செத்துப்போக வேண்டும் என்று நீங்கள் யோசித்ததுண்டா?

நான் யோசித்திருக்கிறேன். பல முறை .. பற்பல முறை அவ்வாறு யோசித்திருக்கிறேன். ஒரு வேளை சாவு இப்போது வரும் என்றால், இந்த எழுத்துடன் நிறுத்திக்கொண்டு நான் செத்துப்போகத் தயார்.

சாவு அனைத்து உயிர்களுக்கும் நேரும்… அனைத்து உயிர்களுக்கும்! உடல் தனது புதுப்பிக்கும் ஆற்றலை இழந்துவிடும்போது, அல்லது, திடீர் தாக்குதலால், விபத்தால், வேட்டையாடப்படுவதால்…. சுருக்கமாக உயிர் வாழும் உடலின் இயங்குமுறை இனியும் தொடரமுடியாது என்ற நிலை வரும்போது… சாவு வரும்.

சாவு வலி மிகுந்ததாக இருக்குமா? சொல்ல முடியாது. நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, இதுநாள் வரை உங்ளுக்காக தூங்காது உழைத்த இதயம், இயங்காமல் நின்றுவிட்டால் உங்களுக்கு வலி தெரியாது. அல்லது, வலித்தது என்று சொல்ல நீங்கள் இருக்க மாட்டீர்கள்..

ஒரு வேளை உங்களின் இருத்தலை உங்களுக்கு உணர்த்தும் மூளை மட்டும் இறந்துவிட்டால் உங்களுக்கு வலி என்ன.. எதுவுமே தெரியாது.. ஆனால் நீங்கள் வலியின்றி வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.. வலியெல்லாம், வேலை செய்யும் இதயமும் மூளையும் இருக்கும் வரைதான்…

ஆனால், நீங்கள் இறுதிக்கும் இறுதியாக உறங்கிய பின்னர் விழித்திருப்போருக்கு, அதாவது உயிரோடிருப்பவருக்கு வலி தெரியும்.

நீங்கள் இதுவரை சமாளித்த வந்த பிரச்சனைகளை அவர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்ற வலி.. அவர்கள் சமாளித்த பிரச்சனைகளுக்கு அப்பால் நீங்கள் விட்டுச் சென்ற, உங்கள் மரணத்தால் அளித்த பிரச்சனைகளைச் சமாளிக்க வேண்டும் என்ற வலி..

மற்றபடி, விபத்து அல்லது தள்ளாத முதுமையால் உடல் அவயங்கள் ஒவ்வொன்றாக செயலிழக்கும்போது வலி தெரியும்… அல்லது நீங்கள் மீள முடியாத புதைகுழியில் சிக்கிக்கொண்டுள்ளீர்கள் என்ற உண்மை தெரியும்.. இந்த நவீன யுகத்தில் செயற்கையாக உயிர்வாழ்வது என்ற அவஸ்த்தையைத் தவிர்ப்பதற்காக என்னைச் செத்துப்போக விடுங்கள் என்று நீங்கள் கேட்க வேண்டி வரலாம்..

அதுபோன்ற மற்றும் இன்ன பிற சமயங்களில், வலி என்பது பாதிக்கப்பட்ட அல்லது செயலிழந்த உறுப்புகளின் இழப்பால் உடல் அளிக்கும் எச்சரிக்கை செய்தியன்று வேறொன்றுமல்ல.. அதனைச் சரி செய்து கொள்ள முடியாது என்று உங்களுக்குத் தோன்றும்போது செத்துப்போக அனுமதியுங்கள் என்று கெஞ்சுவீர்கள். உயிரோடு இருந்துகொண்டு, உங்கள் இறப்பால் என்ன நிகழும் என்று கணக்குப் போடுபவர்களுக்கு அது புரியாது…

ஒரு வேளை உங்களின் வலி உணர்வு தரும் சிக்னல்களை உங்கள் மூளை தாங்காது என்று போனால், மூளை, வலி உணர்வுப் பகுதியையே கழற்றிவிட்டுவிடும்… உங்களுக்கு வலி தெரியாது..

ஆனால், வாழ்ந்து கொண்டிருக்கும்போதே செத்துக்கொண்டிருந்தால்..? நீங்கள் செத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் மட்டும் உணர்ந்தால்..-?

அதுபோன்ற மெதுவான இறப்புகள் பலருக்கும் வாய்க்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. வெகு சிலருக்கே தெரியும்.. சாவு மிக மெதுவாக நேர்த்ததை அல்லது நேர்ந்துகொண்டிருப்பதை பலரும் அறிய மாட்டார்கள்.

ஆனால், இறந்து கொண்டிருப்பவனுக்கு அது தெரியும். அவன் சிரித்துக்கொண்டிருப்பான்… அல்லது உங்களுடன் யந்திரம் போல பேசிக்கொண்டிருப்பான்… அல்லது, மிகவும் கவனமாக வேலை பார்த்துக்கொண்டிருப்பான்…

ஒரு நாள் அவன் செத்துப்போனான் என்று செய்தி வரும். உங்களுக்கு ஏன் என்று புரியாது… அவனைக் கோழை.. அதனால் தற்கொலை செய்துகொண்டான் என்று நீங்கள் சொல்லலாம்.. அல்லது ஓயாது புகை பிடித்தான் அதனால் செத்தான் என்று சொல்லலாம். அல்லது சாலையில் கவனமில்லாமல் இருந்ததால் நேர்ந்த கோர விபத்து என்றும் நீங்கள் குறிப்பிடலாம்..

ஆனால், அவன், அவன் என்ன அவன்..? அந்த மனித உயிர் சாகத் தொடங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது என்று அர்த்தம். அது உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கும்..

உதாரணமாக ஒரு சாலை விபத்தை எடுத்துக்கொள்ளுங்கள்… ஏன் அந்த விபத்து நிகழ்ந்தது..? ஏதோ ஓர் கவனச் சிதறல் இருக்க வேண்டும்.. உயிரோடு இருக்க வேண்டும் என்ற மிருக- அதாவது, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும்- அடிப்படை உயிர்ச்செயலையும் தாண்டிய கவனச் சிதறல்… அதுதான் காரணம்.. அது மனிதனுக்கு மட்டுமே வாய்க்கிறது.. (அதற்கப்புறம் நாய்களுக்கு) பிற உயிர்கள் அபாயம் ஏற்படும் என்ற இடத்துக்கே போகாது..

(பிறப்பிக்க வேண்டும் என்ற இயற்கை நிர்ப்பந்தத்திற்காக, பிறப்பிக்கும் இடம் தேடி வலசைப் போகும் உயிர்கள் மனிதனின் செயல்பாட்டால். மனிதனின் மாண்பு மிகு அறிவு மரணத்தைக் கொண்டுவரும் என்ற அறிவின்மையால், இறப்பதை, அல்லது அதுபோன்றவற்றை, இங்கே சேர்த்துக்கொள்ளவில்லை… அதனை ஒரு தனிப்பகுதியாக பேசவேண்டும்.)

மனிதன் உடலால் வாழ்பவன் அல்ல. அவன் மனதால் வாழ்பவன். ‘இந்த ஜோக்கைக் கேளேன்’, என்று நீங்கள் சொல்லும்போது கேட்க ஒரு செவி வேண்டுமல்லவா? இல்லையேன்றால் என்ன ஆகும் உங்ளுக்கு?

நீங்கள் ஒரு புடவை நெய்கிறீர்கள்.. அணிந்து பார்த்த பெண் சகிக்கவில்லை என்று சொன்னால் என்ன ஆகும் உங்களுக்கு?

நீங்கள் ஒருத்தியை நேசிக்கிறீர்கள்.. அவளும் சரி என்கிறாள்.. அப்புறம் ஓர் நாள் அவள் போய்விட்டாள்.. ஒன்றுமே சொல்லாமல் போய்விட்டாள்… என்ன ஆகும் உங்களுக்கு..?

ஒரு பெண் ஓர் ஆணை நேசிக்கிறாள்.. நெருங்கிய பழக்கத்திற்குப் பின் அவன் விலகிக்கொண்டான்.. எப்படி உணர்வாள்… அந்தப் பெண்..?

அப்புறம் மனதுக்கு என்ன தான் இடமிருக்கிறது? மனம் இல்லையென்றால் அப்புறம் மனிதன் எப்படியிருப்பான்? செத்துப்போயிருப்பான்… அல்லது செத்துக்கொண்டிருப்பான்…

மனிதன் தனது இருத்தலை தான் உணர்ந்துகொள்ள மற்ற மனிதர்களையே சார்ந்துள்ளான். சம்பாத்தியத்தைச் சொல்லவில்லை. சம்பாத்தியம் என்பதெல்லாம்.. பொருள் உற்பத்தி சம்பந்தப்பட்ட வார்த்தை..

இருத்தல் என்பது உங்களின் உணர்வை பகிர்ந்துகொள்ளும் ஒரு ஜீவன் அல்லது ஜீவன்கள் இருக்கின்றன என்பதால் நேர்வது..

நான் முன்னமேயே குறிப்பிட்டது போல, தனது உன்னத படைப்பை இரசித்துவிட்டு, ஆகா என்று சொல்ல மற்றொரு மனித உயிர் இல்லையென்றால் என்ன ஆகும்?

இன்று மற்றொரு மனித உயிரின் இருத்தலைப் பற்றிக் கவலைப்பட யாரும் இல்லை. எனது இருத்தல் உத்திரவாதம் ஆக வேண்டும் என்ற மிருக… அதாவது உயிரின் அடிப்படை உணர்வு மட்டுமே… உயிரோடு இருத்தலைத் தக்கவைத்துக்கொள்ளும் உணர்வு மட்டுமே நிலவுகிறது..

ஒருவன் தற்கொலை செய்துகொண்டான்.. என்ன காரணம் என்று அனைவரும் யோசித்தார்கள். அவன் மனைவிதான் காரணம் எனறார்கள். சாதி விட்டு சாதி கல்யாணம் செய்து கொண்ட அவன் மண வாழ்க்கையில் ஏனோ திருப்தியுறவில்லை. நிறைய காரணங்கள்.. இரண்டு வெவ்வேறு உலகங்கள், வெவ்வேறு தேவைக்காக திருமணம் செய்துகொள்வதுதானே இன்று நடக்கிறது… அதனால், அவன் மற்றொரு பெண்ணுடன் உறவேற்படுத்திக்கொண்டான்.அவனின் செல்வம் அதற்கு உதவி செய்தது.

அந்தப் பெண்ணோ, அதாவது புதிய பெண்ணோ, அவளது பொருளீய இருத்தலுக்கு திருமணம் வேண்டும் என்றாள். அது சாத்தியமில்லை என்றால், அதற்கான பொருளைக் கொடுத்துவிடு என்றாள்.

அவளுக்குப் பிரச்சனை அவள் வாழ வேண்டும்.. முன் அவள் பெற்றிருந்த பிள்ளைகளும், இவனுக்கு அவள் பெற்றிருந்த பிள்ளைகளும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம்…

இவனால் அதற்கான பொருளை, பணத்தைக் கொடுக்க, அப்போது, வாய்ப்பிருந்திருக்கவில்லை. அவளுக்கோ நெருக்கடி.. ரவுடிகளை வைத்து மிரட்டினாள்..

அவன் தற்கொலை செய்துகொள்வதற்கு முந்தைய நாள் அவனை நான் பார்க்கும் போது அவன் சொல்லியிருந்தான்… ‘நமக்குன்னு யாரும் இல்ல மச்சி’.

அதற்கு என்ன பொருள் என்று எனக்கு இப்போது புரிகிறது.. ஆனால், நீங்கள் சொல்லுங்கள், எனக்கென்று யாரும் இல்லையென்று நீங்கள் ஒரு நாள் கூட கருதியதில்லையா?

அவன் செத்து அனைத்து தகவலையும் சேகரித்த பின்னர் எனக்குப் புரிந்தது உயிரின் தாபம்.. ஆனால், அவன் மரணத்தை வைத்து பிரச்சனை எழுப்பினார்கள் சிலர்.. அது அவர்கள் பிழைப்பின் தாபம்…

இருக்க வேண்டும் என்ற உணர்வுக்கு மேலாக, இருப்பதற்கு இதெல்லாம் அவசியம் என்று சமூகம் விதித்தவற்றை பலரும் விரட்டிக்கொண்டு திரிகின்றனர். அந்த மாடு பிடி வீரர்களின்… அவர்களின்.. கால்களின் கீழே பாருங்கள்… உங்கள் இருத்தலும் வேட்கையும், அவர்களின் இருத்தலும் தாபமும் மிதிபட்டு செத்துக்கொண்டிருப்பது தெரியும்.. அவர்களின் காலின் கீழே.. அதாவது மாடு மற்றும் மாடுபிடி வீரர்களின் கால்களின் கீழே…

என் நண்பன் ஒருவனின் காதல் மனைவி அவனை விட்டு போயே போய்விட்டாள்-- அவனைக் கேட்டேன்.. தெரியவில்லை என்றான்.

அவளைக் கேட்டேன்.. நான் நானாக இருக்க முடியவில்லை என்றாள்.

என்ன சொல்வீர்கள்?
இருத்தல், மனித இருத்தல், உடல் இருத்தல் தொடர்பானதல்ல.. மனிதனுக்கே வாய்த்த, தன்னை வெளிப்படுத்துவது, உணரச் செய்வது, அங்கீகாரம் பெறுவது என்ற மனதின் இருத்தல்…
அது இல்லையென்றால், மனித உயிர் செத்துப்போகும்… அல்லது சாவை நோக்கி சரிந்து விழும்..
நான்செத்துக்கொண்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும்.. எனது மனிதத் தேவைகள் நிறைவடையாததால் நான் செத்துக்கொண்டிருக்கிறேன். பொருளீய காரணங்களுக்காக என்னை உதாசீனப்படுத்தும் உயிர்களால் நான் செத்துக்கொண்டிருக்கிறேன்.
ஒரு வேளை, இதனை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது நான் செத்துப்போய்விட்டேனோ என்று யோசிக்காதீர்கள். இந்த என் வெளிப்பாட்டை படிக்க ஓர் ஆளிருக்கும் வரை, அதனால் கிடைக்கும் திருப்தியில், என் உடல் மரணம் தள்ளிப்போய் கொண்டேயிருக்கும்.. ஆனால், நான் என்னவாக வாழ நினைத்தேனோ அது கிடைக்காததால், நான் என்ற எனக்கான எனது மரணம்… ஒருவேளை… நேற்றே நிகழ்ந்திருக்கலாம்…
Pin It