இளவரசனின் மரணம் தமிழச் சமூகத்தின் மனச்சாட்சியை பிடித்து உலுக்கியிருக்கின்றது. சாதிவெறி பிடித்த கொலைகாரக் கூட்டமாக பாமக அம்பலப்பட்டு நிற்கின்றது. இளவரன் - திவ்யாவை பிரிந்ததோடு திருப்தி அடையாத பாமக சாதிவெறியர்கள் இளவரசனை மரித்துப் போகச் செய்துள்ளார்கள். தனது சாதிய கௌரவத்தை தக்க வைப்பதற்காக எந்த நிலைக்கும் சாதிவெறியர்கள் செல்வார்கள் என்பதற்கு இளவரசனின் மரணமே சாட்சி.

நாகராஜனின் மரணமும், இளவரசனின் மரணமும் கொலையாகவோ தற்கொலையாகவோ இருக்கலாம், கொலை செய்வதற்கும் தற்கொலை செய்துகொள்வதற்கு தூண்டுவதற்கும் பயன்பட்ட ஆயுதங்கள் வேண்டுமானால் மாறுபட்டு இருக்கலாம் ஆனால் இரண்டையும் செய்வதற்கு இங்கு பயன்படுத்தப்பட்டது சாதிவெறியே ஆகும்.

தலித்துகளுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட மையப்படுத்தப்பட்ட வன்முறையை தர்மபுரியிலும், மரக்காணத்திலும் கட்டவிழ்த்து விட்ட பாமக இன்று தனக்கும் இளவரனின் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று அன்புமணி மூலம் அறிக்கை விடுகின்றது. அப்படியென்றால் பாமக வழக்கறிஞர் பாலு திவ்யாவின் சார்பில் எதற்காக ஆஜராக வேண்டும்? திவ்யாவை மிரட்டி ஊடகங்கள் முன் இளவரசனுக்கு எதிராக பேட்டி கொடுக்க வைத்த இந்த கழிசடையை ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமூகமும் புறக்கணிக்க வேண்டும். இவனைப் போன்ற சாதிவெறி பிடித்த இழிபிறவிகளை ஊடகங்கள் அழைத்துப் பேச வைப்பதை தவிர்க்க வேண்டும். பாமகவில் உள்ள இராவணன் (இவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்) என்ற சொரணையற்ற ஜென்மம் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் 'திண்டிவனப் பெரியாரி'ன் தீவட்டிக் கொள்கையை ஏற்றியும் போற்றியும் ஊடகங்களில் தலித்துகளுக்கு எதிராக விஷம் கக்குகின்றது.

இந்த கொலைக்கு பாமகவை குற்றம் சொல்லும் அதேவேளை இந்த சாதிவெறியர்களுடன் ஓட்டு பொறுக்குவதற்காக கூட்டணி வைத்து அவர்களை வளர்த்துவிட்ட தி.முக, அதிமுக, காங்கிரஸ் போன்றவற்றையும் நாம் குற்றம்சாட்ட வேண்டியுள்ளது. இந்த மரணத்தில் அவர்களுக்கும் சம பங்கு உள்ளது. இன்று இளவரசனின் மரணத்தைக் கண்டு மனம் வெதும்பும் கருணாநிதி சில நாட்களுக்கு முன்னால் தன் மகள் கனிமொழிக்காக பாமகவின் முன் மண்டியிட்டதை தமிழக மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். இந்த போலி பெரியாரிஸ்டுகளின் பிழைப்புவாதத்தால் வந்த வினையின் உச்சம் தான் இது.

புரட்சித்தலைவி அம்மா(?) அவர்கள் இன்னும் வாய்திறக்கவில்லை. இன்னும் எத்தனை இளவரசன்களின் மரணத்திற்குப் பிறகு அவர் வாய்திறப்பார் என்று தெரியவில்லை. ஒரு வேளை வாய்திறந்தால் பரமக்குடியில் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான தோழர்களின் குடும்பங்களுக்கு கொடுத்தது போன்று ஒரு சில லட்சங்களை இளவரசனின் குடும்பத்திற்கு விட்டெறியலாம். ஏன் ஒருவருக்கு அரசு வேலை கூட கொடுக்கப்படலாம். ஆனால் இளவரசன் கிடைப்பானா? இளவரசனின் மரணத்திற்கு காரணமான சாதிவெறியர்கள் தண்டிக்கப்படுவார்களா? நிச்சயம் இல்லை...

சாதி ஒழிப்பு என்பது வெறும் தீண்டாமை ஒழிப்பு என்று சுருங்கி இன்று சாதிகளுக்கு இடையே சமரசம் என்ற அளவிற்கு கீழிறங்கிப் போய்விட்டது.

இளவரசனின் மரணத்திற்கு இங்குள்ள மார்க்சிய அமைப்புகளும், பெரியாரிய அமைப்புகளும் தார்மீக பொறுப்பேற்ற தங்களுடைய போராட்ட வழிமுறைகளை மீளாய்வு செய்ய வேண்டும். சாதிவெறியர்களுக்கு எதிராக போர்க்குணம் கொண்ட போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும். எந்த சமரசமும் இன்றி வர்க்கப்பாதையில் மக்கள் திரட்டப்பட்டலேயொழிய இது சாத்தியமில்லை அதுவே சாதிவெறிக்கு பலியான ஆயிரக்கணக்கான இளவரசன்களுக்கு நாம் செய்யும் மரியாதை.

Pin It