தமிழகத்தின் கனிமவளத்தை சூறையாடிய மணல் மாஃபியாக்கள் கடற்கரை மணலைக் குறிவைத்து தங்கள் கடத்தலை விரிவுபடுத்தியுள்ளார்கள்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தென்மாவட்டங்களில் இருந்து ஜெர்மனிக்கு பனைமர நாரினால் கட்டப்பட்ட பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அந்தக் கயிறுகளில் ஒட்டிக் கொண்டிருந்த கடற்கரை மணலை ஆராய்ந்த ஜெர்மானியர்கள் அம்மணலில் இல்யூம்னைட், ரூடைல், கார்னெட் போன்ற கதிரியக்க தன்மை கொண்ட தாது உப்புகள் ஒளிர்வதைக் கண்டறிந்தனர். உலக சந்தையில் பல கோடி ரூபாய் பெறும் இம்மணல் இன்றளவில் மோசடியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

கர்நாடகாவின் ரெட்டி சகோதரர்கள் எப்படி இரும்பு தாது மணலை பினாமிகள் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு பொய் கணக்கு காட்டி ஏற்றுமதி செய்தார்களோ அதுபோல கடற்கரை மணலை கொள்ளையடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் தமிழகத்தில் எழுந்துள்ளது.

கூடன்குளம் அணு உலை துவக்கப்படும் சூழலில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்ட கடற்கரையில் மணல் கொள்ளை நடத்த முடியாது. அதனால் இப்போதே தூத்துக்குடியில் கால் பதித்து உள்ளனர் மணல் கொள்ளையர்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தின் கீழவைப்பார், பெரியசாமிபுரம், குஞ்செயபுரம், முத்தையாபுரம், வேம்பார் ஆகிய கடற்கரை கிராமங்களில் மணலை அள்ளி கடத்தி வருகின்றனர்.

கடற்கரை மணல் பல அடி ஆழத்திற்கு அள்ளப்பட்டு உள்ளது.

அப்பகுதியில் வனத்துறையின் சார்பில் புயல், வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர் தாக்குதல்களை குறைப்பதற்காக நடப்பட்டு இருந்த சவுக்கு மரங்களும், மாங்குரோவ் காடுகளும் சேர்த்து சூறையாடப்பட்டு உள்ளது. பேரிடர் தடுப்பு என்ற பெயரில் வனத்துறை மூலம் பல கோடி ரூபாய் செலவில் இப்பகுதியில் சவுக்கு மற்றும் அலையாத்திக் காடுகள் (Mangroves) நட்டுள்ளனர். அவை இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டு உள்ளது.

கடற்கரையில் இருந்து டிராக்டர் மூலம் அள்ளப்பட்டு வரும் மணல், நள்ளிரவில் குஞ்செயபுரம் மற்றும் முத்தையாபுரம் ஆகிய கிராமங்களுக்கு நடுவில் உள்ள சுடுகாட்டில் யார்டு அமைக்கப்பட்டு அதில் இருந்து மணல் லாரிகள் மூலம் ஏற்றிச் செல்லப்படுகின்றது.

அரிய கனிம வளங்கள் நிறைந்த மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் என மணல் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருகின்றது.

இதனால் கடல்வாழ் உயிரினங்களும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றது. ஆமை ஊர்வன இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இவை இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972) படி பட்டியல் ஒன்றில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.  இவை நீரிலும் நிலத்திலும் வாழவல்ல இரு வாழ்விகள் ஆகும். கடலில் வாழும் உயிரினங்களில் முழுக்க முழுக்க கடலை மட்டுமே சார்ந்து வாழாமல், நிலத்தையும் சார்ந்து வாழும் உயிரினம் ஆமை. ஆமைகள், இனப்பெருக்கத்திற்கு நிலத்தையும், உணவுக்கு கடலையும் பயன்படுத்துகின்றன.

வேம்பார், வைப்பார் பகுதியில் வாழும் அரியவகை ஆமைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. மன்னார் வளைகுடாவில் கன்னியாகுமரி முதல் திருச்செந்தூர் வரையிலான பகுதியில் குறிப்பாக மணப்பாடு, பெரியதாழை கடற்கரையிலும், புன்னக்காயல் முதல் தூத்துக்குடி வரையிலான பகுதியிலும், கீழவைப்பார் முதல் வேம்பார் வரையிலும், மூக்கையூர், சேதுக்கரை பகுதியிலும் ஆமைகள் முட்டையிட்டு வந்தது.

மணல் அள்ளப்பட்டு வருவதால் ஆமைகள் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு வருகிறது. அதோடு ஆமைகள் இனம் அழியும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மணல் எடுக்கப்படுகின்ற கடற்கரைப் பகுதி மீனவர்களின் வாழ்வாதார இடங்களாகும். படகுகளை நிறுத்துவது, வலைகளையும் மீன்களையும் உலர்ததுவது, அருகாமை கிராமங்களுக்குச் சென்றுவருவது போன்ற  வாழ்வின் அன்றாட நடவடிக்கைகள் இம்மணல் பரப்பை நம்பியே உள்ளன.

கடற்கரைச் சுற்றுச்சூழல் மாறுதல்களை தாங்கக் கூடியதல்ல. அதில் செய்யப்படுகின்ற சிறு மாறுதலும் மிகப்பெரும்எதிர் விளைவு ஏற்படுத்தும். கடலின் நீர் அழுத்தத்தால் உப்பு நீர் உட்புகாமல் கடற்கரை மணல்தான் தடுக்கிறது. அதுமட்டுமின்றி கடற்கரை மணலில் சேமிக்கப்படும் மழைநீர் நன்னீர் அரணாக மாறி உப்பு நீர் உள் நுழைவதைத் தடுக்கிறது.

கடலரிப்பும், கரை வளருவதும் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து வந்துள்ளன. இதை ஆபத்து நிலைக்கு வளரவிடாமல் சூழியல் சமநிலை அமைப்புகளான மணல் குன்றுகள், உயிர் அரண் காப்புக் காடுகள் மற்றும் கரையோரத்தில் அமைந்த தாவரங்கள் பாதுகாத்துள்ளன.

இதற்கு மாறாக, கடற்கரையில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையால் கடலரிப்பு அதிகமாகின்றது. கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்படுகின்றது. மணல் கொள்ளையால் கடல் நீரோட்டமே மாறுபடுகின்றது.

கனிம வளங்கள் வெளிநாடுகளுக்கு தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதை தடுத்து நிறுத்தினால்தான், தமிழகத்தில் அழிந்து வரும் கடற்கரை கிராமங்களைப் பாதுகாக்க முடியும்.

Pin It