பிரதமரின் பிரதிநிதியான நாராயணசாமி சொல்கிறார் - கூடங்குள போராட்டக்காரர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறதாம்.

காங்கிரஸ் கட்சிக்குத்தான் ரகசிய உள்நோக்கம் உள்ளது. இந்த உள்நோக்கம் கூடங்குள வட்டார மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல. இது மீனவ மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் எதிரானது. ஈழத்தமிழர்களை முற்றாக ஒழித்துக்கட்டும் உள்நோக்கம் கொண்டது. வெளிப்படைத் தன்மை எதுவும் இல்லாமல் ரஷ்யாவோடு ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டு தென்தமிழக மக்களை பெரும் ஆபத்துக்கு ஆளாக்கிவிட்டு கூடங்குளத்தில் அணு உலைகள் நிறுவுகிறார்கள்.

குறிப்பாக ரஷ்ய தொடர்புடன் இவ்வுலைகள் தென்கோடித்தமிழகத்தில் ஈழத்துக்கு மிக அருகில் நிறுவப்படுவது நம் ஆழ்ந்த கவனத்துக்குரியது. இரண்டு உலைகள் மட்டுமல்ல, மேலும் நான்கு உலைகளை நிறுவ ரஷ்யா தயாராக உள்ளது. மொத்தம் ஆறு உலைகள் கூடங்குள வட்டாரத்தில் மட்டும் நிறுவ முயற்சி நடக்கிறது.(இன்னும் இரண்டு உலைகள் வேறு இடங்களில் நிறுவப்படுமாம்.)

தமிழ்மண்ணில் அணு உலைகள் நிறுவ குறிப்பாக ரஷ்யா தேர்ந்தெடுக்கப்பட்ட காரணம் என்ன?

ஏன் என்றால் அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளை நாடினால் இனக்கொலையாளி ராஜபக்ச அரசு ஒருபோதும் சம்மதிக்காது. அந்த நாடுகள்தான் சிங்கள அரசுக்கு நெருக்கடி தந்து வருகின்றன.

கூடங்குள திட்டத்துக்கும் ராஜபக்சவுக்கும் என்ன சம்பந்தம்?

மிக மிக முக்கியமான சம்பந்தம் உள்ளது. இந்த அணு உலைத்திட்டம் இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் மாபெரும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.

ஈழ விடுதலைப்போராட்டத்தை இனக்கொலை மூலம் நசுக்குவதில் ராஜபக்ச அரசுக்கு முழு உதவி செய்த காங்கிரஸ் அரசு அதைத் தொடர்ந்து 2010 ஜூன் மாதத்தில் இலங்கை அரசுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) செய்துகொண்டுள்ளது. இதன்படி இந்தியாவின் பவர் கிரிட் கார்ப்பரேஷனும் இலங்கையின் சிலோன் எலக்ட்ரிசிட்டி போர்டும் பங்குதாரர்களாக ஆகியுள்ளனர். இரண்டு நாடுகளின் மின்சார செலுத்துப்பாதை அமைப்புகளும் இணைக்கப்பட உள்ளன.

மின்துறை என்பதில் மூன்று பகுதிகள் உள்ளன-- மின்சார உற்பத்தி நிலையம், மின் செலுத்து பாதை, மின் வழங்கல் அமைப்பு.

கூடங்குள உலைகள் உற்பத்தி நிலையங்கள் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்பட உள்ள மின்சாரம் மின் செலுத்து பாதை வழியாக அனுப்பப்பட வேண்டும். இந்த பாதை தென்னக கிரிட் Southern Grid எனப்படும். இது இந்திய பவர் கிரிட் அமைப்பின் ஒரு பகுதி ஆகும். இப்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி கூடங்குள மின்சாரத்தின் உபரி பகுதி தென்னக கிரிட் வழியாக இனக்கொலையாளி ராஜபக்ச அரசுக்கு வழங்கப்படும். விரைவில் ஆறு உலைகளும் இயங்கும்போது ஏராளமான மின்சாரம் தமிழ்மண்ணில் இருந்து சிங்கள இனவெறி அரசுக்கு அனுப்பப்படும்.

இந்த மின்பாதை இணைப்புத் திட்டத்தின் உத்தேச மதிப்பு 4000 கோடி ரூபாய். இதன்படி 285 கிலோமீட்டர் நீளமுள்ள மின் இணைப்புப் பாதை கட்டப்பட உள்ளது. மதுரையில் தொடங்கி இலங்கை அனுராதபுரம் வரை இது அமைக்கப்படும். இடையில் 50 கிலோமீட்டர் தூரத்துக்கு கடல் அடியில் பெருஞ்செலவில் கேபிள் போடப்போகிறார்கள். இது பாக் ஜல சந்தியில் ராமேஸ்வரத்தில் இருந்து மன்னார் வரை இருக்கும். இந்தக் கொடிய திட்டம் விரைவில் செயல்பட உள்ளது.

லட்சம் தமிழர்களின் ரத்தத்தைக் காட்டிக்கொடுத்தால் அந்த துரோகத்துக்கு கமிஷனாக தமிழ்நாட்டுக்குக் கொஞ்சம் மின்சாரத்தைக் கொடுப்பதாக ஆசை காட்டுகிறது காங்கிரஸ் அரசு.

"அமெரிக்க தீர்மானத்தை அதிகம் வலிக்காமல் பண்ணியது நாங்கள்தான். உங்கள் இனக்கொலையை மூடி மறைப்பதில் முதல் இடம் வகிக்கும் ரஷ்யாவின் பின்பலத்தோடுதானே கூடங்குளத்தில் அபாய மின் உற்பத்தி செய்து உங்களுக்குத்தர இருக்கிறோம்? தயவு செய்து கோபம் வேண்டாம்." என்று கெஞ்சி நிற்கிறது காங்கிரஸ் அரசு.

ஆபத்து தமிழர் தலையில். ஆதாயம் இந்திய பெருமுதலாளிகளுக்கும், ரஷ்யாவுக்கும், ராஜபக்சவின் இனக்கொலை அரசுக்கும்.

தமிழ் மக்களின் சார்பில் தமிழ்நாடு சட்டமன்றம் பொருளாதாரத் தடை கோரித்தீர்மானம் இயற்றி உள்ளது. பொருளாதாரத்துக்கே அடிப்படை ஆதாரமான மின்சாரத்தை பகைவனுக்கு காங்கிரஸ் வழங்க நாமும் பார்த்துக்கொண்டிருப்போமா?

புலம்புவதால் அல்லது தனித்தனியாகக் கூட்டம் பேசுவதால் இனி எதுவும் ஆகாது. ஒன்றுபட்டால் மட்டுமே உயிரையும் மானத்தையும் காக்க முடியும். உடனே தொடர்ச்சியான கூட்டு நடவடிக்கைக்காக ஒரு மையம் அமைக்கப்பட வேண்டும்.

இப்போதாவது கூடுவோமா? தொடர்ந்து போர்க்களங்கள் காண்போமா?

கூடங்குளப் பிரச்சினை என்பது பிரம்மாண்டமான உறைபனிப்பாறையின் சிறு நுனிப் பகுதி மட்டுமே. அழிவுப்பாறை கடலடியில் மறைந்திருந்து சதி செய்கிறது. தமிழர் நலம் எனும் கப்பல் மோதி நொறுங்கிவிடாமல் எல்லோரும் கூடிக் காப்போம்.

படித்துவிட்டு முடித்துக்கொள்ளாதீர்கள். சந்திக்க என்ன வழி?

- பேராசிரியர் மருதமுத்து (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
பேசி: 9489146270

Pin It