ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டு விட்டது. மாணவர்களின் எழுச்சியைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டிருந்த காலவரையற்ற விடுமுறை முடிவுக்கு வந்து கல்லூரிகள் தொடங்கி விட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் ஈழத் தமிழருக்கு விளையப் போகும் நன்மை என்ன? மாணவர் போராட்டம் எப்படித் தொடரப் போகின்றது? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. 

முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிடாத போராட்டம்:

2008 – 2009 ஆம் ஆண்டுகளில் இந்த நூற்றாண்டின் மாபெரும் இனப்படுகொலையைத் தமிழ்ச் சமூகம் சந்தித்தது. ஈழத் தமிழர் மீதான இன அழிப்புப் போர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது.ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதோடுதமிழீழ விடுதலைக்கான 60 ஆண்டுகாலப் போராட்டத்தைச் சிதைத்தது இலங்கை அரசு. அப்போரை உலக நாடுகள் ஆதரித்து உதவியும் வேடிக்கைப் பார்த்தும் நின்றன. போரை நிறுத்தக் கோரி தமிழகம் மேற்கொண்ட போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே இலங்கை அரசுக்கு அனைத்து வகையான உதவிகளையும் இந்திய அரசு செய்தது.

போர் முடித்த பிறகு இனக்கொலைச் செய்த சிங்கள அரசு ஈழத்தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை எல்லாம் சிங்களமயமாக்கி வருகின்றது.வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்திய ஈழத் தமிழர்கள் இன்று மூச்சுவிடக் கூட வழியின்றி சிங்கள இராணுவப் பிடியில் சிக்கியுள்ளனர். வடக்கு பகுதியில் மட்டும் 2 இலட்சம் சிங்கள இராணுவத்தினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். தமிழர் தாயக பகுதிகளான இலங்கையின் வடக்கு,கிழக்கு பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றிக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு. தமிழர் அடையாளங்களை அழித்து,தமிழர் நிலத்தை பறித்துஇன அழிப்பை முடிக்க வேகமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறது சிங்கள அரசு.ஈழத்தில் கட்டமைப்புரீதியான இனப்படுகொலை இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்னொருபுறம் தமிழ்நாட்டுத் தமிழர்களும் புலம் பெயர் வாழ் தமிழர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பொறுப்புணர்வோடு களம் இறங்கி இருக்கின்றனர்.இது சிங்கள அரசின் கொக்கரிப்புக்கு சவாலாகி இருக்கின்றது.புலம்பெயர் வாழ் தமிழர்கள் சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் அளப்பெரும் பணியாற்றி வருகின்றனர். போர்க்குற்ற ஆவணங்களையே போர்க் கருவியாகக் கொண்டு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைத் தமிழரின் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். இது சர்வதேச நாடுகளைத் தன் பக்கம் வைத்துக் கொள்ள பெருமளவில் பணத்தையும் உழைப்பையும் செலுத்த வேண்டிய நிலைக்கு இலங்கை அரசைத் தள்ளியுள்ளது.

இனப்படுகொலையைத் தடுக்க முடியாத குற்றவுணர்ச்சியுடன் தமிழகம் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு துணை நிற்கும் தன்னுடைய வரலாற்றுக் கடமையை முன்னெப்போதும் இல்லாத அளவில் செய்து கொண்டிருக்கின்றது.இனப்படுகொலைக்கு துணை நின்றதோடு இன்று வரை இலங்கை அரசைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு தமிழகம் போராடிக் கொண்டிருக்கின்றது.

சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக எழுந்து நிற்பதற்கானத் தருணத்தை எதிர்பார்த்து ஈழத் தமிழர்கள் காத்திருக்கின்றனர்.இன அழிப்புப் போரின் அவலத்தில் இருந்தும் இழப்புகளிலிருந்தும் மெல்ல மீண்டு வந்து இன அழிப்புக்கு எதிராகப் போராடுவதற்கு புலம்பெயர்வாழ் தமிழர்கள்,தமிழ்நாட்டுத் தமிழர்களின் போராட்டம் துணை செய்து கொண்டிருக்கின்றது.

2013 இல் மாணவர் எழுச்சி:

முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து நான்கு ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் 13வயது மகன் பாலசந்திரன் கொல்லப்பட்ட புகைப்படம் வெளியானது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானம் வரப்போவதாக செய்தி வந்தது. தமிழ்நாட்டு மக்களின் கொந்தளிப்பின் வெளிப்பாடாக தமிழக மாணவர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களின் போராட்டம் பெருந்தீயாகப் பற்றி எரிந்தது.அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் பன்னாட்டுப் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தவில்லை.இலங்கை அரசே கொண்டு வந்த கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க குழுவின் பரிந்துரைகளை  (LLRC)முன் வைத்தது. அந்த தீர்மானத்தை மேலும் சீர்குலைப்பதில் இந்திய அரசின் பேருதவியுடன் சிங்கள அரசு வெற்றிப் பெற்றது.இறுதியாக சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தாத மற்றும் இலங்கை அரசு நடத்தி வரும் கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலையை நடத்தி முடிப்பதற்கான கால அவகாசத்தைக் கொடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் மாணவர் போராட்டம் தமிழகத்தின் பல்வேறு தரப்பு மக்களை போராட்டக் களத்திற்கு இழுத்து வந்தது. பன்னாட்டு இனப்படுகொலை விசாரணை, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்புக் கோரிக்கை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம்எடுத்துச் செல்லப்பட்டது.இதன் வெற்றியாக, ’தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த 9 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்து காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க., காங்கிரசு தலைமையிலான மத்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை எதிர்த்து கூட்டணியில் இருந்து வெளியேறியது.   ஆனால், இந்திய அரசு தன் நிலைப்பாட்டில் இருந்து கொஞ்சமும் மாறியதாக தெரியவில்லை.

ஈழ விடுதலைக்கு தடையாய் இந்தியாவென்னும் பெருஞ்சுவர்:

தமிழினப்படுகொலை செய்து வரும் சிங்கள அரசுக்கு ஆதரவை அளித்து வருகின்றது இந்திய அரசு. ஈழத்தில் உள்ள தமிழர்களின் ஒட்டுமொத்த அடையாளமும் அழிந்து போய் விடும் அபாயம் நிலவுகின்றது. தெற்காசியாவில் உள்ள மிகப் பெரும் நாடாகவும், 7 கோடி தமிழர்களைக் கொண்ட நாடாகவும் இந்தியா விளங்கிக் கொண்டிருப்பதால் இந்தியாவின் இசைவின்றி ஈழத் தமிழர் தொடர்பான எந்த ஒரு சர்வதேச நகர்வும் நடப்பது இல்லை. சர்வ தேச நாடுகளின் ஆதரவை திரட்டும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சியும் இந்தியா என்னும் முட்டுச் சந்தில் வந்து நிற்கின்றது. ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு தடையாக இந்திய அரசின் வெளியுறவுத்துறை கொள்கை விளங்குகின்றது. 

இந்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை மாற்றி தமிழீழ விடுதலைக்கானத் தடைகளை உடைப்பதே ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிக முக்கிய புவிசார் அரசியலாக இருக்கின்றது.இந்த பணியைச் செய்து முடிக்கும் கடமை தமிழ்நாட்டு மக்களிடம் தான் இருக்கின்றது. அந்த கடமையை நிறைவேற்றுவதற்கான முதன்மை பொறுப்பை வரலாறு தமிழ்நாட்டு மாணவர்களிடம் கையளித்து இருப்பதாகவே நாங்கள் உணர்கிறோம்.

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு:

மார்ச் மாதத்தில் தமிழகத்தைச் சூழ்ந்த போராட்ட மேகம் இலயோலா கல்லூரி மாணவர்கள் முன்னெடுத்த பட்டினிப் போராட்டத்தில் இருந்து மின்னலுடன் இடிக்கத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மார்ச் 13ஆம் தேதி    இந்திய அரசின் தமிழர் விரோத போக்கை கண்டிக்கும் விதமாக சென்னையில் உள்ள மத்திய அரசின் வருமான வரி அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.இம்முற்றுகையில் சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்.  அதிலிருந்து போராட்டக் களத்தில் இறங்கிய பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களோடு இணைந்து போராட்டத்தைத் தொடர்ந்து முன் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு மார்ச் 14ஆம் தேதி உருவாக்கப்பட்டது. அன்றளவில் 15மாவட்டங்களைச் சேர்ந்த மாணவப் பிரதிநிதிகள் மாணவர் போராட்டக் குழுவில் இருந்தனர்.

இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரனையை வலியுறுத்தியும்,தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தும் தீர்மானத்தைக் கொண்டு வரக் கோரியும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரியும் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவின் சார்பாக மார்ச் 18 ஆம் தேதி முதல் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டமும் மத்திய அரசு அலுவலகங்களை  முற்றுகையிடும் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு அனைத்துக் கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை அறிவித்தது. கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலும் மார்ச் 18ஆம் தேதி அன்று பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர் போராட்டம் தீவிரமடைந்தது. சென்னையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடப்பட்டது. தொடர்ச்சியாக மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை, மாணவர் பேரணி என்று நாள்தோறும் போராட்டம் வளர்ந்தது.இந்த வரிசையில் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் இராணுவ தலைமையகம் மற்றும் அகில இந்திய வானொலி நிலையத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.இந்த போராட்டங்களின் துணையோடு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து உள்ளோம்.

 நீண்ட காலப் போராட்டத்திற்கு தயாராகும் தேவை:

சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை,தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்ற கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கானப் போராட்டத்தை தொடர வேண்டும்.இப்போது வந்துள்ள மாணவர் பேரெழுச்சி மழை போல் மண்ணில் சரிந்து விழாமல் ஓயாத அலைகளாய் மீண்டும் மீண்டும் எழ வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியமே தமிழீழ விடுதலைக்கு துணை செய்யும்.அதற்கு தன்னெழுச்சியான மாணவர் போராட்டத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட நீடித்த போராட்டமாக வளர்தெடுக்க மாணவர்கள் தம்மை அமைப்பாய் உருத்திரட்டிக் கொள்ள வேண்டும் என்று கருதுகின்றோம். 60 ஆண்டு காலமாக நீளும் ஈழப் போராட்டத்தின் ஆழ அகலத்தைப் கற்றுக் கொண்டு நீண்ட காலப் போராட்டத்திற்கு எம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தொடக்கம் முதல் இன்று வரை ஆதரித்தும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்தும் வருகின்ற தமிழகத்தின் அறம் சார்ந்த அரசியல் தொடர்ச்சியாக எங்கள் போராட்டத்தை வார்த்தெடுக்க உறுதி கொள்கிறோம். 

தமிழ்நாட்டு மீனவர் மீதான தாக்குதல்:

இந்திய அரசின் சிங்கள ஆதரவு வெளியுறவுக் கொள்கை இலங்கை தீவோடு நின்றுவிடவில்லை.தமிழ்நாட்டு மீனவர்கள் நடுக்கடலில் வைத்துச் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதும் தாக்கப்படுவதும் சிறைப்படுத்தப்படுவதும் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றது. இது வரை 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 75 மீனவர்கள் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்திய அரசு இலங்கையை நட்பு நாடு என்று வெட்கமின்றி சொல்வதோடு மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் இது நேர்கின்றது என்று சிங்களக் கடற்படையின் இனவெறித் தாக்குதலை நியாயப்படுத்திப் பேசி கொண்டிருக்கின்றது.

ஈழத் தமிழ் அகதிகளின் நிலை:

இது மட்டுமல்ல, இந்திய அரசின் சிங்கள ஆதரவுக் கொள்கை இனப்படுகொலை அரசின் பிடியில் இருந்து தப்பித் தாய்த்தமிழகம் வந்த ஈழத் தமிழர்களையும் விட்டுவைக்கவில்லை. மத்திய,மாநில அரசுகள் தமிழீழ அகதிகளை ’அகதிகள் முகாம்’ என்ற பெயரிலே திறந்தவெளி சிறைக்கூடத்தில் அடைத்து வைத்திருக்கின்றன. மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று அறியப்படும் இந்திய அரசு அகதிகளுக்கான சர்வதேச விதிமுறைகளிலே இதுவரை கையெழுத்திடவில்லை. அதுமட்டுமல்ல சட்டவிரோத முறையில் சிறப்பு முகாம்கள் என்ற பெயரிலே செங்கல்பட்டிலும்,பூந்தமல்லியிலும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவரைக்கூட காவல் துறையின் கண்கானிப்பின் கீழ் அடைத்து வைத்திருக்கிறது தமிழக அரசு.முகாம்களில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத காரணத்தினாலும், வாழ்வதற்கு வழி இல்லாமலும் தமிழகத்தை விட்டும் தமிழீழ மக்கள் வெளிநாடுகளுக்கு வெளியேறுகின்றனர்.

இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையால் வஞ்சிக்கப்பட்டு வரும் மீனவர்களோடும் தமிழகத்தில் அகதிகளாக வாடும் ஈழத் தமிழர்களோடும் கரம் கோர்த்து நமது போராட்டத்தை வலுப்படுத்த இருக்கின்றோம்.உணர்வெழுச்சியால் பொங்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர்களையும் நோக்கிச் செல்வோம்.

  • இனவெறி இலங்கை அரசை ஆதரித்து நிற்கும் இந்திய அரசின் கொள்கையை மாற்றி அமைக்க உறுதி ஏற்போம்!
  • சிங்களப் பேரினவாத இலங்கை அரசைப் அரசியல், பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் புறக்கணிப்போம்!
  • தமிழக அளவில் மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தைத் தொடர்வோம்!
  • மீனவர்கள், ஈழத் தமிழ் அகதிகள், தொழிலாளர்களோடு இணைந்து நின்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுசேர்ப்போம்!

கோரிக்கைகள்:

இந்திய அரசே!

  1. இலங்கையில் நடந்தது தமிழினப்படுகொலை என்று அங்கீகரி!
  2. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தி இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிடு!
  3. இனப்படுகொலை செய்த சிங்கள அரசு மீது பொருளாதார தடை விதித்திடு!
  4. தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கிடு!

தமிழக அரசே!

  1. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் வழி நின்று தமிழகத்திற்குள் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதித்திடு!இலங்கை தூதரகத்தை தமிழகத்தில் இருந்து அகற்றிடு!
  2. இலங்கை அரசுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க கோரி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடு!
  3. பூந்தமல்லியிலும் செங்கல்பட்டிலும் உள்ள சட்டவிரோத வதை முகாம்களை உடனடியாக களைத்திடு!

 

முள்ளிவாய்க்கால் நான்காம் ஆண்டு நினைவு நாள்       மே1இல் தமிழகம் தழுவிய அளவில் பேரணி, பொதுக்கூட்டம்

வாரம்

பிரச்சார இயக்கம்

ஏப்ரல் 15 – ஏப்ரல் 21 வரை

’இலங்கையைப் புறக்கணிப்போம்’ என்ற முழக்கத்தின் கீழ் இலங்கை தூதரகம் வெளியேற்றுதல், ஐபிஎல் போட்டிகள், காமன் வெல்த் மாநாடு புறக்கணித்தல் உள்ளிட்டவற்றைக் கோரி பரப்புரை.

ஏப்ரல் 22 முதல் ஏப்ரல் 28 வரை

சிறப்பு முகாம்களைக் களைக்கக் கோரியும், இரட்டை குடியுரிமை வழங்கக் கோரியும் தமிழீழ அகதி முகாம்களை நோக்கிய மாணவர் பரப்புரை

ஏப்ரல் 29 முதல் மே 5 வரை

மீனவர்கள் மற்றும் தொழிலாளர்களை நோக்கியப் பரப்புரை

மே 6 முதல் மே 18 வரை

இந்திய அரசின் தமிழின விரோத கொள்கையைக் கண்டித்தும் நமது கோரிக்கைகளை வலியுறுத்தியும் பரப்புரை

மே 19

மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் பேரணி, பொதுக் கூட்டங்கள்

      

தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக்குழு

தொடர்புக்கு: திவ்யா 9551629055, இளையராஜா: 9500044452, பெருமாள்: 8807322832

Pin It