மொதக் கொழப்பம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் அவர்களே வணக்கம். தங்களது பேட்டி ஒன்றை தொலைக்காட்சியில் பார்க்கும் அரும்பெரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். உங்களது பேச்சில் முத்தாய்ப்பாக ஈர்த்த விசயம் ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும்.

thaa_pandian_360"நல்ல வேளையாக எனது பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் எங்கள் வளர்ப்பின் காரணமாக விஞ்ஞான கண்ணோட்டம் கொண்டவர்களாக உள்ளார்கள். அணு உலையை அதனால் உறுதியாக ஆதரிக்கிறார்கள்" என்று சொன்னீர்கள்.

வரவர விஞ்ஞானம் என்றால் என்னவென்றே தலைசுற்றுகிறது தலைவா?

அமெரிக்கா ஓர் அணுகுண்டுக்கு ‘சின்னப்பையன்’ என்று பெயர் வைத்து அதை ஜப்பானின் தலையில் போட்டு சோதித்ததே அந்த சோதனை விஞ்ஞானம் தானா?

ஈழத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் குண்டுவீசி மறையும் ‘கிபிர்’ விமானங்கள் விஞ்ஞானம் தானா?

இனத்தையே கொத்துக்கறி போட்ட ஹிட்லரின் நாஜிமுகாம்கள் விஞ்ஞான சோதனைக்கூடங்கள் தானா?

அணுஉலை..........................??? நீங்க சொல்றதால சத்தியமா அது விஞ்ஞானம் தான்.

முட்டைக்குள் ஆசிட் ஊத்தி அடிப்பதும் விஞ்ஞானம் தானா தலைவா?

எனக்கு ஸ்கூல்ல இப்படியெல்லாம் சொல்லிக் கொடுக்கல. எங்க வாத்தியார் இப்படியெல்லாம் திகில் திகிலா சொல்லிக் கொடுத்தரல. ஆனா நீங்க சொல்லித்தரதுல நல்ல திகில் இருக்கு தலைவா?

எங்க டீச்சரம்மா, செடி ஒண்ண குடுவைக்குள் வச்சு சூரிய ஒளியில வைக்கணும். அது நல்ல உயிர் காத்துத் தரும்னு சொல்லித் தந்தாங்க. மண் புழுவக்கூட கொல்லக்கூடாதுன்னு சொல்லித் தந்தாங்க. ஆனா லட்சம் பேர் செத்துச் சுண்ணாம்பானாலும் விஞ்ஞானம் விஞ்ஞானம் தாண்டான்னு கம்பா நின்னு விளக்குறீங்க பாருங்க: இந்த திகில் தான் தலைவா பள்ளிக்கூடத்துல இல்ல. அதான் எது விஞ்ஞானம்னு ஒரெ கொழப்பமா இருக்கு.

ரெண்டாங்கொழப்பம்

யுக்ரைன் நாட்டில் உள்ள செர்னோபிளில் அணுஉலை ஒண்ணு வெடிச்சு விபத்து நடந்துச்சு. செர்னோபிள் அணுஉலை என்று அது பலரால் அழைக்கப்பட்டிருந்தாலும் அந்த அணுஉலையின் பெயர் உங்களுக்குத் தெரியாமல் இருக்காது. அது ‘விளாடிமிர் இலியிச் லெனின் அணுஉலை’.

உலகில் முதலாளிகள் உள்ளிட்ட அனைத்து மனிதர்களையும் சொத்துடைமையின் கேடுகளிலிருந்து விடுவித்து இந்த பூமியை மானுடப்பூக்காடாக மாற்றுவதற்காக சரித்திரத்தைப் புரட்டிப்போட்ட மாபெரும் புரட்சியாளன் லெனின். அவனது பேரில் அணுஉலைகட்டி அதை வெடிச்சு உருவாக்கிய மாபெரும் விஞ்ஞான காண்டத்தை உங்கள் குழந்தைகளுக்கு நுரைக்க நுரைக்க விளக்கிப் புரியவைத்துள்ளீர்களே! சே! நிக்கிற தலைவா நிக்கிற!

உங்களின் ஆஸ்தான தலைவர் ரஷ்ய அதிபர் கோர்பச்சேவ் அதிபராக இருக்கும்போது நடந்த விபத்து அது. அவர் சொன்னால் அதை விரும்பிக் கேட்பீர்கள் என்று ஊர்பக்கம் சொன்னார்கள்.

“எத்தனை ஆண்டுக்காலம் இந்த பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கும்? 800 வருடம்.. எண்ணூறு வருடம்.... எவ்வளவு காலம் இது? இரண்டாம் யேசு கிறிஸ்து பிறந்து அவர் மீண்டும் உயிர்த்தெழும் வரையா? செர்னோபிள் எங்களுக்கு மிகப்பெரிய பாடம் சொல்லிக் கொடுத்துள்ளது. செர்னோபிள் அதன் கொடிய இயல்பைக் காட்டி விட்டது. உலகளவில் சர்வதேச முகமைகளை அமைத்துப் பாதுகாப்பான ஆற்றல் தேடலை முடுக்கிவிட வேண்டும். அதுவே அத்தியாவசியம்" என்றார் அதிபர்.

தற்போது அதிபர் தன் பதவிகாலத்திற்குப் பிறகு செர்னோபிளால் சிதைக்கப்பட்ட குழந்தைகளை வைத்துப் பராமரித்து வருகிறார்.

இப்ப கொழப்பம் என்னன்னா, அதென்ன பதவி போனா அறிவு வருது.! அறிவு வந்தா பதவி போயிருமா.. நம்ம கட்சியில இருக்கவுக எல்லாம் அறிவும் பதவியும் ஒண்ணா சேந்தவுகளாத்தான இருப்பாக தலைவா?

மூணாங்கொழப்பம்

திடீர்னு ஒரு ஆளு நம்ம காதுபட பேசிகிட்டு இருக்கான். “காரல்மார்க்ஸ் முதலாளித்துவச் சுரண்டலுக்கு இணையான கேடாக முதலாளித்துவ உற்பத்தியின் அராஜகத்தை அடையாளப்படுத்தினார். அதாவது முதலாளிக எல்லாம் பொருள் விக்கணும், நெறயா விக்கணும்னு தான் உற்பத்தி செய்றான். மக்களுக்கு எந்தளவுக்குத் தேவையின்னு திட்டமிட்டுச் செய்யுறதுல்ல. இப்படி நெறயா நெறயான்னு உலகம்பூராம் முதலாளிகள் கிளம்பி தாறுமாறா உற்பத்தி செஞ்சு குவிக்கிறான். ஆனா அதையெல்லாம் வாங்க வேண்டிய சனங்களோட கூலிய மட்டும் முடிவே இல்லாம கொறச்சுக்கிட்டே போறான். இதையெல்லாம் எந்த அரசாங்கமும் கண்காணிக்கிறது இல்ல. எங்க கல்லா நெறஞ்சா போதும்னு விட்டுர்றாங்க. இதனால தேவையில்லாம நெறயா பொருள் வருது. உலகமுழுக்க தேவையில்லாத பொருளுற்பத்தியும் வீணடிப்பும் அதனாலதான் நடக்குது. ஆதனால தான் தேவையில்லாத ஆற்றல் வீணடிப்பு நடக்குது. எரிபொருள் தட்டுப்பாடு மின்தட்டுப்பாடு அதிகரிக்குது" என்று பேசிக்கிட்டே போறான்..

கேட்டுக்கிட்டிருந்த நீங்க கண்சிவந்து கொப்பளிக்கிறீங்க. ‘இதென்னயா பிரமாதம் இத நான் கதையாவே சொல்லுவேன் வாயா’ன்னு ஒரு தட்டு தட்டுறீங்க.

நீங்கள் இப்போது கதை சொல்ல தயாராகி விட்டீர்கள். இப்போது ஒரு உண்மைக்கதை என்ற தலைப்புடன் நீங்கள் சொல்லும் கதை தமிழகம் எங்கும் ஒரு அசரீரியாகக் ஒலிக்கத் தொடங்குகிறது.

‘ஒரு ஊர்ல குட்டி பாப்பா ஒருத்தி, அப்பா எனக்கு சட்ட வேணும் வாங்கித்தாப்பா’ன்னு கேக்குறா.

அப்பாவோ, ‘கையில் காசு இல்லம்மா அப்பறம் வாங்கித்தாரே'ங்கிறான்..

அந்தக்குட்டி.. 'போங்கப்பா.. ஏமாத்தாதீங்க.. ஒழுங்கா வாங்கித்தாங்கப்பா’ன்னு அடம்பிடிக்கிறா.

அப்பா, ‘இல்லம்மா சொன்னா கேளு.. காசு இல்ல’ன்னு சொல்லிப்பாத்தான்.. அவ கேக்குறதா இல்ல..

குட்டி, ‘ஏம்பா காசு இல்ல’ன்னு அடுத்தக் கேள்வியத் தொடுக்குறா..

‘அப்பாவுக்கு வேலயில்லாம போச்சும்மா, அதான்’கிறான்..

குட்டி, ‘ஏம்பா வேல இல்ல’ங்குறா..

அப்பன, ‘கம்பெனிய மூடிட்டாங்க.. அதான்’கிறான்..

குட்டி, ‘ஏம்பா மூடிட்டாங்க’ங்கிறா..

அப்ப அப்பன்காரன் சொன்னாம்பாரு ஒரு பதிலு..

‘நெறயா துணி தேங்கிக்கெடக்கு அதனால மூடிட்டாங்கம்மா’ன்னான்.

அந்தக்குட்டிக்கு கண்ணு வட்டமடிக்குது.. அவ கேட்டா.

‘இது என்னப்பா அநியாயமா இருக்கு.. எனக்கு துணி இல்ல.. அதுக்குக் காரணம் அங்க துணி நெறயா தேங்கிக் கெடக்குறதுனாலதான்னு சொல்றீங்க’..ன்னா..

‘இது கத இல்ல.. விடுகத. கண்டுபுடிங்க. யாரு கண்டுபிடிக்கிறீங்களோ அவங்களுக்கு செகப்புச் சட்ட வாங்கித்தாரேன’னு சொல்லி முடிக்கிறீங்க..

அதே ஆளு திரும்பவும் நம்ம காதுபட ஆரம்பிக்கிறான்..

"ஒவ்வொரு நாளும் இப்படி பொருள் தேக்கம் இல்லாம இல்ல. எந்தவகையிலும் மக்களின் தேவைய அறிஞ்சி திட்டமிடாம முதலாளிகளின் லாபவெறியால் தீர்மானிக்கப்படும் முதலாளித்துவ உற்பத்திமுறை, பொருட்களைக் கணக்கில்லாம வீணடிக்கிது. அதோட சேந்து எல்லா எரிபொருள் ஆற்றலையும் மின்சாரத்தையும் சேர்த்து வீணடிக்குது.. இதைத்தான் காரல்மார்க்ஸ் முதலாளித்துவ உற்பத்தியின் அராஜகம்னு சொன்னார்.. அதவிட்டுப்புட்டு மின்சாரம் பத்தல.. வளர்ச்சிநின்னு போகும்னு முதலாளிக பேசுறத அப்படியே வாங்கி வாயில போட்டு வாந்தியெடுத்தாலோ தான் கம்யூனிஸ்டுன்னு யாராவது சொல்லிக்கிட்டாளோ.. அந்தாள கூப்பிட்டு சட்டையில காங்கிரசுக் கொடியையும் பி.ஜே.பி. கொடியையும் சேர்த்துக் குத்திவிடு"ன்னு.. பேசிக்கிட்டே போறான்.

இந்த இடத்துல நிறுத்துவோம் தலைவா..

எனக்கு மறுபடியும் ஒரு கொழப்பம் தலைவா.. அந்தாளு இப்ப சொன்னதெல்லாம் உண்மையிலேயே காரல்மார்கஸ் சொன்னதுதானா? இல்லன்னா ஒங்க விஞ்ஞான பாகவதர் பட்டத்த கெடுக்குறதுக்காக விஷமிகள் பரப்புற புரளியா?

நாலாங்கொழப்பம்

புத்தமகான் சொன்னாராம்..

‘இந்த உலகத்தில் உள்ள மக்களுக்கெல்லாம் அவர்களின் தேவையைப் போக்க செல்வம் இருக்கிறது.. ஆனால் ஒரு தனியாளின் பேராசையைத் தீர்க்க இந்த உலகமே போதாது’ என்று..

இங்கிலாந்து துணி ஆலைகள் கக்கிய துணிகளை வித்துத் தீர்க்கத்தான் இந்தியாவில்; பிரிட்டிஷ் அரசு ஆயிரக்கணக்கான நெசவாளர்களின் கட்டைவிரல்களை வெட்டி எறிஞ்சுது.. சந்தைகளைப் பிடிக்க உலகப்போர்களே வெடிச்சுது.. கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிஞ்சாங்க.. போர்வெறி தீராம அணுகுண்டு போட்டாய்ங்க.. அந்த அணுகுண்டெல்லாம் இப்புடி மின்சாரம் தயாரிக்கிறோம்னு டகால்ட்டி விட்டுத்தான் எல்லா நாட்டுலயும் உற்பத்தி செஞ்சாங்க..

இந்தப் படிக்காத இடிஞ்சகரை கூட்டம் ஒண்ண தெரிஞ்சுவச்சிக்கிட்டு உசுர எடுக்குதுக.. அதாவது அணுஉலையில மின்சாரம் எடுக்குறதே பக்கவிளைவுதானாம். எப்படியும் அணுகுண்டுக்கு புளுட்டோனியம் எடுக்கணும்னா இப்ப இருக்குற மாதிரி உலைஎல்லாம் கட்டி எல்லா வேலையும் செஞ்சுதான் எடுக்கணுமாம்.. இடம் கொடுத்து தண்ணி கொடுக்குற பயலுக எங்களுக்கு ரெண்டு அணுகுண்டு குடுங்க தீவாளி, புத்தாண்டுக்கு போட்டுக்குறோம்னு கேப்பாய்ங்கன்னுட்டு, ஒங்களுக்கு கரண்டு தர்றோம்’னு தாக்காட்டுறதுக்குத்தான் ஒரு கொப்பறய வச்சு மின்சாரம் தயாரிக்கிறாய்ங்களாம். இப்ப நம்ம கூடங்குளத்துலயும் எறங்கிட்டாய்ங்கன்னு சத்தாய்க்கிதுக..

அடாவடியா எல்லா வளங்களயும் சூறையாடுறது. அதுக்காக போர்நடத்துறது. அப்புறம் "தேச வளர்ச்சிக்காக எல்லாம் செய்யுறோம்"னு ஏமாத்துறது.. அதனாலதான் அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தின்னு சொல்லிருக்காக.

thapa_jaya

இதெல்லாம் ஒங்களுக்குத் தெரியாதது இல்ல. நம்ம மக்க இதெல்லாம் தெரிஞ்சா அப்பறம் வெட்டுக்கத்தியையும் வேல்கம்பையும் தூக்குவானா இல்லையா? அவங்க பக்கம் நிக்காம நீங்க என்னடான்னா “ஒண்ணு அணுஉலைய சீக்கிரமா தொறக்குற வேலைய பாருங்க இல்லன்னா எதிர்ப்புதான் அதிகமாகும்"னு ஐடியா கொடுக்குறீங்க. இந்த ஐடியாதான் அம்மாவுக்கும் தெரியும்.. ஐயாவுக்கும் தெரியும்ல.

ஏந்தலைவா? என் கொழப்பம் என்னன்னா இப்புடி நீங்க அவுங்க ஐடியாவா பேசி பேசித்தான் கடைசியில ‘எல்லாம் ஒரு ஐடியாதான்’னு முடிவுபண்ணி அவுகளுக்கே ஓட்டுப்போட்டுர்றாகளோ. நம்ம தோழர்களும் ‘ஐடியா மட்டுமில்ல ஐடியாலஜியும் ஒண்ணுதான்’னு முடிவுபண்ணி ஐயா கட்சிக்கே போயிர்றாகளோ? அப்புறம் நீங்க கலைஞர் கட்சிய ஒடைக்கிறார்னு முகம் கடுக்க பேட்டி கொடுக்குறீங்க. ஆனது ஆச்சு தலைவா கலைஞர் கட்சிய ஒடைக்கிறார்னு சொல்றத விட்டுப்புட்டு.. கொஞ்சம் மாத்தி இணைக்கிறார்.. இணைக்கிறார்னு சொன்னா என்னவாம்?

அஞ்சாங்கொழப்பம்

‘2004ல் இந்தியாவில் வீணான உணவுப்பொருளின் மதிப்பு மட்டும் 58 ஆயிரம் கோடிகள். உலகில் உற்பத்தியாகும் உணவுப்பொருளில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது.’ தல, நான் விஞ்ஞான பாகவதரோட வீம்பா வெளயாடுறதா நினைக்காதீக. நான் சொல்லல, ஐ.நா சபையோட உணவு மற்றும் விவசாயக்கழகம் சொல்லுது. இப்படி வீணான உணவுப்பொருள் உற்பத்திக்கு செலவிடப்பட்ட பணம், மனித உழைப்பு, மின்சாரம் மற்றும் எரிபொருள் எவ்வளவு?

இது மட்டுமில்லாம, இப்படி தொழிற்துறையில வீணடிக்கப்பட்டது எவ்வளவு? இதே போல் சேவைத்துறையில் வீணடிக்கப்படும் ஆற்றல் எவ்வளவு? இப்படி உலகம் முழுவதும் இந்தியா முழுக்க, தமிழகம் முழுக்க வீணடிக்கப்படும் ஆற்றல் எவ்வளவு?

செல்போன் மின்னேற்றியின் முனையை ஒரே வடிவத்தில் உலகம் முழுக்க வடிவமைத்துப் பயன்படுத்தினால் ஆகக்கூடிய பொருள் மிச்சம் எவ்வளவு? பொருளாதார மிச்சம், ஆற்றல் மிச்சம் எவ்வளவு என்பதை கற்பனை செய்வோம்.

இதை நம்ம நாட்டுத் தொழில்களின் கோடிக்கணக்கான பிரிவுகளில் புகுத்தினால் நாம் சேமிக்கக் கூடிய ஆற்றல் எவ்வளவு. இதை ஒவ்வொருவகை பொருளுக்கும் பொருத்திப் பார்த்துச் சரிசெஞ்சா உலகத்துல உற்பத்தியாகும் ஆற்றல் இன்னும் பலநூறு தலைமுறைகளுக்குப் போதும் போதும். ஆக அடிப்படைப் பிரச்சனை மின்தட்டுப்பாடல்ல. அது லாபவேட்டையர்களின் திருகல் வேலைகள் தான்.

முதலாளித்துவ உற்பத்திமுறையின் அராஜத் தன்மையை ஒழிக்காமல் ஆற்றல் வீணாவதைத் தடுக்க முடியாது. மனிதர்களை, விலங்குகளை, இயற்கை வளங்களைக் கொள்ளையிடாமல் முதலாளித்துவ முறையால் பிழைத்திருக்க முடியாது. இந்த சூறையாடலுக்கு நாம் துணைபோனால் நாளைக்கு ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் அணுஉலை தொடங்க வேண்டுமென்பார்கள்.

இப்படியெல்லாம் ஒரே பேச்சா பேசி கொதிச்சிக்கிறாங்களே.. ஏன் தலைவா நான் ஒண்ணு கொழம்பித்தான் கேக்குறேன். பஞ்சாயத்து போர்டுல அணுஉலை கட்டுனா அதுக்குக் கூட்டுறவுச் சங்கம் கட்டுவமா? அதுல எலக்ஷன் வந்தா அப்பவாவது தனியா நிப்பமா?

ஆறாம் அறிவு

பக்கத்து விழுப்புரம் மாவட்டம் வெம்பிக்கிடக்கும் போது சென்னை ஏன் உலகத்திற்கே கார் தயாரிக்க வேண்டும். பக்கத்துல தாராபுரம் தோலுரிஞ்சு கிடக்கயில திருப்பூர் ஏன் உலகத்திற்கே பனியன் தயாரித்து அதற்குச் சாயம்போட வேண்டும் என்ற கேள்விகளை பாட்டாளி மக்கள் எழுப்பக் கற்றுத் தருவதுதான் நமது பணி என்று போர் முழக்கம் செய்வீர்கள் என்று பார்த்தால் படிக்கிறது மார்க்சியம், இடிக்கிறது நம்ம இடிந்தகரைய மாதிரியில்ல இருக்கு ஒங்க பேட்டி.

ஒரு முறை லெனின் ஒரு தோழர் கிட்ட சொன்ன கதையிது. ‘தோழரே தொழிலாளிககிட்ட போயி நான் ஒங்களுக்கு ஒரு ரூபா அதிகமா வாங்கித் தருவேன் ரெண்டு ரூவா அதிகமா வாங்கித் தருவேன்னு சொன்னீங்கன்னா அப்ப அவர் சொல்லுவார்.. தோழரே அதுதான் எங்களுக்குத் தெரியுமே. ஏன் நாங்க இப்படி ஒரு ரூபாய்க்கும் ரெண்டு ரூபாய்க்கும் மாரடிக்க வேண்டியிருக்குங்கறத விளக்குங்க! இப்படி இருக்குற ஒரு சமூக அமைப்ப எப்படி மாத்துறதுன்னு சொல்லுங்கன்னு சொல்லுவாரு" என்று சொன்னாராம்.

ஓங்க கிட்ட முதலாளிகளே வந்து ஐயா நாங்கதான் வளர்ச்சி வளர்ச்சின்னு கூப்பாடு போட்டு பொழப்பு நடத்துறோம்.. இதுல நீங்க வேற ஏயா போட்டிக்கு வாரீங்கன்னு கேக்குற வரைக்கும் ஒங்க சேவைய நிறுத்த மாட்டீங்க போல இருக்கே.

தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க, தி.மு.க ஆட்சிக்காலங்களில் கடந்த பதினைந்து ஆண்டுகளாக எந்த முன்திட்டமும் இல்லாமல் கார்ப்பரேட்களையும் பன்னாட்டு நிறுவனங்களையும் அனுமதித்ததன் விளைவாக மின்பற்றாக்குறை வந்ததா? அல்லது வேறு எதனால் வந்தது? நேற்றுவந்த நிறுவனங்களுக்காக காலகாலமாக இந்த மண்ணையும் மக்களையும் வளப்படுத்தி வரும் வேளாண்குடிகளையும் சிறு தொழில் செய்வோரையும் மின்சாரமில்ல இருட்டில் தள்ளுவது எந்த ஊர் நியாயம், இந்த கட்சிகளுக்கு தாங்கள் மாறி மாறி பல்லக்கு தூக்கியதை நான் ஏத்துக்கலாம் தலைவா. ஆனா ஊர் ஏத்துக்குமா?

அப்புறம் லெனின் மின்சாரத்தால் தான் தொழிற்புரட்சியும் சமூக வளர்ச்சியும் சாத்தியமுன்னு சொன்னார்னு சொல்லி பழைய ஏடுகள புரட்டி விடுறீங்க.. சரிதான். ஆனா என்னமோ "என்ன செய்வையோ எப்புடி செய்வையோ தெரியாது, எண்ணி 7 நாள்ல தொழிற்புரட்சி நடக்கணும்"னு தமிழ் சினிமா வில்லன் சொல்றதுபோல அவர் சொன்னது மாதிரியில்ல வரிஞ்சுகட்டி குதிக்கிறீங்க.. அவர் அணுஉலை மூலமாதான் தொழிற்புரட்சியும் சமூக வளர்ச்சியும் வரும்னு சொன்னது போல டுமீல் விடுறீங்க.

அப்பறம் அந்த அமெரிக்க சதி பத்தி....

ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியா பைப் பதிச்சு பெட்ரோலிய வாயு கொண்டு வர்ற ஒப்பந்தத்த அமெரிக்கா சொன்னதால ஒழிச்சுக் கட்டியவர்தான் நம் பாரதப் பிரதமர் மன்மோகனார்.. அமெரிக்கா சொன்னதால தன்கட்சியின் பெட்ரோலியத்துறை அமைச்சரான மணிசங்கர் ஐயரையே பதவிபறித்தவர்;. ஜார்ஜ பெர்ணான்டஸ், சாருக்கான்.. நம்ம அப்துல்கலாம்னு எல்லாத்தையும் டவுசர கழட்டி சோதனை போட்டப்ப "செய்யுறத பாத்துச் செய்யுங்கய்யா"ன்னு நம்ம சாலமன் பாப்பையா கணக்கா சொல்றவகதான் நம்ம பிரதமரு..

அவர் மூலமா ஆகாதது அமெரிக்காவுக்கு என்ன இருக்கு.. அமெரிக்காவோட 123 - அணு ஒப்பந்தத்த நிறைவேற்ற தன் ஆட்சியையே இழக்கத் துணிஞ்சாரு.. நீங்க சந்து பொந்துக்குள்ள அமெரிக்க சதிய தேடித்திரியிரீங்க.

தலைவரே இப்ப எனக்குத் தலையே சுத்துது. யார் நல்லவன் யார் கெட்டவன்னே தெரியல. நீங்க ஒரு கம்யூனிஸ்டு அணுஉலை வேணும்கிறீங்க.. அமெரிக்காகாரன் முழு முதலாளித்துவவாதி அவன் அணுஉலை இனிமேல் எங்க நாட்டுல கட்டமாட்டேங்கிறான்.. கண்ணுல ஒரே பொகமூட்டமா தெரியுது. அணுஉலை வந்தாதான் வளர்ச்சி வளர்ச்சின்னு சொன்னீங்களே அப்ப அமெரிக்காகாரன் வளர வேணாம்னு முடிவு பண்ணிட்டானா?

நீங்க அணுஉலைய ஆதரிக்கிறது.. முதலாளித்துவத்த எதுக்குறது.. வளர்ச்சியப்பத்திப் பேசுறது.. புரட்சியப் பத்தி பொதுக்குழுவுல சொல்லி புரியவைக்கப் போராடுறது எல்லாம் எங்கேயோ இடிக்குதே தலைவா!

நம்ம கட்சி இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சின்னு சொல்றீங்களே.. நான் சின்னப்புள்ளையுள எழுத்துக்கூட்டி வாசிக்கும் போது கட்சிப் பேர இந்திய காங்கிரஸ் கட்சின்னு வாசிச்சுப்புடுவேன். அப்ப தப்பு தப்புன்னு சொல்லுவாங்க.. எனக்கென்னமோ இப்ப சரிதான் சரிதான்னு படுது..

முடிவா ஒண்ணு சொல்லிக்கிறேன் தலைவா.. விஜயகாந்தோட கூட்டணிக்கு அலைபாயுறீங்க பாருங்க.. அடடடா! ஒனக்கு அணுஉலை நெஞ்சு தலைவா! இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீங்க ஒருத்தர் போதும் தலைவா ஒருத்தர் போதும்.

- தங்கப்பாண்டியன், மதுரை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It