உன்னை நான் பார்த்ததில்லை. நீயும் என்னைப் பார்த்திருக்க முடியாது. நான் உன்னை அறிந்ததெல்லாம் செய்தியாகத்தான். செய்தித்தாள் கள், ஊடகங்களின் வாயிலாகத்தான். எனக்குப் பெண் பிள்ளைகள் இல்லை. அதனால் உன் வயதுப் பெண்களை நான் என் மகளாகவே பார்ப்பேன். அதிலும் தேன்மொழி என்னும் உனது பைந்தமிழ்ப் பெயர் என்னை உலுக்கிவிட்டது. நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள், நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங் கள் என்னும் வைரவரிகளுக்கு ஒப்ப, உன் அன்னை, தந்தையர் அருந்தமிழ்ப் பெயரிட்டே அழைத்துள்ளனர்.

நீயும் நன்றாகப் படிப்பாயாமே ! முதலிடங் களைப் பெற முனைந்து போராடி, அதில் வெற்றியும் காண்பாயாமே! இருந்தும் ஒரு தேர்வில், உடல் நலம் இல்லாததால் சரியாகப் படிக்க முடியாமல் ‡ சரியாகத் தேர்வு எழுத முடியாவிட்டால் உன் வாழ்க்கை சரிந்தா போய்விடும். எட்டாம் வகுப்பு இடைப்பருவத் தேர்வில் மதிப்பெண் குறைந்தால் அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாதா? அதற்காகத் தேர்வில் பார்த்து எழுதுவது முறையா? அதைக் கண்டு பிடித்த ஆசிரியை உன்னைக் கண்டித்தது அவரது கடமைதானே ! பிள்ளைகள் தவறு செய்வதும் அதை பெற்றோரும், ஆசிரியர்களும் கண்டித்துத் திருத்துவதும் இயல்புதானே ! கண்டித்து வளர்க்கும் பிள்ளைதானே எதிர் காலத்தில் நல்ல குடிமகனாக வளர முடியும். சுடப்பட்ட பொன்தானே நகையாக மாறும். தீயில் காய்ச்சப்பட்டு, சம்மட்டியால் அடிபடும் இரும்புதானே வீரன் கை வாளாகும். பட்டை தீட்டப்படும் வைரம்தானே மதிப்பு உயர்கிறது.

வந்தால் வா ‡ படித்தால் படி ‡ போனால் போ என்று வாங்குகிற சம்பளத்திற்கு வந்து போகாமல், தன் மாணவியரின் நலனில் அக்கறையோடு கண்டிக்கும் ஆசிரியர்கள் போற்றத்தக்கவர்களா? கண்டிக்கத் தக்கவர்களா? அதுவும் மாநகராட்சிப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் கண்டிப்பை நியாயப்படுத்தாமல், காயப்படுத்தி விட்டாயே அம்மா?

மகளே தேன்மொழி !

உனக்குத் தெரியுமா? உன் பாட்டியின் அன்னை காலம் வரையில் பெண்களின் நிலை நம் நாட்டில் எப்படி இருந்தது என்று.

ஒரு வயது இரண்டு வயது மழலைப் பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். அதற்கு ‘ பால்ய விவாகம் ’ என்று பெயர். அதில் அப்பெண் குழந்தையை மணந்த ஆண் குழந்தை ஏதாவது ஒரு காரணத்தால் இறந்து போனால், அப்பெண் குழந்தை வளர்ந்து வாலிபமாகி, கிழமாகி சாகும்வரையில், உள்ளாடையின்றி வெள்ளாடை அணிந்து  கைம்பெண்ணாகத்தான் வாழவேண்டி இருந்தது. உப்பு காரமற்ற சுவையற்ற உணவைத்தான் உண்ண வேண்டும். தலையணையின்றி வெறும் தரையில்தான் படுக்க வேண்டும் என்றெல்லாம் இருந்த கொடிய நிலையை நீ அறிவாயா?

மனைவி இறந்தால் கணவன் புது மாப்பிள்ளை என்பார்கள். ஆனால் கணவன் இறந்துவிட்டால் மனைவி அவனோடு உடன் கட்டை ஏறி மடிய வேண்டும் என்று சாத்திரத்தின் பெயராலும், சம்பிரதாயங்களின் பெயராலும் பெண்களுக்கு இழைத்து வந்த கொடுமைகளை நீ அறிவாயா?

சில சாதியில் பிறந்த பெண்களுக்குத் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தும் உரிமை இல்லை. அவர்கள் எல்லாம் தேவர் அடியார்களாக ‘ பொட்டுக்கட்டி ’ விடப்பட்டு ‘ தேவதாசி ’களாக்கப்பட்ட கொடுமைகளை யயல்லாம் அறிவாயா?

இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளத்தானே கல்வி தேவைப்படுகிறது. ஆனால் உன் பாட்டி காலம் வரை அடுப்பூதும் பெண்களுக்கு படிப் பெதற்கு என்று முடக்கி வைத்திருந்தார்கள். பெண் என்பவர் பிறந்தது முதல் பெற்றோருக்கு அடிமையாகவும், திருமணமானபின் கணவனுக்கு அடிமையாகவும், கணவனுக்குப் பின் தான் பெற்ற பிள்ளைகளுக்கு அடிமையாகவும் வாழவேண்டும் என்ற நிலையை மாற்றத்தான் தந்தை பெரியார் உழைத்தார். அவரோடு அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி, மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, வடநாட்டில் மகாத்மா ஜோதிராவ் பூலே, அண்ணல் அம்பேத்கர், ராஜாராம் மோகன்ராய் போன்றோரின் தொடர் உழைப்பால்தான் பெண்ணினத்திற்கு பூட்டப்பட்டிருந்த விலங்குகள் நொறுங்கின. பால்ய விவாகங்களும், உடன் கட்டை ஏறுதலும், பொட்டுக் கட்டுதலும் போன்ற மூடப்பழக்கங்கள் காணாமல் போயின. பெண்கள் மெல்ல மெல்லக் கல்வி கற்கத் தொடங்கினர்.

“ தலைவாரிப் பூச்சூடி உன்னைப் ‡ பாட

சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை

மலைவாழை அல்லவோ கல்வி ‡ அதை

வாயாற உண்ணுவாய் போ என் புதல்வி ”

என்று புரட்சிக் கவிஞர் கண்ட கனவு நனவாகத் தொடங்கியது. 1989க்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர் அவர்கள் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி நிதியாக ரூ.5000/‡ வழங்கினார். ஒரே நிபந்தனை அப்பெண் 8ஆம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்பது. அதற்காகவாவது பெண் பிள்ளைகளை 8ஆம் வகுப்புவரை படிக்க வைப்பார்களே என்பதால் அந்த நிபந்தனை. அது இன்று ரூ. 25 ஆயிரமாகவும், பெண்கள் 10ஆம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும் என்றும் உயர்ந்துள்ளது. ஏழைப் பெண்களின் கல்வியில் இவ்வரசு காட்டும் அக்கறை இது.

இன்று நாடு முழுவதும் மகளிர் சுயநிதிக் குழுக்களில் சுமார் 70 இலட்சம் பெண்கள், நாலரை இலட்சம் குழுக்கள் அமைத்துத் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டு வருகின்றனர். அவர்களுக்கான சுழல்நிதியை துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின் 100 மணி நேரத்திற்கு மேல் நின்று கொண்டே வழங்கி வருவதெல்லாம், பெண்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு செயல்பட வேண்டும் என்பதற்காகத் தானே.

இன்று அனைத்து அலுவலகங்களிலும் பெண்கள் பதவிகளில் இருக்கின்றனர். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளிலும் பெண்கள் பொறுப்பேற் றுள்ளனர். ஊராட்சி மன்றம் முதல், மாநகராட்சி மேயர் , சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் என அனைத்துப் பதவிகளிலும் பெண்கள் அமர்ந்து விட்டனர் ‡ அமர்ந்து வருகின்றனர்.

அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்ட பெண்கள் இன்று இவ்வளவு உயர்வுகளைச் சந்தித்து வருகின்ற காலத்தில், சின்னஞ்சிறு பிரச்சினை களையும் எதிர்கொள்ள அஞ்சி உயிரை மாய்த்துக் கொள்வது நியாயம்தானா? போராடி வெற்றி காண வேண்டாமா? பக்கத்தில் உள்ள பர்மாவில் ‡ இராணுவ ஆட்சியை எதிர்த்து மக்களாட்சி அமையப் போராடி, பல்லாண்டு காலம் சிறையில் அடைபட்டு, அண்மையில் விடுதலை பெற்ற ஆங் சான் சூகி ஒரு பெண் அல்லவா? அவருக்கு உலகம், சமாதானத்திற்கான நோபல்பரிசு வழங்கி மகிழ்வது நீ அறியாததா?

உன் உயிரை மாய்த்துக் கொள்ள உனக்கு என்னம்மா உரிமை இருக்கிறது? உனக்கு இந்த உடலையும், உயிரையும் வழங்கிய அன்னை தந்தையரையும், அவர்கள் உன்னைப் பற்றிக் கண்டிருந்த கனவுகளையும் நினைத்துப் பார்க்காமல் போய்விட்டாயே?

ஏன் இவர்களை எல்லாம் உன்னைப் போன்றவர்கள் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. ஒன்று புரிகிறதம்மா எங்களுக்கு, உங்கள் மீது அன்பு காட்டத் தெரிந்த பெற்றோர்களாகிய எங்களுக்கு  ‡ அதிர்ச்சிகளைத் தாங்கக் கற்றுக் கொடுக்கத் தெரியவில்லை. பாசம் காட்டத் தெரிந்த எங்களுக்கு வாழ்க்கைப் பாரம் சுமக்கக் கற்றுத்தரத் தெரியவில்லை.

“ பெற்றோர்கள் முதல் ஆசிரியர்கள்

ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோர்கள் ”

என்பார்கள். உங்களுக்கு அன்பும், பாசமும், பரிவும் காட்டி வளர்ப்பதோடு, வாழ்க்கையின் துயரங்களையும் அறியும்படிச் செய்து வளர்க்க வேண்டும். துயரங்களை அறிந்த குழந்தைகள்தான் உயரங்களைக் கடந்து சிகரங்களை அடையமுடி யும். எனவே உங்களால் பாடம் கற்றுக் கொண்டவர்கள் நாங்கள்தான் ‡ பெற்றோர் கள்தான்.

 

அன்புள்ள

அப்பா

Pin It