இதை விட கீழ்த்தரமான செயலை 'நாம் தமிழர்' என்ட பெயரில் சீமானும் அவர் சார்ந்த உறுப்பினர்களும் எங்கள் மாவீரர்களுக்கு செய்யவே முடியாது.

ஆயிரம் மாவீரச் செல்வங்களை தமிழீழம் என்ட ஒரு கனவிற்காக விதைகளாக்கி அவர்களுக்காக என்டு ஒரு நினைவுப்பாடலை உருவாக்கி அந்தப் பாடலை வருடத்தில் ஒரு தடவை அதுவும் அந்த 6.05 மணிக்கு மட்டுமே புலிகள் ஒலி ஒளிபரப்பு செய்வார்கள்.

மாவீரர் பாடல்:

மொழியாகி
எங்கள்
மூச்சாகி நாளை
முடிசூடும்
தமிழ்மீது
உறுதி

வழிகாட்டி
எம்மை
உருவாக்கும்
தலைவன் வரலாறு
மீதிலும்
உறுதி

விழிமூடி இங்கே
துயில்கின்ற
வேங்கை
வீரர்கள்
மீதிலும்
உறுதி

இழிவாக வாழோம்!
தமிழீழப்போரில் இனிமேலும்
ஓயோம் உறுதி

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே

இங்குகூவிடும்
எங்களின்
குரல்மொழி
கேட்கிதா ?
குழியினுள்
வாழ்பவரே

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

உங்களைப்
பெற்றவர்
உங்களின்
தோழிகள்
உறவினர்
வந்துள்ளோம்

உங்களைப்
பெற்றவர்
உங்களின்
தோழிகள்
உறவினர்
வந்துள்ளோம்

அன்று செங்களம்
மீதிலே
உங்களோடாடிய
தோழர்கள்
வந்துள்ளோம்

அன்று செங்களம்
மீதிலே
உங்களோடாடிய
தோழர்கள்
வந்துள்ளோம்

எங்கே! எங்கே!
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

எங்கே! எங்கே!
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

தாயகக்கனவுடன்
சாவினை தழுவிய
சந்தனப்பேழைகளே

வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்குகின்றோம்

வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்குகின்றோம்

உங்கள் கல்லறை
மீதிலும்
கைகளை வைத்தொரு
சத்தியம்
செய்கின்றோம்

உங்கள் கல்லறை
மீதிலும்
கைகளை வைத்தொரு
சத்தியம்
செய்கின்றோம்

வல்லமை தாருமென்றுங்களின்
வாசலில்
வந்துமே வணங்குகின்றோம்

சாவரும்போதிலும்
தணலிடைவேகிலும் சந்ததி
தூங்காது

சாவரும்போதிலும்
தணலிடைவேகிலும் சந்ததி
தூங்காது

எங்கள் தாயகம்
வரும்வரை தாவிடும்புலிகளின்
தாகங்கள்
தீராது

எங்கள் தாயகம்
வரும்வரை தாவிடும்புலிகளின்
தாகங்கள்
தீராது

எங்கே எங்கே
ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

எங்கே எங்கே

ஒருதரம்
விழிகளை இங்கே
திறவுங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

ஒருதரம்
உங்களின்
திருமுகம்
காட்டியே
மறுபடி
உறங்குங்கள்

இந்தப் பாடலை உருவாக்கிய புலிகள் அமைப்பு அதை ஏன் ஓர் ஒலிநாடாவாக வெளியிடாது வைத்திருந்தார்கள் என்ற காரணம் தெரியுமா?

இல்லை அதை ஏன் வேறு எந்தவோர் ஒலிபரப்பில் கூட ஒலிபரப்பு செய்வதில்லை என்ட காரணமாச்சும் தெரியுமா?

இதை ஓர் எழுதப்படாத சட்டமாகவே அவர்கள் கடைப்பிடித்தார்கள். இந்தப் பின்னனி தெரியாது, நாம் தமிழர் கட்சியினர் கதைப்பதும், அதற்கு நாம் பதில் கொடுப்பதும் தான் புலிகள் மௌனத்தில் விளைந்த கொடுமை இங்கே. இதே கொடுமையைத் தான் நாம் தமிழரும் செய்யினம்.

இது தொடர்பாக அன்பர் செந்தூரன் பேஸ்புக் தளத்தில் கீழ்க்காணும் இரண்டு தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார்.

1) 1998ம் ஆண்டளவில் இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, அய்க்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் மகேஸ்வரன் அவர்கள் விடுதலைப் புலிகளின் தேசிய எழுச்சிப் பாடல்களை தனது பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்தினார். இதனால் விடுதலைப் புலிகளின் கடுமையான கண்டிப்புக்கு உள்ளானார். விடுதலைப் புலிகளுக்கு அமரர் மகேஸ்வரன் அவர்கள் இந்த சம்பவத்துக்கு முன்னரும் இந்த சம்பவத்துக்குப் பின்னரும் பல வழிகளில் உதவி செய்தவர். (குறிப்பாக எரிபொருள், போக்குவரத்து)

2) 2002ம் ஆண்டளவில் யாழ்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளிதழ், தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உதயன் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டு இருக்கும் புகைபடத்தைப் பிரசுரித்து தனது பத்திரிகைக்கான விளம்பரமாக பயன்படுத்தியது. இதனால் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான திரு வித்தியாதரன் அவர்களை உடனடியாக வன்னிக்கு அழைத்த விடுதலைப் புலிகளின் தலைமை வித்தியாதரனை கடுமையாக கண்டித்ததுடன் பெரும் தொகையான பணமும் அபாரதமாக விதிக்கபட்டது.

ஆனால் உதயன் பத்திரிகை தமிழீழ தேசியப் போராட்டத்துக்கு உறுதுணையான பத்திரிகை. அத்துடன் இந்த வித்தியாதரன் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அமரர் அன்டன் பாலசிங்கம் அவர்களுக்கும் உற்ற நண்பர்.

தமக்குப் பல வழிகளிலும் உதவி செய்த, தமிழீழத்தை சொந்த இடமாகக் கொண்ட, தமிழீழ அரசியலில் பெரும் புள்ளிகளாக விளங்கிய இந்த இருவர் மீதே கடுமையாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கம் - விடுதலைப் புலிகள் இயக்கமும் தமிழீழ மக்களும் தெய்வங்களாக மதிக்கும் மாவீரர்களுக்குரிய பாடலை தமது கட்சி அரசியலுக்குப் பயன்படுத்தியதை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்"

என்று குறிப்பிட்டிருந்தார்.

அப்படியான ஒரு பாடலை, அதன் வரிகளை தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி, தங்கள் தனிப்பட்ட கீழ்த்தர அரசியல் விளையாட்டுகளுக்குப் பயன்படுத்தும் இந்த நாம் தமிழர் கட்சியை, ஓர் ஈழத் தமிழனாக‌ எப்படி ஏற்றுக் கொண்டு பொறுத்துக் கொண்டு போவது?

naam_tamizhar_paadal_450

(நாம் தமிழர் கொள்கை ஆவணத்தில் திருத்தி வெளியிடப்பட்டிருக்கும் பாடல்)

ஏற்கனவே புலிகளின் இலட்சினைகளைப் பயன்படுத்தியும், அதன் அரசியல் கட்டமைப்பின் பெயரைச் சொல்லியும் தங்கள் அரசியலை வளர்ப்பது என்று வந்து, இப்போது 'மாவீரர் பாடல் அவமதிப்பு' வரை வளர்ந்து விட்டுள்ளது. இதை இனி மேலும் பொறுத்துக் கொண்டு, இவர்கள் தான் தமிழர் பிரதிநிதிகள் என்றும், இவர்கள் மூலம் தான் தமிழீழம் மீட்கப்படப் போகிறது என்றும் விளக்கங்கள் சொல்லிக் கொண்டு திரியும் ஈழத்தமிழ் உறவுகள் ஒருகணம் எண்ணிக் கொள்ளுங்கள், நீங்கள் போகும் பாதை சரிதானா என்று!

மே 17 முள்ளிவாய்க்கால் அழிவுகள் கண்டு உலகத் தமிழினம் முழுதும் சோகங்களும் கண்ணீருமாய் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், ஓரிரு நாட்களுக்குள்ளாகவே தேசியத் தலைவருடன் தனக்கு இடம்பெற்ற சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு, அதை முதலில் தான் ஒரு இயக்கமாக உருவாக்குகிறேன் என்ற போதே தொற்றிக் கொண்ட கேள்விகள், பின்னாளில் அதையே ஒரு கட்சியாக அறிவித்து, அரசியல் சதிராட்டம் தொடங்கிய போது, அதன் உள்நோக்கம் மேலும் வெட்ட வெளிச்சமாகியது. பின்னாளில் புலிகளின் இலட்சினையை தனது கொடி என்றும், தொடர்ந்து புலிகளின் அரசியல்துறை நாங்கள் என்றும் வந்தவர்கள் இப்போது கட்டி நிக்கும் வேசம் மிக மிக கேவலமானது.

ஒவ்வொரு காலத்திலும் தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தமது அரசியல் இலாபங்களுக்கு ஈழத்தைப் பயன்படுத்துவது போன்று இன்று சீமானும் தனது பங்கிற்கு 'மாற்று அரசியல், புரட்சி அரசியல்' என்று அதே ஈழ மோகத்தைத் தான் வேறு வடிவில் தனது அரசியல் உள்நோக்கங்களுக்காகப் பயன்படுத்துகிறார். இதை அவரது தொடர்ந்து வரும் செயற்பாடுகள் வெட்ட வெளிச்சமாக்கிக் கொண்டு வருகின்றன‌.

வேடிக்கையும் வேதனையானதும் என்னவெனில், தேடுவார் அற்று, ஆதரவு வேண்டி தவித்து நின்ற ஈழத்தமிழ் உறவுகள் சீமானின் இந்த உணர்ச்சி அரசியல் பால் ஈர்க்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து அவர்களைத் தனது கட்சி உறுப்பினர்களாக உள்வாங்கிக் கொண்டு, அவர்கள் மூலம் ஈழ ஆதரவு தனக்குப் பெரிதும் உள்ளது போன்ற ஒரு தோற்றப்பாட்டை அவர் வெளி உலகிற்குக் காட்ட முனைவதும்தான். இதை அந்த உறவுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய அரசியல் ஆட்சி முறையில் அங்கு ஆட்சிக்கு வரும் எந்த கட்சியும் மத்திய அரசையோ, அங்கு வெளிவிவகாரத் திட்டங்களை உருவாக்கும் புலனாய்வு அமைப்புகளை மீறியோ எதுவுமே செய்து விட முடியாது. இது புலிகளுக்கு நீண்ட ஆதரவும் பெரும் உதவியுமாக இருந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் முதல் தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்று. ஆக தமிழக அரசியல் தலைவர்கள் மேல் உள்ள மதிப்பும் ஒரு மரியாதையும் அன்று தொட்டு இறுதிக் கணம் வரை புலிகளிடமும் அதன் தலைமையிடமும் வெளிப்படுத்தப்பட்டதேயொழிய அவர்கள் எப்போதும் தமிழகத் தலைமைகளை நம்பி தமது போராட்டதை ஒப்படைத்ததுமில்லை; கைவிட்டுப் போனதும் இல்லை. இதை இறுதி யுத்த காலத்தில் அரசியல்துறை பொறுப்பாளருக்கும் தமிழக அரசியல் தலைமையான கருணாநிதிக்கும் இடையில் இருந்த தொடர்பாடல்களே சான்று.

வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களை வைத்து அரசியல் செய்ய முடியாது. உணர்வுள்ள இளைஞர்களை உசுப்பி எழுப்புவதாக பலர் குறிப்பிடும் இந்த செயலைச் செய்ய சீமான் தேவையில்லை; இந்த நாம் தமிழர் தேவையில்லை. எந்தக் கட்சியும் அரசியலும் இல்லாத 'முத்துக்குமார்' அதை செய்து காட்டி விட்டான்.

tamil_eelam_flag Naam_Thamilar_flag
புலிகளின் இலட்சினை நாம் தமிழர் இலட்சினை

நாம் தமிழர் தனக்கென ஒரு தனித்துவ அடையாளத்துடன் களமிறங்கியிருக்கலாம். அப்படி இறங்கினால் அரசியல் போட்டியில் வெல்ல முடியாது என்று புலி அடையாளங்களுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். எது சந்தையில் அதிகம் விற்பனை ஆகும் என்று பார்த்து அதை விளம்பரம் செய்வது தான் வழமை. அதைத் தான் சீமான் இன்று செய்வது. தமிழக அகதி முகாம்களிலும் வீதிகளிலும் பல தசாப்தங்களாக அல்லலுறும் ஈழத்தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய அரசியல் உதவிகளே நிறைந்திருக்க, இவர் செய்யப் போவதாக சொல்லும் அரசியல் புரட்சி நடக்கக்கூடியதா என்று சிந்தித்துப் பாருங்கள்.

எங்கள் பிரச்சனை என்னவென்றால் நீங்கள் தாராளமாக‌ புரட்சி செய்யுங்கள்; அரசியல் செய்யுங்கள். ஆனால் புலிகளின் இலட்சினைகளையோ, புலிகளின் சின்னங்களையோ, மாவீரர் அடையாளங்களையோ உங்கள் அரசியலுக்கு இழுக்காதீர்கள். இன்று அந்த அதிகாரம் யாருக்கும் கொடுக்கப்பட்டதல்ல. அது முள்ளிவாய்க்காலுடன் மௌனிக்கப்பட்ட ஓர் அமைப்பு.

முடிந்தால் இணையத்தில் எழுதும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள், உங்கள் தலைமையிடம் சொல்லுங்கள், 'அண்ணா! நாம் நமக்கென தனித்த அரசியல் செய்யலாம். புலிகள் இலட்சினை எதுவும் வேண்டாம்' என்று. அது தான் நீங்களும் உங்கள் கட்சியும் செய்ய வேண்டியது. ஆனால் இதை நீங்கள் செய்வீர்கள் என்று நாம் நம்பவில்லை. ஏனெனில் உங்கள் அமைப்பு இயக்கமாக உருவானபோது, அதில் உறுப்பினர் என்று பெயரைப் பதிவு செய்தவன் நான். பின்னாளில் கொடியில் புலிகளின் அடையாளம் வந்தபோது அப்போது அதை சீமானிடம் நேரடியாக சுட்டிக்காட்டினேன். 'தனக்கு இது தொடர்பாக ஒன்றும் தெரியாது அடுத்த முறை இப்படியான தவறு நடக்காது' என்று சொன்னார். ஆனால், அன்று தொட்டு இன்று இந்த மாவீரர் பாடல்வரை எதுவுமே நீங்கள் திருத்தியதில்லை. அனைத்தும் ஒரு திட்டமிட்ட செயலாகவே உங்கள் தனிப்பட்ட அரசியலுக்கு விளம்பர நோக்காகவே பயன்படுகிறது. முடிந்தால் இந்த முறையாவது இவை அனைத்தையும் மாற்ற முடிகிறதா பாருங்கள் . இல்லாவிட்டால் இந்த எதிர்ப்பு நிச்சயம் தொடரத்தான் செய்யும்.

"புலிகள் இல்லை; அதன் தலைமை இல்லை; இங்கே யாரும் உரிமை கோர வர முடியாது. வந்தால் உங்களுக்கு அதிகாரம் தந்தது யார் என்று கேட்பேன்." இது தான் இணையதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் கேட்கும் அதிகாரத்தின் தொனி. தள்ளி இருந்து வேடிக்கை பார்த்த உங்களுக்கே இவ்வளவு அதிகாரம் வந்தால் உள்ளேயே இருந்த எமக்கு எவ்வளவு வரும்? நாங்கள் கட்டளைக்குப் படிந்து பழகியவர்கள். அது தான் வேறுபாடு.

நீங்கள் புலிகளையும் மாவீரர்களையும் மதிப்பவர்களாக இருந்திருப்பின் புலிகள் ஆட்சியில் இருந்தபோதே இந்த அரசியலைத் தொடங்கியிருக்க வேண்டும். அப்போது தெரியாத எதை இப்போது புதிதாக கண்டுபிடித்தீர்கள்?

வன்னியில் போர் நடந்தபோது அங்கு சென்று வந்தவர் தானே சீமான். அப்போது வெளிவராத புகைப்படம் எதற்காக புலிகள் அழிவின் பின் வெளிவந்தது?

வன்னியில் யுத்தம் வந்தபோது வெளியான தொலைபேசி செய்தியில் தணிக்கை செய்யப்பட்ட சீமானிடம் சொல்லுங்கோ என்ற வரிகள், ஏன் புலிகள் அழிவின் பின்னால் தணிக்கை நீக்கப்பட்டது?

இப்படி எம்மிடம் கேள்விகள் பல! இந்த தொலைபேசி பதிவு பற்றி உலகத்தில் பலரிடம் பல பதிவு உண்டு. அப்படிப் பார்த்தால் ஒவ்வொருத்தனும் புதிய கட்சி தான் ஆரம்பிக்க வேண்டும்.

நாம் தமிழர் என்று புலம்பெயர் நாடுகளில் நிதி சேகரித்தும், அதன் பின்னால் சில ஈழ ஆதரவாளர்களை உள்வாங்கிக் கொண்டும் இயங்க தொடங்கிய இவர்கள், ஆவணத்தில் 'இது இந்திய குடியுரிமையாளர்களுக்கு மட்டுமானது' என்று பதிந்திருக்கிறார்கள். காரணம், உலகத் தமிழர் முழுவ‌தும் இணைவதாக இருப்பின் அது இந்தியாவில் தடை செய்யப்படலாம் என்ற அச்சம்தான். ஆக இங்கு உள் நோக்கம் வேறு; வெளி நோக்கம் வேறு. புலிகள் அடையாளம் கட்சி வளர்க்க; கட்சி செயற்பாடு தமிழகத்தில் மட்டும்.

'பெரியாரின் பேரன்' என்று வந்தவர், இன்று 'பெரியார் துரோகி' என்கிறார். 'நான் திராவிடன்' என்று மேடையில் முழங்கியவர், 'இன்று திராவிடன் துரோகி' என்று சொல்கிறார். 'இன்று தேசியத் தலைவரின் தம்பி, எங்கள் தலைவன்' என்கிறார். நாளை என்ன செல்லுவார் என்று நீங்களே யோசியுங்கள்!

முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயிற்கு மேலே மேடை போட்டவர்தான் சீமான். வடிவாக உற்று நோக்கினால் முத்துகுமாரின் தியாகத்திற்கு வந்த உணர்வுகளே சீமானின் பின்னால் நிற்பதுவும். அதைத் தனக்கான ஒரு அரசியலாக புலிகளின் அடையாளத்தைக் கொண்டு  அவர் தொடங்கியுள்ளார். அவரது இந்த அரசியல் செயற்பாடு இந்தியாவில் எவ்வளவு தூரம் சரியாகப் போகமுடியும்? இந்த ஆவணம் தமிழகத்தில் குழப்பங்க‌ளையும், மத ரீதியான பகைமையையும் தான் வளர்க்க முனையுமே அன்றி இது ஒற்றுமைக்கு வழி சமைக்காது. பலர் சொல்வது போல ஈழத்தமிழர்களாகிய நாம் சீமானை ஆதரிப்பது, நமக்கு இலாபத்தைக் காட்டிலும் பல மடங்கு எதிர்ப்பினைத் தான் உருவாக்கித் தரப் போகிறது.

- துரைரத்தினம் தயாளன்

Pin It