தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அதிகளவில் பெருகி வருகின்றது. அதற்கு காரணம் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியும், வங்கக் கடலும், வ.உ.சி.துறைமுகமும் தான்.  புதியதாக தொழிற்சாலைகள் அமைக்கப்படும் போது அரசின் ஒப்புதலைப் பெறுவதற்காக, மாசுக் கட்டுபாடு வாரியத்தின் தடையில்லா சான்று பெறுவதற்காக மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் சம்பிரதாய முறைப்படி நடப்பதுண்டு.

admk_exmla_640

அவ்வாறு நடைபெற்ற கூட்டங்களில் தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வருகின்ற ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், கோஸ்டல் எனெர்ஜென், இந்த் பாரத் பவர் லிமிடெட், தாரங்கதாரா கெமிக்கல்ஸ், நிலா சீ புட்ஸ், டயமண்ட் சீ புட்ஸ் உள்ளிட்ட அனைத்து ஆலைகளுமே சுற்றுச் சூழல் தாக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையின் சாதக, பாதக அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தொழிற்சாலைகள் அமையும் ஆலையை சுற்றியுள்ள கிராம மக்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், விவசாயிகளும், மீனவர்களும் இந்த ரசாயன ஆலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.   அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. போன்ற அரசியல் கட்சிகளும், வியாபாரம் பெருகும் என்ற நோக்கில் அரசுக்கு கட்டுப்பட்டு பெரிய வியாபார அமைப்புகளின் பிரதிநிதிகள் சிலர் ரசாயன ஆலைகளை வரவேற்பார்கள்.

ஆனால், அனைத்துக் கருத்துக்களையும் கேட்டுக் கொண்ட அதிகாரிகள் அரசுக்கு நல்ல விதமாக பரிந்துரைத்து அறிக்கை அனுப்புவார்கள். அதனைப் பின்பற்றி ஆலைகளும் இயங்கத் துவங்கும். இந்த ஆலைகளின் மூலப் பொருளும், உற்பத்தி பொருளும் வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்ததுதான். நமது நாட்டின் கனிம வளங்களைத் திருடி, கழிவுகளை மட்டும் மிச்சம் வைப்பார்கள்.  அரசின் விதிமுறைகளையோ, மாசு கட்டுபாடு வாரியத்தின் விதிமுறைகளையோ எந்த ஆலையும் கண்டு கொள்வது கிடையாது.

அப்படித்தான் ரசாயன ஆலைகள் அனைத்தும் ”தொழிற்சாலைகள் இயக்கப்பட கடல் நீரை நன்னீராக மாற்றிப் பயன்படுத்துவோம்” என்று தங்களது சுற்றுச் சூழல் தாக்க அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். (இதிலும் கடல்வளம் பாதிக்கப்படும்).  அங்குள்ள தொழிலாளர்களுக்கான குடிநீரை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பெற்றுக் கொள்வோம் என்கின்றனர். இப்படி தாமிரபரணி நதியில் இருந்து நேரடியாக தினசரி 9 கோடி லிட்டர் தண்ணீர் தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்படுகின்றது.  இதுவும் போதாது என்று தொழிற்சாலைகளோ குடிநீர் என்ற பெயரில் விவசாய நிலங்களில் இருந்து நிலத்தடி நீரைத் திருடுகின்றனர்.

கடல் நீரை நன்னீராக்கி தொழிற்சாலை நடத்துவதற்கு அனுமதி பெற்றுவிட்டு விவசாய நிலங்களில் இருந்து வியாபார நோக்கத்தில், இலவச மின்சாரத்தை பயன்படுத்தி நிலத்தடி நீரைச் சுரண்டுவதை மாவட்ட நிர்வாகம் அனுமதித்து வருகின்றது.  மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி திண்டாடி வருவதை கண்டுகொள்ளாத அரசு தண்ணீர் கொள்ளையை அனுமதித்து கடிதம் கொடுக்கின்றது.  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம், கவர்னகிரி, புதியம்புத்தூர், ஓசநூத்து, வல்லநாடு, முருகன்புரம், அல்லிகுளம், கூட்டுடன்காடு, குரும்பூர், நல்லூர், ஆத்தூர் பகுதிகளில் மக்களின் எதிர்ப்பையும் மீறி நிலத்தடி நீர்கொள்ளை நடைபெற்று வருகின்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிலத்தடி நீர் கொள்ளையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.  ஓட்டப்பிடாரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி சட்டசபையில் மூன்று முறை தனது தொகுதியில் நிலத்தடி நீர் சுரண்டலை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். ஆர்ப்பாட்டம் நடத்தினார்.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, தே.மு.தி.க. ஆகிய அரசியல் கட்சிகளும், பல்வேறு சமூக அமைப்புகளும், விவசாய சங்கங்களும் தொடர்ந்து நிலத்தடி நீர்க் கொள்ளையைக் கண்டித்து போராடி வருகின்றனர்.

dmk_lorry_640

ஜனநாயக நாட்டில் மிகவும் உயர்ந்த பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  எனினும் இந்தப் போராட்டங்கள் எதுவும் வலிமையாக எதிரொலிக்கவில்லை. அதனால் இந்த நிலத்தடி நீர் கொள்ளையும் தொடர்ந்து வருகின்றது.  இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஓட்டப்பிடாரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், தி.மு.க.வை சேர்ந்த ஒன்றிய செயலாளர் செந்தூர்மணி ஆகியோர் நிலத்தடி நீரைக் கொள்ளையடிப்பதில் முக்கியமானவர்கள். அதிகளவில் தி.மு.க.வினர் லாரிகள்தான் இயங்குகின்றது.

நிலத்தடி நீர் கொள்ளையால் குடிநீர் உப்புத்தன்மை உடையதாக குடிப்பதற்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது என அரசே அறிவித்து விட்டது. இதனால் சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றது. விவசாயம் அழிந்து வருகின்றது. கால்நடைகளுக்கு குடிநீர் இல்லை. தண்ணீர் லாரிகளால் விபத்துக்கள் அதிகரித்து விட்டது. அதிக எடையுடைய லாரிகள் செல்வதால் சாலைகள் அனைத்தும் மோசமாகிவிட்டது.

இத்தனை பாதிப்புகளையும் கண்டுகொள்ளாமல் பன்னாட்டுத் தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீர் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.  ஒரு காலத்தில் சுரண்டுவதற்கு வேறு ஒன்றுமில்லை என்ற நிலை வரும். தண்ணீரை உறிஞ்சிய கும்பல், விவசாயிகளின் கண்ணீரை உறிஞ்சிய கும்பல்… மக்களின் செந்நீரையும் உறிஞ்சத் தயாராகும்!.  பணத்திற்காக எதையும் இழக்கத் தயாராக உள்ள அரசியல் வியாபாரிகளை விரட்டியடித்தால்தான் தமிழகத்தின் கனிமவளம் காக்கப்படும். மக்கள் வாழமுடியும். அந்த விழிப்புணர்வை எட்ட வேண்டிய அவசியத்தில்… அவசரத்தில்…இப்போது தமிழக மக்கள். விழித்துக் கொள்வோமா?

- ஜெ.பிரபாகர்

Pin It