ஏண்டீ, உன்னைத்தானே! சுந்தரீ! வாடீ! வாடீ! ஒரு டம்ளர் பானம் கொடு! அப்படியே எனக்கு ஒரு முத்தமும் கொடு!

சே! நீங்களொரு வெட்கங்கெட்ட மனுஷர்! 20 வயசுப் பெண்ணு கேட்டுண்டிருக்கே என்கிறதுகூடத் தெரியாமே, இப்படி யாரானும் பேத்துவாளோ! என்ன வேணும்? காப்பியா? பால்காரன் வரலையே!

kuthoosi gurusamyகாப்பியா! அது ஏண்டீ இப்போ? அதிலே போதையே இருக்கிறதில்லையே! ஒரு டம்ளர் சோமபானம் கொண்டாடீ! என்று கேட்டார் வவுத்துநாத சர்மா!

சோமபானமா? இதோ கொண்டுவர்றேன். அது சரி! என்ன  இவ்வளவு ஆனந்தமா யிருக்கேள்? ஹைகோர்ட் ஜட்ஜ் வேலை கிடைக்கப்போறதோ? என்று கேட்டாள், சர்மாவின் தர்மபத்தினியான துரோபதாபாய்!

ஹைகோர்ட் ஜட்ஜா? அது தானே கிடைக்கப் போறது! அதற்கு முன்னாடி ஏது செய்யணுமோ அதை செஞ்சு முடிச்சேன், அப்பாடி! இந்த ஒரு மாசமா என்ன கஷ்டம் எவ்வளவு சிரமம்? னோக்கு என்னடீ தெரியும்? எத்தனை தடவை மெட்றாசுக்குப் போறது? எத்தனை தடவை ட்ரங்க்போனில் பேசறது? நம்பளவாளா இருந்தால் எல்லாம் ஒரே பேச்சில் முடிஞ்சு போயிருக்கும். இந்த சூத்திரன்களுக்கு அதிகாரம் கிடைக்கப்போய் என்ன கஷ்டமாயிருக்கு போ!

சொல்லித் தொலையுங்களேன்! தொண தொணன்னு கோர்ட்டிலே பேசறமாதிரிப் பேசறயளே!

அதுதான் சொல்லப் போறேனடி! இந்தக் கருஞ்சட்டைக்காரன்கள் இருக்கான்களோன்னோ! ராமசாமி நாய்க்கன் கூட்டம்! அவன்கள் கொட்டத்தை அடக்கிப்பிட்டேன்!

ஓ ஹோ! அவா பந்தலைக்கூடக் கொளுத்த ஏற்பாடு செஞ்சேளே! அவன்கள் தானே! ரொம்ப சந்தோஷம்! நான்கூட இன்னிக்கு சோமபானம் சாப்பிட்டுப் பார்க்கப் போறேன். எப்படி அடக்கினேள்? பெரிய கூட்டமாச்சே, அவன்கள்! கிராமம் தவறாமல் ஆயிரக்கணக்கில் இருக்கிறான்களே! ரொம்ப செல்வாக்காச்சே அவன்களுக்கு? நீங்கள் தான் செய்தேள் என்று அவன்களுக்குத் தெரியுமோ?

போடீ பித்துக்கொள்ளி! எனக்கா தெரியாது? எதை எப்படிச் செய்ய வேண்டுமோ, அப்படிச் செய்வேண்டீ! ஸ்ரீராமபிரான் சுக்ரீவன் உதவியைக் கொண்டுதானே அவன் சகோதரனான வாலியைக் கொன்றார்? விபீஷணர் உதவியைக் கொண்டுதானே அவன் சகோதரனான ராவணனைக் கொன்றார்? அதே முறையைத்தான் நானும் கையாண்டேன்.

இந்தக் காலத்தில் அந்த மாதிரிப் பேர்வழிகள் எப்படிக் கிடைத்தார்கள், உங்களுக்கு?

இந்தக் காலம் வேறே, அந்தக் காலம் வேறேயோ! எல்லாம் ஒண்ணுதாண்டீ! 

ஓமாந்தூர் ரெட்டி யிருக்கிறாரோன்னோ, அவரைப் பிடிச்சு மிரட்டித்தான் உத்தரவு போடச் சொன்னேன்! சும்மா சொல்லப்படாது! பயந்த மனுஷன்! நம்பளவாகிட்டே ஒரு தனிவாஞ்சை. பக்திகூட! நம்ப மந்தி பத்திரிகை கூனிவாசன் இருக்காரோன்னோ, அபார வேலை செய்திருக்கார்! இந்த மந்திரிகள் காதைப் பிடிச்சு நன்னா, அழுத்தித் திருகி ஒரு உழக்கு ரெத்தம் எடுத்துட்டார். அதுகளெல்லாம் அவரைக் கண்டால் நடுங்கிச் சாகிறதுகள்!

சரி! அடுத்தபடி என்ன செய்யப் போறேள்? அந்த ஈரோட்டுப் பேர்வழி காந்தி மாதிரி ஏதேனும் முரட்டுத்தனமா எதிர்க்க ஆரம்பிச்சுட்டா என்ன செய்யறது?

ஆமாண்டீ! அவர் ஒரு மாதிரி ஆசாமிதான்! எந்தச் சமயத்தில் என்ன செய்வார் என்பதே தெரியாதுடீ! அந்த ஒரு ஆள் மட்டும் இல்லாட்டீ! அடாடா! பாக்கி சூத்திரப் பெரிய மனுஷாளை யெல்லாம் ஒரு நிமிஷத்திலே ஏமாற்றிப் பிடலாமே! நம்பளவா பத்திரிகையிலே நாலு வார்த்தை புகழ்ந்து எழுதினாலே அவன்களிலே பாதித் தலைவன்களுக்கு உச்சி குளிர்ந்து போகுமே! அப்புறம் செத்த நாய் செருப்பைக் கடிச்சமாதிரி வெறுமனே கிடக்குங்கள்! ஆனால் இந்த மனுஷன்தான் எதிலும் ஏமாற மாட்டான்.

அப்படீன்னா என்ன செய்யப் போறேள்?

அதெல்லாம் நேக்குத் தெரியுண்டீ! அவாளுக்குள்ளேயே நேருக்கு நேர் முட்டிக் கொள்ற மாதிரி ஒரு வேலை செய்து வெச்சிருக்கேன். அது பலிச்சுடுத்தோ, அப்புறம். நம்ப ராஜ்யந்தான்.

அது சரி! இந்த தந்திரத்தைக் கண்டு பிடிச்சீண்டு அவாள் எல்லோரும் ஒண்ணு சேர்ந்துட்டா, அப்புறம் நம்ம கதி?-

அதுதானே சேர மாட்டான்கள்! அவன்களுக்கு அந்தப் புத்தியிருந்தால் இந்த நாட்டிலேயே நம்பளை நுழைய விட்டிருப்பான்களோ? போடீ! பைத்தியக்காரி!

அவன்களை ஒண்ணு சேர விடுவோமா நாம்?

 அதுதானேடீ நம்ப காயத்ரீ! நித்ய ஜெபம்! பிரித்துவை! பிரித்துவை! பிரித்துவை! இந்த மூலமந்திரத்தைப் பிராமணன் என்றைக்கு மறக்கிறானோ, அன்றே அவன் வெளியேற வேண்டியதுதான் ...... 

அது சரி! சோமபானம் எங்கேடி? என் சொகுசு சுந்தரி கொண்டு வாடீ, சீக்கிரம்!

(குறிப்பு: குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார் அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலசா வல்லவன்

Pin It