கடந்த பிரவரி மாதம் 14 ஆம் தேதி கர்நாடகத்தின் மகாராஸ்டிர எல்லை மாவட்டமான பெல்காம் சிறையிலிருந்து வந்த செய்தியானது சந்தனக்கடத்தல் வீரப்பன் வழக்கில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள மீசை மாதையன் (வயது 66), பிலவேந்திரன் (வயது 62), ஞானப்பிரகாஷ் (வயது 56), சைமன் (வயது 46) ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்துவிட்டார் என்பதாக இருந்தது. இது பெருத்த அதிர்ச்சியினை ஏற்படுத்திய ஒன்று. சமீபத்தில் நிகழ்ந்தேறிய ரகசிய தூக்கு தண்டனையான கசாப், பின்னர் அப்சல் குரு என மரண தண்டனையினை தனது அரசின் சாதனையாக காட்டும் மத்திய அரசின் உள் துறை அமைச்சகம், புதிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் செயலினை காஷ்மீர் முதல்வர் உள்ளிட்ட பலர் 'இஸ்லாம் பிரிவினர் குறிவைக்கப்படுகின்றனர்' என விமர்சனம் எழுப்பிய ஒரு சில நாட்களில் இந்த நால்வரின் மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாக அணி திரண்டு குரல் எழுப்பும் சக்தியோ அல்லது கர்நாடக மாநிலத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான விவாதமோ எழுப்ப சக்தியற்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழக எல்லையோர கர்நாடக கிராமத்தினைச் சார்ந்த தமிழர்களான இந்த நால்வரின் உயிரினைக் காக்க நமது சனநாயக சமூகம் தன்னை எப்படி தயார் செய்யப் போகின்றது என்பதே பெருத்த கவலையாக உள்ளது. மரண தண்டனைக்காக நாடு முழுதும் திரளும் எதிர்ப்பு - தேவேந்தர் சிங் புல்லரின் காலதாமதமாக கருணை மனு தள்ளுபடி செய்ததால் தனக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்து பயங்கரவாதிகளுக்கு கருணை காட்ட முடியாது என முடிவு செய்யப்பட்ட நிலையில் - அதே போன்ற வழக்கு பொருண்மையை உடைய ராஜீவ் காந்தி வழக்கில் தண்டனையை எதிர் நோக்கியிருப்பவர்களாகட்டும் அல்லது வீரப்பன் பாலாறு குண்டு வெடிப்பு வழக்கில் மரண தண்டனை பெற்ற நால்வரின் எதிர் காலமாகட்டும் கேள்விக்குறியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர், புல்லரின் உயிர் காக்க வேண்டி பாரதப் பிரதமரை சந்தித்துள்ளார். பஞ்சாப்பியர்கள் ஒன்று திரண்டு புல்லரை காப்பாற்ற குரல் கொடுக்கும் சாத்தியம் உள்ளது. அதே போன்று தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மாநில அரசின் மரண தண்டனைக்கு எதிரன கொள்கையை வெளிப்படுத்துகிறது. மாநில அமைச்சரவையின் தீர்மானம் ஆளுனர் வழியே பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் உயிரைக் காக்கும் என நம்பலாம். ஆனால் கர்நாடகாவில் வீரப்பன் வழக்கில் உள்ளோருக்கு குரல் கொடுக்க அம் மாநில அரசியல் அரங்கில் யார் முன் வரப்போகின்றனர் என்ற நியாயமான கவலையினை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.

1993 ஆண்டு ஏப்ரல் 8 ஆம் நாள் வீரப்பன் தனது எதிரியான மேட்டூர் தாலுக்கா கோவிந்தபாடி கிராமத்தை சார்ந்த பண்டரி என்பவரை கொலை செய்துவிட்டு காவல் துறை கண்கானிப்பாளரான கோபாலகிருஷ்ணன் என்பருக்கு தன்னை காட்டில் வந்து பிடித்துப் பார் என சவால் விட்டுச் சென்றதின் தொடர்ச்சியாக அடுத்த நாள் இரண்டு பேருந்துகளில் கர்நாடக காட்டுப் பகுதிக்கு சென்ற காவல் துறை வாகனம் ஒன்று கண்ணிவெடி தாக்குதலுக்கு இலக்காகி அதில் தமிழக போலிசார் ஐந்து பேர்களும், வனத்துறை காவலர்கள் இருவரும், போலிசாருடன் வந்த வழிகாட்டிகள் என கூறப்பட்ட பொதுமக்கள் பதினைந்து பேர்கள் ஆக 22 பேர் இறந்த வழக்கானது பாலாறு குண்டு வெடிப்பு வழக்கு என கூறப்பட்டது. இந்த நிகழ்வுக்கு இரண்டு நாள் கழித்து தமிழக கர்நாடக காவல் துறையினர் இணைந்து கூட்டு சிறப்பு அதிரடிபடையினை ஏற்படுத்தினர். தடா சட்டத்தின் கீழ் 76 நபர்கள் இவ் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். சட்டவிரோத காவல், சித்திரவதை, பாலியல் வன்முறை, போலி மோதல் சாவுகள், பொய் வழக்குகள் என அரச வன்முறை தலைவிரித்தாடியது.

தன்னை தற்காத்துக்கொள்ள வாய்ப்புகளற்ற நிலையில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட பலர் அப்பாவிகள். இதே வீரப்பன் வழக்கில் போடப்பட்ட தடா சட்டப்பிரிவினை உச்ச நீதிமன்றம் கர்த்தார் சிங் என்ற வழக்கில் கூறிய வழிகாட்டுதல் படி 1996 ஆம் ஆண்டுகளில் தமிழ் நாடு அரசு திரும்பப் பெற்றது. ஆனால் கர்நாடக அரசு தடா பிரிவினை நீக்க மறுத்துவிட்டது. இதற்கு அன்றைய மாநிலங்களுக்கிடையே இருந்த உறவு மற்றும் அரசியல் காரணங்கள் முக்கியமானதாக இருந்தது. மனித உரிமை செயல் பாட்டாளர்கள் கர்நாடகம் தடா சட்டப்பிரிவினை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வழி இணைந்து செயல்படத் துவங்கினர். மறுபுறம் வீரப்பனின் சாகசங்கள், காவல் துறையின் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தன.

பாலாறு குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையில் ஒரு சேர வரிசையாக நின்ற மீசை மாதையன், பிலவேந்தரன், ஞானபிரகசம் ஆகியோரையும் சைமனையும் குண்டு வெடிப்பு சமயம் பார்த்ததாக நீதிமன்றத்தில் காவல் துறை அதிகாரி கோபாலகிருஷ்ணன் சாட்சியமளித்தார். இதற்கிடையே கன்னடக நடிகர் ராஜ்குமாரை கடத்தி கர்நாடக சிறையில் உள்ள தடா கைதிகளை விடுவிக்க அரசை வீரப்பன் நிர்பந்தப்படுத்தினார். வீரப்பனால் கொல்லப்பட்ட சகீல் அகமது என்பவரின் தந்தை அப்துல் கரீம் தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தடா கைதிகளின் விடுதலையினை கடுமையாக சாடி தடுத்தது.

இறுதியில் 2001 ஆண்டு மைசூர் தடா நீதிமன்றம் காவல்துறை அதிகாரி கோபாலகிருஷ்ணனின் சாட்சியத்தை ஏற்று மேற்கண்ட நால்வர் உட்பட ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இது அரிதிலும் அரிதான வழக்கு என்று கருதலாம் என்றாலும் முக்கிய குற்றவாளியான வீரப்பன் வெளியே இருக்கும் நிலையில் சந்தர்ப்ப சூழலில் சிக்குண்டவர்களுக்கு மரண தண்டனை தரக்கூடாது என நீதிமன்றம் கருதியது. பெரும்பாலானவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். தடா வழக்கு என்பதால் முதல் மேல் முறையீட்டினை நேரிடையாக உச்ச நீதிமன்றத்தில்தான் செய்ய முடியும். நால்வரும் தங்களின் ஆயுள் தண்டனையினை குறைக்க வேண்டி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அச் சமயத்தில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சபர்பால் மற்றும் அகர்வால் கொண்ட பெஞ்சில் ஒரு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் ஆயுள் தண்டனையினை குறைக்க வேண்டும் என மேல்முறையீடு செய்தவர்களிடம் உங்களுக்கு ஏன் தூக்கு தண்டனை தரக்கூடாது? என கேள்வி எழுப்பினர்.

அந்த சமயம் கர்நாடக அரசு கூட அது போன்ற கோரிக்கை வைத்திருக்கவில்லை. நீதிமன்றம் இது போன்று கேள்வி எழுப்பிய பின்னரே அது ஆயுள் தண்டனையை மரண தண்டனையாக உயர்த்தவேண்டும் எனவும் அக் கோரிக்கையினை காலதாமதமாக எழுப்புவதற்காக பொறுத்தருள மனுவும் தாக்கல் செய்தது. ஆனால் கர்நாடக அரசின் வேண்டுகோளை நிராகரித்து அதன் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

அதன் பின்னர் அதே நீதிபதிகள் 2004 ஜனவரி மாதம் மரண தண்டனையாக உயர்த்தி தீர்ப்பு வழங்கினர். பொதுவாக ஆயுள் தண்டனையைக் குறைக்க மேல் முறையீடு வரும் மனுக்களில் தண்டனை அதிகரிப்பை உச்ச நீதிமன்றம் செய்வதில்லை என்றும், வீரப்பன் சட்டத்தின் ஆட்சிக்கு அச்சுறுத்தலாக உள்ள நிலையில் இந்த வழக்கில் மரண தண்டனை வழங்காவிட்டால் நீதிமன்றத்தின் மனசாட்சி உலுக்கப்பட்டுவிடும் என காரணம் கூறியிருந்தனர். ஆக நால்வரின் தீர்ப்பு வழியே நீதிமன்றம் வீரப்பனுக்கு கடுமையான செய்தியினை வெளிப்படுத்தியது. அல்லது அச் செய்தியினை கொண்டு சேர்க்கும் வாய்ப்பாக நால்வரின் உயிர் மாற்றப்பட்டது. அதற்கு மேல் அம்பலம் ஏற முடியாத இந்த ஏழைகள் 2004 பிப்ரவரியில் குடியரசுத் தலைவருக்கு தங்களின் தண்டனையினைக் குறைக்க வேண்டி கருணை மனுவினை தாக்கல் செய்தனர்.

அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், 2005ம் ஆண்டு நால்வரின் மனு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்த மூவரின் கருணை மனு உட்பட 20 மனுக்களுக்கு கருணையினை நிராகரித்து மரண தண்டனை வழங்க பரிந்துரை செய்திருந்த மத்திய அமைச்சகத்தின் அறிவுரைக்கு மாறாக, மீண்டும் கீழ்க் கண்ட காரணங்களை கணக்கில் கொண்டு கருனை மனுக்களை பரிசீலிக்கக் கேட்டு திருப்பி அனுப்பினார்.

1. உள் துறை அமைச்சகம் கருணை மனுவை நிராகரிக்க பரிந்துரை செய்வதற்கு முன் மரண தண்டனை சிறைவாசியின் சமூக நிலையை கணக்கில் கொள்ளவில்லை

2. கருணை மனுக்களின் சட்டப் பிரச்சனையினை மனிதாபிமானம் மற்றும் கருணையுடன் பரிசீலிக்க வேண்டும். மரண தண்டனை எதிர்நோக்கும் நபரின் வயது, உடல் மற்றும் மனநிலை பாதிப்பு வயது கணக்கில் கொள்ளவேண்டும்

3. குடியரசுத் தலைவர் ஆயுள் தண்டனை வழங்கினால் மீண்டும் தன்னை குற்றச் செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ளக் கூடியவர்களா? என்பது காணப்படவேண்டும்

4. சம்மந்தப்பட்ட கைதியின் குடும்ப பொருளாதார நிலை ஆய்வு செய்யப்படவேண்டும்

5. குற்றத்தின் தன்மையினைக் காட்டிலும் சிறைவாழ்க்கையில் அந்த நபரின் நடத்தை ஆய்வு செய்யப்பட வேண்டும்

மேற்கண்ட காரணிகள் அடிப்படையில் கருனை மனுக்களை தனக்கு பரிந்துரை செய்ய அவர் கோப்பினை திருப்பி அனுப்பினார். ஆக இயந்திரகதியில் மரண தண்டனை சிறைவாசிகளின் கருணை மனுக்களை மத்திய அமைச்சகம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தெளிவானது.

கருணை வழங்கும் அதிகாரத்தினை இந்திய அரசியமைப்புச் சட்டம் முறையே குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுனருக்கு பிரிவு 72 மற்றும் 161 மூலம் வழங்கியுள்ளது. இந்த அதிகாரம் என்பது மன்னருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மிச்சங்களாகும். இருவருக்கும் சம அதிகாரம் உள்ளது, ஆனால் இவர்கள் தனித்து செயல் பட முடியாதவர்கள். மத்திய அமைச்சகத்திற்கு குடியரசுத் தலைவரும், மாநில அமைச்சரவைக்கு ஆளுனரும் கட்டுப்பட்டவர்கள். ஒருமுறை திருப்பி அனுப்பப்படும் பரிந்துரையினை மீண்டும் அமைச்சகம் அனுப்பினால் குடியரசுத் தலைவர் அதனை ஏற்றே தீர வேண்டும். மரண தண்டனை வழங்க பரிந்துரை செய்த அமைச்சகத்தின் மனுக்கள் மீது குடியரசுத்வ்தலைவர் முடிவு எடுக்காது கிடப்பில் போட்டு தன் விருப்பமின்மையினை காட்ட முடியும். ஆக குடியரசுத்தலைவர் கிடப்பில் போட்ட மனுக்கள் என்பது மரண தண்டனைக்கு எதிரான கருத்தின் வெளிப்பாடு ஆகும்.

உச்ச நீதிமன்றத்தில் நால்வரின் வழக்கு இருந்த சமயம் வீரப்பன் உயிருடனிருந்தார். மேலும் 2003 ஆண்டு நிறைவடைந்த அதிரடிப் படையின் அத்துமீறல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி சதாசிவா விசாரணைக் குழு அறிக்கை தேசிய மனித உரிமை ஆணையத்தில் கிடப்பில் போடப்பட்டு 2006ம் ஆண்டே வெளியிடப்பட்டது. மேலும் சமூக பொருளாதார ரீதியில் ஏழ்மையான குடும்பத்தில் நால்வரும் பிறந்தவர்கள். பெரும்பாலும் வயதானவர்கள். சைமன் தவிர பிறர் திருமணமானவர்கள். அனைவரும் 20 ஆண்டுகள் சிறையில் ஓர் ஆயுள் தண்டனையினை அனுபவித்து முடித்துள்ளவர்கள். உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டவர்கள். தொடர் சிறைவாசத்தில் உறவுகளைக்கூட அடிக்கடி சந்திக்க வாய்பின்றி மைசூரிலிருந்து சிறை மாற்றம் செய்யப்பட்டு கர்நாடகாவின் மகாராஷ்ரா எல்லையில் உள்ள பெல்காம் மத்திய சிறையில் வாடுகின்றனர்.

வீரப்பன் கொல்லப்பட்ட நிலையில், மலையோர கிராமங்களில் இயல்பு நிலை திரும்பிய சூழலில் இந்த உலகின் ஒரு மூலையில் மரணதண்டனை சிறைவாசிகள் உயிர் வாழ்வதால் சமூகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. சிறையில் நன்னடத்தையுடன் நடந்து கொண்ட இம் மனிதர்கள் அணைவரும் உயிர் வாழும் உரிமை படைத்தவர்கள்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் கருணை மனுக்களை பரிசீலிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை வைத்து மட்டும் பயங்கரவாதிகளுக்கு கருணை காட்டமுடியாது என தேவேந்திர பால் சிங் புல்லர் வழக்கில் மரண தண்டனையை உறுதி செய்தது. இது மரண தண்டனைக்கு எதிரான செயல்பாடுகளுக்கு பின்னடைவு என கருத வேண்டியுள்ளது. பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்ற சொல்லாடல்களின் பாதிப்புக்கு உச்ச நீதிமன்றமும் விதிவிலக்காக இல்லை. மரண தண்டனை கைதிகளின் சமூக மதிப்பீடுகளை வைத்து அவர்களின் உயிர்வாழ்தல் முடிவு செய்யப்படுகின்றது.

மறைந்த மனித உரிமைப் போராளியும் வழக்குரைஞருமான கே.ஜி.கண்ணபிரான் ஒரு முறை நக்சல்பாரி கைதிகளுக்காக அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பொறுமையிழந்த நீதிபதி, அரசியலமைப்பின் மீது நம்பிக்கையில்லாத நக்சல்பாரிகளுக்காக எதற்காக அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டி வாதிடுகின்றீர்கள் எனக் கேட்டார். அதற்கு கண்ணபிரான், 'நீதிபதி அவர்களே நக்சல்பாரிகளுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளதா இல்லையா? என்பதல்ல பிரச்சனை. நீதிமன்றத்திற்கு அதன் மீது நம்பிக்கை உள்ளதா என்பதே பிரச்சனை' என்றார். வாழ்வதா சாவதா என்பது விருப்பு வெறுப்புகள் அடிப்படையில் முடிவு செய்வதாக இருக்கக் கூடாது.

சனநாயகப் பண்பு தழைக்க மரண தண்டனைக்கு எதிராக செயல்பட மாநில எல்லைகளைத் தாண்டி நமது நாட்டின் அதிகார மையங்களை நிர்பந்திப்போம்.

நன்றி: புதிய தரிசனம் (மே 1-15) இதழ்

- ச.பாலமுருகன்

Pin It