இளவரசன் மரணத்தையடுத்து அவருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக பல்வேறு இயக்கத்தினர் தமிழகம் எங்கும் சுவரொட்டிகளை ஒட்டினார்கள். அந்த வரிசையில் மே-17 இயக்கமும் சுவரொட்டி ஒட்டியது. மகஇக குழுமமும் சுவரொட்டி ஒட்டியது.

இப்படி ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் மிகச்சிறந்தது எது என்ற அதிமுக்கிய விவாதத்தை, தமிழ்ச்சமூகத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும், ஏன் அதற்கு மேலும் பார்ப்பனியம் உயிர்வாழும் நேபாளம், இலங்கை உட்பட அனைத்து சமூகங்களுக்கும் அவசியமான விவாதத்தை மகஇக குழுமத்தின் வினவு இணையதளம் துவக்கி வைத்திருக்கிறது.

இளவரசன் – திவ்யா தம்பதியினர் பிரிக்கப்பட்டு, இளவரசனும் மரணத்தை தழுவிய பிறகு இந்த விவாதத்தை துவக்கிய வினவு அதற்கு முன்பே அவர்களை எப்படிக்காப்பது, வாழவைப்பது என்பதை பற்றிய விவாதத்தை துவக்கியிருந்தால் போட்டியிட்டிருந்தால் சாதிமறுப்பு தம்பதிகளை காப்பாற்றி இருக்க முடியும்.

அப்படி செய்திருந்தால் அதை ஆலோசனைகளாக மட்டுமல்லாது, அந்த ஆலோசனைகளை நடைமுறையோடு இணைக்கவும் பாடுபட வேண்டிய தேவை தவிர்க்கவியலாத ஒன்றாக ஆகியிருக்கும்.

எல்லாம் முடிந்த பிறகு யார் வைக்கும் ஒப்பாரி சிறந்தது என்ற பட்டிமன்றத்தை காரசாரமாக துவக்கியிருக்கிறது வினவு.

இளவரசன் தம்பதியை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் தாங்கள் சுயவிமர்சனத்தோடு சுவரொட்டி முழக்கத்தை எழுதியுள்ளதாக மே-17 இயக்கம் கூறுவதில் நிச்சயம் ஒரு நேர்மை இருக்கிறது.

அதே நேரத்தில் மகஇக கூறுவதைப் போன்று, மே-17 இயக்கமும் இளவரசனைப் போல் பாமகவைக் கண்டு அச்சம் அடைந்தது உண்மையோ, இல்லையோ சாதி வெறியர்களை வெல்ல முடியாது என்று இளவரசன் மட்டுமல்ல மே-17 இயக்கமும் விரக்தியடைந்ததுள்ளது என்பதுதான் உண்மை.

இப்படி விரக்தியடைந்ததின் வெளிப்பாடுதான் மே-17 இயக்கத்தின் சுவரொட்டி முழக்கங்கள். இந்த விரக்தி மனப்பான்மை மே-17 இயக்கத்தின் தனித்தன்மையோ, பலவீனமோ மட்டுமல்ல! அதுதான் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சமூக உணர்வுள்ள இயக்கங்களின் நிலையுமாகும்.

இப்படி விரக்தியடைவதின் வெளிப்பாட்டு அளவு ஒவ்வொரு தனிநபரிடமும், இயக்கங்களிடமும் வேறுபடலாம். ஆனால் இது பொதுத்தன்மையாகும். மகஇக குழுமம் தங்களுக்கு அப்படியொரு உணர்ச்சியே எழவில்லை, எழாது என்று உறுதியாக வாதிடுகிறது.

சாதிய விவகாரங்களில் மட்டுமல்ல வேறு எந்த ஒரு விவகாரத்திலும் ஒரு தனிநபரோ, இயக்கமோ விரக்தி மனப்பான்மைக்கு உள்ளாகவில்லை என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும்.

  •  குறிப்பிட்ட விவகாரத்தின் ஆதரவாளராகவும் அதன் மூலம் அவர்கள் ஆதாயமடையக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.

அல்லது

  • குறிப்பிட்ட அந்த விவகாரத்தைப் பற்றிய ஞானமும் அதை சரிசெய்வதற்கான தீர்வையும் உடையவர்களாக இருக்க வேண்டும்.

மேலே உள்ளவற்றில் மகஇக குழுமம் எந்த காரணத்தினால் விரக்தி நிலைக்கு செல்லவில்லை என்பதைப்பற்றி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நேர்மறையான அல்லது எதிர்மறையான படிப்பினையை அதிலிருந்து நாம் பெறமுடியும்.

”இந்துக்களிடம் இந்து மதவெறியையும், இஸ்லாமியர்களிடத்தில் இசுலாமிய மதவெறியையும், வன்னியர்களிடத்தில் வன்னிய சாதிவெறியையும், தலித் மக்களிடம் பிழைப்புவாத தலித் அரசியல் கட்சிகளையும் கண்டித்துப் பேசுகிறோம். இதில் எங்களுக்கு அச்சமில்லை என்பதோடு அந்தப் பிரிவு மக்களை மெல்ல, மெல்ல உணர வைத்து இறுதியில் வர்க்க உணர்வுக்கு கொண்டு வருகிறோம். மேலும் மதஉணர்வு, சாதி உணர்வு அனைத்தும் அந்தந்த மக்களுக்கும் சேர்ந்தே பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை தொடர் போராட்டத்தின் மூலம் புரிய வைக்கிறோம்”

இது மகஇக குழும அமைப்பான வினவின் கட்டுரையில் அவர்கள் எழுதியுள்ள வாசகங்களாகும்.

மேலே கண்ட நிலைப்பாட்டின் மூலம் சாதியம் பற்றிய முரண்பாட்டை கையாள்வதில், அதை முறியடிப்பதில் தாங்கள் மிகச்சிறந்த ஞானத்தையும் மிகத் துல்லியமான வழிமுறைகளையும் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளார்கள். இதன் மூலம் தாங்கள் சாதித்தவற்றை பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாக எழுதுவதாக சொக்குப்படியும் போட்டுள்ளார்கள்!

இதன் மூலம் அந்தச் சாதனையைப் பற்றி கூறுங்கள் என்று நாம் கேட்டுவிடாமல் நமது வாயை அடைத்துவிட்டார்கள்!

மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பார்ப்பனியத்தை எதிர்த்து அனைவரும் தோற்றுப் போயுள்ளனர் அல்லது அதனுடன் ஏதோ ஒரு வகையில் சமரசம் செய்து கொண்டுள்ளனர்.

கடந்த ஒரு நூற்றாண்டாக இந்திய கம்யூனிச இயக்கங்கள் சாதிய முரண்பாட்டை தீர்க்க முடியாததால் மக்களிடையே வர்க்க உணர்வை ஏற்படுத்த முடியாமல் தோல்வி கண்டுள்ளனர்.

சாருவாகனர்கள், புத்தர், மகாவீரர், சித்தர்கள், களப்பிரர்கள், அம்பேத்கார், பூலே, பெரியார் ஆகியோர் சாதிக்க முடியாததை மகஇக குழுமம் சாதித்திருக்கிறது என்றால் நோய்நாடி நோய் முதல் நாடி என்பது போல சாதியத்தின் மூலத்தைப் பற்றிய நிபுணர்களாகத்தான் அவர்கள் இருக்க வேண்டும். அப்படியானால் இதுவே இந்திய வரலாற்றில் தலையாய சாதனையாகவும் இருக்க முடியும்.

இந்த வரலாற்றுச் சாதனையை பற்றி இவ்வளவு காலம் மகஇக குழுமம் மௌனம் சாதித்தாலும் இப்போதாவது அதைப்பற்றி வெளியில் சொல்லப் போவதாக அறிவித்திருப்பது நமது பெரும் பாக்கியமாகும்!

அண்மையில் காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் ”இந்து மதம் இத்தனை ஆயிரம் ஆண்டு காலம் நிலைத்து நிற்கிறது என்றால் அதற்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது”, என்று அருள்வாக்கு தந்துள்ளார். ஆனால் அது என்ன என்று கூறவில்லை.

மகஇக குழுமம் கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில் நீடித்து, நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அந்த ஏதோ ஒன்று என்னவென்று எவருக்கும் புரியவில்லை. இந்தப் புதிருக்கான விடை ஒரு வேளை அவர்கள் எழுதப்போகும் சாதனைப் பட்டியலில் ஒளிந்து கொண்டிருக்கலாம். அனைவரும் தமது ஐம்புலன்களையும் ஒருமுகப்படுத்தி வைத்துக்கொண்டிருங்கள். யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதாக அவர்கள் அருளப்போகும் அருளாசியை தவற விட்டுவிடாதீர்கள்!

அப்படி அவர்கள் எழுதப்போகும் சாதனைப் பட்டியலில் எமக்குத் தெரிந்த ஒன்றிரண்டு நிகழ்வுகளை உங்களுக்கு முன்கூட்டியே தருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

தில்லை நடராசர் ஆலயத்தில் தமிழில் தேவாரம், திருவாசகத்தை பாடக்கூடாது என்று பல நூற்றாண்டுகளாக தீட்சித பார்ப்பனர்கள் தடுத்து வந்ததை பெரியார் அவர்களுக்குப் பின்னர் அதிகாரத்திற்கு வந்த எந்த திராவிட கட்சியின் ஆட்சிகளால் கூட தடுக்க இயலவில்லை. இந்த அநீதிக்கு எதிராக தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக மகஇக குழுமம் போராடி வெற்றி பெற்றது. தமிழில் தேவாரம், திருவாசகத்தை ஆறுமுகசாமி என்ற சிவனடியாரை பாட வைத்து சாதனை படைத்தது.

இந்தப் போராட்டத்தில் பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரையும் தன்னோடு இணைத்துக்கொண்டு இந்தச் சாதனையை செய்து காட்டியது. இதனோடு கருணாநிதி தலைமையிலான ஆட்சியையும், நீதிமன்றத்தையும் கூட மிகவும் லாவகமாக பயன்படுத்திக்கொண்டது.

இந்த எட்டு ஆண்டுகாலப் போராட்டத்தில் மகஇக அமைப்பு தமது தோழர்கள் பலரை இப்போராட்டத்தில் முன்னிறுத்தியது. இப்படி முன்னிறுத்தப்பட்ட அனைவரும் பிறப்பால் வன்னிய சாதியைச் சேர்ந்தவர்கள். தவறியும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் எவரையும் முன்னிறுத்தவோ, மேடை ஏற்றவோ இல்லை.

தொடர்ச்சியாக சாதிவெறியை சுட்டிக்காட்டிப் போராடி மெல்ல, மெல்ல மக்களிடையே வர்க்க உணர்வை ஏற்படுத்தி சாதனை புரிந்துள்ள மகஇக குழுமம் தில்லைப் போராட்டத்தை பார்ப்பனியத்திற்கு எதிரான தமிழர்களின் அல்லது உழைக்கும் மக்களின் போராட்டமாக நடத்தாமல். ஆறுமுகசாமி என்ற சிவனடியார் வன்னியர் என்பதாலும், அவரே இப்போராட்டத்தின் கதாநாயகன் என்பதாலும், அவர் வன்னிய சாதி உணர்வாளார் என்பதாலும், இப்போராட்டத்தை தீட்சித பார்ப்பனர்களுக்கும், வன்னியர்களுக்கும் இடையிலான முரண்பாடாகவே கையாண்டது என்பதற்கான ஆதாரம்தான் பிறப்பால் வன்னிய சாதியினரை மட்டுமே இப்போராட்டத்தில் இவர்கள் முன்னிறுத்திய செயலாகும்.

இது பற்றி அந்த குழும அமைப்பின் ஒரு பகுதியை சேர்ந்தோர் கேட்டபோது அதை அவர்கள் மறுக்கவில்லை. அதற்கு மாறாக “ஒரு போராட்டத்தில் யாரை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிப்பது அமைப்பு தலைமையின் உரிமையாகும்; இதில் யாரும் தலையிட முடியாது,” என்று பதிலளித்தனர்.

ஆணோ, பெண்ணோ ஒருவர், மற்றவரை விரும்பலாம், தனது விருப்பத்தை குறிப்பிட்ட நபரிடமும் வெளிப்படுத்த, விரும்புவதும், விருப்பத்தை வெளிப்படுத்துவதும் ஒருவரின் உரிமை. அதே போல அவ்விருப்பத்தை ஏற்பதும், நிராகரிப்பதும் கூட மற்றவரின் உரிமை. இவைகளை ஒவ்வொரு தனி மனிதனின் ஜனநாயக உரிமையாக – தனி மனித உரிமையாக நாம் அங்கீகரித்துள்ளோம்.

ஆனால், தனது விருப்பத்தை மற்றவரிடம் தெரிவிப்பது மட்டும்தான் தனிமனித உரிமை, அதை நிராகரிப்பது, நிராகரிப்பவரின் ‘சாதி புத்தி’ என்று பட்டம் சூட்டிய ஒருவரைத்தான் மகஇக குழுமத்தினர் தனது மனித உரிமை அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக, மனித உரிமைப் போராளியாக முன்னிறுத்தியுள்ளது. அந்த மனித உரிமைப் போராளியைப் பற்றியும் மே-17 இயக்கம் தன்னுடைய கட்டுரையிலும் குறிப்பிட்டுள்ளது.

இளவரசன், திவ்யா தம்பதியினரைப் போன்றே சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட இருவர் ஒரு கிராமத்தில் தனது நண்பர் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்தனர். இதைத் தெரிந்து கொண்ட பெண் வீட்டாரும், போலிசும் அந்தப் பெண்ணை நள்ளிரவில் அடித்து இழுத்துச் சென்றனர். இந்த அக்கிரமச்செயலை அத்தெருவில் உள்ள பொதுமக்களும், மகஇக குழும அமைப்பைச் சேர்ந்த சிலரும் தடுத்து அப்பெண்ணை காப்பாற்றினர். மறுநாள் காலையில் அத்தம்பதியினரை காவல்நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைப்பதாக எழுதித் தந்த பின்னரே அப்பெண் அப்போதைக்கு விடுவிக்கப்பட்டார்.

ஆனால் தாங்கள் காவல்துறைக்கு எழுதித்தந்ததை போன்று நடந்து கொள்ளாமல், நேர்மையற்ற வகையில் அவர்களை பாதுகாப்பாக வேறு ஒரு கிராமத்துக்கு கொண்டு சென்றனர் அவ்வூரில் இருந்த மகஇக குழுமத் தோழர்கள். இது பற்றி அவர்கள் தமது தலைமையான மகஇக அமைப்பிற்கு தகவல் தந்தபோது தலைமை அவர்களுக்கு இட்ட உத்தரவை கேட்டால் அனைவரும் புல்லரித்துப் போவீர்கள்!

“தம்பதிகளைக் காப்பாற்றியதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இதற்கு மேல் நேரடியாக அந்த விவகாரத்தில் ஈடுபடாதீர்கள். ஆலோசனைக் கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட வேலைகளால் நமது அமைப்பு வேலை கெட்டுப்போகிறது என்பதை மறந்துவிடாதீர்கள். இனிமேல் இப்படிப் பட்ட சந்தர்ப்பங்களில் எங்களுக்கு தகவல் கொடுங்கள், நாங்கள் கொடுக்கும் ஆலோசனைப் படிதான் நீங்கள் நடக்க வேண்டும். அமைப்பு வேலை பாதிக்கும் வகையில் நீங்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படக்கூடாது, அப்படி செயல் பட்டால் அது மத்தியத்துவத்தை மீறிய அமைப்பு விரோத செயலாகும்”!

சாதிவெறியை முறியடிப்பதில் இவர்களுக்கு எவ்வளவு அக்கறையுள்ளது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள்!

விடுதியில் தங்கிப் படித்த 13 வயது பாரத் என்ற (தலித்) மாணவன் விடுதியில் மர்மமான முறையில் இறந்து போனான். விடுதிக் காப்பாளரும், போலிசும் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினர். பெற்றோரும், உறவினர்களும் அது கொலை என்றனர். இந்த விவகாரத்தில் உண்மையை வெளிக்கொணர இதில் தலையிடுமாறு மகஇக குழும மனித உரிமை அமைப்பை குழும அமைப்பின் மற்றொரு அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி கோரியது.

இறந்து போன மாணவனும், குற்றஞ்சாட்டப்படும் விடுதிக் காப்பாளரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். “அது ஒரு சாதிக்குள் நடந்த விவகாரம் அவர்கள் பின்னர் ஒன்றாகி விடுவார்கள். நாம் அதில் தலையிடத் தேவையில்லை”. இதுதான் மனித உரிமைப் போராளிகளின் பதில்! மக்களிடையே சாதி கடந்த வர்க்க உணர்வை சாதித்ததற்கான வழிமுறை இதுதான் போலும்!

மேலே கண்டுள்ள செயல்பாடுகளின் மூலம் அவர்கள் மக்களிடையே சாதி கடந்த வர்க்க உணர்வை உருவாக்கியதை, உருவாக்குவதைப் பற்றி மிக விரிவாக பிரிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுவார்கள் காத்திருங்கள்!

மேலே நாங்கள் கொடுத்துள்ள தகவல்களில் இருந்து மகஇக குழுமம் பார்ப்பனியத்தால் ஆதாயம் அடையும்/அதை ஆதரிக்கும் பிரிவினரா அல்லது சாதியத்தை ஒழிப்பதற்கான மிகத்தெளிவான புரிதலையும், அதன் அடிப்படையிலான வழிமுறைகளையும் கொண்டுள்ள அமைப்பா என்பதைப் பற்றி வாசகர்கள் ஒரு முடிவுக்கு வரமுடியும் என்று நம்புகிறோம்.

பார்ப்ப்பனியத்தை- சாதியத்தை பழைமைவாத பார்ப்பனியத் தலைமைகள் போன்று நடைமுறைப் படுத்தும், ஆதாயம் அடையும் பழமைவாதிகளில்லை மகஇக குழுமத்தினர். காலத்திற்கு ஏற்ப பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்துபவர்கள். நால்வருணத் தருமத்தை தமது கட்சியிலும், வெகுசன அரங்குகளிலும் மிகலாவகமாக எவரும் அறிந்து கொள்ளவோ, உணர்ந்து கொள்ளவோ முடியாத வடிவத்தில் நடைமுறைப்படுத்தும் நிபுணர்கள் இவர்கள்.

யாரை எந்த வேலையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற தீர்மானிப்பது தலைமையின் உரிமை. இதைப் பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

  • மகஇக என்ற மக்கள் கலை இலக்கியக்கழகம் அமைப்பின் தலைமைக்குத் தகுதியானவர் மருதையன்தான். இவர் பிறப்பால் பார்ப்பனர் என்பதால் அல்ல. அவருக்குத்தான் இயல்பாகவே அந்த அறிவாற்றல் உள்ளது.
  • கீழைக்காற்று வெளியீட்டகத்திற்கு துரைசண்முகம்தான் தலைமை ஏற்க முடியும். அவர் வைசியர் என்பதால் அல்ல. அவரிடம் தான் இயல்பாகவே வியாபார ஞானம் இருக்கிறது.

அவரவர்க்கு விதிக்கப்பட்ட வேலையைத்தான் அவரவர் செய்ய வேண்டும். அடுத்தவர் வேலையில் தலையிடக்கூடாது. அப்படி செய்வது இந்துமதத்தில் நால்வருண தர்மத்திற்கு எதிரானது.

மகஇக குழுமத்தில் மீறுவதோ, கேள்வி எழுப்புவதோ ஜனநாயக மத்தியத்துவத்திற்கு எதிரானது.

தமக்கு விதிக்கப்பட்ட வேலைக்கு மாறாக, அமைப்புக்குத் தெரியாமல் அதை மீறி மகஇக குழும அமைப்பில் சிலர் விவசாயிகளிடம் ஆய்வுசெய்து அந்த ஆய்வறிக்கையை தலைமைக்கு அளித்தனர்.

“கொடுத்த வேலையை செய்ய வக்கில்லை, ஆய்வு பண்றாங்களாம் ஆய்வு”, இதுதான் புரட்சிகர தலைமையின் மறுமொழி. இப்படி ஆய்வு செய்தவர்களின் நடவடிக்கை, மத்தியத்துவத்தை மீறும் அமைப்பு விரோத செயல். இதற்காக அவர்களுக்கு இவர்கள் வழங்கிய தண்டனை என்ன தெரியுமா? ஒதுக்கி வைத்தல்!

அன்று பார்ப்பனியத்தை ஏற்க மறுத்தவர்களையும், மீறியவர்களையும் பள்ளு, பறை, சக்கிலி என்று சேரிகளில் ஒதுக்கி வைத்ததார்கள். இவர்கள் அமைப்பிற்குள்ளேயே ஒதுக்கி வைக்கிறார்கள்.

இப்போது சொல்லுங்கள் மே-17 இயக்கத்தினரே மகஇக குழுமத்தின் இந்த திறமையும், சாதுரியமும் உங்களுக்கு வருமா? அது இருந்தால் மட்டுமே அவர்களோடு போட்டியிட நீங்கள் தகுதி உள்ளவர்களாவீர்கள்.

அவர்கள் உங்களை மட்டுமல்ல அனைவரையும் எதிர்ப்பதற்கும், ஒதுக்கி வைப்பதற்கும் காரணமே அவர்களின் அகராதியில் நால்வருண தர்மத்தை நீங்களெல்லாம் மீறுவதே ஆகும்.

முற்போக்கு, புரட்சிகர சக்திகளில் நவீன வர்ணதர்மத்தின் உலகலாவிய தலைமை மகஇக குழும தலைமை மட்டுமே. அவர்களுக்கென்று விதிக்கப்பட்ட புரட்சிகர பூசாரி வேலையில் உங்களைப் போன்றோர் தலையிட்ட பின்னரும் அவர்கள் சும்மா இருக்க வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்கள்!?

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 69% இடஒதுக்கீட்டால் நாங்கள் எவ்வளவுதான் அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் எங்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மேல்வர்ணத்தார் மனு செய்தார்கள். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 69% இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் மேல்வர்ணத்தாருக்கு 19% கூடுதல் இடங்களை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளதை மே-17 இயக்கத்தினர் அறிந்திருக்க மாட்டார்களா என்ன!

யார் இந்த உரிமையை முற்போக்கு, புரட்சிகர அமைப்புகளுக்கான பூசாரி – தலைமை – பொறுப்பை மகஇக குழுமத்திற்கு வழங்கியது!? நாங்கள் இதை ஏற்க மாட்டோம் என்று மே-17 இயக்கத்தை போன்றோர் வாதிடலாம்.

பார்ப்பனர்களுக்கு இந்துமதத்தின் தலைமையைத் தந்தது யார்?

காஞ்சி மடத்தை போன்று இந்தியா முழுக்க உள்ள மடங்களுக்கு பார்ப்பனர்களை மட்டுமே சங்கராச்சாரிகளாக நியமிப்பது யார்?

உங்களைப் போன்றோர் ஏற்றுக்கொண்டாலும், ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்துக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள்தான் இந்தியாவில் பெரும்பான்மை. உங்களால் என்ன செய்ய முடியும்?

மகஇக- குழுமத் தலைமை உங்களைப் போன்றோர் ஏற்றுக்கொண்டால் என்ன, ஏற்றுக்கொள்ளவிட்டால் என்ன?

அவர்களை அவர்களின் அணிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் தலைமையாக!

இந்து மதம் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ்வதற்கு அது, அதில் உள்ளோரை சாதியாக கூறுபோட்டு, அதை தொடர்ந்து பாதுகாப்பதே காரணமாகும்.

மகஇக குழுமமும் 35 ஆண்டுகளாக உயிர்வாழ்வதற்கு அவர்களின் அணிகளுக்கிடையே ஒற்றுமைக்கான கூறுகள் ஏற்படாத வண்ணம் பாட்டாளி வர்க்க அமைப்பு பெயரிலான விதிகளை கறாராக கடைபிடிப்பதுதான் காரணமாகும்.

கடந்த மூவாயிரம் ஆண்டுகளில் மனித சமூகத்தில் எவ்விதமான முன்னேற்றமும், மாற்றமும் ஏற்பட்டாலும் அவைகள் அனைத்தையும் தமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதுதான் பார்ப்பனியத்தின் ஆற்றல்.

பாட்டாளி வர்க்க அமைப்பின் ஜனநாயக மத்தியத்துவம், பட்டாளி வர்க்க சர்வாதிகாரம் உட்பட அனைத்து கோட்பாடுகளையும், தமது புதிய பார்ப்பனிய வர்ண தர்மத்திற்கு ஏற்ப திரித்து செயல்படுத்துவதுதான் மகஇக குழுமத் தலைமையின் ஆற்றல்.

இந்து மதம் நீடிக்க எது காரணமோ அது, அதுவேதான் மகஇக குழுமமும் நீடித்திருப்பதற்கான காரணமுமாகும்.

பார்ப்பனியத்தில் உள்ளார்ந்த புலமை உள்ளவர்களால் மட்டுமே அதன் நிபுணர்களாக இருக்க முடியும். அந்த வகையில் மகஇக குழுமம் பார்ப்பனிய நிபுணர்களைக் கொண்ட தலைமையாகும்.

இவர்கள் அதில் வல்லவர்கள் என்பதற்கான ஆதாரம் சிலவற்றைப் பார்ப்போம்.

நால்வருணத்தில் முதல் வருணமான பார்ப்பனர்களுக்கு ஏனைய வர்ணத்தாருக்கு இல்லாத பல்வேறு சிறப்புரிமையை பார்ப்பனியம் வழங்கியுள்ளது. அதில் இந்த பூலோகத்தில் உள்ள எந்த ஒரு பொருள் மீதும் அவர்களுக்கு உரிமை உண்டு. தேவைப்படும் போது அதன்மீது அவர்கள் உரிமை கோரமுடியும். எந்த வர்ணத்தாரின் உழைப்பின் மீதும், அதிலும் சூத்திர வர்ணத்தாரின் உழைப்பின் மீது எல்லாவித உரிமையும் பார்ப்பனர்களுக்கு உண்டு என்று மனுதர்மம் கூறுகிறது.

மொத்தத்தில் தான் உழைக்காமலேயே, மற்றவர்களின் உழைப்பில் வாழ்வதைப்பற்றி சிறிதும் அவர்கள் வெட்கப்படுவதில்லை. அதற்கு மாறாக உடல் உழைப்பே இழிவானது என்பதுதான் அவர்களின் உரத்த சிந்தனை!

இதை மகஇக குழுமத்தினர் நவீன வடிவத்தில் செயல்படுத்துகின்றனர்.

முத்துக்குமார் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார். சாராம்சத்தில் முத்துக்குமார் புலி ஆதரவு தரப்பைச் சேர்ந்தவர். இதன் மூலம் புலிகளின் அரசியல், சித்தாந்த மேலாண்மையால் கவரப்பட்டு அதற்காகவே தன்னுயிரை ஈந்த தியாகி.

ஆனால் மகஇக குழுமமோ புலிகளை பாசிச அமைப்பாகவும், புலிகளின் தலைவர் பிரபாகரனை ஈழத்து எம்.ஜி.ஆர், பாசிச கோமாளி என்றும் இன்றுவரை கூறிவருகிறது.

அந்த பாசிச கோமாளியின் அரசியல், சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு உயிரிழிந்த முத்துக்குமாரின் சாவை தனது அரசியல் நோக்கத்திற்காக அறுவடை செய்துகொள்ளத் தேவையான அனைத்து தந்திரங்களையும் கையாண்டனர் மகஇக குழுமத்தினர்.

பார்ப்பனர்கள் எங்கு சென்றாலும் அங்கு தமது மேலாண்மையை நிறுவுவதற்கு பல்வேறு தந்திரங்களைக் கையாளுவார்கள். அதில் முதன்மையாக தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்வது. இதற்காக தம்முடைய தனித்த அடையாளங்களை அதாவது பூணூல், பேச்சு முறை ஆகியவற்றை வெளிப்படுத்துவார்கள். மற்றவர்களை பேசவிடாமல் சள, சளவென்று வாயடிப்பார்கள். அதே போன்றுதான் மகஇக குழுமம் முத்துகுமாரின் தியாகத்தை அறுவடை செய்து கொள்ள தாம்தான் தமிழகத்திலேயே ஈழத்தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் ஒரே அமைப்பு என்பதைப் போன்று காட்டிக்கொள்ள திட்டமிட்டு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தமது அமைப்புக் கொடிகளோடு சென்று முழக்கமிட்டு அனைவரும் சோகத்தில் மூழ்கியும், இந்திய, இலங்கை அரசுகள் மீதும் தீராக் கோபம் கொண்டிருந்த தருணத்தை, சூழலை உணர்ச்சியைப் பயன்படுத்திக்கொண்டு தம்மை முதன்மைப்படுத்திக் காட்டிக்கொண்டனர்.

இதன்மூலம் அங்கு யாருடைய தியாகத்தினாலோ, உழைப்பினாலோ திரட்டப்பட்டிருந்த, திரண்டிருந்த ஈழ ஆதரவாளர்களை அபகரித்துக்கொள்ள முயன்றனர். இப்படிச் செய்வது தமது உரிமை என்று தமது அணிகளுக்கு பாடமும் புகட்டுகின்றனர்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களைத் திரட்டி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவினர் போராடி வருகின்றனர். இப்போராட்டம் கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதும் பேசப்படும் ஒன்றாக மாறியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் எழுந்த மிகச்சிறப்பான போராட்டம் இதுவே ஆகும்.

இப்போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிலும் குறிப்பாக கூடங்குளம் பகுதி மக்களிடம் உருவாக்கப்பட்டுள்ள எழுச்சியில் மகஇக குழுமத்திற்கு எள் முனையளவு பங்கு கூட கிடையாது. ஆனால் அந்தப் போராட்டக் களத்தில் திடீரென நுழைந்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டு உதயகுமார் தலைமையிலான போராட்டக் குழுவிடம் இருந்து தலைமையைக் கைப்பற்ற இக்கும்பல் மிகத்தீவிரமான திட்டத்துடன் சென்று முயற்சி செய்தது. ஆனால் இது எதையும் அப்பகுதி மக்களோ, போராட்டக்குழுவோ கண்டு கொள்ளாததால் இறுதியில் ச்சீ, ச்சீ இந்தப்பழம் புளிக்கும் என்று வந்த வழியே திரும்பிவிட்டது.

மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் இக்கும்பலின் பார்ப்பனிய குணாம்சத்தை அம்பலப்படுத்தும் உதாரணங்களாகும்.

உழைக்காமலேயே வாய்வீச்சின் மூலம் மட்டுமே அனைவரையும் பழித்து, அதன்மூலம் ஏனைய இயக்கங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்களை வென்றெடுத்துவிட முடியும் என்று முப்பத்து ஐந்து ஆண்டுகளாக கனவு காண்கிறது இக்கும்பல். இந்த அடிப்படையில் மே-17 இயக்கத்தையும் வம்புக்கு இழுத்திருக்கிறது. இளவரசன் சாதிமறுப்பு திருமண விவகாரத்தில் எவ்வித உழைப்பை செலுத்தாமலேயே வாயிருக்கிறது என்பதற்காக ஓங்கி ஊளையிடுகிறது. பேனா இருக்கிறது என்பதற்காக ஒன்றுக்கும் ஆகாதவற்றை அள்ளித் தெளிக்கிறது.

ஆலோசனை கொடுப்பது மட்டுமே தன்னுடைய வேலையாக இக்கும்பல் கருதுகிறது.

“ஒரு மனிதனின் அறவிழுமியங்கள் வேறு, வேறு பிரச்சனைகளுக்கு வேறு மாதிரி இருக்காது”, என்று மகஇக குழுமம் கூறுவது உண்மைதான். இது மற்றவர்களுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் பொருந்தக்கூடியதுதான். ஆனால் அது தனக்கு பொருந்தாது என்பதுதான் இவர்களின் அறக்கோட்பாடு!

நால்வருண அறவிழுமியங்களே இவர்களின் செயல்பாட்டுக்கான ஆதாரமாக, அடிப்படையாக இருக்கிறது.

அதனால்தான் உழைக்காமலேயே மற்றவர் உழைப்பை சுரண்டத் துடிக்கிறது இக்கும்பல்.

பார்ப்பனியத்திற்கு எதிராக குலமரபை இக்கும்பல் முன்னிறுத்துகிறது. குல தெய்வ வழிபாட்டை உயர்த்திப் பிடிக்கிறது.

ஆரிய வருகைக்கு முன்பே பூர்வகுடி மக்களிடமிருந்த பண்பாடான குலமரபுகளை பார்ப்பனியத்திற்கு மாற்றாக உயர்த்தி பிடிக்கிறார்கள் இவர்கள்.

அதாவது புலிக்கு பயந்து புற்றுக்குள் கையை விடுங்கள் என்கிறார்கள்.

இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்கள் தாங்கள் வரும் போதே பூர்வகுடி மக்களை ஒடுக்குவதற்கு தயாராக பார்ப்பனிய – சாதிய – கோட்பாட்டை இங்கு கொண்டு வரவில்லை. பூர்வகுடி குலக்குழு மக்களிடையே நிலவிய குல மரபுகள், பகை ஆகியவற்றின் விளை பொருளான ஒற்றுமையின்மையை ஆதாரமாக, அடிப்படையாக கொண்டுதான் அவற்றை நிரந்தரப்படுத்தும் பார்ப்பனியத்தை- சாதியத்தை – வளர்த்தெடுத்தனர்.

அதாவது பார்ப்பனியத்திற்கான மூலமான குலமரபு காட்டுமிராண்டித்தனங்கள்தான் பார்ப்பனியத்திற்கு மாற்றாம்!

இந்த குலமரபு அறவிழுமியங்கள்தான், தாய்வழிச் சமூக காட்டுமிராண்டித்தனமான சகோதர முறை திருமணங்களை மகஇக குழுமத்தினரை ஆதரிக்க வைக்கிறது. சகோதர முறைத் திருமண உறவை எதிர்ப்போரை ஜனநாயக விரோதிகள் என்றும் பேச வைக்கிறது.

இந்த காட்டுமிராண்டி அறவிழுமியங்கள்தான் அடுத்தவர் உழைப்பை, பொருளை கொள்ளையடிப்பதையும் நியாயம் என்று இவர்களை சிந்திக்கவும் தூண்டுகிறது.

இளவரசன் சாவை ஒட்டி மே-17 இயக்கத்தின் சுவரொட்டி முழக்கங்கள் பார்ப்பனியத்திற்கு எதிரான அதன் கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தும் முழக்கங்கள்தான்.

ஆனால் மே-17 க்கு எதிராக கிளம்பியுள்ள மகஇக குழுமத்தினரோ பார்ப்பனியத்தை –சாதியத்தை –தமது பிழைப்பிற்காக உயர்த்திப் பிடிக்கும், பாதுகாக்கும் கருங்காலிகள்!

கருங்காலித்தனத்தோடு ஒப்பிடும் போது கையாலாகாத்தனம் பெரும் குற்றமல்ல!

தொடர்புடைய கட்டுரைகள்: 

 1. காயடிக்கும் கட்சி   

2. சமச்சீர் கல்வி. . . . ! கார்ப்ரேட் மூலதனத்தின் தேவையை மறுக்கும் பார்ப்பன கும்பலுக்கு விழுந்த அடி 

3. சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-1 

4. சமச்சீர்கல்வி:முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -2

வினவின் ரசிகர்கள் யார்? தோழர் ரெட்மீரா அவர்களுக்கான எமது பதில்.  

6. சமச்சீர்கல்வி முரண்பாடுகளின் மூட்டையாகிப்போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும் -3 

7. முரண்பாடுகளின் மூட்டையாகிப் போனது வினவும் அதன் தோழமை அமைப்புகளும்-4

 8. சமச்சீர்கல்வி: புஜ+புக+வினவு=கலவை சித்தாந்தம் 

9. இன்னமும் இங்கதான் புடுங்கினுக்கிறாரா? 

10. தவளை தன் வாயால் கெடும் . . . ! 

11. சகோதர முறை திருமணங்கள் : தனி மனித உரிமையா? பாலியல் சீரழிவா? 

12. அக்காவையும், தங்கச்சியையும் கட்டிக்கலாங்கிற, மகஇக காரன பார்த்தா கேளுங்க. .

Pin It