பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி 10.9.2008 அன்று விடுத்துள்ள அறிக்கை: ஈழத்தில் தமிழர்கள் வாழும் வவுனியாவிலிருந்து வந்துள்ள ஒரு செய்தி - தமிழகத் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழர்கள் வாழும் வவுனியா பகுதியில் இலங்கையின் ராணுவ முகாம் மீது விடுதலைபுலிகள் நடத்திய தாக்குதலில் ஏ.கே. தாக்கூர், சிந்தாமணி ரவுட் எனும் இரண்டு - இந்திய பொறியாளர்கள் காயமடைந்து, கொழும்பு மருத்துவமனையில் இலங்கை ராணுவத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
தமிழர்களை இனப்படுகொலை செய்து வரும் இலங்கை அரசுக்கு, இந்தியா ராணுவ உதவி செய்யக் கூடாது என்ற தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைகளை இந்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தியதோடு, பாதுகாப்புக் கருவிகளை மட்டுமே வழங்கி வருவதாகக் கூறி வந்தது.
இந்திய அரசின் கூற்று அப்பட்டமான பொய் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள ராடார் கருவியை இந்தியா வழங்கியிருப்பதோடு மட்டுமல்ல, அதைப் பராமரிக்க இந்திய பொறியாளர்களையும் அனுப்பி வைத்திருக்கிறது என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. விடுதலைப்புலிகள் விமானத் தாக்குதலிலிருந்து பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த ராடார் கருவிகள் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகும். சிங்களர்கள் வாழும் பகுதியில் அல்ல.
2005 ஆம் ஆண்டில் இந்த ராடார் கருவியை அன்பளிப்பாக வழங்கியுள்ள இந்திய அரசு - விடுதலைப் புலிகளின் விமானப்படை செயல்படத் தொடங்கிய பிறகு, மீண்டும் கடந்த 2007 மார்ச் மாதத்துக்குப் பிறகு ராடார் கருவியை மேலும் நவீனமாக்கி, பொறியாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது.
தமிழர்கள் வாழும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாமுக்கு, இத்தகைய பாதுகாப்புகளை இந்தியா வழங்குவது தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு துணை போவதோடு மட்டுமல்ல, தாக்குதலை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளேயாகும். போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இலங்கையிலிருந்து பல்வேறு சர்வதேசக் குழுக்களின் பிரதிநிதிகள் வெளியேறிவிட்ட நிலையில் - இந்தியாவின் பொறியாளர்கள் இலங்கையின் விமானப் படையில் 'அங்கமாகி' பணியாற்றி வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். ஏற்கனவே சக்தி வாய்ந்த போர்க் கப்பலை இலங்கை கப்பல் படைக்கு இந்தியா வழங்கியிருக்கிறது. இலங்கை விமானத்தின் குண்டு வீச்சிலிருந்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்தியா, அதற்கு கண்டனம் கூட தெரிவிக்க மனம் இல்லாதவர்கள், இலங்கை விமானப்படையைக் காப்பாற்ற துடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது, கண் துடைப்பு நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. கடந்த வாரம் தமிழக முதல்வர் கலைஞரை சந்தித்த பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் - இனி, இலங்கை கப்பல் படை தாக்குதலே நடக்காது என்று உறுதிமொழி கூறினார். அடுத்த சில நாட்களிலே மீண்டும் தாக்குதல் தொடங்கிவிட்டது.
தமிழக முதல்வரும் சடங்குப்படி பிரதமருக்கு கண்டனக் கடிதம் எழுதி விட்டார். இப்படி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை இந்திய அரசு கிஞ்சித்தும் மதிக்காமல் அவர்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பது, தமிழர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கி வருகிறது என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழர்களை ஏமாளிகளாகக் கருதிவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு தமிழர்களின் வாக்குகளைக் கேட்டு வர வேண்டிய நிலை இருப்பதை மறந்து விட்டு செயல்பட வேண்டாம். இந்திய அரசின் அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கை தமிழக அரசு வன்மையாகக் கண்டித்து, தடுத்து நிறுத்த முன்வரா விட்டால், இந்த துரோகப் பழியை தமிழக அரசும் சேர்ந்து சுமக்க வேண்டியிருக்கும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும், இயக்கங்களும் வலிமையான கண்டனக் குரலை எழுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.