கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP)யின் தென் இந்தியாவிற்கான பொதுச் செயலாளராக இருக்கும் தோழர்.அ.ஆனந்தன் அவர்கள் மாணவப் பருவத்திலிருந்தே கம்யூனிச இயக்கங்களில் ஈடுபாடு கொண்டு SUCI கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர் தலைவராக அனுபவம் பெற்றவர். SUCI கட்சி தமிழகத்தில் வேரூன்றக் காரணமாக இருந்தவர். AIUTUC-யில் பொறுப்பாளராக இருந்த இவர் பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கியவர். குறிப்பாக திண்டுக்கல் விளாம்பட்டி காகித நூற்பாலை தொழிலாளர் சங்கம், விருதுநகர் சுவாமிஜி மில், சிவகாசி பட்டாசுத் தொழிலாளர் சங்கம் ஆகியவை உருவாவதில் பெரும்பங்களித்தவர். வங்கி ஊழியர் சங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்.

anandhan_423சோவியத் யூனியன் இருந்தபோது ரசியாவில் யூனியன் பயிற்சி வகுப்புகளில் பங்கு பெற்றவர். SUCI திருத்தல்வாதப் பாதையில் பயனித்தபோது அதில் இருந்து விலகிய பல தோழர்கள் செயல்பாடற்றவர்களாக ஆனபோது, அவர்களில் பலரை ஒருங்கு திரட்டி தோழர்.சங்கர் சிங் தலைமையில் கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பிளாட்பார்ம் (CWP) என்ற அமைப்பு உருவாகக் காரணமானவர். மூத்த தொழிற்சங்கவாதியும், கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்ட அனுபவங்களைப் பெற்றவருமான அவரிடம் சர்வதேச அளவில் மிகப்பெரிய சக்தியாக உருவான கம்யூனிச இயக்கங்கள் ஏன் பின்னடைவை சந்தித்தன, இந்தியாவில் தத்துவார்த்த ரீதியிலான குழப்பங்கள் காணப்படுவது ஏன்? கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியது என்ன என்பது போன்ற பொதுவான கேள்விகளை முன் வைத்தோம்.

- வழக்கறிஞர் கதிரேசன்

கேள்வி: 20 நூற்றாண்டின் முன் பகுதியில் கம்யூனிச இயக்கங்கள் வெகு வேகமாக பரவியதற்கான காரணங்கள் என்னவென்று கூற முடியுமா ?

பதில்: இயல்பாகவே அன்று வாழ்ந்த மக்களிடம் தொழிலாளர் வர்க்க கலாச்சாரம் இருந்தது. இன்றைக்கு ஊடகங்கள் உருவாக்கிய சொகுசு வாழ்க்கை கனவு அவர்களிடம் இல்லை. இன்று நிலவுவது போல தனிநபர் வாதம் அன்றுள்ள தொழிலாளர்களிடம் இல்லை. மார்க்சிய கண்ணோட்டம் உருவான காலத்தில் தொழிலாளர்களாக உருவான பெரும்பகுதியினர் பண்ணை அடிமைகளாக இருந்தவர்கள். அவர்கள் தங்கள் உழைப்பை சுதந்திரமாக விற்றுவாழும் கூலி அடிமைகளாக இருந்தனர். முதலாளித்துவ சமூகத்தில் 18 மணி நேரம் வேலை நேரமாக இருந்த காலத்தில் இன்றுள்ள பல உரிமைகள் அன்று இல்லை. அன்றைய தொழிலாளர்கள் இழப்பதற்கு எதுவுமற்ற வர்க்கமாக இருந்தனர். முதலாளித்துவத்தின் கொடுமையை எடுத்து சொல்லவேண்டிய தேவையே இல்லாதவாறு இயல்பாகவே அவர்கள் அதனை உணர்ந்திருந்தார்கள். அன்று உறுதியாக சோசலிசம் வந்துவிடும் என்று உழைக்கும் மக்கள் நம்பினார்கள். தொழில் ரீதியாக வளர்ச்சி அடைந்த அமெரிக்க, ஜெர்மனியில் விரைவாக சோஷலிசப் புரட்சி ஏற்பட்டு விடும் என்று மார்க்ஸ் எதிர்பார்த்தார்.

கேள்வி: தோழர் லெனினின் தலைமை பற்றி?

பதில்: மார்க்ஸின் கனவை ரஷியாவில் நனவாக்கிக் காட்டியவர் தோழர் லெனின். சித்தாந்த ரீதியாக ஆராய்ந்து புரட்சி என்பதை அறிவியல் பூர்வ துல்லியத்துடன் பார்த்தவர் லெனின். தன்னெழுச்சி அதாகவே சமுதாய மாற்றத்தைக் கொண்டு வராது என்று லெனின் உறுதியாக நம்பினார். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக போல்ஸ்விக் கட்சியை கட்டியமைத்தார். அரசு என்பது கட்டுப்பாடான வடிவமைப்பில் இயங்குவது. அந்த அரசைத் தூக்கி ஏறிய வேண்டுமெனில் அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட கட்சி என்பது வேண்டும் என்று வலியுறுத்தினார். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அமைப்புகளின் முழக்கங்களை முன்வைத்தார். அமைப்பு ரீதியிலான திட்டமிடுதலை சிறப்புறச் செய்தார். அதிருப்தியாளர்களை இனம் கண்டு அவர்களையும் ஒருங்கிணைத்து அமைப்புகளை வளர்த்தெடுத்தார். கட்சி செய்யவேண்டிய பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு கொடுத்தார். கட்சியினரின் சித்தாந்த வலுவினை வளர்த்தெடுத்தார். புறச்சூழ்நிலைகளை திறம்பட கையாண்டார். நடைமுறை ரீதியாக கிடைத்த படிப்பினைகளை கணக்கில் கொண்டார். தலைவர்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்ற கலாச்சாரம் வளர்ந்தது. ஒரு தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஒரு முன்மாதிரி தலைவராக லெனின் உருவானார். இயக்கம் வெற்றி பெற்றால் அதன் பலவீனத்தையும் மற்றும் தோல்வியுற்றால் அதன் சாதக அம்சங்களையும் பார்க்கும் போக்கை லெனின் வளர்த்தெடுத்தார்.

தனிநபர் ரீதியான சாகச வாதங்களை வைத்து மட்டுமே தலைவர்களைப் பார்த்த உலகம் கூட்டுவாத கலாச்சாரத்தின் மூலம் அருமையான மக்கள் தலைவர்களாக போல்ஷ்விக் கட்சியின் தலைவர்கள் உருவானாதைப் பார்த்தது. முதல் உலக போர், அதனால் வந்த பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சரியாகக் கையாண்டதால் ரஷ்யப் புரட்சி மகத்தான வெற்றியினைப் பெற்றது. முதல் உலக போரின் பொது "அனைத்தும் போர் முனைக்கே" என்ற தேசிய வெறியை ஊட்டும் கோஷத்தை முதலாளிகளின் பிரதிநிதியான டூமா முன்வைத்தது. ஆனால் லெனின் தனது ஏகாதிபத்திய நலன்களுக்காக மக்களை பலிகடாய்களாக்குவதை எதிர்த்து நின்றார், "ரஷிய மக்களுக்கு தேவை ரொட்டியும், அமைதியும்" என்ற முழக்கத்தை வைத்து மக்களை அணிதிரட்டினார்.

பிரச்சாரப் பலத்தினால் மட்டுமல்ல நடைமுறை ரீதியாக எழுந்த பல இயக்கங்கள் அங்கு சோஷலிசப் புரட்சி ஏற்பட வழிவகுத்தன. அக்டோபர் புரட்சியின் மூலம் முதலாளிகளின் கைகளில் இருந்த ஆட்சியதிகாரம் தொழிலாளர்கள் கைகளுக்கு மாறியது. அடிமை மற்றும் நிலப்புரபுத்துவ சமூக அமைப்புகளின் மிச்ச சொச்சங்கள் இன்றும் நிலவவே செய்யும். எது பிரதான முரண்பாடாக இருக்கும், எது வளரும் சக்தியாக இருக்கும் என்பதைத் தீர்மானித்து அதை வென்றெடுக்க வேண்டும்; முதலாளித்துவம் முழுமையாக வளரவேண்டும் என்று கூறி காலம் தாழ்த்தி எதிரிக்கு வழி திறந்து விடக்கூடாது.

லெனினுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பிற்கு வந்த ஸ்டாலின் சோஷலிச அரசிற்கான அடித்தளத்தை வலுவாக இட்டார். ஸ்டாலின் தலைமையில் பீடு நடைபோட்ட சோவியத் யூனியன் அமெரிக்கா 200 ஆண்டுகள் அடைந்த வளர்ச்சியை 30 ஆண்டுகளில் சாதித்துக் காட்டியது. சோவியத் யூனியன் வேகமாக அடைந்த தன்னிறைவான வளர்ச்சியை வைத்து தான் ஒரு கட்டத்தில் ஸ்டாலின் 'சோவியத் யூனியன் மட்டுமே கம்யூனிசத்தை நோக்கி முன்னேற முடியும்' என்று கூறினார். 

கேள்வி: சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன?

பதில் : ஸ்டாலின் காலம் வரைக்கும் திட்டமிட்ட உற்பத்தியும், உணர்வுமட்டத்தினைப் பராமரித்தலும் திறம்பட நடைபெற்றது. ஸ்டாலினுக்குப் பின்பு தலைமை பொறுப்புக்கு வந்த குருசேவ் போன்ற திருத்தல்வாதிகளால் உணர்வுமட்டத்தினைப் பராமரிப்பதும், திட்டமிடுதலும் சுத்தமாக கைவிடப்பட்டது. உதாரணமாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம். ஒரு சமயம் அல்பேனியா சென்றிருந்த குருசேவ் அங்கு பொறுப்பிலிருந்த என்வர் ஹோச்ஹாவை சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பாலைவனம் போல் இருந்த நிலத்தை கஷ்டப்பட்டு கோதுமை பயிரிடுவதற்காக சீர்படுத்திக் கொண்டிருந்ததைப் பார்த்த குருசேவ், "எதற்காக இவ்வளவு கஷ்டப்பட்டு காடாக இருந்த நிலத்தை சீர்படுத்துகிறீர்கள், நான் உடனேயே இரண்டு கப்பல் நிறைய கோதுமையை அனுப்பி வைக்கிறேன். இந்த முயற்சியைக் கைவிடுங்கள்" என்றார். அதற்கு என்வர் ஹோச்ஹா, "நீங்கள் அடுத்த வருடம் வரும் போது இந்த நிலத்தில் விளைந்த கோதுமையில் உங்களுக்கு ரொட்டி சுட்டு தருகிறேன்" என்று கூறினார்.

இவ்வாறு குருசேவ் ஒருவிதமான மேலாண்மைப்போக்கை உருவாக்கினார். போதுமான வளர்ச்சியை அடைந்துவிட்டோம் என்று முழுவதுமாக தத்துவார்த்த உணர்வுமட்டத்தினைக் கைவிட்டுவிட்டார். அப்போது ஆசிய நாடுகள் பல புதிதாக சுதந்திரம் அடைந்திருந்தன. ஆசிய நாடுகளில் முதலாளித்துவம் வளராத நிலையில் சோசலிசம் வந்துவிடக்கூடிய சூழல் இருந்தது. அவை அனைத்தும் ஸ்டாலினுக்குப் பிறகு வந்த திருத்தல்வாதத்தால் கனவாகவே ஆகிவிட்டது. இருந்தபோதும் சோவியத் யூனியன் உடைந்து சிதறியபோது கூட அதிகபட்ச மத்திய தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் நாடாக ரசியா இருந்ததை உலகமே ஏற்றுக்கொண்டது.

கேள்வி: ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசத்தின் தாக்கம்? யூரோ கம்யூனிசம் குறித்து?

பதில் : அடுத்து கம்யூனிசம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் கொண்ட முதலாளித்துவ நாடுகளாக இருந்த ஐரோப்பாவில் ரசியாவில் ஏற்பட்ட மாற்றங்களில் இருந்து பாடம் படித்துக் கொண்ட முதலாளித்துவ அரசுகள் உலகம் முழுவதும் தாங்கள் அடித்த கொள்ளையில் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கு வாழ்க்கை சம்பளமாகக் கொடுத்தன. இதனால் அங்குள்ள தொழிலாளர்கள் இழப்பதற்கு ஏதுமற்ற தொழிலாளர்களாக இல்லாத நிலையை ஏற்படுத்த முயற்சி செய்தன. பங்கு விற்பனை மையங்களில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்து லாபம் சம்பாதித்து பெரிய அளவிற்கு வளர முடியும் என்ற நப்பாசையைத் தோற்றுவித்தன. தனிமனிதவாதம் அந்த நாடுகளில் ஊட்டி வளர்க்கப்பட்டது. தோழர் ஸ்டாலின் பற்றிய பொய்யான வதந்திகள் கடுமையாக பரப்பப்பட்டு, கம்யூனிசத்தின் மீது ஒருவிதமான வெறுப்பு அந்த நாட்டு தொழிலாளர்களிடையே ஊட்டப்பட்டது. தோழர்.லெனின் முன் வைத்த பாட்டாளி வர்க்க முன்னணிப்படை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற நிலையை எடுக்க அந்த நாட்டு கம்யூனிஸ்டுகள் தவறிவிட்டனர். இது எந்த அளவிற்குப் போனதென்றால் மாணவர்களின் எழுச்சியைக் கொண்டே புரட்சியை நடத்த முடியும் என்ற அளவிற்கு தவறான வழிமுறைகளைப் பின்பற்றினர். இவை பொதுவாக யூரோ கம்யூனிசம் என்று அழைக்கப்படுகிறது.

கேள்வி: டிராட்ஸ்கியவாதம் பற்றி?

lenin_287பதில் : புரட்சி என்பது வெளிப்பார்வைக்கு தேசியத்தையும் உள்ளடக்கத்தில் சர்வதேசியமாகவும் இருக்கும் என்றும்,ஒரு நாட்டிலும் கூட புரட்சி சாத்தியம் என்றும் லெனின் நிரூபித்தார். ஆனால் இதிலிருந்து மாறுபட்டு, 'ஒரு நாட்டில் மட்டும் புரட்சி சாத்தியம் இல்லை; வெளிநாடுகளுக்கு புரட்சியை ஏற்றுமதி செய்ய வேண்டும்; பாட்டளிவர்க்கதின் முன்னணிப் படையாக வலுவான கட்சி தேவை இல்லை' என்ற அடிப்படையிலேயே கோளாறான கோட்பாடுகளைக் கொண்ட டிராட்ஸ்கிய குழுக்கள் ஐரோப்பாவில் வளர்ச்சியடைந்தன. அவை கம்யூனிச இலக்கியங்களை பரப்பவும் செய்தன. முன்பை விட தற்போதுள்ள உலகமயமாக்குதலின் காரணமாக அவர்களுக்கான வாய்ப்புகள் பெருகிவிட்டன. ஆனால் உழைக்கும் மக்கள் அவர்களாகவே தாங்கள் அடிமைகள் என்று உணர்ந்து வெளியே வந்து புரட்சியை நடத்துவார்கள் என்பது சாத்தியமல்ல. இதனால் தான் பல்வேறு தன்னெழுச்சி இயக்கங்கள் வந்தபோதும் அவை அமைப்பாக்கப்படததால் புரட்சி என்பது நெடுங்கனவாகவே ஆகிவிட்டது. புரட்சியை நடத்த பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான கட்சி கண்டிப்பாக வேண்டும். 

கேள்வி: முதலாளித்துவத்திற்கு தீர்வே கிடையாதா?

பதில் : முதலாளித்துவம் என்னென்ன வளர்சிகளைக் கொண்டு வர முடியுமோ அனைத்து வளர்ச்சிகளையும் கொண்டு வந்துவிட்டது. அது எதற்காக கொண்டு வந்ததென்றால் அதன் வளர்ச்சிக்காக கொண்டு வந்தது. ஆனால் இன்று சமூகத்தின் தங்குதடையற்ற வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கிறது. அதன் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு இயங்கக்கூடிய முதலாளித்துவம் நவீன மயத்தின் பலன்களை அனுபவிப்பதற்காக தொழிலாளர்களை ஆள் குறைப்பு செய்கிறது. நவீனமயத்தினால் உழைப்பிலிருந்து மனிதன் படிப்படியாக விடுவிக்கப்பட வேண்டும், ஆனால் அதற்கு நேர்மாறாக இன்று கூடுதல் வேலை வாங்கப்படுவதும், வேளையில்லாத் திண்டாட்டமும் ஏற்பட முதலாளித்துவம் காரணமாக உள்ளது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி என்பதாக இல்லாமல் சந்தையில் எந்தப் பொருளின் விற்பனை நன்றாக உள்ளதோ அந்தப் பொருளை உற்பத்தி செய்து குவிக்கிறது. இப்படி எல்லா வகையிலும் உழைக்கும் மக்களை போராட வேண்டிய கட்டாயத்திற்கு முதலாளித்துவம் உருவாக்கியுள்ளது. அதன் சவக்குழியை அதுவே வெட்டத்துவங்கிவிட்டது. உண்மையில் மக்களது பிரச்னைகளுக்கு முதலாளித்துவமே காரணம். அது தீர்வு கிடையாது. 

கேள்வி: சோஷலிச ஆட்சியில் இலக்கியத்திற்கான பங்களிப்பு குறைவாக இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து?

பதில் : ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பே நல்ல இலக்கியங்களுக்கான கருவை கொண்டிருக்கும். ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூகத்தைக் கட்டமைத்துக் கொண்டிருந்த சோவியத் யூனியனில் அதற்கான சூழல் இல்லாமல் இருந்தது என்று தான் கூற வேண்டும். ஆனாலும் ஸ்டாலின் அதைக் குறிப்பிட்டு நமது கட்டமைப்புகளில் இருக்கும் குறைபாடுகள் இலக்கியங்கள் வாயிலாகச் சுட்டிக்காட்டப்பட்ட வேண்டும் என்று குறிப்பிட்டார். அத்தோடு சோவியத் ரஷ்யா உருவான புதிதில் அதை அழித்தொழிக்க உலக நாடுகள் களம் இறங்கின. அவற்றையும் சமாளித்துக் கொண்டு சோஷலிச கட்டுமானப் பணிகளையும் செய்யும் மிகப்பெரிய பொறுப்பு இளம் சோஷலிச ரஷியாவின் தோள்களில் விழுந்தது.

இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாசிசப் படையினை எதிர் கொண்டது ரஷிய ராணுவம் மட்டுமல்ல; மக்களும் தான். ஆம் ஒவ்வொரு மக்களும் போர்வீரர்களானார்கள். ஜெர்மன் ராணுவம் ரசியாவில் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் சண்டை போட வேண்டி இருந்தது. இரண்டாம் உலகப்போரில் போல்ஸ்விக் கட்சியின் முக்கியமான பொறுப்பாளர்கள் பலரை சோவியத் யூனியன் இழந்தது. மிகச் சிறந்த போர் சார்ந்த இலக்கியங்கள் பல போருக்குப் பின் வந்தன. அமைப்பில் சிறந்த எழுத்துத் திறமை பெற்ற யாரும் எழுதலாம் என்ற நிலை எந்த முதலாளித்துவ நாட்டிலும் காண முடியாததாகும். இந்த நிலையிலும் உலகம் முழுவதற்கும் அனைத்து மொழியிலும் மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் படைப்புகளும் ரஷிய செவ்விலக்கியங்களும் கொண்டு செல்லப்பட்டன. சோவியத் கூட்டமைப்பில் உள்ள அனைத்து நாட்டு மொழிகளும் தன்னிறைவை அடையும் வண்ணம் அனைத்து படைப்புகளும் உருவாக்கப்பட்டன.

அமெரிக்க இருநூறு ஆண்டுகள் வளர்ந்த வளர்ச்சியை முப்பதே ஆண்டுகளில் வளர்ந்து காட்டியது ரஷ்யா. அது மட்டுமல்ல இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட மோசமான சூழ்நிலைகளை தாங்கிக்கொண்டும் பத்தே ஆண்டுகளில் இழந்த அனைத்து வளர்ச்சியையும் பெற்றது. உலகம் முழுவதும் புகழ் பெற்ற ரஷிய எழுத்தாளர் மார்சிம் கார்க்கியை எந்த மேற்குலக நாடும் போற்றவில்லை. சோவியத் யூனியனை விமர்சனம் செய்தாலே புகழ் பெறலாம் என்ற எண்ணத்துடன் எழுதிய சில எழுத்தாளர்களை முதலாளித்துவ நாடுகள் போற்றின. அதற்குக் காரணம் அதன் மூலம் எங்கே கம்யூனிச பூதம் நம்மையும் தாக்கி விடுமோ என்ற அச்சத்தால், மக்களுக்கு சோசலிசத்தின் பாலான வெறுப்பை உருவாக்குவதற்கு அவர்கள் பயன்பட்டனர். அதுவே அவர்கள் ரஷியாவில் இருந்து கொண்டே எழுதியவரைக்கும் தான் புகழப்பட்டனர். அவர்கள் ரஷியாவை விட்டு வெளியே வந்த பிறகு இதே மேற்குலக நாடுகள் அவர்களை சீந்தக்கூடவில்லை. இதில் அலெக்சாண்டர் சொல்ழேநிட்சின் என்ற எழுத்தாளர் எழுதிய cancer ward என்ற நாவலை தூக்கி வைத்துக் கொண்டாடின மேற்குலக நாடுகள். ஆனால் அவர் ஒரு இடத்தில் 'தக்காளி வரத்து சந்தையில் அதிகமாக இருந்தால் தக்காளி விலை போகாது அதைப்போலவே பெண்கள் சமூகத்தில் அதிகமாக இருந்தார்கள் என்றால் அவர்கள் விலை போகமாட்டார்கள்' என்று எழுதினார். இப்படியான எழுத்தாளர்களைத் தான் அமெரிக்க கொண்டாடியது. இவ்வாறு ரஷியாவில் சோஷலிச கால கட்டத்தில் நல்ல இலக்கியங்கள் வெளிவரவில்லை என்பதை ஏற்க முடியாது. 

கேள்வி: இன்று புதுப் புது இசங்கள் தோன்றுகின்றனவே?

பதில் : இசம் என்பது அடிப்படையையே மாற்றக் கூடிய சிந்தனைப் போக்குக்கு வழிவகுக்கக் கூடியது. மார்க்சிசம், லெனினிசம் தவிர வேறு எதுவும் இசம் கிடையாது. மாவோவே தன்னை ஒரு சிறந்த மார்க்சிய ஆசிரியன் என்றே கூறினார். மாவோயிசம் என்று கூறாததால் அவரை குறைத்து மதிப்பிடுகிறோம் என்பதல்ல. தோழர்.மாவோ சிந்தனைகள், சேகுவேராவின் வழிமுறைகள் , சிப்தாஷ் கோஷின் சிந்தனைகள் என்று பிற தலைவர்களின் கருத்துகளை நாம் கூறலாம். 

கேள்வி: சேகுவேரா புரட்சியின் அடையாளமாக இருக்கிறார் என்பது உண்மை தானே ?

பதில் : மாபெரும் மனிதாபிமானியான சேகுவேரா இந்த உலகத்தையே ஏகாதிபத்தியத்தின் கோரப்பிடியில் இருந்து விடுவிப்பதாகக் கிளம்பியவர். அந்த அளவிற்கு இந்த உலகையும், அதன் மக்களையும் நேசித்தவர். அவரின் தத்துவமே 'ஒரு சிறு தீப்பொறி மிகப்பெரிய காட்டுத் தீயாக பரவும்' என்பது தான். கடும் அடக்குமுறையில் ஒரு சிறு எதிர்ப்புக்குரல் கூட எழாதவாறு அடக்குமுறை கொழுந்துவிட்டு எரியும் நாடுகளில் சில சாகசவாத நடவடிக்கைகள் கூட வெற்றிகரமாக புரட்சியைக் கொண்டு வரும். கியூபாவில் பாடிஸ்டா அரசுக்கு எதிராக இருந்த மனநிலையையும் பிடலின் இயக்கத்திற்கு அவ்வாறு தான் பயன்பட்டது. அந்த ஆதரவை ஒருங்கு திரட்டி கியூபாவில் போராடி வென்றனர். ஆனால் பொலிவியாவின் புறச் சூழ்நிலையோ புரட்சியைக் கொண்டுவரும் அளவிற்கு இல்லாததால் சேகுவேராவின் அனைத்து முயற்சியும் பொலிவியாவில் எதிர்மறையானது. பொலிவியாவின் விவசாயிகளே புரட்சியாளர்களை கட்டிக் கொடுத்தனர். பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் புரட்சியின் ஆரம்பத்திற்கான கருதுகோள்களே தவிர புரட்சிக்கு புறச்சூழ்நிலை மிகவும் முக்கியம். பிரஞ்சு எழுத்தாளர் டிப்ரேயை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவர்கள் மேல் விழுந்ததால் புரட்சியாளர்கள் சோர்வடைந்தனர். எந்த மக்களின் நலனுக்காக இவர்கள் போராடினார்களோ அந்த மக்களே இவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர். இவ்வாறு கியூபாவில் வெற்றி பெற்ற புரட்சி, பொலிவியாவில் தோல்வியடைந்தது. ஆனாலும் மக்களை அவர் நேசித்ததைப் போலவே உலகம் உள்ளளவும் சேயையும் மக்கள் நேசிப்பார்கள் என்பது நிச்சயம்.

கேள்வி: திருத்தல்வாதம் உலகம் முழுவதற்கும் தலையெடுத்ததற்கு காரணம்?

பதில் : 20 கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரசில் (CPSU) இதற்கான திறவு கோளாக அமைந்தது. அமைதியான முறையிலையே சோசலிசப் பாதையை நோக்கி முன்னேற முடியும் என்று அறிவித்தது - உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதோடு அது ஒரு தீராத குழப்பத்திற்கு வழி வகுத்தது

கேள்வி: இந்தியாவில் 1925லியே கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்டும் வலுவான கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வராமல் போனதற்கான காரணங்கள் என்ன ?

பதில் : சுதந்திரப் போராட்டத்தின் போது காந்தியின் கோரிக்கையான வெள்ளை ஏகாதிபத்தியத்தை விரட்டியடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கம்யூனிஸ்டுகள் ஆதரித்தனர். அன்றே முதலாளித்துவ ஜனநாயக நாடுகளின் கோரமுகம் வெளிச்சத்திற்கு வந்திருந்தது. காந்தியின் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாற்றாக வலுவான சமரசமற்ற தலைமையுடன் விளங்கிய நேதாஜியின் தலைமையை ஏற்று அதற்கு ஆதரவாக வெகுஜனங்களைத் திரட்டியிருந்தால் இந்தியாவில் மக்கள் ஜனநாயக புரட்சி மலர்ந்திருக்கும். பகத்சிங்கின் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேசன் ஆங்கில அரசின் அடக்குமுறையால் செயல்பட முடியாதவாறு முடக்கப்பட்டபோது வெகு ஜனங்களின் ஆதரவைத் திரட்டுவதற்கு தேர்ந்தெடுத்த வழிமுறை தான் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விரோத மசோதா தாக்கல் செய்தபோது சத்தம் மட்டுமே வரும் வெடிகுண்டை வீசியதாகும்.

அதற்குப் பிறகு நீதிமன்றமேடையையே பிரசார களமாக அவர்கள் ஆக்கினர். ஆனால் அவர்கள் போட்ட திட்டத்தின்படி வெளியில் இருந்து மக்களைத் திரட்ட நினைத்தபோது ஒரு குண்டுவெடிப்பில் சிக்கி அனைவருமே கைதாகும்படி ஆகிவிட்டது. இதனால் அந்த ஒப்பற்ற வீரர்களின் தியாகம் மக்களிடையே ஊட்டிய எழுச்சியை ஒன்றுபடுத்தி தேசிய முதலாளிகளை உள்ளடக்கிய மக்கள் ஜனநாயகக் குடியரசை உருவாக்கும் வாய்ப்பை தவறவிட்டது அப்போதிருந்த இந்திய கம்யூனிஸ்ட்கட்சி. அது மிகப்பெரும் வரலாற்றுப் பிழையாகும்.

கேள்வி: நேதாஜி அடிப்படையில் கம்யூனிஸ்ட் அல்லவே அவர் உருவாக்க நினைத்ததும் தேசிய முதலாளிகளின் அரசு தானே?

பதில் : காந்தி மக்கள் இயக்கங்களை கட்டியெழுப்பி அந்த இயக்கங்களின் வாயிலாக சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர் பெரியளவில் மக்கள் பங்கேற்ற இயக்கங்களை நடத்தவில்லை. அவர் மட்டும் உண்ணாவிரதம் இருப்பார். அவரைச் சுற்றி கூட்டம் கூடும். அந்த இயக்கம் நடக்கும்போது மக்கள் கட்டுப்பாட்டை மீறினார்கள் என்றால் அந்த இயக்கத்தை அப்படியே கூண்டோடு கலைத்து விடுவார். இவ்வாறு தேசிய முதலாளிகளின் நலனுக்கு உகந்த விதத்திலேயே சமரசமான போராட்டங்களை அவர் வழிநடத்தினார். அப்போது தான் தேசிய முதலாளிகள் ஆட்சிஅதிகாரத்தைக் கைப்பற்ற முடியும், சாதாரண மக்களிடையே எழுச்சி ஏற்படும் எனில் அவரின் நோக்கம் நிறைவேறாது என்பதால் தனி நபர் சத்தியாகிரகம் போன்ற புதுப் புது வடிவங்களில் போராட்டங்களை நடத்தினார். ஆனால் நேதாஜி அப்படி அல்ல.

அவர் ராணுவ நடவடிக்கை மூலம் வெள்ளையர்களை விரட்ட வேண்டும் என்று நினைத்தார். மாணவர்கள், இளைஞர்களுக்கு ஆறுமாதம் கல்வியும், ஆறுமாத காலம் போர்ப் பயிற்சியும் கொடுக்க வேண்டும் என்று எண்ணினார். மாபெரும் மக்கள் தலைவராக விளங்கிய அவர் பரந்துபட்ட மக்கள் பகுதியினரை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்த விரும்பினார். தேசிய முதலாளிகளின் நலனை மட்டும் கருதிய மகாத்மா காந்தியோடு கைகோர்த்திராது கம்யூனிஸ்டுகள் நேதாஜியோடு கைகோர்த்திருந்தால் அன்றே மக்கள் ஜனநாயகம் மலர்ந்திருக்கும்.

nethaji_361கேள்வி: ஜப்பான், ஜெர்மனி போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் உதவியுடன் அவர் பிரிட்டிஷ் இந்தியா மீது படையெடுத்தார். அது இன்னொரு ஏகாதிபத்தியத்தின் கைப்பாவையாக இந்தியா மாற வழிவகுத்து விடுமல்லவா?

பதில் : அவர் ஜப்பானால் பிடிக்கப்பட்ட பிணையக் கைதிகளைத் தனது ஐ.என்.ஏ., படைக்குப் பெற்றது மற்றும் சில பண உதவிகளைத் தவிர வேறு எதையும் அவர் ஜப்பானிடம் பெறவில்லை. அத்தோடு இந்திய தேசிய ராணுவத்திற்கும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமும், உள்நாட்டிலும் பணம் திரட்டப்பட்டது. அந்தப் போரின் போது ஜெர்மனி பர்மாவைக் கைப்பற்ற இந்திய தேசிய ராணுவத்தை அனுப்ப நேதாஜியிடம் உதவி கேட்டது. அதற்கு அவர் இது கூலிப் படையல்ல; இந்தியாவை அந்நியர்களிடம் விடுவிக்க உருவாக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத்திற்கான ராணுவம் என்று கூறி ஜெர்மனிக்கு உதவ மறுத்துவிட்டார். நேதாஜி அந்தப் போராட்டத்தின் போது தனித்து விடப்பட்டார். கம்யூனிஸ்ட்கள் அந்த நேரத்தில் மக்களைத் திரட்டி நேதாஜிக்கு ஆதரவாக அணிதிரண்டிருந்தால் மக்களிடையே கொழுந்து விட்டு எரியும் சுதந்திர உணர்ச்சியின் முன்னால் ஜப்பானின் ஆட்டம் எல்லாம் செல்லாக் காசாகியிருக்கும்.

கேள்வி: வரலாற்று நிகழ்வை இவ்வளவு காலத்திற்குப் பிறகு இப்படி செய்திருக்கலாம், அப்படி செய்திருக்கலாம் என்று சொல்வது எளிதாக இருக்கும். ஆனால் அவர்கள் அன்றைக்கு எதிர் கொண்டிருந்த பிரச்சனைகள் இன்று நீங்கள் நினைக்கும் விதத்தில் தான் இருக்கும் என்று சொல்ல முடியுமா?

பதில் : உண்மை தான். இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைவர்களின் தியாகங்களை மதிக்கும் அதே சமயத்தில் விமர்சனப் பூர்வமான அணுகுமுறை என்பது தேவை. அதற்காகத்தான் இந்த விமர்சனங்களை முன் வைக்கிறோம். லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்கள் சிந்தித்த அளவிற்கு சிந்திக்கும் திறனுள்ளவர்களாக அன்றைக்கு இந்தியாவில் யாரும் இல்லை. 1917 தோழர் லெனினால் வெற்றிகரமாக அக்டோபர் புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடத்திக் காட்டப்பட்டது. அந்த எழுச்சியால் உந்தப்பட்டு தான் மாவோ, சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை கொண்டுவர நினைத்தார். ஆனால் பின்தங்கிய நாடான சீனாவில் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். விவசாய முறையில் இருந்த சுரண்டலை கணக்கில் எடுத்துக் கொண்டு விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட புரட்சித் திட்டத்தை மாவோ வடிவமைத்தார்.

அந்த அளவிற்கு உள் முரண்பாடுகள், வெளிமுரண்பாடுகளை கவனிப்பவர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் இல்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பெரும்பாலும் ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்றவர்களாக இருந்தனர். அவர்கள் 1917 அக்டோபர் புரட்சியின் தாக்கத்தினால் உந்தப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர்கள். இதனால் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, அவர்களை ஒன்று திரட்டி, கட்சியை வலிமையாகக் கொண்டு செல்பவர்களாக அவர்கள் இல்லை. அவர்களால் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயக்கவியல் ரீதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை. இப்படி வரலாற்றை நாம் பார்ப்பது என்பது எதிர்காலத்தில் இப்படி வரக்கூடிய பிரசனைகளை எப்படி அணுக வேண்டும் என்ற வரலாற்றுப் படிப்பினையை நமக்குத் தரும்.

சுதந்திரத்திற்கு முன்பு என்ன செய்திருக்கவேண்டுமோ அதை செய்யாமல் விட்ட இவர்கள், சுதந்திரம் பெற்ற பிறகு - அதுவும் சுதந்திரம் இந்தியாவின் தேசிய முதலாளிகளின் கைகளில் போன பிறகு - யார் எதிரியோ அவனை எதிரியாகக் கருதாமல், தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியம், நிலபிரப்புகள் போன்றவர்களே தங்கள் எதிரிகள் என்று கருதிக் கொண்டு அவர்களை எதிர்த்து தேசிய முதலாளிகளை நட்பு சக்தியாகக் கொண்டு மக்கள் ஜனநாயத்தை நோக்கி நகர வேண்டும் என்று கூறுவது கேலிக்குரியதாகிவிட்டது. இங்கு முதலாளித்துவம் வலுவாக வளர்ச்சியடைந்து புரட்சிக்கான கட்டமே சோசலிசக் கட்டமாக இருக்கிறது என்பதை அவர்கள் உணரவில்லை. உண்மையில் அன்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தவறுகள் அன்றோடு போகவில்லை. அவர்களது சிந்தனைப் போக்கின் அடிப்படையில் இன்றும் மாற்றம் இல்லை. எனவே தான் விமர்சிப்பது அத்தியாவசியமாக ஆகிவிட்டது.
 
கேள்வி: உலக அளவில் வளர்ந்த முதலாளித்துவ நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியாவில் முதலாளித்துவம் அந்த அளவிற்கு வளர்ந்துள்ளதாகக் கூற முடியுமா?சோசலிசப் புரட்சிக்கான கட்டம் இங்கு வந்துவிட்டது என்று கூறுவது பொருத்தமாகுமா ?

பதில் : இதே கேள்வி ரசியாவில் 1917ல் பிப்ரவரி புரட்சியின் மூலம் முதலாளிகளின் கைகளில் ஆட்சியதிகாரம் வந்தபொழுது தோழர் லெனினிடம் எழுப்பப்பட்டது. 'பிற வளர்ந்த ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடும்போது ரசியாவில் நிலப்பிரபுகள் இருக்கிறார்கள், அந்நிய முதலீடுகள் குவிந்து கிடக்கின்றன. முதலாளித்துவம் செய்து முடிக்க வேண்டிய பணிகளே நிறைய இருக்கின்றன. அந்நிலையில் எவ்வாறு சோசலிசப் புரட்சிக்கு அறைகூவல் விடுப்பது?' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது லெனின் 'முதலாளித்துவப் புரட்சிக்கான கட்டம் என்பது முடிவுக்கு வந்து விட்டது. அதை நீட்டித்துக் கொண்டிருந்தால் முதலாளித்துவம் வலுபெற்று விடும், புரட்சி என்பது ஒரு வர்க்கத்திடம் இருந்து ஆட்சி அதிகாரம் இன்னொரு வர்க்கத்திடம் கைமாறுவதாகும். ரஷ்யாவில் முதலாளித்துவம் செய்து முடிக்க வேண்டிய கடமைகளை தொழிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு செய்து முடிக்கும், ஆகவே இங்கு சோஷலிசப் புரட்சி செய்வது வரலாற்றுக் கடமை' என்று குறிப்பிட்டார். ஆனால் இந்தியாவில் ஆட்சி அதிகாரம் முழுவதும் அந்நியர்களிடம் இருந்து தேசிய முதலாளிகளின் கைகளுக்கு வந்த பிறகும், தேசிய முதலாளிகளின் நட்போடு மக்கள் ஜனநாயகப் புரட்சி என்ற கோசத்தை முன் வைத்தது, இந்திய கம்யூனிஸ்டுகள் செய்த வரலாற்றுப் பிழையாகும்.

கேள்வி: ரஷ்யாவில் சோவியத்துக்கள் என்ற அதிகார மையம் இருந்தது. ஆனால் இந்தியாவில் அது போல எதுவும் இல்லையே ?

பதில் : அவ்வாறு இங்கு இல்லை என்பது உண்மைதான். ஆனால் அந்நியர்களிடம் இருந்து ஆட்சியதிகாரம் இந்திய தேசிய முதலாளிகளிடம் வந்த பிறகு அதை எதிர்த்து உழைக்கும் மக்களை அணிதிரட்ட கம்யூனிஸ்டுகள் தவறிவிட்டனர் என்பதும் உண்மையே. அதை முனைப்புடன் செய்திருந்தால் இங்கும் போராட்ட அமைப்புகள் புரட்சியை சாதிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கும்.

கேள்வி: எப்படி இந்தியாவில் தேசிய முதலாளிகளின் கைகளில் ஆட்சியதிகாரம் வந்தது என்று சொல்கிறீர்கள்?

பதில் :ஆளும் அரசு எந்த அளவிற்கு முதலாளித்துவ நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதே அதற்கான உரைகல். முதலாளித்துவ வளர்ச்சிக்காக போடப்பட்டவைகள் தான் ஐந்தாண்டுத் திட்டங்கள். ஆதாரத் தொழில்களை அரசே ஏற்று நடத்தி முதலாளிகள் வளர ஊக்கமளித்தது. முதலாளிகள் வளர்ந்த பிறகு அந்த ஆதாரத் தொழில்கள் அனைத்தையும் இன்று தனியார்களின் கைகளில் தாரை வார்த்துக் கொண்டுள்ளது. மிகப்பெரிய திட்டங்களான தங்க நாற்கர சாலைகள், மின்சார வளர்ச்சிக்கு பெரிய பெரிய மின் திட்டங்கள் என அனைத்துமே முதலாளித்துவ நலனுக்காக தான். அணுகுண்டுகளை வைத்துள்ள நாடாக இருப்பதும் புது புது ஏவுகணைகளை ஏவி பரிசோதிப்பதும் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கவும் சிறிய நாடுகளை அச்சுறுத்தவும் தான். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அனைத்துமே இந்திய முதலாளிகளின் நலனுக்காகவே செய்யப்படுகிறது. இவை அனைத்துமே இந்தியா ஒரு முதலாளித்துவ நாடு என்பதற்குச் சான்று பகரும்.

கேள்வி: மேலைநாடுகளில் விவசாயிகளின் எண்ணிக்கை அந்த நாடு மக்கள் தொகையில் மிகக் குறைந்த பகுதியே ஆகும். ஆனால் இந்தியாவில் விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் ஆகும். அப்படி இருக்கும்போது தொழிலாளர்களை மட்டும் வைத்து எப்படி இந்தியாவில் புரட்சியை சாத்தியமாக்க முடியும்?

பதில் : விவசாயிகள் சுய தேவைக்கு உற்பத்தி செய்வதில்லை. அவர்கள் சந்தையில் எது நல்ல விலை போகுமோ அந்தப் பொருளை விளைவித்துத் தருபவர்களாகவே இருக்கிறார்கள். விவசாயத் தொழிலில் அதிகளவில் விவசாயத் தொழிலாளர்களே ஈடுபடுகிறார்கள். அவர்களையும் ஆலைத் தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்து சோசலிசப் புரட்சி நடத்த வேண்டும்.

கேள்வி: சிறு, நடுத்தர விவசாயிகள் அரசின் பாராமுகத்தால் பாதிக்கப்படுகின்றனரே ?

பதில் : இடுபொருள் ஆலையில் சரக்காக உபயோகப்படுத்தபடும் பொருளின் விலை குறைக்கப்படவேண்டும் என்பதால் விவசாயிகளின் விளை பொருளுக்கு குறைவான விலையே நிர்ணயிக்கப்படுகிறது. விவசாயிகளின் பொருளுக்கு குறைவான விலை கிடைப்பதன் மற்றுமொரு காரணம் இடைத்தரகர்கள். இவர்களே உற்பத்தியில் எந்த உழைப்பையும் செலுத்தாமல் விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு விளை பொருள்களை வாங்கி அதிக விலைக்குப் பொருள்களை விற்று லாபம் சம்பாதிக்கிறார்கள். விவசாயிகளின் விளை பொருளுக்கு விலையைத் தீர்மானிப்பது இடைத்தரகர்களே. அவர்களின் சுரண்டலை எதிர்த்தும், அரசின் பாராமுகத்தைக் கண்டித்தும் விவசாயிகள் அணிதிரள வேண்டும். அரசின் மானியங்கள் அனைத்தும் அதிக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்குத் தான் செல்கிறது. அரசானது தொழில்துறை முதலாளிகளின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்துகிறது. குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் கடும் நெருக்கடிச் சூழலிலேயே உள்ளனர். இந்த விவசாயிகள், புரட்சிக்கு நட்புச் சக்தியாக கண்டிப்பாக இருப்பார்கள். விவசாயத் தொழிலாளர் போராட்டங்களும், நகர்ப்புறங்களில் தொழிலாளர்களின் போராட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

கேள்வி: ஏகாதிபத்திய நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரித்து வருவதால் அவர்களது தலையீடும் நமது தொழிற்துறையில் இருக்கத்தானே செய்யும்? அந்நிலையில் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் தானே?

பதில் : ஏகாதிபத்திய முதலீடுகள் அவற்றின் நலன்பேணும் விசயங்களை வற்புறுத்தவே செய்யும். அவற்றைப் பாதுகாப்பதற்காக அவை நேரடியாக இங்கு தலையிட முடியாது. எவ்வாறு அந்நிய முதலீடுகளுக்கு பாதுகாப்பு தரும் வகையிலும் அந்நிய நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் அந்நாடுகளில் அவர்கள் பெற்ற ஊதியத்தை தக்கவைத்துக் கொள்ளும் விதத்தில் ஊதிய உயர்வுக்கு வழிவகுக்கும் சரத்துகள் நமது கம்பனி சட்டத்தில் கொண்டு வரப்பட்டதோ அதைப் போலவே நமது அரசாங்கத்தை வலியுறுத்தி அதனைக் கொண்டே நமது தொழிற்சாலை சட்டங்களில் உள்ள வேலைப் பாதுகாப்பு விதிகள் போன்றவற்றை தளர்த்தச் செய்யவும் அவை முயலும். நமது அரசும் அதனை எவ்வித தயக்கமும் இன்றிச் செய்யும். இதில் அந்நிய முதலாளிகளின் நலன் மட்டுமன்றி நமது உள்நாட்டு முதலாளிகளின் நலனும் சம்பந்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நமது அரசு நிர்வாகத்தைப் பயன்படுத்தி நமது சட்டங்களை மாற்றச் செய்து நம்மைக் கொண்டு தங்களது நலனை மேம்படுத்திக் கொள்ள அந்நிய மூலதனம் முயலுமேயன்றி ஏகாதிபத்தியத்தின் நேரடி தலையீட்டிற்கு ஒருபோதும் அது வழிவகுக்காது. ஏனெனில் அந்நிய மூலதனம் இங்கு வருவதோடு பிரச்சனை நின்றுவிடவில்லை. இந்திய மூலதனம் பல அந்நிய நாடுகளுக்கு செல்வதும் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இதில் வியப்பிற்குரிய விஷயம் என்னவெற்றால் நமது நாட்டு முதலாளிகள் வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ தொழிற் நிறுவனங்களை வாங்கிக் கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டங்களை அறவே நடத்தக் கூடாது என்று நாம் கூறவில்லை. மாறாக அப்போராட்டங்களின் வரையறைகளை நாம் சுட்டிக் காட்ட வேண்டும். அவை அடையாளப்பூர்வ போராட்டங்களாகவே இருக்குமே தவிர சம்பந்தப்பட்ட ஏகாதிபத்திய நாடுகளை பாதிக்க வைக்கும் நேரடித் தன்மை வாய்ந்த போராட்டங்களாக ஒரு போதும் ஆகாது.

கேள்வி: புரட்சியில் பிரதான பாத்திரம் வகிப்போர் யார் என்று உங்களால் கூறமுடியுமா ?

பதில் : அமைப்பு ரீதியாக ஒன்று திரண்ட, ஒருங்கு திரளாத தொழிலாளர்கள், விவசாயகூலித் தொழிலாளர்கள், அரைப்பாட்டளிகள் புரட்சியின் பிரதான கூறுகளாவர்கள். சிறு விவசாயிகள் புரட்சியின்போது மிகப்பெரிய அளவிற்கு இவர்களோடு சேந்து கொள்வார்கள்.

கேள்வி: RSP, SUCI, அதிலிருந்து பிரிந்த CWP ஆகிய கட்சிகளே சோசலிசப் புரட்சி என்ற கோசத்தை முன்னெடுக்கின்றன. இதை முன்மொழிந்த அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள் யாராவது இருக்கிறார்களா?

பதில் : 'இந்திய தேசியத்தின் சமூகப் பின்புலம் ' என்ற நூலின் ஆசிரியர் எ.ஆர். தேசாயும் , சமூக ஆர்வலரும், விஞ்ஞானியுமான டி.டி. கோசாம்பி 'எக்ஸ்பரேடிவ் எஸ்சேஸ்' என்ற நூலிலும் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சி தான் இந்தியாவில் ஏற்பட வேண்டிய புரட்சி என்று தங்கள் நூல்களில் கூறியுள்ளனர்.

கேள்வி: உங்களது அடிப்படை அரசியல் வழி சரியாக இருந்தும் பெருமளவு மக்களை திரட்ட முடியாதது ஏன் என்று கூற முடியுமா?

பதில் : பொதுவாக மக்கள் புரட்சிகர இயக்கங்களின் பால் நகராமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம் நமது மக்களின் மனநிலையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய மதவாத, விதிவாதப் போக்குகள் ஆகும். அனைத்து நாடுகளிலும் இந்த போக்குகள் இருந்தாலும், அத்தனை ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக இப்போக்குகள் அந்நாடுகளில் இல்லை. இந்தியாவில் தோன்றிய முதன்மையான கம்யூனிஸ்ட் இயக்கம் விடுதலைக்கு முன்பு காந்தியின் பின்னால் அணிதிரண்டு இருந்ததால் இப்போக்குகளுக்கு எதிராகப் போராடவேண்டிய அளவிற்குப் போராடவில்லை. நாடு அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்ற பின்பு அவர்களை அப்பிக் கொண்ட நாடாளுமன்றவாதம் இப்போக்குகளை எதிர்ப்பதற்குப் பதிலாக அதனோடு முடிந்த அளவு சமரசம் செய்து செய்துகொள்பவர்களாக அவர்களை ஆக்கிவிட்டது.

முதலாளித்துவ ஜனநாயக கலாச்சாரம் ஆழமாக வேறூன்றும் அளவிற்கு முதலாளித்துவ தொழில் வளர்ச்சி இங்கு இருக்கவில்லை. ஆனால் மக்களிடையே முன்பு நிலவிய குறுகிய தன்மைகள் கொண்ட நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் கூறுகளும் முதலாளித்துவ கலாச்சாரத்தின் முக்கிய கூறான எப்படியாவது அதிகப் பணம் சேர்க்கவேண்டும் என்ற மனநிலையும் ஒருங்கிணைந்து ஒரு மோசமான கலாச்சாரக் கலவை இங்கு நிலவுகிறது. அதனால் சொத்துடமை மனநிலைமை பாட்டாளி வர்க்கத்திடம் பரவலாகக் காணப்படுகிறது. இவை அனைத்துமே மக்களை இடதுசாரிகளின் பக்கம் அவர்களாகவே வருவதைத் தடுக்கும் போக்குகள் ஆகும். இந்தப் போக்குகள் பெருமளவு இருந்தாலும், முதலாளித்துவ நெருக்கடி முற்றி வாழ்க்கை தாங்கவொண்ணதா சுமையாக ஆகும்போது அது நிச்சயம் அவர்களின் கண்களைத் திறக்கும். இந்த நிலை தவிர்க்க முடியாமல் ஏற்பட்டே தீரும். ஏனெனில் முதலாளித்துவம் அதைச் சூழ்ந்துள்ள நெருக்கடியில் இருந்து மீளவே முடியாது. அது மோசமான நிலையில் இருந்து படுமோசமான நிலையை நோக்கி செல்லக்கூடியதாகவே இருக்கும்.

முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சியின் பாதை பெருமளவு மக்களைத் தன் பக்கம் ஈர்க்காதிருப்பதேன் என்ற குறிப்பிட்ட கேள்வியைப் பொறுத்தவரை, அந்த சரியான பாதையைப் பின்பற்றாத பிற இடதுசாரி இயக்கங்கள் தங்கள் பெற்றுள்ள ஸ்தாபன வலுவினைக் கொண்டு மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் மூலமாகப் பரப்பும் தவறான கருத்துகள் ஏற்படுத்தும் குழப்பம் ஒரு முக்கிய காரணம் ஆகும். எடுத்துக்காட்டாக வர்க்கப் போராட்டப் பாதையை நாடாளுமன்ற அரசியல் லாபத்திற்காக கைவிட்டுவிட்ட அந்த கட்சிகள் தற்போது ஜாதியத்தை ஒரு முக்கிய முரண்பாடாக சித்தரிக்கத் தொடக்கி உள்ளன. தங்களது வளர்சிக்குச் சிறுபான்மை மக்களை அப்படியே ஆதரிப்பது என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றன. சிறுபான்மை வகுப்புவாதத்தை எதிர்க்கும் நடைமுறையை அவர்கள் பின்பற்றுவதில்லை.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரிலும் கூட இந்த முதலாளித்துவ அமைப்பு உடமை வர்க்கங்களை உருவாக்கியுள்ளன. இந்த அம்சம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வர்க்கப் போராட்டங்கள் மூலம் அந்த உடமை வர்க்கங்களை எதிர்த்த போராட்டம் நடைபெறாததால் இவர்களின் நடைமுறை குறித்த அவநம்பிக்கையும், குழப்பமும் சாதாரண மக்களிடையே பெருமளவு நிலவுகிறது. ஆளும் வர்க்க நலன் கருதி நமது நாட்டின் முதலாளித்துவ ஊடகங்களும் விமர்சனமின்றி இப்போக்குகளை மக்களிடையே பரவலாக பரப்புகின்றன. வர்க்கப் போராட்டம் நடைபெறாத சூழலை சாதகமாக்கி கொண்டு முதலாளித்துவ நிறுவனங்கள் அரசு நிர்வாகத்துடன் கைகோர்த்து, உழைக்கும் வர்க்க அமைப்பு சார்பான தொழிற்சங்கங்கள் போன்றவை உருவாவதைத் தடுக்கின்றன. இவையெல்லாம் நிரந்தரமான தடை கற்கள் அல்ல. இவை மிகவும் தற்காலிகமானவேயே. முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சிப் பாதையை முன்வைப்பவர்கள் அமைப்பு ரீதியாக அனைத்து அம்சங்களையும் கலைநயத்துடனும், அறிவியல்பூர்வ துல்லியத்துடனும் கையாளத் தொடங்கும்போது இப்போக்குகள் படிப்படியாக குறைந்து மறைந்துவிடும்.

நேர்காணல் - கதிரேசன்

Pin It