மதிமுக - பாஜக - தேமுதிக என்ற பொருந்தாக் கூட்டணியை பரிந்துரைத்த தமிழருவியை திட்டித்தீர்க்கும் முற்போக்குவாதிகள் ஏன் அதை கண்டு மௌனம் காக்கும் வைகோவை சாடுவதில்லை என்ற கேள்வி கடந்த இரண்டு மூன்று நாட்களில் பரவலாக்கப்பட்டிருக்கிறது. இந்த சாடலில் திமுகவினரும் கலந்துகொண்டுள்ளனர்.

தமிழக அரசியலை நாம் 2009க்கு முன் பின் என பிரிக்க வேண்டியதுள்ளது. 2009 பிறகான அரசியல் ஈழத் தமிழர் நலன் காக்க, தமிழக தமிழர் நலன் காக்க, இந்திய தேசியத்தின் தமிழர் விரோத போக்கை எதிர்த்து பல வகையான சிறு சிறு அரசியல் இயக்கங்கள், தேர்தல் அரசியல் கட்சிகளின் வரவு தமிழ் தேசிய அரசியலை நோக்கி நெறிப்படுத்தியுள்ளது.

கடந்த 3 வருடங்களில் அதிகமான போராட்டங்கள் நடந்த இந்திய மாநிலங்களில் முதன்மையான இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்கிறது ஆய்வு. இது வெறும் கட்சிகளால் தனித் தனியாக நடத்தப்பட்ட போராட்டங்கள் அல்ல சிறு சிறு தேர்தல் அரசியல் சாராத குழுக்களால் முன்னெடுக்கப்பட்டு, பல நேரங்களில் தமிழர் நலன் சார்ந்த தேர்தல் அரசியல் கட்சிகளின் துணையோடு அந்த போராட்டங்கள் பிரம்மாண்டப்படுத்தப்பட்டது.

உதாரணமாக முல்லை பெரியாறு, கூடங்குளம் அணு உலை, மூன்று தமிழர் பாதுகாப்பு, இந்திய-இலங்கை கூட்டு சதி எதிர்ப்பு என வரிசைபடுத்தலாம். இந்த போராட்டங்களில் ஈடுபட்ட சிறு சிறு குழுக்கள் தங்களது அரசியல் முகமாக முன்னிறுத்தியது மதிமுக, நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், சி.பி.ஐ. என பட்டியல் நீள்கிறது.

கட்சி சாயம் கலக்காது ஒரு பொது நிகழ்வில் தங்களது பங்களிப்பை கொடுத்ததன் மூலம் இதில் சில கட்சிகளுக்கு மதிப்பு கூடியுள்ளது. அதே சமயம் போராட்டங்களை விரிவு படுத்த பொருளுதவிகள் பெற சிறு குழுக்களுக்கு மேற்கூறிய அரசியல் கட்சிகள் பேருதவியாக இருந்தது. தமிழர் நலன் சார்ந்த இந்த அரசியல் இப்போது தான் துவங்கியுள்ளது. இது நீண்ட நெடிய பயணம். இதில் ஒவ்வொரு அடி முன் நகர்த்தும் போதும் வீழ்வது எதிரிகளும், துரோகிகளுமே. கடந்த அக்டோபர் 2 கூடங்குள மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஓர் சிறந்த உதாரணம்.

இந்த காலகட்டத்தில் வந்துள்ளதுதான் நாடாளுமன்ற தேர்தல். மேற்கூறிய கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடவேண்டும் என பலர் ஆசை கொண்டாலும் இன்றைய தேர்தல் நடைமுறையும், ஊடக பலமில்லாத, இந்திய தேசிய அதிகாரவர்கத்தின் எதிர்ப்பு இந்த கூட்டணியை கரை சேர்க்காது என்பது நிதர்சனம். கட்சியின் தேர்தல் நிதியாக 20 கோடி ரூபாய் திரட்டிக்கொடுத்த தொண்டர்களை, மாவட்ட நிர்வாகிகளை கடந்து நலம் விரும்பிகள் கட்சிக்கு வெளியே இருந்து மிகப்பெரிய அழுத்தத்தை தந்துவிட முடியாது.

2009க்கு பின் காங்கிரஸில் இருந்தும் தமிழக திட்டக்கமிஷனிலிருந்து வெளியேறிய தமிழருவி மணியன் அவர்கள் அவருடைய அரசியல் அனுபவத்திலிருந்து வெளிப்படுத்தும் இந்த மதிமுக-பாஜக-விஜயகாந்த் என்ற பொருந்தா அரசியல் முயற்சி விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

காங்கிரஸ், பாஜக, சி.பி.எம்., திமுக என எந்த கட்சியுடன் சேர்ந்தாலும் அது தமிழர்களுக்கு பாதகமானது என்ற கருத்துக்கு மறுப்பு இல்லை. இந்த மண்ணின் அரசியல் தன்மைக்கு பாஜக-வால் தமிழகத்தில் வேர் விட முடியாது என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். அதில் மோடி, வாஜ்பாய், அத்வானி, சுஷ்மா என ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. அதே சமயம் தமிழருவி மணியன் என்ற ஒற்றை மனிதரின் சொல்லுக்கு வைகோ இன்னும் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பதற்காக 4 வருட தமிழர் நலன் சார்ந்த அரசியலை ஒற்றை நொடியில் போட்டுடைக்க முடியாது.

மேடு பள்ளங்கள் முட்கள் நிறைந்த தேர்தல் அரசியல் பாதையில் வெளிப்புற அழுத்தங்களால் மேற்கூறிய கட்சிகள் தடம் மாறினாலும் பொது நலத்துக்காக அதை நெறிப்படுத்தும் இடத்தில் இது நாள் வரை இணைந்து பணியாற்றிய சிறு சிறு குழுக்களுக்கும் தேர்தலில் பங்கேற்காத அரசியல் இயக்கங்களுக்கும் உள்ளது. நாளைக்கு 'நாம் தமிழர்' கட்சிக்கு இது போன்ற அரசியல் நெருக்கடி ஏற்பட்டாலும் தாங்கிப் பிடிக்கப்போவது இவர்கள்தான். 2009ல் காங்கிரசுடன் சேரவேண்டியதாகிய பிறகும் திருமாவை விட்டுக்கொடுக்காமல் அரசியல் செய்வது இப்படித்தான்.

அந்த வகையில் அமைந்தது தான் கொளத்தூர் மணி அண்ணனின் 'தீயில் விழ முடியாது' என்னும் மடல். இதில் மணி அண்ணன் தமிழருவியின் கருத்தை மட்டும்தான் பிரித்து போட்டு ஒவ்வொன்றாக உடைத்தார். இதன் பொருள் வைகோ-வை காப்பாற்றுவது என்பதல்ல. தமிழர் விரோத சக்திகளை பிரித்தெடுத்து எப்படியாவது தமிழர் நலன் சார்ந்த கட்சிகளை நாடாளுமன்றம் அனுப்பி நம் நலன் சார்ந்து ஏதாவது சாதித்துக்கொள்ள முடியாதா என்ற ஏக்கம் தான்.

மாறாக இப்போதே வைகோவை எப்பாடு பட்டாவது திட்டித் தீர்த்து அவரை தமிழ் தேசிய அரசியலிலிருந்து ஓரங்கட்டிவிட்டு நாம் சாதிக்கப்போவது ஒன்றைத் தான்.... "15 நாட்களுக்கு ஒரு முறை 'கோயபல்ஸ்' நாராயணசாமி தமிழர் அரசியலை சென்னை விமான நிலையத்திலிருந்து பேட்டி கொடுக்கும் அந்த அவலம்."

நாம் தமிழரை வீழ்த்த மதிமுக தோழர்களும் அவர்களுடைய வீழ்ச்சியை எதிர்பார்த்து நாம் தமிழர் தோழர்களும் அவர்களை கலகலத்து போகச் செய்ய சிறுத்தைகளும் இப்படியே சுழல்கிறது தமிழக அரசியல் 2009க்கு பின்பும்....

மேற்கூறிய அனைத்தும் கருணாநிதி - காங்கிரசின் ஆசையல்லவா?! அவர்களது ஆசைகளை நிறைவேற்றுவதும் நாமேவா?????

இங்கும் பெரியார் சொன்னதுதான். 'உனக்கு எது சரியான அரசியல் என தெரியாமல் குழப்பமாக இருந்தால் ஒன்றும் கவலைப்படாதே. தினசரிகளை எடுத்து படி. ஒவ்வொரு விசயத்துக்கும் ராஜாஜி என்ன சொல்கிறார் என பார். நீ அவர் சொல்வதன் நேர் எதிர் கருத்தை உனதென கொள். 99 சதவீதம் அது சரியானதாக இருக்கும்.'

இன்றைய அரசியலில் கருணாநிதியும் காங்கிரசும் என்ன சொல்கிறது என்ன நினைக்கிறது என்று நாம் பார்த்தாக வேண்டும். கூடங்குளம் அணு உலை வேண்டும் என சொல்வர், பேராசை பிடித்த மீனவர்கள் என்பர், ராஜபக்சே மனம் நோகும் என்பர், 13வது சட்டத்திருத்தம் போதும் என்பர், தமிழ் தேசிய அரசியல் கூடாதென்பர்.....

தேர்தல் சமயத்தில் சற்றேனும் சிந்தித்து செயல்படுவோம்.

- S.D.பிரபாகர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., 9150040091, 9840308784)

Pin It