இன்றைய நாட்களில், மற்ற எல்லா ஊடகங்களைக் காட்டிலும், ஃபேஸ்புக் அதிக அளவில் வெற்றி பெற்றிருப்பதற்கும் பிரபலமாகியிருப்பதற்கும் அடிப்படையில் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு கருத்து வெளிப்படுத்தப்படுகிற வெளியில், அதே அளவு சுதந்திரத்துடனும் அதே அளவு விரிவான தளத்திலும் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ ஒரு கருத்தை வெளிப்படுத்த இருக்கிற வாய்ப்புதான்.

kamal_vishwaroopam_602

 ஆனால், ஒரு திரைப்படமோ, தொலைக்காட்சியோ, வானொலியோ, நாளிதழோ, விளம்பரங்களோ, சுவர் எழுத்துக்களோ, ஃபிளக்ஸ் போர்டுகளோ அவற்றின் மீதான கருத்துக்களை சம்மந்தப்பட்ட ஊடகங்கள் சந்திக்கிற வெகுமக்கள் அத்தனை பேருக்கும் கொண்டு செல்லாது என்பது நாம் அறிந்ததாகும். ஒரு ஃபிளக்ஸ் போர்டு ஒரு நகரில் வாழும் இலட்சக்கணக்கான மக்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு செல்கிறது. ஆனால் அதன் மீதான நமது கருத்தை, நாம் சந்திக்கிற வெகு சிலரிடத்தில் மாத்திரமே கொண்டு செல்ல முடிகிறது.

 மேற்கண்ட ஊடகங்களின் வலிமையை நாம் சாதாரணமாக குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஒருமுறை உலகறிந்த சமூக சிந்தனையாளர் அருந்ததிராய் அவர்களிடம் உள்நாட்டு பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எது? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, அவர் நீட்டி முழக்காமல், எளிமையாகச் சொன்ன பதில், "நடுத்தர மக்களின் பொதுப்புத்தி" என்பதுதான். அந்த நடுத்தர மக்களின் பொதுப்புத்தியை உருவாக்குகிற வேலையை மேற்கண்ட ஊடகங்கள் தான் உருவாக்குகின்றன என்பதும் மிகையாகாது.

 இத்தகைய வலிமையான ஊடகங்கள் பெரும்பாலும் ஒரு வழிப் பாதையாகத்தான் இருக்கின்றனவே தவிர, ஒரு சாதாரண குடிமகனின் கருத்தை சொல்ல வாய்ப்புகளை உருவாக்குகிற வெளியை மறுக்கின்றன.

 விஸ்வரூபம் திரைப்படத்தையே எடுத்திக் கொண்டாலும், ஏற்கனவே இச்சமூகத்தின் பொதுப்புத்தியில் ஊறிப் போயிருக்கிற இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்கிற எண்ணத்தீயில் பெட்ரோல் ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்கிற வேலையைத்தான் செய்கின்றது. தலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா உமர் கோயம்புத்தூரிலும், மதுரையிலும் இருந்தார் என்று முடிவின் முடிவாக அறிவிக்கிற படத்தில், அப்படி இல்லை என்று சொல்லுகிற வாய்ப்பை இஸ்லாமியச் சமூகத்துக்கு அந்தத் திரைப்படம் வழங்குமா? இல்லை 100 கோடி ரூபாய் செலவழித்து ஒரு திரைப்படத்தை எடுத்து, கருத்து சொல்லுகிற வலிமையைத்தான் இஸ்லாமிய சமூகத்திற்கு இந்நாடு வழங்கியிருக்கிறதா? 100 கோடி ரூபாய் பணத்தைக்கூட பிச்சை எடுத்தாவது புரட்டி விடுவதாக வைத்துக் கொள்வோம். 100 கோடி ரூபாய் செலவில் எடுக்கிற ஒரு திரைப்படம், 'உலக நாயகனை' கதாநாயகனாகக் கொண்டிருக்கிற விஸ்வரூபம் திரைப்படத்துக்கு கிடைத்த ஊடக வலிமையைப் பெற முடியுமா?

 'உன்னைப்போல் ஒருவன்' படத்திலும் கூட இப்படித்தான். பெஸ்ட் பேக்கரியில் தனது மூன்றாவது மனைவி இறந்து போன கோபத்தில் கோயம்புத்தூரில் குண்டுவைத்ததாக ஒரு இஸ்லாமிய கதாபாத்திரம் பேசுகிறது. பெஸ்ட் பேக்கரி எரிந்தது 2002ல், கோயம்புத்தூரில் குண்டு வெடித்தது 1998ல். இந்த உண்மையைச் சொல்வதற்கு அந்தத் திரைப்படம் வாய்ப்புகளை உருவாக்கித் தருமா? இஸ்லாமியர்கள் சர்வசாதாரணமாக மூன்று, நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியும் என்கிற எள்ளலான பார்வைதானே வசனத்தில் தொக்கி நிற்கிறது! மகளுக்காகவோ, மகனுக்காகவோ, தாய் தந்தைக்காகவோ ஒரு இஸ்லாமியர் கவலைப்பட மாட்டாரா என்பது போன்ற கேள்விகளை எழுப்ப வாய்ப்பு இல்லாத ஊடகம் கருத்துச் சுதந்திரத்தை உரிமையாகக் கோர முடியுமா?

 இப்படித்தான், கடந்த ஆண்டு மத்திய கல்வி வாரிய பாடப்புத்தகத்தில், 11ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்தின் 18ம் பக்கத்தில், புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு நத்தையின் மீது அமர்ந்து போவது போலவும், அவரை நேரு சாட்டையால் அடிப்பது போலவும் ஒரு கேலிச்சித்திரம் வரையப்பட்டிருந்தது. எந்தப் பொருள் குறித்தும் கேலிச்சித்திரம் வரைய சுதந்திரம் வேண்டும் என்பதுதான் நமது கருத்து. ஆனால், ஒரு முடிவின் முடிவாக, விவாதத்துக்கு வழிவகை இல்லாத எதிர்காலத் தலைமுறையின் மூளைகளில் ஒரு நச்சுக்கருத்தை விதைக்கிற வேலையை எப்படி கருத்துச் சுதந்திரமாக எடுத்துக்கொள்ள முடியும்?

 ஆக, கருத்துச் சுதந்திரம் என்பது, அடிப்படை உரிமைதான். ஆனால் அது மாற்றுக் கருத்துக்களுக்கும் இடம் தருகிற மனப்பான்மை கொண்டவர்களுக்குத்தான் அது பூரண உரிமையாகும். அதனால், விஸ்வரூபம் திரைப்படம் எடுத்தவர்கள் எப்படி கருத்து சுதந்திரப் போராளிகளாக முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மையானது விஸ்வரூபம் திரைப்படத்தை எதிர்ப்பது கருத்துச் சுதந்திரத்தை எதிர்ப்பதாகாது என்பதுவும்.

 கருத்துக்களை உருவாக்குகிற‌ திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ், தொலைக்காட்சி விளம்பரங்கள், ஃபிளக்ஸ் போர்டுகள், சுவர் விளம்பரங்கள் என்பதெல்லாம் சனநாயக வழியிலானது என்று கூறலாம். ஆனால், ஒவ்வொரு சின்னச்சின்ன கருத்துக்களுக்கும் கூட எதிர்வினைகளை உரிய மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு அவற்றுக்கான இடத்தை உத்தரவாதப்படுத்துவதே முழுமையான சனநாயகப் பண்பாகும்.

 மாற்றுக்கருத்துக்களுக்கு இடம் தருகிற ஊடகங்களை உருவாக்குவது என்பது, ஒரு நீண்ட நெடிய சனநாயகப் போராட்டமாகும். அதற்கு வெகு காலம் பிடிக்கலாம். ஆனாலும் அப்படியானதொரு இலக்கை நோக்கிப் போராட முனைவதே விஸ்வரூபம் திரைப்படம் தந்துள்ள சிக்கல் நமக்கு கற்றுத் தருகிற பாடமாக இருக்க வேண்டும்.

- நீலவேந்தன்

Pin It