இந்தியாவின் உச்சநீதிமன்றம் மற்றும் அனைத்து இந்தியர்களுக்குமான ஒரு உச்ச நீதிமன்றம்: இந்த இரண்டு வடிவங்களும் கோட்பாடு மற்றும் உள்ளடக்க ரீதியாக அடிப்படையிலேயே மாறுபட்டவையாக இருக்கின்றன என்று கூறமுடியும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்புரை- சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் நீதியை, ஒரு புவி அரசியல் கருத்தாக்கத்துடன் இந்திய மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளது. ஒரு மனிதநேய சமூக, பொருளாதார கருத்தை, ஒரு கூட்டு மதிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

ஜனநாயகம் மக்களுக்கானது என்றால், பிரிட்டிஷ்காரர்கள் தமது பேரரசக் காரணங்க‌ளுக்காக தேர்ந்தெடுத்துக்கொண்ட இடத்தில் அல்லாமல், வழக்காடுநர்களுக்குத் தேவைப்படுகிற இடத்தில் உச்ச நீதிமன்றம் செயல்படவேண்டும். வரலாற்று புவியியல் மூலஉத்திக் காரணங்களுக்காகத்தான் டெல்லி தேசியத் தலைநகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. நீதித்துறைக்கும் டெல்லியைத் தலைநகராகத் தெரிவு செய்வதற்கு வேறு காரணங்கள் இல்லை. இராணுவ மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக ஒன்றுபட்ட இந்தியா டெல்லியை மிகவும் பொருத்தமானதாகக் கண்டறிந்தது. ஆனால் பிரிவினைக்குப் பின்பு டெல்லியே பாகிஸ்தானுக்கு முன்பாக ஒரு இலக்காக ஊறுபடத்தக்க வகையில் இருந்து வருகிறது. கலாச்சார, புவியியல், அரசியல் அல்லது சமூகப் பொருளில் டெல்லிக்கு நாட்டின் நீதித்துறை நிர்வாகத்தின் மையமாக இருப்பதற்கு எந்த சிறப்பான அனுகூலமும் இல்லை.

‘மக்களுக்காக’ என்பது ஒரு ஜனநாயக, தர்க்கபூர்வத் தேவையாகும். அப்படியானால் நீதிமன்றங்கள் வழக்காடுநர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ள இடங்களில், அவர்கள் எளிதாக அணுகக்கூடிய இடங்களில் இருக்கவேண்டும். இந்தப் பெரிய நாட்டில் டெல்லி ஒரு மூலையில் இருக்கிறது. அதேநேரத்தில் மக்கள் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும்தான் பெரிதும் வசிக்கின்றனர். சட்ட ஆணையம் போன்ற ஒரு ஆணையத்தால் பல்வேறுபட்ட அம்சங்களும் ஆய்வு செய்யப்படலாம்; அந்த ஆணையம் உச்ச நீதிமன்றத்திற்கு நான்கு அமர்விடங்கள் இருக்கவேண்டும் என்ற நியாயமான காரணங்கள் அடிப்படையில் முடிவுக்கு வந்திருக்கிறது.

உச்ச நீதிமன்றத்தின் இருப்பிடம் காரணமாக வடக்கால் ஆதிக்கம் செலுத்தப்படுவதாக தெற்கு நினைக்கிறது. வடக்கிலிருந்து தூரம், கலாச்சாரம், மொழி காரணமாக தெற்கு அந்நியப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதா? உச்ச நீதிமன்றத்திற்கு நாடு முழுவதன் ஆட்சியின் மீதான அதிகாரம் இருக்கும்போது, இந்தப் பாதுகாக்கப்பட்ட வல்லரசியம் ஒரு பிரிவினை சக்தியாக இருக்கும். இது எந்த விலை கொடுத்தேனும் தவிர்க்கப்படவேண்டும். புவியியல், வரலாறு மற்றும் சமூகக் காரணிகளின் அடிப்படையிலான அதிகாரப்பரவல் ஒரு கட்டாயத் தேவையாக இருக்கிறது. பிரிக்கப்படாத, பெருமிதத்திலும் முக்கியத்துவத்திலும் உள்ள இந்தியாவின் கீர்த்தி ஒரு தனிப்பட்ட நீதிமன்றத்தைச் சார்ந்து இல்லை; மாறாக அதன் நடைமுறை ரீதியான பன்முகத்தன்மையில் இருக்கிறது. எனவே டெல்லிக்கு வெளியே உச்ச நீதிமன்றத்தின் அமர்விடங்களுக்கான கோரிக்கைக்குப் பின்னால் ஆழமான கருதுகோள்கள் இருக்கின்றன. ஏன் பாகிஸ்தான் மதரீதியான வகையில் மட்டும் ஒரு சக்தி வாய்ந்த நாடாக ஆகியது?கிழக்கு வங்காளம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து ஒரு இறையான்மை கொண்ட தனிநாடாக ஆகியது ஏன்? பாரதத்தை ஒரே நாடாக வைத்திருப்பதற்கு மொழியும் கலாச்சாரமும் மக்களுக்கான நல்ல பாடங்கள் ஆகும். வேற்றுமையில் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்கக் கூடிய கூட்டாட்சிக் கருதுகோள்களின் அடிப்படையிலான நீதிமன்றக் கிளைகள் நமக்கு வேண்டும்.

பன்முகத்தன்மையும் மிகுதியான மக்கள்தொகையும், போக்குவரத்துத் தொல்லைகளும், பெரிய அளவில் வறுமையில் வாழும் மக்களையும் கொண்ட ஒரு பரந்த நாட்டில், ஜனநாயகம் அதிகாரப்பரவலை நிர்வாகத்தின் ஒரு கட்டாயமாக ஆக்குகிறது. நீதியைப் பெறுவது என்பது பணக்காரர்கள், ஏழைகள் ஆகிய இருவருக்குமே எட்டும் தூரத்தில் இறுதித் தீர்வு கிடைப்பதை உள்ளடக்கியதாகும். ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கும் கீழே உள்ள நிதி சார்ந்த வழக்குகளில் உயர்நீதிமன்றதிற்கு சீராய்வுக்குச் செல்வதில் ஓரளவுக்கு மிதமான சீர்திருத்த முயற்சி மேற்கொள்ள, இந்தக் கருதுகோள்கள் வறுமையின் அளவில் மிக மோசமான நிலைமைகளில் உள்ள மாநிலங்களிடையே மக்கள்தொகையின் மிகப்பெரிய அளவினைக் கொண்டதாக உள்ள உத்தரப்பிரதேசத்தை இணங்கவைத்தன.

இப்பொழுதுவரை நீதித்துறை சீர்திருத்தம் ஒரு பழுதுபார்ப்பு வேலையாகவே இருந்து வருகிறது. ஒரு பொறியியல் திட்டமாக இல்லை. ஆனால் அந்தச் சிறிய பழுதுபார்ப்பு வேலையே சட்டத் தொழிலில் ஒரு வழக்குக்குரிய விரும்பத்தகாத நடவடிக்கையாக சீற்றத்துடன் எதிர்க்கப்பட்டது. இது துரதிர்ஷ்டவசமானது. நீதித்துறை நிறுவனங்களை அணுகுவது மக்களுக்கு ஒரு உண்மைநிலையாக ஆக வேண்டுமானால் அதிகாரப்பரவல் என்பது உச்சபட்சத் தேவையாகும். இந்த உண்மை நிலை இந்தியாவில் உள்ள பல மாநிலங்களை, சமஸ்தான அரசியங்களைக் கூட நீதிமன்றக் கிளைகளை வைத்துக் கொள்ளும் உத்தியைக் கடைபிடிக்க நிர்ப்பந்தித்துள்ளது. பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் நீதிமன்றங்களை நாடி பரிகாரங்கள் தேடிக்கொள்ள உதவுவதில் அது நன்றாக செயல்பட்டுள்ளது.

அந்த மகத்தான நிறுவனம் மக்களுக்கான, மக்களுடைய நீதிமன்றம் என்ற அதன் அடிப்படை லட்சியத்தை நிறைவேற்றவேண்டுமானால், அதே பகுத்தறிவு உச்ச நீதிமன்றத்தின் கிளைகளுக்கான தேவையை நியாயப்படுத்துகிறது. இந்தக் கோட்பாடு தான் இந்தப் பெரிய நாட்டிற்கு நான்கு உச்ச நீதிமன்றக் கிளைகள் வேண்டும் என்று பரிந்துரைக்க சட்ட ஆணையத்தை இணங்க வைத்துள்ளது.

நாட்டின் ஒரு மூலையில் அமைந்துள்ள இறுதியானதும், தவறே இழைக்காததுமான, ஒரு தனி நீதிமன்றத்தால் எவ்வளவு பெரிய தொகை வீணடிக்கப்படுகிறது என்று சட்ட ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு வழக்காடுநர் டெல்லி வந்து, ஒரு வழக்கறிஞரை அமர்த்திக்கொள்வதற்குத் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்க வேண்டியிருக்கிறது. அதிலும் அவருடைய வழக்கு பிற்பகல் அமர்வில் ஒத்தி வைக்கப்பட்டுவிடுவதைக் காண்பதற்குத் தான் இத்தனையும் செய்யவேண்டியிருக்கிறது. ஏற்கனவே செய்த செலவுகள் அவரை அனைத்தையும் இழக்கச் செய்கின்றன. விமானப் பயணம், தங்கும் விடுதிச் செலவுகள் ஆகியவை பயங்கரமானவை. வழக்கறிஞர்கள் பெரும் கட்டணம் வசூலிக்கின்றனர். மேலும் நீதிபதிகள் ஆற அமர வாதங்களைக் கேட்பதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்கின்றனர். ஒட்டுமொத்தத்தில், சட்டத்தை நாடிச் செல்வது என்பது காசிக்கோ, மெக்காவுக்கோ செல்வதைப் போன்று இருக்கிறது. வழக்காடுவது வாழ்நாளுக்குப் பின்னரும் நீடிப்பதால், ஒரு விருப்புறுதி (உயில்) ஆவணம் எழுதப்பட வேண்டியிருக்கிறது. அதன் தலைவிதியை அறிய சோதிடர்களை மட்டுமே நமபவேண்டியிருக்கிறது.

சட்ட ஆணையம் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தின் உயர்நீதி மன்றங்களின் உத்தரவுகளால் எழுகின்ற மேல்முறையீட்டு பணிகளைக் கையாள்வதற்கு, வடக்குப் பிராந்தியத்திற்கு டெல்லியிலும், தெற்கு பிராந்தியத்திற்கு சென்னை அல்லது ஹைதராபாத்திலும், கிழக்குப் பிராந்தியத்திற்கு கொல்கொத்தாவிலும் வடக்கு பிராந்தியத்திற்கு மும்பையிலும் உச்ச நீதிமன்றத்தின் புறக் கிளைகளை நிறுவுவதற்கு பரிந்துரை செய்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தின் 130 ஆவது பிரிவு இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியமான வகையில் பயன்படுத்திக் கொள்ள முடியாததாக இருக்குமானால், பாராளுமன்றம் இந்த நோக்கத்திற்குப் பொருத்தமான ஒரு சட்டத்தை இயற்றவேண்டும் அல்லது அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவேண்டும்.

சட்டத்தின் ஆட்சி உயிர் வாழ்க்கையின் விதியை நிர்வகிக்க வேண்டுமானால், உயிர் வாழ்க்கை மனிதாபிமானமும் கருணையும் கொண்டதாக, ஏழைகளுக்கு எளிதில் எட்டக் கூடியதாகவும் இருக்கவேண்டுமானால், சட்டம் சமுதாயத்தின் மிக எளிய, பணிவான, சிறிய உறுப்பினருக்கும் சமஅளவில் அணுகக் கூடிய வகையில் இருக்கவேண்டும்.

நீதி என்பது மக்களுக்கு விலைமதிக்கமுடியாதது. நீதியின் எதிரெதிர் வழக்காடு முறை வெற்றிகரமாக இருப்பதற்கு நீதித்துறை நிர்வாகமுறையின் ஒருங்கிணைந்த பகுதியாக வழக்கறிஞர்கள் அமைப்பு இருக்கவேண்டியுள்ளது. நீதிமன்றமும் வழக்கறிஞர்கள் அமைப்பும் தகுதி வாய்ந்த, உறுதியான நீதியை வழங்குவதற்கு ஒன்று சேர்ந்து செயல்படவேண்டும். நீதி என்பது இரக்கமும் நேர்மையும் கொண்டதாகும். அது தனது சாரத்தை இழக்குமானால், அதன் சாரம் சேர்க்கப்படுவது எங்கே?

நீதியின் மாண்பும் மேன்மையும் அதாவது நீதியின் செயல்முறையும் நீதி வழங்கலும், மனித இனத்தை மகிழ்ச்சியுடன் இருக்க, ஒத்திசைவுடன் இருக்கச் செய்கின்றன, அமைதியான முன்னேற்றமான வாழ்க்கைக்கான புகலிடமாக இருக்கின்றன. அந்த முறைமை செலவு வைப்பதாக இருக்கும்போது அதை அணுகுவது மறுக்கப்படுகிறது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோரின் சமூகத் தத்துவம் தனியுரிமை கொண்டதாக இருக்கிறது. ஏழைகள் ஒரு பழமையான அமைப்பில் பெரும் விலைகொடுத்து அதை வாங்கவேண்டியிருக்கிறது. ஏனென்றால் அவர்களின் கதவுகள் சொத்து படைத்தவர்களுக்குத் தான் திறந்திருக்கின்றன; வறுமையில் உள்ளோருக்கு அல்ல. இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது இந்தக் காலம் சார்ந்த உலகின் உண்மை நிலை ஆகும். இங்கு வழக்கறிகஞர்களிடமிருந்து தகுதிவாய்ந்த வாதத்தைத் திறனை விலைகொடுத்து வாங்குவது என்பது வழக்காடுநரின் வருமானத்திற்கு கட்டுபடியாகாத ஒன்றாக இருக்கிறது; அவருக்கு உண்மையில் மறுக்கப்படுகிறது.

நீதி நிர்வாகத்தில் பொருளாதார ஜனநாயகம் என்பது நீதிமன்றங்களும் தீர்ப்பாயங்களும் எளிதில் அணுகக் கூடியவையாக, நீதியைப் பெறுவதற்கு பெரும் செலவு வைக்காததாக, தீர்ப்பின் இறுதித் தன்மையை எளிதாக்கக் கூடியதாக இருக்கும் ஒரு அமைப்பை உறுதிப்படுத்துவதாகும். இந்த அடிப்படை அம்சங்கள் அதிகாரப்பரவலின் மூலம் ஒரு ஜனநாயக நீதி அமைப்புமுறை வெற்றிகரமாக இருப்பதற்கு நிர்ப்பந்திக்கின்றன. இது இல்லாமல் மக்கள் ஜனநாயகத்தில் பயனடைவதோ அல்லது அரசு செயல்முறைகளில் கருத்துத் தெரிவிப்பதோ நடக்காது. இது நீதியின் விவகாரத்தில் மிகவும் பொருந்தக் கூடியதாகும். ஏனென்றால் நீதி சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நவீன ஜனநாயக நாட்டில், ஒரு கலவையான சமுதாயத்தில், சட்டம் என்பது சாமானிய மக்களுக்கு மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

இந்திய சட்ட அமைப்புமுறை ஒட்டுமொத்தமாகவே சாமானிய மக்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. அது கல்வியறிவு கொண்ட ஒரு சிலருக்கு மட்டுமே புரியக் கூடியதாக, பெருமளவுக்குப் படிப்பறிவற்ற ஒரு சமுதாயத்திற்கு அந்நியமானதாகவும், சட்டவியலின் மீது தொழில்முறை ஏகபோகம் கொண்ட வழக்கறிஞர்களின் உதவியின்றி புரிந்துகொள்ள இயலாததாகவும் இருந்துவருகிறது. நீதிமன்றம் பற்பல அடுக்குகள் கொண்டதாகவும், மிக உயர்ந்த நீதிமன்றம் பாட்டாளி மக்கள் உயிர்வாழ்வதற்குப் போராடிக்கொண்டிருக்கிற இடங்களிலிருந்து வெகுதொலைவிலும் இருக்கும்போது ஜனநாயகத்தின் முக்கியமான சாராம்சமாக இருக்கிற நீதிக்கான உரிமை அதன் ஆன்மீக மதிப்பை இழந்து பிற அடிப்படை உரிமைகளையும் முற்றிலும் இல்லாமல் செய்துவிடுகிறது.

ஜனநாயகம் ஆற்றலையும் உற்சாகத்தையும் பெறுவதற்கு, அதன் ஒரு மிக உயர்ந்த சொத்தாக இருப்பது அதிகாரப்பரவலுடன் கூடிய நீதி அமைப்பே ஆகும் என்பது தவிர்க்க இயலாத முடிவாகும். ஒரு உயிரோட்டமுள்ள ஜனநாயகம் நீதி நிர்வாகத்தின் சுழற்சி முறையைக் கொண்டதாக இருக்கவேண்டும். அதற்கு மாற்றாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நீதிமன்றக் கிளைகள் அனைவருக்கும் நீதிமன்றத்தை எளிதில் அணுககூடியதாக ஆக்கும். நீதி கிடைக்கக் கூடியதாக இருக்கவேண்டும், அப்போது தான் சமூக நீதி உண்மையானதாக இருக்கும்.

பொருளாதார ஜனநாயகம் ஒரு கேலிக்கூத்தாக இருக்கக் கூடாது என்றால் நீதிமன்றங்களும் வழக்கறிஞர்களும் எளிதில் எட்டப்படக் கூடிய வகையில் இருக்கவேண்டும். அரசியல் நீதி மிகவும் விலைமிகுந்ததாக இருக்கும் என்றால், அது பணக்காரர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் என்றால், சட்டங்கள் ஏழைகளை நசுக்கிவிடும்; பணக்காரர்களே சட்டத்தின் மீது ஆட்சி செலுத்துவார்கள்.

நியூஏஜ் வார இதழ். செப்டம்பர் 08, 2010

தமிழில்: வெண்மணி அரிநரன்

Pin It