“ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பது குற்றம், மீறிக் கல்வி கற்றால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்” என்று சொல்கிறது மனுதர்மம்.

                பண்டையக் காலம் தொட்டே இம்மன்னின் மைந்தர்களான ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டே வந்துள்ளது.

                ஒடுக்கப்பட்ட சூத்திர சமூகத்தைச் சேர்ந்த ஏகலைவன் மறைந்திருந்து, சத்திரியர்களுக்கு ‘உரிய’ வீரத்தையும், வில் வித்தையையும் தேர்ந்து கற்றுச் சிறந்து விளங்கினான் என்பதற்காக, தனது வஞ்சகத்தால், வில் எய்துவதற்குரிய அடிப்படைக் கருவியாக விளங்கும் ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாகப் பெற்று, பார்ப்பன ‘தர்மமான’ வருணாசிரமத்தைக் காப்பாற்றினான் அரசகுரு துரோணாச்சாரியார்.

                ஒரு மாந்தனின் உள்ளத்தில் மண்டிக் கிடக்கும் அறியாமை இருளை நீக்கி, அறிவு வெளிச்சத்தைப் பாய்ச்சச் செய்யும் தன்மையுடைய கல்வியை அனைத்து மக்களுக்கும் பொதுவாக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மண்ணை 18-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த எந்த மாமன்னர்களுக்கும் ஏற்படவில்லை.

                மாறாக, சேர மன்னர்களும், பல்லவ மன்னர்களும் வேதபாட சாலைகளை நிறுவி, பார்ப்பனர்கள் மட்டுமே கல்வி பெறுவதற்கு ஏதுவான வாய்ப்பை உருவாக்கித் தந்தார்கள்.

                பொதுவாக, அக்கால கட்டத்தில் கல்வி என்பது பார்ப்பனர்கள் மற்றும் வணிகர்களுக்கு மட்டுமே என்ற நிலை இருந்தது. ஓரிரு இடங்களில் மட்டும், இந்து மதத்தைச் சேர்ந்த பிற சமூக மக்களுக்கு கல்வி வழங்கப்பட்டது. ஆனால், இந்து மதத்தில் அங்கம் வகித்த ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது.

                19-ஆம் நூற்றாண்டு வரை தமிழ்ச் சமூகத்தில் திண்ணைப் பள்ளி முறை நடைமுறையில் இருந்து வந்தது. இக்கல்வி முறையானது சாதி – பொருளாதார அளவியலை மையமாகக் கொண்டிருந்ததால், அக்கல்வி முறையை எதிர்த்து எவரும் கேள்வி கேட்க முடியாது, கேள்வி கேட்கவும் மாட்டார்கள். பின்னர், ஆங்கிலேய ஆட்சியின் வருகைக்குப் பின் திண்ணைப் பள்ளி முறை ஒழிக்கப்பட்டு, அது அரசு சார்ந்த செயல்பாடாக மாறத் தொடங்கியது.

                ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சி அதிகாரம் - சுரண்டல் ஆகியவற்றை நிலைநிறுத்திக் கொள்ளவும், தங்கள் நலனை காத்துக் கொள்ளவும், இந்தியாவில் கல்விக்கூடங்களைத் திறந்து ஐரோப்பிய அறிவியல் கல்வி முறையைப் புகுத்தினர் - அறிமுகப்படுத்தினர். 1835-இல் மெக்காலே மூலம் ஆங்கிய வழிக்கல்வியைப் போதிப்பதற்கான திட்டவரைவுகள் உருவாக்கப்பட்டன.

                ஆங்கிலேயர்களின் இந்தக் கல்வி அறிமுகமானது இந்தியத் துணைக்கண்ட கல்வி வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில், இது குருகுல- வேத – பார்ப்பனக் கல்வி முறையை முடிவுக்குக் கொண்டு வந்த பொதுக்கல்வி முறை ஆகும். இருப்பினும் இந்தக்கல்வி முறையால் தொடக்கத்தில் அதிகப் பயனடைந்தவர்கள் பார்ப்பனர்களே. கல்வி கற்ற பார்ப்பனர்கள் ஆங்கிலேயருக்குச் சேவகம் புரியத் தொடங்கினார்கள். ஆனால், பார்ப்பனர்களே ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டார்கள் என்று பள்ளிப் பாடப்புத்தகங்களில் கதை கட்டப்படுகிறது. ஆங்கிலேயருக்கு அடிமையான இந்திய- பார்ப்பனிய அரசு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்குவதில் காட்டும் பாகுபாட்டினைக் கண்டு வெதும்பிய புரட்சியாளர் அம்பேத்கர், “ஒரே ஒரு சாதிக்கு மட்டுமே கல்வி கற்கவும், வளம் பெறவும் உரிமை உண்டு என்றும், மற்ற சாதியினர் அனைவரும் அடிமைகளாகப் பணிந்து அடிமைகளாக வாழ்ந்து, அடிமைகளாகவே மடிய வேண்டும் என்றும் கருதுகின்ற ஆளும் வர்க்கத்தின் கையில் இந்தியநாட்டின் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படுமானால், அந்த அரசு இப்போதுள்ள பிரிட்டீஸ் அரசை விட எவ்வகையிலும் மேம்பட்டதாக இருக்காது” என்று கூறியுள்ளார்.

                அன்றைய காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிறித்துவ மதத்தைப் போதிக்க வந்த மதப்பரப்புரையாளர்களே ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்கேள்விக்கு வித்திட்டவர்களாவார்கள்.

                1813-ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கடைபிடித்து வந்த கல்விக் கொள்கையை புரட்சியாளர் அம்பேத்கர் விரிவாக ஆராய்ந்தார். இந்தியாவின் கல்வி நிலையை அறிவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ‘ஹண்டர் கமிசன்’ அறிக்கையில் தரப்பட்டிருந்த புள்ளி விபரங்களை எடுத்துக்காட்டி, பட்டியல் சமூக மக்களின் கல்வி மேம்பாட்டுக்காக அரசு செய்ய வேண்டியவற்றை விரிவாக ஒரு மனுவாகத் தயாரித்து அதை சைமன்குழு முன்பாக அளித்தார்.

                பிரிட்டீஸ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் பல கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்தார்கள். அதன்படி 1815-இல் பம்பாயில், “பம்பாய்க் கல்விக் கழகத்தை” உருவாக்கினார்கள். இப்பள்ளியிலும், அதன் பிறகு தொடங்கப்பட்ட சுதேசி பள்ளிகளிலும் பட்டியல் சமூக மக்களுக்கு உரிய உரிமைகளை வழங்கப்பட வேண்டும் என்று புரட்சியாளர் அம்பேத்கர் வலியுறுத்திப் போராடினார்.

                பல்வேறு ஒடுக்குமுறைக்கு ஆளாகி தான் அரிதின் முயன்று பெற்ற கல்வியை, இந்தியாவில் வாழ்கின்ற ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட- உழைக்கும் மக்களும் பெற்றாக வேண்டும் என்கிற இலட்சிய வேட்கையோடு, 1928-ஆம் ஆண்டு சூன் 15-ஆம் நாள் “ஒடுக்கப்பட்டோர் கல்விக் கழகம்” என்ற அமைப்பைத் தொடங்கினார் புரட்சியாளர் அம்பேத்கர்.

                புரட்சியாளர் அவர்கள் அவ்வமைப்பின் சார்பில் ஐந்து இலவய விடுதிகள் நடத்தினார்.

                மேலும், 1945-இல் “மக்கள் கல்விக் கழகம்” என்ற ஒர் அமைப்பை உருவாக்கி, அரசிடம் பெற்ற நிதியுதவியுடன், தன்னுடைய பெருந்தொகை மக்களிடம் நன்கொடையாகத் திரட்டிய தொகை ஆகியவற்றைக் கொண்டு பதினைந்து இலட்ச ரூபாயின் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்தார். இன்று அந்த அமைப்பின் சார்பில் மகாராஷ்டிராவில் 9 உயர்நிலைப் பள்ளிகளும், பெங்களூரில் ஒரு பள்ளியும், பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி, ஒரு தொழிற்பயிற்சிக் கல்லூரி உள்ளிட்ட பதினாறு கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகிறது.

1948-இல் கல்வி வள்ளல் ஜோதிபா ஃபூலே அவர்கள், கல்வி உரிமை மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்கள் - பெண்களுக்கென ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கி அவர்களின் வாழ்வில் அறிவு தீபமேற்றினார். 

                இன்னல் பல சுமந்து ஒடுக்கப்பட்ட – உழைக்கும் மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வித்திட்ட புரட்சியாளர் பெருமக்களை இன்றைய படித்த “அறிவு ஜீவிகள்” நினைவு கூர்கிறார்களா என்றால், இல்லை என்றே சொல்லலாம். புரட்சியாளர் அம்பேத்கர் - கல்வி வள்ளல் ஜோதிபா ஃபூலே உள்ளிட்ட சமூக உரிமைப் போராளிகள் எந்த நோக்கத்திற்காக, சமூக விடுதலைத் தேரை இழுத்து வந்தார்களோ, அந்த நோக்கம் இன்னும் நிறைவடைந்து விடவில்லை. ஆனால், அவர்களின் நெஞ்சுறுதியான போராட்டங்களின் விளைவால் கல்வியைப் பெற்று அரசுப்பணியில் கோலோச்சுகிறவர்கள் அந்தத் தேரை சிறிது தூரமாவது நகர்த்த முயற்சிக்க வேண்டும். ஆனால், அவர்களிடத்தே அந்த எண்ணம் துளியும் இல்லை. மாறாக, அவர்களின் செயல்பாடு புரட்சியாளர்கள் இழுத்து வந்த தேரை பின்னோக்கி இழுப்பதாக இருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் சொன்னபடி, “மெத்தப்படித்த மேதாவிகள்” மூன்றாம் தரப் பார்ப்பனர்களாக மாறி வருகிறார்கள். இதற்கு விதிவிலக்கான படித்த மேதைகளும் உண்டு.

                ஒரு காலத்தில் சாதியின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே மறுக்கப்பட்டு வந்த கல்வி, இன்று பணக்காரர் அல்லாத ஒட்டுமொத்த மக்களுக்கும் மறுக்கப்படும் நிலைக்கு வந்து விட்டது. எனவே, பணம் படைத்த பெருமுதலைகளின் குழந்தைகள் மட்டுமே கல்வி பெற முடியும். ஆந்த அளவுக்கு கல்வி வணிகமயமாகி விட்டது.

                “பள்ளிக்கூடம் அதன் அமைப்பு வடிவில் நலிந்தோருக்குப் பாதகமாகவே அமைந்துள்ளது. வாய்ப்புமிக்கோர் தொடர்ந்து அதன் அனுகூலங்களைப் பெற்று வருகின்றனர். ஆனால் நலிந்தோர் தொடர்ந்து நசுக்கப்பட்டு பின்னடைகின்றனர்.

                வியன்னா நாட்டைச் சேர்ந்த கல்வியாளர் இவான் இலிச்சின் .இந்தக் கூற்று இந்தியாவின் இன்றைய கல்வி வணிகச் சூழலை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளது.

                ஒட்டு மொத்த மக்களுக்கும் கல்வி உரிமையை வழங்க வேண்டும் என்று எண்ணுகிற அரசு, கல்வி நிறுவனங்கள் பலவற்றை திறந்து அதற்கு வழிவகை செய்ய வேண்டும். ஆனால், நம்மை ஆளும் அரசுகளோ, கல்வியே தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டு எட்டி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

                கடந்த, அரை நூற்றாண்டுக்கும் மேலாக அரசு நடத்தி வந்த பள்ளிக்கூடங்கள் இன்று மூடுவிழா கண்டு கொண்டிருக்கின்றன. நேற்று முளைத்த தனியார் பள்ளிகள் தன் கவர்ச்சியான விளம்பரத்தால் ஆயிரக்கணக்கான மாணவ – மாணவிகளை சேர்த்து வைத்துக்கொண்டு, அரசுப் பள்ளிகளைப் பார்த்து எள்ளி நகையாடுகின்றன.

                கட்டமைப்பு வசதிகள், நிறைய ஆசிரியர்கள், வெளித்தோற்றக் கவர்ச்சி போன்ற பல காரணங்களால் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கின்றன என்று சொன்னாலும், தனியார் பள்ளிக்கூடங்களைக் கண்டபடி திறந்து விடுவதால் அரசுப் பள்ளிகள் மூட நேரிடும் என்று தெரிந்தும் அரசு இந்தச் செயலை செய்து வருகிறது. மேலும், அரசுப் பள்ளிகளில் படித்து 5,8,10-ஆம் வகுப்புத் தேர்வில் நிறைய மதிப்பெண் பெறும் மாணவர்களை, அரசே தனது சொந்த செலவில் தனியார் பள்ளியில் படிக்க “உதவி” புரிந்து வருகிறது. இதற்குக் காரணம் என்ன? தனியார்ப் பள்ளிகளின் மீதுள்ள பாசத்தைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்?

                தனியார் பள்ளிகளின் ‘தர’ இலட்சணத்தை மக்கள் அனைவரும் திருவண்ணாமலை பள்ளியில் கண்டார்களே! வெளியில் வாராத திருவண்ணாமலைகள் பல உள்ளன.

                இந்தத் தனியார்ப் பள்ளிகளின் அதிபர்கள் யார்? ஒருகாலத்தில் கள்ளச்சாராய வியாபாரம் செய்ய வந்தவர்கள், இக் கல்வி நிறுவன அதிபர்களாக பரிணமித்து நிற்கிறார்கள். பட்டங்கள் பல பெற்ற இளைஞர்கள், அவன் முன் வேலை கேட்டு மண்டியிட்டு ஏங்கி நிற்கிறான். இந்த அவலம் இந்த நாட்டைத் தவிர வேறெங்கும் நடக்குமா?       

                தடுக்கி விழுந்தால் கல்வியியல் கல்லூரியிலோ, பொறியியல் கல்லூரியிலோ, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலோ தான் விழ வேண்டும் என்கிற அளவுக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல்கள் பெருத்துப் போய்க்கிடக்கின்றன. இன்னும் சில திங்கள் கடந்தால் மருத்துவக் கல்லூரியும் - சட்டக் கல்லூரியும் இப்பட்டியலில் இடம் பெற்றாலும் கூட நாம் ஆச்சரியப்படுவதற்கில்லை.

                பெருகிக்கிடக்கும் இத்தனியார் நிறுவனங்களால் ஒடுக்கப்பட்ட ஏழை- எளிய – உழைக்கும் மக்கள் யாரும் கல்வி பெற முடியாது. அக்கல்லூரிகளில் நுழைவாயிலில் ஒரு மாணவன் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்று சொன்னால், அவனின் தந்தை இலட்சங்களுக்கு அதிபதியாக இருக்க வேண்டும். ஆனால், இங்குள்ள ஒடுக்கப்பட்ட – உழைக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் அவ்வாறு இல்லை.

                ஒரு வேளை வங்கிகளின் படிக்கட்டுகளில் அலையாய் அலைந்து கல்விக்கடன் பெற்று, இலட்சக்கணக்கில் செலவிட்டு படித்து முடித்து என்ன பயன்?

                அரசின் கையில் இருந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் தனியார்த் துறையினரின் கைக்கு மாற்றப்பட்டு விட்டது. 80 விழுக்காடு வேலை வாய்ப்புகள் இன்று தனியார்த் துறையினரின் கையில் சிக்கிக்கிடக்கின்றன இந்தியா பன்னாட்டு நிறுவன பெருமுதலாளிகளின் வேட்டைக்காடாகி மாறிவிட்டது.

                ஒரு மாணவன் என்ன படிப்பை எடுத்துப் படித்தாலும் வேலை கொடுக்க அரசுக்குத் திராணியில்லை. இது தெரிந்தும், “ பெட்டிகளை” வாங்கிக் கொண்டு, கண்டமேனிக்கு கல்வி நிறுவனங்களைத் திறக்க அனுமதியளிக்கின்றன. இதன் விளைவு பல்துறைப் பட்டங்கள் பல பெற்ற இளைஞர்கள் இன்று வேலைக்காக வீதிகளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். வேலை வழங்க வேண்டிய அரசோ, அவர்கள் வீதிகள் வந்து போராடி விடக்கூடாது என்ற காரணத்திற்காக, “தகுதித் தேர்வு” நடத்த ஏற்பாடு செய்து ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள் பலரை ‘வடிகட்டும்’ சூழ்ச்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அரசின் இந்தச் சூழ்ச்சியால் பாதிக்கப்படப்போவது ஒட்டு மொத்த உழைக்கும் மக்களும் தான்

                உலகமய – பன்னாட்டு – தனியார் பெரு முதலாளிய நலனுக்கான இந்த அரசு, ஒடுக்கப்பட்ட ஏழை – எளிய- உழைக்கின்ற மக்களுக்கு கல்வி – வேலை கொடுக்காமல் எட்டி உதைக்கவே செய்யும். எனவே, படித்த இளைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி இந்த அரசுக்கு எதிராகப் போராட வேண்டும். உழைக்கும் மக்கள் தங்களுக்கான அதிகாரத்தை போராடி வென்றெடுக்கும் வரை இந்த மக்கள் விரோத அரசிடம் கெஞ்சிக்கொண்டே தான் இருக்க வேண்டும். ஆனால் அதனால் விளையும் பயன் ஒன்றுமிருக்காது. இளைஞர்களே - ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களே சிந்திப்பீர்! களமாட அணியமாவீர்!

- தங்க.செங்கதிர், தேசிய அரசியல் குழு, தியாகி இமானுவேல் பேரவை- தமிழ்நாடு

Pin It