தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் பல செய்திகளை நமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றன. ஆனால் ஊடகங்கள் பலவும், உண்மையல்லாத ஒரு செய்தியினைப் பெரிதுபடுத்துகின்றன. தமிழ்நாட்டில், பா.ஜ.க., மூன்றாவது பெரிய கட்சியாய் உருவெடுத்துள்ளது என்பதுதான் அந்த உண்மைக்கு மாறான செய்தி!
தேர்தல் முடிவுகளைச் சற்றுக் கூர்மையாகக் கவனித்தால் எது உண்மை என்று நமக்குப் புலப்படும். தஞ்சாவூரில் 1,86,444 வாக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் பா.ஜ.க. பெற்றிருப்பது 3,806 வாக்குகள் மட்டுமே. தே மு.தி.க. 1534 வாக்குகளையும், பா.ம.க. 794 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 729 வாக்குகளையும் பெற்றுள்ளன. நோட்டாவிற்கு 2,295 வாக்குகள் விழுந்துள்ளன. அப்படிப் பார்த்தால், நான்காவது ‘பெரிய’ கட்சி நோட்டாதான்.
அரவக்குறிச்சியில் 1,64,582 வாக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் பா.ஜ.க. 3,162 வாக்குகளையும், தே.மு.தி.க. 1513 வாக்குகளையும், பா.ம.க. 995 வாக்குகளையும், நாம் தமிழர் 482 வாக்குகளையும் பெற்றுள்ளன. நோட்டாவுக்கு 1,538 வாக்குகள் கிடைத்துள்ளன. இங்கும் நோட்டாதான் 4ஆவது இடத்தில் உள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்தம் 2,03,098 வாக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் பா.ஜ.க. பெற்றிருப்பது 6,930 வாக்குகள். தே.மு.தி.க. 4,105 வாக்குகளும், நாம் தமிழர் 568 வாக்குகளும் பெற்றுள்ளன. நோட்டாவுக்கு 2,214 வாக்குகள் கிடைத்துள்ளன. பா.ம.க. அங்கு போட்டியிடவில்லை.
ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் 92 முதல் 95 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுவிட்ட பின்னர், மீதமுள்ள 5-8 சதவீத வாக்குகளைத்தான் அனைத்துக் கட்சிகளும், சுயேட்சைகளும், நோட்டாவும் பகிர்ந்து கொண்டுள்ளன. சிலவிடங்களில் சில சுயேட்சைகள் இவர்களை விடக் கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளனர். இதுதான் இந்தக் கட்சிகளுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு. இதனை வைத்துக் கொண்டுதான், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று நாங்கள்தான் என்று சற்றும் வெட்கப்படாமல் கூறிக்கொண்டுள்ளனர். புதுவையில் நாம் தமிழரின் நிலை மிகவும் மோசம். அங்கு அவர்கள் வாங்கியுள்ள வாக்குகள் வெறும் 90 மட்டுமே.
இதில் பா.ஜ.க. நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டுள்ளனர். மூன்று தொகுதிகளிலும் அவர்கள் மூன்றாவது இடத்தில் இருப்பது உண்மைதான். ஆனால் அது ஏணி வைத்தாலும் இரண்டாவது இடத்தைக் கூட எட்ட முடியாத மூன்றாவது இடம். இந்தத் தேர்தலில், வேறு பல காட்சிகள் போட்டியிடாத நிலையில், மூன்றாவது இடத்தில் உள்ள கட்சி என்பது வேறு, மூன்றாவது பெரிய கட்சி என்பது வேறு. ‘பெரிய’ என்னும் சொல்லுக்கு என்ன பொருள் என்பதே நமக்கு விளங்கவில்லை.
திருப்பரங்குன்றம் தொகுதியில் பா.ஜ.க. 6,930 வாக்குகள் வங்கியிருக்கிறதே என்று வியப்படைய வேண்டாம். அங்கு நடந்தது இடைத்தேர்தல். ஆறு மாதங்களுக்கு முன் அதே தொகுதியில் நடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சி வாங்கியிருந்த வாக்குகள் 7,698. ஆறு மாதங்களில் அக்கட்சியின் வாக்குகளில் 768 வாக்குகள் குறைந்துள்ளன என்பதுதான் உண்மை. மற்ற இரு தொகுதிகளிலும் பொதுத் தேர்தல் நடைபெறவில்லை. எனவே ஒப்பிட்டுப் பார்க்க இயலவில்லை.
மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற, நிதிவலிமை, அமைப்பு வலிமை எல்லாம் பெற்றுள்ள ஒரு கட்சி சில ஆயிரங்கள் வாக்குகளைத்தான் பெற முடிகிறது என்பது அவமானமே தவிர, பெருமை இல்லை.
இந்த இடைத்தேர்தல் சொல்லியுள்ள வேறு சில உண்மைகளையும் நாம் பார்க்க வேண்டும். “நான் கிங் ஆகணுமா, கிங் மேக்கர் ஆகணுமா” என்று பொதுத்தேர்தலில் கேட்டுக்கொண்டிருந்த விஜய்காந்தைப் பார்த்து மக்கள், “நீங்கள் ஒன்றும் ஆக வேண்டாம், சும்மா இருந்தால் போதும்“ என்று இப்போது தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். மூன்று தொகுதிகளில் ஒன்றான திருப்பரங்குன்றம், விஜயகாந்தின் சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள தொகுதி என்பதாலும், அவரே நேரில் வந்து ஆதரவு கேட்ட தொகுதி என்பதாலும், அங்கு வாக்குகள் சற்றுக் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புண்டு என்ற எண்ணம் பலருக்கும் இருந்தது. ஆனால் அங்கும் பதிவான இரண்டு லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகளில், 5,000 வாக்குகளைக் கூட அக்கட்சியால் பெற முடியவில்லை.
‘முதல்வர் வேட்பாளர்’ அன்புமணியின் கட்சி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் ஆயிரம் வாக்குகளைக் கூட வாங்க முடியவில்லை. நாம் தமிழர் கட்சியின் நிலைமை குறித்து யாரும் பேசவில்லை. பேசுகின்ற நிலைக்குக் கூட அது வரவில்லை.
தனித்தனியாக எல்லாக் கட்சிகளும் தமிழ்நாட்டில் போட்டியிட்டால், இன்றும் மூன்றாவது இடத்திற்கு வர காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்புள்ளது. அப்போதும் கூட, மூன்றாவது ‘பெரிய’ கட்சியாக அது வருவதற்கில்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு காட்சிகளையும் தாண்டி, மூன்றாவது பெரிய கட்சி என்று ஏதும் இன்று தமிழகத்தில் இல்லை. இந்த உண்மை சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் உண்மை இதுதான்!