களே சூட்டிக் கொண்ட, ஊடகங்களால் பரவலாக்கப்பட்ட அப்பெயரால் அழைப்பது அதன் உள்ளடக்கத்திற்குச் சற்றும் பொருத்தமற்றது. மக்கள் அழைக்கின்ற பாசக கூட்டணி என்ற பெயரும் அதன் உண்மைத் தன்மைக்கு ஏற்றதன்று. அதை மதவாத சாதிய சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று அழைப்பதே நூற்றுக்கு நூறு சரியானது; அதன் உள்ளடக்கத்திற்கும் உண்மைத் தன்மைக்கும் அதுவே பொருந்தி வருகிறது.

பாசக ஊரறிந்த உலகறிந்த பார்ப்பன இந்துத்துவா மதவெறிக் கட்சி. அதனை மெய்ப்பிக்க சான்றுகள் எதையும் தேடிச் செல்ல வேண்டிய தேவை இல்லை. பாபர் மசூதி இடிப்புத் தொடங்கி குசராத் படுகொலை ஈறாக அதன் கடந்தகாலச் செயற்பாடுகளும் குசராத் கொலைநாயகன் ஆர்எஸ்எஸ் மோடியை அடுத்த தலைமையமைச்சராய் அறிவித்து அது ஆடுகின்ற ஆட்டமும் அது மதவெறிக் கட்சிதான் என்பதை நம் முகத்தில் அறைந்து அறிவிக்கின்றன. அதன் இன்றைய ஒவ்வொரு அசைவும் ஆர்எஸ்எஸால்தான் தீர்மானிக்கப்படுகின்றது. தாங்கள் ஆர்எஸ்எஸ் வளர்ப்பு என்பதில் இந்நாள் மோடி முதல் அந்நாள் வாசுப்பேயி, அத்வானிகள் வரை அனைவரும் மட்டற்ற பெருமை கொள்கின்றனர். பாசக என்பது இந்திய அரசமைப்பின் ஊடே அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஆர்எஸ்எஸின் தேர்தல் அரசியல் முகம். ஆர்எஸ்எஸின் பரந்த கூட்டுக் குடும்பமான சங்பரிவாரில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பல ஒப்பனைகள் அணிந்த அணி அது.

ஆர்எஸ்எஸ் கடந்த பல ஆண்டுகளாகவே தன் குறிக்கோளுக்கு ஏற்ற அரசியல் தலைவர்களைத் தேடிக் கொண்டு இருந்தது. யாரும் அதற்குச் சரியாக அமையப் பெறவில்லை. தன் வளர்ப்புப் பிள்ளைகள் தேர்தல் அரசியலுக்குப் போனதும் பதவிச் சுகத்தில் சமரசமாகிப் போனதைக் கண்டு வருந்திக் கொண்டு இருந்தது. பலருக்கு வயதாகி அதிகார அரசியலைக் கையாளும் திறனற்றுப் போயினர். இந்நிலையில் அதற்கு வாராது வந்த மாமணியாய் வந்தவர்தான் திருவாளர் நரேந்திர மோடி அவர்கள். குசராத்தில் அவர் நிலைநாட்டிய அற்புத இரசவாத அரசியலைக் கண்டு அது மெய் சிலிர்த்துப் போனது. அதன் கனவான இந்துப் பேரரசைக் கட்டியமைக்க ஓர் இந்துத்துவாக் கிட்லர் கிடைத்து விட்டதாகப் பெருமை கொண்டது.

குசராத்தில் ஒருபுறம் முசுலீம்களின் இரத்தத்தை ஆறாக ஓடாகச் செய்து அச்ச அரசியலில் மோடி தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டார். மறுபுறம் தன் கொலைமுகம் முற்றாக மறைபட குசராத் இதுவரை காணாத ஆகச் சிறந்த முதல்வராக, காணக் கிடைக்காத நிர்வாகியாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்டார். ஒருபுறம் இந்துத்துவாவாதிகளின் கனவுக் கதாநாயகனாகக் கொண்டாடப்படுகிறார். மறுபுறம் இன்றைய உலகமயமாக்கலின் புதுயுகப் பொருளாதாரத்தின் உத்தமபுத்திரனாகவும் போற்றப்படுகிறார். ஒருபுறம் கற்காலக் கழிசடை மதவாத நச்சுக் கருத்துகள்; மறுபுறம் அவற்றை மூடி மறைக்கும் புத்தறிவியல் பொன்முலாம் பூச்சுகள். ஊழலற்ற சிறந்த நிர்வாகம், ஒருங்கிணைந்த வளர்ச்சி என்கின்ற முகமூடிகளை அணிந்து இந்துவெறிப் பாசிசக் கோரமுகம் நயவஞ்சக நாடகமாடுகிறது.

இன்றைய இந்திய அரசியலில் கார்ப்பரேட்டுகள் கொஞ்சிக் குலவும் செல்லக் குழந்தை மோடிதான். கார்ப்பரேட்டுகள் அவரை அணைத்து வாரித் தத்தெடுத்துக் கொண்டன. ஓர் ஆற்றல் வாய்ந்த நிர்வாகியாகவும் தொழில் வளர்ச்சிக்குப் பாடுபடும் தொழில்நல விரும்பியாகவும் உழவர் தோழனாகவும் அநீதியை ஒழிக்கத் தோன்றிய மகாவிஷ்ணுவின் இன்னொரு அவதாரமாகவும் மோடியைக் கட்டமைப்பதில் கார்ப்பரேட்டுகள் மாபெரும் பங்காற்றி உள்ளன.

குசராத்தின் ஊழல் அசிங்கங்கள், நிர்வாகச் சீர்கேடுகள், மக்களைச் சென்றடையா வளர்ச்சி மாயைகள் ஆகியன கார்ப்பரேட் ஊடகங்களின் மோடி ஊளையில் மறைந்து போகின்றன. மோடியை முன்னிருத்தும் அவற்றின் விளம்பரங்கள் நம்மை அசர வைக்கின்றன. தொலைக்காட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையில் மாறி மாறி வரும் கண்ணைக் கவரும் விளம்பரங்கள். கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பில் அதற்கேற்றாற்போல் விளம்பரங்கள். இவற்றோடு காங்கிரசு விளம்பரங்களை ஒப்பிட்டால் அவை வெறும் பத்தாம்பசலித்தனமாக உள்ளன.

காலங்கடந்து முதல் கட்டத் தேர்தல் தொடங்கிய நிலையில் வெளிவந்துள்ள பாசகவின் தேர்தல் அறிக்கை நாம் மேலே சுட்டிக் காட்டியுள்ள அதன் அத்துணை கபடநாடகங்களையும் அப்படியே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதன் அடிப்படை இந்துத்துவா வேலைத் திட்டங்களான இராமர் கோயில் கட்டுதல், பொது சிவில் சட்டம், சம்மு காசுமீருக்குத் தனி சிறப்புநிலை வழங்கும் அரசமைப்பு விதி 377ஐ நீக்குதல் ஆகியனவற்றை வளர்ச்சி, நல்லாட்சி வழங்குதல் உள்ளிட்ட இனிப்பு வகையறாக்களைக் கொண்டு பூசி விற்பனை செய்துள்ளது. மோடியின் ‘மோடி மஸ்தான்’ ‘சித்து விளையாட்டுகள்’தாம் தேர்தல் அறிக்கையாகப் ‘பரிணமி’த்துள்ளது.

‘மேனிபெஸ்டோ’(Manifesto) அன்று மோடிபெஸ்டோ(Modifesto)தான் என்று பாசகவின் ஊதுகுழலான ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்’ பெருமைப் பட்டுக் கொண்டுள்ளது. அது அமைத்துள்ள “வண்ணக் கூட்டணி”யில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் பாசக தேர்தல் அறிக்கை வெளிப்படுத்தும் கொள்கைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளையும் எக்ஸ்பிரஸ் சுட்டிக் காட்டத் தவறவில்லை. யாரோடு கூட்டணி அமைத்தாலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காத கொள்கை அடிப்படையிலான கட்சி பாசக என அது பறை சாற்ற விரும்புகிறதோ?

முதல்நாள் ‘தி இந்து’வில் காலந்தாழ்ந்து தேர்தல் அறிக்கை வெளியிடுவதைக் காட்டமாகச் சாடியது என்.இராமின் கட்டுரை. அடுத்த நாள்(08-04-14) அதன் தலையங்கமோ பாசகவிலுள்ள தாராளவாதிகளுக்கும் மதவாதிகளுக்கும் இடையிலான முரண்பாடு அறிக்கையில் வெளிப்படுவதாகவும், இந்துத்துவாச் செயல்திட்டங்கள் அடக்கி வாசிக்கப்பட்டிருப்பதாகவும் எழுதிச் செல்கிறது. இராமுவும் ‘தி இந்துவும்’ இந்துத்துவா நாடகவெளியில் ஏற்றிருக்கும் பாத்திரங்கள் வேறு வேறோ?

இவ்வாறாக ஒரு மதவாத பாசிச அரசு அதிகாரத்தை நிறுவத் தேவையான அத்துணை ஆற்றல்களும் நிரம்பப் பெற்றவராக மோடி திகழ்கிறார். இந்த மதவாதப் பாசிசத் தலைமையோடு பாசக் கூட்டணி அமைத்துள்ளது தமிழ்நாட்டில் முன்னரே அமைந்திருந்த சாதியக் கூட்டணி. பாமக தலைமையிலான இச்சாதியக் கூட்டணி தேர்தலுக்கு முன்னர் தனித்துப் போட்டியிடுவதாய் மார்தட்டிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டைத் திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப் போவதாய் முழங்கிக் கொண்டிருந்தது. ஆனால் உண்மையில் அது விடுவிக்க விரும்பியது தமிழ்நாட்டின் மீதான பெரியார் பிடியைத்தான். அதனால்தான் இன்று அது ஆரிய ஆலிங்கனத்தில் அடைக்கலமாகி அகமகிழ்கிறது.

பாசக மதவெறிக் கட்சி என்றால் பாமக அப்பட்டமான சாதிவெறிக் கட்சி. மதவெறியும் சாதிவெறியும் இயல்பாய் கைகுலுக்கிக் கொண்டுள்ளன. சரியாகச் சொல்வதென்றால் இந்துத்துவா நாணயத்தின் இரு பக்கங்கள்தாம் மதவெறியும் சாதிவெறியும். ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதது. இந்துத்துவத்தின் அனைத்துக் கேடுகளையும் களைந்தெடுக்கக் களம் கண்டார் பெரியார்; பெரியாரால் விளைந்த அனைத்து மாற்றங்களையும் கருவறுக்கத் துடிக்கிறார் வன்னியர் இராமதாசு.

பாமக வன்னியருக்காகவே தோன்றி வன்னியருக்காகவே தன்னை ஈந்து கொண்ட கட்சி. வன்னியருக்கான இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில்தான் அது பிறப்பெடுத்தது. இடையில் அது திமுக விட்டுச் சென்ற தமிழ்வெளியை நிரப்ப அணிந்து கொண்டதுதான் தமிழ் ஒப்பனைகள். தமிழ் முகமூடிகளைக் கண்டு இனியும் ஏமாற, தமிழ் மக்கள் அணியமாய் இல்லை என்பதைப் புரிந்து கொண்ட அக்கட்சி எல்லா மாய்மால ஒப்பனைகளையும் களைந்து விட்டு அம்மணமாய் நிற்கிறது. தன் நாடி நரம்புகளில் சூடாக ஓடும் வன்னிய (அ)ரத்தத்தைச் சுண்டி விடுகிறது. தன் சத்திரிய வன்னியத் தூய்மையைக் காப்பாற்றச் சூளுரைக்கிறது. விளைவு தருமபுரி நாய்க்கன் கொட்டாய் எரிந்து சாம்பலானது. இளவரசன் காதலும் கருகிப் போனது.

வன்னியர் (அ)ரத்தத்தில் கலப்படம் செய்யத் துணிவோருக்கு இளவரசனுக்கு நேர்ந்ததே நேரும் என்பதை பாமக சொல்லாமல் சொல்கிறது. காதல் திருமணங்களைக் கருவறுப்போம் என மற்ற இடைநிலைச் சாதிகளுக்கும் அது அறைகூவல் விடுக்கிறது. தங்களுக்குக் கீழே அடக்கி ஒடுக்கி அகமகிழச் சாதிகளைத் தேடும் இச்சாதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெதிரான வன்னிய ஆவேசத்தைக் கண்டு ஓடோடி வந்து பாமகவைக் கட்டித் தழுவிக் கொண்டன. அப்படி வந்து சேர்ந்தவைதாம் மேற்கு மண்டலக் கொங்கு வேளாளச் சாதிக் கட்சிகளும் தென்புறத்து மறத் தேவர் கூட்டங்களும். முதலியார் கட்சியான புதிய சமூகநீதிக் கட்சியும் இந்த வகைதான். தேர்தல் கூட்டணியில் மறக் கூட்டம் எதுவும் இல்லை போல் தெரிகிறதே. ஆளும் அம்மையார் கட்சியே அவர்களுக்கான ஆதரவுக் கட்சியாய் இருக்கும் போது வேறு தனிக் கூட்டணி தேவை இல்லை என்று எண்ணி விட்டார்கள் போலும்.

மத, சாதிவெறிக் கூட்டணியுடனான நடிகர் விசயகாந்த் சேர்க்கை வெகுளித்தனமான சந்தர்ப்பவாதக் கூட்டாகும். வெகுளித்தனக் கூட்டு எனக் குறிப்பிடுவதற்கான காரணம் முதல்வராகும் இவர் கனவு இந்தக் கூட்டணியாலும் சரி எந்தக் கூட்டணியாலும் சரி ஒருநாளும் நிறைவேறவே நிறைவேறாது. அவர் காண்பது குழந்தைத்தனமான வெகுளிக் கனவு. நடிகராய்த் தொடங்கி புரட்சி நடிகராய் மாறி, பின்னர் புரட்சித் தலைவராய் வளர்ந்து முதல்வர் ஆனவர் எம்.சி.ஆர். அவர் திமுக அரசியலில் நீண்ட நாள் குப்பை போட்டவர். திமுக அரசியலின் அத்தனைத் தகிடுதத்தங்களையும் கரைத்துக் குடித்தவர். இன்றைய பாசக மோடி போல் திட்மிட்டுத் தன்னை வளர்த்துக் கொண்டவர். தன்னைச் சுற்றிப் பாமரர்களைக் கவரக் கூடிய பிம்பங்களை அழகாகக் கட்டமைத்துக் கொண்டவர். அவருடைய இடத்தை அரசியல் ஆசையுள்ள எந்த நடிகராலும் இனி எட்டிப் பிடிக்க முடியவே முடியாது. அதற்கான சமூக, அரசியல் சூழல் தமிழ்நாட்டில் இப்பொழுது அறவே இல்லை.

மக்களை ஈர்க்கக் கூடிய பிம்பத்தைக் கூடக் கட்டமைத்துக் கொள்ளத் தெரியாத ‘கேப்டன்’ திரைப்படத்தில் கேப்டனாய் இருக்கலாம்; அவருடைய திரைப்பட இரசிகர்களுக்குக் கேப்டனாய் உலா வரலாம்; மக்கள் கேப்டனாய் எந்நாளும் உயர முடியாது. அவரை ஒரு கோமாளியாகவே பெரும்பாலான மக்கள் பார்க்கின்றனர். குடித்துவிட்டு உளறுவதாகவும் பேசிக் கொள்கின்றனர்.

விசயகாந்த்தை முதல்வராக்கி அழகு பார்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறெந்தக் கொள்கைக் கோட்பாடுகளும் அற்ற ஒரு கும்பல்தான் தேமுதிக. அதன் முதல்வர் கனவுக்கான சந்தர்ப்பவாதக் கைகோர்ப்பே பாசகவுடனான கூட்டணி. அக்கட்சியிடம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ள வாக்கு விழுக்காட்டை எதிர்நோக்கித்தான் பாசகவும் அதற்கு ஆகக் கூடுதலாக 14 இடங்களை வாரி வழங்கி உள்ளது. எவ்வளவு இழிவினும் இழிவான சந்தர்ப்பவாதக் கூட்டுகள்!

இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள இன்னொரு மாபெரும்(!) கட்சி இந்திய சனநாயகக் கட்சி என்றொரு கட்சியாகும். ஒரு பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னால் பாசக என்றொரு கட்சியைப் பற்றி எப்படிப் பெரும்பான்மைத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியாதோ அது போலவே இசக என்றொரு கட்சி இருப்பதும் இன்று பெரும்பான்மையோருக்குத் தெரியவே தெரியாது. அவருடைய பணவலிமையும் அவர் கையிலிருக்கும் ஆற்றல் வாய்ந்த ஊடகமுமே கூட்டணியில் ஓரிடத்தை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளன. அவரும் பாரிவேந்தர் என்ற பெயரில் புகழ்வேந்தராய் பவனி வர ஆசைப்படுகிறார்.

நாம் மேலே விவரித்துள்ளவற்றைக் கூர்ந்து கவனித்தாலே கட்டாயம் தோற்கடிக்கப்பட வேண்டிய கூட்டணி இந்த மதவாத சாதிய சந்தர்ப்பவாதக் கூட்டணியே என்பது விளங்கும். போயும் போயும் இக்கூட்டணியில் போய் இணைந்துள்ளதே மதிமுக என்பதுதான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் செரித்துக் கொள்ள இயலாததாகவும் இருக்கிறது. இதற்கு முன் மதிமுக பாசக கூட்டணியில் இணைந்திருந்ததையும், ஆட்சிக் கட்டிலில் இடம் பெற்றிருந்ததையும் நாம் அறிவோம். அப்போது நடந்த குசராத் கோரப் படுகொலையை நாடாளுமன்றத்தில் கண்டிக்கத் தவறிய வைகோ, கலவரத்தை ஒரு சில நாள்களிலேயே மோடி கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாகவும் புகழ்ந்தார். அதனை அசாம், சீக்கியப் படுகொலைகளுடன் ஒப்பிட்டு அதன் கோரத்தைக் குறைக்கவும் முயற்சி செய்தார்.

அப்போதே வைகோ கருணாநிதியிடமிருந்து வேறுபட்டவர் அல்லர், மதிமுக மறுமலர்ச்சி திமுக அன்று, மற்றுமொரு திமுகவே என்கின்ற குற்றத் திறனாய்வுகள் எழுந்தன. பின்னர் அவர் திமுக, அதிமுக என மாறி மாறிக் கூட்டணிகள் சேரவும் செய்தார். ஆனால் இத்தனைக்கும் பிறகும் அவர் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டதென்றால் அவர் பின்னர் ஆற்றிய மக்கள் நலப் பணிகள்தாம். நம்மைப் போன்றவர்கள் அவர்பால் கவனம் கொண்டமைக்கு அவருடைய புலி உறுமல் மட்டுமே காரணம் அன்று. பல நிலைப்பாடுகளில் அவர் மய்ய நீரோட்டக் கட்சிகளிடமிருந்து வேறுபட்டு நின்றார். மதிமுகவில் சேர இருந்ததாக ஆரணித் தொகுதியில் மக்கள் இணைய வேட்பாளராகப் போட்டியிடும் ஆழி செந்தில்நாதன் எழுதியுள்ளது நினைவுக்கு வருகிறது.

சுற்றுப்புறச் சூழல் சீர்கேடுகளுக்கு எதிராக உறுதியான குரல் கொடுத்தார். வேதாந்தா குழுமத்தைச் சேர்ந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக விடாப்பிடியாகப் போராடி வருகிறார். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக எவ்வகை சமரசமுமின்றிக் குரல் கொடுக்கிறார். தமிழ்நாட்டின் ஆற்றுநீர் உரிமைகளுக்கான அவருடைய போராட்டப் பங்களிப்பை யாராலும் புறந்தள்ள முடியாது. குறிப்பாக முல்லைப் பெரியாறு உரிமை மீட்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய இயக்கங்களுடன் கூட்டமைத்துப் போராடியதை நாம் என்றும் மறக்க இயலாது. மது ஒழிப்புக்காகத் தமிழ்நாடு முழுதும் நடையாய் நடந்தார். எல்லாவற்றிற்கும் மேலாக மூவர் மரண தண்டனைக் குறைப்பிற்காக அவர் ஓயாது உழைத்தது வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். மூவரைக் காப்பாற்றியதில் பலருடைய பங்களிப்பு உண்டென்றாலும் வைகோவினுடையதைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. அப்படிச் செய்தால் நாம் நன்றி கொன்றவர்களாகி விடுவோம்.

வைகோவின் தேர்தல் கூட்டணி பற்றி நண்பர் ஒருவர் இப்படி நொந்து கொண்டார்: ”தேர்தல் வரும் வரை ஓய்வின்றி உழைப்பார்; தேர்தல் நெருங்கியதும் தற்கொலை செய்து கொள்வார்.” ஆம், அவர் உண்மையில் அரசியல் தற்கொலைதான் செய்து கொண்டுள்ளார். மோடி ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழர் துன்பம் தீரும், ஆற்றுச் சிக்கல்கள் தீர்ந்து விடும் என்றெல்லாம் அவர் கூறி வருவதில் எந்தப் பொருளும் இல்லை.

ஈழத்தை ஆதரிக்கமாட்டோம் என்று வெங்கைய நாயுடு மட்டும் கூறவில்லை; கட்சியின் தேர்தல் அறிக்கையும் அதையேதான் சொல்லாமல் சொல்லியுள்ளது. தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்(09-04-14) இதை அதன் முன் பக்கத்திலேயே சுட்டிக் காட்டியுள்ளது. தேர்தல் அறிக்கையில் ஈழத்தைப் பற்றிய குறிப்பு மட்டும் அன்று மீனவர் சிக்கலும் இடம் பெறவில்லை. ஆனால் அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணுவோம் என்பதை தேர்தல் அறிக்கை அழுத்தம் திருத்தமாகச் சொல்லியுள்ளது. பாகிசுத்தான் உடனான நட்பையா அது குறிப்பிடுகிறது? இல்லவே இல்லை, இலங்கை உடனான உறவைத்தான் அது அப்படிப் பூடகமாகச் சொல்கிறது. அதே காங்கிரசு சொற்களில் வெளிப்படுத்துகிறது.

சிங்களத்துடனான உறவு ஆரிய உடன்பிறப்பு உறவு; காலங்காலமாய்த் தொடரும் தொப்புள் கொடி உறவு. அது அவர்களின் வரலாற்றுக் கோட்பாட்டின் வழியாகக் கட்டமைக்கப்பட்டதாகும். காங்கிரசு ஆட்சியைக் காட்டிலும் பாசக ஆட்சி அமைந்தால் சிங்களத்துடன் உறவும் நெருக்கமும் கூடுதலாகத் தொடரும். ஈழச் சைவத்தைக் காட்டிலும் சிங்களப் பவுத்தமே பாசகவிற்கு இனிக்கும்.

இராசபட்சேவுக்கு மத்தியப்பிரதேசத்தில் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்தது யார்? அதை எதிர்த்து வைகோதானே போர் முழக்கமிட்டார்? கடந்த கால வாசுபேயி ஆட்சியில் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற இருந்த சூழலில் சிங்களத்தைக் காப்பாற்றியது யார்? அன்று அது நடந்திருந்தால் வரலாறே மாறிப் போயிருக்குமே? முள்ளிவாய்க்கால் பெருந்துயரம் நிகழ்ந்திருக்காதே? ஈழவிடுதலை நனவாயிருக்குமே? வைகோ செய்துள்ளது மாபெரும் வரலாற்றுத் தவறு. கருணாநிதியின் துரோகத்திலும் பெரிய துரோகம். யார் மன்னித்தாலும் வரலாறு அவரை மன்னிக்கவே மன்னிக்காது.

பொதுச் சிவில் சட்டத் தனிநபர் தீர்மானத்தைக் கருணாநிதி ஆதரித்ததாக வைகோ தேர்தல் பரப்புரையில் சாடியுள்ளார், இப்பொழுது அவர் ஆதரிக்கும் பாசக அதனைத்தானே தேர்தல் அறிக்கையில் முன்மொழிந்துள்ளது. எக்ஸ்பிரஸ் இதையும் எழுதிக் கள்ளச் சிரிப்பு சிரிக்கிறதே! என்ன செய்யப் போகிறார் கருப்புத் துண்டார் வைகோ?

திமுக தலைமையிலான கூட்டணி மக்களால் ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டு விட்ட கூட்டணி. திமுக அதனுடைய அந்திமக் காலத்தை நெருங்கிக் கொண்டுள்ளது. கருணாநிதி காலத்திற்குப் பிறகு என்பது போய் அவர் காலத்திலேயே அது நடந்தேறி விடும் போல் தெரிகிறது. திமுகவின் அழிவுக்குச் ‘சகோதரச் சண்டை’ மட்டும் காரணம் அன்று. அது கொள்கையை அடகு வைத்து விட்டு கொள்ளை அடிக்கத் தொடங்கியதுதான் காரணம். கட்சி ‘கம்பெனி’யாக அதுவும் குடும்பக் கம்பெனியாக மாறிப் போன பின்னர் கம்பெனிச் சொத்துக்கான வாரிசுச் சண்டை வரத்தானே செய்யும்? ஸ்டாலினுக்கு மட்டும்தானா பங்கு என அழகிரி பொங்கி எழுவதில் எந்தத் தவறும் இல்லை.

ஒருபுறம் திமுக ஊழல் புதைகுழியில் மூழ்கிக் கொண்டுள்ளது. மறுபுறம் அதன் மேல் படிந்துள்ள ஈழத்தமிழரின் இரத்தக்கறை அதனைத் தமிழ் மக்களிடமிருந்து முற்றிலும் அந்நியப்படுத்தி விட்டது. தமிழ்நாட்டை இன்று களங்கிப்படுத்திக் கொண்டுள்ள அத்தனைச் சீர்கேடுகளுக்கும் மூலவித்து கருணாநிதிதான். தமிழ்நாட்டில் தமிழ் இன்று ஆட்சிமொழியாகவும் இல்லை; கல்விமொழியாகவும் இல்லை. இதற்கு யார் காரணம்? தமிழ்நாட்டின் ஆற்றுநீர் உரிமைகளைத் தாரைவார்த்தது யார்? பதவிக்காய், பதவியால் பெறும் பயனுக்காய் தமிழகத் தமிழரின் நலன்களை ஒவ்வொன்றாய்க் காவு கொடுத்ததன் உச்சம்தான் ஈழத்தமிழருக்கு இழைத்த இரண்டகம். இவ்வெல்லாவற்றிற்குமான ஒட்டுமொத்தத் தண்டனையைத்தான் திமுக இப்பொழுது அனுபவித்து வருவது. திமுக வரலாறு நல்லதொரு அரசியல் பாடம். ஆனால் பாடம் கற்றுக் கொள்வோரைத்தான் காணோம்.

திமுக 'திராவிட நாடு திராவிடர்க்கே' என்ற முழக்கத்தோடு அரசியலுக்கு வந்து சீரழிந்து போனது. தமிழ்நாட்டின் தலித் அமைப்புகளும் தலித் விடுதலையைக் கையிலேந்தி அரசியலுக்கு வந்தவைகள்தாம். அதே திமுக பாணியில் அவையும் நாசமாகிப் போயின. விடுதலைச் சிறுத்தைகள் திமுகவில் தொடர்கிறது. திருமாவளவன் அப்பழுக்கற்ற இன்னொரு கருணாநிதி. கிருஷ்ணசாமி அவ்வப்பொழுது இடம் மாறிக் கொள்கிறார். அதிமுக அணியிலிருந்து திமுக அணிக்கு மாறியதின் காரணம் என்னவோ? அவருக்கே வெளிச்சம்.

மனித நேய மக்கள் கட்சி அதிமுகவின் மோடி சாய்வைக் கண்டு திமுக பக்கம் சாய்ந்து விட்டதா? கடந்த சட்ட‌மன்றத் தேர்தலின் போது அது அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டதா? இந்திய யூனியன் முசுலீம் லீக் திமுகவுடன் நன்றியுணர்வோடு தொடர்கிறது. தேர்தலில் பங்கேற்காமல் முசுலீம் மக்களுக்கு இக்கட்சிகளால் பணியாற்ற முடியாதா? கூட்டிக் கழித்துப் பார்த்தால் திமுக கூட்டணி ஒதுக்கப்பட வேண்டிய கூட்டணி; ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்ட கூட்டணியும் கூட.

இந்தத் தேர்தலிலே நாம் பெரிதும் மகிழ்ந்து கொண்டாடக் கூடிய செய்தி ஒன்று உண்டென்றால் அது தமிழர் விரோதக் காங்கிரசு தமிழ்நாட்டில் முற்றாகத் துடைத்தெறியப்படும் என்பதுதான். தமிழ்நாட்டில் மக்கள் ஆதரவை எப்பொழுதோ அது இழந்து விட்டது. இந்த வீணாய்ப்போன பதவிப் பித்துப் பிடித்த திராவிடக் கட்சிகளின் முதுகிலேறிக் கொண்டுதான் அது இந்நாள் வரை சவாரி செய்து கொண்டு இருந்தது. சவாரி ஏறுவதற்கு முதுகுகள் இல்லாத பொழுது முக்காடிட்டுக் குப்புறப் படுப்பதைத் தவிர அதற்கு வேறு வழி இல்லை.

ஆனாலும் பாருங்கள், இப்பொழுதுங்கூட மதச் சார்பற்ற ஆட்சிக்குக் கை கொடுக்கத் தயார் என்கிறார் இந்தக் கருணாநிதி. “உன்னோடு சேர்ந்து நானும் கெட்டேன்; என்னோடு சேர்ந்து நீயும் கெட்டாய்; நமக்கு நாமே துணை!” எனப் புது மெய்யியலை வகுக்கின்றார் போலும். அழிந்தொழியட்டும் மக்கள் விரோதக் கட்சிகள்.

அதிமுகவிற்கு யார் திட்டம் வகுத்துத் தருகிறார்களோ தெரியவில்லை. “நாற்பதற்கு நாற்பதும் நமக்கே” என்ற தலைக்கன‌த்தோடு உலா வருகிறார் அம்மையார். அவருடைய தொப்புள் கொடி உறவு பாசகவுடன்தான் என்பது ஊரறிந்த இரகசியம். ஆனால் இந்த இடதுசாரிகளுக்குத்தான் அறிவு எங்கே போயிற்று என்று நமக்கு விளங்கவில்லை. எட்டி உதைத்து வெளியே தள்ளிய பிறகுதான், கீழே குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாய்த் தனித்து நிற்பதாக அறிவிக்கிறார்கள்.

இவர்கள் அதிமுக, திமுக என மாறி மாறிக் கூட்டுச் சேர்ந்தே மதிப்பிழந்து போய்விட்டார்கள். தேர்தலில் நின்றே இவர்கள் புரட்சியைக் கொண்டு வரட்டும். ஆனால் எத்தகைய ஆற்றல்களோடு கூட்டணி காண்பது என்ற ‘விவஸ்தை’ இல்லையா? அதிமுக, திமுக போன்ற அரசியல் அசிங்கங்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு மக்கள் நம்பிக்கையைப் பெறுவது எப்படி? தேர்தல் சகதிக்குள் மூழ்கி முத்தெடுக்கும் அவர்களிடம் இனி எந்தப் புரட்சிகர மாற்றத்தையும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை.

தேர்தல் பரப்புரையைக் கூர்ந்து கவனித்து வருகின்றவர்களுக்கு ஒன்று நன்கு புலப்படும். மற்றெல்லாத் தலைவர்களைக் காட்டிலும் ஈழச்சிக்கலைப் பற்றிக் கூடுதலாகப் பேசி வருகின்றவர் செயலலிதாவாகத்தான் இருக்கிறார். வைகோவிடம் பழைய வீரமுழக்கங்கள் காணாமல் போய்விட்டன.. திடீரென்று செயலலிதாவிடம் இந்த ஈழத்தமிழர் பாசம் எப்படிப் பொத்துக் கொண்டு வந்தது? அதுமட்டுமன்று தமிழ்நாட்டின் உரிமைகள் பற்றியும் ஆவேசமாகப் பேசுகிறார்.

இது தமிழ்த் தேசிய ஆற்றல்களைக் கவர்ந்து அவர்கள் வாக்கைப் பெறும் உத்தியோ? அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. தமிழ்த் தேசிய வாக்கு வங்கி பற்றி அவருக்குத் தெரியாதா என்ன? கருணாநிதியின் மீது இன்னும் மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ் அடையாளங்களைத் துப்புரவாய்த் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற நோக்கமும், தமிழகத் தமிழர் உரிமைகளை மீட்கவும், ஈழத்தமிழரைக் காப்பாற்றவும் பிறந்துள்ள வீரமங்கை தானே என்ற மகுடம் தமக்குச் சூட்டப்பட வேண்டும் என்ற அடங்கா ஆசையுமே அவர் தேர்தல் பரப்புரையில் வெளிப்படுகிறது. இடஒதுக்கீட்டில் அறுபத்தொன்பது விழுக்காட்டை நிலைநாட்டி சமூகநீதி காத்த வீராங்கனைத் தாமே என்ப‌தை அவர் பரப்புரையில் குறிப்பிட்டு வருவதைக் கவனித்தால் அம்மையாரின் தமிழன்னை ஆசையை விளங்கிக் கொள்ளலாம்.

ஈழம் குறித்தும் பிரபாகரன் குறித்தும் செயலலிதா முன்னர் பேசியதைச் சிலர் நினைவுபடுத்தி அவரை அம்பலப்படுத்தி விட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள். அம்மாவிடம் இந்தப் பருப்பெல்லாம் ஒன்றும் வேகாது. நளினியின் பரோலை அவரது அரசு மறுத்த ஒரு சில நாள்களிலேயே எழுவர் விடுதலைத் தீர்மானத்தைச் சட்டமன்றத்திலே கொண்டு வந்து அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைத்து வியக்கச் செய்தவர் அவர். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்ற பாலபாடத்தைக் கவுண்டமணியிடம் அல்ல, கருணாநிதியிடம் கற்றுக் கொண்டவர் அவர். கருணாநிதி போடாத தமிழ் ஒப்பனைகளா? ஈழ நாடகங்களா? அம்மா இப்பொழுது அவருக்கே பாடம் சொல்லித் தருகிறார்; அவ்வளவே.

தில்லிக்கு அம்மா சென்றாலும் கருணாநிதி சென்றாலும் விளையப் போவது ஒன்றுதான். அம்மா மோடியை ஆதரிப்பார். மதச்சார்பற்ற அரசுக்கே கைகொடுக்கப் போவதாக கருணாநிதி இப்பொழுது உறுதிபட உரைத்தாலும் தேவை ஏற்பட்டால் மஞ்சள் துண்டு காவித் துண்டாக மாற நேரம் எடுக்காது. மஞ்சளுக்கும் காவிக்கும் பெருத்த இடைவெளி ஒன்றும் இல்லையே?

வடக்கே ஒருசேர காங்கிரசு வயிற்றிலும் பாசக வயிற்றிலும் புளியைக் கரைத்து வரும் ஆம் ஆத்மி தமிழ்நாட்டிலும் ஒருசில இடங்களில் போட்டியிடுகிறது. மாற்றம் என்ற முழக்கத்தோடு அரங்கத்துக்கு வந்துள்ள அக்கட்சி ஒரு கதம்பமாய்க் காட்சி அளிக்கிறது. இடதுக்கீட்டிற்கு ஆதரவானவர்களும் அதில் உள்ளனர்; எதிரானவர்களும் அதில் உள்ளனர். இந்தியா பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு துணைக் கண்டம் என்ற பார்வை கொண்டவர்களும் உள்ளனர்; இந்தியா ஒரே நாடு என்ற இந்துத்துவா பார்வை கொண்டவர்களும் உள்ளனர்.

இந்தியாவுடனான சம்மு காசுமீர் இணைப்பு குறித்து மக்கள் கருத்தறிய வாக்கெடுப்பு நடத்தலாம் என்ற பிரசாந்த்பூசன் கருத்திற்குக் கிளம்பிய எதிர்ப்பையும் கெஜ்ரிவால் பின்வாங்கியதையும் நாம் அறிவோம். தமிழ்த்தேசிய உரிமைகள், ஈழத்தமிழர் நலன்கள் ஆகியன தொடர்பாய் இக்கட்சியிடம் பெரிதாய் எதையும் எதிர்பார்க்க முடியாது. ஆம் ஆத்மி கட்சியின் பெயரை எளிய மக்கள் கட்சி என்று தமிழாக்கிய உதயகுமார் முயற்சி எடுபடவில்லையே? அகில இந்தியக் கட்சிகள் தங்கள் அடையாளத்தை மாற்றிக் கொள்ளா; அவை இந்தி அடையாளங்களாகவே எப்பொழுதும் இருக்கும்.

அணுஉலைக்கு எதிராக வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தியவர் உதயகுமார். அவருடைய ஈகத்தையும் நேர்மையையும் எள்ளளவும் அய்யப்பட முடியாது. அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்துடன் தமிழகம் தழுவிய மற்ற சிக்கல்களுக்கும் அவர் போராடியிருந்தால் தமிழகம் காலங்காலமாய்க் காத்துத் தவமிருக்கும் ஒரு தலைவனைக் கண்டிருக்கும். அப்படிச் செய்திருந்தால் அணுஉலைப் போராட்டமும் தமிழகம் தழுவியதாக மாறியிருக்கும். இடிந்தகரையிலேயே ஒரு தலைமறைவுப் போராளி போல் வாழ்ந்திருக்க வேண்டியதில்லை. வெளியில் வந்து தளைப்பட்டிருக்கலாம். அதனை ஓர் அரசியல் போராட்டமாக மாற்றியிருக்கலாம். தேர்தலுக்குப் பிறகு தமிழகச் சிக்கல்களுக்காகத் தமிழகம் தழுவிப் போராடக் கூடிய தமிழ்நாட்டுத தலைவராக மலர்வார் என எதிர்பார்க்கிறோம்.

இத்தேர்தலில் தமிழ்த்தேசிய ஆற்றல்களின் நிலைதான் இரங்கத் தக்கதாய் உள்ளது. கடந்த தேர்தலில் பல இடங்களில் காங்கிரசை மண்ணைக் கவ்வச் செய்த பெருமை அவற்றிற்கே உண்டு. அப்போது பொதுநிலைப்பாட்டிற்கான முய‌ற்சிகள் நடைபெற்றன. அது வெற்றி பெறாவிட்டாலும் எல்லாம் அதனதன் போக்கில் களத்தில் வேலை செய்தன. இப்பொழுது அப்படி எந்த முயற்சியும் நடந்ததாகத் தெரியவில்லை. ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் வேலை செய்யும் அமைப்புகளும் தென்படவில்லை.

நடைபெறும் தேர்தல் எந்தப் புரட்சிநிறை மாற்றங்களையும் கொண்டு வந்து விடப் போவதில்லை. ஆனால் மக்கட்பகைக் காங்கிரசும் மானுடப்பகை பாசகவும் வெற்றி பெற்று விடக் கூடாது. இன்னும் எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளாத திமுகவிற்கும் உரைக்கின்றபடி பாடம் கற்பிக்க வேண்டும். காங்கிரசும் திமுகவும் மக்கள் ஆதரவை இழந்து விட்டதாகவே தோன்றுகிறது. மதவெறி சாதிவெறி சந்தர்ப்பவாதக் கூட்டணியே அச்சுறுத்துகிறது. அதிலும் குறிப்பாய் பாசகவும் பாமகவும் எக்காரணம் கொண்டும் வெற்றி பெற்று விடக் கூடாது. நச்சு விதை தமிழ்நாட்டில் வேரூன்றி விடக் கூடாது. மற்ற கட்சிகள் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான், தோற்றாலும் ஒன்றுதான். பெரிதாய் நன்மையோ தீமையோ விளைந்து விடப் போவதில்லை. தமிழ்த்தேசிய ஆற்றல்களும் மக்கள விடுதலையை முன்னெடுக்கும் மற்ற முற்போக்கு அமைப்புகளும் இதைக் கவனத்தில் கொண்டு செயல்படுமா?

- கலைவேலு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It