உயிர் போகும் தறுவாயில் கிடைத்த சஞ்சீவினி மூலிகையைச் சுருட்டிப் ‘பீப்பீ’ ஊதியிருக்கிறார்கள் தமிழ் மக்கள்! மாற்று அரசியல் முயற்சிகளுக்கு மக்கள் அளித்த தோல்வியைத்தான் சொல்கிறேன்.
மக்கள் நலக் கூட்டணி தோல்வி அடையும் என்பது ஒருவாறு எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், இந்த அளவுக்கு இழிவான படுதோல்வியை அடையும் என்று யாருமே நினைக்கவில்லை. மேலும், புதிதாக யாரும் ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், வழக்கம் போல அ.தி.மு.க தோற்று, தி.மு.க ஆட்சி அமையும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், வழக்கத்துக்கு மாறாக, முதன் முறையாக இந்த தடவை அரசியல் நோக்கர்களின் கணிப்பு பலித்துத் தொலைத்தது!
இவற்றுக்கெல்லாம் காரணங்கள் என்ன? மக்களுக்கு உண்மையிலேயே கருணாநிதி, ஜெயலலிதா தவிர வேறு யாரையுமே பிடிக்கவில்லையா? அல்லது, மக்கள் நலக் கூட்டணியால் விளைந்த விபரீதமா இது?
தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்ட தி.மு.க!
“வைகோ வாங்கிய கூலிக்குச் சரியாக வேலை பார்த்து விட்டார். தி.மு.க-வைத் தோற்கடித்து அ.தி.மு.க-வை வெற்றி பெற வைத்து விட்டார்” என இணையம் முழுதும் பேச்சு. இணைய இதழ்கள், வலைப்பூக்கள், சமூக வலைத்தளங்கள் என எங்கு பார்த்தாலும் இதே கூச்சல்.
இப்பேர்ப்பட்ட அறிவாளிகள் எல்லாரும் எங்கிருந்துதான் புறப்பட்டு வருகிறார்கள் எனப் புரியவில்லை! தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் சிறு பகுதியை அறிந்தவர்கள் கூட இதை ஏற்க மாட்டார்கள். காரணம், முந்தைய பதிவிலேயே சொன்னது போல, இதற்கு முன் இரண்டு முறை தமிழ்நாட்டில் மூன்றாம் அணிக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபொழுது, அந்த இரண்டு முறையுமே ஆளுங்கட்சி ஆட்சியை இழக்கத்தான் செய்தது. அதிலும், அந்த இரண்டு தடவையில் ஒரு தடவை ஆட்சியை இழந்தவரே ஜெயலலிதாதான். அப்படியிருக்க, இந்த முறை மட்டும் ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடும் எனத் தேர்தலுக்கு முன்பே எந்த நம்பிக்கையில் அவர் ஒரேயடியாக 1500 கோடியை அள்ளிக் கொடுப்பார் என்பதை அறிவுள்ளவர்கள் சிந்திக்கட்டும்!
முதலில் சமூக வலைத்தளங்களில் இப்படியொரு பேச்சு அடிபடுவதாகச் சொன்னார்கள். பின்னர், தேநீர்க் கடைகளில் பேசுகிறார்கள், தெருமுக்குகளில் பேசுகிறார்கள், பட்டிதொட்டியெல்லாம் பேசுகிறார்கள் என்றார்கள். கடைசியில் பார்த்தால், இப்படியொரு புரளியைக் கிளப்பி விட்டதே தி.மு.க-தான் என உறுதியாகி இருக்கிறது. மே 19 அன்று தேர்தல் முடிவு பற்றிய தந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க புள்ளி கம்பம் செல்வேந்திரன் எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் இதை வெளிப்படையாகவே சொன்னார். பாருங்கள் அந்த விழியத்தை (video).
“மக்கள் நலக் கூட்டணியை நாங்கள் அ.தி.மு.க-வின் ‘பி’ டீம் என்று சொன்னோம். மக்கள் அதை நம்பினார்கள்” என்று வெட்கமே இல்லாமல் அவர் பேசியிருப்பதைப் பார்த்தீர்களா? ஆக, தங்களுக்கு மாற்றாக ஓர் ஆட்சி வந்துவிடக்கூடாது; அதற்குப் பதில் தங்கள் எதிரியே ஆட்சிக்கு வந்தாலும் வரட்டும் என்ற கேடுகெட்ட நோக்கத்தால் தி.மு.க-வே கட்டிவிட்ட கதைதான் இது. தேர்தல் என வரும்பொழுது ஒருவரைப் பற்றி இன்னொருவர் இப்படியெல்லாம் கதை கட்டிவிடுவது வழக்கம்தான். அதைப் போய் உண்மை என்று நம்பி மக்கள் நலக் கூட்டணியைப் புழுதி வாரித் தூற்றியதோடு இல்லாமல் அடிப்படைச் சான்று கூட இல்லாத இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து இன்னும் குறை சொல்லிக் கொண்டு திரிபவர்களே! நினைத்துப் பாருங்கள், மக்கள் நலக் கூட்டணி அ.தி.மு.க-வின் ‘பி’ டீமா அல்லது நீங்கள் எல்லோரும் உங்களுக்கே தெரியாமல் தி.மு.க-வின் ‘பி’ டீமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்களா என்பதை!
மேற்கண்ட விழியத்தில் கம்பம் செல்வேந்திரன் தொடர்ந்து பேசுகையில், மக்கள் நலக் கூட்டணி அ.தி.மு.க-வின் ‘பி’ டீம் என்று மக்கள் நம்பியதால், அவர்களுக்கு வாக்களிப்பதற்குப் பதில் அ.தி.மு.க-வுக்கே வாக்களித்து விட்டதாகக் கூறுகிறார். அதாவது, ம.ந.கூ-வுக்கு எதிராக இப்படியோர் இழிவேலையை இவர்கள் செய்யாமல் இருந்திருந்தால் அ.தி.மு.க பெற்றிருக்கும் வாக்குகள் வெகுவாகக் குறைந்திருக்கும் என்கிறார். ஆக, அ.தி.மு.க-வை வெற்றி பெற வைத்ததே தி.மு.க-தான் என்பதில் என்ன தவறு? ம.ந.கூ-வைக் கறைப்படுத்தியதன் மூலம் ‘மாற்று என இங்கு ஏதும் இல்லை. இது மீண்டும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கு இடையிலான தேர்தல்தான்’ என்று இவர்கள் மக்களை நம்ப வைத்து விட்டார்கள். அதனால், தி.மு.க பக்கம் காங்கிரசைத் தவிர வேறு பெரிய கட்சிகள் ஏதும் கூட்டணியில் இல்லாத நிலையில், கிட்டத்தட்ட தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான நேரடிப் போட்டியாக இது மாறி விட்டது. ஆகவே, தி.மு.க-வின் வாக்கு வங்கியை விடப் பெரிய வாக்கு வங்கியைக் கொண்ட அ.தி.மு.க மிகச் சிறிய வாக்கு வேறுபாட்டில் ஆட்சி வாய்ப்பைத் தட்டிச் சென்று விட்டது. இதுதான் தி.மு.க-வின் தோல்விக்கும் அ.தி.மு.க-வின் வெற்றிக்கும் உண்மையான காரணம்!
தேர்தலை நேர்மையாகச் சந்திக்க நெஞ்சுரம் இல்லாமல் எப்பொழுது பார்த்தாலும் அடுத்தவர்களைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றுவதையே வழக்கமாக வைத்திருந்தால் ஒருமுறை இல்லாவிட்டாலும் ஒருமுறை இப்படித்தான் ஆகும். அரசியல் இராஜதந்திரம் என்பது இருபுறமும் குழல் கொண்ட துப்பாக்கி. சில சமயம் பின்னாடியும் சுடும்.
இப்படி, தி.மு.க-வினர் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டதற்கு வைகோவோ மூன்றாம் அணியினரோ என்ன செய்ய முடியும்? நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்கட்டும்!
சரி, தி.மு.க இந்த ஒரே ஒரு பழியைச் சுமத்தியிராவிட்டால் மட்டும், ஆறு கட்சிகளும் சேர்ந்து ஆறே விழுக்காடு வாக்குகள் பெற்றுள்ள இவர்கள், ஒரேயடியாக வென்று ஆட்சியைப் பிடித்து விட்டிருப்பார்களா? அதையும் பார்க்கலாம் வாருங்கள்!
ம.ந.கூ-வின் தவறான அணுகுமுறையும் இணைய உலகின் எதிர்மறைப் போக்கும்
மக்கள் நலக் கூட்டணி மட்டுமில்லை, இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க இரண்டையும் எதிர்த்துக் களம் கண்ட அத்தனை கட்சிகளும் நம்பி இறங்கியது இளைஞர்களைத்தாம். ஆனால், அந்த இளைய வாக்காளர்களின் மனநிலை என்ன, அவர்களுடைய இடம் எது, அங்கு நடப்பது என்ன, அங்கே தங்களைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று எதையுமே ம.ந.கூ-வினர் தெரிந்து கொள்ளவில்லை.
இளைய தலைமுறையினரின் விருப்பத்துக்குரிய இடமே இணையம்தான். ஆனால், நடந்த இந்தத் தேர்தலையொட்டி இணையத்தில் மிகுதியாகக் கிண்டலடிக்கப்பட்டவர்களே விஜயகாந்தும் வைகோவும்தான். விஜயகாந்தைக் கிண்டலடிக்க அவருடைய உடல்மொழியும் உளறல் பேச்சுகளும் காரணமாக இருந்தன என்றால், வைகோவைக் கிண்டலடிக்க முன்பு அவர் முதன்மைக் கட்சிகள் இரண்டுடனும் மாறி மாறிக் கூட்டணி வைத்திருந்ததே நம்மவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. கூடவே, தி.மு.க கிளப்பி விட்ட புரளி வேறு. இவற்றை வைத்துக் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகச் சித்திரப்பகடிகளும் (memes) நையாண்டிப் பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் இறக்கை கட்டிப் பறந்தன. இணையத்தில் இவற்றைப் பார்க்காதவர்களே இல்லை எனும் அளவுக்குப் பற்றிப் பரவின. ஆனால், ம.ந.கூ-வினர் இது பற்றிக் கண்டு கொள்ளவே இல்லை.
இதே பிரச்சினை முன்பு கருணாநிதிக்கும் வந்தது. ஆனால், அதை அவர் வெகு சாதுரியமாகக் கையாண்டார். ஈழத் தமிழர்களுக்கு அவர் துரோகம் செய்ததை அடுத்து இணையத்தில் இளைஞர்கள் அவரைக் கிழி கிழியெனக் கிழித்துத் தோரணம் கட்டியபொழுது அதற்கென்றே இரண்டு பேரைப் பணியமர்த்தி, தேடுபொறி உவப்பாக்க (SEO) நுட்பங்கள் மூலம் அத்தகைய பதிவுகள் மக்கள் கண்ணில் படாமல் பின்னுக்குப் போகும்படி செய்தார் கருணாநிதி. அப்படியெல்லாம் எதுவுமே செய்யாமல், தாங்கள் எந்த இளைஞர்களை நம்பித் தேர்தலில் நிற்கிறோமோ அந்த இளைஞர்களிடம், அதுவும் தேர்தல் நேரத்தில் தங்களைப் பற்றி இப்படி ஓர் அவதூறு தொடர்ச்சியாகப் பரப்புரை செய்யப்பட்டதை வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் ம.ந.கூ-வினர்.
ஒன்றில்லை இரண்டில்லை, தமிழ்நாட்டின் முப்பது விழுக்காடு வாக்காளர்கள் முகநூலில் இருப்பதாகப் புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. அறுதிப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடிக்கப் போதுமான அளவு இது! இப்படிப்பட்ட ஒரு களத்தில் இவர்களைப் பற்றி இப்படி ஓர் எதிர்மறைப் பரப்புரை தொடர்ந்து மாதக்கணக்கில் மேற்கொள்ளப்பட்டு வந்தால், அந்த இடத்தைச் சேர்ந்தவர்களான இளைஞர்களிடமிருந்து இவர்களுக்கு எப்படி வாக்குகள் கிடைக்கும்?
அடுத்த காரணம், இவர்கள் முன்னிறுத்திய முதல்வர் வேட்பாளர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் வெகுவாகக் கிண்டலடிக்கப்பட்டு வந்தவர் விஜயகாந்த். கடந்த (2011) சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்பொழுது தன் கட்சி வேட்பாளரையே அவர் தாக்கியது முதலே பொதுமக்களால் எள்ளி நகையாடப்பட்டு வந்தார். இணையம் மட்டுமின்றித் தொலைக்காட்சி, திரைப்படம், இதழ்கள் எனப் பொது ஊடகங்களும் தொடர்ந்து அவரை நகைப்புக்குரிய மனிதராகவே காட்சிப்படுத்தி வந்தன. எந்த இடத்தில் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாமல் அவர் உளறிக் கொட்டியவையும் கோணங்கித்தனமான அவருடைய உடல்மொழிகளும் தொடர்ந்து விழியங்களாக (videos) வெளிவந்து இணையத்தில் சக்கைப் போடு போட்டன. இளைஞர்கள் அந்த விழியங்களைத் தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கி வைத்துக் கொண்டு அடிக்கடி பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களுக்கும் காட்டியும் பகிர்ந்தும் நகைத்துக் கொண்டிருந்தார்கள்.
அப்படிப்பட்ட ஒருவரைக் கூட்டி வந்து ‘இவர்தான் உங்கள் அடுத்த முதல்வர்’ என்று ம.ந.கூ-வினர் முன்னிறுத்தியது, இளைஞர்களை மட்டுமின்றி மாற்று அரசியலை எதிர்பார்த்த எல்லோரையுமே ஏளனப்படுத்துவது போல இருந்தது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் வேண்டா என்றால் இப்படிப்பட்ட ஒருவர்தான் உங்களுக்குக் கிடைப்பார் என்று முகத்திலடிப்பது போல அமைந்திருந்தது.
உண்மையில், மக்கள் நலக் கூட்டியக்கம் ‘மக்கள் நலக் கூட்டணி’யாக அறிவிக்கப்பட்ட பொழுது முரண்பாடான அணி என்று அதை மற்ற கட்சியினர் விமரிசித்தாலும் அறிவுத்தளத்தைச் சேர்ந்தவர்கள் அதன் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டத்தான் செய்தார்கள். அப்பொழுதே எழுத்தாளர் ஞானி அவர்கள் கூறியது போல ஐயா நல்லகண்ணு அவர்களை முதல்வர் வேட்பாளராக இவர்கள் அறிவித்திருந்தால் சமூக ஆர்வலர்கள், நாட்டு நடப்பில் ஆர்வம் உள்ளவர்கள், எழுத்தாளர்கள், இதழாளர்கள், அரசியல் நோக்கர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் உணர்வாளர்கள் என்று அறிவு சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேரின் ஆதரவும் இந்தக் கூட்டணிக்கு அப்படியே கிடைத்திருக்கும். இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கானோரால் பின்தொடரப்படுவதால் ம.ந.கூ பற்றிய இவர்களின் எழுத்துக்கள் வலையுலகம் எங்கும் பரவி, நடுநிலை வாக்காளர்களுக்கும் இளைஞர்களுக்கும் இவர்கள் மீது நம்பிக்கை பிறக்கச் செய்திருக்கும். மாறாக, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்ததால் இருந்த இந்தப் பேராதரவையும் ம.ந.கூ இழந்தது. அதுவரை இவர்கள் மீது ஆர்வம் காட்டிய நடுநிலை ஆளுமைகள் பலரும் வெளிப்படையாகவே இது குறித்துத் தங்கள் ஆற்றாமையை இணையத்தில் வெளியிட்டனர்.
இப்படி இளைஞர்கள், மாணவர்கள், அறிவார்ந்த பெருமக்கள் என்று நடுநிலை வாக்காளர்கள் அத்தனை தரப்பினரையும் பெருத்த ஏமாற்றத்துக்குள்ளாக்கும் வகையில் முதல்வர் வேட்பாளராக ஒருவரை முன்னிலைப்படுத்தினால் வைகோவோ திருமாவளவனோ மட்டுமில்லை காந்தியும் காமராசருமே வந்தாலும் தேர்தலில் வெல்ல முடியாது.
இவை தவிர, சில பிரச்சினைகளை ம.ந.கூ-வினர் எதிர்கொண்ட விதமும் தவறாக இருந்தது.
ஜெயலலிதாவிடம் பணம் வாங்கியதாகச் சொல்லப்படுவது பற்றிப் பாலிமர் தொலைக்காட்சியில் கேட்கப்பட்டதை, தன்னைக் கூப்பிட்டு வைத்து இழிவுபடுத்தும் முயற்சியாகப் பார்த்தார் வைகோ. மாறாக, அந்தக் குற்றச்சாட்டுக்கு மக்கள் முன்னிலையிலேயே பதிலடி கொடுக்கக் கிடைத்த வாய்ப்பாக எண்ணிச் செயல்பட்டிருந்தால் அந்தப் பெரும் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல், பதிலளிக்காமல் பாதியிலேயே எழுந்து போய்த் தான் மானமுள்ள தலைவன் என்பதை நிறுவ முயன்றார். ஆனால், அஃது அப்படிப் பார்க்கப்படவில்லை. வெறும் வாயை மென்று கொண்டிருந்தவர்களுக்கு மெல்லுங்கோந்து (Chewing Gum) கொடுத்த கதையாக, “கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் எழுந்து போனார்” என்றுதான் பேசப்பட்டது. அந்தச் செய்திக்கான தலைப்பே அப்படித்தான் வைக்கப்பட்டது.
இதே போல, இவர்கள் முதல்வர் வேட்பாளரை அறிவித்த அன்று மாலையே “வைகோ, விஜயகாந்த், ஜி.இராமகிருஷ்ணன் என இது மொத்தமும் தெலுங்கர் கூட்டணி” என்று நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் சாடினர். உடனே வைகோ, ‘ஒருவர் தமிழரா தெலுங்கரா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது அவருடைய பிறப்பா நடத்தையா’ என்று பதில் கேள்வி கேட்டிருக்க வேண்டும். கடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழ் இனத்துக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தான் செய்தவற்றைப் பட்டிலிட்டு, இப்படிப்பட்ட தான் தமிழன் இல்லையா என்று மக்கள் மன்றத்தில் விவாதத்தைக் கிளப்பி விட்டிருக்க வேண்டும். ஆனால், ‘சீமான் நேற்று வந்தவர்தானே! அவர் சொல்லி யார் கேட்கப் போகிறார்கள்’ என்றெண்ணி இத்தகைய குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தாமலே புறந்தள்ளினார்.
உண்மையில், இணையத்திலும் சரி, இன்றைய இளைஞர்களிடத்திலும் சரி வைகோ, திருமா ஆகியோரை விடச் சீமானுக்குப் பன்மடங்கு செல்வாக்கு. திராவிட எதிர்ப்பு, தமிழ் தேசியம் போன்ற அவருடைய கருத்துக்கள் இணையத்துக்கு உள்ளும் புறமும் மிகப் பெரும்பாலோரைக் கவர்ந்துள்ளன. அப்படிப்பட்ட ஒருவரைச் சரியாக மதிப்பிடாதது, தமிழ் உணர்வாளர்களின் வாக்கு வங்கி முழுமையாகச் சீமான் பக்கமே செல்லும்படி செய்து விட்டது. அதனால்தான், தே.மு.தி.க-வைத் தவிர இவர்களில் வேறு யாரும் தலா ஒரு விழுக்காடு கூட வாக்குகளை எட்ட முடியாத நிலையில் நாம் தமிழர் கட்சி தனித்து நின்றே அதை சாதித்திருக்கிறது.
இத்தனைக்கும், முதன்மைக் கட்சிகள் இரண்டுக்கும் அடுத்தபடியாக மூன்றாம் அணியை உயர்த்திப் பிடித்த ஊடகங்கள் ‘நாம் தமிழ’ரைக் கண்டு கொள்ளவேயில்லை. பத்தோடு பதினொன்றாகத்தான் பார்த்தன. ஆனாலும், மூன்றாம் அணிக் கட்சிகளில் தே.மு.தி.க தவிர்த்த, மற்ற கட்சிகளின் தனிப்பட்ட வாக்குகளை விடக் கூடுதல் வாக்குகளை இணையத்தை மட்டுமே பயன்படுத்தி ‘நாம் தமிழர்’ வென்றெடுத்திருக்கிறது! இணையம் எந்த அளவுக்குத் தேர்தலில் தாக்கம் செலுத்தியிருக்கிறது என்பதற்கு இது சரியான எடுத்துக்காட்டு.
ஆனால், இந்தத் தேர்தலில் இணைய உலகம் எவ்விதத் தாக்கமும் செலுத்தவில்லை என்று எல்லோரும் கூறுகிறார்கள். இணையத்தின் மூலை முடுக்கெல்லாம் விளம்பரம் செய்தும் தி.மு.க தோற்றிருப்பதையும், அந்த அளவுக்கு இணையத்தில் ஏதும் செய்யாமலே அ.தி.மு.க வென்றிருப்பதையும் வைத்து இப்படிச் சொல்லப்படுகிறது. ஆனால், இணைய உலகின் அடிப்படை இயல்பையே புரிந்து கொள்ளாத கருத்து இது!
இணையத்தின் நம்பகத்தன்மையே அதில் வரும் எல்லாச் செய்திகளும் கருத்துக்களும் தனி மனிதர்கள் மூலமாகவே தனி மனிதர்களுக்குப் பரவுகின்றன என்பதுதான். ம.ந.கூ பற்றி இதுவரை நாம் பார்த்த அத்தனை எதிர்மறைத் தகவல்களும் கருத்துக்களும் அப்படிப் பரவியவைதாம். சொல்லப் போனால், அவற்றைப் பரப்பி விட்டவர்களே தி.மு.க, நாம் தமிழர் கட்சியினர்தாம் என்றாலும் அவர்கள் அதைத் தனிமனிதர்கள் என்ற முறையில்தான் செய்தார்கள். ஆனால், தி.மு.க பற்றிய விளம்பரங்கள் அப்படியல்ல. கூகுள் ஆட்ஸ், யூடியூப் ஆகியவற்றின் மூலம் இணையத்தில் எந்தப் பக்கத்தைத் திறந்தாலும் தி.மு.க விளம்பரங்கள் கண்ணில் படுமாறு காட்சிக்கு வைக்கப்பட்டன என்றாலும் அவை தி.மு.க என்கிற ஒரு நிறுவனம் தன்னைப் பற்றித் தானே செய்து கொண்ட விளம்பரங்களாகத்தான் அமைந்தன. தொலைக்காட்சியில் விளம்பரம் வந்தால் எப்படி அலைவரிசையை மாற்றிவிட்டுப் போய்க் கொண்டே இருப்போமோ அப்படிப்பட்ட மனநிலையில்தான் அவை பார்க்கப்பட்டன. ஆகவேதான் அவை எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
ஆக, தி.மு.க-வின் விளம்பரங்கள் இணைய ஊடகத்தின் தன்மைக்கேற்றபடி இல்லாமல் மற்ற ஊடகங்களில் வெளியிடப்படுவது போலவே வழக்கமான பாணியில் வெளியிடப்பட்டதும், அதே தி.மு.க போன்ற கட்சிகள் ம.ந.கூ பற்றிக் கிளப்பி விட்ட மேற்படி புரளிகளும் எதிர்மறைப் பரப்புரைகளும் மட்டும் இணையத்தின் தனித் தன்மைக்கே உரிய வகையில் மேற்கொள்ளப்பட்டதும் சேர்ந்து, முன்பே கூறியபடி, இந்தத் தேர்தலைத் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான நேரடிப் போட்டியாக மாற்றி விட்டன. அதனால், சொந்த வாக்கு வங்கியும் அ.தி.மு.க-வுக்கு நிகராக இல்லாமல், கூட்டணி வலிமையும் இல்லாமல் நின்ற தி.மு.க-வுக்கு அஃது எதிராக முடிந்து விட்டது.எனவே, இணையம் இத்தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது முழுத் தவறு. மூன்றாம் அணி மீது இணையம் ஏற்படுத்திய தாக்கம்தான் நடுநிலையாளர்கள் வாக்குச்சாவடிக்கே வராமல் செய்து விட்டது; வந்தவர்களும் பெரும்பாலும் ‘இவர்களில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ (NOTA) என்றும், பா.ஜ.க, தனி வேட்பாளர்கள் என்றும் சிதறி வாக்களிக்கும்படி செய்து விட்டது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக மீண்டும் ஆளுங்கட்சியே ஆட்சியமைக்க அதுவே வாய்ப்பாகி விட்டது.
இப்படி, தவறான அணுகுமுறைகளும் இணைய உலகின் எதிர்மறைத் தாக்கமும் மூன்றாம் அணியின் தோல்விக்குக் காரணமாயின என்றால், பா.ம.க, நாம் தமிழர், பா.ஜ.க ஆகியவற்றுக்கு அவற்றின் தற்பொழுதைய நிலைமையும் நிலைப்பாடுமே எதிராக அமைந்தன.
பா.ம.க-வைப் பொறுத்த வரை, அதன் மீதான சாதிவெறி முத்திரை இன்னும் அகலவில்லை. அதை அகற்றிக் கொள்வதற்கான முயற்சி எதையும் அவர்கள் செய்யவும் இல்லை. அதுவே அவர்கள் தோற்கக் காரணமாக அமைந்தது.
பா.ம.க-வின் சாதியப்போக்கைக் குறிப்பிட்டுஅவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்று நான் எழுதியபொழுது என் வலைப்பூவுக்கும் சமூக வலைத்தளப் பக்கங்களுக்கும் திரண்டு வந்து தலைவிரித்து ஆடினார்கள் பா.ம.க-வினர். ஆனால், புகழ் பெற்ற மாணவ அமைப்பு ஒன்றும் இளைஞர் இயக்கம் ஒன்றும் கூட இதையேதான் கூறின. ஆனால், நான் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் என்றும் அதனால்தான் பா.ம.க பற்றி இப்படி எழுதுகிறேன் என்றும் நான் விண்ணப்பப் படிவம் ஏதும் அளிக்காமலே எனக்கு சாதிச் சான்றிதழ் கொடுத்து என் எழுத்தின் மீது சாதியச் சேறு பூசிச் சென்ற அந்த வலையுலக வட்டாட்சியர்கள் யாரும் அந்த அமைப்புகளிடம் வாய் திறக்கவில்லை. தனி ஒருவனாக இணையத்தின் ஒரு மூலையில் எழுதிக் கொண்டிருக்கும் என்னை விட ஆயிரக்கணக்கான இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அவர்களின் எழுத்துக்கள் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
அடுத்து பா.ஜ.க-வுக்கும் இதே சிக்கல். அவர்கள் மீது சாதிவெறி முத்திரை என்றால், இவர்கள் மீது சமயவெறி முத்திரை. ஆனால், பா.ம.க மீதாவது சாதிவெறி தவிர தமிழ் உணர்வாளர்கள், தலைசிறந்த சட்டமன்றச் செயல்பாட்டாளர்கள் என்று பல நல்ல அடையாளங்கள் இருந்தன. ஆனால், இப்படி எந்த ஒரு நற்பெயரும் இல்லாமல் தமிழர்களுக்கு எதிரானவர்கள், சமயவெறியர்கள் எனக் கெட்ட பெயர் மட்டுமே எடுத்திருந்ததால் தாமரையும் தலையெடுக்க முடியாமல் போனது.
நாம் தமிழர், இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தாலும் முதல் முறை போட்டியிடும் அவர்களால் எடுத்த எடுப்பிலேயே ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதாலேயே பெரும்பாலோர் அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. இப்படி ஆறுமுனைப் போட்டியாக இல்லாமல் முதன்மைக் கட்சிகள் இரண்டுக்கும் மாற்றான ஒரே தேர்வாக நாம் தமிழர் களமிறங்கியிருந்தால் இளைஞர் வாக்குகளை மொத்தமாக அள்ளியிருக்கலாம். அல்லது, மூன்றாவது அணியில் இருந்திருந்தால் வைகோ, சீமான், திருமாவளவன் என ஈழத் தமிழ்ப் போராளிகளின் மொத்தக் கூட்டணி எனும் வகையில் தமிழ் உணர்வாளர்கள் அத்தனை பேரின் வாக்கையும் கவர்ந்திருக்கலாம். மாறாக, தவறான ஒரு காலச்சூழலில் தவறான ஒரு முடிவை எடுத்ததால் நாம் தமிழரின் முயற்சிகள் விழலுக்கு இறைத்த பன்னீராயின.
இவை மட்டுமல்லாமல், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரு பெரும் மலைகளை எந்த ஒரு கட்சியும் தனித்து நின்று சாய்ப்பது என்பது கற்பனையிலும் இயலாத ஒன்றாக இருப்பதால் இந்த மூன்று தரப்பினரும் தனித்துப் போட்டியிட்டது மாபெரும் தவறாகிப் போனது.
சரி, இப்படியெல்லாம் நடக்காமல் இருந்திருந்தால், ஒருவேளை மாற்று அரசியல் வெற்றி பெற்றிருக்குமா என்று கேட்டால், அப்படியும் சிரமம்தான். காரணம், இணைய உலகினரின் மனநிலை.
தமிழ் இணைய உலகில் இன்று முன்னணியில் இருக்கும் அத்தனை பேருமே தேர்தல், அரசியல் ஆகியவை பற்றி முற்றிலும் எதிர்மறையான கருத்துக்கள் கொண்டவர்கள்தாம். அதாவது ‘அரசியல் என்பதே சாக்கடை. அதில் இருக்கும் யாருமே நல்லவர்கள் கிடையாது. அத்தனை பேருமே திருடர்கள்’ என்கிற பொத்தாம் பொதுவான கருத்துக் கொண்டவர்கள்தாம். இவர்கள், அரசியலைப் பொறுத்த வரை யாரையுமே நல்லவர் எனச் சொல்ல மாட்டார்கள். காரணம், எல்லோரையுமே குற்றம் சொல்வதற்குப் பெயர்தான் நடுநிலைமை என நினைத்துக் கொண்டிருக்கும் மாமேதைகள் இவர்கள். தவறிப் போய் எந்த அரசியலாளரையாவது நல்லவர் எனச் சொல்லி விட்டால் குறிப்பிட்ட அந்தத் தலைவரின் கட்சியைச் சேர்ந்தவர் எனத் தன்னை மற்றவர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ என அஞ்சி எப்பொழுதும் எல்லோரையும் குறை மட்டுமே சொல்லிக் கொண்டிருப்பார்கள்.
இப்படி எழுதுபவர்கள்தாம் இணையத்தில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள் (அல்லது இணையத்தில் செல்வாக்கு மிக்க அனைவரும் இப்படித்தான் எழுதுகிறார்கள்) என்பதால் இணையத்தின் மூலமாகவே வெளி உலகைப் பார்க்கும் இன்றைய இளைஞர்களிடையில் அரசியல் மாற்றம் ஏற்படுவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.
மொத்தத்தில், இன்றைய இணையச் சூழல், கட்சிகளின் தவறான அணுகுமுறைகள், பிழையான நிலைப்பாடுகள் போன்றவைதாம் மாற்று அரசியலை முன்னெடுத்தவர்களின் தோல்விக்குக் காரணம். எனவே, இஃது இந்தக் கட்சிகளின் தோல்விதானே ஒழிய ‘மாற்று அரசியல்’ எனும் கோட்பாட்டின் தோல்வி கிடையாது. தங்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு முறையான திட்டமிடலோடு அணுகினால் இவர்களில் யார் வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்க இன்னும் வாய்ப்பு இருக்கிறது.
கண்டிப்பாக அதை இவர்கள் செய்வார்கள். தி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சியைத் தருவார்கள் என நம்புவோம்! காத்திருப்போம்!
- இ.பு.ஞானப்பிரகாசன்