‘தெலுங்கானா’ என்கிற தனிமாநிலம் கேட்டு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிய அம்மக்களிடம் ‘சரி சம்மதம்’ என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது பற்றியெரிந்து கொண்டிருந்த தெலுங்கானாப் பகுதியை ஓய்வெடுக்க வைத்து விட்டு, ஆந்திரத்தின் பிற பகுதிகளான இராயலசீமா, கடலோர ஆந்திரா உள்ளிட்ட சீமாந்திரப் பகுதி மக்களை உசுப்பிவிட்டுள்ளதோடு இக்கட்டுரை எழுதப்படும் 03-08-2013 இல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பிரிவினைத் ‘தீ’ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது.

 ‘விசால ஆந்திரம்-மக்கள் ராஜ்ஜியம்’ என்ற முழக்கத்துடன் ஐதராபாத் சமஸ்தானத்திற்கு எதிராக கம்யூனிச இயக்கத்தினர் நடத்திய ஆயுதப் போராட்டமும், அதே கோரிக்கைக்காக இராயலசீமா, தெலுங்கான, கடலோர ஆந்திரம் ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் தங்களை ‘தெலுங்கு தேசியர்கள்’ என்று மொழிவழி தேசியச் சிந்தனையுடன் ஒன்றுபட்டுப் போராடியதாலும், பொட்டி ஸ்ரீராமுலு என்கிற சுதந்திரப் போராட்டத்தியாகி மொழிவழி தனி ஆந்திரமாநிலம் அமைக்கக்கோரி சாகும்வரை உண்ணாவிரதமிருந்து, அதற்காகவே அவர் 1952-இல் உயிர் துறந்ததின் விளைவாக, அன்றைய காங்கிரஸ் ஆட்சியின் பிரதமரான நேரு முயற்சியால் 1953-இல் மேற்கண்ட மூன்று பகுதிகளையும் உள்ளடக்கிய அகண்ட ஆந்திரம் உருவானது. இதுவே இந்தியாவின் முதலாவது மொழிவழித் தேசிய மாநிலமாகும்.

 ஒன்றுபட்ட ஆந்திரத்தை உருவாக்கிய அதே காங்கிரஸ் கட்சிதான் இன்று ஆந்திராவில், தெலுங்கானாவைப் பிரித்து தனிமாநிலத்தை உருவாக்க முயன்றுவருகிறது. காங்கிரஸின் முடிவுகளில் முட்டிமோதுவதே தனது முழுநேர வேலைத் திட்டமாக்க கொண்டிருக்கும் பா.ஜ.கவும், தெலுங்கானாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது.

 ஆந்திரம் என்கிற மொழிவழி மாநிலப் பிரிவினைக்குப்பிறகு இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் தங்களுக்கென மொழிவழி மாநிலங்களை அமைத்துக் கொண்டன. சென்னை மாகாணந்தின் எல்லையோரப் பகுதிகளை வலுவந்தமாக ஆந்திர, கேரள, கர்நாடகத்தினர் பறித்துக் கொண்டதுபோக எஞ்சியப்பகுதியை நாம் தமிழ்நாடு என்று அழைத்து வருகிறோம். நம்மைச்சுற்றி இருந்தவர்களின் மொழிவழிச் சிந்தனை, நம்மில் சிலரையும் ஆட்கொண்டதால், இழந்த சில தமிழ்ப்பகுதிகளை மீட்டெடுக்கவும் முடிந்தது.

 தமிழ்நாட்டிற்கு முறையாகக் கிடைக்கவேண்டிய ஆற்று நீர் உரிமையை தட்டிப் பறிக்கும், அண்டை மாநில சுயநல அரசியல்வாதிகளின் அடாவடிப்போக்கும், கண் முன்னால் இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருக்கும் தில்லி அரசின் மெத்தனப் போக்கால், சூடும் சுரணையும் பெற்ற தமிழர்கள், தமிழ்த்தேசியத்தின் தேவையையும், கட்டாயத்தையும் உணர்ந்ததால் நாமும் இன்று மொழிவழி தேசிய இனத்தவர் என்று பெருமிதத்துடன் முன்னிலைப் படுத்திக்கொள்ள முடிகிறது.

 1983இல் தொடங்கிய ஈழப்போராட்டத்தின் தாக்கமும், தமிழின அழிப்பும் தமிழ்நாட்டுத் தமிழர்களை தேசிய இனமாக தலைநிமிர வைத்தது.

 தமிழர்களைப் போல் இன்று மலையாளிகள், கன்னடர், வங்காளிகள், தெலுங்கர், மராத்தியர், குஜராத்தியர் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்கள் தங்களின் மொழி, இன அடையாளத்துடன் வளர்ந்து வரும், மொழிவழி தேசிய எழுச்சியைக் கண்டு இந்திய தேசியம் பேசுபவரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. இமயம் முதல் குமரி வரை ஒரேநாடு, அதுதான் பாரதம். அந்த பாரத மக்கள் பேசும் மொழி ‘இந்தி’ யாகவே இருக்க வேண்டும். அவர்களின் எண்ண ஓட்டத்தில் இந்துத்துவம் இரண்டறக் கலந்திருக்க வேண்டும். இது ஆர்.எஸ்.எஸ் மட்டுமல்ல, அத்வானி மற்றும் சோனியாவின் கொள்கையும் இதுதான்.

 மொழிவழித் தேசியம் என்பது இந்திய தேசியத்திற்கு எதிரானது. எனவே மொழிவழி தேசியத்தை சிதைப்பது அல்லது அதன் அடையாளத்தை ஏற்க மறுப்பது ஒன்றே, இந்திய தேசியத்தைக் காக்கும் ஒரேவழிமுறையென அகில இந்தியக் கட்சிகள் நம்புகின்றன. நம்மைப் பொறுத்தவரை தெலுங்கானா என்பது இந்திய தேசியத்திற்கு கொடுக்கும் நரபலியாகும். இப்படி ஒவ்வொரு தேசிய இனத்தையும், நரபலி கொடுத்துதான் இந்திய தேசியத்தைக் காப்பாற்ற முடியும் என்று நம்புவதால்தான், அரசியலில் எதிரெதிர் துருவங்களாக நிற்கும் காங்கிரஸ் - பாஜக வும் தெலுங்கானாவை போட்டிப்போட்டு ஆதரிக்கின்றன. இவர்களின் திட்டத்திற்கும் சூழ்ச்சிக்கும் தொண்டு செய்ய தமிழ்நாட்டில் இரண்டு நபர்கள் கிடைத்துள்ளார்கள். அவர்களில் வடமாவட்டத்தில் மருத்துவர் இராமதாசும், தென் மாவட்டத்தில் மருத்துவர் சேதுராமனும் ஆவார்கள்.

 மருத்துவர் இராமதாசு அவர்கள், வடமாவட்டங்களை தனியாகப் பிரித்து வடதமிழகம் என்ற தனிமாநிலத்தை உருவாக்க வேண்டுமென நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகிறார். இதே கருத்தை மருத்துவர் சேதுராமனும் தென் மாவட்டங்களைப் பிரித்து, தென்தமிழகம் அமைக்க வலியுறுத்தி வருகிறார். இவர்கள் இருவரும் கூறும் காரணம், “நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரிக்கவில்லையா?. அப்படித்தான் மாநிலப்பிரிவினையும்” எனக் கூறுகிறார்கள்.

 ஒரு மாவட்டத்தை இரண்டாகப் பிரிப்பதனால் பிரியும் மாவட்டம் தமிழ்நாட்டிற்கு வெளியே அமையப்போவதில்லை. ஆனால் மாநிலப்பிரிவினை அப்படியா? காவிரியின் வடகரையும், தென்கரையும் மாநிலங்களின் பிரிவினை என்கிற பெயரில் எல்லைக்கோடுகளாக மாற்றப்பட்டால் தமிழ்த்தேசியம் என்பது எப்படி முகிழும்?. அதுபற்றி இரு மருத்துவர்களுக்கும் அவர்களின் கருத்தை ஆதரிப்பவர்களுக்கும் கவலை கிடையாது. சாதியின் பெயரால் தமிழ் நிலத்தைக் கூறுபோட்டு, எளிதில் முதல்வர் பதவிக்கு குறிவைக்கலாம் என்ற அற்ப ஆசைதான்.

 சாத்தியத்தின் எல்லைக் கோட்டில் தனித்தெலுங்கானா நிற்பதால் இராயலசீமா பகுதியினருக்கும், தனி மாநில ஆசை பிறந்து அவர்களும் இன்றுப் போராட்டக் கலத்தில் குதித்துள்ளனர்.

 மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் மலைப் பகுதிகளை தனியாகப் பிரித்து கூர்க்காலேண்ட் என்ற தனிமாநிலம் அமைக்கவேண்டுமென போராடி வரும் கூர்க்கா ஜனமுக்திமோர்ச்சா கட்சியின் 6 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர், சமீபத்தில் டில்லிக்குச் சென்று காங்கிரசின் மூத்தத் தலைவர்கள், அமைச்சர்களைச் சந்தித்துள்ளனர். பிரிவினைத் தலைவர்களிடம் தனிமாநிலக் கோரிக்கையை தீவிரப்படுத்தும்படி கோரிக்கை வைத்துள்ளனர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள். விரைவில் டெல்லியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள ஒருசிலருக்கு அழைப்பு வந்தாலும், வரலாம்.

 அசாமில் உள்ள கர்பி மொழிபேசும் மக்கள் 1951 முதல் தனிமாநில உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்றனர். தெலுங்கானா தந்த ஊக்கத்தால் கர்பி மக்கள் செரிவாக வாழும், அங்லாங் மாவட்டத்தை தனிமாநிலமாக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர். இதை வலியுறுத்தி கர்பி ரிசோ அதார்பா அமைப்பினரும், கர்பி மாணவர் அமைப்பைச் சார்ந்தவர்களும் நடத்திய 100 மணிநேர பந்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 2 கர்பிகள் கொல்லப்பட்டுள்ளனர். போடோலாந்து தனிமாநிலக்கோரிக்கைகைய சமாளிக்க முடியாமல் திணறி வரும் அசாமுக்கு மற்றொரு புதிய தலைவலிதான் அங்லாங் தனிமாநிலக் கோரிக்கையாகும். இது போதாதென்று திமாசாஸ், கூச்-ராஜ்பாங்சிஸ் என்ற புதிய மாநிலக் கோரிக்கையும் வலுத்து வருகிறது.

 மராட்டியத்தின் விதர்பா பகுதியைப் பிரித்து தனிமாநிலமாக்க வேண்டுமென்ற கோரிக்கை ஒருபுறமிருக்க, மாநிலத்தின் தலைநகரான மும்பையையே தனி மாநிலமாக்க வேண்டுமென்று பிரபல எழுத்தாளர் ஷோபாடே, எரியும் நெருப்பில் பிரிவினை எண்ணெயை ஊற்றியுள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகின்றன. ஷோபாடேயின் கருத்தின் பின்னணியில் ஒளிந்து கொண்டிருப்பது இந்தியப் பெருமுதலாளிகள் என்பது நாடறிந்த ரகசியமாகும்.

 இதுபோக உத்திப்பிரதேசத்தில் ஹரித்பிரதேஷ், பஸ்சிம்பிரதேஷ், புண்டல்கண்ட், குஜராத்தில் சௌராஸ்டிரா, கர்நாடகத்தில் கூர்க், ஒடிசாவில் கோஷலாஞ்சல், பீகாரில் மிதிலாஞ்சல் என்று தனிமாநிலப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றன. கோவை, ஈரோடு, சேலம் பகுதிகளை உள்ளடக்கிய கொங்குத் தமிழகம் அமைக்கும் எண்ணம் சமீபகாலமாக வளர்ந்து வருகின்றன. நீலகிரி மாவட்டத்தை தனிமாநிலமாக்க வேண்டும் அல்லது மத்திய ஆட்சிப்பகுதியாக அறிவிக்க வேண்டுமென அங்குள்ள கன்னடமொழி பேசும் படுகர் சாதியினர் கோரிக்கை எழுப்புகின்றனர்.

 தங்களின் மொழிக்கு எழுத்து வடிவமே இல்லாத சௌராஷ்டிரர்களும் ஒரு மாவட்டத்தில் மட்டும் பெரும்பான்மையாக இருப்பதனாலேயே கர்பிகளும், குஜராத்திலிருந்தும், அசாமிலிருந்தும் தனி மாநிலம் கேட்கும் நிலை தீவிரமடைந்தால் தமிழ்நாட்டில் நரிக்குறவர்களும் நாளை தனிமாநிலம் கேட்டுப் போராடலாம். நாகலாந்து என்கிற சிறிய மாநிலத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட மொழிபேசும் இனக்குழுக்கள் உள்ளன. எதிர்காலத்தில் அவர்களுக்கும் தனி மாநிலச்சிந்தனை எழுந்தால் பிறகு இந்தியாவை 350 மாநிலங்களாகப் பிரிக்கவேண்டும்.

 தெலுங்கானாவை ஆதரிப்பவர்கள், “பின்தங்கியப் பகுதியான தெலுங்கானா தனிமாநிலம் ஆவதில் தவறில்லை” என்கிறார்கள். பின்தங்கியப் பகுதிகள் வளர்ச்சியடைய தனிமாநிலம்தான் தீர்வென்றால் இந்தியாவில் 30 மாநிலத்திற்கு பதிலாக 300 மாநிலங்கள் உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் 10 மாநிலங்களையாவது உருவாக்க வேண்டியிருக்கும். சமவளர்ச்சிக்காக போராடுவதை விடுத்து பிரிவினையை முன்னெடுப்பது தீர்வாகாது.

 ஆந்திரதிலிருந்து தெலுங்கானாப் பிரிந்தால் தமிழகத்தின் எல்லையோரமிருக்கும் இராயலசீமாவும், கடலோர ஆந்திராவுமிணைந்து சீமாந்திரா என அழைக்கப்படும். ஆந்திரத்தின் தலைநகரமாக விளங்கிய ஐதராபாத் இனி இருமாநிலங்களின் பொதுத் தலைநகராக அடுத்த 10 ஆண்டுகளுக்கு திகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் நகரம், சீமாந்திரா-தெலுங்கானாவின் எல்லையில் அமைந்தில்லை. அது தெலுங்கானாவின் மையப்பகுதியில் உள்ளது. பிரிவினைக்கெதிரான போராட்டத்தில் குதிக்கும் சீமாந்திரர்கள் தெலுங்கானாவின் உரிமைக்காக மட்டுமல்ல, அதில் அடங்கும் ஐதராபாத்தின் உரிமைக்காகவும்தான் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள்.

 தங்களுக்கு வேண்டாத கட்சியினர் மாநிலங்களில் அதிகாரம் செலுத்தும்போது அவர்களின் அதிகாரத்தைச் சிதைக்கும் வகையிலும், மாநிலப் பிரிவினையை டெல்லி ஊக்குவிக்கிறது. ஜெகன்மோகன் ரெட்டியின் வளர்ச்சிக்கு ஒரு தடைக்கல்லாக தெலுங்கானாவை காங்கிரஸ் அரசு பார்க்கிறது.

 இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருந்து எத்தனை மாநிலங்கள் உருவானாலும், அது இந்திய வரைபடத்தினுள்ளேயே அடங்கிவிடும். ஆனால் ஒருமொழி வழி தேசிய இனம் தனது திசைவழி எது என முடிவெடுத்து பிரிந்துபோகும் உரிமை வேண்டுமென்று தனியே நடக்கத் தொடங்கி விட்டால் இந்தியாவின் ஆயுள்ரேகை அழிந்து விடும். பிறகு இந்திய வரைபடத்தை மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.

 அப்படி ஏதும் நடக்காமலிருக்க வேண்டுமானால் மொழிவழி அடையாளத்தை, பண்பாட்டை, நிலப்பரப்பை சிதைத்தொழிக்க வேண்டும். அதற்காக தனிமாநிலக் கோரிக்கையை வளர்த்து விட்டால் ஒரே இனமக்கள் பிரிவினைக்காக முட்டிக்கொண்டு இரத்தம் சிந்துவார்கள். இதனால் இந்திய இறையாண்மை காப்பாற்றப்படுமென்று தேசிய நீரோட்டத்தில் துடுப்பு போடுபவர்கள் எண்ணுகிறார்கள். அவர்களின் எண்ணம் ஈடேறவே தெலுங்கானாவை உருவாக்குகிறார்கள். தெலுங்கானா உருவானால் அழிவது தெலுங்கு மொழிவழி தேசியம் மட்டுமல்ல. தமிழ்த் தேசியமும் தான்.

- கா.தமிழ்வேங்கை, விழுப்புரம். (94421 70011)

Pin It