குமரியிலுள்ள நீர்நிலைகள் பாதுகாத்தல்:

குமரி மாவட்டத்தில் நீர்நிலைகள் ஒழுங்காகப் பராமரிக்கப்பட வேண்டும். பொதுப்பணித்துறை, உள்ளாட்சி மற்றும் தனியார் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள், குட்டைகள், குறு வாய்க்கால்கள் மற்றும் இதர நீர்நிலைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தூர்வாரப்பட வேண்டும். மேலும், மழைநீரானது நீர்நிலைகளுக்கு வரும் வழிப்பாதைகளைச் செப்பனிட வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். ஆகாயத்தாமரைகள் நீக்கப்பட வேண்டும். 

neyyar_dam_380நெய்யாறுப் பாசனத் திட்டத்தின்படி (Neyyar Irrigation Project) நெய்யாறு அணை கேரளத்திலுள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் கட்டப்பட்டது. நெய்யாறு அணையின் மொத்த நீர்ப்பரப்பான 140 சதுர கிலோமீட்டரில் 12.90 சதுர கிலோமீட்டர் (10%) பரப்புத் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. எனவே, இது இரு மாநில நதி (Inter-State River) ஆகும். எனவே, நெய்யாற்று அணையிலிருந்து, தமிழ்நாட்டிற்கு உரியத் தண்ணீரின் பங்கை வழங்குவதற்காக, நெய்யாறு இடதுகரை வாய்க்கால் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு வர வேண்டியத் தண்ணீரின் பங்கை இரு மாநில முதலமைச்சர்களும் திருவனந்தபுரத்தில் மார்ச் 13, 1958 அன்று கூடிப் பேசித் தீர்மானித்தனர். அதன்படி, குமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு வட்டத்திற்கு, தண்ணீர் 1965-லிருந்து 2004-வரை வழங்கப்பட்டு வந்தது. 2004-ஆம் ஆண்டிலிருந்து தண்ணீர் விடாததால் 3725 எக்டேரில் விளவங்கோடு வட்டத்தில் நடைபெற வேண்டிய வேளாண்மை நடைபெறாமல் நிலம் தரிசாகி (paddy fields become barren land) விட்டது. இது, சம்பந்தமாக, 2005 ஆம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த ஒரு பொதுநல வழக்கும் நிலுவையில் உள்ளது.

நெய்யாறு அணையின் 10 விழுக்காடு நீர்ப்பிடிப்புப் பகுதி தமிழ்நாட்டில் அமைந்துள்ளதால், தமிழ்நாட்டு அரசு, கட்டுமானப் பொறியாளர்கள் குழு ஒன்றை அமைத்து, விளவங்கோடு வட்டத்தில் தடுப்பணைக் கட்ட முடியுமா என்று ஆராய வேண்டும். ஏனென்றால் நெய்யாறு அணைக்கு தமிழ்நாடு வழியாக ஒரு குறிப்பிட்ட கிலோமீட்டர் தூரத்திற்குத் தண்ணீர் செல்கிறது என்று மக்கள் கூறுகின்றனர். கேரளா சட்டமன்றத்தில், 18-10-2006 அன்று நெய்யாறு இரு மாநில நதி இல்லையென்றும் தண்ணீர் தமிழகத்திற்கு விட வேண்டுமென்றால் தமிழ்நாடு பணம் தர வேண்டும் என்றும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டு அரசு உச்சநீதிமன்றத்தில் இப்பிரச்சினையைக் கொண்டுச் செல்ல வேண்டும். மேலும், 2004-லிருந்து தண்ணீர் வராததால் பழுதான, நெய்யாறு இடதுகரைக் கால்வாயின் ஒரு பகுதியான பன்னிரெண்டு அடி அகலமுள்ள சுந்தரிமுக்குக் கால்வாயை உடனடியாகச் செப்பனிட வேண்டும்.

தமிழர் நாகரித்துடன் தொடர்புடையதும் குமரிக்கண்டத்தில் ஓடியதும் பஃறுளியாறு (“பஃறுளியாறுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல்கொள்ள”) என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அப்பஃறுளியாற்றின் எச்சமே இன்று பழையாறாக ஓடுகிறது. அத்தகைய பெருமையைக் கொண்ட பழையாற்றின் நிலையை இன்றுப் பார்த்தால் இரத்தக் கண்ணீரே வருகிறது. ஏனென்றால், இன்றுச் சாக்கடைகள் கலந்து, கழிவுத்தொட்டியாய், ஆகாயத்தாமரைகள் படர்ந்து, கவனிப்பாரன்றி குமரியின் கூவமாக மாறி வருகிறது. இதனைச் செயல்படாத தமிழ்நாட்டு அரசு உடனடியாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகள் அகற்றிச் சீர்படுத்த வேண்டும்.

குமரியிலுள்ள கனிம வளங்கள் பாதுகாத்தல்:

மேற்குத்தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. இந்த மேற்குத்தொடர்ச்சி மலையின் அற்றம் குமரி மாவட்டத்திலுள்ள களியலில் அமைந்தள்ளது. இந்தக் களியலில் அதிக அளவில் பாறைகள் உடைக்கப்பட்டதால் இயற்கைச் சமனிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தமிழ்நாட்டு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், பாறைகள் உடைப்பது, மலைகள் உடைப்பது மற்றும் ஆற்றில் மணல் அள்ளுவது போன்றவைத் தடுக்கப்பட வேண்டும். இவற்றினுடைய விளைவுகளை, பின்வரும் புள்ளிவிவரங்களால் அறியலாம். 70 வருடத்திற்கு முன்னால் 6000 m.m. ஆண்டு மழைப்பொழிவைப் பெற்று வந்த குமரி மாவட்டம் இன்று 1200 m.m. ஆண்டு மழைப்பொழிவையேப் பெறுகிறது. வேளாண் துறையின் புள்ளி விவரப்படி, குமரி மாவட்டத்தில், 1998-99 ஆம் ஆண்டில் 32,135 எக்டேரில் இருந்த வேளாண் சாகுபடி 2010-11 ஆம் ஆண்டில் 10,000 எக்டேராக சுருங்கிப் போயுள்ளது. 50 வருடத்திற்கு முன்னால் 20 அடி ஆழத்தில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் இன்று 100 அடி ஆழத்திற்குப் போய் விட்டது. 

கேரளாவிற்கு, குமரி மாவட்டத்தின் வழியாகக் கடத்தப்படும் பொதுவிநியோக (Ration) அரிசி, மண்ணெண்ணெய், மணல், கருங்கல், சல்லி, பாறைப்பொடி, செங்கல்....போன்றவைத் தடுக்கப்பட வேண்டும். குமரி மாவட்டத்தில் அதிக அளவில் காணப்படும் மலை அணில், மரநாய், ....போன்ற அரியகைகை வனவிலங்குகள் வேட்டையாடுதல் தடுக்கப்பட வேண்டும். 

தமிழ்நாட்டிலுள்ள இஸ்ரோவின் மகேந்திரகிரி ஆராய்ச்சிக்கூடத்தை தனி நடுவம் ஆக்குதல்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் எனப்படும் இஸ்ரோவின் கீழ் பல நடுவங்கள் உள்ளன. அவற்றில் கேரளாவிலுள்ள வேளியில் அமைந்துள்ள V.S.S.C. எனப்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி நடுவம், ஆந்திரப் பிரதேசத்திலுள்ள சிறீகரிகோட்டாவில் அமைந்துள்ள S.D.S.C. எனப்படும் சதீஷ் தவான் விண்வெளி நடுவம், கர்நாடகாவிலுள்ள பெங்களூருவில் அமைந்துள்ள I.S.A.C. எனப்படும் இஸ்ரோ செயற்கைக்கோள் நடுவம், குஜராத்திலுள்ள அகமதாபாத்தில் அமைந்துள்ள S.A.C. எனப்படும் விண்வெளிச் சேவைகள் நடுவம், கேரளாவிலுள்ள வலியமலையில் அமைந்துள்ள L.P.S.C. எனப்படும் திரவ எரிபொருள் அமைப்பு நடுவம்,.....போன்றவைக் குறிப்பிடத் தக்கவை. மகேந்திரகிரி ஆராய்ச்சிக்கூடம், குமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் எல்லையில், களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் ஒரு முனையாக உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் இஸ்ரோவின் ஒரே அமைப்பும் வெறும் ஆராய்ச்சிக்கூடமாகவே வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சிக்கூடத்திற்கு தனி நடுவமாகச் செயல்படக்கூடிய அனைத்துத் தகுதிகளிருந்தாலும் மலையாளிகள் அதற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த ஆராய்ச்சிக்கூடம், இஸ்ரோவின் நேரடிக்கட்டுப்பாட்டில் இயங்காமல், கேரளாவிலுள்ள வலியமலையில் அமைந்திருக்கும் திரவ எரிபொருள் அமைப்பு நடுவத்தின் (LPSC-Liquid Propulsion Systems Centre) நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது.

மகேந்திரகிரி வெறும் ஆராய்ச்சிக்கூடமாவே மலையாளிகளால் தந்திரமாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. ஏன் இதற்கு தனி நடுவ அந்தஸ்து (We are seeking the status of Independent Centre. If Independent centre is announced, Mahendrgiri gets a Director. This independent centre as like VSSC, SDSC,.reports directly to Chairman / ISRO circumventing LPSC, Valiamala) வழங்கப்பட மலையாளிகள் சம்மதிக்கவில்லையென்றால், தமிழர்களின் உழைப்பு அவர்களுக்கு வேண்டும். புகழ் அவர்களுக்கு வேண்டும். இதனால் மகேந்திரகிரியில் வேலைப் பார்க்கும் தமிழர்கள் பதவி உயர்வு, பணி நீட்டிப்பு, பணி மாற்றம், வாகன வசதிகள், மருத்துவ வசதிகள்,....போன்ற அனைத்துத் தேவைகளுக்கும் மலையாளிகளையேச் சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆராய்ச்சித் துறைகளை அவர்களே வைத்துக்கொண்டு, கடுமையான நச்சு வாயுக்களை வைத்து ஆய்வு பண்ணக்கூடிய சோதனைத்தளங்களை மகேந்திரகிரியில் நிறுவி தமிழ்நாட்டு மண்ணை நாசமாக்குகின்றனர். தமிழர்களுக்கு சரியான பாதுகாப்பு முறைகளைக்கூட கையாள அனுமதிப்பதில்லை.

தமிழ்நாட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் அலைக்கழிக்கின்றனர். அனைத்து ஒப்பந்தப் பணிகளையும் மலையாளிகளுக்கே வழங்குகின்றனர். மகேந்திரகிரியில் பொங்கல் கொண்டாட அனுமதி வழங்குவதில்லை, மாறாக ஓணம் கொண்டாடுகின்றனர். முந்தைய ம.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு. சதன் திருமலைக்குமார் இப்பிரச்சினையைச் சட்டமன்றத்தில் எழுப்பியுள்ளார். திருநெல்வேலி இராமசுப்பு எம்.பி. இப்பிரச்சினையை மக்களவையில் எழுப்பியுள்ளார். இக்கொடுமையிலிருந்து விடுதலைபெற, தமிழ்நாடு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முக்கிய இடத்தைப் பெற, நடுவண் அரசு, இதனை தனி நடுவமாக அறிவிக்க வேண்டும். தனி இயக்குநரை நியமித்து, இஸ்ரோத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். தமிழ்நாடு அரசியல் அறிவர்கள் மற்றும் தமிழ்நாட்டு முதலமைச்சர் இந்த ஆராய்ச்சிக்கூடத்தைப் பார்வையிட வேண்டும். 

தென் தமிழ்நாட்டில் இதுவரையிலும் நடுவண் அரசின் எந்தவொரு உயர்கல்வி நிறுவனுமும் அமைக்கப்படவில்லை. எனவே, 6,000 ஏக்கர் பரப்புள்ள மகேந்திரகிரியில், ஐ.ஐ.டி.-க்கு இணையான இந்திய விண்ணூர்தி இயக்கத் தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் (Indian Institute of Rocket Propulsion Technology-IIRPT) ஒன்றை நிறுவ வேண்டும். இங்கு வரவேண்டிய, விண்வெளி அறிவியல் தொழில்நுட்பக்கல்வி நிறுவனம் (Indian Institute of Space Science Technology -IIST), கடைசி நேரத்தில், கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

குளச்சல் வர்த்தகத் துறைமுகம் அமைத்தல்:

குளச்சலில் பழங்காலந்தொட்டே இயற்கைத்துறைமுகமாக இருந்திருக்கிறது. எனவே, இங்கு வர்த்தகத் துறைமுகம் கட்டப்பட வேண்டும்.

பல்லிக்கூட்டம் அணை அமைத்தல்:

குமரி மாவட்டத்திலுள்ள முல்லையாற்றின் குறுக்கே, பல்லிக்கூட்டம் என்னும் இடத்தில் அணை கட்ட சாத்தியக்கூறுகள் உள்ளன. எனவே, தமிழ்நாட்டு அரசு, வல்லுநர் குழு அமைத்து இதனை ஆராய்ந்து அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பத்மநாபபுரம் அரண்மனையை மீட்டல்:

padmanabhapuram_palace_500

பத்மநாபபுரம் அரண்மனையின் தமிழ்ப்பெயர் கண்டுபிடிக்கப்பட வேண்டும். பத்மநாபபுரம் அரண்மனை இராஜராஜச் சோழன் என்னும் தமிழ் மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை ஒட்டக்கூத்தரின் மூவருலாவும் ஜெயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணியும் பறைசாற்றுகிறது. அத்தகைய பழந்தமிழ் அரசனின் கோட்டை இன்று மலையாளமயமாக்கப்பட்டு கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை தமிழ்நாட்டு அரசு கையகப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கேரள அரசு, முல்லைப்பெரியாறு மற்றும் நெய்யாறு போன்ற விசயத்தில் எவ்வாறு விவரமாக நடந்து கொள்கிறது என்பதைப் போல தமிழக அரசும் இன உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும்.

அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்தல்:

தமிழ்நாடு அரசு, பள்ளி மற்றும் கல்லூரி பாடநூல்களில் அய்யா வைகுண்டரின் வரலாற்றைப் பதிவு செய்து, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழர் வரலாற்றைப் பயிற்றுவிக்க வேண்டும்.

குமரித்தமிழர் விடுதலைப் போராட்டத்தை பாடநூல்களில் இடம்பெறச் செய்தல்:

குமரி மாவட்ட விடுதலைப் போராட்ட நினைவுச் சின்னம் இன்னும் அரசால் அமைக்கப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

புதுக்கடைக்கு 18-10-1974 அன்று வந்த அப்போதைய முதல்வர். கலைஞர் அவர்களிடம் 1945-1956 இல் நடைபெற்ற குமரித்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஒரு வரலாற்று ஆணையம் அமைத்து ஆய்வு செய்து எழுத வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. எனவே வரலாற்று ஆணையம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

மார்சல் நேசமணி வரலாறும் குமரித் தமிழர் விடுதலைப் போராட்டமும் இன்னும் பள்ளி மற்றும் கல்லூரி பாடநூல்களில் எழுதப்படவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக இதனை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசு, சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான உதவித்தொகையை, 7000 ரூபாயாகவும், மருத்துவப்படியை 500 ரூபாயாகவும் உயர்த்தி இருக்கிறது. மேலும், இவர்களுக்கு நடுவண் அரசும் கூடுதலாகச் சலுகைகளை வழங்குகிறது. ஆனால், 1846 சதுர கிலோமீட்டர் பரப்பைத் தமிழ்நாட்டுடன் இணைத்த குமரி மாவட்ட விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு, மாதம் 4000 ரூபாய் உதவித்தொகையும், மருத்துவப்படி வெறும் 15 ரூபாயும் வழங்கி வருகிறது இத்திராவிட அரசு. சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும் தாய்த்தமிழக விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கும் போராட்டத்தில் என்ன வித்தியாசம் கண்டது இந்த தமிழக அரசு. முந்தையவர்கள் இந்திய தேசியத்திற்காகவும் பிந்தையவர்கள் தமிழ்த் தேசியத்திற்காகவும் போராடினார்கள். இச்சலுகைகளை உயர்த்தி சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு இணையாக தமிழக அரசு குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 01 லிருந்து வழங்க வேண்டும். இது சம்பந்தமாக, கன்னியாகுமரி மாவட்ட விடுதலைப் போராட்டத் தியாகிகள் சங்கத்தின் துணைத்தலைவர். சி.குமராசுவாமி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சூடு நடந்த இடங்களான மார்த்தாண்டம், புதுக்கடை மற்றும் மாங்காடு இடங்களில் காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் சார்பில் குமரி அனந்தன் அவர்களால் 1985 ஆம் ஆண்டு நினைவச்சின்னம் வைக்கப்பட்டது. ஆனால், மார்த்தாண்டத்தில் உள்ள நினைவுச்சின்னம் குழித்துறை நகராட்சியால் அப்புறத்தப்பட்டு உள்ளது. இது மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்நினைவுச்சின்னம் மிகவும் அவசியம். எனவே, குழித்துறை நகராட்சி உடனே, நினைவுச்சின்னத்தை மீண்டும் நிறுவ வேண்டும்.

தொல்காப்பியருக்குச் சிலை:

தொல்காப்பியத்தை அரங்கேற்றிய அதங்கோட்டு ஆசானுக்கு குமரி மாவட்டத்திலுள்ள அதங்கோட்டில் ஏற்கனவே சிலை வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ் இலக்கணத்தின் தந்தையான தொல்காப்பியருக்கு (தொல்காப்பியம்) அவர் பிறந்த குமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காட்டில் சிலை நிறுவ வேண்டும். தொல்காப்பியர், சமற்கிருத இலக்கணத்தின் தந்தையான பாணினியை (அஸ்டாத்யாயி) விட காலத்தால் முந்தியவர். அதாவது, தொல்காப்பியரின் பிறந்த நாள் கி.மு.711 சித்திரை முழுமதி நாள் (மே 5) என்று புலவர்கள் குழு வகுத்துள்ளது. எனவே, தமிழக அரசு இந்நாளை அங்கீகரித்து, தொல்காப்பியர் நாளாக அறிவிக்க வேண்டும். 

குமரிக்கண்ட அகழாய்வு:

குமரிக்கண்ட அகழாய்வுக்காக கலைஞர் அவர்கள் ரூ.ஐம்பது இலட்சத்தை ஒதுக்கீடு செய்தார். அதன் நிலவரம் என்ன ஆனது என்றேத் தெரியவில்லை. எனவே, தமிழ்நாட்டு அரசு, குமரிக்கண்ட அகழாய்வுப் பணிகளை மீண்டும் மேற்கொண்டு, கடலுக்கடியில் இருக்கும் தமிழர் நாகரீகத்தை வெளிக்கொணர வேண்டும்.

குமரியிலுள்ள 148 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும்:

குமரி மாவட்டத்தில் 148 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.1.5 கோடிக்கு மேல் மது விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜீலை மாதம் மட்டும் ரூ.56 கோடியே 15 இலட்சத்து 70 ஆயிரத்துக்கு மது விற்பனையாகி உள்ளது. அதாவது, ஜீலை மாதத்தில் மட்டும் 42,100 பீர் அட்டைப்பெட்டிகள் மற்றும் 1,40,000 மதுப்புட்டிகள் விற்பனையாகி உள்ளன. 2011 ஆம் ஆண்டில் குமரி மாவட்டத்தில் மட்டும் ரூ.584.5 கோடிக்கு மதுபானம் விற்பனைச் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ரூ.650 கோடி வருமானம் எட்டப்படும் என்று அரசு எதிர்பார்க்கிறதாம். இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 11 விழுக்காடு அதிகம்.

நபிகள் பிறந்த நாளான பிப்ரவரி 05-ஆம் நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், குமரி மாவட்டத்தில் அதற்கு முந்தைய நாள் ரூ.2.5 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது, தினசரி குமரி மாவட்டத்தில் விற்பனையாகும் ரூ.1.5 கோடி மதுபான வருவாயை விட ரூ.1 கோடி அதிகம். அதாவது, 67 விழுக்காடு அதிகம். நாளை விடுமுறை என்று தெரிந்ததும் குமரியிலுள்ள குடிமகன்கள் முந்தைய நாளே 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதுபானங்களை மறுநாள் குடிப்பதற்கு பதுக்கி வைத்துள்ளனர். இது எவ்வளவு பெரிய கொடுமை!

அதுபோல, வள்ளலார் பிறந்த நாளான பிப்ரவரி 06-ஆம் நாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால், குமரி மாவட்டத்தில் அதற்கு முந்தைய நாள் ரூ.2.75 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது, தினசரி குமரி மாவட்டத்தில் விற்பனையாகும் ரூ.1.5 கோடி மதுபான வருவாயை விட ரூ.1.25 கோடி அதிகம். அதாவது, 84 விழுக்காடு அதிகம். அதாவது, நாளை விடுமுறை என்று தெரிந்ததும் குமரியிலுள்ள குடிமகன்கள் முந்தைய நாளே 1.25 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மதுபானங்களை மறுநாள் குடிப்பதற்கு பதுக்கி வைத்துள்ளனர். எங்கே போகிறது இந்தக் குமரி மாவட்டம்?

அனைத்து சமுதாயப் பிரச்சினைகளுக்கும் மதுவே காரணம். எனவே, மதுவில்லாத் தமிழ்நாடு உருவாக வேண்டும்.

குமரியில் புகையிலைப் பொருட்களில் தயாராகும் பீடி, சிகரெட், நுகர்போதை, பான்மசாலா மற்றும் பான்பாக்குக் கடைகள் மூடல்:

குமரி மாவட்டத்தில் புகையிலையில் தயாரிக்கப்பட்ட பீடி, சிகரெட், கஞ்சா, பான்மசாலா மற்றும் பான்பாக்கு போன்ற போதைப்பொருட்களையும் தடைச் செய்ய வேண்டும். இவைகளால் வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. பீடி, சிகரெட் அற்ற புகையற்ற, புகையிலைப் போதைப் பொருட்கள் அற்றத் தமிழ்நாடு வேண்டும்.

சமீப காலமாக, நெகிழி மற்றும் செருப்பு போன்ற பொருட்களை ஒட்ட வைக்க வேகமாக ஒட்டும் தன்மை கொண்ட திரவத்தினை (glue) பொதுமக்கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இத்தகையத் திரவத்தில் மெத்தில் மற்றும் எத்தில் சையனோ ஆக்ரிலிக் அமிலம் மூலப்பொருளாகவும் கரைப்பானாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒருமுறை இதனை நுகர்ந்தவர்களை மீண்டும் மீண்டும் நுகரத் தூண்டுகிறது. இதனை, குமரி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவர்கள் அடிக்கடி நுகர்ந்து கஞ்சா புகைத்தவர்கள் போல் அலைந்து கொண்டிருக்கின்றனர். பல பள்ளிகளில் இதனை ஆசிரியர்கள் பறிமுதல் செய்துள்ளனர். எனவே, இதையும் தமிழக அரசுத் தடை செய்ய வேண்டும்.

குமரியில் புற்றுநோய் பாதிப்புகள்:

தமிழ்நாட்டிலே, குமரிமாவட்டத்தில் உள்ள மக்களிடையே அதிக அளவில் புற்றுநோய் காணப்படுகிறது. திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள நடுவண் அரசின் மண்டலப் புற்றுநோய் நடுவம் (Regional Cancer Centre, RCC) மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் நோயாளிகளில் 50 விழுக்காடிற்கும் அதிகமானவர்கள் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். குமரி மாவட்டத்தில், புற்றுநோய் இல்லாத வீடுகளைப் பார்ப்பதே அரிது. எனவே, தமிழ்நாட்டு அரசு, ஒரு மருத்துவர்கள் குழுவை அமைத்து இப்பிரச்சினையின் காரணத்தை அறிய வேண்டும். காரணத்தை அறிந்து, அதிலிருந்து தப்புவதற்கான வழிமுறைகளை வகுத்து, மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

- சா.வாகைச்செல்வன்

Pin It