கடந்த 1981 ஆம் ஆண்டு ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரின் கனவு திட்டமாக அறிவிக்கப்பட்டு  கடந்த 32 ஆண்டுகளாகப் பேசப்பட்டு வரும் உலகத்தமிழ் சங்கத்தின் பணிகளுக்கான  முதல் செங்கல் கூட வைக்கப்படாமல் பணிகள் இன்னும் இழுத்தடிக்கப்பட்டு வருவது தமிழ் அறிஞர்கள் மத்தியில் பெரும் வேதனையை உருவாக்கியுள்ளது.

மதுரையில் கடந்த 1981 ஆம் ஆண்டு ஜனவரி 4 ம் தேதி ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டினை அப்போதைய  முதல்வர் எம்.ஜி.ஆர் தலைமை வகித்து நடத்தினர். ஆளுநராக இருந்த சாதிக் அலி துவக்கி வைத்தார்.

இந்த மாநாடு யுனெ°கோ அமைப்புடன் இணைந்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி அமைப்பின் கீழ் நடத்தப்பட்டது. இதற்காக  தமிழக   அரசு சார்பில் 10 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதில் 9 கோடி ரூபாய் மதுரை நகரில் நிரந்தர வசதிகளுக்காகவே செலவிடப்பட்டது. மதுரை திருமலை நாயக்கர் மகாலில் ஒளி-ஒலி காட்சி துவக்கிவைக்கப்பட்டது.

உலகத் தமிழ்ச் சங்கத்திற்கான அறிவிப்பு

இம்மாநாட்டுக்காக மதுரை நகர் முழுவதும் தமிழ் வளர்த்த அறிஞர்களின் சிலைகளும் நிறுவப்பட்டன.  நகர் முழுவதும் அமைக்கப்பட்ட தோரண வளைவுகளுக்கு மட்டும் ஏழு லட்ச ரூபாய் செலவிடப்பட்டது. நக்கீரர் தோரண வாயில்,  சேரன் நுழைவு வாயில், சோழன் நுழைவு வாயில் ஆகியவை அமைக்கப்பட்டன.துவக்க விழாவில் தலைமை வகித்து பேசிய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்.,மதுரையில் உலக தமிழ்ச்சங்கம் நிறுவப்படும் என்று அறிவித்தார்.பல ஆண்டுகளாக அவர் ஆட்சியில் இருந்தாலும் உலகத்தமிழ்ச் சங்கம் மதுரையில் நிறுவப்படவில்லை.

திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது,கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில்,மதுரையில் தல்லாகுளம் பகுதியில்,14.15ஏக்கர் நிலத்தில், 'தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் சங்கம்' அமைத்து, தமிழகத்தின் கலை, இலக்கியம், பண் பாட்டு உயர்நிலை விளக் கும் காட்சியகம் அமைக் கப்படும். இங்கு,தமிழ் ஆய்வு அரங்கம் அமைக் கப்பட்டு,அதில் சங்கப்புலவர்கள் மற்றும் தமிழ்ச் சான்றோரின் சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.இதற்காக 100கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.ஆனால்,அவரது ஆட்சி காலத்திலும் அது அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, மதுரையில் உலத்தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.இதற்காக உலகத்தமிழ்ச் சங்கம் புதுப்பொலிவோடும்,சிறப்போடும் அமைக்கப்பட அலுவலகப் பணியமைப்பைத் தோற்றுவித்து ரூ.100 கோடி சிறப்பு நிதி-நிதிமாற்றம் செய்து கடந்த 12.7.2012 அன்று அரசாணை(எண்:234) வெளியிடப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழித் தொல்காப்பியர் பேரவையின் தமிழ் வளர்ச்சி பணிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.100கோடி சிறப்பு நிதியை(வட்டி தரக்கூடிய பொதுவைப்புக் கணக்கில் வைக்கப்பட்ட ரூ.7கோடி மற்றும் வட்டியில்லா பொதுவைப்புக் கணக்கில் வைக்கப்பட்ட ரூ.25 கோடி) உலகத்தமிழ்ச் சங்கம், மதுரை என்ற பெயரில் நிதிமாற்றம் செய்து இந்த ஆணை வெளியிடப்பட்டது.

தமிழ்ச்சங்கத்தின் நோக்கம்

உலக நாடுகளில் இயங்கி வரும் அனைத்துத் தமிழ்ச்சங்கங்களின் அமைப்புகள்,நிறுவனங்கள்,தமிழ் ஆராய்ச்சி மேற்கொள்ளும் நிறுவனங்கள் குறித்த விவரங்களைத் தொகுத்தல், தொகுக்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் உலகெங்கும் இயங்கி வரும் இவ்வமைப்புகளை ஒருகுடையின் கீழ் பதிவு செய்து ஒருங்கிணைத்து கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குதல், தமிழறிஞர்கள், கலைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பித் தமிழ்மொழி இலக்கியம், பண்பாடு பற்றி விளக்கிக் கூறச்செய்தல், தமிழர் பெரும் எண்ணிக்கையில் வாழும் அயல் நாடுகளுக்கு ஆய்வாளர்களை அனுப்பி அங்குள்ள தமிழர் நிலையினை ஆய்தல்,பிறநாட்டுத் தமிழர் பற்றி களஞ்சியம் ஒன்றைத் தயாரித்து வெளியிடுதல் என்பது உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுடன் இந்த உலகத்தமிழ்ச்சங்கம் அமைக்கப்படுவதாக கூறப்பட்டது.

தனி அலுவலகம் கிடையாது

ஆனால், உலகமெங்கும் இருக்கும் தமிழர்களை ஒருங்கிணைக்க, உலகத்தமிழ்ச் சங்கத்திற்கு மதுரையில் ஒரு அலுவலகம் கிடையாது.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மாவட்ட திட்ட அலுவலகத்தின் மாடியில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் தான் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது.   இந்த அலுவலகத்திற்கு தனி அதிகாரியாக மு.இராசேந்திரன் என்பவர் முதலில் நியமிக்கப்பட்டார். இதன் பின் இந்த பொறுப்பு என்பது தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் வசமே கடந்த ஓராண்டுக்கு மேலாக இருக்கிறது.பொறுப்பு அதிகாரி வசமே தற்போது உலகத்தமிழ்ச் சங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

உலகத்தமிழ்ச் சங்கத்தின் தொடக்க நிலைப் பணிகள் தடையின்றி அன்றாடம் மேற்கொள்ள  தனி அலுவலர், நிதி அலுவலர், கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் என 9 இடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், 3 பேர் தான் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.  உலகத்தமிழ்ச் சங்கம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலம் மதுரை சட்டக்கல்லூரி அருகே உள்ளது.இந்த இடத்தில் உலகத்தமிழ்ச்சங்கம் அமைக்கப்படும் என்று 1981ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால்,  14.4.1995-ல்

உலகத்தமிழ்ச் சங்கத்திற்கான நிலம் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டது.

இதுவரை சுற்றுச்சுவர் கூட எழுப்பப்படாமல் கிடக்கும் இந்த இடத்தில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இடிக்கப்படும் கட்டிடங்களின் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த நிலத்தின் ஒரு பகுதியாக உள்ள தல்லாகுளம் கிராமத்தில் ஏராளமான தலித் மக்கள் வசித்து வருகின்றனர். 14.15 ஏக்கர் நிலம் முழுவதும் அரசின் கட்டுப்பாட்டில் தற்போது முழுமையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்,    கட்டட வடிவமைப்பைத் தயார் செய்ய, ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. கடந்த மூன்றாண்டுகளில் குறைந்தது 1.5 கோடி ரூபாய் அளவில் பணி எடுத்து செய்திருக்க வேண்டும்.ஒவ்வொரு வேலையும் குறைந்தது 1கோடி ரூபாய்க்கு இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகளுடன் அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தில்  சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனமும், மதுரையைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்களும் பங்கேற்றுள்ளது. 

இந்த நிலையில்  ஏப்-6 ம் தேதி உலகத்தமிழ்ச் சங்கத்தின் முதல் நிர்வாகக் குழுக் கூட்டம் மதுரையில்அமைச்சர் வைகை செல்வன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில்,  நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளவேண்டிய புதிய திட்டங்கள் கட்டட வரைபடம் மதிப்பீடு, வெளிநாடு மற்றும் உள்நாட்டு தமிழ் அமைப்புகள் குறித்த விவரங்களை தொகுத்து நூலாக வெளியிடல், புலம்பெயர்ந்து அயலக தமிழர்கள் வாழ்வு நிலை குறித்து ஒரு தொகுப்பை உருவாக்கி நூலாக வெளியிடல்,அயலக தமிழர்களின் கலை,இலக்கியம் தமிழர்களின் இலக்கிய ஆய்வோடு இணைந்த பரிமாற்றம், தமிழ், தமிழர் வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம்,நாகரீகம் குறித்த உயர் ஆய்வு மையமாக உலகத் தமிழ்ச்சங்கம் விளங்க வேகமான நடவடிக்கைகள் மேற்கொள்ள  விவாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

25 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமான கலைநயத்துடன் கூடிய  கட்டடங்கள்  கட்டுவதற்கு முன் உலகத்தமிழ்ச் சங்கத்திற்கான தனி அலுவலகத்தையும்,தனி அலுவலரையும் நியமிக்க வேண்டும். ஏனெனில், இந்த அலுவலகம் எங்கு செயல்படுகிறது என்பதைத் தேடித்தான் பார்க்க வேண்டியுள்ளது.

-ப.கவிதா குமார்

Pin It