ஈழத்தமிழர்கள் தொடர்ந்து இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றனர். இலங்கையில் வாழும் தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்காக குரல் கொடுக்கும் நாம், தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழர்களின் உரிமையை உத்திரவாதம் செய்ய வேண்டாமா?.. அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழி காண வேண்டாமா? நமது அரசு, தப்பிச் செல்லும் அகதிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றது.

சென்னை, நாகப்பட்டிணம், ராமேஸ்வரம் பகுதிகளில் அடிக்கடி ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்போது திருச்சி, சென்னை, சிதம்ப்ரம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட முகாம்களில் இருந்த அகதிகள் ஆள்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பனியிலும், குளிரிலும், வெயிலிலும், மழையிலும் உயிருக்கு உத்திரவாதமின்றி கடல் பயணம் மேற்கொள்கின்றனர். சில வேளைகளில் உணவு, தண்ணீர் இன்றி நடுக்கடலில் தவிக்கின்றனர். தப்பிச் செல்லும் சிலர் கடல் பரப்பில் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் இழக்கின்றனர்.

கனடாவிலும், ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பாக வாழ முடியும் என்று நம்புகின்ற தமிழர்களுக்கு இந்தியாவிலும், தமிழகத்திலும் சுதந்திரமாக வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது.

தமிழர்களின் உரிமைகளுக்காக தீர்மானம் போடும் அ.தி.மு.க. அரசும், டெசோ மாநாடு நடத்தும் தி.மு.க.வும், தமிழர்களின் உரிமைக்காக உரக்க குரல் கொடுக்கும் அரசியல் இயக்கங்களும், தமிழகத்தின் அகதிகள் முகாம்களில் வாழும் ஈழத்தமிழர்களுடைய உரிமையை உத்திரவாதப்படுத்த வேண்டும்.

கொலை வெறியன் ராஜபக்சேவுக்கு கோரிக்கை வைக்கும் நம்மால் ஜெயலலிதாவிற்கும், மன்மோகனுக்கும் அழுத்தம் கொடுக்க முடியாதா?

ஒரு நாள், இரு நாள் மட்டும் அகதிகள் முகாமை சுற்றிப் பார்த்து வருவது அரசியலுக்கு சரியாக இருக்கலாம். நிரந்தர தீர்வை, நிலையான தீர்வை, முகாமிலுள்ள தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வை நாம் எட்டுவதுதானே சரியாக இருக்கும்.

போரினால் உறவுகளையும், உடமைகளையும் இழந்து வாழ்விற்காக நாடோடிகளாக அலையும் அவல நிலையில் உள்ள நம் சொந்தங்களுக்கு நாம் வாழ்வியல் உத்திரவாதத்தை உருவாக்கி கொடுக்க வேண்டும். குழந்தைகளையும், பெணகளையும் வைத்துக் கொண்டு, சேர்த்து வைத்த மிச்சம் மீதி சொத்துக்களையும் இழந்து, உயிரைப் பணயம் வைத்து கடல் பரப்பில் பயணிக்கத் தயாராகும் தமிழர்களுக்கு ”தமிழ்” மண்ணில் உரிமையை நிலை நாட்டுவோம்.

ஜெ.பிரபாகர்

Pin It