அரசியலில் பார்ப்பனர்களும் அவர்தம் கூலிகளும் தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதாருக்கு இடையூறாய் செய்து வரும் சூழ்ச்சிகளையும் பிரசாரங்களையும் பற்றி சென்ற வாரம் பார்ப்பனீய போக்கிரித்தனம் என்ற தலைப்பின் கீழ் எழுதியிருந்ததோடு, சென்னை மந்திரிகள் நடுநிலைமை வகிப்பதன்மூலம் பார்ப்பனரல்லாதாரின் நலத்திலும் சற்று கவலை ஏற்படுவதால் அவர்களைப் பற்றி இப்பார்ப்பனர்களும் அவர்களது தாசர்களும் எவ்வளவு தூரம் விஷமமும் பொய்யும் கலந்த சூழ்ச்சிப் பிரசாரம் செய்கின்றார்கள் என்றும் எடுத்துக் காட்டி, அது சரியா தப்பா என்பதற்கும் பல உண்மைகளை வெளியிட்டிருந்தோம். அன்றியும் கடைசியாக எது வரையில் தற்கால மந்திரிகளை இப்பார்ப்பனர்களும் அவர்களது தாசர்களும் வைகின்றார்களோ அது வரையில் அம்மந்திரிகளை அவர்களிடமிருந்து பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு ஆன காரியங்களைப் பெற ஆதரிக்க வேண்டியது பார்ப்பனரல்லாதாரின் கடமை என்றும் எழுதியிருந்தோம்.

periyar rajajiஅது போலவே இவ்வாரம் மந்திரிகளின் தஞ்சை, திருச்சி, கடலூர் ஜில்லா சுற்றுப் பிரயாணங்களில் மந்திரிகளுக்கு பொது ஜனங்கள் நடத்திய வரவேற்புகளும் நமக்கு மிகுதியும் மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது. எது காரணம் பற்றியென்றால், மந்திரிகள் சாதித்து விட்டார்கள் என்றோ, சாதித்து விடுவார்கள் என்றோ அல்ல. மற்றென்னை எனில், இப்பார்ப்பனர்களும் அவர்களது கூலிகளும் ஒன்று சேர்ந்துகொண்டு தற்கால மந்திரிகளை எப்படியாவது கவிழ்த்து தங்கள் தாசர்களை மந்திரியாக்கி பொம்மைகளைப் போல் ஆட்ட வேண்டுமென்ற பேராசையாலும், அடுத்த தேர்தலில் தாங்களே வெற்றி பெற்று பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்னும் ஆத்திரத்தாலும், மந்திரிகள் செல்லும் இடங்களிலெல்லாம் அதை ஆதாரமாய் வைத்து தேர்தல் பிரசாரம் செய்ய ஆங்காங்கு தினக்கூலிகளையும் அமர்த்திக் கொண்டு செய்த விஷமப் பிரசாரங்களையும் ‘மந்திரிகளின் துரோகம்’ ‘வாக்கு மீறல்’ ‘தேசத்தைக் காட்டிக் கொடுத்தல்’ என்பதான எத்தனையோ இழிமொழிகளை உண்டாக்கி பெரும் கொட்டை எழுத்துகளில் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் எழுதியும், கூப்பாடு போட ஆள்களை சேர்த்தும் செய்த பிரசாரங்களும் பணச் செலவுகளும் ஒரு காதொடிந்த ஊசிக்கும் பிரயோசனப்படாமல் போனதோடு, சில இடங்களில் கூலிகளுக்கு உதையும் அடியும் கிடைத்ததோடு பிரசாரம் செய்யச் சென்ற ‘தலைவர்கள்’ என்போர்களும் சென்ற இடங்களிலெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும், நின்று பேச இடம் கிடைக்காமலும், கூட்டங்கள் கலவரத்தில் முடிந்ததும் மற்றும் பல இடங்களில் பெருமித அவமானங்களும் அடைந்து வந்ததும், பார்ப்பனப் பத்திரிகைகளிலேயே விளங்கிவிட்டன.

சென்னையில் சைமன் கமிஷன் பகிஷ்காரத்தின் போது எப்படி தலைவர்கள் என்போர்கள் புத்திகள் கற்பிக்கப்பட்டார்களோ அதற்கு மேலாகவே மந்திரி விஜயத்தாலும் பல தலைவர்கள் ஆங்காங்கு தக்கபடி புத்தி கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே இனித் தமிழ் நாட்டில் பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கும் அவர்கள் தாசர்களின் வயிற்றும் சோற்றுக் கூலி பிரசாரத்திற்கும் யோக்கியதை இல்லை என்பதும் கூடிய வரையில் பொது ஜனங்களுக்கு யோக்கியர்கள் யார், அயோக்கியர்கள் யார், என்பதும் பொது நலத்திற்கு உழைப்பவர்கள் யார், சுயநலத்திற்கு உழைப்பவர்கள் யார் என்பதும், பார்ப்பனரல்லாதாருக்கு உழைப்பவர்கள் யார், பார்ப்பனர்களுக்கு தாசர்களாயிருந்து அவர்களுக்காக உழைத்து கூலி பெறுவதின் மூலம் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு துரோகம் செய்பவர்கள் யாரென்பதும் நன்றாய் விளங்கி, அரசியல் புரட்டுக்கும் தேசீய புரட்டுக்கும் சாவு மணி அடித்து விட்டதற்கு இது ஒரு அறிகுறியாய் இருப்பதற்காகவே இச்சம்பவங்களையும் மந்திரிகளின் வரவேற்பு ஆடம்பரங்களையும் ஆதாரமாய் வைத்துக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றோம்.

ஸ்ரீமான் கனம் சேதுரத்தினமையர் அவர்களுக்கு அநேக பார்ப்பன மிராசுதார்களும், சட்டசபை மெம்பர்களும் பார்ப்பனரல்லாத மிராசுதாரர்களும் பொது ஜனங்களும் ஆடம்பரமான வரவேற்பு விருந்து முதலிய விழாக்கள் நடத்தி இருக்கிறார்கள். ஸ்ரீமான் கனம் முத்தையா முதலியார் அவர்களுக்கும் அது போலவே மிராசுதாரர்களும் பொது ஜனங்களும் வரவேற்பும் விருந்தும் மற்றும் பல பெருமைகளும் நடத்தியிருக்கிறார்கள். முதல் மந்திரி ஸ்ரீமான் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கோ ஜஸ்டிஸ் கக்ஷி மந்திரிகள் என்பவர்களுக்கு நடந்த பெருமைக்கு மேலாகவே சென்ற இடங்களிலெல்லாம் பல பல ஊர்வலங்களும் வரவேற்புகளும் விருந்துகளும் பொதுக் கூட்டங்களும் வெகு தடபுடலாகவே நடந்திருக்கின்றன. எனவே இந்த மந்திரிகள் எந்த விதத்தில் யாரால் மறுக்கப்பட் டார்கள்? யாரால் பஹிஷ்கரிக்கப்பட்டார்கள்? என்பது நமக்கு விளங்கவில்லை.

பார்ப்பனக் கூச்சல்களும் அவர்களது தாசர்கள் கூச்சலும் பத்திரிகை அறைக்குள் நின்று விட்டதே யல்லாமல் சிலது பத்திரிகைகளில் எழுத்தளவில் நின்று விட்டதே அல்லாமல் காரியத்தில் எங்காவது யாராலாவது நடத்தப்பட்டதா என்று கேட்கின்றோம்.

எனவே இனியாவது பாமர மக்களில் சிலர் இன்னும் மயக்கந்தெளியாமல் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் பார்ப்பன தாசர்களின் வயிற்று சோற்றுக்குமாக கூப்பாடு போடும் தேசீயம் என்றும் காங்கிரஸ் அரசியல் என்றும் சுயராஜ்யம் என்றும் சொல்லப்படும் மாய வார்த்தைகளை நம்பி ஏமாற மாட்டார்கள் என்றே நம்புகின்றோம்.

உண்மையான தேசீயம் என்பது தேச மக்களின் சுயமரியாதையை பொருத்ததே அல்லாமல் சிலரின் ஜீவனோபாயத்திற்கு மாத்திரம் ஏற்படும் வழியல்ல.

உண்மையான அரசியல் என்பது எல்லா மக்களும் சமமாய் அனுபவிக்கக் கூடியதாயிருக்குமேவொழிய ஒரு வகுப்பாருடைய ஆதிக்கத்திற்கு மாத்திரம் கிடைக்கக் கூடியதல்ல.

உண்மையான சுயராஜ்யம் என்பது எல்லா மக்களும் சமமாய் ஏற்றத் தாழ்வில்லாமல் பாவிக்கக் கூடியதும் பொது வாழ்வில் எல்லோருக்கும் சமத்துவம் அளிக்கக் கூடியதுமாயிருக்குமே யல்லாமல் ஒரு குலத்திற்கு ஒரு நீதி உடையது அல்ல என்றே சொல்லுவோம்.

ஆகவே கனம் முதல் மந்திரி முதல் ஒவ்வொருவரும் இந்த சுற்றுப் பிரயாணத்தில் ஆங்காங்கு பொது ஜனங்களுக்கு சொல்லி வந்திருப்பது போல் சமத்துவமும் சகோதரத்துவமும் சுயமரியாதையும் ஏற்பட்ட பிறகுதான் மக்கள் அரசியல் சுதந்திரம் என்பது அடையக்கூடும் என்பதையும் அப்படிக்கில்லாவிட்டால் ஒரு சமயம் அரசியல் சுதந்திரம் கிடைத்தாலும் நிலைக்காது என்பதையும் ஒவ்வொருவரும் கண்டிப்பாய் உணர வேண்டுமென்றே விரும்புகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 22.04.1928)

Pin It