பெண்களின் மீதான வன்முறை என்ற சொல் நம் காதில் விழுந்தவுடன், குடிகாரக்கணவன் மனைவியின் கூலிப்பணத்தைக் கேட்டு அடித்து உதைக்கிற காட்சிதான் நம் கண்களில் தோன்றுகிறது. மாறாக, ஏழே நாள்களில் சிகப்பழகு என்று பெண்களுக்கான முகத்தில் பூசும் கிரீம்களின் விளம்பரம் நம் கண்களில் தோன்றுவதில்லை. உண்மையில் முதலாவதைக் காட்டிலும் இரண்டாவதிலேதான் அதீத வன்முறையும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகம். சிகப்புத்தான் அழகு என்பதும், அழகுதான் பெண்களுக்கான தேவை என்பதைக்காட்டிலுமான வன்மம் வேறென்னவாக இருக்க முடியும்? அழகுதான் பெண்களின் அடிப்படைத்தேவை என்றானால், அறிவும் அன்பும் மட்டுமே நிரம்பிய பெண்களுக்கு பொது வெளியில் இடம் கிடையாதா? என்கிற கேள்வி எழுகிறது. இது ஒரு சாதாரணமான உதாரணம் தான்.

வானொலி, தொலைக்காட்சி, நாளிதழ், குடும்பம், அரசு, இணையம், பள்ளி, கல்லூரி என ஒவ்வொன்றும், ஒவ்வொரு நொடியும் ஆணுக்குப்பெண் சமமானவள் அல்ல என்கிற செய்தியை நேரடியாகவும் மறைமுகமாகவும் கற்பித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் இது போன்ற விளம்பரங்களை மட்டுமே எதிர்க்கிற பொத்தாம் பொதுவான பெண்ணியவாதிகள் இந்த விளம்பரங்களைத் தாங்கிப்பிடிக்கிற ஆணாதிக்க சாதிய சமூக அமைப்பு முறையின் அடிப்படைக் கட்டமைப்பை எதிர்ப்பதில்லை. அதனால்தான் பொத்தாம் பொதுவான பெண்ணியவாதிகளின் எதிர்ப்புக்குப்பிறகு இத்தகைய ஓரிரு விளம்பரங்கள் நின்று விட்டாலும் அது வேறு வடிவம் எடுத்து தொடரவே செய்கின்றன.

சமூகத்தை நீள அகலவாக்கில் சாதிய ரீதியாகவும், குறுக்கு நெடுக்காக பாலியல் வேறுபாட்டினாலும் பிளந்து வைத்திருக்கிற இதுபோன்றதொரு மோசமான பாகுபாட்டை பெண்கள் அனைவரும் இணைந்து நின்று எதிர்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்குமான சேரியாக சமையலறையும், ஒவ்வொரு வீட்டிற்குமான தலித்துகளாக எல்லா சாதிப்பெண்களும் இருக்கிறார்கள். ஆனாலும், எந்த அக்ரகாரப்பெண்ணும் எந்த ஊர்ப்பெண்ணும் சேரிப்பெண்களை தங்களில் ஒருவராகப் பார்ப்பதில்லை, பார்க்க விரும்புவதுமில்லை. சேரி ஆண்களை ஒடுக்குகிற ஊர்ப்பெண்களை தங்களில் ஒருவராகப் பார்க்கிற மனநிலையில் தலித் பெண்களும் இல்லை.

அதனால்தான் ஆண்கள் அனைவரையும் எதிரிகளாகப் பாவிக்கிற சமூக அமைப்பின் அடிப்படையை மாற்றாமல் ஆண்களுக்கு இணையானவர்களாகவோ, மேலானவர்களாகவோ மாறினால் போதும் என்கிற கருத்தியலை முன்வைக்கிற பொத்தாம்பொதுவான பெண்ணியத்துக்கு மாற்றாக, பெண் விடுதலையை நேசிக்கிற ஆண்களையும் இணைத்துக்கொண்டு சமூக அமைப்பின் அடிப்படையை மாற்றுவதன் வாயிலாக பெண் விடுதலையை வென்றெடுக்கக் கூடிய ”சமூகப்பெண்ணியம்” என்கிற கருத்தியல் மேலெழுந்து வருகிறது. மேலெழுந்த வாரியாகப் பார்க்கிற பொழுது சமூகப்பெண்ணியமே நமக்கான கருத்தியலாகத் தோன்றினாலும், கெடுவாய்ப்பாக, சமூகத்தை நீளவாக்கில் பிரித்து வைத்திருக்கிற ஆண் பெண் பாகுபாட்டை தகர்த்தெறியத்தயாராகிற சமூகப்பெண்ணியம், சமூகத்தை குறுக்கு நெடுக்கில் பிரித்து வைத்திருக்கிற சாதியத்தை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளத்தயாராக இல்லை.

வன்கொடுமைகளின் உச்சமாக இன்றளவும் அறியப்படுகிற, கயர்லாஞ்சியில் தலித்துகளுக்கு எதிரான, இன்னும் சொல்லப்போனால், தலித் பெண்கள் சுரேகா மற்றும் பிரியங்காவுக்கு எதிரான, வன்கொடுமைத்தாக்குதலின்போது, கயர்லாஞ்சியைச் சேர்ந்த ஊர்ப்பெண்கள் ஆதிக்க சாதிவெறி பிடித்த ஆண்களோடே சேர்ந்து நின்றார்கள். சுரேகாவும் பிரியங்காவும் பெண்கள் என்பதால் பெண்கள் பக்கமாகவோ, வன்கொடுமைக்குற்றவாளிகள், தங்களைச் சமையலறைச் சிறைக்குள் பூட்டி வைக்கும் ஆண்கள் என்று அந்த காட்டுமிராண்டிக்கும்பலுக்கு எதிராகவோ நிற்கவில்லை.

தலித் மக்களின் சேரிகள், ஆதிக்க சாதியினரின் ஊரால் எரிக்கப்படும்போது, ஆதிக்க சாதிப்பெண்கள் இயல்பாகவே ஊர் ஆண்களுடனும், சேரிப்பெண்கள் இயல்பாகவே தலித் ஆண்களுடனும் இணைந்தே நிற்கின்றனர்.

ஆகவேதான், சமூக அமைப்பை நீளவாக்கில் பிரித்து வைத்திருக்கிற  ஆணாதிக்கச்சிந்தனையையும், சமூக அமைப்பை குறுக்கு வாக்கில் பிரித்து வைத்திருக்கிற சாதியச்சிந்தனையையும் ஒரு சேர சம அளவில் எதிர்க்கிற தலித் பெண்ணியமே நமக்கான கருத்தியலாக அமைகிறது.

ஆணாதிக்கத்தால் மட்டுமே பாதிக்கப்படுகிற அக்ரஹாரப்பெண்களாலோ, ஆணாதிக்கத்தாலும் பொருளாதாரத்தாலும் மட்டுமே பாதிக்கப்படுகிற ஏழை ஊர்ப்பெண்களாலோ அனைத்துப்பெண்களுக்கான விடுதலையை வென்றெடுத்து விட முடியாது. மாறாக ஆணாதிக்கம், பொருளாதாரம், சாதி என மூன்று விதமான அடிமைச்சங்கிலிகளாலும் பிணைக்கப்பட்டிருக்கிற ஏழை தலித் பெண்களால் மட்டுமே அனைத்து பெண்களுக்குமான விடுதலையை வென்றெடுக்க முடியும்.

அதனால்தான், தலித் பெண்ணியத்தை தூக்கிப்பிடிக்கிற, ஏழை தலித் பெண்களின் விடுதலையை முதன்மைப்படுத்துகிற அம்பேத்கரியல் பார்வையையோடு பெண் விடுதலையை அணுகுவோம்! தலித் பெண்ணியம் வெல்லட்டும்! சாதிய ஆணாதிக்க ஆதிக்க வர்க்க சமுதாயம் ஒழியட்டும்!!

                                                                                                                                         (ஆதித்தமிழன் தலையங்கம்)

Pin It