இரண்டு மாணவர்கள் புதிர் விடுத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு மாணவன் கேட்டான். ”நூறு லெட்டர்ஸ் கொண்டது அது. அது என்ன?”. ”தபால் பெட்டி”. எதிர் மாணவன் பதிலுக்கு ஒரு புதிர் போட்டான். ”போகும். ஆனால் போகாது. அது என்ன?” அதற்கான பதில் ”தபால்”. இது எப்படி இருக்கு!

இருபது வருடங்களுக்கு முன்பு, ஒரு தாய் மகனுக்கு ஒரு கடிதம் எழுதினாள். ”மகனே... நான் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறேன். ஒரு மாதத்திற்குள் வந்தால் என்னை உயிருடன் பார்க்கலாம்”. அந்தக்கடிதம் ஒரு வருடம் கழித்துதான் மகன் கைக்கு கிடைத்தது. தொழிற்நுட்பம் பெரிதாக வளர்ந்திடாதக் காலக்கட்டம் அது. ஆனாலும் ஒரு வருடம் கழித்தேனும் அந்தக்கடிதம் உரியவரிடம் போய்ச் சேர்ந்திருக்கிறதே!. ஆனால் இன்று...?.

அஞ்சல்துறையின் மீது மக்களுக்கு இன்றும் நல்ல அபிப்ராயம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் மக்கள் கொஞ்சம் போலும் நம்பிக்கையை இழந்திருக்கிறார்கள் என்பதை அஞ்சல் துறையில் தனியார் (கொரியர்) செலுத்திக்கொண்டிருக்கும் ஆதிக்கத்தைப் பார்த்து தெரிந்துகொள்ள முடிகிறது. சமீபக்காலமாக பணம் பட்டுவாடா வங்கி வாயிலாக நடந்தேறி வருகிறது. நலம் விசாரிப்புகள் அலைப்பேசி வாயிலாகவும், கருத்துப்பரிமாற்றங்கள் குறுந்தகவல்கள் வாயிலாகவும் நடைப்பெற்று வருகின்றன. அதிக எடை கொண்ட பொருட்களை கொண்டு செல்ல இருக்கவே இருக்கிறது கொரியர் சர்வீஸ். அஞ்சல் வழியில் அனுப்பினால் உரியவரிடம் ஒப்படைக்க மூன்று நாட்கள் வரை ஆகலாம். ஆனால் கொரியரில், இன்று அனுப்பினால் நாளை கிடைத்துவிடும். இதுபோக அஞ்சல் துறை வசம் இருப்பது அரசு கடிதங்கள், தொலைப்பேசி கட்டணத் தபால், முதியோர் உதவித்தொகை, சந்தா பத்தரிக்கைகள் அவ்வளவே!. சந்தா செலுத்தி வார, மாத இதழ்களை வரவழைத்தால் இதழ் இல்லாமல் முகவரி அட்டை மட்டும் கையில் வந்து கிடைக்கிறது. சில தபால்காரர்கள் இதழ்கள் மற்றும் தபால்களை உறவினர்களிடம் கொடுத்து அனுப்ப, அது சரியான நேரத்தில் உரியவர்களுக்கு கிடைப்பதுமில்லை. ஒருவர் சூழ்நிலை காரணமாக தன்னுடைய வசிப்பிடத்தை மாற்றிக்கொண்டால் அவருக்கான கடிதம் விசாரிப்பின்றி திரும்ப அனுப்பப்பட்டு விடுகிறது.

 இந்தியாவின் தலைநகரத்தையும் கிராமங்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுவது அஞ்சல்துறைதான். இந்தியாவில் செயல்படும் மத்திய துறைகளில் மிகவும் பழமையான துறை அஞ்சல்துறை. அதுமட்டுமல்ல உலகில் மிகச்சிறிய துண்டு காகிதத்திற்கு அதிக மதிப்பு இருக்கிறது என்றால் அது அஞ்சல் வில்லைக்குத்தான்.

 1965 ஜனவரி 26 அன்று போயிங் - 707 எனும் விமானம் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து லண்டன் நகரத்தில் வந்து இறங்கியது. அந்த விமானத்தை உலக பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அந்த விமானத்திலிருந்து இறங்கியவர் திரு. ஃபின்பர் கென்னி எனும் இங்கிலாந்து நாட்டுக்காரர். அவர் பத்திரிக்கையாளர்கள் முன் தோன்றி ஒரு சென்ட் அஞ்சல் தலையைக் காட்டி ”இதை 2,00,000 பவுன்ட் மதிப்பீட்டில் இன்ஷியூர் செய்வதாக அறிவித்தார். மேலும் இங்கிலாந்து நாட்டில் நடைபெறவிருக்கிற ஸ்டான்லி கிப்பன்ஸ் கேடலாக் நூற்றாண்டு விழாவில் இந்த அஞ்சல் தலைதான் கதாநாயகன்” என்றும் அறிவித்தார். ஐரோப்பிய நாடுகளில் மறுநாள் அதுதான் தலைப்புச்செய்தி. அந்த அஞ்சல் தலைக்கு அப்படி என்னதான் சிறப்பு..? உலகின் முதல் அஞ்சல் தலை அது.

உலகில் முதல் அஞ்சல் தலையை வெளியிட்ட நாடு கியானா. ”நாம் கொடுக்கிறோம், பதிலுக்கு நாம் பெறுகிறோம்” எனும் அதிகாரப்பூர்வமான வாசகத்துடன் அந்த தபால்தலையை அந்த நாடு வெளியிட்டது. அந்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டைச் சரியாக கணிக்க முடியவில்லை. 1856 ஆம் ஆண்டு ஒரு நபர் அந்த அஞ்சல் தலையை வெறும் 6 ஷில்லிங் விலைக்கு ஒருவரிடம் விற்றார். அந்த அஞ்சல் தலை பல்லாண்டுகள் பல பேரிடம் கை மாறி கடைசியாக ஒரு ஆஸ்திரேலியர் வசம் இருந்தது. அந்த அஞ்சல் தலையை கிப்பன்ஸ் (உலகின் முதன்முதலில் அஞ்சல் தலையை சேகரித்தவர்) நூற்றாண்டு விழாவிற்காக பிரிட்டீஸ் அரசு பெரிய தொகையைக் கொடுத்து வாங்கிவந்து கிப்பன்ஸ் தபால் தலை கண்காட்சியில் வைத்தது. அந்த தபால் தலை கறுப்பு வெள்ளையில் அச்சடிக்கப்பட்ட எண்முகம் வடிவம் கொண்டதாகும்.

 இது ஒரு புறமிருக்க உலகின் முதல் மக்களுக்கான அஞ்சல் தலை எனப் போற்றப்படுவது பென்னி பிளேக் என அழைக்கப்படும் பிரிட்டன் நாட்டு அஞ்சல்தலையாகும். 1840 மே 6 அன்று அந்த தபால் தலையை அந்த அரசு வெளியிட்டது. அடுத்து அஞ்சல்தலையை வெளியிட்ட நாடு பிரேசில்.

இந்தியாவை ஆண்ட மன்னர் அலாவுதீன் கில்ஜி காலத்தில் இராணுவ ரகசியங்களை கொண்டு வந்து சேர்ப்பதற்க்கென்று சில நபர்கள் இயங்கினார்கள். அவர்களில் சிலர் நேர்முக ஒற்றர் என்றும், சிலர் மறைமுக ஒற்றர் என்றும் அழைக்கப்பட்டார்கள். அந்த நேர்முக ஒற்றர்கள்தான் இந்தியாவின் முதல் தபால்காரர் என அழைக்கப்படுகிறார்கள். பிறகு ஷெர்ஷா (1541-45) காலத்தில் அவர்கள் தூதுவர் என அழைக்கப்பட்டார்கள். அவர்கள் சேகரித்த தகவல்களை ஒரு இடத்தில் சேமித்தார்கள். அந்த இடம் தகவல் கிடங்கு என அழைக்கப்பட்டது. அக்பர் காலத்தில் (1556-1605) அந்த இடம் சற்று முன்னேற்றம் கண்டு தகவல் பரிமாற்றம் அளவிற்கு வளர்ந்தது.

 1688 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றிய பிறகு 1766 ஆண்டு இராபர்ட் கிளேவ் தபால் முறையை ஒழுங்குப்படுத்தினார். முதல் தபால் போக்குவரத்து சென்னைக்கும், மும்பைக்கும் இடையே நடைப்பெற்றது. அது அரசு நிர்வாகம் அடிப்படையில் மட்டும் இயங்கியது. பிறகு 1774 ஆண்டு முதல் தபால் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. 100 மைல் தூரம் வரை 2 அணா பெறப்பட்டு ”தபாலை உரியவரிடம் கொண்டுப்போய் சேர்க்கப்படும்” எனும் உறுதிமொழியுடன் அஞ்சல் துறை செயல்படத் தொடங்கியது. அதை உறுதிப்படுத்துவதற்காக 1837 ஆண்டு போஸ்ட் ஆபிஸ் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச்சட்டம்தான் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் அஞ்சல் தலை என்பது கிழக்கிந்திய கம்பெனியின் சின்னமான அகன்ற அம்புதான்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அஞ்சல் துறையின் பங்களிப்பு என்பது அளப்பரியது. தென்னாப்பரிக்காவில் கறுப்பர் இன மக்களுக்காகப் போராடிக்கொண்டிருந்த காந்தியை இந்தியாவிற்கு கொண்டு வந்து சேர்த்தது அஞ்சல் துறைதான். காந்திஜீயையும் ஜின்னாவையும், திலகரையும், பெரியாரையும், இராஜாஜீயையும் ஒன்று சேர்த்தது அத்துறையே! பிரிட்டீசார் நினைத்திருந்தால் அஞ்சல் துறையின் வாயிலாக சுதந்திரப் போராட்டத்தை முடக்கியிருக்க முடியும். ஜாலியன் வாலாபாக் படுகொலை துயரச்சம்பவம் நடந்தேறிய பிறகு பிரிட்டீஸ் வைஸ்ராய் அவர்களுக்கு காந்தியடிகள் எழுதிய கடிதம் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். அந்தக் கடிதத்தை இன்றும் இங்கிலாந்து அரசு பாதுகாத்து வருகிறது. அன்றைய பிரிட்டீஸ் அரசு நினைத்திருந்தால் அந்தக் கடிதத்தை முடக்கியிருக்க முடியும். ஆனால் ஆண்ட அன்றைய அரசு அப்படி செய்திடவில்லை. பிரிட்டீஸார் காலத்தில் அஞ்சல் துறை கடமை, கண்ணியத்துடன் இயங்கியது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஜின்னா அவர்கள் பண்டித நேரு அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். ”என் வாழ்நாட்களில் நான் செய்த பெரிய தவறு என்னவென்றால் இந்திய தேசத்திலிருந்து பாகிஸ்தானை பிரித்ததுதான்” அந்தக் கடிதம் இன்றும் இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்தக் அத்தகைய சிறப்பு மிக்க அஞ்சல் துறை இன்று இயங்கும் விதம் கவலையளிப்பதாக உள்ளது.

 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாட்கள் ஓடும் ரயிலில் சிக்கி சிதைந்து எரிந்து போயிருக்கிறது. பல பேருந்து நிலையங்களில் அஞ்சல் பெட்டிகள் பல வருடங்களாக திறக்கப்படாமல் பூட்டு துருப்பிடித்து மழையில் நனைந்து பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன. மாவட்ட, ஒன்றிய, ஊரக அஞ்சலகங்கள் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. அஞ்சல் அதிகாரிகள் மற்றும் அஞ்சலை கொண்டு போய் சேர்க்கும் தபால்காரர்கள் பல்லாண்டுகளாக தினக்கூலிகளில் பணியாற்றி வருகிறார்கள். ஏன் இந்த அவலம்?

 ஒரு கிராம அஞ்சல் அலுவலகத்தை கிராம முதியோர்கள் முற்றுகையிட்டிருந்தார்கள். காரணம், அரசு வழங்கும் முதியோர் தொகை உரியவர்களுக்கு பல மாதங்களாக கிடைக்கவில்லையாம். தொலைப்பேசிகள் வருவதற்கு முன்பு கிராமங்களில் கண்கண்ட தெய்வமாக மதிக்கப்பட்டவர்கள் தபால்காரர்கள். அவர் கொண்டு வந்து கொடுக்கும் தபால், மணியார்டர் ஏழைகளின் கண்ணீரை துடைப்பதாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் இருந்தது. ஆனால் இன்று அவர்கள்?

 சந்தா மூலமாக வார, மாத இதழ்களை பெற்று வாசிக்கும் வாசகர்களுக்கு இதழ்கள் சரியான காலத்தில் வந்து சேர்வதில்லை. அதை அஞ்சல் அலுவலகத்தில் சென்று முறையிட்டால், அவர்கள் ”பதிவுத் தபாலா? சாதாரணத் தபாலா?” எனக் கேட்கிறார்கள். பதிவுத்தபால் என்றால் கண்டிப்பாக வந்துவிடுமாம். சாதாரணத்தபால் என்றால் உத்ரவாதம் கிடையாதாம்! பதிவுத்தபால் என்பது அஞ்சல் துறையில் வருமானத்தை பெருக்கும் பொருட்டு கொண்டுவரப்பட்ட திட்டமே தவிர, அது பாதுகாப்பிற்கும், சரியான இடத்திற்கும், சரியான நபரிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் அல்ல.

 அஞ்சல் துறை இன்று நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதே நேரம் வருமானத்தை பெருக்கும் பொருட்டு தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களை மேலும் முனைப்புடன் செயல்படுத்தி அஞ்சல் துறையின் வருமானத்தை பெருக்கலாமே! அஞ்சல் துறையில் கிராம ஆயுள் காப்பீடு மூலமாக பணம் சேமிக்கும் முறை இருக்கிறது. தபால்காரர்களிடம் மக்கள் காப்பீடு எடுத்துக்கொள்கிறார்கள். அத்தோடு சரி. அதன்பிறகு மக்கள் அதை தொடர்ந்து புதுப்பிக்க அஞ்சல் அலுவலர்கள் மக்களுக்கு தூண்டுகோளாக இருப்பதில்லையே.

 இன்று ”எனது அஞ்சல் தலை” என்று ஒரு புதுத்திட்டம் நடைமுறையில் இருக்கிறது. காந்தி, அம்பேட்கர், அன்னை தெரஸா, அண்ணா, நேரு... இடம்பெற்ற வரிசையில் சராசரி இந்தியக் குடிமகன்களின் முகம் பதித்த அஞ்சல் தலையை வெளியிடும் திட்டம் அது. உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி மாநிலங்களில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் தற்போது தமிழ்நாட்டில் செயல்படுகிறது. முந்நூறு உரூபாய் கட்டணத்துடன் அஞ்சல்தலையில் இடம் பெற வேண்டிய ஒருவரின் புகைப்படத்தை மாநில தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செலுத்தினால் பனிரெண்டு வில்லைகள் கொண்ட அஞ்சல்தலைகள் அவரது முகவரியைத் தேடி வரும். அதை ஒட்டி இந்தியாவின் எந்தப்பகுதிக்கேனும் தபால்களை அனுப்பலாம். இந்த புரட்சிக்கரமான திட்டத்தை மாவட்ட அஞ்சலகங்கள் அளவிற்கு விரிவுப்படுத்தினால் ஒன்றிய அஞ்சலகங்களில் வருமானம் பெருகும் அல்லவா!

 அஞ்சல் துறையைப்போலவே தபால்காரர்களின் நிலையும் கவலை அளிப்பதாகவே இருக்கிறது. தினக்கூலிகளாகவும், நிரந்தரம் செய்யப்படாத தொழிலாளர்களாகவும் இருந்து கொண்டு, எரிபொருள் வாகனங்கள் அதிகம் உலாவுகிற இக்காலத்திலும் மிதிவண்டிகளில் பயணித்து தபால்களை அளிப்பதை கண்டு கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

 உலக நாடுகளில் தபால் வில்லைகளில் அதிகமாக இடம்பெற்ற தலைவர் இந்தியாவின் தேசத்தந்தை எனப் போற்றப்படும் காந்தி அவர்களே! தபாலை முதலில் விமானத்தில் அனுப்பி புரட்சி செய்த நாடு இந்தியா. 1911 பிப்ரவரி – 18 அன்று 6500 கடிதங்களுடன் அலகாபாத்திலிருந்து நைனிடால் நோக்கிச் சென்றது. ஏர் மெயில் தபால் வில்லையை வெளியிட்ட முதல் நாடும் இந்தியா. அட்ஹிஜிவ் (adhesive) வில்லை என அழைக்கப்படக்கூடிய பின்புறம் பசையுடன் கூடிய வில்லையை வெளியிட்டதும் இந்தியாதான். அத்தகைய சிறப்புமிக்க இந்திய அஞ்சல்துறை வருமானத்தில் குன்றி, தற்காலிக ஊழியர்களைக் கொண்டு தத்தளிப்பதை ஒரு சராசரி இந்தியனால் கவலைப்படாமல் இருக்க முடியவில்லை.

வறுமையின் நிறம் சிவப்பு என்பது சான்றோர் வாக்கு. அதனால்தான் அஞ்சல் பெட்டிகளும் அஞ்சலகங்களும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறதோ!

- அண்டனூர் சுரா, கந்தர்வகோட்டை, தொடர்புக்கு 958565 - 7108 (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It