நவம்பர் 15,16,17 ஆகிய தேதிகளில் இலங்கையில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ள காமன்வெல்த் அரசத் தலைவர்கள் மாநாட்டை மைய்யப்படுத்தி கோரிக்கைகளை வடிவமைத்தது குறித்து தமிழகத்தில் எழுந்துள்ள விவாதங்கள் அரசியல் போராட்டத்தின் வளர்ச்சிக்கு துணை செய்யும். கோரிக்கை குறித்து எழுந்துள்ள விவாதத்திற்கு பங்களிப்பதோடு சேர்த்து கோரிக்கை அடிப்படையில் ஜனநாயக சக்திகளிடையே ஒற்றுமையை உருவாக்கும் நோக்கத்தோடு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இந்தியா அம்மாநாட்டில் பங்கேற்பதா? வேண்டாமா? என்ற விவாதம் இந்திய அளவில் நடந்து கொண்டிருக்கின்றது. ஆளும்வர்க்க அறிவு ஜீவிகள் இந்தியப் பிரதமர் அம்மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும் வலைதளங்களிலும் எழுதி வருகின்றார்கள். தேசிய நலனா? தமிழர்களின் உணர்வா? என்று ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகமான என்.டி.டி.வி.யில் விவாதம் நடக்கின்றது. இந்தியப் பிரதமர் அதில் கலந்துகொள்ளாவிடில் இந்தியா சர்வதேச அரங்கில் தனிமைப்பட நேரும் என்று இலங்கை தூதர் கரியவம்சம் தில்லியில் இருந்து கொண்டு அறிக்கைவிடுகின்றார்.இத்தகைய சூழலில் இந்தியா அதில் கலந்துகொள்ளக் கூடாதென்பது நமது கோரிக்கை அல்ல என்றும் இந்தியா அதில் கலந்து கொள்ளாவிட்டால் அதனால் விளையப்போகும் அரசியல் பயனேதும் இல்லை என்பது போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. நவம்பர் மாதத்திற்குள் காலம் அடியெடுத்து வைத்துவிட்ட நிலையில் கோரிக்கை குறித்தான இந்த கருத்துகள் போராட்டத்தைத் தளர்த்துவது மட்டுமின்றி இந்திய அரசு அம்மாநாட்டில் கலந்து கொள்வதா? வேண்டாமா? என்ற முடிவை ஆளும்வர்க்கக் கட்சிகளிடம் விட்டுவிடுவதில் போய் முடிகின்றது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதைச் சுற்றி எழுந்துள்ள மூன்று கேள்விகளுக்கு விடை தேடுவோம்.

1. இந்திய அரசு அம்மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாதென்பது மாநாடு இலங்கையில் நடத்தக் கூடாது என்பதற்கு எதிரானதா?

’இந்தியாவே, இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணி’ என்ற கோரிக்கையை முதன்மைப்படுத்துவது ‘இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது’ என்ற கோரிக்கைக்கு எதிரானது என்றால் வாதத்திற்காக ஒரு கேள்வி. ’இலங்கையில் காமன்வெல்த்மாநாடு நடத்தக் கூடாது’ என்ற கோரிக்கை ’இலங்கையைக் காமன்வெல்த்தில் இருந்து நீக்கு’என்ற கோரிக்கைக்கு எதிரானதா? ’இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது’ என்றுசொல்வதை இலங்கையைத் தவிர வேறெங்காவது மாநாடு நடக்கட்டும். அங்கு வேண்டுமானால் இலங்கை கலந்து கொள்ளட்டும். இலங்கை காமன்வெல்த் கூட்டமைப்பில் நீடிக்கட்டும்’ என்று சொல்வதாக விளக்கப்படுத்தலாமா? இந்த மூன்று கோரிக்கைகளில் இலங்கையைக் காமன்வெல்த்திலிருந்து நீக்க வேண்டும் என்பதே உச்சபட்ச கோரிக்கை. அக்கோரிக்கையை முதன்மைப்படுத்தாமல் அதற்கு கீழான பிற இரண்டு கோரிக்கைகளில் ஒன்றைப் பேசுவதோ வென்றெடுப்பதோ தவறு என்று சொல்வதா? ’இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும்’ என்று இந்திய அரசு முடிவெடுப்பதில் இருந்து தான் இந்த மூன்று கோரிக்கைகளை வென்றெடுப்பது அடங்கி இருக்கின்றது.

தமிழர்களின் போராட்டத்தின் காரணமாக இந்திய அரசு இனக்கொலை இலங்கை அரசைப் புறக்கணிக்கும் முடிவை எடுக்க வேண்டும். இந்திய அரசு இலங்கையில் நடக்கப் போகும் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற முடிவு தான் காமன்வெல்த் கூட்டமைப்பில் இருக்கும் ஏனைய நாடுகளின் முடிவில் தாக்கம் செலுத்தும். எனவே இந்தியாவை இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என்று கோருவது காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாதென்ற கோரிக்கைக்கும் காமன்வெல்த் கூட்டமைபிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் செல்வதற்கான அடிப்படையானதாக அமையுமே ஒழிய முட்டுச்சந்துக்கு இட்டு செல்லாது.

மேலும் இம்மூன்று கோரிக்கைகளில் அடிப்படை கோரிக்கையை முதன்மைப்படுத்துவதே சரியென்றும் அதில் இருந்து தான் தொடங்க வேண்டும் என்றால் இதை விட புரட்சிகரமானஉச்சபட்ச கோரிக்கையாக ‘காமன்வெல்த் கூட்டமைப்பே இருக்க வேண்டியதில்லை’ என்றகோரிக்கையை முன் வைக்கும் கட்சிகளும் இயக்கங்களும் உள்ளன. அதுவே சரியென்றும் சொல்லிவிடலாம். அல்லது தமிழீழ ஆதரவு ஆற்றல்கள் ’காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு’ என்ற கோரிக்கையை மட்டும் வைத்துப் போராடலாம். (இலங்கையில் மாநாடு நடத்தாதே என்ற கோரிக்கை குறைந்தபட்ச கோரிக்கை தான்). உச்சபட்ச கோரிக்கையை முன் வைப்பதே சரி என்றால் வரதராஜ பெருமாள் ஈழத்தைப் பிரகடனப்படுத்திவிட்டு இந்தியாவுக்கு தப்பி ஒடி வந்ததை சரி என்று சொல்ல வேண்டிவரும். உச்சபட்ச கோரிக்கையை வென்றெடுப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிவதும் அதற்கான சரியான அணுகுமுறையை மேற்கொள்வதும் அவசியமாகும். குறைந்தபட்சக் கோரிக்கையை வென்றெடுப்பதற்கும் உச்சபட்சக் கோரிக்கையை நோக்கி செல்வதற்குமான சரியான அணுகுமுறையை மேற்கொள்வதே போராட்டத்தின் இலக்குக்கு துணை செய்யும்.

2. மாநாட்டை ஏற்பாடு செய்ததே இந்தியா தான். எனவே இந்தியா மாநாட்டை புறக்கணிப்பதால் என்ன பயன்?

• இலங்கையைப் புறக்கணிக்கக் கோருவதன் மூலம் இலங்கை அரசை சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்த வேண்டும் என்பது நமது போராட்டத்தின் அடிப்படை நோக்கம். இனவெறிப் பிடித்த இலங்கையை அரசியல், பொருளியல் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் புறக்கணிக்க வேண்டும் என்று2009 ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் உள்ள தமிழர்கள் கோரிவருகின்றார்கள். இந்த அடிப்படையில் இருந்துதான் இலங்கையைக் காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து நீக்கு, காமன்வெல்த் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்தாதே, அம்மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து பல்வேறு கட்சிகளும் இயக்கங்களும் போராடி வருகின்றன.ஆனால்,இந்திய அரசு அதனளவில் இதைப் பொருட்படுத்தியதே இல்லை. இலங்கை அரசுக்கு அழுத்தம் தந்து 13 ஆவது சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் வடக்கு மாகாண தேர்தல் நடத்த வைத்ததற்கு ஈடாகஇலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த வேண்டும் என்பது இலங்கையுடனான தன்னுறவை வலுப்படுத்தும் நோக்கோடு இந்தியா செய்த ஏற்பாடு. காமன்வெல்த் கூட்டமைப்பிற்கான கனடாவின் தூதர் செகல் காமன்வெல்த் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் இந்தியர் கமலேஷ் சர்மா எவ்வாறெல்லாம் இராசபக்சேவின் குற்றங்களை மூடிமறைக்க துணை நிற்கின்றார் என்று அம்பலப்படுத்தியுள்ளார்.

இப்படி இந்தியாவின் முயற்சியால் நடக்கப் போகும் அம்மாநாட்டில் இந்தியா பங்கேற்க முடியாமல் போனால் இந்தியா போட்டுவைத்திருந்த நிகழ்ச்சி நிரலில் குழப்பம் ஏற்படும். இந்திய அரசு இலங்கை அரசோடு தன்னுடைய உறவை வலுப்படுத்தும் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும். தேர்தல் வர இருப்பதால் இந்திய ஆளும்வர்க்கக் கட்சிகள் கூட இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும் என்ற நம்முடைய முழக்கத்தின் அடிப்படையில் இந்தியா அம்மாநாட்டில் பங்கேற்கக் கூடாதென்று சொல்லி வருகின்றன. இந்தப் பின்னணியில் பார்க்கும் பொழுது இந்தியா அம்மாநாட்டில் பங்கேற்கக் கூடாதென்று போராடுவது மாநாடு நடத்தி இலங்கையை மகிழ்விக்கத் துடிக்கும் இந்தியாவின் நகர்வுகளுக்கு எதிரானதா அல்லது துணை செய்வதா?

 இந்திய அரசு தரப்பில் இருந்து யாரும் அம்மாநாட்டில் கலந்து கொள்ளாவிடில் அது இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான உறவில் உடனடி மாற்றத்தைக் கொண்டு வராது என்பது உண்மைதான். இது ஓர் அரசியல் புறக்கணிப்பாக மட்டுமே அமையும். பொருளியல்,பண்பாட்டுப் புறக்கணிப்பாக அமையாது என்பதும் சரியே.அதே நேரத்தில் இங்கு கவனிக்க வேண்டியது சிங்கள பெளத்தப் பேரினவாத அமைப்புகளுக்கு இந்தியா மீதிருக்கும் நீண்ட கால அவநம்பிக்கை என்னவாகும் என்பதுதான். அது மேலும் உறுதிபடும். சிங்கள ஊடகங்கள் இந்திய அரசின் புறக்கணிப்பை ஊதிவிடும். இது இந்திய எதிர்ப்புக் கருத்தை சிங்கள மக்களிடம் பெருக்கும். இதிலிருந்து அங்குள்ள ஆளும்வர்க்க கட்சிகள் இந்திய எதிர்ப்பைப் பேசுவதும் சீனப் பாசத்தைக் காட்டுவதும் நடக்கும்.

தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வை மதித்து இந்திய அரசு தரப்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பதை சிங்களப்பேரினவாத ஆளும்வர்க்கமும் தமிழர் எதிர்ப்பு அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ’இருவருக்கும் வெற்றி’ (win win situation) என்று இந்திய அரசு மேற்கொண்டு வரும் அணுகுமுறையைக் கேள்விக்குள்ளாக்கும். இந்திய அரசு விரும்பாத போதும் தமிழ்நாட்டில் இருந்தெழும் அழுத்தத்தால் இந்தியா மேற்கொள்ளும் ’நாடக’நடவடிக்கைகள் கூட மெல்ல மெல்ல இந்திய சிங்கள உறவில் விரிசலை ஏற்படுத்தும். இவை சில அடையாள விளைவுகளாக இருந்தாலும் இந்திய சிங்கள முரண்பாட்டைக் கூர்மையடையச் செய்வதற்கான தொடக்ககட்டப்பங்கை வகிக்கும். இவை அனைத்தும் நவம்பர் 18 ஆம் தேதி நடந்தேறிவிடும் என்றல்ல. இவற்றை நோக்கி அரசியலை நகர்த்திச் செல்வதற்கு இந்திய அரசு அம்மாநாட்டைப் புறக்கணிப்பது வழிவகுக்கும்.

• ஏற்கெனவே கனடா அரசு புறக்கணித்திருக்கும் பட்சத்தில் இந்தியாவும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்தால், காமன்வெல்த் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிற நாடுகளுக்கும் புறக்கணிக்க வேண்டும் என்ற அழுத்தத்தைக் கொடுக்கும். கனடா, இந்தியா ஆகிய இரண்டுமே மக்கள் தொகை அளவில் மிகப் பெரிய நாடுகள். காமன்வெல்த் தலைமையமைச்சர் மாநாட்டில் இவ்விரு நாடுகளின் தலைமை அமைச்சரும் பங்கேற்கவில்லை என்றால் அது காமன்வெல்த் கூட்டமைப்பிலிருக்கும் ஏனைய நாடுகளுக்கும் அக்கூட்டமைபில் இல்லாத நாடுகளுக்கும் இலங்கையில் நடந்ததால் தான் அம்மாநாடு புறக்கணிக்கப்பட்டது என்ற செய்தியைக் கொடுக்கும். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்த அந்த நாடுகளையும் இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க கோரி போராடுவதற்கு இந்தியாவின் முடிவு உந்து சக்தியாக அமையும். அவர்ளுக்கு ஊக்கமளிக்கும்.

•  இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை குறித்த அடுத்தடுத்த தருணங்களில் இந்தியாவை இலங்கைக்கு எதிரான முடிவு எடுக்க வைப்பதற்கான தொடக்கமாக இது அமையும். பொதுவில் இலங்கை மீது ஒரு தற்சார்புள்ள பன்னாட்டு இனக்கொலை விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்தியா இலங்கையில் நடக்கும் இம்மாநாட்டைப் புறக்கணிப்பது வலுசேர்க்கும்.

3. இந்தியப் பிரதமர் பங்கேற்காமல் போனால் அதை தி.மு.க வும் காங்கிரசும் தேர்தலில் வாக்கு கேட்கப் பயன்படுத்திக் கொள்ளுமே?

இந்தியா இம்மாநாட்டில் பங்கேற்காவிடில் ஏற்படும் அரசியல் விளைவுகளை உற்று நோக்குவதற்கு மாறாக வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே முதன்மைப்படுத்தப்படுவதாக தெரிகின்றது. காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க.,அ.தி.மு.க ஆகிய கட்சிகள் இந்திய ஆளும்வர்க்கத்தின் கருத்தைப் பிரதிநிதித்துவப் படுத்துபவையாகவே இருக்கின்றன. அவ்வப்போது தேர்தல் நலனை முன்னிட்டு அவை எடுக்கும் சில நிலைப்பாடுகள் தமிழீழ ஆதரவாளர்களின் கோரிக்கைகளோடு ஒத்துப் போகின்றன. அது கொள்கை வழிப்பட்டதாக இல்லாமல் அவற்றின் தேர்தல் நலனை சார்ந்ததாக இருக்கின்றது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கோரிக்கை ஈழ விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்வதற்கு உதவுமா? உதவாதா? என்றுதான் பரிசீலிக்கப்பட வேண்டும். அக்கோரிக்கை வெற்றிப் பெறுவதால் எந்த கட்சிகள் தேர்தலில் வாக்கு சேகரிக்கும் என்பதை வைத்தோ வெற்றி பெறாவிட்டால் எந்தக் கட்சிகள் வாக்கு பெறும் என்பதை வைத்தோ ஒரு கோரிக்கையின் சரி, தவறு பரிசீலிக்கப்பட கூடாது. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அக்கோரிக்கை எத்தகைய நெருக்கடியை ஏற்படுத்துமென்று பரிசீலிக்கப்பட வேண்டும். இந்திய ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளை மையமிட்டு ஒன்றைப் பரிசீலிக்க வேண்டுமே ஒழிய வாக்கு அரசியலை மையமிட்டு கோரிக்கைகளை அணுகுதல் தவறு. அப்படி செய்வது தமிழீழ விடுதலைக்கு எதிரான விளைவுகளையே தரும்.

கோரிக்கைகளை தீர்மானிப்பதில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்கள்

• தேர்தல் அணி சேர்க்கையை மையப்படுத்துவது:

தேர்தல் என்பதைப் பரந்துபட்ட மக்கள் பங்கேற்கும் அரசியல் நிகழ்வு என்ற புரிந்துகொள்வதற்கு மாறாக அதில் எந்த தலையீடும் செய்யாமல் தேர்தலை புறக்கணிப்பதும் அதை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாமல் இருப்பதும் ஒருஎல்லை என்றால், தேர்தலை மட்டும் குறியாக வைத்து காங்கிரசு, பி.ஜே.பி., தி.மு.க.,அ.தி.மு.க என்ற சட்டகத்திற்குள் மட்டும் அரசியலை நகர்த்திச் செல்வது இன்னொரு எல்லை. அதிலும் ஈழ ஆதரவு அரசியலையும் அதன் வளர்ச்சிக்கு தேவையான கோரிக்கைகளையும் தேர்தல் அணி சேர்க்கைகான கருவியாகப் பயன்படுத்தலாம் என்று நினைப்பது அரசியல் நலனுக்கு எதிராகப் போய்விடுகின்றது. இது அடுக்கடுக்கான தவறுகளுக்கே இட்டுச் சென்றுள்ளது என்பதைக் கடந்த காலம் உணர்த்தி நிற்கின்றது.

எனவே, ஒரு கோரிக்கை ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வகையில் துணை செய்யும் என்பதையே முதன்மை காரணியாக கொண்டு கோரிக்கைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். வெகுகாலமாக தமிழகத்தின் ஈழ ஆதரவு அரசியல் என்பது அ.தி.மு.க ஆதரவு நிலையில் இருந்து கொண்டு தி.மு.க எதிர்ப்பு அரசியலாகவும் தி.மு.க ஆதரவு நிலையில் இருந்து கொண்டு அ.தி.மு.க எதிர்ப்பு அரசியலாகவும், பா.ஜ.க வை ஆதரிக்கும் நோக்கத்தோடு காங்கிரசு எதிர்ப்பு அரசியலாகவும் கையாளப்பட்டு வருகின்றது. இதுவே ஒவ்வொரு நெருக்கடியான தருணத்திலும் நம்மை கையறு நிலையில் நிறுத்தி வைத்தது.

 இதே வகையில் தான் வருகின்ற 2014 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஈழ அரசியல் தேர்தல் அணி சேர்க்கைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக காங்கிரசு எதிர்ப்பு வாக்குகளைப் பா.ஜ.க. வுக்கு சேர்க்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன. இந்த அணுகுமுறை கடந்த காலத்தில் விட்டுச் சென்ற படிப்பினைகளைக் கருத்தில் கொண்டு இதை கேள்விக்குள்ளாக்குவதும் மாற்றியமைப்பதும் தவிர்க்க முடியாத தேவையாக எழுந்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க, காங்கிரசு-பா.ஜ.க என்ற இந்திய ஆளும் வர்க்க கட்சிகளின் தேர்தல் அரசியலை பின்புலமாகக் கொண்டு அவர்களின் தேர்தல் வெற்றி, தோல்விகளைச் சார்ந்து தமிழீழ விடுதலைக்கானப் போராட்டத்தை கட்டி எழுப்ப முடியாது என்பதே வரலாறு நமக்கு வழங்கிய பாடம்.

• இலக்கு தவறிய ஆரவாரமிக்க முழக்கங்களில் சிக்கிக் கொள்ளுதல்:

ஒரு கோரிக்கையின் அரசியல் இலக்கு என்ன என்பதை கணக்கில் கொள்ளாமல் ஆரவாரத்தை முதன்மைப்படுத்துவது எதிரான விளைவுகளையே தந்துள்ளது. அதற்கு அண்மைகால எடுத்துக்காட்டும் உண்டு.

கடந்த மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா முன் வைத்த தீர்மானம் LLRC ஐ அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஒரு தற்சார்புள்ள பன்னாட்டு விசாரணையைத் அத்தீர்மானம் கோரவில்லை. இந்தப் பின்னணியில் அத்தீர்மானத்தைத் திருத்தி பன்னாட்டு விசாரணையைக் கோரச் செய்யுமாறு இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் முழக்கத்தை தமிழகத்தில்முன்வைத்திருக்க வேண்டும். அல்லது மேற்படி கோரிக்கையை வலியுறுத்துகின்ற ஒரு தீர்மானத்தை இந்தியாவே மனித உரிமை அவையில் முன் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க வேண்டும். மாறாக, ’அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்ப்பதா? ஆதரிப்பதா?’ என்ற விவாதத்திற்குள் அதை சுருக்கி, ’இந்தியா என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்வி மேலெழவில்லை. இது அமெரிக்கா கொண்டு வந்த உருப்படியில்லாத் தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போக செய்த இந்தியாவின் பங்கை அம்பலப்பத்தவதற்கு இடமில்லாமல் செய்தது.

வடக்கு மாகாணத் தேர்தல் நடந்த பொழுது தேர்தலைப் புறக்கணிக்கச் சொல்லி தமிழீழ மக்களுக்கு தமிழகத்தில் இருந்துகொண்டு அறைகூவல் விடுத்ததும் சூழல் பற்றிய தெளிந்த புரிதலின்றி முன் வைக்கப்பட்ட முழக்கம். அங்குள்ள அரசியல் தலைமை மக்களின் உணர்வு மட்டும் அரசியல் கள நிலைமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கணக்கில் எடுத்து தீர்மானிக்க வேண்டிய ஒன்றை எதிரியின் நோக்கத்தை மட்டும் கணக்கில் எடுத்து முன் வைக்கப்பட்ட முழக்கம். சிங்கள இராணுவ நிர்வாகத்திற்கு எதிரான தேர்தலாக அதை எதிர்கொண்டதன் மூலம் மக்கள் செறிவான படிப்பினையை நமக்கும் வழங்கினார்கள்.

இப்படி மையப் புள்ளியில் இருந்து விலகி முன் வைக்கப்படும் முழக்கங்களும் கோரிக்கைகளும் உரிய விளைவுகளைத் தருவதில்லை. குறைந்தபட்ச கோரிக்கை,உச்சபட்சக் கோரிக்கை, உடனடிக் கோரிக்கை, நீண்டக் காலக் கோரிக்கை என்று கோரிக்கைகளை வரையறுத்து கோரிக்கை, முழக்கங்களை உருவாக்க வேண்டிய தேவை நம் முன் உள்ளது.

• இந்திய அரசின் பண்பு குறித்தான துல்லியமான மதிப்பீடின்மை :

இக்கோரிக்கைகளை முன் வைப்பதற்கு அடிப்படையாக இருப்பது இந்திய அரசின் தன்மை. இந்திய அரசு என்பது தெற்காசிய ஏகாதிபத்திய விரிவாதிக்க அரசாகும். தெற்காசியாவில் பிற நாடுகள் மேற்கொள்ளும் எந்த ஒரு முடிவும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைச் சார்ந்து இருக்கின்றது. இந்தியா எடுக்கும் முடிவிலிருந்து இலங்கை தொடர்பான முடிவுகளைப் பிற நாடுகள் எடுக்கின்றன. காமன்வெல்த் கூட்டமைப்பு உட்பட பல்வேறு உலக மையங்களில் இந்தியாவின் தலையீட்டில் இலங்கை தொடர்பான முடிவுகள் எப்படி மாற்றியமைப்பட்டுள்ளன என்பதை ஈழப் போராட்ட வரலாற்றின் பட்டறிவில் இருந்து புரிந்து கொள்ள முடியும். (அமைதி பேச்சுவார்த்தைச் சீர்குலைந்தது குறித்த நார்வே வெளியிட்ட அறிக்கை, ஐ.நா. தீர்மானங்கள், இறுதிப் போரின் போது அமெரிக்க முயற்சிக்கு எதிரான இந்தியத் தலையீடு இன்ன பிற).

எனவே, இந்திய அரசமைப்பின் கீழ் இருக்கும் தமிழ்நாட்டின் போராட்டம் இந்தியாவை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். அப்போராட்டம் இலங்கையா? தமிழ்நாடா? என்ற ஒரு முடிவை எடுக்குமாறு இந்திய அரசை நிர்ப்பந்திப்பதாக இருக்க வேண்டும். அதன் மூலம்தான்ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான தடையாக இருக்கும் இந்திய சிங்கள உறவைஉடைத்தெறிய முடியும். இது நடக்க வில்லை என்றால் தெற்காசியாவில் இருக்கும் அடக்கப்பட்ட தேசங்களின் விடுதலை என்பது இந்திய அரசு தூக்கியெறிப்படுவதில் தான் இருக்கின்றது. இதை ஏற்றுக்கொள்ள மறுப்பது தான் இங்கிலாந்து,அமெரிக்கா என்று உலகம் சுற்ற வைக்கின்றது. இந்தியாவையும் – அமெரிக்காவையும்,இந்தியாவையும்-இங்கிலாந்தையும் ஒரு சேர எதிர்ப்பதும் இந்தியாவை மையப்படுத்திய போராட்டத்தின் வளர்ச்சிக்கு எதிராகத் தான் போய் முடியும்.

பிரிட்டன், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது அவசியமானது. ஏனென்றால் ஏகாதிபத்திய உலக ஒழுங்கில் தான் அனைத்து நகர்வுகளும் இருக்கின்றன.

ஆனால், பிராந்தியத்தினுடைய (தெற்காசியா) குறித்த சூழலை, அதில் இந்தியாவின் பாத்திரத்தை, குறிப்பாக ஈழ விடுதலைப் போராட்டத்தில் அதன் எதிர்மறை தலையீட்டைப் புரிந்து கொள்வது தான் ஈழ விடுதலைக்கு துணை செய்வதாக அமையும். இந்திய அரசுக்கும் சிங்கள அரசுக்கு இடையேயான முரண்பாட்டின் தன்மையே இலங்கை தீவிலிருக்கும் இனச் சிக்கலில் இந்தியாவின் நிலைப்பாட்டை தீர்மானிக்கப் போகின்றது என்ற ஒன்று எப்போதும் நினைவில் கொள்ளத்தக்கது.
 
முழக்கங்கள், போராட்ட வடிவங்களை வகுப்பதற்கான கோட்பாட்டு அடிப்படை, வரலாற்று அறிவு, வர்க்க சார்பு, சூழல் பற்றியதான மதிப்பீடு, அரசுகளின் வர்க்கத் தன்மை , மாறிக் கொண்டிருக்கின்ற உலக ஒழுங்கில் விடுதலைப் போராட்டங்களை நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ தீர்மானகரமாகப் பாதிக்கின்ற சக்திகளைப் பற்றிய மதிப்பீடு ஆகியன குறித்த புரிதல் மிக அவசியமானது. தமிழ்ச்சமூக வரலாற்றில் பட்டறிவும், கோட்பாட்டறிவும் பெற்றிருக்கின்ற இயக்கங்களுடைய வெற்றி தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்வது ஒன்றே நடந்து கொண்டிருக்கும் இந்த நீண்ட போராட்டத்தில் நம்மை சரியான வகையில் பொருத்திக் கொள்வதற்கும் கோரிக்கைகளை வடிவமைத்து வென்றெடுக்க உதவும்.

ஈழ விடுதலை நலன் என்ற அடிப்படையிலான கோரிக்கையும் கோரிக்கை அடிப்படையில் ஜனநாயக சக்திகளிடையேயான ஒற்றுமையும் அதிலிருந்து கூர்மைப்படுத்தப்படும் போராட்டமும்தான் எதிரியை அடிபணியச் செய்யும். குறுகிய நலன்களாலும் தவறான அணுகுமுறையாலும் ஏற்பட்டிருக்கும் பிளவுகளை சீர்செய்து ஒற்றுமையை உயர்த்திப் பிடிப்போம்.

- செந்தில், ஒருங்கிணைப்பாளர், சேவ் தமிழ்ஸ் இயக்கம்.

Pin It